எனது பதிவுகள்
Saturday, March 15, 2025
தலைநகரம் – 4 "குளிர்நகரம்"
விமானம் தரையிறங்கிய உடனே நமது லக்கேஜ் எந்த கன்வேயரில் வரும் என்று கன்வேயர் நம்பர் கொடுத்துவிடுகிறார்கள்.
கதவை திறந்த மாத்திரத்தில் டெல்லி குளிர் என்னை ஆட்கொண்டது. கையில் வைத்திருந்த பையில் நல்வாய்ப்பாக ஒரு சால்வையை வைத்திருந்தேன். எடுத்து நன்றாக போர்த்திக் கொண்டேன்.
ரன்வேயில் இருந்து விமான நிலையத்தினுள் அழைத்துச் செல்ல பேருந்து வந்தது. சீட் இருந்தாலும் ஒரு கார்னரில் நின்றுகொண்டேன். “குளிருக்கு பயந்தவர்கள் எல்லாம் என்னோடு நின்று கொள்ளுங்கள்“ என அழைக்காவிட்டாலும் நல்ல கூட்டமாக சூழ்ந்து நின்று கொண்டார்கள்.
கன்வேயரை நான் நெருங்கவும் எனது சாம்பல் வண்ண சூட்கேஸ் வரவும் சரியாக இருந்தது. முதல் வேலையாக சூட்கேஸை திறந்து ஜெர்கினை எடுத்து மாட்டிக் கொண்டேன்.
இதற்கிடையில் ஸ்ரீனிவாசன் சார் அழைத்தார். “சார் நான் அறைக்கு வந்து விட்டேன். அறை எண் 305 ல் உங்கள் பெயரையும் சேர்த்துள்ளேன்“ என்றார்.
நாங்கள் தங்குவதற்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக டிஜிட்டல் நூலக (DELNET)கெஸ்ட் ஹவுசை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஸ்டார் ஓட்டலை விஞ்சும் வகையில் மிகச் சிறப்பான அறைகள். பெண் ஆசிரியர்களுக்கு குதுப் ரெசிடென்சி என்கிற ஓட்டலை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
“ஸ்ரீனிவாசன் சார், ஏர்போர்ட்டில் இருந்து டெல்நெட்டுக்கு கேப் எவ்வளவு கேட்டாங்க சார்“ கேப் காரர்களிடம் ஏமாந்து விடக்கூடாது இல்லையா?
“அங்கே நின்றிருந்த கேப் ஐ பிடித்தேன் சார், 800 ரூபாய் கேட்டார்கள்”
சரி நாமும் கேப்போம், “டெல்நெட் – ஜவர்லால் நேரு யுனிவர்சிட்டி எவ்வளவு பையா” என்று ஆங்கிலம் இந்தி என்று கலந்து கட்டி அடித்தேன்.
கொஞ்சமும் இரக்கம் இன்றி 1200 கேட்டனர். விமான நிலைய வாயிலில் ப்ரீ பெய்ட் டாக்சி சர்வீஸ் இயங்குகிறது. அவர்களிடம் கேட்டால் 400க்கு சீட்டை கிழித்து கொடுத்தனர். உடனே ஒரு டிரைவர் கையை பிடித்து அழைத்துக் கொண்டு கருப்பு மஞ்சள் கேபில் அமர வைத்தார். என்னுடைய சாமர்த்தியத்தை எண்ணி நானே வியந்து கையை பின்னால் கொண்டு போய் முதுகை தட்டிக் கொண்டேன்.
ஆனால் டெல்லியில் இரவு 7-9 தாறுமாறான டிராபிக் ஜாம் ஆகிறது. 8 கிமீ தூரத்திற்கு ஒரு மணிநேரம் ஆகிவிட்டது.
நான் எளிதான ஆங்கிலத்திலும் டிரைவர் இந்தியிலும் பேசிக்கொண்டே பயணித்தோம்.
டெல்நெட் க்கு மேப் போட்டு அவருக்கு உதவினேன். உள்ளே லக்கேஜ் எல்லாம் எடுத்து வந்து கொடுத்தார். அவருக்கு ஒரு 100 ரூ டிப்ஸ் கொடுத்து தேங்க் யு பையா என்று வழி அனுப்பி வைத்தேன்.
ரிசப்ஷனில் அவ்வளவு கனிவோடும் மரியாதையோடும் பேசினார்கள். எனது நண்பர் ஏற்கனவே 305 ல் புக் பண்ணி இருக்கிறார் என்றேன். பிறகு அதே அறையில் எனது விவரங்களையும் பதிவு செய்து கொண்டு ஆதார் நகல் எடுத்து வைத்துக் கொண்டனர். எனது பையையும் சூட்கேஸையும் கொண்டு வந்து அறையில் தந்தார்கள்.
செம்ம குளிராக இருந்தது. ரூம் ஹீட்டரில் உற்பத்தியான வெப்பக் காற்று ஐந்தடி தூரத்திற்குள் குளிர்ந்து போனது. Shoe socks கழட்டி தரையில் கால் வைத்தால் ஃப்ரீசரில் விரலால் அழுத்தும் போது ஒட்டிக் கொள்ளுமே அப்படி ஒட்டியது. கார்ப்பெட் தாண்டி கால் வைக்க முடியவில்லை. உடனே சாக்ஸை எடுத்து போட்டுக் கொண்டேன். நல்வாய்ப்பாக பாத்ரூமில் வாட்டர் ஹீட்டர் சிறப்பாக இயங்கியது.
அறையில் பெரிய மர அலமாறிகள் இருந்தன. எங்க லக்கேஜ் க்கு அது தாராளம். மேசையில் ஒரு கெட்டில், கண்ணாடி டம்ளர்கள், அரை லிட்டர் வாட்டர் பாட்டில்கள் இருந்தன. பாத்ரூமில் சீப்பு பேஸ்ட் சோப்பு ஷாம்பு இருந்தன.
அறையில் ஒரு பெரிய எல்இடி டிவி டிடிஎச் இணைப்புடன் இருந்தது. ஆனாலும் நாங்க என்ன முயற்சித்தாலும் பாலிமர் நியுஸ் தவிர எதுவும் வரவில்லை. பாலிமர் என்றாலே “பார்க்க்க்கவே அப்ப்பாவி போல் இருக்கும் இவர்தான்....” என்கிற குரல் நினைவில் வந்து பீதி ஊட்டியதால் இந்தி பாடல்களே தேவலை என்று விட்டு விட்டோம்.
இரவு வந்து சேர்ந்த விஷயத்தை வாட்சாப் குழுவில் பதிவிட்டோம். அடுத்த நாள் காலை 8.45 க்கு எங்களை பிக் அப் செய்ய பேருந்து வரும் என்றனர். 8 மணிக்கு பெண்கள் விடுதிக்கும் அடுத்து எங்களுக்கும் என்றிருந்தனர்.
இரவு ஒன்பது மணி சுமாருக்கு மெஸ் ஹாலுக்கு சென்றோம். அங்கு பிரட் பட்டர், சப்பாத்தி, குருமா, கேரட், முள்ளங்கி, பீட்ரூட் என பச்சையாக வெட்டி வைத்திருந்தார்கள். சோறும் கெட்டித் தயிரும் கூட இருந்தது. எதை சாப்பிடுவது எதை விடுவது என்று ஒரே இன்ப அவஸ்தையாக இருந்தது. அப்பாடா இதற்கு மேல் இனிப்பு சீரகம் கூட உள்ளே நுழைய இடம் இல்லை என்கிற நிலையில் எழவே மனது வராமல் எழுந்து கொண்டேன்.
ஆனால் எப்போதுமே சோதனைகள் நம்மை ஆட்கொள்வதும் நாம் அதனை வென்று காட்டுவதும் தானே வாடிக்கை. போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா?
“சரி சரி என்ன சோதனைன்னு சொன்னா தானே நாங்களும் எமோசனா கனெக்ட் ஆவோம்“ என்று நீங்கள் பொங்குவது புரிகிறது.
எலுமிச்சம் பழம் சைசுக்கு குலோப் ஜாமூன்களை ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் ஜீராவில் நீச்சலடிக்க வைத்து இறுதியாக எடுத்து வந்தனர். நானோ உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்று தூங்கலாம் என்று அறைக்கு செல்ல எழுந்தேன்.
சுனாமியின் போது உள்வாங்கிய அலைபோல் என்கால்கள் உள்வாங்கி மெஸ் ஹாலுக்குள் சென்றுவிட்டன. சரி பரவாயில்லை என்று ஒரு குட்டி கிண்ணத்தில் இரண்டு ஜாமூன்களையும் அது நீந்தி கரையேற போதுமான ஜீராவையும் கொண்டு வந்து ஒரு ஓரமான டேபிளில் அமர்ந்தேன்.
“என்ன பாஸ் சீரகம் போக கூட இடம் இல்லை என்றீர்களே?“ மைண்ட் வாய்ஸ்
“ஆமா பாஸ் என்ன தான் எள் போட்டா எள் எடுக்க முடியாத கூட்டமாக இருந்தாலும் ஒரு விஐபி வந்தா பிளந்து வழி விடுறது இல்லையா? குளோப் ஜாமூன் விஐபி பாஸ்!”
