Monday, March 16, 2026
கரும்பலகை – எஸ்.அர்ஷியா
சமீப நாட்களாக முழு நீளமாக ஒரு நூலை ஒரே சிட்டிங்கில் வாசிப்பது என்பது சற்று சிரமமான காரியமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதும் சரி பேருந்து பயணங்களிலும் சரி வாசிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை தீர்மானமாக கொண்டுள்ளேன். அந்த வகையில் இந்த நூலை ஒரே ஒரு சிட்டிங்கில் வாசித்து முடிக்க முடிந்தது.
அர்ஷியா அவர்கள் எழுதிய ஏழறை பங்காளி வகையறா என்கிற நூலை வாசித்துள்ளேன். இஸ்லாமிய குடும்பங்களில் உள்ள நடைமுறைகளை ஒட்டி அமைந்திருக்கும். மிகவும் சுவாரசியமான நாவல்.
கரும்பலகை என்கிற இந்த நூல் ஒரு ஆசிரியரைப் பற்றியது. கதையை ஒட்டி பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் உபரி ஆசிரியர் பணிமாறுதல், லஞ்சம் கொடுத்து மாறுதல் பெறுதல் மற்றும் பள்ளி நடைமுறைகள் என்று தொட்டுச் சென்றுள்ளார்.
நூலாசிரியர் பத்திரிக்கையாளர் என்பதால் துறை சார்ந்து அவர் விசாரித்து தெரிந்து கொண்ட தகவல்களை ஒட்டி நாவல் எழுதியுள்ளார்.
ராஜலெட்சுமி என்கிறவர் பல ஆண்டு காலம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவிட்டு பிறகு அரசுப் பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்கிறார். அந்த சமயம் அவர் பணியேற்ற பள்ளியில் மாணவர் எண்ணிக்கை படி அவர் உபரி ஆசிரியர் என்று கணக்கிடப் பட்டு ஆசிரியர் பணியிடம் தேவைப் படும் பள்ளிக்கு பணிமாறுதல் ஆகி செல்கிறார்.
தினசரி சென்றுவர மிகவும் சிரமமாக உள்ள ஒரு குக்கிராமம். இதற்கிடையே சிஆர்சி பயிற்சிக்கு செல்லும் போது ஒரு ஆசிரியர் பணம் கொடுத்து பக்கத்தில் உள்ள பள்ளிக்கு மாறுதல் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தர முன்வருகிறார். முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதம் தெரிவித்து பணத்தை கஷ்டப்பட்டு புரட்டுகிறார்.
ஆர்டர் கைக்கு வரும் சமயம் கூடுதலாக ஐம்பதாயிரம் லஞ்சம் கேட்கப் படுவதால் பின்வாங்குகிறார்.
பிறகு பள்ளியோடும் மாணவர்களோடும் ஒன்றிப் போய் சிறப்பாக பணிபுரிந்து நல்ல தேர்ச்சி பெற உதவுகிறார். இந்த நிலையில் அடுத்த ஆண்டில் மறுபடியும் உபரி ஆசிரியர் மாறுதல் வந்து சேர்வதாக முடிக்கிறார்.
நாவலில் ஏராளமான தகவல் பிழைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன.
இந்த உபரிப் பணியிடங்கள் உருவானதும் அதன் காரணமாக டிப்ளாய்மெண்ட் ட்ரான்ஸ்ஃபர் என்கிற ஒரு வழக்கம் வந்ததும் எப்போது அதிகமானது தெரியுமா?
150க்கு கீழான எண்ணிக்கை உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் ஆறு ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே வழங்கப் படும். அதற்கு மேல் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக வழங்க அரசாங்க வழிகாட்டு நெறிமுறை உள்ளது.
ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் பெறப்படும் 1-8 விவரப்படி மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ செய்வார்கள்.
நான் உட்கோட்டை பள்ளியில் பணிபுரிந்த போது மாணவர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. ஒன்பதாம் வகுப்பில் ஒரு பிரிவிற்கு 110 மாணவர்கள் என்று இரண்டு பிரிவு இருக்கும். வகுப்பறை முழுவதும் மாணவர்களால் பிதுங்கி வழியும். அந்த சமயம் ஆண்டாய்வுக்கு வந்திருந்த முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் எங்கள் நெருக்கடி கருதி உடனடியாக ஐந்து புதிய ஆசிரியர் பணியிடங்களை வழங்கினார்.
மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளில் பணிபுரியும், 1-8 கணக்கீட்டின் படி உபரி என்று கணக்கிடப்பட்ட ஆசிரியர்களை பணியிட ஆணையுடன் கூடுதலாக மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு மாற்றித் தருவார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதன்முதலில் நடைபெற்றபோது, அந்த ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப் பட்டு விட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று பிறகு நியமனத் தேர்வை தனியாக எழுதி தேவைப் பட்டியலின் தர வரிசைக்குள் நுழைந்தால் மட்டுமே தற்போது பணி நியமனம் கிட்டும்.
அந்த சமயத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்தபோது இங்கே பள்ளிகளில் தேவைப் படும் பாடவாரியான ஆசிரியர் பணியிடங்களுக்கும் அங்கே தேர்ச்சி பெற்ற பணிநாடுனர்களின் பாடங்கள் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருந்ததை புறந்தள்ளிவிட்டனர்.
அதன் விளைவாக தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் பள்ளிகளுக்குள் வந்து விட்டிருந்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வழக்கமாகவே அறிவியல் பாடங்களைக் காட்டிலும் கலைப்பிரிவு பாடங்களில் தேர்ச்சி அதிகமாக இருக்கும். எனவே ஆங்கில மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் நான் அறிந்தவரை அரியலூர் மாவட்டத்தில் அதிகமாக இருந்தனர்.
எனவே அந்த ஆண்டில் இருந்து ஒரு பக்கம் ஓய்வு பெற்ற அல்லது பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் சரண் செய்யப் பட்டன. தேவைக்குத் தக்க உபரியான ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாமல் விருப்ப மாறுதல் நடத்த இயலாத ஆண்டுகள் எல்லாம் வந்து போயின.
கதை நாயகி ராஜலெட்சுமி உபரி ஆசிரியர் பணிமாறுதலில் செல்லும் பள்ளி புதிதாக தரம் உயர்த்தப் பட்ட பள்ளி. அங்கே அறிவியல் ஆசிரியர் பணியிடம் இரண்டு இருந்ததாக சொல்லி இருக்கிறார். புதிய பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடம் அறிவியலாக இருக்காது.
அடுத்து உபரி ஆசிரியர் என்று அடையாளப் படுத்தப் படுபவர் அந்த ஸ்டேஷனில் கடைசியாக பணியேற்ற இளையர் தான். அதன் படி ராஜலெட்சுமி தான் மூத்தவர். அடுத்த ஆண்டு மீண்டும் உபரிப் பணியிட மாறுதல் வழங்கப் பட்டுள்ளது. அதற்கு காரணம் மூத்த ஆசிரியர் பணியிடம் தான் உபரிப் பணியிடமாக கருதப் பட வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டு தீர்ப்பு வந்துள்ளதாக கதையை அமைத்துள்ளார். அதுபோல எதுவும் நீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
கதைக்களமாக இருக்கும் பொறண்டையூர் பள்ளிக்கு புதிதாக ஒரு தலைமையாசிரியர் வந்து சேர்கிறார். வந்து ஒரு வாரத்தில் மாறுதலாகி விடுகிறார். தலைமையாசிரியர் கையாடல் செய்கிறார் என்பதை பதிவு செய்ய அந்த கதாப்பாத்திரத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஆசிரியர். ஆனால் முழுக்க தகவல் பிழைகளுடன் கட்டமைக்கப் பட்ட பகுதியாக அது வந்துள்ளது.
வந்தவுடனே நூலக புத்தகங்களும் பள்ளி ஆய்வகத்துக்கான அறிவியல் உபகரணங்களையும் வாங்கி கமிஷன் அடித்து விட்டதாக கூறுகிறார். இவர் கூறும் அந்த காலகட்டத்தில் அறிவியல் உபகரணங்களையும் பள்ளி நூலகத்துக்கு தேவையான நூல்களையும் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வாங்கி அனுப்பி விடுவார்கள்.
