Monday, January 20, 2020

என் சிவப்பு பால் பாய்ண்ட் பேனா


என் சிவப்பு பால் பாய்ண்ட் பேனா
ச.மாடசாமி
பாரதி புத்தகாலயம்
இது 80 பக்கங்கள் மட்டுமே கொண்ட சின்னஞ்சிறு புத்தகம். ”கடலும் கிழவனும்” கூட சின்னஞ்சிறு புத்தகம் தானே?! ஆனால் நோபல் பரிசினை பெறவில்லையா?
பாலின சமத்துவம் குறித்த பார்வையை விசாலப் படுத்த வேண்டுமானால் நாம் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” ஆகும். அது போல ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் மாணவர்கள்-வகுப்பறை-கற்றல் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் எனில் இந்த நூலை கட்டாயமாக படிக்க வேண்டும்.
அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் தலைமைப் பண்பு பயிற்சிக்கு சென்றிருந்த போது இறையன்பு அவர்கள் இந்த நூல் குறித்தும் ஆசிரியர் குறித்தும் சிலாகித்து கூறினார். அப்போதே இந்த நூலை எனது பட்டியலில் இணைத்துக் கொண்டேன்.
நூலாசிரியர் ச.மாடசாமி அவர்கள் அறிவொளி இயக்க மாநில திட்ட அலுவலராக பணியாற்றிய கல்லூரி ஆசிரியர். அன்னாரது கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். புத்தகமாக இதுதான் முதலாவது.
புத்தகத்தை கையில் எடுத்த போது எப்படியும் ஒரு 40 நிமிடத்தில் முடித்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால் படிக்கும் போது எனது மனதில் தோன்றிய வாதப் பிரதி வாதங்கள் சில இடங்களில் என்னை பொருத்திப் பார்த்தது என்று மிக மெதுவாகத்தான் புரட்ட முடிந்தது. அரியலூர் டு திருச்சி பேருந்து பயண நேரமான 2.00 மணி நேரம் முழுமையையும் எடுத்துக் கொண்டது. அந்த நூல் எனது மனதில் ஏற்படுத்திய தாக்கமோ இரண்டு நாட்களாக நின்று பேசியபடி உள்ளது.
ஆசிரியர்களை “பயந்த சர்வாதிகாரி“ என்று கூறுவார்கள் என்றே தனது முதலாவது கட்டுரையான சிவப்பு பால்பாய்ண்ட் பேனாவை திறக்கிறார். பயந்த சுபாவமுள்ள சாந்த சொரூபியாக இருக்கும் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சர்வாதிகாரியாக வலம் வருகிறார்கள். எவ்வளவு நிஜம்.
சிவப்பு பேனாவின் சக்தி குறித்து அருமையாக பேசும் முதல் கட்டுரை. சிவப்பு பேனாவினால் நாம் போடும் Good என்பது எவ்வளவு வலிமையானது என்பதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன். 35 மதிப்பெண் எடுக்கும் மெல்லக் கற்கும் மாணவனுக்கும் 90 க்கு மேல் எடுக்கும் மீத்திறன் மாணவர்களுக்கும் சேர்த்தே தான் Good போடுவேன். நிறைய Encouraging குறிப்புகள் எழுதியுள்ளேன். சற்று நிமிர்ந்து நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக அமர்ந்தேன்.
மாணவர்கள் வகுப்பறையில் அவமதிக்கப் படுவது. தேர்வுகளும் மதிப்பெண்களும் ஏற்படுத்தி வைத்திருக்கும் பாகுபாடு. அதனால் ஏற்படும் அவமதிப்பு நெருக்கடி என்று மாணவர் பக்கம் இருந்து அவர்தம் உளவியலை ஆழமாக அலசி உள்ளார்.
சுதந்திரமற்ற இறுகிய வகுப்பறைகள் மற்றும் stereo type தகவல் விநியோகம் என்று கற்றல் அனுபவங்கள் சுரத்தில்லாமல் ருசியற்று இருப்பது குறித்து கவலை கொள்கிறார்.
“கற்பித்தலில் நாம் உருவாக்கிக் கொள்ளும் கெட்டிபட்ட நம்பிக்கைகள் நெகிழ்ச்சியற்ற, இறுக்கமான ஆசிரியராக நம்மை மாற்றிவிடும்“ –கமலா வி.முகுந்தா வின் மேற்கோள் நூலில் காணக்கிடைத்தது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
“பொய், அத்துமீறல் மற்றும் அவமதிப்பு” இவையாவுமே எந்த ஒரு ஆசிரியரையும் சீறி எழச்செய்யும் விஷயங்கள். அலுவல் ரீதியாக நாமே நிறைய பொய் சொல்லப் பழகி இருக்கும் போது மாணவர்களின் பொய்களை ரசிக்கப் பழகுங்கள். சிறிதளவு அத்துமீறலுக்கும் அவமதிப்புக்கும் இடம் கொடுத்துப்பாருங்களேன் என்கிறார். இந்த வார்த்தைகள் ஆசிரியர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். கட்டுரையை முழுமையாக வாசித்தால் சரியாக புரிந்து கொள்ளலாம்.
கற்றல் கற்பித்தல் சூழல் சுதந்திரமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும். தேர்வு, படிப்பு மூலமாக கிடைக்கும் வாய்ப்புகள் போன்ற பெரிய விஷயங்களை சின்னஞசிறு மூளைக்குள் ஏற்றி மகிழ்ச்சியோடு நிகழ வேண்டிய கற்றலை தூக்க இயலா பெரும் சுமையென மாற்றி வைத்து விட்டிருக்கிறோம். நமது தலைமுறை அனுபவித்த மகிழ்ச்சியான கற்றல் அனுபவங்களை நமது பிள்ளைகளுக்கு கசப்பானதாக மாற்றி வைத்திருக்கிறோம்.
ஆசிரியர்களே விரைப்பாக இருக்கும் “ஷோல்டரை இறக்குங்கள்” இயல்பாக இருங்கள். வகுப்பறை இறுக்கத்தையும் குறையுங்கள். கற்றல் அனுபவங்களை மகிழ்ச்சியானதாக ஆக்குங்கள். என்பது தான் நூலின் செய்தி.

அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல


புத்தகம் : அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல
ஆசிரியர் : ச.மாடசாமி

பாரதி புத்தகாலயம்
ச.மாடசாமி அவர்கள் பல்வேறு இதழ்களில் எழுதிய தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு தான் அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல என்ற இந்த புத்தகம்.
இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் வெகுசீக்கிரம் கவனம் பெறுவதும் பரப்ப படுவதும் வெறுப்பு சார்ந்த நிகழ்வுகள் தான். இனம், மதம், வட்டாரம், நாடு போன்ற பல்வேறு வரையறைகளுக்குள் வருவோர் எல்லாம் ஒன்றாய் கூடி மற்றவருக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது, கும்பலாகத் தாக்குவது என்று வெறுப்பு அழிக்க இயலா விருட்சமென வளர்ந்து வருகிறது.
     இதில் பல்வேறு விசித்திரமான கூடல் மற்றும் பிரிதல் எல்லாம் நடந்தேறும். உதாரணமாக இந்துக்களாக ஒன்று கூடி ஒரு விஷயத்தை எதிர்த்து முடித்து உறங்கி கண் விழித்தால் சாதி சார்ந்த டிரெண்டிங் போய்க்கொண்டு இருக்கும். உடனே பழைய இணைப்பை உதறித் தள்ளி விட்டு சாதிகளாக பிரிந்து அடித்துக் கொள்ளவேண்டியுள்ளது. அதுவே ”ஏ பாகிஸ்தான் ஹே ஹமாரா எதிரி ஹே“ என எதையாவது திசைதிருப்ப தூண்டிவிடப் படும் போதெல்லாம் திரும்பவும் ஒன்றாக கூடி புதிய எதிரிக்கு எதிராக பொங்கல் வைக்க வேண்டும்.
     இப்படியாக சோஷியல் மீடியாக்கள் புண்ணியத்திலும் நான்காம் தூண் ஆதரவிலும் சமூகத்தில் வெறுப்பு நாள்தோறும் வளர்ந்து வருவதைக் காண்கிறோம்.
     அணுகுண்டுக்கு எதிராக காகித கொக்கு செய்த ஜப்பான் சிறுமியைப் போல நாம் வெறுப்பை வேரறுக்க அன்பைத் தான் முன்னிருத்த வேண்டும். நிபந்தனையற்ற அன்பு, எல்லைகள் பாரா அன்பு.
     இந்த அன்பெனும் விதையை எங்கே விதைப்பது?
     வேறெங்கே பள்ளிகளில் தான்?
     கள்ளம் கபடம் இல்லா பிஞ்சு மனங்களில் அன்பினை விதைத்து பாருங்கள். அது நிச்சயம் வெறுப்பெனும் விருட்சத்தை வேரறுக்கும்.
          உள்நோக்கம் கொண்ட தந்திரமான அன்பு, சமூக வலைதளங்களில் தம்மை நல்லவனாக நிலைநிறுத்திக் கொள்ள கையாளும் போலி அன்பு இவற்றையெல்லாம் நுணுக்கமாக பேசியிருக்கிறார். “The Cat came Back” என்கிற பழங்கால வாய்வழிப் பாடலின் கதை வழியே கள்ளமில்லா அன்பு ஒன்றே வலிமையானது என கூறுகிறார்.
     அப்பாவியா? முட்டாளா? என்ற அத்தியாயத்தில் தங்கப்பன் கழுதை வாங்கிய கதை வழியாக அப்பாவித்தனமானது முட்டாள் தனமாக போதிக்கப் படுவதன் அவலத்தை கூறுகிறார்.
     “பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தார்” என்ற தகவலை பரிமாறிவிட்டு மாணவர்கள் மத்தியில் “பாரதியார் எங்கு பிறந்தார்?“ “எட்டயபுரத்தில் பிறந்தவர் யார்?“ என்றெல்லாம் கேட்பது வழக்கமான வகுப்பறை. வழக்கமான ஆசிரியர். மாறாக மாணவன் தகவல்களை திரட்டி வந்து ஆசிரியர் முன்னிலையில் மாணவர்கள் விவாதிப்பதன் மூலமாக ஏராளமாக கற்க இயலும் என்ற கருத்தை “தலைகீழ் வகுப்பறை”(FLIPPED CLASSROOM) என்ற கட்டுரையில் கூறுகிறார்.
     வரலாறு திரிக்கப்பட்டு பரப்ப படுவதால் சமூகத்தில் எத்தகைய பெரும் கேடு ஏற்படுகிறது என்பதை சிவாஜி குறித்த கட்டுரையில் கூறுகிறார்.
     மேலும் புதியக் கல்விக் கொள்கை, எழுத்தாளர் சுஜாதாவின் தந்திர மொழி போன்ற பல விஷயங்களைப் பேசும் கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல்.


