Tuesday, May 27, 2025

From the Ashes -Saudi Arabian movie

From the Ashes -Saudi Arabian movie
கும்பகோணத்தில் நடந்த பள்ளி தீ விபத்தில் 90க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் வெளியேற வழி இன்றி தீயில் கருகி இறந்து போன விஷயத்தை நாம் மறக்க முடியாது. அதுபோன்ற ஒரு தீ விபத்தை மையமாக கொண்டு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகள் அந்த நாட்டின் கலாச்சார கெடுபிடிகள் குழந்தைகள் மீது பெற்றோர்கள் கல்வி சார்ந்து கொடுக்கும் அழுத்தங்கள் போன்ற பல விஷயங்களை பேசும் திரைப்படம் தான் இந்த From The Ashes. Secondary school 2300 இதுதான் அந்தப் பள்ளியின் பெயர். அது பெண்கள் மட்டுமே படிக்கக்கூடிய ஒரு பள்ளி. கைகள் உட்பட முழு உடலையும் மறைக்கும் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் இதனை கண்காணிக்கவேறு கலாச்சார காவலர்கள் இருக்கிறார்கள். மாணவர்கள் அனைவரும் உள்ளே வந்த பிறகு வாட்ச் மேனால் பள்ளி வெளிப்புறமாக பூட்டப்படுகிறது. பள்ளியில் படிப்பு நல்லொழுக்கம் இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை மாதா மாதம் ஹானர் செய்கிறார்கள். அந்த அடிப்படையில் மாணவி அம்ரீன் சையத் ஒவ்வொரு மாதமும் அந்த பெருமையை பெறுகிறார். அதே பள்ளியில் பள்ளி முதல்வரின் பெண் ராணா இரண்டாமிடத்தில் இருந்து வருகிறார். பள்ளி முதல்வருக்கு அது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. முதலிடத்தை பிடிப்பதற்கும் அம்ரின் போல சிறந்த மாணவி பட்டம் பெறுவதற்கும் ராணாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் . மேலும் பள்ளியின் முதல்வர் தனது கணவருடன் விவாகரத்து வழக்கை நடத்திக் கொண்டு இருக்கிறார். குழந்தை ராணாவை தந்தை இடம் காண்பிக்கவே மாட்டேன் என்பதில் பிடிவாதமாகவும் இருக்கிறார். ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கும் குறும்பு கேங் போல இந்த பள்ளியிலும் மூன்று பேர் இருக்கிறார்கள் ஹேமா, மோனா மற்றும் மிஷல். பதின்பருவ குழந்தைகளுக்கு விதிக்கப்படும் அதீத கட்டுப்பாடு என்பது பிரஷர் குக்கர் போன்றது தான் சமயம் வாய்க்கும் போது வெடித்து வெளியேறிவிடும். தனிப்பட்ட முறையில் எனக்கு எப்போதுமே ஆண்கள் பள்ளி பெண்கள் பள்ளி என தனித்தனியே பள்ளிகளை நடத்துவதில் உடன்பாடு கிடையாது. அனைத்து பள்ளிகளுக்கு ஆண் பெண் இருவரும் படிக்கக்கூடிய இருபாலர் பள்ளிகளாக இருப்பது ஆரோக்கியமான இளைய சமுதாயத்துக்கு வழிவகுக்கும். சேர்ந்து படித்தாலே பேசினாலே இழுத்துக் கொண்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் என்கிற அதீத கற்பனை காரணமாக நிறையபேர் சின்னத்தம்பி பட அண்ணன்மார்கள் போலவே அலைகிறார்கள். ஒரு சுரங்க பாதையில் அழைத்துச் செல்வது போல குழந்தைகளை கைப்பிடித்து வேற்று ஆண்களின் பார்வை படாத வண்ணம் சிறுவயதிலிருந்தே பெண்கள் பள்ளி பெண்கள் கல்லூரி என்று பார்த்து பார்த்து வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் வேலைக்கு செல்லும் போதோ அல்லது வேறு ஏதேனும் சூழலிலோ ஆண்களோடு கலந்து பேசும்போது அந்த உறவை எப்படி பேணுவது என்று அறியாமல் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்ததெல்லாம் அவர்களது அண்ணன்மார்கள் மாமன் மார்கள் என்ற நம்பகமான நெருங்கிய வட்ட ஆண்கள். எனவே வேற்று ஆண்கள் அவர்களை அணுகும் போது அவர்களைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இருப்பதில்லை. படத்தில் வரும் இந்த பள்ளியிலும் கட்டுப்பாடுகள் கட்டுக்கடங்காமல் விதிக்கப்படுகின்றன ஆனாலும் கூட அந்த குழந்தைகள் சிகரெட் பிடித்தல் உள்ளிட்ட ஏராளமான விதிமீறல்களை பள்ளி வளாகத்திலேயே செய்கிறார்கள். மாணவிகளிடமிருந்து சூயிங்கமோ அல்லது சிகிரட்டோ பறிமுதல் செய்யும் ஆசிரியர்கள் உடனடியாக மறைவிடம் ஏகி அதை துய்த்துப் பார்க்கத்தான் தலைபடுகிறார்கள். பள்ளியில் ஒரு குறிப்பிட்ட மாணவனை திரும்பத் திரும்ப