எனது பதிவுகள்
Saturday, July 4, 2026
அணு உலை தயார்நிலை!!
“அப்பா, அணு உலையில் முதல் வெடிப்பை எப்படி துவங்கி வைப்பார்கள்?”
“முதல்ல ஒண்ணு தெரிஞ்சிக்கோ, அணு உலைக்குள் பெரிதாக வெடித்து சிதறும் வேலை எதுவும் நடக்காது!“
“அப்படின்னா முதல்ல என்னதான் செய்வாங்க?“
“இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் U238 ஐசோட்டோப் வகை. ஆனால் அணுப்பிளவுக்கு தேவை U235. இயற்கையாக கிடைக்கும் யுரேனியத்தில் 99.3 விழுக்காடு U238 தான் இருக்கும். 0.7 விழுக்காடு தான் U235 இருக்கும். இதனை செறிவூட்டி (Enrichment) 3-4 விழுக்காடு U235 க்கு மாற்றுவதன் மூலம் அணுப் பிளவுக்கு உகந்ததாக மாற்ற இயலும்”
“அப்பா இருங்க யுரேனியம் U238 ஐசோட்டோப்பை நியுட்ரானால் தாக்கி பிளக்க வேண்டியது தானே?!”
“யுரேனியம் U238 ஐ நியுட்ரானால் தாக்கினால் அது பிளவு படாது மாறாக மோதின நியுட்ரானை விழுங்கி ஏப்பம் விட்டு U239 ஐசோட்டோப்பா மாறிடும்”
”ஓ அதனால் தான் செறிவூட்டுறாங்களா? ம் அப்போ….”
“நீ என்ன கேட்க வர்ரன்னு புரியுது எப்படி செறிவூட்டல் செய்வாங்கன்னு தானே கேட்குற?!”
“அதே தான் பா!!”
“U235 மற்றும் U238 ரெண்டுமே ஒரே மாதிரிதான் வேதி வினை புரியும். அதனால் வேதியியல் முறைப்படி பிரிப்பது நடக்காது. ஆனால் இரண்டுக்கும் மிகவும் குறைவான நிறை வேறுபாடு இருக்கும். 1.3% தான் வேறுபாடு“
“அப்படின்னா என்ன செய்வாங்க”
“சொல்றேன், முதலில் யுரேனியத்தை யுரேனியம் ஹெக்சா ஃபுளுரைட் வாயுவாக மாற்றி விடுவார்கள். முறத்தில் போட்டு புடைக்கும் போது எடைக்கு ஏற்றவாறு தானிய மணிகள் பிரிவது போல இந்த வாயுவை சுழலும் கலன்களுக்குள் வைத்து நிமிடத்திற்கு பத்தாயிரம் சுழற்சி என்கிற அதிவேகத்தில் சுழற்றும் போது ஏதோ ஒரு அளவுக்கு பிரிந்து 0.7 என்கிற அளவில் இருந்து 3-4 விழுக்காடு U235 கிடைக்கும் அணு உலைக்குள் வைத்துப் பிளக்க இந்த அளவு போதும். அதுவே அணு ஆயுதம் என்றால் 90 விழுக்காடு அளவுக்கு செறிவூட்டணும்”
“யுரேனிய பெல்லட் மாத்திரை என்றெல்லாம் சொன்னீங்க இப்போ வாயு வடிவத்தில் இருக்கே”
“அவசரப்படாத”
“சரி சொல்லுங்க”
“வாயு வடிவில் இருக்கும் யுரேனியம் ஹெக்சா குளோரைடுவை யுரேனியம் டை ஆக்சைட் பவுடராக மாற்றி நன்றாக அழுத்தி வெப்பப் படுத்தி பெல்லட்டுகளாக மாற்றி விடுவார்கள்”
“அப்புறம் அந்த எரிபொருள் குழாய்க்குள் நிரப்புவாங்க”
“அந்த எரிபொருள் குழாய் எப்படி இருக்கும் தெரியுமா?"
“நீளமான உருளைவடிவ இரும்புக் குழாய் அவ்வளவு தானே?!”
“என்னது இரும்புக் குழாயா? அணுக்கருப் பிளவு நடக்கும் போது வெளிப்படும் அதி வெப்பத்தை தாங்க வேண்டாமா?”
“அப்போ அது என்ன மெட்டல்?”
“zirconium alloy என்ற சிர்கோனிய உலோக கலவையால் ஆன குழாய் தான் பெல்லட்டுகளை வைக்கும் குழாய். இதனுள் பெல்லட்டுகளை வைத்த பிறகு இருக்கும் இடைவெளியில் ஹீலியம் வாயுவை நிரப்புவார்கள்”
“அது ஏன்பா?”
“அணுப்பிளவின் போது வெளிப்படும் வெப்பத்தை குழாய்க்கு வெளியே வரும் நீருக்கு எளிதில் கடத்த வேண்டும். எளிதில் வினைபுரியாத தன்மை இருக்க வேண்டும். எளிதில் கதிர்வீச்சினால் பாதிப்படையாத பண்பு இருக்க வேண்டும். இது எல்லாம் இருக்கும் மங்குனி மகாராஜா ஹீலியம் தான். அதனால் தான் அந்த இடைவெளிக்குள் ஹீலியம் வாயு நிரப்பப் படுகிறது”
“ஒரு அணு உலைக்குள் எத்தனை ஃபியுவல் ராட் வைப்பாங்கப்பா?“
“என்னது எத்தனை ஃபியுவல் ராடா?”
“ஏம்பா எதுக்கெடுத்தாலும் அதிர்ச்சி அடையுறீங்க?”
“ஒரு எரிபொருள் தொகுப்புக்குள் (Fuel Assembly) 200-300 எரிபொருள் குச்சிகள் (Fuel Rods) இருக்கும், ஒரு அணு உலைக்குள் 100 முதல் 250 க்கு மேல் எரிபொருள் தொகுப்புகள் இருக்கும். அதாவது 10000 முதல் 75000 எரிபொருள் குச்சிகள் இருக்கும்”
“அடேங்கப்பா தலையே சுத்துதே”
“அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிதான் இருப்பதிலேயே மிகவும் கவனமாக செய்ய வேண்டிய பணி. மிகவும் நேரம் எடுத்துக் கொள்ளும் பணியும் கூட“
“இப்போ அணுப்பிளவு துவங்கி விடுமா?“
“இல்லை முதலில் எரிபொருள் தொகுப்பை சுற்றிலும் முதல் நிலை குளிர்விப்பானை நிரப்புவார்கள். ஏற்கனவே பெல்லட்டுகள் இருக்கும் குழாய்க்குள் ஹீலியம் வாயு நிரப்பி வைக்கப் பட்டிருக்கும். ஒட்டுமொத்த எரிபொருள் தொகுப்பினை மூடவேண்டி இருக்கும்“
“இந்த நிலையில் வெடிச்சிடாது இல்லையா?”
“அனைத்து தொகுப்புமே சப்கிரிட்டிகல் மாஸ் எனப்படும் தானாகவே வெடிக்க தேவையான நிறைக்கு கீழே தான் இருக்கும். அணுப்பிளவு தானாக நிகழ வாய்ப்பில்லை”
“அப்படின்னா அணுவைப் பிளக்க வெளியில் இருந்து நியுட்ரானை அனுப்பி அட்டாக் பண்ணுவாங்களா?”
”வெளியில் இருந்து அட்டாக் பண்ண வேண்டியது இல்லை உள்ளே இருக்கும் யுரேனியம் பெல்லட்டுகளில் இருந்து சிறிய அளவில் நியுட்ரான் வெளிய வரும் ஆனா பெரிய அளவில் அணுப்பிளவை நடத்த அது போதாது அதனால் நியுட்ரானை வெளியிடும் பொருளை அணு உலை மையத்தில் வைத்தால் எல்லாம் தன்னால் நடக்கத் துவங்கும்”
”எந்தப் பொருள் அப்படி நியுட்ரானை வெளியிடும்?”
