Sunday, September 22, 2024

ஆன்லைன் வகுப்புகளின் காலத்தில் கூட ரோபோ ஆசிரியர்களுக்கு இடமில்லை!!

நான் வேலைக்கு சேர்ந்த காலகட்டத்தில் பள்ளிகளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பெரும்பாலும் இருக்காது. பள்ளியில் பணிபுரியும் அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் தான் ஆங்கிலப் பாடம் எடுப்போம். 2004 துவங்கி 2011 ல் உட்கோட்டை பள்ளியில் இருந்து முதுகலை கணித ஆசிரியராக செல்லும் வரையில் நான் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகவே அறியப் பட்டேன். கணித பாடவேளைகள் ரொம்ப சீரியஸாக செல்லும். ஆனால் ஆங்கிலப் பாடவேளைகள் ரொம்ப ஜாலியாக செல்லும். நான் வாசித்தவை நடப்பு கால நிகழ்வுகள் போன்ற பல விஷயங்களை பாடத்தோடு ஒட்டி கதைக்க நல்ல வாய்ப்பாக அமையும். ஆங்கில துணைப்பாடக் கதைகளை இரண்டு மூன்று நாட்கள் வைத்து வைத்து ருசித்து நடத்திய காலம் அது. அந்த காலகட்டத்தில் தான் மேலே நான் சொன்ன தலைப்பில் ஐசக் அசிமோவ் எழுதிய அறிவியல் புனைகதையை நடத்தினேன். நாங்கள் நடத்திய காலத்தில் இந்த பாடம் ஒன்பதாம் வகுப்பு ஆங்கில Prose ல் Tommy found a Book என்கிற தலைப்பில் வந்து இருந்தது. தற்போது புதிய பாடபுத்தகத்தில் அதே ஒன்பதாம் வகுப்பு ஆங்கில Non-detail story பகுதியில் The Fun They Had என்கிற தலைப்பில் வந்துள்ளது. இயல்பிலேயே அறிவியல் சார்ந்த விஷயம் மேல் எனக்கு ஆர்வமுண்டு. அதனால் அந்த காலகட்டத்தில் இந்த பாடத்தை அனுபவித்து நடத்தினேன். ஐசக் அசிமோவ் அமெரிக்காவைச் சேர்ந்தவர். பயோகெமிஸ்ட்ரி துறை பேராசிரியர். அறிவியல் புனைகதைகள் ஏராளமாக எழுதியவர். இந்த கதைக்கு வருவோம். கதை நடக்கும் காலகட்டம் 2157. டாமி மற்றும் மார்கீ அண்ணன் தங்கை. டாமி வீட்டின் பரண் மீது இருந்து ஒரு புத்தகம் ஒன்றை கண்டு பிடிக்கிறான். அன்றைய காலகட்டம் வன்புத்தகங்கள் சுத்தமாக மறைந்து மென்புத்தகங்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் காலம். கசங்கி மடங்கிய காகித புத்தகம் அவனுக்கு வியப்பைத் தருகிறது. அந்த புத்தகம் பழங்கால பள்ளிகள் பற்றிய புத்தகம். அன்றைய காலகட்டத்தில் திரையில் எழுத்துகள் ஓடும் ஆனால் காகித புத்தகத்தில் நிலையாக நிற்கும் எழுத்துகளை வாசிப்பது அவனுக்கு வியப்பை தருகிறது. மார்கீ அவனிடம் அந்த புத்தகம் பற்றி கேட்கிறாள். இது பள்ளிகள் பற்றிய புத்தகம் என்கிறான். அவளுக்கோ பள்ளி என்றாலே வெறுப்பு. பள்ளியை பற்றி எழுத என்ன இருக்கிறது என்று வெறுப்பாக கேட்கிறாள். அவர்களது வீட்டில் பள்ளி என்பது வீட்டில் இருக்கும் கணினி. அது அவர்களுக்கான பாடத்தை நடத்துகிறது. வீட்டுப் பாடம் கொடுக்கிறது. அவர்கள் வீட்டுப் பாடத்தை அதற்கான துவாரத்தில் கொடுக்க அது திருத்தி மதிப்பெண் வழங்கி வெளியே தள்ளுகிறது. பாடவாரியாக நேரம் பிரித்து வைத்து பிள்ளைகளை கணினி முன்பு அமர்ந்து பெற்றோர் படிக்கச் செய்கின்றனர். மார்கியின் பள்ளிக் கணினி அவளுக்கு புவியியல் பாடத்தில் டெஸ்ட் மேல் டெஸ்ட்டாக