Sunday, April 19, 2020

ஆண்பால் பெண்பால் அன்பால்


புத்தகம்: ஆண்பால் பெண்பால் அன்பால்
பதிப்பகம்:  விகடன் பதிப்பகம்
ஆசிரியர்:   53 பேர் தங்கள் பாலின சமத்துவம் குறித்த அனுபவங்கள் மற்றும் பார்வையை பதிவு செய்து வாரம் தோறும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
510 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். முதல் 15 நாட்களுக்குள் முடிக்க முடியாமல் 5 நாட்கள் தாமதமாக லைப்ரரி யில் அபராதத்துடன் திருப்பிக் கொடுத்து விட்டு “சார் இன்னும் முடிக்கல திரும்பவும் எடுத்துக் கொள்ள முடியுமா ப்ளீஸ்” என தலையை சொறிந்தேன். ”சரி எடுத்துக்கோங்க சார்” என்று புன்னகைத்தப் படி கூறினார் நூலகர்.
வேலை பளு அதிகமான மாதம் ஆதலால் மறுபடியும் 15 நாட்களுக்குள் முடிக்க இயலவில்லை. புத்தகம் திருப்பித் தரவேண்டிய வேளையில் லாக்டவுன் அறிவிப்பு தேனாக பாய்ந்தது. எப்படியோ முடித்துவிட்டேன்.
புத்தகத்தின் அணிந்துரை பிரபஞ்சன் அவர்களால் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. “கள்ளக் காதல்“, “குழந்தை பாக்கியம்”, ”கற்பு“, “காதல் வேறு காமம் வேறு” போன்ற சொல்லாடல்களையும் அதற்கு பின்னால் உள்ள போலித்தனங்களையும் சாடியுள்ளார்.
கட்டுரை எழுதிய ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்க்கை அனுபவங்கள் வழியே தங்கள் சக எதிர்பாலினத்தவரிடம் எந்த மாதிரி அனுகுமுறையை கொண்டிருந்தார்கள் என்பதை விளக்கியுள்ளார்கள்.
இயக்குனர் ராம் அவர்கள் கூறியவற்றில் மிக அருமையானதாக நான் உணர்வது-
 நான் என் மகளிடம் சொல்வது இதுதான்,”ஒரு வேளை யாராவது உன்னை புகைப்படம் (நிர்வாணமாக புகைப்படம் எடுத்து பெண்களை மிரட்டும் கான்டெக்ஸ்ட் ல் ) எடுத்தால், அச்சதம் பொள்ளாதே நீ என்னிடம் சொல். அதனால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. என்னிடம் சொல்ல முடியவில்லையா, உன் அம்மாவிடமோ, ஆசிரியரிடமோ அல்லது உன் நண்பர்களிடமோ சொல். அதனால் உன் மரியாதைக்கும் பெயருக்கும் எந்தப் பாதகமும் விளையாது. அது உன் தவறு அல்ல. எடுத்தவரை சட்டம் பார்த்துக் கொள்ளும். அதற்காக நாம் பயப்பட வேண்டியது இல்லை”
     இன்றைய சூழலில் பெண்களிடம் கூற வேண்டிய அதி முக்கியமான ஆதரவு வார்த்தைகள் இவை.
     ஜெயராணி அவர்களின் கட்டுரையில் பெண்களை அடித்து உதைத்து துன்புறுத்தும் ஆண்களைப் பற்றிய இந்தப் பதிவு குறிப்பிடத் தக்கது, “பெண்ணைத் தாக்குவதன் மூலம் தனது வலிமையை நிருபிக்க முனையும் ஆணுக்கு, அதற்கென ஒரு காரணமும் தேவை இல்லை“
     ஒவ்வொரு ஆளுமையும் தன் வாழ்வில் சந்தித்த எதிர்பாலின நட்பு குறித்து சிலாகித்து உள்ளார்கள். பெண் ஆளுமைகளைப் பொறுத்தவரையில் டொமஸ்டிக் வயலன்ஸ் பொது இடங்களில் நடைபெறும் சீண்டல்கள் குறித்து நிறைய பதிவு செய்திருந்தார்கள். அவர்களே தாங்கள் சந்தித்த நல்ல பிற ஆண் நண்பர்களைக் குறிப்பிடவும் தவறவில்லை.