” Californium-252, Antimony–beryllium ஆகியவை நியுட்ரானை வெளியிட்டு அணுப்பிளவுக்கு திரி பற்ற வைக்கும்?”
“அப்பா, எனக்கு ஒரு டவுட்டு?”
“என்னடா டவுட்டு?”
“அப்பா, ஏற்கனவே யுரேனியம் சிறிய அளவில் நியுட்ரானை வெளியிடும் என்று சொல்றீங்க அதை வைத்து அணுப்பிளவு தொடங்கி மறுபடி மறுபடி நியுட்ரானை வெளியிட்டு செயின் ரியாக்ஷன் தொடங்கிடாதா?”
”அதுக்கும் ஒரு செட்டப்பு இருக்கு!”
“அது என்னப்பா?“
“கட்டுப்பாட்டு கழிகள் (Control rods) எனும் அமைப்பு எரிபொருள் அமைப்பினுள் இருக்கும். நியுட்ரான்கள் வெளியே வந்தால் டபக் என்று கவர்ந்து கொள்ளும். அணுப்பிளவை துவங்கும் போது மெல்ல மெல்ல அவற்றை மேலே இழுப்பார்கள். வெப்பம் கட்டுப்பாட்டு அளவை மீறும் போது அவற்றை மெல்ல உள்ள இறக்குவார்கள். அணு உலைகளில் எரிபொருள் நிரப்பும் போதும் அவற்றை ஷட் டவுன் செய்ய முழுவதுமாக உள்ளே இறக்கி அணுப்பிளவை நிறுத்துவார்கள். அது போல அவசர விபத்துகளின் போது அணு உலையை நிறுத்த வேண்டும் என்றாலும் உடனே கண்ட்ரோல் ராட் களை உள்ளே இறக்குவார்கள். ஆக மொத்தத்தில் அணு உலைகளின் ஆன் ஆஃப் கண்ட்ரோல் இவைதான்”
“அடேங்கப்பா இவ்வளவு வேலை பார்க்கும் நியுட்ரான் விழுங்கிகள் எவை அப்பா?”
“B4C எனும் போரான் கார்பைடு. இதில் இருக்கும் போரான்-10 என்ற ஐசோட்டோப் நியுட்ரான்களைக் கவரும்”
“அவ்வளவு தானா வேறு பொருட்களும் இருக்கா?”
“சில்வர், இண்டியம் மற்றும் காட்மியம் உலோக கலவை அப்புறம் ஹாஃப்னியம்”
” இவற்றுக்கு இருக்க வேண்டிய தனித்தன்மை என்னப்பா?”
”அதிகப் பட்ச கதிர்வீச்சு உமிழ்வின் போதும் பாதிப்படையக் கூடாது, அதோடு அணு உலைக்குள் இருக்கும் அதிவெப்ப நிலையில் உருகாமல் தாக்குப்பிடிக்க வேண்டும் முக்கியமாக நியுட்ரான்களை உட்கவர வேண்டும்”
“சரி இப்போ சொல்லுங்க அணு உலைக்குள் அணுப்பிளவு நடக்கும் போது என்னவெல்லாம் நடக்கும் விலாவாரியா சொல்லுங்க!!“
“இப்போவே லென்த்தா போவுது அடுத்த பகுதியில் சொல்லட்டுமா?”
Friday, June 26, 2026
Balan malayalam movie
பாலன் - மலையாளம்
ஒரு வேலையாக சென்னை வந்திருந்தேன் ஒரு மாலைப் பொழுதில் தியேட்டர்ஸ் நியர் மீ என்று கூகுளில் தேடினேன். பார்த்தால் பொடனிக்கு பின்னாலேயே 2 கிலோ மீட்டரில் சத்தியம் தியேட்டர் இருக்கிறது.
2005ல் திருமணமான பிறகு நானும் அகிலாவும் முதன் முதலில் படம் பார்த்த தியேட்டர் இதுதான். சந்திரமுகி படம் பார்த்தோம். வீட்டில் இருந்து வடை பலகாரங்கள் எல்லாம் ஒரு கவரில் போட்டு கொடுத்து அனுப்பி இருந்தார்கள். ஆனால் அவற்றையெல்லாம் வாசலிலேயே பறிமுதல் செய்து கொண்டு வெறும் கையோடு தான் எங்களை உள்ளே அனுப்பினார்கள். "அடப்பாவிகளா வட போச்சே"
என்னுடன் இருந்த நண்பரை அழைத்தேன் அவரும் ஆர்வமாக ஒப்புக் கொண்டார். 6.50 க்கு தொடங்கும் படத்துக்கு தங்கியிருந்த இடத்திலிருந்து 6.40 க்கு கிளம்பினோம். சரியாக படம் தொடங்கிய உடனே உள்ளே போய்விட்டோம்.
"மஞ்சும்மேல் பாய்ஸ்" என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனரின் அடுத்த படைப்பு இது.
ஆதிசேஷன் என்கிற குட்டிப்பையன் தான் படத் தலைப்புக்கான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தான் . ஃபர்ஸானா என்பவர் தான் கதாநாயகி. குட்டிப்பையன் அம்மா.
ஃபர்ஸானா இந்த படத்தில் தான் ஏற்று இருக்கும் கதாபாத்திரத்திற்கான உடல் மொழியை அனேகமாக ஸ்ட்ரா படத்தில் ஹென்ஸன் அவர்களிடமிருந்து எடுத்திருப்பார் போல தெரிகிறது.
அந்த அழகான குட்டிப் பையன் கண்களில் இருக்கும் பரிதாபகரமான அப்பாவித்தனம் தான் பார்ப்பவர்களை பதட்டத்திலேயே வைத்திருக்கிறது.
படம் தொடங்கும் போது அம்மாவும் பிள்ளையும் பேருந்தில் ஏறுகிறார்கள் ஒரு பெயரை அவர்களுக்கு வைத்துக் கொண்டு புதிய கதை ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு இடங்களிலும் சில நாட்களே தங்கி கொண்டு பிறகு புறப்பட்டு விடுகிறார்கள். எதற்காக இந்த ஓட்டம் ?! குட்டிப் பையனின் படிப்பு என்னாவது?! என்று நமக்கு மனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது.
பேருந்தில் ஏறிய உடனேயே அந்த பையன் 'அடுத்தது எனக்கு என்ன பெயர் மா என்ன கதை' என்று ஆர்வத்தோடு கேட்டு தெரிந்து கொள்கிறான்.
பிறகு தனியாக இருக்கும் ஒரு பணக்காரப் பாட்டி வீட்டில் ஹோம்நர்சிங் வேலை இருப்பதை அறிந்து போய் சேருகிறார்கள்.
பார்ப்பதற்கு முதலில் மிகவும் முரட்டு பாட்டி போல தெரிந்த அவர் பிறகு இவர்கள் மீது பேரன்பு கொண்டு இவர்களை அந்த வீட்டிலேயே இருக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்.
அந்த பாட்டி வற்புறுத்தி கேட்பதால் தனது கொடூரமான முன்கதையை கூறுகிறாள். பாட்டி வீட்டில் இருக்கும் கதாநாயகி தனது பையனை பள்ளியில் சேர்க்கிறாள். ஆனால் வீட்டின் பின்புறமாக நெடுந்தலைவு நடந்து சென்று போய் வேறு ஒரு இடத்தில் இருந்து பள்ளி வேனில் ஏற்றுகிறாள். திரும்ப வரும்போது அங்கிருந்தே அழைத்து வருகிறாள். "நான் வருவதற்கு எவ்வளவு தாமதம் ஆனாலும் நீ காத்திருக்க வேண்டும் நான் நிச்சயமாக வருவேன்" என்று ஒரு தருணத்தில் அவனிடம் அழுத்தமாக கூறுகிறாள்.
