Thursday, March 26, 2026
கசடற குழந்தைகள் – ஒழுக்கங்கள் – கற்பிதங்கள் நூலாசிரியர் – இனியன்
இனியன் அவர்களின் எழுத்தில் நான் வாசிக்கும் இரண்டாவது நூல் இது.
தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகள் என குழந்தைகளை தேடித் தேடி சென்று விளையாட்டுகள் மூலமாக ஒருங்கிணைத்து வாசிப்பை பழக்குவது என பல்லாங்குழி அமைப்பின் மூலம் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இனியன் தனது கள அனுபவங்களை நூல்களாக வெளியிட்டாலே ஆயிரக்கணக்கான பக்கங்களைத் தாண்டும்.
இந்த நூலில் சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் தொட்டுச் சென்றுள்ளார்.
குழந்தைகளோடு பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் இந்த நூலை வாசித்தால் குழந்தைகளின் பன்முகப் பின்னணி குறித்த ஒரு தெளிவான புரிதலைப் பெற முடியும்.
இந்த நூலுக்கு பழங்குடியின குழந்தைகள் நல செயல்பாட்டாளர் ஒடியன் லட்சுமணன் அவர்கள் ஒரு அணிந்துரை எழுதியுள்ளார்.
அடுத்ததாக குழந்தைகள் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பியும் குழந்தைகள் பக்கம் எவ்வாறு நிற்க வேண்டும் என்று வாழும் உதாரணமாகவும் இருக்கும் ஜவ்வாதுமலை ஆசிரியர் மகாலெட்சுமி அவர்கள் குழந்தைகளின் குரல்களுக்கு செவி கொடுப்போம் என்கிற தலைப்பில் எழுதியுள்ளார்.
போனஸ் ரீடிங் என்பது போல நூலில் நூலை ஒட்டி வளவன் பெரியார்தாசன் அவர்களின் கட்டுரை அமைந்துள்ளது.
குழந்தைகளுக்கான சர்வதேச அமைப்புகள் தொடங்கி நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் வாயிலாக பாதுகாக்கப்படும் குழந்தைகள் உரிமைகள் என பல நுட்பமான விஷயங்களை நூலின் வழி நின்று தொட்டுச் சென்றுள்ளார். நமது அறிவை விசாலமாக்கும் செறிவான கட்டுரை இது.
முதல் கட்டுரையே முகத்தில் அறைவது போல முற்றிலும் புதிய சூழலை அறிமுகம் செய்கிறது. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் பெற்றோர் சிறை செல்லும் சூழலில் அவர்களது குழந்தைகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? அவர்களது தந்தை சிறை சென்ற கதையை கேட்க ஆர்வமாக இருப்போம். ஆனால் அது குழந்தைகள் மனதை எப்படி பாதிக்கும் என்பதை மறந்துவிடுவோம்.
ஒரு தனிநபர் குற்றம் செய்து சிறை சென்றுவிடுவார். ஆனால் குடும்பம் மொத்தத்திற்கும் வெளியே தண்டனை தொடங்கிவிடும். முக்கியமாக அவர்தம் குழந்தைகளை நாம் பொறுப்பற்ற முறையில் நடத்தும் விதம் மாறாத வடுவாகிப் போகும். அவர்களது ஆளுமையை நீண்ட கால அளவில் சிதைத்து போட்டு விடும்.
அடுத்த அத்தியாயத்தில் HIV தொற்றினால் பாதிக்கப் பட்ட பெற்றோரின் குழந்தைகள் பற்றியது. இந்த வகை குழந்தை ஒருவன் என்னிடமே பயின்றுள்ளான். என்னதான் மருத்துவ விழிப்புணர்வு இருந்தாலும் பால்வினை நோய்களால் பாதிப்படைந்த குடும்பத்தினரை ஒரு ஒவ்வாமையுடன் தான் அனுகுகிறோம். இந்த கட்டுரையின் இறுதியில் பாலியல் சார்ந்த அறிவும் பாலின சமத்துவ தேவையும் குழந்தைகளுக்கு கற்பிக்கப் பட வேண்டும் என்கிறார்.
“எனது பத்து வயது வரை எனது பெயர் “ஷட் அப்“ என்று நினைத்து இருந்தேன்“ என்று நையாண்டியாக கூறுவார் சார்லி சாப்ளின்.
அது போல குழந்தைகளிடம் ஒழுக்கம் என்றால் அமைதியாக இருப்பது, கேள்வி கேட்காமல் இருப்பது, சேட்டை பண்ணாமல் இருப்பது என்பது போன்று ஆளாளுக்கு ஒரு கற்பிதம் வைத்து இருப்பார்கள் இந்த அத்தியாயத்தில் குழந்தைகளிடம் ஒழுக்கத்தை கறார்த்தனமாக கடைபிடிக்க கூறும் பெற்றோர் தான் அனைத்து ஒழுக்க கேடுகளையும் கற்றுத் தருகிறார்கள் என்பதை நுணுக்கமாக ஆதாரத்துடன் விளக்குகிறார். குழந்தைகளிடம் நாம் எதிர்பார்க்கும் ஒழுங்கை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும்.