'இத சரியா செய்ய எவ்வளவு சண்டை, கிண்டல் கேளி என்று போராடி கட்டுரை எழுதி கண்கலங்கி இருப்பேன்' என்று ஆனந்த கண்ணீரை ஜீராவில் கலந்து சிறு வில்லளை எடுத்து வாயில் போட்டேன் அது அழகாக நழுவி கூட்டத்தை பிளந்து கொண்டு இரைப்பையில் ஆழத்தில் சேர்ந்தது. வெறும் காய் கறி சாலட் சாப்பிட்டு எழுந்த வடகிழக்கு நண்பர் ஒருவர் சபலப்பட்டு நான்கு ஜாமூன்களை கபளீகரம் செய்தார். நாம பரவாயில்லை என்று நகைத்துக் கொண்டேன்.
விடியற்காலை வழக்கம் போல ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு தட்டியது. போய் ஹீட்டர் போட்டு வைத்துவிட்டு கெட்டிலில் தண்ணீர் வைத்து பல்விலக்க பயன்படுத்திக் கொண்டேன். ஐந்து முப்பதுக்கெல்லாம் குளித்துவிட்டேன்.
சிறிது நேரத்தில் கைகள் நடுங்கத்துவங்கின. ஆனால் அது குளிரால் அல்ல. தேனீருக்காக. கதவைத் திறந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தால் எந்த அறையும் திறக்க்க வில்லை. தரைதளத்தில் கூட ஆள் அரவம் இல்லை.
கெட்டில் வைத்திருந்த டிரேயின் ஓரத்தில் நான்கு வண்ணங்களில் பௌச் கள் மிளிர்ந்தன. பார்த்தால் பால் பவுடர் பாக்கெட், டீ பேக், காபி பவுடர் பாக்கெட் மற்றும் சர்க்கரை என இருந்தன. கெட்டிலில் தண்ணீரை கொதிக்க வைத்து பால்பவுடர் போட்டு எடுத்து கிளாசில் ஊற்றி டீ பேக் போட்டு வைத்தேன்.
ஸ்ரீனிவாசன் சாருக்கும் ஒரு “பாயசத்தை“ போட்ருவோம் என்று முயன்றேன் அதிகாலையில் பழக்கம் இல்லை என்று தப்பித்துக் கொண்டார்.
மளமளவென காலைப் பணிகள் முடிந்த காலை சற்று எளிய உணவுதான். இட்லி பூரி அவ்வளவு தான். காபியும் இருந்தது.
8.45 க்கு எதிர்பார்த்தபடியே பேருந்து வரவில்லை. எல்லோரும் டெல்னெட் வளாகத்தில் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். புகைப்படம் எடுத்து முடிக்கவும் பேருந்து வந்து சேர்ந்தது.
பேருந்து எய்ம்ஸ் ஐ கடந்த போது அருகே அடுக்கி வைத்திருந்த “செங்கல்” பார்த்ததும் மனதுக்குள் ஒரு குபீர் சிரிப்பு பூத்தது.
லால் பாக் கடந்து ஒரு யு டர்ன் போட்டது. அண்ணாந்து பார்க்கும் உயரமும் நீள அகலமும் உடைய ஒரு கட்டிடத்தை அடைந்தோம். இந்தியன் ஹேபிட்டட் சென்டர் என்கிற ஒரு அருமையான வளாகம். மாநாட்டின் முதல் நாள் இனிதே துவங்கியது.
தொடரும்....
Friday, March 7, 2025
மகளிர் தின சிறப்பு பதிவு
மகளிர் தின சிறப்பு பதிவு
சமூகத்தில் எவ்வளவுதான் கல்வி வேலை வாய்ப்பு அதிகாரம் என்றெல்லாம் மகளிர் மேலே வந்தாலும், இன்னமும் பல இன்னல்கள் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது.
இளம் வயது திருமணங்கள்- நகர்புரத்தில் வாழ்ந்து வரும் பெண்களுக்கு விசித்திரமான ஒன்றாக தோன்றலாம், ஆனால் முகத்தில் அறையும் எதார்த்தம் என்னவென்றால் இன்னமும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுமிகளுக்கு குழந்தை திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.அதுவும் அவர்களுடைய பெற்றோரின் முழு சம்மதத்தோடு.
"எப்படியாவது பன்னிரண்டாம் வகுப்பை பாஸ் பண்ணி விட்டேன் என்றால் எனக்கு நிச்சயமாக கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும், என்னை கணித பாடத்தில் தேர்ச்சி அடைய செய்யுங்கள் நீங்கள் என்ன சொன்னாலும் நான் அதை செய்து விடுகிறேன்" என்று கேட்ட மெல்ல கற்கும் மாணவி ஒருவருக்கு அந்த காலகட்டத்தில் கணித பாடத்தில் தேர்ச்சி அடைய தேவையான 70 மதிப்பெண்களை எடுக்க சூட்சுமங்களை சொல்லிக் கொடுத்தேன்.
மிக ஆர்வத்தோடு எல்லாவற்றையும் கற்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
ஓராண்டுக்கு பிறகு அந்த மாணவியை நிறைமாத கர்ப்பிணியாகத் தான் ஒரு பேருந்து நிலையத்தில் காண நேர்த்தது.
அதுபோல 470 க்கு மேல் எடுத்த மிகப் பிரமாதமாக படிக்கக்கூடிய ஒரு மாணவி பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் வாங்க வந்த போது ஃபைலை வைத்து கழுத்தை மறைத்தவாறு நின்றார்.
உற்றுப் பார்த்தால் தாலி கயிறு!!
இன்னமும் கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை நடுத்தர வர்க்க பெற்றோர் தங்களுடைய குடும்ப கவுரவம் தனது பெண்ணிடம் மட்டுமே இருப்பதாக கருதுகிறார்கள்.
எந்த காதல் பிரச்சினையும் இன்றி அவர்களை பாதுகாப்பாக திருமணம் செய்து கொடுத்து விட்டால் தங்களது அனைத்து கடமைகளும் பாதுகாப்பாக கௌரவம் குறையாமல் நிறைவேறி விட்டதாக நினைக்கிறார்கள்.
ஆண் குழந்தைகள் காதல் வயப்பட்டாலும் அல்லது அது போன்று சொல்லிக்கொண்டு ஏதேனும் கிறுக்குத்தனங்களை செய்து கொண்டிருந்தாலும் லேசாக கடிந்து கொண்டு கடந்து விடும் அதே பெற்றோர் தான் வதந்தியாக கூட காதல் என்கிற பெயரோடு பெண்ணின் பெயர் இணைத்து பேசப்படுமானால் உடனடியாக பள்ளி செல்வதை தடுத்து திருமணம் செய்து வைக்க முற்படுகிறார்கள்.
நிச்சயமாக இந்த மாதிரியான கொடுமையான இளம் வயது திருமணங்களுக்கு அந்த குழந்தையை சுற்றி இருக்கும் சமூகம் நூறு விழுக்காடு முற்றிலும் உடந்தை.
ஏனென்றால் தற்போது 1098 என்கிற ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்தாலே போதும் இது போன்ற குழந்தை திருமணங்களை நிச்சயமாக தடுத்துவிடலாம். புகார் அளிப்பவர் பெயர் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.
இதுபோல ஆசிரிய பெருமக்களும் தங்கள் பள்ளிக்கு நீண்ட காலம் வருகை தராத மேல்நிலை வகுப்பு மாணவிகள் இருந்தால் 'இவருக்கும் திருமணம் ஆகி இருக்குமோ அல்லது அதற்கான ஏற்பாடுகள் இருக்குமோ' என்று சந்தேகித்தால் கூட இந்த உதவி எண்ணை நாடலாம் அதில் ஒன்றும் தவறு இல்லை.
பதின்பருவத்தில் இயல்பாகவே வரும் எதிர் பாலின கவர்ச்சியை காதல் என்று விதந்தோதும் சினிமாக்களும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கலுக்கு நிச்சயமாக பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் ஆரோக்கியமாக பேணப்பட வேண்டிய எதிர் பாலின நட்பினை காதல் என்று கற்பிதம் செய்து கொண்டு மாணவர்கள் பெண்களிடம் அத்து மீறுவது போன்று சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டு தான் இருக்கிறது .
இது போலான சமயங்களில் பெற்றோர்கள் மிகுந்த பதட்டத்திற்கு உள்ளாகி குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள்.
பதின் பருவத்தில் இருக்கும் பையன்கள் மது அருந்துதல் புகைபிடித்தல் போன்ற காணொளிகளை ஒரு லேசான கோபத்தோடு கடந்து போகிற அதே நபர்கள் தான் அது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண் குழந்தைகளின் காணொளிகளை கண்டதும் குய்யோ முறையோ என்று பொங்கி கொண்டு வேகமாக இணையத்தில் பரப்பி வைரலாக்கி அந்த குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றார்கள்.
இது அந்த குழந்தைகளின் செயலை ஞாயப்படுத்துவதற்காக அல்ல ஆனால் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கிரிமினல் குற்றங்களில் கூட பெயர்கள் வெளியிட கூடாது என்கிற சட்டம் இருக்கிறபோது இதுபோல காணொளிகளை பரப்புவது சட்டவிரோதமும் கூட.