இதற்கிடையில் கதாநாயகியை ஒரு பாலியல் தொழிலாளி மிரட்டி தொழில் செய்ய வற்புறுத்துகிறாள். அவளுடன் ஏற்கனவே பழக்கமானவள் போல தெரிகிறது.
பையன் பள்ளியில் இருந்து வந்து அந்த இடத்தில் இறங்கி நடுக்காட்டில் காத்திருக்கிறான்.
வீட்டில் அந்த பாலியல் தொழிலாளி இடத்தை கண்டறிந்து வந்து மிரட்டியபடி இருக்கிறாள். அதே நேரத்தில் வீட்டிற்கு தெரிந்தவர்கள் வந்து கொண்டிருப்பதாக அழைப்பு வருகிறது.
அப்போது ஒரு சம்பவம் பதட்டத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. அந்த இடத்தில் படத்தின் இடைவேளை.
இடைவேளைக்குப் பிறகு இன்னும் பரபரப்பாக செல்கிறது. படத்தின் பிற் பாதியில் தான் டொவினோ தாமஸ் வருகிறார்.
படத்தில் பாலகனாக வரும் பாலனும் அதே கதாபாத்திரத்திற்கு பதின்ம வயது பையனாக நடித்திருந்த பையனும் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர்.
அருமையான படம் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சீட்டின் நுனியிலேயேதான் உட்கார்ந்து பார்க்க வேண்டும். அவ்வளவு விறுவிறுப்பு ஆனால் சற்று மெதுவாக செல்லும் ஸ்லோ பர்னிங் வகை.
Friday, May 29, 2026
ஃபர்ஸ்ட் லுக் முக்கியம் பாஸ்!!
இதோ திங்கட்கிழமை கல்வி புத்தாண்டு துவங்க உள்ளது!!
இந்த புத்தாண்டில் நம்மை நாம் சிறப்பாக தயார் செய்து கொண்டால் தான் மாணவர்களையும் சிறப்பாக வழி நடத்த முடியும் அது சார்ந்து நான் ஏற்கனவே எழுதிய ஒரு விஷயம் தான் மீண்டும் உங்களுக்காக!!
First Look முக்கியம் பாஸ்!!
காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!!
ஒரு பேராசிரியர் ஒருவர் ஒரு கணக்கை குறிப்பிட்டு இந்த கணக்கை சால்வ் செய்வதற்கு எனக்கு நான்கு நாட்கள் ஆனது, ஏகப்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் ரெஃபர் செய்து தான் சால்வ் செய்ததாக பெரிய பில்டப்போடு கணக்கை ஆரம்பிப்பார்.
அந்த சமயத்தில் தூங்கி வழிந்த தனுஷை டஸ்டரால் அடித்து விட்டு நீ போடுறியா என்பார்.
தனுஷோ ஜஸ்ட் லைக் தட் லெப்ட் ஹாண்டில் டீல் செய்து முடித்து விடுவார்!!
பெரும்பாலானவர் தான் கற்றுள்ள வித்தையை அரிதான ஒன்றாகவும் வேற யாராலும் அந்த அளவுக்கு செய்து விட முடியாது என்பதை குறிப்பிட்டு காண்பிப்பதற்காகவும் அது எவ்வளவு கஷ்டமானது என்று பில்டப்பை ஏற்றி கூறுவார்கள்.
பொதுவாகவே அது சாதாரண ஒன்றாக இருக்கும் இருந்தாலும் தான் கற்றுள்ள வித்தை அவ்வளவு ஈசி கிடையாது எல்லாராலும் முடியாது என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்வார்கள்.
கெடுவாய்ப்பாக முந்தைய தலைமுறை கணித ஆசிரியர்களில் பலர் இது மாதிரி ஜிம்மிக்ஸ் வேலைகளை வகுப்பு தொடங்கும் போது சொல்லி தொலைத்தது உண்டு.
மேலும் சிடுமூஞ்சியாக இருப்பதை சிரத்தையாக இருப்பதாக தவறாக எண்ணிக் கொண்டு இருந்ததும் உண்டு.
நான் கொல்லிமலை பள்ளிக்கு நேர்காணலுக்கு சென்று இருந்த போது sample class எடுக்கும் போது நான் இயல்பாக சிரித்ததை "கணக்கு சார் சிரிக்கிறாருங்க சார்" என்று ஆச்சரியமாக பள்ளி முதல்வரும் தாளாளரும் பேசிக் கொண்டதாக அங்கே இருந்த எனது நண்பர் பின்பு ஒரு நாளில் கூறினார்.
"கணக்கு சார் னா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு சிரிக்க கூட மாட்டாங்க" என்கிற பொதுபிம்பம் இருந்திருக்கும் போல.
தற்போதுள்ள புதிய தலைமுறை ஆசிரியர்கள் ஒன்றும் சிடுமூஞ்சி கிடையாது இவர்களது மெத்தட் ஜனரஞ்சகமானது.
அவர்களது வகுப்பில் சிரிப்புக்கு கேலி கிண்டலுக்கு பஞ்சம் இருக்காது.
"அறிவியல் பாடங்களின் ராணி கணிதம்" என்று சொல்வார்கள் அதற்கு ஏற்றார் போல் அறிவியல் புலம் நடப்பதற்கான பாதையை கணிதம் போட்டுக் கொண்டே செல்லும்.
ஆக கணித பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அறிவியலிலும் தேர்ந்த அறிவினை வலிந்து பெற்றுக் கொள்வது நலம். ஏனென்றால் கணித பாடத்தை எந்தெந்த துறைகளில் எவ்வாறெல்லாம் பயன்படுத்த போகிறோம், அறிவியலை தெளிவுற புரிந்துகொள்ள கணிதம் எந்தெந்த வகையில் எல்லாம் துணை நிற்கும் என்கிற விஷயத்தை பாடத்தின் ஊடாகவே சொல்லிக்கொண்டு சென்றோம் என்றால் வகுப்பறை சுவாரசியமாக செல்வதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு அறிவியல் கணிதம் இரண்டிலும் ஒரு தேடல் ஏற்படுவதற்கு உத்வேகத்தை கொடுக்கும்.
வகுப்பறைக்கு உள்ளே நுழைந்த மாத்திரத்தில் ஏதோ கிணற்றுக்குள் தலைகீழ் நீச்சல் அடிப்பதற்கு குதிப்பது போல் "தொபுக்கட்டீர்" என்று பாடத்துக்குள் குதித்து விடல் ஆகாது.
மாறாக மாணவர்களின் மனதை அந்த பாடவேளைக்கு ஏற்றவாறு பதப்படுத்திவிட்டு துவங்க வேண்டும். முக்கியமாக புதிய பாடம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அந்தப் பாடத்தின் பயன்பாடுகள் இருக்கும் துறை சார்ந்த ஏதேனும் ஒரு சுவாரசியமான முடிச்சை எடுத்து போட்டு அவர்கள் முன்னால் அவிழ்க்க வேண்டும்.
அதற்கு பிறகு அந்த பாடம் மேற்கூறிய விஷயத்தின் பின்புலத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை கூறினோம் என்றால் பாடத்தின் முக்கியத்துவம் அறிந்து நிமிர்ந்து உட்கார வழி வகுக்கும் .
அதை விட்டுவிட்டு "டேய் இந்த பாடம் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ரொம்ப ஈசி கிடையாது, இதெல்லாம் ரொம்ப கஷ்டம், கவனமா படிக்கணும். நான் நடத்தும் போது ஒரு நிமிஷம் விடாம கண்சிமிட்டாம கவனமா பார்த்துகிட்டே வரணும் அப்பதான் உங்களுக்கு புரியும்!!"