Wednesday, January 15, 2020

பொங்கல் விழா @ சுத்தமல்லி 1.0


பொங்கல் வாழ்த்து அட்டைகள் பார்த்திருக்கிறீர்களா. ஒரு பக்கம் நடிகர் நடிகையின் அழகான வண்ணப் படங்கள் மற்றொரு பக்கம் தபால் அட்டை போன்ற வடிவமைப்பு. அப்போது நேரில் பார்த்துக் கொள்ளும் நண்பர்களுக்கு கூட தபாலில் அந்த வாழ்த்து அட்டை அனுப்பித் தான் வாழ்த்து சொல்லுவோம். சுத்தமல்லியில் அதிகம் விற்பனையான வாழ்த்து அட்டை ராமராஜன் படம் போட்டதாகத்தான் இருக்கும். பூக்கள் படமோ இயற்கை காட்சி ஓவியமோ அனுப்புவோர்கள் சற்றே வயது முதிர்ச்சி உள்ளவர்கள் என்று அர்த்தம். ஒருவருக்கு நாம் மொய் செய்த பிறகு அவர் நமக்கு பதில் மொய் செய்யவில்லை என்றால் சில ஊர்களில் பெரிய பிரச்சினையாகிப் போகும் அல்லவா? அது போலத்தான் நாம் வாழ்த்து அட்டை அனுப்பி பதிலுக்கு நண்பன் வாழ்த்து அட்டை அனுப்பவில்லை என்றால் நட்பு மட்டும் உடைவதில்லை அடிதடியில் மண்டையும் கூட உடைந்த வரலாறுகளை எல்லாம் பார்த்து வளர்ந்த “புள்ளிங்கோ“ நாங்க.
புதிய சொந்தக் காரர்களில் சாதுவாக யாரேனும் தெரிந்தால் ,"அண்ணே உங்க அட்ரஸ் குடுங்க பொங்கல் வாழ்த்து அனுப்புறேன் நீங்களும் எனக்கு அனுப்பனும்" என்று பீதியை கிளப்புவோம். எங்கே அட்ரஸ் சரியா தெரியாம பதிலுக்கு அனுப்பாமல் போய்விடுவார்களோ என்று ஐம்பது வரிகளில் அட்ரஸ் எழுதிய காலம் அது.
இப்போ வாட்சாப்ல் மெசேஜ் பிரத்தியேகமாக டைப் பண்ணகூட மலைச்சிக்கிட்டு ஃபார்வேர்ட் பண்ணிகிட்டு இருக்கும. நாம வாழ்த்து மெஸேஜ் அனுப்பி பதிலுக்கு அனுப்பாதவங்க மேல வருகிற கோபம் மட்டுமே இன்றுவரை மாறாத விஷயம்.
சூரியப் பொங்கல் எல்லாம் சில வீடுகளில் தான் கொண்டாடப்படும். அன்றையப் பொழுதில் நாங்கள் அடுத்த நாள் மாடுகளுக்கு மாலை அலங்காரம் செய்வதற்காக ஆவாரம் பூ பறிக்க முந்திரி காட்டுக்குச் செல்வோம்.
பிறகான பகல் பொழுதில் செங்கரும்பை நமது உயரத்தில் பாதி அளவுக்கு வெட்டி பற்களால் தோலினை சீவி அதனுள்ளே உள்ள தண்டினை கடித்து உறிஞ்சினால் ஆகா தேவாமிர்தம். அந்த தருணத்தில் கரும்பை பிடித்திருக்கும் உள்ளங்கையில் ஆரம்பித்து முழங்கை வழியாக தேனமுது வழிந்து ஓடும். இப்போது வரும் கரும்புகளில் அந்த அளவுக்கு சாறு இருப்பதில்லை. உள்ளங்கை கூட ஈரமாவதில்லை.
அப்புறம் வாழைப் பழம், பெரும்பாலான வீடுகளில் வாழைத் தார் ஒன்றை செங்காயாக வாங்கி போகி அன்றே போர்வை போர்த்தி தொங்க விட்டு விடுவார்கள். மாட்டுப் பொங்கல் அன்று போர்வை விலக்கும் போது அழகாக முத்து முத்தாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். படைப்பது என்னவோ ஒரு சீப்போ இரண்டு சீப்போ என்றாலும் எல்லா வீடுகளிலும் ஒரு முழுத் தார் வாங்குவார்கள்.
எங்கள் வீட்டில் நடந்த ஒரு 'ருசி'கரமான அனுபவம். எங்க அப்பா வாழைத்தார் வாங்கி தொங்க விட்டு கோணி சாக்குப் போர்வை கொண்டு போர்த்தி விட்டு இரவானால் சாம்பிராணி புகை போட்டு பழுக்க வைத்துக் கொண்டு இருந்தார். நான் சூரியப் பொங்கல் அன்று ஒரு முக்காலி போட்டு ஏறி அடியில் சாக்கு ஓட்டை வழியாக கையை மேலே கொண்டு போய் அழுத்தி அழுத்தி பார்த்து பழத்திருந்த சீப்பை கண்டு பிடித்து விட்டேன். அப்படியே ஒரு மூன்று பழங்களை பிய்த்து டவுசர் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு சென்று மறைவிடத்தில் நின்று தின்று விட்டு தோலினை நல்லடக்கம் செய்து விட்டேன். ஆசை அடங்காத காரணத்தால் இந்த வேலை எனது கட்டுப் பாட்டில் இன்றி தொடர்ந்து கொண்டே இருந்தது. மாட்டுப் பொங்கல் அன்று காலை அப்பா சாக்கினை பிரித்த போது (அங்கே நானும் நின்று கொண்டிருந்தேன்) அடியில் இரண்டு பலகீனமான சீப்புகள் மட்டும் தொங்கிக் கொண்டு இருந்தன.