     நமது குடும்ப அமைப்பானது மாறிவரும் சமூக சூழலைத் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்குமா என்கிற சந்தேகம் சில வருடங்களாகவே எனக்கு வந்த வண்ணம் உள்ளது.
     பெண் பிள்ளைகளை ”இன்னொருத்தன் ஊட்டுக்கு பொங்கிப் போடப் போறவ தானே” என்கிற அலட்சியமாய்ப் பேசும் பழைமைவாதப் பெற்றோர் இப்போது அருகி உள்ளனர். இது விரும்பத்தக்க முன்னேற்றமே.
     என்ன மாதிரியான ’டொமஸ்டிக் வயலன்ஸ்’ நடந்தாலும் ’இது நமக்கு விதிக்கப் பட்டது’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு ’கல்லானாலும் கணவன் புள்ளானாலும் புருசன்’ என்கிற பழமொழியை பிடித்துத் தொங்கிய பெண்கள் வழக்கொழிந்து போய்விட்டனர். எதிர் காலத்தில் கை குலுக்கிப் பிரியும் அளவுக்கு திருமண முறிவு எளிமையாகிப் போகலாம்.
திருமணத்திற்கென்று செய்யப்படும் அதிக அளவிலான செலவு மற்றும் முக்கியத்துவம் அதனைப் புனிதப் படுத்தி விடுகிறது. காதல் திருமணமோ பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ ஆண் பெண் இருவரின் புரிதல் பரஸ்பர ஒளிவு மறைவு இன்மை போன்ற குணங்களால் வலுவாக்கப் பட வேண்டும். ஆனால் 50 விழுக்காடு தம்பதியினர் மனதுக்குள் சடுகுடு ஆடியபடி அந்தப் புனிதமான திருமண பந்தத்தை கட்டிக் காக்கின்றனர்.

     ”ஆண்பால் பெண்பால் அன்பால்” என்கிற தலைப்பின் கீழ் நான் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.
     இப்போது ஆண்களுக்கும் பெண்களுக்குமான பிரத்தியேகப் பள்ளிகளின் பெருக்கம் விரும்பத்தக்கது அல்ல. இது இருபாலருக்குமான ஆரோக்கியமான நட்பு குறித்த புரிதலற்ற ஒரு தலைமுறையை உருவாக்கிவிடுகிறது. இதில் உச்சக் கட்ட கொடுமை என்னவென்றால் இருபாலர் படிக்கும் தனியார் கல்லூரிகளில் கேமரா வைத்து இருபாலரும் பேசாவண்ணம் பாதுகாக்கும் வேலை நடப்பது தான்.
     குமரப் பருவத்தில் ஆண் பெண் நட்பில் ஆர்வக் கோளாறினால் சிறு அளவில் எல்லை மீறும் சம்பவங்கள் உண்டுதான். ஆனாலும் அதற்காக இருபாலரையும் ஒருவரை ஒருவர் பார்க்க கூடாது என்று பிரித்து வைத்து வளர்ப்பது ஆரோக்கியமான இருபால் உறவு குறித்த புரிதல் இல்லாத பிள்ளைகளை வளர்த்து வைப்பது இன்னும் ஆபத்தானது.
     நிச்சயமாக இந்தப் புத்தகத்தை படித்தோமானால் ஆண்பால் பெண்பால் நட்பு குறித்த பல பரிமாணங்களை புரிந்து கொள்ள இயலும்.

Saturday, April 18, 2020

“உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே….”



என்னதான் மூளையை தலைமைச் செயலகம் என்று அழைத்தாலும் அந்த தலைமைச் செயலகத்திற்கு மகுடம் சூட்டியது போல இருக்கும் கேசம் தான் நமது புற அழகிற்கு அணி சேர்க்கிறது. ஆனால் அத்தகைய மகுடங்களில் தான் எத்தனை வகை? நாம் நமக்கான உடையை தேர்வு செய்து அணிந்து கொள்ள முடியும் அனால் தலைமுடி மரபுபடி (genetically) அதுவாக அழகாக வளர்ந்தால் தான் உண்டு. நாம் ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலை தான்.