என்று துவங்கும் போதே ஒரு வெடிகுண்டை வீசினோம் என்றால் மாணவர்கள் பாடத்திலிருந்து சற்று விலகி நிற்க ஆரம்பித்து விடுவார்கள்.
என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு பாடத்தை துவங்குவது என்றாலும் சென்ற ஆண்டு பயன்படுத்திய அதே உத்தியை பயன்படுத்தியதே கிடையாது, ஒவ்வொரு ஆண்டும் அதை வெவ்வேறு விதமாக மேம்படுத்தி சுவாரசியத்தை கூட்ட முயலுவேன்.
மேலும் பாடத்தை துவங்குவதை இயக்குனர் திரைப்படத்திற்கான ஸ்கிரீன் பிளே எழுதும் நேர்த்தியோடு மனதுக்குள் வடிவமைத்து அதனை நூறு விழுக்காடு வகுப்பறையில் ஒர்க் அவுட் செய்வதற்கு முயல்வேன்.
Though I was a strict teacher, நான் கணிதம் எடுக்கும் வகுப்புகளில் கணிதத்தில் அதிக ஆவரேஜ் மார்க் கிட்டும், அதுபோல ஆங்கிலம் எடுக்கும் வகுப்புகளிலும் ஆங்கிலத்தில் அதிக மார்க் எடுப்பார்கள், எனது மாணவர்களில் பலர் கணிதத்தை படமாக எடுத்து படிக்கின்றார்கள் கணித ஆசிரியர்களாகவும் உள்ளார்கள்!!
ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பது என்பது சிடுமூஞ்சியாக இருப்பதல்ல, வேலையில் சரியாக இருப்பதுதான்!!
பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் உள்ளது அது சுலபமான படமாக ஆவது என்பது!!
பாடம் நடத்தும்போது சிரிப்பும் கும்மாளமுமாக இருக்குமானால் வகுப்பறை உயிரோட்டமாக இருக்கும் அங்கே நிச்சயமாக கற்றல் இனிதே நடக்கும்.
"இந்த பாடம் ரொம்ப கஷ்டம்ப்பா அதனால ஜாக்கிரதையா இருங்க, எல்லாரும் கவனமா கவனிங்க" என்று பீடிகை போட்டு ஒரு பாடத்தை துவங்கும் ஆசிரியருக்கு நிச்சயமாக அந்த பாடம் அவர் மாணவராக இருந்த காலத்தில் கடினமாக இருந்திருக்கும், அதே கஷ்டத்தை அவர் அறிந்தோ அறியாமலோ மாணவர் மனதிற்கும் கடத்தி விடுகிறார்!!
ஒரு விஷயத்தை நம்மால் தெளிவாக, சரியாக, முழுமையாக புரிந்து கொள்ள இயலவில்லை என்றால் நிச்சயமாக அந்த விஷயத்தை மற்றவருக்கு எளிமையாக சொல்லி புரிய வைக்க இயலாது என்பது மிகப்பெரிய உளவியல் உண்மை!!
இந்த உண்மையை அனைத்து பாட ஆசிரியர்களும் மனதில் நேர்மையோடு ஏந்திக்கொண்டு வகுப்பறைக்குள் சென்றோம் என்றால் பாடத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிரமாதமாக வந்துவிடும்.
அதற்குப் பிறகு பாடங்கள் மாணவர்கள் மனதில் ஹவுஸ் ஃபுல்லாக ஹிட் அடிக்கும்.
மு ஜெயராஜ், தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம், அரியலூர்.
Wednesday, May 27, 2026
Team work pays
அந்த மாணவி எட்டாம் வகுப்பு வரை எங்கள் பள்ளியில்தான் படித்தார். படிப்பில் சற்று பின்தங்கியிருந்ததால், அவரது பெற்றோர் திடீரென அவரை ஒரு தனியார் நிதி உதவி பெறும் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.
ஆனால், பத்தாம் வகுப்பு வந்தவுடனேயே அந்த மாணவிக்குப் புதிய பள்ளியில் சிக்கல் தொடங்கியது. அங்கு அதிகாலை முதல் மாலை வரை நடத்தப்பட்ட கடுமையான பயிற்சி வகுப்புகளையும், பள்ளியின் கெடுபிடிகளையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. விடுதியில் தங்கிப் படித்தவர், பின்னர் வீட்டிலிருந்தே பள்ளிக்குச் சென்று வரத் தொடங்கினார்.
"சரிவரப் படிப்பதில்லை, பயிற்சி வகுப்புகளுக்கு ஒழுங்காக வருவதில்லை" என்ற புகார்கள் அவர் மீது அடுக்கப்பட்டன. 'தங்கள் பள்ளியின் 100% தேர்ச்சி விகிதம் (Pass Percentage) இவளால் பாதிக்கப்பட்டுவிடுமோ' என்ற அச்சத்தில், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவருக்கு மாற்றுச்சான்றிதழ் (TC) கொடுத்துப் பள்ளியை விட்டு அனுப்பிவிட்டார்கள்.
பொதுவாக, பத்தாம் வகுப்பின் பாதியில் வரும் மாணவர்களுக்கு எந்தப் பள்ளியிலும் சேர்க்கை தருவதில்லை. அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்துமே நூறு சதவீத தேர்ச்சியை நோக்கியே ஓடிக்கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம்.
அம்மாணவி எங்களிடம் வந்தபோது முதலாம் இடைப்பருவத் தேர்வு முடிந்து, காலாண்டுத் தேர்வும் நெருங்கியிருந்தது. அதனால், "மறுபடியும் பழைய பள்ளியிலேயே பேசிப் பாருங்கள்" என்று கூறி நான் முதலில் அவர்களைத் திருப்பி அனுப்பினேன். ஆனால், அவர்கள் மீண்டும் எங்களிடமே வந்ததால், மறுப்பு ஏதும் சொல்லாமல் அந்தப் பிள்ளையைச் சேர்த்துக்கொண்டோம்.
எதிர்பார்த்தபடியே, காலாண்டுத் தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், எங்கள் ஆசிரியர்களின் கூட்டுமுயற்சியால் அரையாண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார்.
தேர்வுகளுக்கு இடைப்பட்ட நீண்ட விடுமுறை நாட்களின் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல், எங்கள் ஆசிரியர்கள் தொடர்ந்து சிறப்புப் பயிற்சிகளை வழங்கினர். 'சாகப் போகும் நேரத்தில் சங்கரா சங்கரா' என்பது போல, அதுவரை புத்தகத்தைத் தொடாத மாணவர்கள் கூட, அந்தத் தேர்வு நேரப் பதற்றத்தில் விழுந்து விழுந்து படிப்பார்கள். அதை எங்கள் ஆசிரியர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆசிரியர்களின் அன்பான வழிகாட்டலாலும், தொடர் பயிற்சியாலும் அந்த மாணவி பொதுத்தேர்வில் 290 மதிப்பெண்கள் பெற்று மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்!
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், அந்த மாணவியின் தந்தை தன்னை வெளியேற்றிய பழைய பள்ளிக்குச் சென்று, மதிப்பெண் பட்டியலை அங்கிருந்த மேஜை மீது வைத்துள்ளார்.
"என் மகளைச் சுமை என்று வெளியில் அனுப்பினீர்களே... இதோ அவளது மதிப்பெண்! இந்த விபரத்தைப் போட்டு உங்கள் பள்ளி வாசலிலேயே நான் பேனர் வைக்கட்டுமா?"