பாலின சமத்துவம் என்கிற எண்ணம் சமூகத்தில் பரவலாக ஏற்படும் போதுதான் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும் குற்றங்களும் குறையும்.
ஆனால் பாலின சமத்துவம் என்கிற இலக்கை அடைய நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி தான் உள்ளது.
எனது பணி அனுபவம் சார்ந்து பல விஷயங்களை பாலின பாகுபாடு ஆழமாக ஊறிப்போன சம்பவங்களை கண்டுள்ளேன்.
மாற்றுத்திறனாளி ஆண் குழந்தைகளை எப்பாடுபட்டாவது படிக்க வைத்து ஒரு அரசு வேலைக்கு அனுப்பி வைத்து விடவேண்டும் என்கிற முனைப்பு உள்ள பெற்றோரை கண்டுள்ளேன். அதுபோல மிகச் சிறப்பான பணிக்கு அனுப்பியும் உள்ளார்கள்.
அதே வேளையில் மிகவும் நன்கு படிக்க கூடிய குழந்தைகளை வீட்டிலேயே முடக்கி அவர்களுக்கான கல்வி வாய்ப்பினை வழங்க எந்த முயற்சியும் எடுக்காமல் அவர்களுடைய திறமைகளை வீணாக்கிய பெற்றோரையும் கண்டுள்ளேன்.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் பாண்டட் லேபர் ஆக வேலைக்கு சென்ற ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் மிக அதிகம்.
அவர்களது திருமணத்திற்கு பணம் சேர்க்கிறேன் என்கிற பெயரில் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
இதுபோல வேலைக்குச் சென்ற ஒரு குழந்தையை மீட்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத செய்தோம் அவர் தேர்ச்சி பெற்றுவிட்டார் , ஆனாலும் அடுத்த ஆண்டு மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்ற மாணவி ஒருவர் "நான் முதல்வன் திட்ட" தேடலில் கூட அகப்படாமல் தன்னுடைய தம்பிகளை வீட்டில் இருந்து பார்த்துக் கொள்கிறார், அப்பா அம்மா இருவரும் வேறு ஊரில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுக் குடும்ப அமைப்புகள் மிக தகர்ந்து போனதற்கான காரணம் என்ன தெரியுமா?! அங்கே சாதாரணமாகவே அன்றாடம் குவியக் கூடிய வேலைகளில் நிலவிய பாலின பாகுபாடு தான்.
சமத்துவமற்ற எந்த ஒரு அமைப்பும் நிச்சயமாக நொறுங்கி விழுந்து மடியும். மிஞ்சி இருக்கும் தனி குடும்ப அமைப்பு நீண்ட காலம் நீடிக்க வேண்டுமானால் இணையருக்கு இடையே பாலின சமத்துவ எண்ணம் நிலவ வேண்டும்
குழந்தைகளிடம் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதிலும் கூட பாலின சமத்துவத்தை கவனமாக பேணுவது என்பது அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மகளிர் தினத்தில் பெண்களை தேவதை என்றோ தெய்வம் என்றோ போற்றி புகழ வேண்டாம்.
மேலே கூறியுள்ள தகவல்களை சற்று மனதில் நிறுத்திக் கொண்டு பாலின சமத்துவத்தை நாம் இருக்கும் இடம்தோறும் பேணுவதோடு அல்லாமல் உடன் இருப்போரிடமும் வலியுறுத்தி வருவோமானால் அதுவே மகளிர் தினத்திற்கு நாம் அவர்களுக்கு கூறும் நல்ல வாழ்த்து செய்தியாக அமையும்.
" சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"
Thursday, March 6, 2025
தலைநகரம் – 3 *நிராயுதபாணி*
எப்போதுமே பயணங்களில் எனக்கு லக்கேஜ் தான் அலர்ஜி.
எப்போது பயணம் மேற்கொண்டாலும் முடிந்தவரை லக்கேஜ் குறைவாக இருக்கும் படி பார்த்துக்கொள்வேன்.
டெல்லிக்கு டிக்கெட் போட்ட அன்றைக்கு இரவே அரியலூர் ஏபிஎன் ல் குளிருக்கு இதம் அளிக்க ஏதுவாக ஜெர்கின் வாங்கிவிட்டேன். எடை குறைவுதான் என்றாலும் பல்க்காக இருந்தது. என்ன சுருட்டினாலும் ஷோல்டர் பேகை அடைத்துக் கொண்டு உப்ப வைத்துவிட்டது.
“சரி இவனத் தூக்கி பொட்டில போடு“ என்று போட்டு அதற்கு மேல் மூன்று செட் பேண்ட் சர்ட் எல்லாம் போட்டு அமுக்கி விட்டேன்.
அப்புறம் ஷோல்டர் பேக்ல வாட்டர் பாட்டில் சால்வை மற்றும் சில குட்டி ஐட்டங்கள் தான். நான் விரும்பிய வண்ணம் லேசான லக்கேஜ்.
மனசே லேசான மாதிரி ஒரு ஃபீல்.
மூன்று மணி சுமாருக்கெல்லாம் தாறுமாறாக போர் அடித்து துவைக்க தொடங்கிவிட்டது. சரி என்று அங்கே இருக்கும் கடைகளில் நுழைந்து விலைகளை விசாரித்துக் கொண்டே வந்தேன்.
அப்புறம் விமானம் ஏறுவதற்கான கேட் திறக்கப் பட்ட உடன் என்ன செய்கிறார்கள் என்று கவனமாக பார்த்து வைத்துக் கொண்டேன்.
காத்திருக்கும் இடத்தின் வாயிலில் ஒரு டன்னலை கொண்டு வந்து சொருகுகிறார்கள். அதில் இறங்கி நடந்தால் அது விமானத்தின் உள்ளே கொண்டுபோய் விடுகிறது.
ஆகா, நாமும் அந்த டன்னலில் நடக்கப் போகிறோம் என்று ஆவலோடு கேட் நம்பர் 1 ல் காத்திருந்தேன். ஓட்டப் பந்தயத்தில் சீறிப் பாய காத்திருக்கும் வீரனைப் போல தயார் நிலையில் இருந்தேன்.
நான்கு மணிக்கு வாயில் திறக்கும் என்று காத்திருந்த எங்களுக்கு அந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்தது.
எங்களுக்கான விமானத்தை அடைய கேட் நம்பர் 18க்கு போகவேண்டும் என்று கூறிவிட்டார்கள். கடைசி நேரத்தில் மாற்றி இருந்தார்கள்.
அது தரைதளத்தில் இருப்பதை விசாரித்து அறிந்து கொண்டேன். “லே பேதில போவான் யாம்லே இப்பிடி பண்ணுதிய?!“என ஜெபி முத்துவை மைண்ட் வாய்சில் வைத்து விட்டு எஸ்கலேட்டரில் இறங்கிய வண்ணம் படி இறங்கினேன்.
அங்கிருந்து பேருந்து வைத்து விமானத்தின் அருகே கூட்டிப் போனார்கள். விமானத்தில் ஏற ரேம்ப் இருந்தது. லக்கேஜை மேலே தூக்கிப் போட்டு மூடினேன்.
ஜன்னல் சீட்டை தேர்வு செய்ய தனியே காசு கட்டி இருக்கலாம். எனது அண்டை சீட்டில் ஜன்னலருகே அமர்ந்திருந்தவர் என்னை விட புத்தம் புது ஆள் போல.
விமானத்தில் நுழைந்தது முதற்கொண்டு ஒவ்வொரு தருணத்தையும் படமாக பதிவு செய்து கொண்டிருந்தார். அதில் இரண்டு ஏர்ஹோஸ்டஸ்களை சூம்செய்து எடுத்த வைகளும் அடங்கும். ச்சுடச்சுட வாட்சப் ஸ்டேட்டஸ் வேறு போட்டார்.
நானோ விமானத்தில் நுழைந்த மாத்திரத்தில் ஏரோப்ளேன் மோடில் போட்டு விட்டேன். மேலே போகும் போது (அடச்சே விமானம் மேலே போவதைச் சொன்னேங்க!!) மேகங்களை படமெடுத்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தேன்.
எத்தனை தடவை கூகுள் செய்திருந்தாலும் பிராக்டிக்கலாக சந்திக்கும் போது சற்று சிரமமாகத்தான் உள்ளது. “Hi Bro, (இல்லன்னா youth ன்னு நம்ப மாட்டாங்க) will you please help me to fasten the belt?” அவரே போட்டு விட்டார். கழட்டும் முறையையும் சொல்லிக் கொடுத்துவிட்டார்.
ரன்வேயில் லேசாக ஊர்ந்த விமானம் திடீரென்று வேகமெடுத்தது. விமானம் குலுங்கியபடி விரைந்தது. ஸ்ரீனிவாசன் சாரிடம் வாங்கி லோட் செய்திருந்த பஞ்சுப் பொதி பத்திரமா என்று காதை தடவிப் பார்த்துக் கொண்டேன்.
சட்டென்று எல்லாம் சரியாகி “இறகைப் போலே அலைகிறேனே“ என்று லேசாகி பறந்து கொண்டிருந்தது. அவ்வளவு பஞ்சையும் தாண்டி காது அடைப்பதும் நான் வாயை ஒரு மாதிரி கோணலாக ஆட்டி எடுத்துவிடுவதும் என்று சில நிமிட நேரம் நீடித்தது.
