Friday, January 17, 2025

மிஸ்டர் ஒயிட் - சிறுகதை

மற்றுமொரு சிறுகதை முயற்சி. பொறுப்பு துறப்பு: கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் "கற்பனை" தான்!! மிஸ்டர்ஒய்ட் “என்னசார்,முடி கம்ப்ளீட்டா நரைச்சு போச்சு? உங்க வயசு என்ன சார்?” இது நான். “நாப்பது வயசு தான் ஆவுது, என்ன சார் பண்றது ?!நான் என்ன பொம்பள பொறுக்கியா டை அடிச்சிக்கிட்டு சுத்துறதுக்கு?” சுறுக்கென்று நெருஞ்சி முள்ளாய் தைத்தார். ’அடப்பாவி என்னது பொசுக்குன்னு பொம்பள பொறுக்கின்னுட்டான்?!’ என்று அந்த துவக்கப் பள்ளி சுவற்றில் தொங்கிய கண்ணாடியில் தலையை பார்த்துக் கொண்டேன். ஆங், சொல்ல மறந்துட்டேன் இந்த ஊர் பள்ளியில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக வந்துள்ளோம். “என்னசார், நீங்கதானே பிரைசைடிங் ஆபீசர்?” ”ஆ…ஆமாம்சார்” “என்னசார், ஒரேகுப்பையா கெடக்கு பெஞ்சும் இல்லை எங்க படுக்குறது? அதெல்லாம் ஏற்பாடு பண்ணாம என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?” “சொல்லி அனுப்பி இருக்கேன் சார், ஏற்பாடு பண்ணிடுவாங்க“ என்றேன். ’டேய், இங்க நான்தான்டா பிரைசிடிங் ஆபீசர், நீ வந்து என்ன அதட்டுற’ வழக்கமாக உள்ளாட்சித் தேர்தல் என்றாலே தொல்லைதான். வாக்குச் சீட்டு நடைமுறை. அதுவும் கிராம பஞ்சாயத்து என்றால் நான்கு அல்லது ஐந்து என்கிற எண்ணிக்கையில் வாக்குச் சீட்டுகளை கையாள வேண்டும். இந்த ஊரே குடிகாரவங்க முரட்டுத் தனமான ஆட்கள் நிறைந்த ஊருன்னுவேற மீட்டிங்ல சொன்னாங்க. ஆனா, இங்கே உள்ளேயே ஒரு ஏழரைப் பங்காளி வந்து உக்காந்து கெடக்கான். நல்லபடியாக தேர்தலை பிரச்சனையின்றி முடிக்க வேண்டுமே என்ற கவலை மனதை கவ்வியபடி இருந்தது. நம்ம ஏழரை, வெள்ளை பேண்டில் இருந்து வெள்ளை வேட்டிக்கு மாறி இருந்தார். வெள்ளை பனியன், வெள்ளை முடி, வெள்ளை பெல்ட் சகிதம் "மிஸ்டர் ஒயிட்"டாகவே இருந்தார். “சார், என்ன சார் டாய்லெட் கட்டி இருக்கானுவ?“ “ஏன் அங்க என்ன சார் ஆச்சு? புது டாய்லெட் தானே சார்?! திறந்த பிறகு நமக்குதான் சாவி கொடுத்து இருப்பதாக எச்.எம் சொன்னாங்களே” “ஆமாம், என்னத்த புதுசா கட்டி கிழிச்சானுவ? நின்னா கூரையை முட்டுது” “குட்டிப் பசங்க டாய்லெட் சார், அதான் அவங்க உயரத்துக்கு கட்டி இருப்பாங்க” “உங்களுக்கெல்லாம் ஒன்னும் தெரியாது சார், இதுல எவ்வளவு ஆட்டைய போட்டானுவலோ போங்க” ’டேய்,என்னடா எல்லாத்துக்கும் எங்கிட்டேயே புகார் பண்ணுற நாளைக்கு நைட்வரைக்கும் இவன வேற எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே’ அப்போது சரியாக இரண்டு பெண் ஆசிரியர்கள் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். இருவரில் சற்று இளையவர் சுடிதாரில் இருந்தார். “பாத்தீங்களாசார், டிரஸ்ஸ, இதெல்லாம் பசங்களுக்கு என்னத்த பாடம் நடத்தபோவுது” என்ற அடுத்த ஊசியை எடுத்தார். “என்னசார் எதுக்கெடுத்தாலும் கொறை சொல்றீங்க? சேலையைவிட சுடிதார் வசதி