வைத்து சோதிக்கிறது. அவளும் தொடர்ந்து புவியியலில் பெயிலாகியபடி இருக்கிறாள். அதனாலேயே பள்ளி என்றால் வெறுப்புக்கு உள்ளாகிறாள். இறுதியில் அவளது அம்மா மெக்கானிக் ரோபோவை வரச்செய்து பள்ளியை சரி செய்கிறாள். புவியியல் பாடம் சற்று வேகமாக சென்றுள்ளது. மார்கியின் மீது எந்த தவறும் இல்லை என்று மெக்கானிக் கூறுகிறார். மெக்கானிக் பள்ளி ரோபோவை கழட்டியபோது மார்கி “இதை அவர் மீளவும் பொறுத்த தெரியாமல் போய்விட வேண்டும் அல்லது கொஞ்ச நாட்கள் இந்த ரோபோவை மெக்கானிக் வீட்டுக்கு எடுத்து சென்றுவிட வேண்டும்“ என்றெல்லாம் எண்ணுகிறாள். அந்த புத்தகத்தில் உள்ள பழங்கால பள்ளியானது பிரத்தியேகமான இடத்தில் செயல்பட்டுள்ளது. ஊரில் உள்ள சமவயது சிறார்கள் ஒரே வகுப்பில் கும்பலாக அமர்ந்து படிக்கின்றனர். மனித ஆசிரியர் பாடம் நடத்துகிறார். சேர்ந்து விளையாடி மகிழ்கின்றனர். இந்த தகவல்கள் அவர்களுக்கு ஏக்கத்தையும் ஆச்சரியத்தையும் தருவதாக கூறி கதையை முடித்திருப்பார். இந்த கதையில் கல்வி சார்ந்து ஒரு மூன்று விஷயங்களை அசிமோவ் வழி நின்று புரிந்து கொண்டேன். குழந்தைகளின் புரிதல் நிலை அறிந்து பக்குவமாக பாடம் நடத்திட மனித ஆசிரியர்கள் தான் சரி. எத்தனை கேட்ஜெட்டுகள் வந்தாலும் ஒரு ஆசிரியரின் இடத்தை அவற்றால் நிரப்ப இயலாது. வயதொத்த குழந்தைகள் கூடி ஆடி களித்து மகிழ பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள தோதான இடம் பள்ளி மட்டுமே. எவ்வளவு கேட்ஜெட்களை வீட்டில் நிரப்பினாலும் வயதொத்த குழந்தைகளுடன் ஆடிப்பாடி விளையாடிடும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது. எத்தனை யுகங்கள் கடந்தாலும் பள்ளிக் குழந்தைகளின் விடுமுறை ஏக்கம் என்பது மாறாத ஒன்று என்பதையும் கதைப் போக்கிலேயே அசிமோவ் உணர்த்திச் செல்கிறார். அசிமோவ் அவர்களின் கற்பனையில் பிறந்த ரோபோ ஆசிரியர் என்பவர் இன்று வரையில் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் கணினியின் வளர்ச்சி குறித்த அவரது கற்பனையைத் தாண்டி பலமடங்கு வேகத்தில் கணினி யுகம் வளர்ந்து விட்டது. (அவரது ரோபோ ஆசிரியர் பஞ்ச்டு கார்ட் தான் ரீட் செய்கிறார். பிள்ளைகளும் வீட்டு பாடத்தை பஞ்ச்டு கார்டில் எழுதியே இன்புட் செய்கிறார்கள்) இறுதியாக ரோபோ எனப்படும் ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் குறித்த எனது பார்வையை கூறிவிடுகிறேன். நானறிந்த வரையில் சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை முன்னெடுத்துச் செல்ல இத்தனை ஆசிரியர்கள் தேவையில்லை என்று வெளியேற்றியுள்ளார்கள். மீதம் இருப்போருக்கும் பாதி சம்பளம் வழங்கியிருக்கிறார்கள். இது போலவே பல துறைகளில் ரோபோக்கள் நுழையும் போதெல்லாம் பல நூறு ஊழியர்கள் வேலை இழக்கிறார்கள். எனவே ஆட்டோமேஷன் என்பது ஆபத்தானது. எனவே ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை வரவேற்கவேண்டாம். வேண்டுமானால் மனிதர்கள் செய்ய இயலாத ஆபத்தான பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...