”என்னடா இது மொத்தமும் காணோம்?”
“அப்பா நான் பிய்க்கல” – இது நான் (பூனைக்குட்டியை கவனக்குறைவாக வெளியே விட்ட தருணம்) ஒரு அடியோ மிரட்டலோ கூட இல்லை. மௌனமாக சென்று இரண்டு சீப் வாங்கி வந்து விட்டார். ஒரு வேளை பொங்கல் முடிந்து அடிப்பாரோ என்கிற பயத்திலேயே அந்த வருடப் பொங்கல் கழிந்தது.
சற்றேரக்குறைய எண்பது பழங்களை நான் மட்டுமே சாப்பிட்டுருக்க இயலாது. நான் கையை விட்ட அதே சாக்கு ஓட்டையில் அக்காக்கள் கையை விட்டுருக்க வேண்டும் என்பதே எனக்கு இப்போது தான் விளங்குகிறது. இந்த கட்டுரையை படித்த பிறகாவது அந்த 'குற்றத்தை' தாமாக முன்வந்து ஒப்புக் கொள்வார்களா பார்ப்போம்.
மாட்டுப் பொங்கல் அன்று காலையிலேயே மாடுகளை ஏரியில் சென்று குளிப்பாட்டுவார்கள். பின்பு அதன் கொம்புகளில் எண்ணை தடவுவார்கள். அப்புறம் கலர் மாவில் தேங்காய் சிரட்டையை முக்கி அதன் மேல் வட்ட வட்டமாக வண்ணமாக இடுவார்கள். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.
இருள் கவிழ்ந்த உடன் திறந்த வெளியில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து படைப்பார்கள். பொங்கலோ பொங்கல் கோஷத்தில் நிறைய சுலோகங்கள் இருக்கும். அவற்றை எல்லாம் கோரசாக கத்துவது எங்களுக்கு அவ்வளவு ஜாலியான அனுபவம்.
அடுத்தநாள் காணும் பொங்கல். நாங்கள் அதனைக் கரிநாள் என்றுதான் சொல்லுவோம். அன்று தான் அதிக பட்ச கொண்டாட்டம்.
ஜல்லிக்கட்டு- பசு, மாடு,கன்று,எருமை ஏன் ஆட்டுக் குட்டிகளைக் கூட அவிழ்த்து ஓட விடுவார்கள்.
அப்புறம் விளையாட்டு போட்டிகள். சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் யுவதிகளைக் கவர ஆடவர்கள் விழுந்து புண்பட்டெல்லாம் விளையாடுவார்கள்.
நான் "ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே..." என்ற பாடல் பாடி பரிசு பெற்ற வரலாறு  கூட உண்டு. அப்புறம் ரொட்டி கடித்தலில் பரிசு வாங்கி உள்ளேன். ஓட்ட பந்தயத்தில் வெகுபேரை துரத்தியிருக்கிறேன். கரிநாள் முழுக்க குட்டி பசங்களுக்கு குஷியான நாள்தான். மாலையில் பரிசு கைக்கு வந்து சேர்வதற்குள் பாதிபேர் தூங்கி இருப்பாங்க. அன்னைக்கு மைக்க கையில் வச்சி இருக்குறவன் தான் கத்துகிட்ட மொத்த வித்தையவும் எறக்க பண்ற அளப்பறையில் ஒரு வாரத்துக்கு காது கொய்ய்...ங்கும்.
மலிவு விலை எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் யாவும் பொங்கல் விளையாட்டு போட்டியில் பரிசு கொடுக்க கண்டுபிடிக்கப்பட்டவையே.
இவ்வளவு இருந்தும் பாட்டு போட்டியில் ஜெயிச்ச எனக்கு கொடுக்கப்பட்ட பரிசு என்ன தெரியுமா?!!
ஒரு நைலான் கயிறு. இதனால்  லால்குடி ஆஸ்டல்ல எவ்வளவு பெரிய அவமானமா போச்சு என்பதை எனது "லால்குடி டேஸ்" ல் தனிப் பதிவாவே போட்டு குமுறி குமுறி அழுதுருக்கேன்.