அடுத்த விமானப் பயண "பக்கெட் லிஸ்ட்"டில் இருக்கும் விஷயத்தை நிறைவேற்ற தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தேன்.
அன்றைய தின வானம் மேகமூட்டமாக இருந்த காரணத்தினால் பஞ்சு பரப்பி வைத்த திடலுக்கு மேலே விமானம் பறப்பது போன்று இருந்தது.
கழிவறை சைன் போர்டு பச்சைக்கு மாறிய உடனே பட்டென்று எழுந்தேன். ஆகா, எவ்வளவு குட்டி ஸ்பேஸ்?! என்று வியந்து கொண்டே சிறு கடனை நிறைவேற்றி வெளியேறினேன்.
ஸ்ரீனிவாசன் சாரை பார்த்த போது, “இவர் என்ன இந்த வெயில் நேரத்தில் ஜெர்கினோடு இருக்கிறாரே?“ என நினைத்தேன்.
ஆனால் விமானத்தினுள் செம்ம குளிராக இருந்தது. ஜெர்கினை பெட்டியில் அமுக்கி வைத்தது எவ்வளவு பெரிய பிசகு என்று புரிந்து கொண்டேன்.
திடீரென்று விமானம் பரபரப்பானது. ஏர்ஹோஸ்டஸ் மூன்று பேர் டிஸ்யு பேப்பரை கொத்தாக அள்ளிக் கொண்டு ஓடினர். ஆகா என்னடா இது என்று ஆரம்பத்தில் சொன்ன ஆக்சிஜன் மாஸ்க் இருக்கும் இடத்தை துழாவத் தொடங்கினேன்.
பெரிதாக ஒன்றும் இல்லை மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் இருந்து தண்ணீர் தாரை கொட்டியதில் ஒரு பெண் தலையும் உடையும் நனைந்து விட்டது அவருக்கு.
ஏர்ஹோஸ்டஸ் துடைத்துவிட்டு வேறு இடமும் கொடுத்தனர்.
“யே, யாருப்பா தண்ணி பாட்டிலை சரியா மூடாமல் வைத்தது?!” என்று எனக்கு கூட கேட்கா வண்ணம் நன்றாக திட்டிவிட்டேன்.
அப்போதுதான் ஞாபகம் வந்தது, என்னுடைய மெட்டாலிக் வாட்டர் பாட்டிலின் மூடியை சில சமயங்களில் இறுக மூடினால் கோபித்துக் கொள்ளும்.
ஆனாலும் அதனை சோதித்து அறிய இது சரியான நேரம் அல்ல. அந்தப் பெண் தலை ஈரம் கூட சரியாக காயவில்லை. பிரச்சனை ஆறிய பிறகு பூனைக்குட்டியை வெளியே விடலாம் என்று காத்திருந்தேன்.
சற்று நேரம் கழித்து மெதுவாக எழுந்து யாரும் அறியா வண்ணம் தண்ணீர் பாட்டிலை எடுத்து எனது சீட்டின் முன்னால் இருந்த பை போன்ற அமைப்பில் போட்டு விட்டேன். பார்த்தால் முக்கா லிட்டரில் முன்னூறு மில்லி கூட மீதம் இல்லை. இவ்வளவு ரகசிய நடவடிக்கையிலும் பெல்ட் போட்டு விட்ட பக்கத்து சீட் தம்பி ரகசியமாய் சிரித்தார். பயபுள்ள சிபிஐ இன்டர்வியு போவான் போல!!
அதற்குள்ளாக விமானம் வானத்தின் ஆரஞ்சு வளையத்திற்குள் வந்தது போல ஒரு ரம்மியமான காட்சி. மேகப் பொதிக்குள் அமிழும் சூரியன் ஏற்படுத்திய வானியல் அற்புதம் தான் அது. அனேகமாக ஜன்னல் சீட்டில் இருந்தோர் அனைவரும் ஆவலோடு படமெடுத்தார்கள்.
பிறகு இருள் கவ்வியது. சற்று நேரத்திற்கெல்லாம் டெல்லி நகர விளக்குகள் தெரியத் துவங்கின. விமானம் தாழப் பறந்தபடி “டச் டவுனுக்கு” தயாரானது.
ஏதோ சடன் பிரேக் போடும் போது லேசாக ஜெர்க் அடித்தது போல இருந்தது அவ்வளவுதான் விமானம் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
வெளியில் பார்த்தால் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டு இருந்தது. ”எலேய் யார்ரா நீ” என்பது போல ஆளே மாறி இருந்தார் நம்ம பக்கத்து சீட்டு தம்பி. ஜெர்கின், கழுத்தைச் சுற்றி சால்வை, தலைக்கு பனி குல்லா என குளிரை எதிர்த்து போராட அனைத்து ஆயுதங்களையும் தரித்து இருந்தார். நானோ நிராயுதபாணியாய்!!
என்னாச்சின்னு அடுத்த பகுதியில் பார்ப்போம்.
Tuesday, March 4, 2025
தலைநகரம் -2
*FIRST FLIGHT EXPERIENCE*
முதல் வானூர்தி பயணம்
முன்ன பின்ன விமான பயணம் செய்ததும் இல்லை. அதற்கு டிக்கெட் எடுக்கும் நடைமுறைகளும் தெரியாது.
ஆனாலும் எப்போதும் போல தைரியமாக டிரையல் அண்ட் எரர் மெத்தடில் கற்றுக் கொள்வது என்று முடிவு செய்தேன்.
விமானத்தில் டெல்லி போய் வருவதற்கு பயணப்படி கிடைக்கும் என்று கூறினார்கள். சரி ஓசியில ஒரு விமான பயணம் என்று ஆர்வத்தோடு இருந்தேன் நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் சட்ட திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்துவதற்காக கூகுள் மீட் போட்டார்கள்.
NIEPA நிர்வாகத்தினர் மாநாட்டுக்கு வருகை தரும் அனைத்து தலைமை ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு whatsapp குழுவை உருவாக்கி தொடர்ந்து 5 நாட்கள் கூகுள் மீட் மூலமாக அனைவரிடமும் பேசி நிகழ்ச்சிக்கு வந்து செல்வது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போன்ற அனைத்து விஷயங்களையும் தெளிவு படுத்தினார்கள் .
விமான பயணத்திற்கு பயணப்படி உண்டுதான் ஆனால் எல்லோருக்கும் அல்ல.
"ஏங்கண்ணு, உன்னோட கிரேட் பே என்ன வருது?!"
"4800 ங்க"
"செல்லாது செல்லாது உனக்கு விமானத்தில் பயணத்துக்கு பயணப்படி இல்லை"
"ஆமா ஆருக்குங்க குடுப்பீங்க?!"
"5400க்குத்தான்"
"நான் விமானத்தில் வந்தா எனக்கு என்ன கொடுப்பீங்க?"
"செகண்ட் ஏசி ஃபேர் தான்"
"2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 36 மணி நேரம் லோல் பட முடியாது, நான் விமானத்திலேயே வந்துடுறேன் நீங்க குடுக்குற காச குடுங்க போதும்"
ஆமாம் நான் புக் செய்த அன்று செகண்ட் ஏசி ட்ரெயின் கட்டணமும் வானூர்தி கட்டணமும் 2000 இடைவெளியில் தான் இருந்தது.
ஆனது ஆகட்டும் என்று விமானத்திலேயே புக் செய்யலாம் என்று ஒரு விமான பயண சீட்டு வழங்கும் ஏஜென்ட் ஆப்பை அணுகினேன் அத்தனை விமானங்களும் இண்டிகோவாகவே இருந்தன.
பயணச்சீட்டு போக வர என்று இரு பக்கத்துக்கும் புக் செய்துவிட்டு பணத்தை எல்லாம் கட்டி முடித்த பிறகு இண்டிகோ காரன் ஏம்பா என்கிட்ட நேரடியா வந்து இருந்தா இன்னும் கொஞ்சம் சல்லிசா முடித்து இருக்கலாமே என்று வெறுப்பேற்றினான்.
மாலை 4. 30க்கு தான் விமானம் புறப்படும் நேரம். ஆனால் நான் அரியலூரில் காலை எட்டு மணி பல்லவனை பிடித்து விட்டேன். ஏனென்றால் எந்த காரணத்தினாலும் விமானத்தை தவற விட்டு விடக்கூடாது என்கிற அதிகபட்ச உஷார் நிலையில் இருந்தேன் .
தவறவிட்டால் 7 ஆயிரம் ரூபாய் போச்சே!!
முதல் விமான பயணம் என்பதால் எனது நட்பு மற்றும் உறவினர் வட்டங்களில் உள்ள அனைவரும் ஆளாளுக்கு அறிவுரைகளை அள்ளி வீசி விட்டனர்.
அதில் அரிதிற் பெரும்பான்மை பெற்ற ஒரு முக்கியமான அறிவுரை என்னவென்றால் விமான நிலையத்தில் எதையும் வாங்கிக் கொள்ளலாம் என்று கனவு கூட கண்டு விட வேண்டாம் உன்னுடைய மொத்த பேங்க் பேலன்ஸும் போய்விடும் என்பதுதான்.