அடுத்ததாக “நோ“ சொல்வது. பெரியவர்களுக்கே நோ சொல்வது சற்று சங்கடமான சவால். ஆகவே குழந்தைகளை நோ சொல்ல பழக்குவது குறித்த ஒரு உளவியல் ரீதியான அனுகுமுறையை சொல்கிறது இந்த கட்டுரை.
Gen Z and Gen Alpha தலைமுறை என்பது தற்போது பரவலாக புழக்கத்தில் உள்ள சொல்லாடல். முன்னது ஈராயிரக் குழவிகள் என்று 2000 க்கு பிறகு பிறந்தவர்களையும் பின்னது 2010 க்கு பிறகு பிறந்தவர்களையும் குறிக்கிறதாம்.
பழைய தலைமுறையினர்களுக்கு கலாச்சார பேரதிர்ச்சியை தந்து கொண்டு இருக்கும் கூட்டம் இது. அவர்களின் செயல்பாடுகளை குடும்பக் கட்டமைப்பு, சமூகக்காரணிகள், தொழில்நுட்பக் காரணிகள் மற்றும் அரசியல் காரணிகள் என்று பகுப்பாய்வு செய்கிறது இந்த கட்டுரை.
திருநர் சில பாடங்களும் சில புரிதல்களும் என்கிற தலைப்பு கல்வி தளத்தில் குழந்தைகளோடு இருப்பவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய தலைப்பு. இது சார்ந்த விஷயங்களை குழந்தைகளிடம் உரையாட பெரிய மனத்தடை பெரும்பாலான ஆசிரியர்கள் மத்தியில் இருப்பது உண்டு. திருநர் சார்ந்த புரிதல்கள் தற்போது சமூகத்தில் ஓரளவு இருக்கிறது. அது இன்னும் சிறப்பாக குழந்தைகளிடத்தில் கற்பிக்கப் படவேண்டும்.
மத அடிப்படைவாத திணிப்பு பள்ளிகளில் நிகழ்வது குறித்தும் சிறப்பாக ஒரு அத்தியாயம் விளக்குகிறது. அரசுப்பள்ளிகள் மட்டும் இருந்த காலம் போய் தனியார் பள்ளிகள் பெருகிய பிறகு இது எவ்வாறு நுணுக்கமாக நிகழ்த்தப் படுகிறது என்பதை விவரிக்கும் கட்டுரை இது.
இளையோரை பாதை மாற்றும் அணிதிரட்டும் சாதிய டி-சர்ட் கலாச்சாரம் மற்றும் மொபைல் கேம் அடிக்ஷன் பற்றியும் சிறப்பான கட்டுரை ஒன்று உண்டு.
தம்பி இனியன் அவர்கள் பல பின்தங்கிய நிலப்பகுதிக்கு சென்று குழந்தைகளை சந்தித்து அவர்களோடு தொடர்ந்து பழகி அவர்களை நூல்களை வாசிக்கச் செய்து மேடையேற்றி அவர்தம் ஆளுமையை அவர்களையே உணரச் செய்யும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம் நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்தி வருகிறார். அதில் ஒரு சாம்பிளாக குன்னத்தூர் கலை இலக்கிய நிகழ்வை இந்த நூலில் ஒரு கட்ரையாக இணைத்துள்ளார்.
இறுதியாக ஒன்று புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை நூலுக்கான மதிப்புரையும் இந்த நூலிலேயே உள்ளது.
இன்னும் பல தலைப்புகளில் குழந்தைகள் பற்றிய கட்டுரைகளை தம்பி இனியன் அவர்களின் அனுபவங்களின் வழி நின்று தரவேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக வைக்கிறேன்.
ஆசிரியர்கள் வாசிக்கவும் அவர்களுக்குள் பரிசளிக்கவும் ஏற்ற நூல்.
Subscribe to:
Post Comments (Atom)
கசடற குழந்தைகள் – ஒழுக்கங்கள் – கற்பிதங்கள் நூலாசிரியர் – இனியன்
இனியன் அவர்களின் எழுத்தில் நான் வாசிக்கும் இரண்டாவது நூல் இது. தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகள் என குழந்தைகளை தேடித் தேடி சென்று விளையா...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
மாட்டுவண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா…. ”ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலி சல சல சல வென சாலையிலே செல் செல் செல் எங்கள் காளைகளே ...
No comments:
Post a Comment