Wednesday, May 6, 2026
வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியுமா?!
வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததா?!
வாய்ப்பு இல்லை என்று நான் பரிபூரணமாக நம்புகிறேன்.
வாக்கு இயந்திரத்தை பொறுத்தவரை அது ஒரு மிகவும் எளிய இயந்திரம். நாங்கள் பி எட் படிக்கும்போது பொருத்துக டேபிள் தயார் செய்வதற்கு ஒரு சுவிட்ச்சை அமைப்போம் அது போன்றது தான். ஆனால் இதில் தரவுகளை பதிவு செய்து கொள்ள சிப் உள்ளது.
எந்த பட்டனை அழுத்தினாலும் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்கு செல்கிறது என்ற ஒரு புகார் எழுந்த போது அதில் உண்மை இல்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மையை மேம்படுத்த நீங்கள் அழுத்தும் சின்னத்துக்கு தான் வாக்கு செல்கிறது என்பதை பக்கத்தில் உள்ள விவிபாட் இயந்திரத்தில் அந்த சின்னம் பிரிண்ட் ஆகி ஏழு வினாடிகள் வெளிச்சமாக தோன்றி பிறகு அந்த சீட்டு உள்ளே விழும்.
வாக்கு இயந்திரம் எங்கே வைத்திருப்பார்கள்?!
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரு ஸ்ட்ராங் ரூம் தனியாக கட்டப்பட்டுள்ளது அங்கே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த அறையை திறப்பதாக இருந்தாலும் திரும்ப மூடுவதாக இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் ஏஜென்டுகள் முன்னிலையில் தான் செய்ய வேண்டும்.
வாக்கு எந்திரம் தேர்தலுக்கு முன் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?!
வாக்கு எந்திரத்தை தேர்தலுக்கு முன் அதாவது தகுதியுள்ள வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு அவர்கள் பெயர் அவர்களுக்குரிய சின்னம் எத்தனை வேட்பாளர்கள் என்பதை ( ஒரு பேலட் யூனிட்டில் 16 சின்னங்கள் தான் வைக்க முடியும் அதனால் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இயந்திரங்களை இணைத்துக் கொள்ளலாம்.) பேலட் யூனிட்டில் தயார் செய்து வைத்து விடுவார்கள். பேலட் யூனிட் ஒன்றுக்கு மேல் இருந்தாலும் கண்ட்ரோல் யூனிட் ஒன்றுதான் அங்கு தான் வாக்குகள் பதிவு செய்யப்படும்.
அதன் பிறகு வாக்குப்பதிவிற்கு ஒரு மூன்று நாட்கள் முன்பாக ஏராளமான பணியாளர்களை பதியமர்த்தி ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஆயிரம் வாக்குகள் வரை போட்டு ரிசல்ட் பார்த்து பரிசோதனை செய்வார்கள். இத்தனையையும் தாங்கும் அளவுக்கு அதன் பேட்டரி அந்த இயந்திரத்தின் தாங்கு தன்மை இருக்கிறது என்று திருப்தி அடைந்த பிறகு தான் அவை வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒதுக்கப்படும். இதனை இந்த முறை தேர்தலின் போது அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை செலுத்தினால்?!
உள்ளே வரும் வாக்காளர் தனது அடையாளத்தை சரிபார்த்து குறிப்பேட்டில் பதிவுகள் மேற்கொண்ட பிறகு அவருக்கென அனுமதி சீட்டு வழங்கப்படும். அந்த அனுமதி சீட்டை எடுத்துக்கொண்டு அடுத்த அலுவலரிடம் செல்லும்போது அந்த அனுமதி சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு பேலட் பட்டனை அழுத்துவார். அப்போதுதான் வாக்குப்பதிவு இயந்திரம் தயார் நிலையில் இருக்கும். வாக்காளர் போய் சின்னத்தை அழுத்திய பிறகு அந்த சுற்று முடிவுக்கு வந்துவிடும்.
அடுத்த ஓட்டு போட வேண்டும் என்றால் இதே நடைமுறையில் அனுமதி சீட்டைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பேலட் என்கிற பட்டனை அலுவலர் அழுத்துவார் அவர் போய் சின்னத்தை அழுத்துவார்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை( இதனை டோட்டல் என்கிற பட்டனை அமுக்குவதன் மூலம் பார்த்துக் கொள்ளலாம்) பதிவேடுகளில் உள்ள வரிசை எண், அடையாளம் பார்க்கும் அலுவலர் வைத்திருக்கும் டேலி ஷீட்டில் உள்ள எண்ணிக்கை மூன்றும் ஒரே அளவில் இருப்பதை அவ்வப்போது வாக்குப்பதிவு தலைமை அலுவலர் சரிபார்த்த வண்ணம் இருப்பார்.
அலுவலர்களாக இருந்தாலும் அவர்கள் விருப்பத்திற்கு எல்லாம் அழுத்தி விட முடியாது. மேலும் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வாக்குப்பதிவு மையத்தில் இருக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
மாதிரி வாக்குப்பதிவு
தேர்தல் தொடங்குவதற்கு முன்பு அனைத்து கட்சி ஏஜெண்டுகளைக் கொண்டு எல்லா சின்னங்களுக்கும் சமமான வாக்குகளை செலுத்த கூறி (எல்லா பட்டன்களும் வேலை செய்கிறது என்பதை உணர்த்த) அவற்றை ஒரு படிவத்தில் குறித்து வைத்துக் கொண்டு வாக்குப்பதிவை குளோஸ் செய்து ரிசல்ட் பார்த்து படிவத்தில் குறிக்கப்படுகிறது. அவை சரியாக இருக்கிறது என்பதை ஏஜெண்டுகளுக்கு காண்பித்து அவர்களை திருப்தி அடைய செய்வது தான் இதன் நோக்கம். குளோஸ் பட்டனை அழுத்திய பிறகு வாக்குகள் எதையும் பதிவு செய்ய இயலாது என்பதையும் அவர்களுக்கு செய்து காண்பிப்போம்.