எதிராளி வீட்டுல விருந்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே ஒழிய இந்த பயலுக விமான நிலையத்தில் பச்சத் தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று ஏர்போர்ட் வாசலை மிதிக்கும் முன்பாக சங்கல்பம் செய்து கொண்டேன்.
நான்கரை மணிக்கு புறப்படும் விமானத்திற்கு மதியம் ஒரு மணிக்கு எல்லாம் கதவை பிராண்டியவன் நானாகத்தான் இருப்பேன்.
இந்தியாவில் உள்ள 95 விழுக்காடு விமான சேவைகளை இண்டிகோவே மேற்கொள்கிறது போல உள்ளது எங்கே பார்த்தாலும் அவர்களின் விமானம் தான்.
அனைத்து ஸ்டால்களிலும் அவர்களுடைய ஊதா உடை சிப்பந்திகள் தான்.
அதில் ஒரு நீலக்குயில் இடம் சென்று. "ஏந்தாயி இது எனது முதல் விமானப் பயணம். அதனால் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஒன்னும் தெரியாது செத்த கோவிச்சிக்காம இதப் பாரு தாயி" என்று ஆங்கிலத்தில் கெஞ்சியபடி எனது பயணச்சீட்டின் சாஃப்ட் காப்பியை நீட்டினேன்.
"டிக்கெட் ஹார்ட் காப்பி வேணுமா?!" என்று இனிய குரலில் செவிகளுக்கு ஆங்கில ஒத்தடம் கொடுத்தார்.
"ஆமா நிச்சயமாக, reimbursement க்கு வேண்டுமே" என்று நீலக்குயில் தந்த நீல நிற இன்டிகோ விமான டிக்கெட்டை வாங்கி பத்திரப்படுத்தினேன்.
"அப்புறம் எனக்கு விமான புறப்பாடு நான்கு முப்பதுக்கு தான் நான் இப்போதே செக்யூரிட்டி செக் செய்து புறப்பாடு வாசல் அருகே அமர்வதற்கு தடை ஏதும் இல்லையே?!" என்று எனது சந்தேகத்தை கேட்டுக்கொண்டேன்.
"சரி உங்க சூட்கேஸ் கொடுங்க"என்று வாங்கி அதில் எதையோ அச்சிட்டு ஒட்டி ஒரு கன்வேயரில் போட அது துள்ளி குதித்து எனக்கு முன்னால் குஷியாக ஓடியது.
அதற்கடுத்து செக்கின் கவுண்டருக்கு சென்றால் அங்கே எல்லோரும் ஷூ பெல்ட் என சகலத்தையும் அவிழ்த்து சீர்வரிசை வைத்திருப்பது போல கையில் ஏந்தியபடி சட்டை பேண்டோடு நின்று கொண்டு இருக்கிறார்கள்.
கையில் கைப்பை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அனைத்தையும் தட்டில் வைத்து ஒரு நகரும் தளத்தில் வைக்க அது நகர்ந்து உள்ளே செல்கிறது. அங்கிருந்து ஸ்கேனர் மூலமாக உள்ளிருக்கும் அனைத்தையும் சோதிக்கிறார்கள். அதே நேரத்தில் விமான நிலைய காவலர்கள் நமது உடலை, உடையை பரிசோதிக்கிறார்கள்.
ஏதோ அந்த காலத்தில் சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்க போவது போல எனக்கு முன்னால் சோதனைக்கு நின்றவரின் முதுகை இடித்துக் கொண்டு உள்ளே பாய்ந்தேன், அங்கிருந்த செக்யூரிட்டி என்னை அன்பாக முறைத்தார். நான் "ஃபர்ஸ்ட் டைம் பாஸ்" என்று சிரித்தபடி பின் வாங்கினேன்.
ஏதோ "தொப்பை வளர்த்து" எல்லா பேண்ட்டையும் "இறுகப்பற்று" என்று வைத்திருப்பதால் தப்பினேன். இல்லையென்றால் பெல்டை கழட்டிய பிறகு பேண்ட்டை கையில் கோர்த்தபடி அல்லவா நின்று கொண்டிருக்க வேண்டி இருந்திக்கும்.
உள்ளே போனால் ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கானோர் சேரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தனர் நானும் அசால்டாக ஒரு சேரில் விழுந்தேன் அந்த சமயம் பார்த்து எங்களுடன் வரக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு தலைமை ஆசிரியர் ஆம்பூர் ஶ்ரீனிவாசன் சார் என்னை பார்த்துவிட்டு அழைத்தார்.
அவர் இரண்டரை மணி விமானத்திற்கு செல்ல வேண்டியவர் அவரே காத்துக் கொண்டு நின்றார்
அவர் மிகவும் விவரமாக செல்போன் சார்ஜிங் பாயின்ட் அருகே உள்ள நாற்காலியை வசப்படுத்திக் கொண்டு போனில் சார்ஜ் ஏற்றிக் கொண்டார்.
நானும் அங்கே சமீபத்தில் காலியான சேரை பிடித்து அமர்ந்தபடி அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்.
அப்போது கேட் ஒன்றிலிருந்து யாரோ கை அசைப்பது போல தெரிந்தது பார்த்தால் புதுச்சேரி மேடம் இருந்தார்கள். அவரும் ஸ்ரீனிவாசன் சாருடன் விமானம் ஏற உள்ளார்.
" சரி நீங்க போங்க நான் பின்னாடியே வரேன்" என்று அவர்களை அனுப்பிவிட்டு மொபைலில் ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருந்த ஒரு படத்தில் மூழ்கினேன்.
விமான நிலைய கழிவறை பற்றி சொல்லியே ஆக வேண்டும் சென்னை விமான நிலையம் வருவதற்கு முன்பு நான் தூய்மையான கழிவறை என்றால் சத்யம் சினிமாஸ் போன்ற பெரிய தியேட்டர்களில் இருக்கும் கழிவறை தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் இங்கே அதைவிட சிறப்பாக பராமரித்து வைத்திருக்கிறார்கள்.
ரொம்ப லென்த்தா போவுது இத்தோட முடிச்சுக்குறேன். விமானத்தின் உள்ளே நடந்த களேபரம் ஒன்றைப் பற்றி அடுத்த பகுதியில் கூறுகிறேன்!!
Monday, March 3, 2025
தலைநகரம் - 1
என்றைக்கு இந்த தலைப்பை அறிவித்தேனோ அன்றிலிருந்து தொடர்ந்து வேலை பளு அதிகமாகவே இருந்தது.
சரி இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று இன்றைக்கு தொடங்கி விட்டேன்.
தலைநகரம் - 1
அறிமுகம்
NIEPA - NATIONAL INSTITUTE OF EDUCATIONAL PLANNING AND ADMINISTRATION என்கிற ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு கல்வி மேலாண்மை சார்ந்த பல்வேறு படிப்பகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.
மேலும் கல்வி மேலாண்மையில் புதுமையை புகுத்தும் அலுவலர்களுக்கு விருது கொடுப்பது மட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சிறப்பான செயல்பாடுகளை கேஸ் ஸ்டடியாக எடுத்து அது சார்ந்து கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் கல்வி மாநாடுகள் மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது.
பள்ளி மேலாண்மை குறித்த ஒரு மாநாட்டிற்கு டிசம்பர் மாதத்தில் ஒரு விளம்பரம் வந்திருந்தது எனது நண்பர் விஜயகுமார் அதை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
பார்த்தவுடன் சரி உடனே அப்ளை செய்து விடுவோம் என்று வேகமாக நினைத்து அதே வேகத்தில் மறந்தும் போய் விட்டேன். அதன் பிறகு ஒரு நாள் அந்த விளம்பரம் போட்டோ கேலரி ஸ்க்ரோலிங் பண்ணும் போது கண்ணில் பட்டது. பார்த்தால் அன்றுதான் இறுதி தேதி.
சரி சார் நம்மீது நம்பிக்கை வைத்து அனுப்பி வைத்திருக்கிறார் நாம் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்று கணினியை திறந்து அப்போது எனது கணினியில் உள்ள எங்கள் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள் சார்ந்த படங்களை எடுத்து ஒவ்வொன்றுக்கும் தலைப்பை ஒட்டி ஒரு பத்தி எழுதி முழு கட்டுரையாக தொகுத்து படங்கள் அனைத்தையும் அன்று மாலை 5 மணிக்கு மின்னஞ்சலில் சேர்த்து விட்டேன்.
நாம் ஏனோதானோவென்று ஒரு கட்டுரை அனுப்பி இருக்கிறோம் நிச்சயமாக நமக்கு அழைப்பு இருக்காது என்கிற எண்ணத்தில் இருந்தேன், ஆனால் ஒரு இன்ப அதிர்ச்சி போல மாநாட்டுக்கு அழைப்பு வந்துவிட்டது.
அடுத்த சிக்கல் என்னவென்றால் மாநாடு ஜனவரி 8-10 டெல்லியில் நடக்கிறது ஜனவரி மாத டில்லி குளிர் எப்படி இருக்கு என்பது எல்லோரும் அறிந்ததே!!