முன்னிருத்துவது என்பது அவனுடைய வகுப்பில் அவனை தனிமைப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்பதை நான் பலமுறை கவனித்துள்ளேன். எனவே தேவைக்கு அதிகமாக ஒரு குறிப்பிட்ட மாணவர்களை அடிக்கடி முன்னிலைப்படுத்துதல் என்பது சரியாக இருக்காது. ஆசிரியர்களை பாராட்டும் போது கூட எந்த ஒரு தனி ஆசிரியரின் சிறப்பான செயல்பாடுகளையும் உயர்த்தி பிடித்து பாராட்டுவது ஆசிரியர்களிடம் பிளவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் ஒட்டுமொத்தமாக பொதுப்படையாகவே பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். அடிக்கடி சிறந்த மாணவிக்கான விருது வாங்குவதாலும் அனைத்து செயல்பாடுகளிலும் முன்னிலை வகிப்பதாலும் இந்த படத்திலும் அப்படித்தான் அம்ரீன் சையது தனது வகுப்பில் பிற மாணவிகளின் பகையை சம்பாதித்துக் கொள்கிறாள். இந்தப் படத்தில் கவனித்த மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆண்களின் படங்களை ஆல்பமாக ஒட்டி வைத்து இருக்கிறார் பள்ளியின் துப்புரவு தொழிலாளி. அவரிடம் காசு அல்லது பொருள் கொடுத்து அந்த படங்களை பார்ப்பதை மாணவிகள் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியாமல் செய்கிறார்கள். இந்த விஷயம் எனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியது. கதைக்கு வருவோம்: ஒரு நாள் அம்ரீன் தனது கணக்கு பாட புத்தகத்தை காணவில்லை என்று ஸ்டோர் ரூமில் இருந்து வேறு ஒரு பாட புத்தகம் எடுப்பதற்காக வருகிறாள். அப்போது கதவு வெளிப்புறமாக பூட்டப்படுகிறது. பதட்டத்தில் தடுமாறி விழுந்து மயக்கமாகி விடுகிறாள். அந்த சமயத்தில் பள்ளியில் தீ பற்றி பரவுகிறது. மாணவிகள் அனைவரும் வகுப்புகளில் இருந்து வெளியேறி மெயின் கேட் போகிறார்கள் அது வெளிப்புறமாக பூட்டப்பட்டிருக்கிறது. துறையின் அனுமதியை பெற்று தீயணைப்பு துறைக்கும் ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்கிறார்கள். பள்ளிக் காவலாளி பள்ளியை பூட்டிவிட்டு எங்கேயோ சென்று விடுகிறார். தீயுடன் புகையும் ஏராளமாக பரவுவதால் மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பள்ளியின் முதல்வர் தனது விவாகரத்து வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார். பள்ளியில் துணை முதல்வர் மாணவிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்ற படாதபாடு படுகிறார். வெளியே கதவும் பூட்டப்பட்டு இருப்பதால் கையறு நிலையில் நிற்கிறார். அது சமயம் மாடியில் கதவை திறந்து விடலாம் என்று போராடி சாவியை கண்டுபிடித்து எடுத்து மாடி கதவை திறந்து மேல் மடியில் இருந்த மாணவிகளை மொட்டை மாடிக்கு அனுப்பி காப்பாற்றி விட்டு மூச்சுத் திணறால் உயிர் துறக்கிறார். ஸ்டோர் ரூமில் பூட்டப்பட்டு கிடந்த அம்ரீனும் இறந்து போகிறாள். தீ விபத்துக்கு காரணமானவர் யார் அம்ரினை ஸ்டோர் ரூமில் பூட்டியது யார் என்கிற கேள்விகளோடு படம் பயணித்து அதிர்ச்சிகரமான திருப்பத்தில் முடிவடைகிறது. இந்த படத்தில் தீ விபத்து காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்து இருப்பார்கள் பார்க்கும் நமக்கே மூச்சு திணறல் ஏற்பட்டு விடும். மாணவிகள் தீ விபத்தில் இருந்து வெளியேறும் போது கூட அவர்களின் ஹிஜாப் மூடாமல் இருப்பது பற்றியே அங்கே இருக்கும் ஆண்கள் கவலைப்படுகிறார்கள். தீ காயத்தோடு அங்கங்கே அமர்ந்து அழுது கொண்டிருக்கும் மாணவிகள் அருகே அவர்களது தந்தையர் வந்து தனது தலையில் போர்த்தியிருக்கும் துணியை எடுத்து அந்த மாணவிகள் தலையில் போட்டு மூடுகிறார்கள். மத அடிப்படைவாதங்கள் என்பவை எவ்வளவு பிற்போக்குத்தனமானவை என்பதையும் பெண்கள் மீதான ஒடுக்கு முறையை மிகக் கடுமையாக கடைப்பிடிப்பதற்கு மத அடிப்படை வாதமே காரணம் என்பதையும் இந்த படத்தில் காணலாம். படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

No comments:

Post a Comment

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...