சிகரெட் பிடிக்குறவன் காசு இல்லாத நாளில் அரைகுறையாக பிடித்து போட்டவற்றை தேடி எடுத்து புகைப்பது போல தூக்கி வீசப்பட்ட நுனிக் கரும்பை எல்லாம் தேடி எடுத்து கடிக்கும் நிலையும் பொங்கல் முடிந்த மறுவாரம் ஏற்படும்.
என்னதான் புத்தாடை பட்டாசு என ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் பொங்களில் இருக்கும் ஒரு மகிழ்ச்சி மனநிறைவு தீபாவளியில் இல்லை. என்ன இது நம்ம தமிழர் திருநாள்.

Wednesday, October 23, 2019

இதயத்தை முள்கரண்டி கொண்டு கீறும் அராபிய மொழிப் படம்CAPERNAUM

நம்முடைய வாழ்க்கையும் அன்றாட உணவும் இருப்பிடமும் எந்த அளவுக்கு நிச்சயிக்கப் பட்டதாக உள்ளது, நாம் எவ்வளவு தூரம் மேம்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்று உணர நிச்சயமாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். மத்திய கிழக்கு நாடுகள் மதத்தாலும் போராலும் எந்த அளவு நிலைகுலைந்து போய் உள்ளது என்பதை உண்மைக்கு மிக அருகில் நின்று பேசும் படம். இளகிய மனம் கொண்டோர் உங்கள் தூக்கத்தை தொலைக்க கூடும் எச்சரிக்கை.

படத்தின் துவக்கத்தில் Zain என்ற 12 வயதுசிறுவன் கை விலங்கிடப் பட்டு அழைத்து வரப்படுகிறான்.யாரையோ கத்தியால் குத்தியிருக்கிறான். நீதிபதி வழக்கை விசாரிக்கிறார். அவனது ஃப்ளாஷ்பேக்காக கதை விரிகிறது.

பிழைப்புக்கு வழியின்றி கால்வயிற்று கஞ்சிக்காக ஏதேதோ செய்யும் குடும்பம். குடும்பத் தலைவன் படுத்திருக்கிறான் பொழுதுக்கும் சிகரெட் பிடிக்கிறான். அவன் ஆஷ்டிரேயில் இருக்கும் சிகரெட் துண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் அந்த புறாக் கூண்டு வீட்டில் குழந்தைகள் தவழ்கின்றன. கதை முடியவில்லை இன்னொரு குழந்தையும் வரப் போகிறது.
சஹார் என்கிற சகோதரி வயதுக்கு வந்தவுடன் கட்டாய மணம் செய்து அனுப்பி விடுகிறார்கள். Zain கடுமையாக எதிர்த்து இயலாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

