Saturday, April 4, 2026

A letter to my youth இந்தோனேசிய படம்

A letter to my youth இந்தோனேசிய படம் Netflix ல் ஆங்கிலத்தில் காணக் கிடைக்கிறது
அனாதை இல்லத்தில் இருக்கும் அடங்காத குழந்தைகள் அவர்களை அன்பால் நல்வழிப் படுத்தும் கேர்டேக்கர் மிஸ்டர் சிமோன் என்கிற வழமையான "பள்ளி -ஆசிரியர்" டெம்ப்ளேட் வகைப் படம் தான். ஒரு பணக்கார மனிதர் தனது மகளை ஓவர் பாதுகாப்பாக வளர்க்கிறேன் என தனது செயல்களால் அனைவரையும் கதிகலங்க செய்கிறார். அவர் எதனால் அப்படி இருக்கிறார் அவருக்கு ஏதேனும் childhood trauma இருக்கிறதா?! முழு படமும் ஃப்ளாஷ் பேக் தான். காஃபேயும் அவனது தங்கையும் அனாதை இல்லத்தில் வளர்கிறார்கள். அவளது தங்கை ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு இருக்கிறாள். அந்த இல்ல பாதுகாவலர் அவளுக்கு வாகன உதவி செய்யாமல் இல்லத்தில் இருந்து மளிகை சாமான்கள் திருட பயன்படுத்துகிறார். தங்கை இறந்து போனதற்கு அனாதை இல்ல கேர்டேக்கர் தான் காரணம் என்று நினைத்து வருகிற அனைவரையும் நம்ப மறுக்கிறான். எப்போதும் பிரச்சனை செய்யும் முரட்டுப் பையனாக வளர்கிறான். அதேவேளை சக ஆதரவற்ற குழந்தைகளின் பால் மிகுந்த அன்போடு இருக்கிறான். அந்தப்பக்கம் மிஸ்டர் சீமோன் மனைவி சமீபத்தில் இறந்து போகிறார் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் அகால மரணம் அடைகிறான். தனது இறப்புக்கு சவப்பெட்டி மற்றும் மனைவியின் கல்லறைக்கு அருகில் இடம் என்று மிகுந்த செலவு செய்து ஏற்பாடு செய்து அந்த இஎம்ஐ கட்டி முடித்தவுடன் செத்து போகலாம் என்று காத்திருக்கிறார். இந்த நிலையில் தனது நண்பரின் வேண்டுகோளை நிராகரிக்க இயலாமல் அந்த ஆதரவற்றோர் விடுதிக்கு கேர் டேக்கராக வருகிறார். பசங்க கொடுக்கும் எந்த தொல்லையையும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருக்கிறார். அங்கே வருடா வருடம் கலாச்சார விழா ஏற்பாடு செய்து, வரும் பெற்றோரிடம் அவர்கள் விரும்பும் குழந்தையை தத்து கொடுப்பது வழக்கம். குழந்தைகள் அந்த நாளுக்காக ஆர்வமுடன் காத்திருப்பார்கள். பெற்றோரை கவர அவர்கள் செய்யும் பல வகையில் தயாராவார்கள். எதிர்பார்த்தது போல நிறைய குழந்தைகள் தத்து எடுக்கப் படுவார்கள் ஆனால் காஃபே செய்யும் ஒரு குறும்புத்தனம் மொத்த விழாவையே நாசமாக்கி விடும். வந்த பெற்றோர் கோபத்துடன் கிளம்பி விடுவார்கள். இதுநாள் வரை காஃபேவிடம் அன்பு பாராட்டிய குழந்தைகள் அவனை வெறுத்து விடுவார்கள். அவன் தனது செயலை எண்ணி வருந்தி இல்லத்தை விட்டு ஓடிப் போகிறான். இந்தப் புள்ளியில் சீமோன் அவனை தனது ஆதரவற்றோர் இல்ல வளர்ப்பு தனது குடும்பத்தினர் இழப்பு பற்றி கூறி அவனுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். இதற்கு பிறகு இல்லத்தில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் வருகின்றன. சீமோன் தனது இறுதிச் சடங்கு கணக்கின் கடைசி இஎம்ஐ ஐ கட்டி முடித்து சாகத் தயாராகிறார். அதன் பிறகு என்ன என்பதை படத்தில் நெகிழ்ச்சியுடன் காட்டி இருப்பார்கள். ஆதரவற்றோர் இல்லத்து குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் பொறுப்பாகவும் இருப்பதை பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கும். எப்படியாவது தான் தத்தெடுக்கப் பட வேண்டும் என்கிற முனைப்போடு பல விஷயங்களை முயன்று கற்று கலாச்சார விழாவில் பெரும் எதிர்பார்ப்புடன் கலந்து கொள்வது கல்நெஞ்சத்தைக் கூட கலங்கச் செய்யும். சீமோனின் கதாப்பாத்திரம் சிறப்பு. எந்த விஷயத்திற்கும் உடனடி ரியாக்ஷன் காட்டாமல் பொறுமையாக நிதானமாக ரியாக்ட் செய்கிறார். சின்ன பசங்க அத்தனை பேரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். தமிழில் ரீமேக் செய்யலாம் சீமோன் பாத்திரத்தில் கமல் மாதிரி சீனியர் நடிகர்கள் நடித்தால் நன்றாக ஓடும்.

A letter to my youth இந்தோனேசிய படம்

A letter to my youth இந்தோனேசிய படம் Netflix ல் ஆங்கிலத்தில் காணக் கிடைக்கிறது அனாதை இல்லத்தில் இருக்கும் அடங்காத குழந்தைகள் அவர்களை அன்ப...