போகலாமா வேண்டாமா என்று மனது ஊசலடிக் கொண்டே இருந்தது. அப்பொழுது குளிருக்கு பயந்து இங்கேயே போகவில்லை என்றால் எதிர்காலத்தில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல முடியுமா (ஹி ஹி 😂 😂) அதனால் இப்போதே ஒரு ட்ரையல் பார்த்துவிடலாம் என்று துணிந்து விட்டேன்.
குளிர்காப்பு உடைகள் மற்றும் புதிய ஷுக்கள் ( 2019 க்கு பிறகு ஷு அணிவதே இல்லை) என பர்ச்சேஸ் செய்து விட்டேன்.
தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு தலைமையாசிரியர் தேர்வாகியிருந்தார் அதோடு மட்டுமில்லாமல் புதுச்சேரியிலிருந்தும் இரண்டு பேர் தேர்வாகியிருந்தனர் ஆக நாலு பேர் நாலு விதமாக தமிழில் பேசிக் கொள்ளலாம் என்கிற சந்தோஷத்தோடு பயண ஏற்பாடுகளை செய்யத் துவங்கினேன்.
Friday, January 17, 2025
மிஸ்டர் ஒயிட் - சிறுகதை
மற்றுமொரு சிறுகதை முயற்சி.
பொறுப்பு துறப்பு: கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் "கற்பனை" தான்!!
மிஸ்டர்ஒய்ட்
“என்னசார்,முடி கம்ப்ளீட்டா நரைச்சு போச்சு? உங்க வயசு என்ன சார்?” இது நான்.
“நாப்பது வயசு தான் ஆவுது, என்ன சார் பண்றது ?!நான் என்ன பொம்பள பொறுக்கியா டை அடிச்சிக்கிட்டு சுத்துறதுக்கு?” சுறுக்கென்று நெருஞ்சி முள்ளாய் தைத்தார்.
’அடப்பாவி என்னது பொசுக்குன்னு பொம்பள பொறுக்கின்னுட்டான்?!’
என்று அந்த துவக்கப் பள்ளி சுவற்றில் தொங்கிய கண்ணாடியில் தலையை பார்த்துக் கொண்டேன்.
ஆங், சொல்ல மறந்துட்டேன் இந்த ஊர் பள்ளியில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக வந்துள்ளோம்.
“என்னசார், நீங்கதானே பிரைசைடிங் ஆபீசர்?”
”ஆ…ஆமாம்சார்”
“என்னசார், ஒரேகுப்பையா கெடக்கு பெஞ்சும் இல்லை எங்க படுக்குறது? அதெல்லாம் ஏற்பாடு பண்ணாம என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?”
“சொல்லி அனுப்பி இருக்கேன் சார், ஏற்பாடு பண்ணிடுவாங்க“ என்றேன்.
’டேய், இங்க நான்தான்டா பிரைசிடிங் ஆபீசர், நீ வந்து என்ன அதட்டுற’
வழக்கமாக உள்ளாட்சித் தேர்தல் என்றாலே தொல்லைதான். வாக்குச் சீட்டு நடைமுறை.
அதுவும் கிராம பஞ்சாயத்து என்றால் நான்கு அல்லது ஐந்து என்கிற எண்ணிக்கையில் வாக்குச் சீட்டுகளை கையாள வேண்டும்.
இந்த ஊரே குடிகாரவங்க முரட்டுத் தனமான ஆட்கள் நிறைந்த ஊருன்னுவேற மீட்டிங்ல சொன்னாங்க.
ஆனா, இங்கே உள்ளேயே ஒரு ஏழரைப் பங்காளி வந்து உக்காந்து கெடக்கான்.
நல்லபடியாக தேர்தலை பிரச்சனையின்றி முடிக்க வேண்டுமே என்ற கவலை மனதை கவ்வியபடி இருந்தது.
நம்ம ஏழரை, வெள்ளை பேண்டில் இருந்து வெள்ளை வேட்டிக்கு மாறி இருந்தார். வெள்ளை பனியன், வெள்ளை முடி, வெள்ளை பெல்ட் சகிதம் "மிஸ்டர் ஒயிட்"டாகவே இருந்தார்.
“சார், என்ன சார் டாய்லெட் கட்டி இருக்கானுவ?“
“ஏன் அங்க என்ன சார் ஆச்சு? புது டாய்லெட் தானே சார்?! திறந்த பிறகு நமக்குதான் சாவி கொடுத்து இருப்பதாக எச்.எம் சொன்னாங்களே”
“ஆமாம், என்னத்த புதுசா கட்டி கிழிச்சானுவ? நின்னா கூரையை முட்டுது”
“குட்டிப் பசங்க டாய்லெட் சார், அதான் அவங்க உயரத்துக்கு கட்டி இருப்பாங்க”
“உங்களுக்கெல்லாம் ஒன்னும் தெரியாது சார், இதுல எவ்வளவு ஆட்டைய போட்டானுவலோ போங்க”
’டேய்,என்னடா எல்லாத்துக்கும் எங்கிட்டேயே புகார் பண்ணுற நாளைக்கு நைட்வரைக்கும் இவன வேற எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே’
அப்போது சரியாக இரண்டு பெண் ஆசிரியர்கள் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். இருவரில் சற்று இளையவர் சுடிதாரில் இருந்தார்.
“பாத்தீங்களாசார், டிரஸ்ஸ, இதெல்லாம் பசங்களுக்கு என்னத்த பாடம் நடத்தபோவுது” என்ற அடுத்த ஊசியை எடுத்தார்.
“என்னசார் எதுக்கெடுத்தாலும் கொறை சொல்றீங்க? சேலையைவிட சுடிதார் வசதி மட்டுமல்ல பாதுகாப்பும்கூட” என்று தைரியத்தை எல்லாம் திரட்டி ஒரு செஞ்சூடு வைத்தேன்.
“சார், வணக்கம் சார், நீங்க தான் பிரைசிடிங் ஆபீசரா?” என்று மிஸ்டர் ஒயிட்டை பார்த்து கேட்டனர்.
“ஆமா, அந்த வேலையில மாட்டிக்கிட்டு லோலு படுறதுக்கு எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு? இதோ இந்த சார் தான் பிரைசிடிங் ஆபீசர்”
“சாரிசார், வணக்கம்” என்று நெளிந்தனர்.
“சரி வாங்கம்மா. போய் பைய்ய வச்சிட்டு பசையையும் போஸ்டர் எல்லாத்தையும் எடுத்து வந்து ஒட்டுங்க சீக்கிரம்” என்று பழி வாங்கினேன்.
“சார், நாங்களா?“
“அப்புறம் வேற யாரு செய்றதாம்? இதுக் கெல்லாம் யாரையும் தனியா போடமாட்டாங்க. இன்னும் ரெண்டு பேரு வேற வரணும்” என்று கூறிவிட்டு மூன்றுபேரின் பணி ஆணைகளை வாங்கி வைத்துக் கொண்டு படிவங்கள் மற்றும் கவர்களை எடுத்து எழுதத் துவங்கினேன்.
“சார் எனக்கெல்லாம் எழுத்து வேலை சுத்தமா வராது, என்கிட்ட எதுவும் எழுத கொடுத்துடாதீங்க“ என்று முன்னெச்சரிக்கையாக நழுவினார் ஒயிட்.
“சரி அப்படின்னா நீங்க அட்டைய மடக்கி அந்த டேபிள் மேல ஓட்டிங் கம்பார்ட்மெண்ட் அடிங்க” என்று ரிவிட் ஆணிகளையும் ஒரு கருங்கல்லையும் கொடுத்தேன்.
“ஏன் சார் சுத்தியல் எல்லாம்இல்லையா?”
“சார், இருக்கிறதவச்சி அட்ஜஸ்ட் பண்ணுங்க” என்றேன் எரிச்சலாக.
பள்ளி வளாகத்தின் உள்ளே ஒரு ஜீப் வேகமாக வந்து அரைவட்டம் அடித்து நின்றது.
ஜோனல் ஆபீசர் இறங்கி எல்லோரும் வந்து விட்டார்களா என்று கேட்டார்.
“இன்னும் பி3 மற்றும் பி4 வரவில்லை சார்”
“போன் பண்ணி கேளுங்க. பி4 வரலைன்னா லோக்கல்ல யாராவது படிச்ச பசங்க இருந்தா போட்டுக்கோங்க. வாக்குப் பெட்டியைப் பாத்துக்குறதுதானே?”
“சரிங்கசார்”
“ஆமாம், பிசிவந்தாச்சா?”
“இன்னும்இல்லைசார்”
“தோவந்துட்டேன்சார்”
என்று பிடறிக்குப் பின்னால் சத்தம் கேட்டது.
“பாத்தீங்களா சார், வந்து ஒரு கும்பகர்ணத் தூக்கம் போட்டுட்டாரு அந்தபிசி” என்றுஒயிட் எனது காதைகடித்தார்.
“பரவால்லை விடுங்கசார் அவங்க எல்லாம் இப்போ தூங்கினாத் தான் உண்டு, நாளைக்கெல்லாம் அவங்க தூங்கமுடியுமோ என்னவோ” என்றேன் விட்டுக் கொடுக்காமல்.
நாங்கள் போஸ்டரோடும் பசையோடும் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தபோது கரடி உறுமுவது போல "கர் கர்" என்று சத்தம் நாராசமாய் கிளம்பியது.
