Sunday, August 9, 2026

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix
வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒரு மாணவர்கள் அங்கே வரும் ஒரு புதிய ஆசிரியர் அவர்களை நல்வழிப்படுத்தி சாதிக்க செய்வார். 1967 ல் வந்த To sir, with love என்கிற ஆங்கில படம் துவங்கி இதுதான் டெம்ப்ளேட் . அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது இறையன்பு அவர்கள் இந்த படத்தை எங்களுக்கு காண்பிக்க பரிந்துரைத்தார். இந்த டெம்ப்ளேட்டில் ஒரு மாற்றுத்திறன் ஆசிரியர் வந்தார் என்றால் ?! அதுதான் இந்த படம். டூரட் சின்ட்ரோம் என்கிற நரம்பியல் பிரச்சனை நோய் உடையவராக நைனா மாத்தூர் என்கிற கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி அவர்கள் பிரமாதமாக நடித்துள்ளார். சிலர் பேசும்போது கண்களை சுருக்குவார்கள் சிலர் தாடைக்கு கீழ் உள்ள நரம்பை இழுப்பார்கள் என்பது போல பல்வேறு வகையினரை நாம் கண்டிருக்கிறோம் அதெல்லாம் கூட இந்த டூரட் சின்ட்ரோம் இன் சிறிய அளவிலான பாதிப்பு தான். இந்தப் படத்தில் ராணி முகர்ஜி "வ்வா வ்வா", என்று சத்தம் செய்வது, தாடையை புறங்கையால் தட்டியபடி "ச்சாக் ச்சாக்" என்றும் அவ்வப்போது அனிச்சையாக செய்து கொண்டே இருப்பார். சிறுவயதில் அம்மா மற்றும் தம்பியை விட்டுவிட்டு இவரது தந்தை பிரிந்து விடுவார். குழந்தையை ஏதாவது விடுதியில் சேர்த்து விடலாம் என்பது போன்ற உரையாடல் நடக்கும். பதட்டம் அதிகமாகும் போது இந்த செய்கையும் அதிகமாகிவிடும். நைனா அந்த சத்தத்தை கட்டுப்படுத்த கழிவறையில் அமர்ந்து கொண்டு டிஷ்யூ பேப்பரை எடுத்து வாய்க்குள் திணித்தபடியே அழுவது காண்போரை கரையச்செய்யும். அமைதியான வகுப்பறையை இந்த சத்தம் எரிச்சல் அடைய செய்யும். ஆசிரியர்களுக்கு வகுப்பறை என்றாலே பின் ட்ராப் சைலன்ட் மோடில் இருக்க வேண்டும் அல்லவா. எனவே ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் நைனா விரட்டப்படுகிறாள். இறுதியாக செயின்ட் நாட்கர் என்கிற பிரபலமான பணக்கார மாணவர்களுக்கான பள்ளியில் இளகிய மனம் படைத்த ஒரு முதல்வர் இவளுக்காக பரிந்து இடம் கொடுப்பார். நைனா மாத்தூருக்கு ஆசிரியர் பணி தான் மிகவும் விருப்பமான பணி. படித்து முடித்துவிட்டு திரும்பவும் ஒவ்வொரு பள்ளிக்காக விண்ணப்பித்து ஒவ்வொரு பள்ளி நேர்காணலிலும் நிராகரிக்கப்படுகிறார். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியும் அதன் 1 கிமீ சுற்றுப்புறத்தில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடம் ஒதுக்க வேண்டும். தமிழக பள்ளிகளில் நான் பார்த்தவரை அந்த மாணவர்களை எந்த பாகுபாடும் இல்லாமல் நடத்துகிறார்கள். அவ்வாறு நடத்தப்படுகிறார்களா என்பதை அரசு இயந்திரமும் கூர்ந்து கண்காணிக்கிறது. நாட்கர் பள்ளி பணக்கார வர்க்கத்தினர் படிக்கும் பள்ளி. 