மட்டுமல்ல பாதுகாப்பும்கூட” என்று தைரியத்தை எல்லாம் திரட்டி ஒரு செஞ்சூடு வைத்தேன். “சார், வணக்கம் சார், நீங்க தான் பிரைசிடிங் ஆபீசரா?” என்று மிஸ்டர் ஒயிட்டை பார்த்து கேட்டனர். “ஆமா, அந்த வேலையில மாட்டிக்கிட்டு லோலு படுறதுக்கு எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு? இதோ இந்த சார் தான் பிரைசிடிங் ஆபீசர்” “சாரிசார், வணக்கம்” என்று நெளிந்தனர். “சரி வாங்கம்மா. போய் பைய்ய வச்சிட்டு பசையையும் போஸ்டர் எல்லாத்தையும் எடுத்து வந்து ஒட்டுங்க சீக்கிரம்” என்று பழி வாங்கினேன். “சார், நாங்களா?“ “அப்புறம் வேற யாரு செய்றதாம்? இதுக் கெல்லாம் யாரையும் தனியா போடமாட்டாங்க. இன்னும் ரெண்டு பேரு வேற வரணும்” என்று கூறிவிட்டு மூன்றுபேரின் பணி ஆணைகளை வாங்கி வைத்துக் கொண்டு படிவங்கள் மற்றும் கவர்களை எடுத்து எழுதத் துவங்கினேன். “சார் எனக்கெல்லாம் எழுத்து வேலை சுத்தமா வராது, என்கிட்ட எதுவும் எழுத கொடுத்துடாதீங்க“ என்று முன்னெச்சரிக்கையாக நழுவினார் ஒயிட். “சரி அப்படின்னா நீங்க அட்டைய மடக்கி அந்த டேபிள் மேல ஓட்டிங் கம்பார்ட்மெண்ட் அடிங்க” என்று ரிவிட் ஆணிகளையும் ஒரு கருங்கல்லையும் கொடுத்தேன். “ஏன் சார் சுத்தியல் எல்லாம்இல்லையா?” “சார், இருக்கிறதவச்சி அட்ஜஸ்ட் பண்ணுங்க” என்றேன் எரிச்சலாக. பள்ளி வளாகத்தின் உள்ளே ஒரு ஜீப் வேகமாக வந்து அரைவட்டம் அடித்து நின்றது. ஜோனல் ஆபீசர் இறங்கி எல்லோரும் வந்து விட்டார்களா என்று கேட்டார். “இன்னும் பி3 மற்றும் பி4 வரவில்லை சார்” “போன் பண்ணி கேளுங்க. பி4 வரலைன்னா லோக்கல்ல யாராவது படிச்ச பசங்க இருந்தா போட்டுக்கோங்க. வாக்குப் பெட்டியைப் பாத்துக்குறதுதானே?” “சரிங்கசார்” “ஆமாம், பிசிவந்தாச்சா?” “இன்னும்இல்லைசார்” “தோவந்துட்டேன்சார்” என்று பிடறிக்குப் பின்னால் சத்தம் கேட்டது. “பாத்தீங்களா சார், வந்து ஒரு கும்பகர்ணத் தூக்கம் போட்டுட்டாரு அந்தபிசி” என்றுஒயிட் எனது காதைகடித்தார். “பரவால்லை விடுங்கசார் அவங்க எல்லாம் இப்போ தூங்கினாத் தான் உண்டு, நாளைக்கெல்லாம் அவங்க தூங்கமுடியுமோ என்னவோ” என்றேன் விட்டுக் கொடுக்காமல். நாங்கள் போஸ்டரோடும் பசையோடும் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தபோது கரடி உறுமுவது போல "கர் கர்" என்று சத்தம் நாராசமாய் கிளம்பியது. ஒதுக்கித் தந்த ஒத்தை வேலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு கம்பார்ட்மெண்ட் அட்டையை அப்படியே போட்டுவிட்டு அழகாய் படுத்து பிளிரிக்கொண்டு இருந்தது ஒயிட் கரடி. “எனக்குன்னே வந்து சேருவீங்களாடா?