குருவிகள் கட்டும் கூட்டினில் கூட எளிதாக குச்சியை நுழைத்து விடலாம் ஆனால் சிலரது தலைமுடிக்குள் சீப்பினை நுழைத்து எடுப்பது வெகு சிரமம் தான். அப்படியும் நுழைத்து மல்லுக்கட்டும் போது பல்போன சீப்பையும் முதுகுநாண் ஒடிந்த சீப்பையும் கூட கண்டிருக்கிறேன். இதெல்லாம் சுருள் முடிகாரர்களுக்கு உள்ள “சிக்கல்“.
ஆனால் கோரைமுடி காரர்களின் முடியை பார்க்கும் போதெல்லாம் பொறாமை பொத்துக் கொண்டு வந்துவிடும். அவர்களின் முடி அலைஅலையாக சரிந்து நெற்றியில் விழும். அதனை அவர்கள் தள்ளிக் கொண்டு பேசுவது அவ்வளவு அழகு. அவர்களின் முடி சீப்போடு எப்போதும் சினேகத்துடன் தான் இருக்கும்.
இரண்டுக்கும் இடைபட்டோரும் உண்டு. அவர்களின் முடி சிறிதாக இருக்கும் போது கோரைமுடிக்கான பண்புகளையும் வளர்ந்தபின்பு சுருட்டை முடிக்கான பண்புகளையும் வளர்த்துக் கொண்டுவிடும். ”நாம ஒரு பக்கம் இழுத்தா அது ஒரு பக்கம் போகுதேடா..” என்று வடிவேலுவைப் போல புலம்ப வைத்துவிடும்.
“காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா
குருவி குருவி கொண்டைக்கு பூ கொண்டுவா…”
என்கிற ரைம்ஸ் எல்லாம் படித்து தான் நாம் வளர்ந்திருக்கிறோம்.
“கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய்யழகு“ என்கிற வைரமுத்துவின் கவிதையும் கேட்டிருக்கிறோம்,
தலையில் கை வைத்து சொல்லுங்கள் இப்போது மை கண்ணுக்கு மட்டுமா தேவைப் படுகிறது. தலைக்கும் சேர்த்தல்லவா தேவைப்படுகிறது.( தலையில் வைத்திருந்த கையை போய் கழுவுங்க மை ஒட்டியிருக்க போவுது). நானெல்லாம் தலைமையாசிரியர் ஆகுமுன்னே தலை“மை“ஆசிரியர் ஆகிவிட்டேனாக்கும்.
எங்களது சக நண்பர் ஒருவருக்கு ஓவியர் ஹூசைனி போலவோ அல்லது முன்னால் மத்திய அமைச்சர் நட்வர்சிங் போலவோ முழு வெள்ளை முடி. ஆனால் அவர் தனது முடியை அவ்வளவு அழகாக டை அடித்து பராமரிப்பார். சும்மா கரு கரு வென்று இருக்கும். அந்த வெண்மை ரகசியமே அவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்ட போது தான் கண்டு கொண்டேன்.( அது என்ன கணக்கு, மாலை போட்டால் டை அடிக்க கூடாதா?)