என்று பெருமிதத்தோடு, ஒரு சிறு மிரட்டலோடு கேட்டுவிட்டுத்தான் எங்களிடம் டிசி (TC) வாங்க வந்திருந்தார்.
எங்களிடம் மாற்றுச்சான்றிதழ் வாங்கிய போது, அந்தத் தந்தை மிகவும் உருக்கமாக நன்றி தெரிவித்தார். "சார், அடுத்த ஆண்டு நம்ம பள்ளிக்கு என்ன உதவி தேவை என்றாலும் நிச்சயமாகச் சொல்லுங்கள், நான் செய்கிறேன்" என்று நெகிழ்ச்சியோடு கூறிவிட்டுச் சென்றார்.
சனி, ஞாயிறு என்று பாராமல், தங்களின் சொந்த ஓய்வு நேரத்தைத் தியாகம் செய்து, மாணவர்கள் மீது அக்கறையும் அன்பும் காட்டிய எங்கள் ஆசிரியர்களின் உழைப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.
சில நேரங்களில், பயிற்சிக்கு ஏற்ற முன்னேற்றத்தைக் காட்டாத மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கோபப்படலாம், ஆதங்கப்படலாம். ஆனால், அவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் தங்களின் அன்பு வட்டத்திற்குள்ளேயே வைத்துப் பயிற்சியளித்த ஆசிரியர்களின் விடாமுயற்சியால், இந்த ஆண்டு எங்கள் பள்ளியின் சராசரி மதிப்பெண் 348 ஆக உயர்ந்துள்ளது!
இன்று பள்ளிக்கு வந்து டிசி பெற்றுச் சென்ற இரண்டு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துச் சென்றபோது, என் கண்களிலும் அறியாமல் கண்களில் நீர் களுக் என்று முட்டிக்கொண்டது.
Sunday, May 10, 2026
நூல் - நினைவோ ஒரு பறவை ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார்
நூல் - நினைவோ ஒரு பறவை
ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார்
டிஸ்கவரி பதிப்பகம்
சில நாட்களாக தேர்தல் & வாக்கு எண்ணிக்கை என்ற பரபரப்பான மனநிலையில் வாசிப்பு இல்லாமல் இருந்தது.
இன்று டிவி களிலும் சோசியல் மீடியாக்களிலும் வலம் வரும் "இராவணன் மவன் டா" க்களுக்கு பயந்து புத்தகத்தில் கண்களை புதைத்துக் கொண்டேன்.
பெரம்பலூர் புத்தக கண்காட்சியில் வாங்கி வைத்திருந்த கவிஞர் நா முத்துக்குமார் அவர்கள் எழுதிய "நினைவோ ஒரு பறவை" நூலை வாசிக்க எடுத்தேன்.
எனக்கு எப்போதுமே நா முத்துக்குமார் முகத்துக்கும் வெற்றிமாறன் முகத்துக்கும் ஒரு குழப்பம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வந்தது. (இப்போது ரொம்ப தெளிவு )
அதுபோல பொய்யாதநல்லூர் பள்ளியில் என்னுடன் பணி புரிந்த வேதியல் ஆசிரியர் சுரேஷ் அவர்களின் முகத்துக்கும் நா முத்துக்குமார் அவர்களின் முகத்துக்கும் பெரிய ஒற்றுமை இல்லை என்றாலும் ஏனோ நான் உட்பட பல ஆசிரியர்கள் அவரை முத்துக்குமார் என்று விளிப்போம். காரணம் இவரும் மனதை தொடும் கவிதைகளையும் கதைகளையும் புனைவார். முகத்தில் எப்போதும் ஒரு ஆழ்ந்த அமைதி குடி கொண்டு இருக்கும். சோப்பு குமிழை கூட உடைத்து விடாத கவனத்துடன் வார்த்தைகளை கையாளும் மென்மை என பல ஒற்றுமைகள். இந்த அடையாள குழப்பத்தை நா முத்துக்குமார் அவர்களும் ரயில் பயணங்களில் சந்தித்துள்ளதாக எழுதியுள்ளார். அதிலும் அவரை ஆடுகளம் படத்தில் உள்ள கிஷோர் என்று பிழையாக ஒருவன் புரிந்து கொண்டது கொடூர நகைச்சுவை.
புத்தகம் அம்மாவின் தையல் மிஷினில் தொடங்குகிறது. அன்றைய காலகட்டங்களில் பெண்களுக்கு சீராக தையல் மெஷின் கூட சிலர் கொடுத்து இருப்பார்கள். எங்கள் சின்னமாகவும் தையல் மெஷின் வைத்து தைத்துக் கொண்டிருப்பார். இந்த கட்டுரை அதுபோல பலரை ஞாபகப் படுத்தியது.
"கறிச்சுவை" என்கிற இரண்டாவது கட்டுரையில் தனது தாயை இழந்த சோகத்தையும் தன்னை தனது பாட்டி நன்றாக கவனித்துக் கொள்ள எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களையும் சிறப்பாக பதிவு செய்திருப்பார்.
கட்டுரையே இளையராஜா பாடிய "ஆலோலம்பாடி அசைந்தாடும் காற்றே..." பாடலில் இருந்துதான் தொடங்குகிறது. தான் அசைவம் சாப்பிடாத போதும் தனது பேரனை முனியாண்டி விலாஸ் கடையில் மூக்கு முட்ட அசைவம் சாப்பிட அமர வைத்து விட்டு வெளியில் காத்திருந்த அந்த பாட்டியை நினைக்கும் போது கண்கள் பனித்தன.
"இரண்டு வகையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
முதல் வகை கேள்விக்கான விடையை கற்றுக் கொடுப்பவர்கள்;
இரண்டாவது வகை விடையே இல்லாத கேள்வியைக் கேட்க தூண்டுபவர்கள்" இது ரோஜா பூ மிஸ் கட்டுரைக்கான முகப்பு கவிதை.
ரோஜாப்பூ மிஸ் குறித்து இவர் எழுதிய கவிதை வெகு பிரபலம். அவரைப் பற்றி வாசித்து நமது கற்பனையில் ஒரு உருவத்தை வரைந்து கொண்டு போனால் இறுதியில் தனது தங்கைகளுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்து விட்டு தான் இன்னும் தனிமரமாகவே இருக்கும் புதுச்சேரி அரசு பள்ளியில் பணிபுரியும் திலகவதி என்ற ஆசிரியரின் பால் கொண்டு சென்று விடுகிறது. கட்டுரைக்கு அருகில் திலகவதி மிஸ் எழுதிய அனுப்பியிருந்த பின்னூட்டமும் படிப்பதற்கு கிடைக்கிறது. இந்தக் கட்டுரையும் இறுதியில் நம் கண்களை பனிக்க செய்கிறது.
கல்யாணத் தேன் நிலா என்கிற கட்டுரையில் அவர் எழுதியிருக்கும் இந்த வரி நமது பல குடும்பங்களின் எதார்த்தத்தை காட்டுகிறது.
"இங்கு பெரும்பாலும் கல்யாணத்தை மட்டும் அல்ல கல்யாணத்தில் கலந்து கொள்வதைமும்கூட நகைகள் தான் தீர்மானிக்கின்றன"
ஊரில் உள்ள உறவுகளுக்கெல்லாம் தேடித் தேடி கல்யாணம் செய்து வைப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த 'கல்யாணம் மாமா' இறுதிவரை கல்யாணம் ஆகாமலே இறந்து போனார் என்கிறது ஒரு கட்டுரை.
மூழ்கி மூழ்கி மீண்ட கதையில் முருகன் டாலர் போட்ட செயின் என்கிற ஒரு விஷயத்தை வைத்து தனது தந்தையின் பொருளாதர நிலை தாண்டிய வைராக்கியம் தனது அன்னை வழி ஆயாவின் கறார் தனம் என்று நடுத்தர மக்களின் பொருளாதார நிலையை படம்பிடித்துக் காட்டுகிறார்.