“ என்று அலுத்துக் கொண்டு மலையென குவிந்து கிடந்த வேலைகளுக்குள் மூழ்கினேன். இரவு எட்டு மணிக்கு எழுந்தவர், "சார் டிஃபன் கொண்டு வந்துட்டானுவளா சார்?!" "உங்க வேலைக்காரன் பாருங்க நாங்க, இந்தாங்க சாப்பிடுங்க" என்று முறைத்தபடி நீட்டினார் விஏஓ. சிலர் எப்போதுமே தன்னை உச்சாணிக் கொம்பில் அமர்த்திக் கொண்டு மற்றவர்களை கீழ்மையுடன் பேசும் அநாகரிகத்தை அடாவடியாக பின்பற்றுகிறார்கள் மிஸ்டர் ஒய்ட் போல. உண்மையிலேயே மிக சுவையான இட்லி தோசை சட்னி சாம்பார். ஆனால் நம்ம ஒயிட் என்ன சொல்றார் பாருங்க. "நமக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ண கொடுத்த காசுல பாதிய ஆட்டைய போட்டுட்டு இந்த கண்றாவி இட்லி தோசைய கொடுக்குறானுவ!! ஒரு சப்பாத்தி பரோட்டா ஆம்ப்ளேட் கொடுத்தா என்ன கொறஞ்சா போயிடுவானுவ?!" என்று சீரியசாக சீறியது எங்களுக்கு சிரிப்பாகவே இருந்தது. "என்கிட்ட கேட்டிருந்தாலும் நான் இட்லிதான் கேட்டிருப்பேன். புது இடத்துல அதுதான் சேஃப்!!" "எனக்கெல்லாம் வஞ்சனை இல்லாத வயிறு சார் எதப் போட்டாலும் சமைஞ்சிடும்" என்றபடி ஜெலுசில் ஒரு மூடி ஊற்றிக் கொண்டார். "இ, இ..இதுவா இது சளி டானிக் சார்!!" இந்தாளு ஒரு டைப்பாத்தான் இருக்கான் என்று தலையில் அடித்துக் கொண்டேன். "சார், சாஆஆஆஆர், ஒரு நிமிசம் இதக் கேளுங்க" "வேலை நிறைய கிடக்கு சொல்லுங்க சார் எழுதிகிட்டே கேக்குறேன்" "இல்ல, இந்த பி4 போஸ்ட்டுக்கு என்ன சார் பண்ணலாம்னு இருக்கீங்க?!" "வெயிட் பண்ணிப் பாப்போம், விஏஓ கிட்டயும் பிரச்சனை இல்லாத டிகிரி படிச்ச பசங்கள பாக்க சொல்லச் சொல்லி இருக்கேன்" "இனிமே வந்தாலும் போட்டாச்சின்னு திருப்பி அனுப்பி விட்ருவோம் வேலைன்னா ஒரு பஞ்ச்சுவாலிட்டி வேணாம்!!" என்று மறுபடியும் தன்னை வெய்ட்டான ஒயிட் என நிரூபித்தார். அதே நேரத்தில் ஒருத்தர் வெய்ட்டா ஹைட்டா பவுன்சர் கணக்காக உள்ளே வந்தார். "உங்களுக்கு பதிலா ஆள் போட்டாச்சு கிளம்புங்க" என்று ஒய்ட் சத்தமாக விரட்ட "யோவ் பெர்சு யாருய்யா நீ உனக்கு இங்க என்ன வேலை?" என்று சீறினார் வெய்ட்டு. "சார், பேசாம இருங்க, நான் கேட்கிறேன், சார் வாங்க நீங்க என்ன..." "சார் நான் பிசி சார், 156 AV " " இது லேடீஸ் பூத் ஆல் ஓட்டர்ஸ் பக்கத்து பூத் தான்" என தடுப்பு தட்டிக்கு அந்தப் புறம் காட்டினேன். "ஓகே சார் வரேன்" என்று கிளம்பினார். அதுவரை வெடவெடத்துப் போய் இருந்த ஒய்ட் ஆசுவாசமடைந்தார். "ஆள் வெய்ட்டா இருக்கான்னு உங்க கிட்டயே எவ்வளவு திமிறா பேசுறான் பாத்தீங்களா" என்று மீசையில் மண் ஒட்டவில்லை என காட்ட முயன்றார். இரவு பதினோறு மணிக்கு எல்லா வேலைகளையும் முடித்தேன். ஆல்ரெடி மிஸ்டர் ஒயிட் குறட்டையில் பள்ளி வளாகமே அதிர்ந்து கொண்டு இருந்தது. "விஏஓ சார், பசங்க யாரயாவது கூட்டி வாங்க சார், பி4 ஃபிக்ஸ் பண்ணிட்டேன்னா கொஞ்சம் நிம்மதியா தூங்குவேன்" "சார், இதோ வந்துட்டேன் பாருங்க" என்றபடி வந்தார். "தம்பி உங்க பேரு?!" "சிவநேசன் சார், திருச்சி நேஷனல் காலேஜ்ல எம்.எஸ்ஸி ஃபிசிக்ஸ் செகண்ட் இயர்" "ஓ, வெரிகுட் பா, இங்க ஒன்னும் பெரிய வேலை இல்ல, வாக்குச் சீட்டோடு கம்பார்ட்மெண்ட் உள்ள போனவங்க அத்தன சீட்டையும் திருப்பி எடுத்து வந்து பெட்டியில போடுறாங்களான்னு கவனிக்கணும்" "ஓகே சார்" "கேப் இருக்கிற இடத்தில் எல்லாம் சொருகி வச்சிடுவாங்க கவனமா பாக்கணும்" "ஓகே சார்" என்றார் பவ்வியமாக. "தம்பி இதுக்கு சம்பளம் எல்லாம் கிடையாது ஒரு சேவை தான்" இது ஒயிட். 