அடுத்ததாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக இரண்டு ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளதாக கூறுகிறார். காலி பணியிடம் இருந்தாலோ அல்லது ஆசிரியர்கள் கூடுகள் தேவை இருந்தாலோ மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்க இயலும். அவர்களுக்கான ஊதியம் அரசாங்கம் வழங்காது பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து தான் வழங்க முடியும். இந்த நிதி எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்றால் ஒரு பள்ளியில் ஒரு மாணவனுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியாக வசூல் செய்யப்படுவது ஐம்பது ரூபாய் மட்டுமே 360 பேர் படிக்கக்கூடிய எங்கள் பள்ளியிலேயே பெற்றோர் ஆசிரியர் கழக நிதி 18,000 வரை மட்டுமே வரும். அப்படி இருக்கும்போது அந்த சின்னஞ்சிறு பள்ளியில் 5000 கூட தேறாது. அதை வைத்து அந்த இரண்டு ஆசிரியர்களுக்கு எத்தனை மாசத்திற்கு சம்பளம் கொடுப்பார்கள்?!
வந்து மூன்றே நாட்களில் ஒரு கழிவறையும் ஒரு பள்ளி கட்டிடமா கட்டுவதற்கு ஏற்பாடு செய்து தளவாடங்களை எல்லாம் இறக்கி விடுகிறார் என்று ஒரே போடாக போட்டுள்ளார். எங்கள் பள்ளியில் 8 வகுப்பறை கட்டிடங்களை நான் கேட்டு பெறுவதற்கு 7 ஆண்டுகள் ஆகிவிட்டது எனவே அவர் கூறுவது போல இது மூன்று நாட்களில் நடக்கிற காரியம் கிடையாது முதலில் பட்ஜெட்டில் நிதா ஒதுக்கப்பட வேண்டும் அதற்கு பிறகு தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான நிதி உள்ளது என்பதை கணக்கிட்டு தேவை கருதி அத்தியாவசியமாக தேவைப்படும் பள்ளிகளுக்கு மட்டுமே கட்டிடங்கள் ஒதுக்கீடு செய்வார்கள். இது ஒரு நீண்ட நடைமுறை ஓர் ஆண்டில் இந்த நடைமுறைகள் முடிவதற்கு ஆறு மாதம் எடுத்துக் கொள்ளும்.
தலைமை ஆசிரியர் ஜாதியை தானாகவே முன்வந்து வெளிப்படுத்தி ஜாதி லாபியை உருவாக்க முயல்வது போல அமைத்திருப்பார். அது அரிதாக சில இடங்களில் நடக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இதுபோல ராஜலட்சுமி என்கிற ஒற்றை ஆசிரியர் மட்டுமே அந்த பள்ளியில் தேர்ச்சியை 100% கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தெரியும் 100% தேர்ச்சி என்பது ஊர் கூடி தேர் இழுப்பது போல ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு முயற்சி மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது.
கதைநாயகி ராஜலட்சுமின் கணவர் தனசேகர் தனது ரியல் எஸ்டேட் பணியில் ஏமாற்றப்பட்டு மனம் உடைந்து போனது பற்றி மிகவும் நுணுக்கமாக ஒரு முழு அத்தியாயமே விளக்கி கூறியிருப்பார். அதுபோல பொரண்டையூர் மக்கள் சாராயம் காய்ச்சும் கலாச்சாரத்துக்குள் எவ்வாறு சென்றார்கள் என்பதை விளக்குவதற்கும் ஒரு முழு அத்தியாயத்தையே ஒதுக்கி இருப்பார் அவை இரண்டும் கதையில் இருந்து விலகி இருந்தால் சுவாரசியமாக இருந்தன.
இந்த நூலுக்கான மதிப்பறையில் இவ்வளவு டீடைல் எழுதியது வாசிப்போர் பள்ளி நடைமுறைகள் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
கரும்பலகை – எஸ்.அர்ஷியா
சமீப நாட்களாக முழு நீளமாக ஒரு நூலை ஒரே சிட்டிங்கில் வாசிப்பது என்பது சற்று சிரமமான காரியமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
மாட்டுவண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா…. ”ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலி சல சல சல வென சாலையிலே செல் செல் செல் எங்கள் காளைகளே ...
No comments:
Post a Comment