ஒரு தகப்பனின் கதை என்கிற தலைப்பின் கீ ழ் நாகமுத்துக்குமார் அவர்களின் தந்தை நாகராஜன் நா முத்துக்குமாரை பற்றி எழுதியது போல எழுதியிருப்பார் அதில் தனது ஆரம்பகால எழுத்துக்களை அவர் செம்மை படுத்திய விஷயத்தையும் அழகாக கூறியிருப்பார்.
குழந்தை கடவுளிடம் "துன்பம் என்றால் என்ன?!" என்று கேள்வி கேட்டதாகவும் கொஞ்ச நேரம் யோசித்த கடவுள் கையில் பிரம்புடன் கணக்கு வாத்தியார்களை அனுப்பினார் என்று எழுதியுள்ளார்!! (என்னா ஒரு வில்லத்தனம்!!)
இதில் தனக்கு டியூஷன் எடுத்த கணக்கு வாத்தியார் பற்றி கூறியுள்ளார்.
எண்பதுகளின் இறுதியில் கிராமங்களில் வசதி படைத்தவர்கள் வீட்டுக்கு வந்த "டிவி பெட்டி" பற்றிய கட்டுரைதான் ஒளியும் ஒலியும். எல்லா ஊர்களிலும் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனுபவங்கள் உண்டு. கலைஞர் அவர்கள் வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வந்த பிறகு தான் இந்த அவலம் நீங்கியது.
சிறுவயதில் நாம் சாதிக்கு சுதந்திரம் என்னவென்றால் சைக்கிள் கற்றுக் கொள்வது. சைக்கிள் கற்றுக் கொண்ட பிறகு நமது பயணங்களை துரிதப்படுத்த சிறகுகள் சேர்ந்து விடுகின்றன.
எங்கள் தந்தையின் சைக்கிளில் நான் சைக்கிள் கற்றுக் கொண்டது, அதன் பிறகு கல்லூரியில் இளங்கலை படித்த காலத்தில் எனது அண்ணனின் சைக்கிளை மூன்று ஆண்டுகளும் திருச்சி முழுக்க ஓட்டிக்கொண்டு சிட்டாக பறந்தது என்று பல நினைவுகளை இந்த புத்தக தலைப்பில் ஆன கட்டுரை 'நினைவோ ஒரு பறவை' அழகாக ஞாபகப்படுத்தியது.
'வெந்து தனிந்த காடு'என்கிற கட்டுரை வாழ்க்கையில் பல சூழல்களில் நாம் அறிந்தோ அறியாமலோ ஆணாதிக்க சிந்தனையை மனதுக்குள் எப்படி வரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை கூறி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தோடு முடிகிறது.
இறுதியாக ஏழு கட்டுரைகள் தனது அமெரிக்க பயண அனுபவங்கள் பற்றி அழகாக எழுதியுள்ளார் அதில் ஒரு கட்டுரையில் "டெர்மினல்" படத்தின் கதையையும் விவரித்து இருப்பார். படம் பார்த்தவர்கள் தான் அந்த சூழலோடு இந்த படத்தின் கதை எவ்வாறு அழகாக புரிந்துள்ளது என்பதை உணர முடியும்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 180 பக்கங்கள் கொண்ட கட்டுரைத் தொகுப்பை காலையில் துவங்கி மதியத்துக்குள் முடித்து தூக்கி வைத்து விட்டேன்.
நா முத்துக்குமார் அவர்களின் கவிதைகள் போல கட்டுரைகளும் மிகவும் அழகாகவும் நடைமுறை எதார்த்தத்தை பளிச்சென்று படம் பிடித்து காட்டுவதாகவும் உள்ளது.
கவிஞர் வைரமுத்து போல கறார்த்தனமும் சாமர்த்தியமும் மிகுந்த வியாபார யுத்தி இவருக்கு கை வரவில்லை. இல்லையென்றால் இன்னும் எத்தனையோ புத்தகங்களை எழுதி சிறப்பாக விற்று பொருளாதரத்தில் நல்ல நிலை அடைந்திருப்பார்.
டிஸ்கவரி பேலஸ் பதிப்பகம் நா முத்துக்குமார் அவர்களின் நூல்கள் விற்று கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை அவர்கள் குடும்பத்திற்கு வழங்குவதாக கூறியிருந்தார்கள்.
ஒரு அழகான வாசிப்பு அனுபவத்தை பெற இந்த கட்டுரையை நிச்சயமாக வாசிக்கலாம்.
Wednesday, May 6, 2026
வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியுமா?!
வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததா?!
வாய்ப்பு இல்லை என்று நான் பரிபூரணமாக நம்புகிறேன்.
வாக்கு இயந்திரத்தை பொறுத்தவரை அது ஒரு மிகவும் எளிய இயந்திரம். நாங்கள் பி எட் படிக்கும்போது பொருத்துக டேபிள் தயார் செய்வதற்கு ஒரு சுவிட்ச்சை அமைப்போம் அது போன்றது தான். ஆனால் இதில் தரவுகளை பதிவு செய்து கொள்ள சிப் உள்ளது.
எந்த பட்டனை அழுத்தினாலும் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்கு செல்கிறது என்ற ஒரு புகார் எழுந்த போது அதில் உண்மை இல்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மையை மேம்படுத்த நீங்கள் அழுத்தும் சின்னத்துக்கு தான் வாக்கு செல்கிறது என்பதை பக்கத்தில் உள்ள விவிபாட் இயந்திரத்தில் அந்த சின்னம் பிரிண்ட் ஆகி ஏழு வினாடிகள் வெளிச்சமாக தோன்றி பிறகு அந்த சீட்டு உள்ளே விழும்.
வாக்கு இயந்திரம் எங்கே வைத்திருப்பார்கள்?!
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரு ஸ்ட்ராங் ரூம் தனியாக கட்டப்பட்டுள்ளது அங்கே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த அறையை திறப்பதாக இருந்தாலும் திரும்ப மூடுவதாக இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் ஏஜென்டுகள் முன்னிலையில் தான் செய்ய வேண்டும்.
வாக்கு எந்திரம் தேர்தலுக்கு முன் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?!
வாக்கு எந்திரத்தை தேர்தலுக்கு முன் அதாவது தகுதியுள்ள வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு அவர்கள் பெயர் அவர்களுக்குரிய சின்னம் எத்தனை வேட்பாளர்கள் என்பதை ( ஒரு பேலட் யூனிட்டில் 16 சின்னங்கள் தான் வைக்க முடியும் அதனால் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இயந்திரங்களை இணைத்துக் கொள்ளலாம்.) பேலட் யூனிட்டில் தயார் செய்து வைத்து விடுவார்கள். பேலட் யூனிட் ஒன்றுக்கு மேல் இருந்தாலும் கண்ட்ரோல் யூனிட் ஒன்றுதான் அங்கு தான் வாக்குகள் பதிவு செய்யப்படும்.
அதன் பிறகு வாக்குப்பதிவிற்கு ஒரு மூன்று நாட்கள் முன்பாக ஏராளமான பணியாளர்களை பதியமர்த்தி ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஆயிரம் வாக்குகள் வரை போட்டு ரிசல்ட் பார்த்து பரிசோதனை செய்வார்கள். இத்தனையையும் தாங்கும் அளவுக்கு அதன் பேட்டரி அந்த இயந்திரத்தின் தாங்கு தன்மை இருக்கிறது என்று திருப்தி அடைந்த பிறகு தான் அவை வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒதுக்கப்படும். இதனை இந்த முறை தேர்தலின் போது அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை செலுத்தினால்?!