'ஏ இந்தாளு எப்போ முழிச்சாரு' "அதனால என்ன சார் பரவால்ல" என்று சிரித்தபடி சென்றார் அந்த தம்பி. "தம்பி காலையில் அஞ்சி மணிக்கெல்லாம் வந்துடு" என்றார் ஒயிட் கறாராக. காலையில் இருந்தே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. வாக்குப்பதிவு இயந்திர முறையில் தான் NOTA உள்ளது. ஆனால் ஒரு 'குடி'மகன் ஒருவர் 49 O (NOTA )படிவம் வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் என்னிடம் ஓடிவந்தார் ஒயிட். "இந்த ஏ4 ஷீட்டில் கட்டம் போட்டு சும்மா கையெழுத்து வாங்கிட்டு அனுப்பிடுங்க" என்றேன். "சார் நீங்களே அவரை டீல் பண்ணிடுங்க ப்ளீஸ்" "சார், அவருக்கு இங்க ஓட்டே கிடையாதே, இது லேடீஸ் பூத் இல்லையா" என முறைத்தேன். ஓரு குடிமகனைப் பார்த்ததும் சகலத்தையும் மறந்து தொலைத்திருக்கிறார் ஒயிட். முணகிக் கொண்டே வெளியே போனவன் இன்னொரு ரவுண்டு ஏற்றிக் கொண்டு பக்கத்து பூத் போனான். ஒயிட் சிவநேசனிடம் வேலையை பார்த்துக் கொள்ளச் செய்துவிட்டு பக்கத்து பூத்துக்கு வேடிக்கை பார்க்கப் போனார். இவர் போனபோது குடிமகன் வெளியே வீசப்பட்டு வந்து விழுந்தார். வீசியவர் வேறு யாருமில்லை நம்ம பவுன்சர் போலீஸ் தான். ஒயிட் சென்ற சுவடு தெரியாமல் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு வந்தமர்ந்தார். 'ஆத்தீ எம்மாம் பெரிய சுமோ வீரனுடன் மோதப் பார்த்தேனே!!' என நினைத்திருப்பார். வாக்குப் பதிவு முடிந்தவுடன் நைசாக நழுவியதன் மூலம் பேக் பண்ணி கவர் போடுவது படிவம் நிரப்புவது போன்ற வேலைகளில் இருந்து தப்பித்தார். "கவர்லாம் போட்டாச்சா சார், சிவநேசன போகச் சொல்லிடுங்க பாவம், பெட்டி எடுக்க நைட் பன்னெண்டுக்கு மேல ஆயிடும்" என்றார் வழக்கத்துக்கு மாறான அக்கரையுடன். "இருக்கட்டும் விடுங்க, ஒரு லோக்கல் கை இருக்குறது நல்லது தானே?!" "சிவநேசன் நீங்க எங்கள அனுப்பிட்டு தான் போகணும் சரியா?!" "கண்டிப்பா இருக்குறேன் சார்" பனிரெண்டு மணிக்கு ஜோனல் ஆபீசர்ஸ் பெட்டி எடுக்க வந்தார்கள். இறுதியாக சம்பளக்கவரை கொடுத்தார்கள். ஒயிட் என்னை தனியே அழைத்து வந்தார். "சார் சிவநேசனுக்கு சும்மா ஒரு அம்பது ரூவா கொடுத்து அனுப்பிடுவோம். அந்த சம்பளத்த பிரிச்சிக்குவோம்" "அப்படில்லாம் பண்ண முடியாது சார்" உண்மையின் உரைகல் என நேர்மையின் சிகரத்தில் உட்கார வைத்திருந்தேன். அங்கிருந்து வழுக்கிக் கொண்டு வந்து தலைகுப்புற விழுந்து கறையானார் மிஸ்டர் ஒயிட்!! மு.ஜெயராஜ், தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, நாகமங்கலம்.

மிஸ்டர் ஒயிட் - சிறுகதை

மற்றுமொரு சிறுகதை முயற்சி. பொறுப்பு துறப்பு: கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் "கற்பனை" தான்!! மிஸ்டர்ஒய்ட் “என்னசார்,முடி கம...