Friday, March 13, 2026

மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை!!

ஒரு நாள் பள்ளிக்குச் சென்றவுடன் ஒரு பிரச்சனை காத்துக் கொண்டிருந்தது. ஒரு அம்மா வந்து ஆறாம் வகுப்பு குழந்தைகளை மிரட்டிச் சென்றுள்ளார். என் பையன் கிட்ட வச்சுக்கிட்டீங்கன்னா ஸ்கூலயே இழுத்து மூடி விடுவேன் என்றெல்லாம் பேசி இருக்கிறார். என்னிடம் புகார் வந்தபோது வகுப்பு ஆசிரியரை அழைத்து அந்த அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரச் சொல்லி கூறினேன். நேரில் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளியில் படித்த ஒரு மாணவியின் அம்மா. அதிர்ந்து பேசாதவர் பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியருக்கும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கும் ஒரு பெற்றோர் அவர். அவருக்குள் ஏன் இவ்வளவு ஆவேசம்?! அவரது குழந்தை ஒரு அறிவுச் சவால் உடையவர். பள்ளிகளில் பெரும்பான்மையானவர்கள் அந்த குழந்தைகளை மிகுந்த அரவணைப்போடும் நட்புறவோடும் அனுகுவார்கள். மேலும் அவருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு இருப்பார்கள். ஒரு முறை காலை கூடுகையின்போது ஒரு மாணவன் ஒரு சிறிய பழமொழியை அழகாக சொல்லியவுடன் வழக்கத்துக்கு மாறாக கரகோஷம் எழுந்தது ஏன் இவனை மட்டும் இந்த பிள்ளைகள் கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள் என்று பார்த்தால் அவன் அறிவிச்சவால் உடையவன். கலைத் திருவிழாவின் போது ஒரு விநாயகர் பொம்மையை செய்து விட்டான் என்று அவனையும் அந்த பொம்மையையும் தூக்கிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்து பாராட்டு வாங்கி கொடுத்தார்கள். இதுதான் பள்ளி குழந்தைகளின் மனநிலை. சமயத்தில் யாராவது ஒரு சிலர் குறும்பு செய்து விடுகிறார்கள். பள்ளிக்கு சற்று பயத்துடன் பதட்டத்துடன் குழந்தையை அனுப்பும் பெற்றோர் இது மாதிரியான கசப்பான சூழல்களை கொந்தளித்து விடுகிறார்கள். ஏற்கனவே விளையாட்டுகளில் எல்லாம் தனது குழந்தையை சேர்த்துக் கொள்வதில்லை என்கிற கவலை இருந்தாலும் சேர்த்துக் கொண்ட பிறகு ஏதாவது சிறிய புறக்கணிப்போ அல்லது பிரச்சனையோ என்றால் பதறித் துடித்து விடுகிறார்கள். அவர்களது இந்த பின் தொடர்தலும் பதட்டமும் அந்த குழந்தைக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. பள்ளிக்கு வந்த அந்த அம்மாவிடம் மற்ற மாணவர்களுடன் அவன் சகஜமாக பழக வேண்டும் என்றால் அவன் பொது இடங்களில் மாணவர்களுடன் பழகும்போதும் பள்ளியில் அவன் மாணவர்களுடன் இருக்கும்போதும் ஏற்படுகின்ற சிறு சிறு சச்சரவுகளை கண்டும் காணாமல் இருந்து விடுங்கள். எதாவது பெரிய விஷயம் என்றால் மட்டும் எங்கள் மூலமாக அதனை தீர்த்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து அவனை பின்தொடர்வது உங்களுக்கு பெரிய மன உளைச்சலை தரும் அவன் இயல்பாக தன்னுடைய ஆளுமையை வளர்த்துக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். எனவே அவன் வளர்கிற வரைக்கும் நீங்கள் மனோதிடத்தையும் தைரியத்தையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பினேன். இந்த குழந்தைகளை பள்ளிகளுக்கு தொடர்ந்து அனுப்பும் போது அவர்களது ஆளுமையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. இதனை பல உதாரணங்கள் மூலமாக என்னால் கூற முடியும். சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வெளியே