எங்கெங்கோ அலைந்து ஒரு தீம் பார்க்கில் தஞ்சம் அடைகிறான். அங்கே ஒரு பெண் illegal immigrant கைக் குழந்தையோடு இருப்பவள் zain ஐ தனது வீட்டிற்கு (இது ஒரு குருவிக் கூண்டு) அழைத்து செல்கிறாள். அவளது மகனை zain பார்த்துக் கொள்கிறான். அவள் வேறு பெண்ணின் அடையாள அட்டையில் வேலைக்கு செல்கிறாள். அப்படி செல்லும் போது போலீசில் மாட்டி சிறை செல்கிறாள். அவளுக்காக பால் குடி மாறா குழந்தையை வைத்துக் கொண்டு காத்து இருக்கிறான். தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறான்.
 குழந்தை என்னவானது?!
Zain யாரைக் குத்தினான்?!
தண்டனை கிடைத்ததா வெளியே வந்தானா?!
குழந்தையை விட்டுச் சென்ற அம்மாவின் கதி என்ன?! குழந்தை அவள் கையில் கிடைத்ததா?!
இப்படி பல கேள்விகளை முன்னிருத்தி படம் சற்று விறுவிறுப்போடும் நமது நெஞ்சம் பதைபதைப்போடும் செல்கிறது.
Zain ஆக நடித்த குட்டிப் பயல் அருமையாக நடித்துள்ளான். குழந்தையை எந்த சூழலிலும் காப்பாற்ற தன்னால் இயன்றதை செய்கிறான். முகத்தில் பொறுப்பு, கோபம், இயலாமை அழுகை மற்றும் குழந்தைத் தனம் அத்தனையும் கொண்டு வருகிறான்.
ஒளிப்பதிவு போரில் சிதிலமான அழுக்கான லெபனானை கண்முன் நிறுத்துகிறது.
நெட்ஃப்ளிக்சில் உள்ளது. இணையத்தில் கிடைக்க கூடும் பாருங்கள்.

Friday, October 11, 2019

வெற்றிமாறனின் சிவசாமி அசுரனா அல்லது பூமணியின் சிவசாமி அசுரனா?



சிவசாமி மகன் சிதம்பரம் (வயது 15) வடக்கூரானை கொலை செய்து விடுகிறான். வடக்கூரான் ஊரார் நிலத்தை எல்லாம் வாங்கிப் போட்டு பெரு மிராசுதாராக வாழ பேராசை கொண்டவன். சிதம்பரத்தின் அண்ணன் சாவுக்கு காரணமானவன். 
சிதம்பரத்தை போலீசில் சிக்காமல் தப்புவிக்க தந்தையும் மகனும் காட்டுக்குள் இறங்குகிறார்கள். அவனது மாமா வெளியில் இருந்து உதவுகிறார்கள். காட்டிற்குள்ளான தலைமறைவு வாழ்க்கை நுட்பமாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சிதம்பரத்தின் எண்ணவோட்டத்தில் வடக்கூரான் அவர்களது நிலத்தை வாங்க ஆசைப்பட்டது மற்றும் இந்த அக்கபோரில் அவனது அண்ணன் வடக்கூரானால் கொலைசெய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் வந்து போகின்றன. இறுதியாக கேசை ஒப்புக்கொண்டு சரணடைய செல்வதில் முடிகிறது. நாவலின் ஒரு இடத்தில் “சக்கிலியத் தெரு“ என்கிற சொல் வருகிறது. இதையன்றி வேறு எங்கேயும் இது தலித் மக்களின் வாழ்க்கை என்பதற்கான அடையாளம் இல்லை.
நாவல் ஒரு கிளாஸிக் தான் ஆனால் இந்த நாவலில் ஒரு ப்ளாக் பஸ்டர் படத்திற்கான சரக்கு எதுவும் உள்ளதா? உப்பு சப்பில்லாத ஒரு ஃபளாப் பஸ்டர் படம் வேண்டுமானால் எடுக்கலாம். ஆனால் வெற்றிமாறன் என்ன செய்தார்?
கதையின் மையச் சரடை எடுத்துக் கொண்டு அதில் அந்தக் காலகட்ட சாதிய அடக்குமுறை, பஞ்சமி நில அபகரிப்பு என்று பல விஷயங்களை நாவலுக்கு அப்பாற்பட்டு பேசியிருக்கிறார். நாவலில் உள்ள கதாபாத்திரங்களோடு நாவலில் இல்லாத தனுஷின் ஃபளாஷ்பேக் வாழ்க்கை, தனுஷின் போராளி அண்ணன் கேரக்டர், பிரகாஷ்ராஜ் கேரக்டர் மற்றும் சாதிவெறி பிடித்த வில்லன் கேரக்டர் என பலவற்றை புகுத்தி சாதிய அடக்குமுறையின் கோரமுகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
1970 களில் எங்கள் ஊரில் கூட தலித் மக்கள் செறுப்பு அணிந்து செல்ல இயலாத சூழல் இருந்தது. இந்த சம்பவம் எங்கள் ஊரில் நடந்த ஒன்றுதான். ஒரு பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனை செறுப்பணிந்து செல்லக் கூடாது என்று இடைமறிக்கிறார்கள். அவனோ திரும்பி வந்து தனது தந்தையை அழைத்துக் கொண்டு செல்கிறான்.
“எனது மகனை செறுப்பு போட்டுக் கொண்டு நடக்க கூடாது என்று கூறியது யார்?”
“நாங்கதான்“
“எது வரைக்கும் போடக்கூடாது?”
“நம்ம ஊர் எல்லை தாண்டும் வரைக்கும்”
“என் மகன் செறுப்பை கையில் எடுக்க மாட்டான், நீங்களோ செறுப்பு போடக்கூடாது என்கிறீர்கள் அதனால ஊர் எல்லை வரைக்கும் நீங்களே எம்புள்ள செறுப்ப கையில எடுத்துக் கிட்டு போய் குடுத்துட்டு வாங்க”
இதற்கு அப்புறம் என்ன  அடிதடி போலீஸ் கேஸ் தான். இதில் நுட்பமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த மாதிரி அடிதடிக்கு யாரை தூண்டி விடுவார்கள் என்றால் ஊரில் சாதி என்கிற ஒன்றைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத ஒரு அனாமத்தான ஆளைத் தான் தேர்வு செய்வார்கள்.
வியக்கத்தகுந்த விஷயம் என்னவென்றால் மாரியம்மாளின் தலையில் செறுப்பை வைத்து அடிக்கும் காட்சியிலும் அந்த மாதிரியான ஆளைத் தான் பயன்படுத்தி இருப்பார் வெற்றிமாறன். அப்படியென்றால் திரைக்கதையை எவ்வளவு ஆழமாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் பாருங்கள்.
இப்போது சாதிய அடக்குமுறை இல்லாத சூழலில் வெற்றிமாறன் தேவையில்லாமல் இந்த மாதிரி படம் எடுக்கிறார் என்கிறார்கள். நில அபகரிப்பு, வெறும் சோற்றுக்கு உழைப்புச் சுரண்டல், அடக்குமுறை, வீட்டினைக் கொளுத்துவது அதிகார அல்லது அரசாங்க அமைப்பின் பாரபட்சம் இந்தமாதிரி இன்னும் பல இன்னல்களை கடந்துவராத கிராமத்து தலித் எவரையாவது காட்டுங்கள் பார்ப்போம். இன்னும் பல தமிழக கிராமங்களில் இரட்டைக் குவலை முறை உள்ளது. எனது பள்ளி கல்லூரி பிராயத்தில் எங்கள் ஊரிலும் இரட்டைக் குவலை முறை அமலில் இருந்தது.
ஏன் எங்கள் ஊரில் சலூன் கடை இருந்தும் கூட நான் முடிவெட்டிக் கொள்ள தா.பழூருக்கு பேருந்து ஏறி சென்றிருக்கிறேன். அதனால் படத்தில் கூறப்பட்ட எந்த விஷயமும் உண்மைக்கு மாறானது கிடையாது.
அப்புறம் இந்த வன்முறைக் காட்சிகள்?!
பாரதிக் கண்ணம்மா படத்தில் பார்த்திபன் செத்துப் போகணும்.
காதல் படத்தில் பரத் பைத்தியக்காரனாக அலையணும்.
தலித் உரிமை பேசிய இரணியன்கள் அம்மக்களின் அறியாமையால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்.
இப்படி அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் எதிராக விரலைக் கூட உயர்த்தாமல் கதாப்பாத்திரத்தை சாகடித்து தலித் உரிமை படம் எடுத்து சுய இன்பம் கண்ட தமிழ் சினிமாக் களத்தில் அசுரனாக மாறி அதிகாரத்தையும் அடக்குமுறைகளையும் வெட்டிச் சாய்க்கும் தலித் பாத்திரத்தில் நாயகனைக் காணும் போது பல பேருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுவது தவிர்க்க இயலாது.

