Saturday, March 28, 2026

Adolescence" webseries in Netflix

*Adolescence" webseries in Netflix
விடியற்காலை நேரத்தில் கதவை மூர்க்கமாக உடைத்துக் கொண்டு ஒரு போலீஸ் படை வீட்டின் உள்ளே நுழைகிறது அது குடும்பத் தலைவனை கைது செய்யவில்லை குடும்பத் தலைவியை கைது செய்யவில்லை அக்காவை கைது செய்யவில்லை மாறாக 13 வயது நிரம்பிய ஒரு பாலகனை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் செல்கிறது!! முதல் பாகம் முழுவதும் 18 வயதுக்கு உள்ளான சிறுவனை கைது செய்தால் மேற்கொள்ளப்படும் சட்ட நடைமுறைகள் வக்கீல் உதவிகள் பெற்றோரை அருகில் வைத்துக் கொள்வது விசாரணைக்கு தயாராவது என்று செல்கிறது. அந்தப் பையனும் கோழிக்குஞ்சு போல "நான் எதுவுமே செய்யவில்லை அப்பா" என்று பொங்கி பொங்கி அழுகிறான் ஆனால் விசாரணை தொடங்கப்படும் போது அவன் எந்தெந்த வினாக்களுக்கு எல்லாம் பதிலளிக்க அளிக்க மறுக்கிறான் என்பதை வைத்து அவன் குற்றத்தோடு தொடர்புடையவனாக இருக்க வாய்ப்புள்ளது என்று நாம் அனுமானிக்க முடிகிறது. இறுதியில் போலீஸ் சிசிடிவி கேமரா காட்சிகள் வாயிலாக அவன் ஒரு சிறுமியை பலமுறை க*த்*தியால் கு*த்*தி கொலை செய்த காட்சியை காண்பித்து அவனை லாக் செய்வதோடு முதல் பாகம் முடிகிறது. இரண்டாம் பாகத்தில் பள்ளி வளாகத்தில் விசாரணைக்கு செல்லும் காவல் அதிகாரிகள் அங்கே எந்த மாதிரி சூழலை எதிர்கொள்கிறார்கள் வளரிளம் பருவ மாணவர்கள் பள்ளியில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், ஒரு பெரிய பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை எல்லாம் மிக தெளிவாக காண்பித்து பதற்றத்தை நமக்கு பற்றவைக்கிறார்கள். மேலும் அந்த பருவத்து குழந்தைகளின் உலகம் முழுவதும் வேறு உலகமாக இருப்பதை காவல் அதிகாரியின் மகன் அவருக்கு புலப்படுத்துகிறான் அதன்பிறகு தான் விசாரணை சரியான பாதைக்கு திரும்புகிறது. இந்த வெப் சீரிஸின் மிக முக்கியமான பகுதி மூன்றாவது பகுதி தான் அநேகமாக அனைவரும் இந்த பகுதியை சிலாகித்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இந்த பகுதியில் மொத்தமே இரண்டு பேர் ஒரே ஒரு அறை இவ்வளவுதான். உளவியல் ரீதியாக அவனை விசாரிக்கும் ஒரு அதிகாரிக்கும் அவனுக்கும் இடையே நடைபெறும் ஒரு ஆடு புலி ஆட்டம் தான் இந்த மூன்றாம் பாகம். நான்காம் பாகம் முழுவதும் அந்த பையன் சிறைக்குச் சென்று ஓராண்டு காலம் ஆன பிறகு அந்த பெற்றோர் எதிர்கொள்ளும் உளச் சிக்கல்களை பேசுகிறது. மொத்தத்தில் இந்த வெப் சீரிஸ் வளரிளம் பருவ‌ குழந்தைகளின் உலகத்தில் நடைபெறும் குற்ற செயல்கள் சார்ந்து சிறு வெளிச்சத்தை வீசிவிட்டு சென்றுவிடுகிறது. மற்றபடி விலாவாரியாக எல்லாம் கதை சொல்லவில்லை. இந்த சீரீஸ் முழுவதுமே சிங்கிள் ஷாட் நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆதலால் கதை மாந்தர் பின்னாலேயே சென்று அனைத்தையும் நாம் பதட்டத்தோடு காணுவது போல உள்ளது. உலகத்திலேயே மிகவும் சிக்கலான விஷயம் வளரிளம் பருவ குழந்தைகளை கையாளுவது தான் . அந்த வகையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள ஆசிரியர்களுக்கும் சரி பெற்றோருக்கும் சரி இந்த காலகட்டம் மிகுந்த சிக்கலான காலகட்டம். இந்த பருவத்தில்தான் குழந்தைகள் தங்களுக்கான சுய அடையாளங்களை தேடுவார்கள் சமூகத்தில் தான் எப்படிப்பட்ட ஆளுமையாக வெளிப்பட வேண்டும் என்கிற ஒரு உந்துதல் இருக்கும் ஆனால் அது பற்றிய ஆழமான புரிதல் இருக்காது!! இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் ஒரு மாணவனை வேறு சில மாணவர்கள் சேர்ந்து அடித்து கொடூரமாக ko*லை செய்து விட்டனர். இதற்குப் பின்னால் ஏதோ சோசியல் மீடியா போஸ்ட் இருக்கிறது என்று வாசித்தது நினைவில் இருக்கிறது. தாக்குதல் சம்பவம் பற்றிய திட்டமிடல் மற்றும் இதற்கான தங்களுக்குள்ளாக பேசிப்பேசி உசுப்பேற்றிக் கொள்ளும் நிகழ்வுகள் வாட்ஸப் குழுவிலே நடைபெற்றுள்ளது!! தற்போது பெரிய அளவில் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சனைகள் யாவுமே எதிர் பாலின ஈர்ப்பு தொடர்பானவை தான். மாணவர்களின் சோசியல் மீடியா போஸ்ட்களை பெற்றோர் நிச்சயமாக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது. வளரிளம் பருவ குழந்தைகளின் ஓய்வு நேரங்களை சரியான விஷயங்களால் சமூகமுமோ குடும்பமுமோ, பள்ளியோ நிரப்ப வில்லை என்றால் தவறான விஷயங்கள் தாமாக வந்து அமர்ந்து கொள்கின்றன என்பதுதான் உண்மை. Yes, Idle mind is devil's workshop!! If you are idle be not solitary, if you are solitary be not idle!! பள்ளியில் நாம் கூறும் விஷயங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட தெரு முனைகளில் நிற்கும் அவர்கள் பருவத்துக்குரிய நண்பர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதோடு ஜாதிய வன்மும் கலந்து ஊட்டப்படும் போது அபாயகரமானவர்களாக மாறுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பதின்பருவ மாணவர்களில் சிலரின் எதிர்பாலின ஈர்ப்பு, சாதிய மனப்பான்மை மற்றும் போதை கலாச்சாரம் போன்றவை தான் பள்ளிகளில் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த விஷயங்கள் தெளிவாக ஆராயப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.

1 comment:

  1. Super conclusion Sir. But it's very dificult task.
    All are human beings because Human behaviour is psychological in nsture

    ReplyDelete

Black(2005) இந்திப் படம்

Black - Hindi movie 2005 release Ott - Netflix நான் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய காலகட்டத்தில் கணித பாடம் மற்றும் ஆங்கில பாடம் இரண்டையும...