உள்ளே வரும் வாக்காளர் தனது அடையாளத்தை சரிபார்த்து குறிப்பேட்டில் பதிவுகள் மேற்கொண்ட பிறகு அவருக்கென அனுமதி சீட்டு வழங்கப்படும். அந்த அனுமதி சீட்டை எடுத்துக்கொண்டு அடுத்த அலுவலரிடம் செல்லும்போது அந்த அனுமதி சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு பேலட் பட்டனை அழுத்துவார். அப்போதுதான் வாக்குப்பதிவு இயந்திரம் தயார் நிலையில் இருக்கும். வாக்காளர் போய் சின்னத்தை அழுத்திய பிறகு அந்த சுற்று முடிவுக்கு வந்துவிடும்.
அடுத்த ஓட்டு போட வேண்டும் என்றால் இதே நடைமுறையில் அனுமதி சீட்டைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பேலட் என்கிற பட்டனை அலுவலர் அழுத்துவார் அவர் போய் சின்னத்தை அழுத்துவார்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை( இதனை டோட்டல் என்கிற பட்டனை அமுக்குவதன் மூலம் பார்த்துக் கொள்ளலாம்) பதிவேடுகளில் உள்ள வரிசை எண், அடையாளம் பார்க்கும் அலுவலர் வைத்திருக்கும் டேலி ஷீட்டில் உள்ள எண்ணிக்கை மூன்றும் ஒரே அளவில் இருப்பதை அவ்வப்போது வாக்குப்பதிவு தலைமை அலுவலர் சரிபார்த்த வண்ணம் இருப்பார்.
அலுவலர்களாக இருந்தாலும் அவர்கள் விருப்பத்திற்கு எல்லாம் அழுத்தி விட முடியாது. மேலும் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வாக்குப்பதிவு மையத்தில் இருக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
மாதிரி வாக்குப்பதிவு
தேர்தல் தொடங்குவதற்கு முன்பு அனைத்து கட்சி ஏஜெண்டுகளைக் கொண்டு எல்லா சின்னங்களுக்கும் சமமான வாக்குகளை செலுத்த கூறி (எல்லா பட்டன்களும் வேலை செய்கிறது என்பதை உணர்த்த) அவற்றை ஒரு படிவத்தில் குறித்து வைத்துக் கொண்டு வாக்குப்பதிவை குளோஸ் செய்து ரிசல்ட் பார்த்து படிவத்தில் குறிக்கப்படுகிறது. அவை சரியாக இருக்கிறது என்பதை ஏஜெண்டுகளுக்கு காண்பித்து அவர்களை திருப்தி அடைய செய்வது தான் இதன் நோக்கம். குளோஸ் பட்டனை அழுத்திய பிறகு வாக்குகள் எதையும் பதிவு செய்ய இயலாது என்பதையும் அவர்களுக்கு செய்து காண்பிப்போம்.
மாதிரி வாக்கு பதிவு முடிந்த பிறகு இயந்திரத்தில் உள்ள தரவுகள் கிளியர் பட்டனை அழுத்துவதன் மூலம் முற்றிலும் அழிக்கப்படும் தற்போது புத்தம் புதிதாக எந்த பதிவுகளும் இல்லாத இயந்திரம் தயார்
வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஏதாவது செய்துவிட்டால்!!
இயந்திரத்தை மாதிரி வாக்கு பதிவுக்கு பிறகு மூடி சீல் வைக்கும் போது அந்த சீல் இன் வரிசை எண் குறித்து வைத்துக் கொள்வார்கள் ஏஜெண்டுகள். மேலும் அதில் ஏஜெண்டுகளும் கையொப்பம் விடுவார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது அந்த வாக்குச்சாவடிக்குரிய ஏஜென்ட்கள் அங்கே இருந்தாலும் அல்லது சீரியல் எண்களை தொகுத்து உரிய கட்சியினர் கைவசம் வைத்திருந்தாலும் ரிசல்ட் பார்க்கும்போது அவர்களுடைய கண்ட்ரோல் யூனிட் அத்துமீறி திறக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
வாக்குப்பதிவு முடிந்த உடனேயே பேலட் யூனிட் விவி பேட் ஆகிய அனைத்துக்கும் செல்லும் கேபிள்கள் கழற்றப்பட்டு அவை தனித்தனியே பெட்டிகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். ஆக கண்ட்ரோல் யூனிட்டுக்கு இன்புட் வழங்கும் பாதைகள் வாக்குப்பதிவு முடிந்த உடனேயே அடைக்கப்பட்டு விடும். அதன் பிறகு கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள வாக்குகளை வாக்கு எண்ணிக்கை நாள் அன்று ரிசல்ட் பட்டனை அழுத்துவதன் மூலம் பார்க்கலாம்.
நிபுணர்களைக் கொண்டு தூரத்தில் இருந்து ஏதாவது செய்ய முடியுமா?!
அந்த இயந்திரம் எந்த நெட்வொர்க்கிலும் இணைக்க இயலாத வகையில் தான் தயார் செய்யப்பட்டுள்ளது எனவே வைஃபை ப்ளூடூத் இன்ஃப்ரா ரெட் என எந்தவிதமான சிக்னல் இணைப்புகள் மூலமாகவோ நாம் அதனை இணைக்க இயலாது. அவ்வாறு இணைப்பதற்கு முதலில் அது ஆன் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் யாரேனும் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும் என்றால் வாக்கு எண்ணிக்கை மையத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் வாக்கு எண்ணிக்கை மையம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் தான் அந்த மையம் இருக்கும்.
அதோடு மட்டுமல்ல அது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் ஏஜெண்டுகளும் அங்கே காவலுக்கு சுழற்சி முறையில் இருப்பார்கள்.
இறுதியாக ஒன்று
வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுபவர்கள் யாரும் தேவதூதர்களோ அல்லது வானத்தில் இருந்து குதித்த கணினி நிபுணர்களோ இல்லை.
அது மிகவும் எளிய இயந்திரம் சிறிய பயிற்சி அளித்தால் யார் வேண்டுமானாலும் அதை சிறப்பாக தயார் செய்ய முடியும். ஆகையினால் அந்த இயந்திரங்கள் வருவாய்த் துறையில் உள்ள பணியாளர்கள் அலுவலர்கள் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தான் தயார் செய்யப்படுகின்றன.
இவர்கள் எல்லோரும் நம்மிடையே இருக்கக்கூடிய குடிமகன்கள் தான். அவர்களுக்கும் உள்ளுக்குள் அரசியல் கட்சி சார்புநிலை இருக்கும் எனவே அந்த இயந்திரம் தவறாக தயார் செய்யப்படுகிறது என்றால் விஷயம் வெளியில் கசியாமல் இருக்குமா?!
அப்துல் கலாம் உதவியாளர் ஒருவர் விவி பேட் சீட்டுகளையும் ரிசல்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கூறி வருகிறார். நிச்சயமாக அவை சமய எண்ணிக்கையில் தான் இருக்கும் ஏனென்றால் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களித்து பிறகு தனது சின்னத்துக்குரிய சீட்டு ப்ரிண்டாகி விழுவதை பார்த்துவிட்டுத் தான் வெளியேறுகிறார். ஒரு சில வயதானவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை, மற்றபடி எல்லோரும் அதை பார்த்து திருத்தி அடைந்து தான் வருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் நாங்கள் மாதிரி வாக்கு பதிவின் போது எத்தனை வாக்குகள் ஒவ்வொரு சின்னங்களுக்கும் இடப்பட்டன என்பதை ரிசல்ட் பட்டனை அழுத்தி சரிபார்த்துவிட்டு விவி பேட் இயந்திரத்தில் உள்ள சீட்டுகளையும் எடுத்து எண்ணி வெரிஃபை பண்ணி விட்டு தான் அதை ஒரு கவரில் போட்டு சீல் வைப்போம். அதனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.