இந்தமாதிரி  படங்களை கையால்வது டெலிக்கேட்டான விஷயம் வசூல் ரீதியாக பெரிய இழப்பு ஏற்படும் என்கிற மாயைகளை உடைத்து “வாருங்கள் எல்லா விஷயங்களை குறித்தும் உரையாடுவோம்“ என்கிற அரைகூவலோடு முன்னத்தி ஏராக களத்தில் இறங்கிய இயக்குனரையும் இந்த தருணத்தில் நினைக்காமல் இருக்க முடியாது.


Wednesday, September 4, 2019

ஆசிரியர் தின சிறப்பு பதிவு – செப்.-5, 2019



முந்தைய ஆண்டுகளில் எனது ஆசிரியர்களில் நான் கண்டு வியந்த நல்லாசிரியர்களைப் பற்றி பதிவுகள் எழுதினேன்.
இந்த ஆண்டு பொதுவான சில கருத்துக்களைக் கூறி வாழ்த்தினை பதிவு செய்ய விழைகிறேன்.
பாடங்களைக் காட்டிலும் மாணவர்களின் மனதினில் நல்லொழுக்கங்களை விதையுங்கள்.

நாம் பின்பற்றாத ஒரு நல்லொழுக்கத்தை நம்மால் நிச்சயமாக முழு மனதோடு போதிக்க இயலாது. (மது அருந்தும் ஆசிரியரால் “மது அருந்துதல் கேடு விளைவிக்கும்“ என முழு மனதோடு போதிக்க இயலுமா?).

