Sunday, May 10, 2026

நூல் - நினைவோ ஒரு பறவை ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார்

நூல் - நினைவோ ஒரு பறவை ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார் டிஸ்கவரி பதிப்பகம்
சில நாட்களாக தேர்தல் & வாக்கு எண்ணிக்கை என்ற பரபரப்பான மனநிலையில் வாசிப்பு இல்லாமல் இருந்தது. இன்று டிவி களிலும் சோசியல் மீடியாக்களிலும் வலம் வரும் "இராவணன் மவன் டா" க்களுக்கு பயந்து புத்தகத்தில் கண்களை புதைத்துக் கொண்டேன். பெரம்பலூர் புத்தக கண்காட்சியில் வாங்கி வைத்திருந்த கவிஞர் நா முத்துக்குமார் அவர்கள் எழுதிய "நினைவோ ஒரு பறவை" நூலை வாசிக்க எடுத்தேன். எனக்கு எப்போதுமே நா முத்துக்குமார் முகத்துக்கும் வெற்றிமாறன் முகத்துக்கும் ஒரு குழப்பம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வந்தது. (இப்போது ரொம்ப தெளிவு ) அதுபோல பொய்யாதநல்லூர் பள்ளியில் என்னுடன் பணி புரிந்த வேதியல் ஆசிரியர் சுரேஷ் அவர்களின் முகத்துக்கும் நா முத்துக்குமார் அவர்களின் முகத்துக்கும் பெரிய ஒற்றுமை இல்லை என்றாலும் ஏனோ நான் உட்பட பல ஆசிரியர்கள் அவரை முத்துக்குமார் என்று விளிப்போம். காரணம் இவரும் மனதை தொடும் கவிதைகளையும் கதைகளையும் புனைவார். முகத்தில் எப்போதும் ஒரு ஆழ்ந்த அமைதி குடி கொண்டு இருக்கும். சோப்பு குமிழை கூட உடைத்து விடாத கவனத்துடன் வார்த்தைகளை கையாளும் மென்மை என பல ஒற்றுமைகள். இந்த அடையாள குழப்பத்தை நா முத்துக்குமார் அவர்களும் ரயில் பயணங்களில் சந்தித்துள்ளதாக எழுதியுள்ளார். அதிலும் அவரை ஆடுகளம் படத்தில் உள்ள கிஷோர் என்று பிழையாக ஒருவன் புரிந்து கொண்டது கொடூர நகைச்சுவை. புத்தகம் அம்மாவின் தையல் மிஷினில் தொடங்குகிறது. அன்றைய காலகட்டங்களில் பெண்களுக்கு சீராக தையல் மெஷின் கூட சிலர் கொடுத்து இருப்பார்கள். எங்கள் சின்னமாகவும் தையல் மெஷின் வைத்து தைத்துக் கொண்டிருப்பார். இந்த கட்டுரை அதுபோல பலரை ஞாபகப் படுத்தியது. "கறிச்சுவை" என்கிற இரண்டாவது கட்டுரையில் தனது தாயை இழந்த சோகத்தையும் தன்னை தனது பாட்டி நன்றாக கவனித்துக் கொள்ள எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களையும் சிறப்பாக பதிவு செய்திருப்பார். கட்டுரையே இளையராஜா பாடிய "ஆலோலம்பாடி அசைந்தாடும் காற்றே..." பாடலில் இருந்துதான் தொடங்குகிறது. தான் அசைவம் சாப்பிடாத போதும் தனது பேரனை முனியாண்டி விலாஸ் கடையில் மூக்கு முட்ட அசைவம் சாப்பிட அமர வைத்து விட்டு வெளியில் காத்திருந்த அந்த பாட்டியை நினைக்கும் போது கண்கள் பனித்தன. "இரண்டு வகையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். முதல் வகை கேள்விக்கான விடையை கற்றுக் கொடுப்பவர்கள்; இரண்டாவது வகை விடையே இல்லாத கேள்வியைக் கேட்க தூண்டுபவர்கள்" இது ரோஜா பூ மிஸ் கட்டுரைக்கான முகப்பு கவிதை. ரோஜாப்பூ மிஸ் குறித்து இவர் எழுதிய கவிதை வெகு பிரபலம். அவரைப் பற்றி வாசித்து நமது கற்பனையில் ஒரு உருவத்தை வரைந்து கொண்டு போனால் இறுதியில் தனது தங்கைகளுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்து விட்டு தான் இன்னும் தனிமரமாகவே இருக்கும் புதுச்சேரி அரசு பள்ளியில் பணிபுரியும் திலகவதி என்ற ஆசிரியரின் பால் கொண்டு சென்று விடுகிறது. கட்டுரைக்கு அருகில் திலகவதி மிஸ் எழுதிய அனுப்பியிருந்த பின்னூட்டமும் படிப்பதற்கு கிடைக்கிறது. இந்தக் கட்டுரையும் இறுதியில் நம் கண்களை பனிக்க செய்கிறது. கல்யாணத் தேன் நிலா என்கிற கட்டுரையில் அவர் எழுதியிருக்கும் இந்த வரி நமது பல குடும்பங்களின் எதார்த்தத்தை காட்டுகிறது. "இங்கு பெரும்பாலும் கல்யாணத்தை மட்டும் அல்ல கல்யாணத்தில் கலந்து கொள்வதைமும்கூட நகைகள் தான் தீர்மானிக்கின்றன" ஊரில் உள்ள உறவுகளுக்கெல்லாம் தேடித் தேடி கல்யாணம் செய்து