Tuesday, April 28, 2026
சேப்பியன் சரித்திரம்
நூல்: சேப்பியன் சரித்திரம் - மனித பரிணாமமும் எஞ்சு நிலை உறுப்புகளும்
நூலாசிரியர்: சிவக்குமார் சியாமளா ரவி
பட்டினி கிடந்தா புற்றுநோய் செல்கள் உணவில்லாமல் அழிந்து போகும், மாட்டுச் சாணத்தை பூசிக்கிட்டா ரேடியேஷன் தடுக்கப்படும், வெங்காயத்தை வச்சுக்கிட்டா வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக்கலாம், மாட்டு மூத்திரத்தில் மிகப்பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு என்றெல்லாம் போலி அறிவியல் சுற்றி வளைத்து தாக்கி மக்களின் அறிவை மழுங்கடிக்க முயற்சி செய்யும் வேலையில் நாம் மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய கட்டாய கடமை இருக்கிறது.
அந்த வகையில் அறிவியல் புலத்தில் எழுதப்படும் சுவாரசியமான நூல்களை நாம் பெருவாரியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும், மேலும் அறிவியல் புலத்தில் எழுதி வருபவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
இந்த நூலை வெளியிட்டவர்கள் வாலறிவன் பதிப்பகம். நூல் வெளியிடும்போது இந்த நூலின் உள்ளடக்கம் குறித்து நமக்கு ஒரு கியூரியாசிட்டியை ஏற்படுத்தி வாங்க தூண்டும் வகையில் மிக சிறப்பாக தொடர் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் செய்திருந்தனர்.
நமக்கு தற்போது இருந்து வரும் எஞ்சுநிலை உறுப்புகளை பரிணாம வளர்ச்சியோடு தொடர்பு படுத்தி பேசும் 29 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது.
இப்போ சைவம் சுத்த சைவம் என்று பெருமையா பீற்றிக் கொண்டிருக்கும் பயலுகளாம் யாரு அந்த காலத்துல வெறும் மாமிசத்தை தின்று கொண்டு இருந்தவன் தானே!!
வேட்டையாடி மாமிசம் சாப்பிட்டு பிறகு தாவர உணவுகளை சாப்பிட்ட விஷயங்களையும் அப்படியே விவசாயத்துக்கு நகர்ந்த செய்திகளையும் பரிணாமம் வழியாக கோடிட்டு காட்டுகிறது முதல் அத்தியாயம்.
பரிணாம வளர்ச்சி என்பது தேவையையும் சூழ்நிலையையும் பொறுத்து அமைவது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ள "குள்ள யானைகளும் பிரம்மாண்ட எலிகளும்" என்கிற அத்தியாயம் வாசித்தபோது வியப்பு மேலிடாமல் இல்லை.
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் அந்த கால மனித ரோமங்கள் பிறகு ரோமங்கள் உதிர்ந்து தோல் அவற்றில் மெலனின் உற்பத்தி வைட்டமின் டி தேவை போன்ற இந்த சிக்கலான வலையமைப்பு நமக்குள் எவ்வாறு சிவப்பு தோலையும் கருப்பு தோலையும் உருவாக்கி நிற வேறுபாட்டுக்கு காரணமாக அமைந்தது என்பதை மிக சுவாரசியமாக விவரிக்கிறது ஒரு கட்டுரை. மற்றபடி சிவப்பு உசத்தி கருப்பு மட்டம் என்பதெல்லாம் மனிதர்களின் ஆதிக்க மனப்பான்மை மற்றும் வணிக விளம்பரங்களால் நேர்ந்த கொடூரமான பிழை என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
மனித குல வரலாற்றைப் பற்றி கூறும் கட்டுரைக்கு "மனிதர்களின் மாயாண்டி குடும்பத்தார்" என்ற தலைப்பை சூட்டியதன் மூலம் நூலாசிரியரின் நகைச்சுவை உணர்வை அறியலாம்.
நமது விக்கலுக்கு பின்னாலும் ஒரு பரிணாம கதை இருக்கத்தான் செய்கிறது என்பதையும் நூல் சொல்கிறது.
Palmar grasp reflex என்பது என்ன தெரியுமா பிறந்த குழந்தைகளிடம் கையை கொடுத்தவுடன் கப்பென்று கெட்டியாக பிடித்துக் கொள்கின்றன அல்லவா அதற்கு பின்னால் உள்ள பரிணாம சங்கதி தான்.
நம்மைப் பொறுத்தவரை நமக்கு தெரிந்த எஞ்சு நிலை உறுப்பு என்றால் குடல் வால் தான் ஏனென்றால் வலி வரும் போது அதை வெட்டி கிடாசி விடுகிறோம் என்கிற அளவில் நமக்கு அது தெரியும். அதைப்பற்றிய ஒரு கட்டுரையும் நூலில் உள்ளது.
தாவரங்களை கடிக்கப் பயன்படுத்திய கடைவாய்ப் பல்லைத் தான் தற்போது ஞானப்பல் என்று கொண்டாடுகிறோம். வலி எடுத்தால் பிடுங்கி எறிந்து விடுகிறோம்.
உங்களை யாரும் முள்ளம்பன்றி என்றால் கோபித்துக் கொள்ள கூடாது ஏனென்றால் முள்ளம் பன்றியின் ஓர் அம்சம் நமக்கும் உள்ளது அது என்ன என்பதையும் நூலில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பூமியில் உயிரினங்கள் கடலில் தோன்றி பிறகு நிலத்துக்கு நகர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து இந்த நிலையை எட்டியுள்ளோம். அதில் மீனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பின் விட்ட குறை தொட்ட குறையாக இருப்பது தான் மூக்குக்கும் உதட்டுக்கும் இடையே உள்ள லேசான பள்ளம் (philtrum).
110 பக்கங்கள் மட்டுமே உள்ள இந்த நூலை ஆர்வத்தோடு அமர்ந்தோமானால் ஒன்றரை மணி நேரத்தில் வாசித்து விட முடியும்.
மிஸ்டர் ஜி கே வீடியோ எப்படி நமக்கு மிக சுவாரசியமாக அறிவியல் கருத்துக்களை எடுத்து கூறுமோ அது போல நமக்கு பிடித்தமான நண்பர் நமது பக்கத்தில் அமர்ந்து அறிவியல் கருத்துக்களை தெளிவாக எடுத்துக் கூறுவது போல அமைந்துள்ளது இந்த நூல். மிஸ்டர் ஜி கே இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
குழந்தைகளுக்கு பரிசாக வழங்கவும்,பள்ளி நூலகத்தில் வைக்கவும், அறிவியல் ஆர்வலர்களுக்கு பரிசளிக்கவும் இந்த நூல் மிகவும் பொருத்தமான ஒன்று.
நான் வெளியீட்டின் போதே ஐந்து காப்பிகள் வாங்கி விட்டேன். நூல் கைக்கு வந்த அன்றே ஒருவருக்கு பரிசாகவும் வழங்கி விட்டேன்.
Subscribe to:
Posts (Atom)
அணு உலை தயார்நிலை!!
“அப்பா, அணு உலையில் முதல் வெடிப்பை எப்படி துவங்கி வைப்பார்கள்?” “முதல்ல ஒண்ணு தெரிஞ்சிக்கோ, அணு உலைக்குள் பெரிதாக வெடித்து சிதறும் வேலை எத...
-
லால்குடி டேஸ்-21 ”இஸ்திரி பெட்டி” மீசையும் ஆசையும் அரும்பும் பருவத்தில் ஆண்கள் தங்களை கம்பீரமாக காண்பித்துக் கொள்ள மிகுந்த அக்கரை...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...