ஒதுக்கித் தந்த ஒத்தை வேலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு கம்பார்ட்மெண்ட் அட்டையை அப்படியே போட்டுவிட்டு அழகாய் படுத்து பிளிரிக்கொண்டு இருந்தது ஒயிட் கரடி.
“எனக்குன்னே வந்து சேருவீங்களாடா?“ என்று அலுத்துக் கொண்டு மலையென குவிந்து கிடந்த வேலைகளுக்குள் மூழ்கினேன்.
இரவு எட்டு மணிக்கு எழுந்தவர், "சார் டிஃபன் கொண்டு வந்துட்டானுவளா சார்?!"
"உங்க வேலைக்காரன் பாருங்க நாங்க, இந்தாங்க சாப்பிடுங்க" என்று முறைத்தபடி நீட்டினார் விஏஓ.
சிலர் எப்போதுமே தன்னை உச்சாணிக் கொம்பில் அமர்த்திக் கொண்டு மற்றவர்களை கீழ்மையுடன் பேசும் அநாகரிகத்தை அடாவடியாக பின்பற்றுகிறார்கள் மிஸ்டர் ஒய்ட் போல.
உண்மையிலேயே மிக சுவையான இட்லி தோசை சட்னி சாம்பார். ஆனால் நம்ம ஒயிட் என்ன சொல்றார் பாருங்க.
"நமக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ண கொடுத்த காசுல பாதிய ஆட்டைய போட்டுட்டு இந்த கண்றாவி இட்லி தோசைய கொடுக்குறானுவ!! ஒரு சப்பாத்தி பரோட்டா ஆம்ப்ளேட் கொடுத்தா என்ன கொறஞ்சா போயிடுவானுவ?!" என்று சீரியசாக சீறியது எங்களுக்கு சிரிப்பாகவே இருந்தது.
"என்கிட்ட கேட்டிருந்தாலும் நான் இட்லிதான் கேட்டிருப்பேன். புது இடத்துல அதுதான் சேஃப்!!"
"எனக்கெல்லாம் வஞ்சனை இல்லாத வயிறு சார் எதப் போட்டாலும் சமைஞ்சிடும்" என்றபடி ஜெலுசில் ஒரு மூடி ஊற்றிக் கொண்டார்.
"இ, இ..இதுவா இது சளி டானிக் சார்!!"
இந்தாளு ஒரு டைப்பாத்தான் இருக்கான் என்று தலையில் அடித்துக் கொண்டேன்.
"சார், சாஆஆஆஆர், ஒரு நிமிசம் இதக் கேளுங்க"
"வேலை நிறைய கிடக்கு சொல்லுங்க சார் எழுதிகிட்டே கேக்குறேன்"
"இல்ல, இந்த பி4 போஸ்ட்டுக்கு என்ன சார் பண்ணலாம்னு இருக்கீங்க?!"
"வெயிட் பண்ணிப் பாப்போம், விஏஓ கிட்டயும் பிரச்சனை இல்லாத டிகிரி படிச்ச பசங்கள பாக்க சொல்லச் சொல்லி இருக்கேன்"
"இனிமே வந்தாலும் போட்டாச்சின்னு திருப்பி அனுப்பி விட்ருவோம் வேலைன்னா ஒரு பஞ்ச்சுவாலிட்டி வேணாம்!!" என்று மறுபடியும் தன்னை வெய்ட்டான ஒயிட் என நிரூபித்தார்.
அதே நேரத்தில் ஒருத்தர் வெய்ட்டா ஹைட்டா பவுன்சர் கணக்காக உள்ளே வந்தார்.
"உங்களுக்கு பதிலா ஆள் போட்டாச்சு கிளம்புங்க" என்று ஒய்ட் சத்தமாக விரட்ட
"யோவ் பெர்சு யாருய்யா நீ உனக்கு இங்க என்ன வேலை?" என்று சீறினார் வெய்ட்டு.
"சார், பேசாம இருங்க, நான் கேட்கிறேன், சார் வாங்க நீங்க என்ன..."
"சார் நான் பிசி சார், 156 AV "
" இது லேடீஸ் பூத் ஆல் ஓட்டர்ஸ் பக்கத்து பூத் தான்" என தடுப்பு தட்டிக்கு அந்தப் புறம் காட்டினேன்.
"ஓகே சார் வரேன்" என்று கிளம்பினார். அதுவரை வெடவெடத்துப் போய் இருந்த ஒய்ட் ஆசுவாசமடைந்தார்.
"ஆள் வெய்ட்டா இருக்கான்னு உங்க கிட்டயே எவ்வளவு திமிறா பேசுறான் பாத்தீங்களா" என்று மீசையில் மண் ஒட்டவில்லை என காட்ட முயன்றார்.
இரவு பதினோறு மணிக்கு எல்லா வேலைகளையும் முடித்தேன். ஆல்ரெடி மிஸ்டர் ஒயிட் குறட்டையில் பள்ளி வளாகமே அதிர்ந்து கொண்டு இருந்தது.
"விஏஓ சார், பசங்க யாரயாவது கூட்டி வாங்க சார், பி4 ஃபிக்ஸ் பண்ணிட்டேன்னா கொஞ்சம் நிம்மதியா தூங்குவேன்"
"சார், இதோ வந்துட்டேன் பாருங்க" என்றபடி வந்தார்.
"தம்பி உங்க பேரு?!"
"சிவநேசன் சார், திருச்சி நேஷனல் காலேஜ்ல எம்.எஸ்ஸி ஃபிசிக்ஸ் செகண்ட் இயர்"
"ஓ, வெரிகுட் பா, இங்க ஒன்னும் பெரிய வேலை இல்ல, வாக்குச் சீட்டோடு கம்பார்ட்மெண்ட் உள்ள போனவங்க அத்தன சீட்டையும் திருப்பி எடுத்து வந்து பெட்டியில போடுறாங்களான்னு கவனிக்கணும்"
"ஓகே சார்"
"கேப் இருக்கிற இடத்தில் எல்லாம் சொருகி வச்சிடுவாங்க கவனமா பாக்கணும்"
"ஓகே சார்" என்றார் பவ்வியமாக.
"தம்பி இதுக்கு சம்பளம் எல்லாம் கிடையாது ஒரு சேவை தான்" இது ஒயிட்.
'ஏ இந்தாளு எப்போ முழிச்சாரு'
"அதனால என்ன சார் பரவால்ல" என்று சிரித்தபடி சென்றார் அந்த தம்பி.
"தம்பி காலையில் அஞ்சி மணிக்கெல்லாம் வந்துடு" என்றார் ஒயிட் கறாராக.
காலையில் இருந்தே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
வாக்குப்பதிவு இயந்திர முறையில் தான் NOTA உள்ளது. ஆனால் ஒரு 'குடி'மகன் ஒருவர் 49 O (NOTA )படிவம் வேண்டும் என பிடிவாதம் பிடித்தார்.
அவரைப் பார்த்த மாத்திரத்தில் என்னிடம் ஓடிவந்தார் ஒயிட்.
"இந்த ஏ4 ஷீட்டில் கட்டம் போட்டு சும்மா கையெழுத்து வாங்கிட்டு அனுப்பிடுங்க" என்றேன்.
"சார் நீங்களே அவரை டீல் பண்ணிடுங்க ப்ளீஸ்"
"சார், அவருக்கு இங்க ஓட்டே கிடையாதே, இது லேடீஸ் பூத் இல்லையா" என முறைத்தேன்.
ஓரு குடிமகனைப் பார்த்ததும் சகலத்தையும் மறந்து தொலைத்திருக்கிறார் ஒயிட்.
முணகிக் கொண்டே வெளியே போனவன் இன்னொரு ரவுண்டு ஏற்றிக் கொண்டு பக்கத்து பூத் போனான்.
ஒயிட் சிவநேசனிடம் வேலையை பார்த்துக் கொள்ளச் செய்துவிட்டு பக்கத்து பூத்துக்கு வேடிக்கை பார்க்கப் போனார்.
இவர் போனபோது குடிமகன் வெளியே வீசப்பட்டு வந்து விழுந்தார். வீசியவர் வேறு யாருமில்லை நம்ம பவுன்சர் போலீஸ் தான். ஒயிட் சென்ற சுவடு தெரியாமல் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு வந்தமர்ந்தார். 'ஆத்தீ எம்மாம் பெரிய சுமோ வீரனுடன் மோதப் பார்த்தேனே!!' என நினைத்திருப்பார்.
வாக்குப் பதிவு முடிந்தவுடன் நைசாக நழுவியதன் மூலம் பேக் பண்ணி கவர் போடுவது படிவம் நிரப்புவது போன்ற வேலைகளில் இருந்து தப்பித்தார்.
"கவர்லாம் போட்டாச்சா சார், சிவநேசன போகச் சொல்லிடுங்க பாவம், பெட்டி எடுக்க நைட் பன்னெண்டுக்கு மேல ஆயிடும்" என்றார் வழக்கத்துக்கு மாறான அக்கரையுடன்.
"இருக்கட்டும் விடுங்க, ஒரு லோக்கல் கை இருக்குறது நல்லது தானே?!"
"சிவநேசன் நீங்க எங்கள அனுப்பிட்டு தான் போகணும் சரியா?!"