வைப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த 'கல்யாணம் மாமா' இறுதிவரை கல்யாணம் ஆகாமலே இறந்து போனார் என்கிறது ஒரு கட்டுரை. மூழ்கி மூழ்கி மீண்ட கதையில் முருகன் டாலர் போட்ட செயின் என்கிற ஒரு விஷயத்தை வைத்து தனது தந்தையின் பொருளாதர நிலை தாண்டிய வைராக்கியம் தனது அன்னை வழி ஆயாவின் கறார் தனம் என்று நடுத்தர மக்களின் பொருளாதார நிலையை படம்பிடித்துக் காட்டுகிறார். ஒரு தகப்பனின் கதை என்கிற தலைப்பின் கீ ழ் நாகமுத்துக்குமார் அவர்களின் தந்தை நாகராஜன் நா முத்துக்குமாரை பற்றி எழுதியது போல எழுதியிருப்பார் அதில் தனது ஆரம்பகால எழுத்துக்களை அவர் செம்மை படுத்திய விஷயத்தையும் அழகாக கூறியிருப்பார். குழந்தை கடவுளிடம் "துன்பம் என்றால் என்ன?!" என்று கேள்வி கேட்டதாகவும் கொஞ்ச நேரம் யோசித்த கடவுள் கையில் பிரம்புடன் கணக்கு வாத்தியார்களை அனுப்பினார் என்று எழுதியுள்ளார்!! (என்னா ஒரு வில்லத்தனம்!!) இதில் தனக்கு டியூஷன் எடுத்த கணக்கு வாத்தியார் பற்றி கூறியுள்ளார். எண்பதுகளின் இறுதியில் கிராமங்களில் வசதி படைத்தவர்கள் வீட்டுக்கு வந்த "டிவி பெட்டி" பற்றிய கட்டுரைதான் ஒளியும் ஒலியும். எல்லா ஊர்களிலும் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனுபவங்கள் உண்டு. கலைஞர் அவர்கள் வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வந்த பிறகு தான் இந்த அவலம் நீங்கியது. சிறுவயதில் நாம் சாதிக்கு சுதந்திரம் என்னவென்றால் சைக்கிள் கற்றுக் கொள்வது. சைக்கிள் கற்றுக் கொண்ட பிறகு நமது பயணங்களை துரிதப்படுத்த சிறகுகள் சேர்ந்து விடுகின்றன. எங்கள் தந்தையின் சைக்கிளில் நான் சைக்கிள் கற்றுக் கொண்டது, அதன் பிறகு கல்லூரியில் இளங்கலை படித்த காலத்தில் எனது அண்ணனின் சைக்கிளை மூன்று ஆண்டுகளும் திருச்சி முழுக்க ஓட்டிக்கொண்டு சிட்டாக பறந்தது என்று பல நினைவுகளை இந்த புத்தக தலைப்பில் ஆன கட்டுரை 'நினைவோ ஒரு பறவை' அழகாக ஞாபகப்படுத்தியது. 'வெந்து தனிந்த காடு'என்கிற கட்டுரை வாழ்க்கையில் பல சூழல்களில் நாம் அறிந்தோ அறியாமலோ ஆணாதிக்க சிந்தனையை மனதுக்குள் எப்படி வரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை கூறி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தோடு முடிகிறது. இறுதியாக ஏழு கட்டுரைகள் தனது அமெரிக்க பயண அனுபவங்கள் பற்றி அழகாக எழுதியுள்ளார் அதில் ஒரு கட்டுரையில் "டெர்மினல்" படத்தின் கதையையும் விவரித்து இருப்பார். படம் பார்த்தவர்கள் தான் அந்த சூழலோடு இந்த படத்தின் கதை எவ்வாறு அழகாக புரிந்துள்ளது என்பதை உணர முடியும். நீண்ட இடைவெளிக்கு பிறகு 180 பக்கங்கள் கொண்ட கட்டுரைத் தொகுப்பை காலையில் துவங்கி மதியத்துக்குள் முடித்து தூக்கி வைத்து விட்டேன். நா முத்துக்குமார் அவர்களின் கவிதைகள் போல கட்டுரைகளும் மிகவும் அழகாகவும் நடைமுறை எதார்த்தத்தை பளிச்சென்று படம் பிடித்து காட்டுவதாகவும் உள்ளது. கவிஞர் வைரமுத்து போல கறார்த்தனமும் சாமர்த்தியமும் மிகுந்த வியாபார யுத்தி இவருக்கு கை வரவில்லை. இல்லையென்றால் இன்னும் எத்தனையோ புத்தகங்களை எழுதி சிறப்பாக விற்று பொருளாதரத்தில் நல்ல நிலை அடைந்திருப்பார். டிஸ்கவரி பேலஸ் பதிப்பகம் நா முத்துக்குமார் அவர்களின் நூல்கள் விற்று கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை அவர்கள் குடும்பத்திற்கு வழங்குவதாக கூறியிருந்தார்கள். ஒரு அழகான வாசிப்பு அனுபவத்தை பெற இந்த கட்டுரையை நிச்சயமாக வாசிக்கலாம்.

No comments:

Post a Comment

நூல் - நினைவோ ஒரு பறவை ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார்

நூல் - நினைவோ ஒரு பறவை ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார் டிஸ்கவரி பதிப்பகம் சில நாட்களாக தேர்தல் & வாக்கு எண்ணிக்கை என்ற பரபரப்பான...