9F என்கிற பிரிவை தொடங்கி RTE மாணவர்கள் அனைவரையும் அங்கே ஒதுக்குகிறார்கள். ஆசிரியர்கள் அனைவரும் இவர்களெல்லாம் குப்பத்து பசங்க படிக்க மாட்டாங்க ரவுடித்தனம் செய்வாங்க என்கிற முன் முடிவோடு அணுகுகிறார்கள். எங்கெல்லாம் புறக்கணிப்பும் அடக்குமுறையும் கட்டவிழ்த்து விடப் படுகிறதோ அங்கெல்லாம் நிச்சயமாக பதின்பருவத்தினருக்கு கலகம் செய்யும் மனப்பான்மை எழும். இந்த விஷயத்தை அமிதாப் நடித்த "ஜுண்ட்" என்கிற படத்தில் "சாய்ரட்" புகழ் நாகராஜ் மஞ்சுலே சிறப்பாக எடுத்திருப்பார். இவர்கள் வகுப்பை பார்த்து வந்த ஆசிரியர் இடையிலேயே ஓடி விடுவதால் வேறு வழியில்லாமல் நைனா மாத்தூருக்கு அழைப்பு வருகிறது. மிகவும் சந்தோஷமாக தான் படித்த பள்ளிக்கே ஆசிரியராக வருகிறார். ஆரம்பத்தில் நைனாவின் டூரட் சின்ட்ரோம் பற்றி அனைத்து மாணவர்களுமே கேலி செய்கிறார்கள். அவளை சுத்தமாக பாடம் நடத்த விடாத படிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒட்டு மொத்த பள்ளி நிர்வாகமும் இவர்கள் அனைவரையும் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கை எடுக்க முயலும் போது இவர் ஒருவர் மாணவர்களுக்காக பரிந்து கொண்டு அவர்கள் தவறை தன்மேல் போட்டுக் கொண்டு நிற்கிறார். அந்த புள்ளியில் மாணவர்களோடு நைனாவின் இணக்கம் தொடங்குகிறது. அதன் பிறகு எவ்வாறெல்லாம் அவர்களை கல்வியை நோக்கி திருப்ப முயற்சி செய்கிறார் அவர்களிடம் இருக்கும் உள்ளார்ந்த திறமையை எவ்வாறு வெளிக்ணர்கிறார் இறுதித் தேர்வில் எவ்வாறு அனைத்து மாணவர்களையும் சிறப்பாக தேர்ச்சி அடைய செய்கிறார் என்பதோடு இல்லாமல் நைனா மாத்தூர் பணி ஓய்வு பெறும் புள்ளியோடு படம் நிறைவடைகிறது. மாணவர்களின் குறும்புத்தனங்களை அவ்வளவு தத்ரூபமாக எடுத்து இருப்பார்கள் நமக்கே அவர்கள் மூஞ்சியில் நான்கு குத்து விடவேண்டும் போல இருக்கும். ஆனால் அதே வேளையில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது மாணவர்களும் அவர்களின் ஏழ்மை நிலை குறித்தும் அவர்கள் வரும் பின்புலம் குறித்தும் பகடி பேசும் போதும் அவர்களை ஒதுக்கும்போதும் அதைவிட பெரிய கோபம் இவர்கள் மேல் வரும். முக்கியமாக வாடியா என்கிற மிடுக்கான டிப்டாப் ஆசிரியர் 9 F மாணவர்களை பார்க்கும் பார்வையே கொடூரமாக இருக்கும். அவர்கள் ஏதாவது பேச தொடங்கினாலே இன்சல்ட் செய்து உட்கார வைத்து விடுவார். "There is no bad students only bad teachers" என்று நைனாமாத்தூர் அவரிடம் சண்டைக்கு போவார். 9F மாணவர்களை மையமாக வைத்து நைனாவுக்கும் வாடியாவுக்கும் ஒரு போட்டி நடைபெறுகிறது இறுதியில் அந்த போட்டியில் யார் வென்றார் என்பதோடு கதை முடிவுக்கு வரும். நிறைய எமோஷனல் சீன்கள் படத்தில் உண்டு. மாணவர்களை எந்த முன்முடியோடும் ஆசிரியர்கள் அணுக கூடாது என்கிற விஷயத்தை போதிக்க கூடிய படம். ஆசிரியர்கள் நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம். ஏற்கனவே ப்ளாக் என்கிற படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நிச்சயமாக ஒரு தைரியம் வேண்டும். தனக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை எல்லாம் காலில் போட்டு மிதித்து விட்டு முகம் நிறைய மத்தாப்பூ புன்னகையோடு அவர் எழுந்து வரும் ஒவ்வொரு காட்சியும் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...