மாதிரி வாக்கு பதிவு முடிந்த பிறகு இயந்திரத்தில் உள்ள தரவுகள் கிளியர் பட்டனை அழுத்துவதன் மூலம் முற்றிலும் அழிக்கப்படும் தற்போது புத்தம் புதிதாக எந்த பதிவுகளும் இல்லாத இயந்திரம் தயார்
வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஏதாவது செய்துவிட்டால்!!
இயந்திரத்தை மாதிரி வாக்கு பதிவுக்கு பிறகு மூடி சீல் வைக்கும் போது அந்த சீல் இன் வரிசை எண் குறித்து வைத்துக் கொள்வார்கள் ஏஜெண்டுகள். மேலும் அதில் ஏஜெண்டுகளும் கையொப்பம் விடுவார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது அந்த வாக்குச்சாவடிக்குரிய ஏஜென்ட்கள் அங்கே இருந்தாலும் அல்லது சீரியல் எண்களை தொகுத்து உரிய கட்சியினர் கைவசம் வைத்திருந்தாலும் ரிசல்ட் பார்க்கும்போது அவர்களுடைய கண்ட்ரோல் யூனிட் அத்துமீறி திறக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
வாக்குப்பதிவு முடிந்த உடனேயே பேலட் யூனிட் விவி பேட் ஆகிய அனைத்துக்கும் செல்லும் கேபிள்கள் கழற்றப்பட்டு அவை தனித்தனியே பெட்டிகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். ஆக கண்ட்ரோல் யூனிட்டுக்கு இன்புட் வழங்கும் பாதைகள் வாக்குப்பதிவு முடிந்த உடனேயே அடைக்கப்பட்டு விடும். அதன் பிறகு கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள வாக்குகளை வாக்கு எண்ணிக்கை நாள் அன்று ரிசல்ட் பட்டனை அழுத்துவதன் மூலம் பார்க்கலாம்.
நிபுணர்களைக் கொண்டு தூரத்தில் இருந்து ஏதாவது செய்ய முடியுமா?!
அந்த இயந்திரம் எந்த நெட்வொர்க்கிலும் இணைக்க இயலாத வகையில் தான் தயார் செய்யப்பட்டுள்ளது எனவே வைஃபை ப்ளூடூத் இன்ஃப்ரா ரெட் என எந்தவிதமான சிக்னல் இணைப்புகள் மூலமாகவோ நாம் அதனை இணைக்க இயலாது. அவ்வாறு இணைப்பதற்கு முதலில் அது ஆன் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் யாரேனும் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும் என்றால் வாக்கு எண்ணிக்கை மையத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் வாக்கு எண்ணிக்கை மையம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் தான் அந்த மையம் இருக்கும்.
அதோடு மட்டுமல்ல அது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் ஏஜெண்டுகளும் அங்கே காவலுக்கு சுழற்சி முறையில் இருப்பார்கள்.
இறுதியாக ஒன்று
வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுபவர்கள் யாரும் தேவதூதர்களோ அல்லது வானத்தில் இருந்து குதித்த கணினி நிபுணர்களோ இல்லை.
அது மிகவும் எளிய இயந்திரம் சிறிய பயிற்சி அளித்தால் யார் வேண்டுமானாலும் அதை சிறப்பாக தயார் செய்ய முடியும். ஆகையினால் அந்த இயந்திரங்கள் வருவாய்த் துறையில் உள்ள பணியாளர்கள் அலுவலர்கள் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தான் தயார் செய்யப்படுகின்றன.
இவர்கள் எல்லோரும் நம்மிடையே இருக்கக்கூடிய குடிமகன்கள் தான். அவர்களுக்கும் உள்ளுக்குள் அரசியல் கட்சி சார்புநிலை இருக்கும் எனவே அந்த இயந்திரம் தவறாக தயார் செய்யப்படுகிறது என்றால் விஷயம் வெளியில் கசியாமல் இருக்குமா?!
அப்துல் கலாம் உதவியாளர் ஒருவர் விவி பேட் சீட்டுகளையும் ரிசல்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கூறி வருகிறார். நிச்சயமாக அவை சமய எண்ணிக்கையில் தான் இருக்கும் ஏனென்றால் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களித்து பிறகு தனது சின்னத்துக்குரிய சீட்டு ப்ரிண்டாகி விழுவதை பார்த்துவிட்டுத் தான் வெளியேறுகிறார். ஒரு சில வயதானவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை, மற்றபடி எல்லோரும் அதை பார்த்து திருத்தி அடைந்து தான் வருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் நாங்கள் மாதிரி வாக்கு பதிவின் போது எத்தனை வாக்குகள் ஒவ்வொரு சின்னங்களுக்கும் இடப்பட்டன என்பதை ரிசல்ட் பட்டனை அழுத்தி சரிபார்த்துவிட்டு விவி பேட் இயந்திரத்தில் உள்ள சீட்டுகளையும் எடுத்து எண்ணி வெரிஃபை பண்ணி விட்டு தான் அதை ஒரு கவரில் போட்டு சீல் வைப்போம். அதனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியுமா?!
வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததா?! வாய்ப்பு இல்லை என்று நான் பரிபூரணமாக நம்புகிறேன். வாக்கு இயந்திரத்தை பொறுத்தவரை அது ஒரு மிகவும் எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
No comments:
Post a Comment