சென்ற மாணவன் ஒருவன் மிக அழகாக எலக்ட்ரிக்கல் வேலைகளை பழகிக் கொண்டிருக்கிறான். தங்கள் பிள்ளைகளது இந்த வகை குறைபாட்டை பெற்றோர் ஒப்புக் கொள்வது இல்லை. இன்னும் கொஞ்சம் நாள் ஆனால் சரியாகும் என்று திடமாக நம்புகிறார்கள். எங்களுக்கு ஒரு பெற்றோர் தொடர் வற்புறுத்தலுக்கு பின் பத்தாம் வகுப்பில்தான் அவனுக்கான மருத்துவ சோதனையை முடித்து சான்றிதழை பெற்றுக்கொண்டார். உள்ளடங்கிய கல்வி என்கிற பெயரில் மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளில் சேர்ப்பதில் அரசு முனைப்பு காட்டுகிறது. பார்வைச்சவால் அங்கச் சவால் உடைய மாணவர்களை சேர்ப்பதால் இந்த பிரச்சனை ஏற்படப்போவதில்லை. ஆனால் கற்றலில் சவால் உடைய மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க ஊக்கப்படுத்தும் அரசு அவர்களுக்கு என்று ஒரு பிரத்தியேகமான மதிப்பீட்டு முறையை செயல்படுத்த இன்னும் முனைப்பு காட்டாமல் இருப்பது வியப்புக்குரியதாக உள்ளது. தற்போதைய நிலையில் அவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் என்கிற ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அந்த குழந்தைகளால் எதுவும் சொல்ல இயலாது என்பது அனைவரும் அறிந்தது தான். அவ்வாறு எழுதும் ஆசிரியர்களே அந்த மாணவர்களுக்கு தேர்ச்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் எழுதி தேர்ச்சி பெறச் செய்து விடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்து உண்மை. ஆனால் இது சரியான நடைமுறையாக இருக்காது. அவர்களுக்கு என்று தனியாக ஒரு தேர்வு முறையை ஆறாம் வகுப்பில் இருந்து உருவாக்கி செயல்படுத்தி வருவது தான் ஆரோக்கியமான நடைமுறையாக இருக்கும். தற்போதைய நிலையில் பல பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காடு குறைந்து போகும் என்று பயந்து அந்த மாணவர்களை ஒன்பதாம் வகுப்போடு டிசி வாங்கிக் கொள்ளச் சொல்லி பெற்றோரை வற்புறுத்தும் ஒரு சூழல் உள்ளது. அந்த பெற்றோரின் தர்மச்சங்கடமான மனநிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்னிடம் எட்டாம் வகுப்பிலே சில பெற்றோர் கூறியது ஞாபகம் இன்னும் உள்ளது "சார் அவன ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் வச்சிக்கோங்க சார் அப்புறம் நான் டிசி வாங்கிக்கிறேன்" என்று கூறினார்கள் நான் அவனை பத்தாம் வகுப்பு வரைக்கும் வைத்து ஸ்கிரைப் மூலமாக தேர்வில் தேர்ச்சி பெற வைத்து அனுப்பினேன். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சொல்வதே எனதுவர்களை நியமனம் செய்துவிட்டு பிறகு அந்த குழந்தைகள் சொல்வதைத்தான் நீங்கள் எழுத வேண்டும் என்கிற வகையில் எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு அதிகம் நெருக்கடி தரப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டில் தேர்ச்சி விழுக்காட்டுக்கு பயந்து பல கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை கைவிடும் சூழ்நிலை ஏற்படும். எறவே அவர்களுக்கு பிரத்தியேகமான ஒரு மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டியது அரசின் கடமை.

No comments:

Post a Comment

Adolescence" webseries in Netflix

*Adolescence" webseries in Netflix விடியற்காலை நேரத்தில் கதவை மூர்க்கமாக உடைத்துக் கொண்டு ஒரு போலீஸ் படை வீட்டின் உள்ளே நுழைகிறது அத...