"கண்டிப்பா இருக்குறேன் சார்"
பனிரெண்டு மணிக்கு ஜோனல் ஆபீசர்ஸ் பெட்டி எடுக்க வந்தார்கள். இறுதியாக சம்பளக்கவரை கொடுத்தார்கள்.
ஒயிட் என்னை தனியே அழைத்து வந்தார்.
"சார் சிவநேசனுக்கு சும்மா ஒரு அம்பது ரூவா கொடுத்து அனுப்பிடுவோம். அந்த சம்பளத்த பிரிச்சிக்குவோம்"
"அப்படில்லாம் பண்ண முடியாது சார்"
உண்மையின் உரைகல் என நேர்மையின் சிகரத்தில் உட்கார வைத்திருந்தேன். அங்கிருந்து வழுக்கிக் கொண்டு வந்து தலைகுப்புற விழுந்து கறையானார் மிஸ்டர் ஒயிட்!!
மு.ஜெயராஜ்,
தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
நாகமங்கலம்.
Thursday, December 26, 2024
THE SIX TRIPLE EIGHT – WWII war movie
THE SIX TRIPLE EIGHT – WWII war movie
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவம் ஜெர்மனிக்கு எதிராக சண்டையிட்டுள்ளது தெரியும். அமெரிக்க கருப்பின பெண்களைக் கொண்ட படைப் பிரிவு ஒன்றும் உருவாக்கப் பட்டிருந்துள்ளது. அவர்களது இரண்டாம் உலகப் போர் பங்களிப்பை பற்றியது தான் இந்த சிக்ஸ் டிரிப்பில் எய்ட் படம். ஃபைட்டிங் டு ஃப்ரண்ட் வார் என்கிற செய்திக் கட்டுரையில் வந்த தகவலைத்தான் பத்தாப்பு பாடத்தில் வர ஹிண்ட்ஸ் டெவலப் மெண்ட் பண்ணி இஸ் வாஸ் தி எல்லாம் போட்டு இந்தப் படமாக கொண்டு வந்துள்ளார்கள்.
*ஸ்பாய்லர் அலர்ட்*
பென்சில்வேனியாவில் உள்ள ஒரு சிறு நகரில் உள்ள கருப்பினப் பெண் லேனா ஆப்ராம் ஒரு யூத இனத்து இராணுவ வீரனைக் காதலிக்கிறாள். அவன் அவளிடம் ”காத்திரு ஒறவே” என்று கூறி போருக்குச் சென்றவன் வீரமரணம் அடைகிறான். லேனா ஒரு பலகீனமானவளாக இருந்தாலும் “ஏ நானுக்கும் போருக்கு வரேன்“ என்று வான்டனாக வண்டியில் ஏறிக் கொள்கிறாள்.
அங்கே அவர்களது நீக்ரோ இன பெண்கள் பட்டாலியன் சேரிட்டி ஆடம்ஸ் என்கிற “ஸ்ட்ரிக்ட் கேப்டன்“ ஆல் மிக கடுமையாக பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.
இதற்கிடையில் ரூஸ்வெல்ட் வீட்டிற்கு வெளியே தினந்தோறும் ஒரு பெண்மணி நிற்கிறாள். திருமதி ரூஸ்வெல்ட் என்ன என்று வினவியபோது தனது மகன்கள் இருவர் இராணுவத்தில் பணிபுரிகின்றனர். அவர்களிடம் இருந்து கடந்த ஆறு மாதகாலமாக கடிதங்கள் எதுவும் வரவில்லை என்று கண்ணீர் விட்டு கதறுகிறாள்.
ரூஸ்வெல்ட் இராணுவ உயரதிகாரிகளை அழைத்து வினவியபோது தபால் பிரிக்கும் வேலைகளைவிட அதிமுக்கிய சண்டைப் பணிகள் இருக்கும் போது இதற்கு மேன்பவரை வீணடிக்க முடியாது என்கிறார்கள்.
இராணுவ வீரர்கள் உற்சாகமாக சண்டையிட வேண்டுமானால் அவர்கள் மனதளவில் உற்சாகமாக இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் குடும்பத்தாரோடு கடித தொடர்பில் இருத்தல் அவசியம் என்கிறார். அப்படின்னா அங்கே மில்லியன் கணக்கில் தேங்கிக் கிடக்கும் தபால்களை பிரித்து அனுப்ப நீங்களே ஆட்களை சொல்லுங்கள் என்கிறார் இராணுவ அதிகாரி விட்டேத்தியாய்.
அங்கே இருக்கும் மற்றொரு கருப்பின அதிகாரி அவர்களிடம் 6888 பற்றி கூறி அவர்கள் நிச்சயமாக வெற்றிகரமாக முடிப்பார்கள் என்கிறார். அதற்கு அந்த அதிகாரி கருப்பினப் படைப் பிரிவை பற்றிய குறைவான மதிப்பீட்டோடு வேண்டா வெறுப்பாக சம்மதிக்கிறார்.
சண்டைக்காக காத்திருந்த “6888“ பிரிவுக்கு இந்த Central Postal Directory Battalion, வேலை ஏமாற்றத்தை தந்தாலும் அந்த வேலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக வேலைக்கு தயாராகிறார்கள். வேலை அமெரிக்காவில் இல்லை. ஆமாம் சண்டை நடப்பது ஐரோப்பாவில் தானே? இவர்களின் தபால் பிரிக்கும் வேலையும் அங்கே தான்.
இவர்களை குறைத்து மதிப்பிட்ட அந்த நிறவெறி பிடித்த இராணுவ அதிகாரி இவர்களுக்கு உதவி செய்வதற்கு பதிலாக பல ரூபங்களில் உபத்திரவம் தான் செய்கிறான். அவ்வளவையும் மீறி ஆறு மாதங்களில் செய்ய வேண்டிய மலையென தேங்கி கிடக்கும் தபால்களை பிரித்து அனுப்பும் பணியை மூன்றே மாதங்களில் வெற்றிகரமாக முடித்து அனைவரையும் வாய் பிளக்க வைக்கிறார்கள். இராணுவ வீரர்கள் வீட்டுடனான கடிதப் போக்குவரத்து மீளவும் கிட்டியதில் இவர்களை வணங்கி வாழ்த்துகிறார்கள்.
அந்த 6888 படைப்பிரிவின் இந்த மகத்தான சாதனை வரலாற்றில் எங்கேயும் அங்கீகரிக்கப் படவில்லை. இறுதியாக 2013 ல் தான் அந்த பிரிவினருக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது.
லேனாவுக்கு ஆப்ராம் எழுதிய இறுதிக் கடிதம் அந்த மலைக்குவியலில் இருந்து லேனாவின் கைகளில் சேர்வது நெகிழ்ச்சியான ஒன்று.
கேப்டன் சேரிட்டி ஆடம்ஸ்க்கும் கருப்பின வீரர்களுக்குமான உறவு மிகவும் சிறப்பாக சித்தரிக்கப் பட்டிருக்கும். இனவெறி அதிகாரி இவர்களது முகாமை பார்வையிட வரும் போது நடக்கும் உரையாடல் சிறப்பு. “நீ எவ்வளவு பெரிய அதிகாரியா இருந்தா என்ன இங்க நான் தான் கிங்கு“ என்பது போல கெத்தாக எதிர் கொள்வார் ஆடம்ஸ்.
நமது நாட்டில் ஒரு இஸ்லாமியர் மற்றவர்களைக் காட்டிலும் தமது தேச பக்தியை இரண்டு மடங்கு நிருபிக்க வேண்டி இருக்கும். ஒரு தலித் தனது திறமையையும் நேர்மையையும் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும். அது போல அங்கே அமெரிக்காவில் கருப்பினத்தவர் “எங்க கிட்டயும் திறமை இருக்கு, எங்களாலும் எந்த வேலையையும் உங்களைக் (வெள்ளையினத்தவரை) காட்டிலும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை நிருபித்தாக வேண்டும்.
தனது பட்டாலியனின் முதல் கூட்டத்திலேயே சேரிட்டி ஆடம்ஸ் இதனை தனது பெண்களுக்கு கறாராக கூறி புரிய வைக்கும் இடம் சிறப்பாக இருக்கும். உரையாடலும் அதை ஆடம்ஸ் ஆக நடித்த நடிகை கூறியிருந்த விதமும் அவரது உடல்மொழியும் ஆகச் சிறப்பாக இருக்கும்.
அனைத்து நாடுகளிலுமே ஒடுக்கப் படுவோரை நோக்கிய தவறான முன் அனுமானம் (prejudice)மற்றும் ஒதுக்கி வைக்க மேற்கொள்ளும் முயற்சி என ஒரே டெம்ப்ளேட்டில் தான் செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை இந்த படத்தை பார்த்து உணர முடிந்தது.
இந்த படம் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம். ஆர்வமுள்ளவர்கள் தவறவிடாதீர்கள் நெட்ஃபிளிக்ஸ் ல் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)
தலைநகரம் – 4 "குளிர்நகரம்"
விமானம் தரையிறங்கிய உடனே நமது லக்கேஜ் எந்த கன்வேயரில் வரும் என்று கன்வேயர் நம்பர் கொடுத்துவிடுகிறார்கள். கதவை திறந்த மாத்திரத்தில் டெல்லி...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...