வருடந்தோறும் ஒரே டெம்ப்ளேட்டில் பாடத்தை போதிக்க முயல்வது தினந்தோறும் காலையில் உப்புமா சாப்பிடுவது போல. அது நமக்கே போரடித்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்திக் கொள்வோம்.
நாம் கடினம் என நினைக்கும் பாடப்பகுதி நிச்சயமாக மாணவர்களுக்கு வேப்பங்காய் தான். எனவே பாடத்தின் அனைத்துப் பகுதிகளும் மிக எளிது என எண்ணம் வரும் வரை தொடர்ந்து பயிற்சி செய்வோம். பின்பு மாணவர்களின் மனதில் ஏற்ற முயற்சி செய்வோம்.

“மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்காதீர்கள்” என்பது போல பாடம் நடத்தும் போது தேர்வினை நினைக்காதிருப்போம். அதுவே பாடங்களை உற்சாகத்தோடும் பரவசத்தோடும் நடத்த உதவும்.

முடிந்தவரையில் அமர்ந்து கொண்டு பாடம் நடத்துவதை தவிர்ப்போமாக. நாம் வகுப்பறையில் இருக்கும் நேரங்களில் அனைத்து மாணவர்களின் கண்களையும் அரை நிமிடத்திற்கு ஒரு முறையாவது சந்தித்து விடுவது நல்லது.

மாணவர்களின் கண்களின் மொழி அறிவோம். அதில் “ஒண்ணும் புரியல சார்“, ”காலையில் சாப்பிடவே இல்லை சார்”, “வீட்டில் பிரச்சனை சார்”, இந்த மாதிரி பல விஷயங்கள் காணக் கிடைக்கும். அது நமது வகுப்பு ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

பசித்திருக்கும் மாணவனுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கித் தருவதிலோ, மாணவர்களை உற்சாகமூட்ட சிறு பரிசுகள் வாங்கித் தருவதிலோ நமது மாதாந்திர பட்ஜெட் ஒன்றும் தள்ளாடிப் போகாது என்பதை நினைவில் வைப்போம்.

நம்முடைய ஒரு நாள் விடுப்பு என்பது நம்மைப் பொறுத்தவரை ஒன்றுதான். அப்படியே மாணவர்கள் கோணத்தில் இருந்து பார்த்தால் எத்தனை நாள் தெரியுமா? அப்படியே நமது வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கையால் பெருக்கிக் கொள்வோமானால் பிரம்மாண்டம். இப்போது புரிகிறதல்லவா நமது உயரம்.


எனவே வீணாகிப் போகும் தற்செயல் விடுப்பினால் ஒன்றும் நட்டமாகிப் போகப் போவதில்லை. அவசியம் இன்றி விடுப்பு எடுப்பதை தவிர்ப்போமாக.

மாணவர்களை கண்டிக்கலாம் தேவைப்பட்டால் தண்டிக்கலாம் ஆனால் ஒருபோதும் வெறுக்காதிருக்க பழகுவோம். ஏனென்றால் அவர்கள் இன்னும் பக்குவமடையாத சிறார்கள்.

மாணவர்கள் மனதில் எப்போதும் பாலின சமத்துவத்தை விதைப்போமாக. ( ஆண்கள் மேல் பெண்கள் கீழ் என்கிற எண்ணமே எழாவண்ணம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விழிப்புணர்வு கொடுப்போமாக)

கடைசி மாணவனை கடைதேற்றும் முயற்சியில் மீத்திற மாணவனை அறிவுப் பட்டினி போடாமல் பேலன்ஸ் செய்து நடந்து கொள்ளும் சாகச வித்தையை கைக்கொள்வோமாக.

தன் சுத்தம், சுற்றுச் சூழல் அக்கரை, மரம் வளர்ப்பு என்பன போன்ற விஷயங்களையும் நாம் தான் சொல்லித் தர வேண்டும். “இது என் ஏரியா இல்ல“ என்று ஒதுங்கி இருத்தலாகாது.

“உழைப்பாளியின் வியர்வை காயும் முன் கூலி கொடுக்க வேண்டும்” என்பது போல தேர்வு முடிந்த பின்பு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் விடைத்தாட்களை திருத்தி வழங்க முயல்வோம்.

மாணவர்களை அடித்த பின்போ அல்லது திட்டிய பின்போ அரவணைக்க ஈகோ பார்க்க வேண்டாம். சம்மந்தப் பட்ட மாணவன் சமாதானமாகிவிட்டதை உறுதி செய்து கொள்வோம். ஏனென்றால் இப்போதெல்லாம் மாணவர்கள் “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்க குழைபவன் மாணவன்” என்றாகி விட்டிருக்கும் காலம்.

”நல்லாசிரியர் என்று தனியாக எவரும் இல்லை, ஆசிரியர் என்றாலே நல்லவர் தான்” என்ற வார்த்தைகளை சமூகத்தில் நிலைநிறுத்த உறுதியேற்போம்.

அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்


Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...