தலைக்கு மை அடித்து விடலாம் மீசைக்கு என்ன செய்வது? மீசைக்கு டை அடிப்பது சற்றே சவாலான வேலைதான். எனவே சிம்பிளாக ஒரு ”ஐப்ரோ” பென்சிலை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். தலை வாரி பவுடர் எல்லாம் போட்ட பிறகு ஒரு சின்ன டச் அப் செய்தால் போதும். (ஒரு அசம்பர்த்தமான சூழலில் ஒரு நண்பரின் ஐப்ரோ பென்சில் வெளியே வந்து விழ நான் துருவி துருவி கேட்கப் போய் அவர் வெளியிட்ட தகவல் தான் மேற்படி உள்ளது)
அது சரி தாடியை என்ன செய்வது? அது ரொம்ப சிம்பிள் தினசரி காலை மழுங்க சிரைத்து விட வேண்டியது தான். மிலிட்டரி டிசிப்ளினோடு தினசரி ஷேவ் செய்வோரின் சூழல் இந்த மாதிரி கூட இருக்கலாம்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள் தீபாவளி பொங்கல் கல்யாணம் காது குத்து என விசேஷ நாட்களில் மட்டும் டை அடிப்பார்கள். டை அடித்த நாளில் இருந்து நாளாக நாளாக அவர்களின் கேசத்தில் வானவில்லில் உள்ள அனைத்து வண்ணங்களும் தோன்றி இறுதியில் வெள்ளையாகி அடுத்த விசேஷநாளில் கருமையாகும்.
ஆக, தலைமைச்செயலகத்திற்கு அணிசேர்க்க தலை“மை“ப் பண்பு அவசியம் தேவைப் படுவது என்னவோ உண்மைதான் போங்கள்.
“சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய இயலும்” அந்த சுவரே “டேமேஜ்” ஆகிப் போனால் என்னாவது?
“உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே…” இந்தப் பாடல் கேட்டுருக்கிறீர்களா?
காதலிகள் தாங்குகிறார்களோ இல்லையோ சம்மந்தப் பட்ட ஆண் தலைமுடி விழும் போதெல்லாம் பதறித்தான் போகிறான்.
ஒரு முறை கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது அனுபவம் சார்ந்த ஒரு மேற்கோல் சொல்லலாமே என்று “அனுபவம் என்பது தலை வழுக்கையான பின்பு கையில் கிடைக்கும் சீப்பு போன்றது” என்ற கூற வாயெடுத்தேன், ஆனால் கூட்டத்தில் நிறய பேருக்கு தலை வறண்ட நிலமாக இருந்ததால் ஒரு மிடறு உமிழ்நீரோடு நாவிற்கு வந்த வார்த்தைகளையும் சேர்த்து விழுங்கி விட்டேன்.
இளம் பிராயத்தில் என்னவோ தலைமுடி அடர்ந்த புதர்கள் நிறைந்த அமேசான் காடுகள் போலத்தான் உள்ளது. நாளாக நாளாகத்தான் சகாரா பாலைவனக் காடுகள் போல மாறிவிடுகிறது.
வறண்ட நிலப் பரப்பில் கூட afforestation மூலம் பசுமையை பேணலாம். ஆனால் தலைக்கு ஒன்லி deforestation தான்.
சென்னையில் பணிபுரியும் நண்பர் ஒருவர் ஒரு ஒர்க் ஷாப்புக்காக பெங்களுர் சென்றிருக்கிறார். அதே ஒர்க் ஷாப்புக்கு வந்த வேறு ஒரு அலுவலக நண்பர் ஒருவர் இரயிலில் சினேகமாகியிருக்கிறார். அந்த புதிய நண்பர் சுமார் ஆறு அடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் அழகிய கேசத்துடன் ஹேண்ட்சம்மாக இருந்திருக்கிறார். இருவரும் ஒருஅறையில் தங்குவதாக கேட்டு வாங்கி கொண்டார்கள்.
நமது நண்பருக்கு விடியற்காலை ஒரு 4 மணி சுமாருக்கு விழிப்பு தட்டியிருக்கிறது. சரி பாத்ரூம் போய்ட்டு வந்து படுக்கலாம் என்று எழுந்தவருக்கு பக்கத்து கட்டிலை பார்த்தவுடன் தூக்கி வாரி போட்டிருக்கிறது.
முற்றிலும் புதிய நபர் உயரமாக பழைய ரஜினி பட வில்லன் கணக்காக மொட்டைத் தலையுடன் ஒரு உறங்கிக் கொண்டு இருக்கிறான். இரவு அருந்திய மதுவின் தாக்கத்தினால் அறை மாறி வந்து படுத்து விட்டோமா என்று வெளியே போய் பார்த்திருக்கிறார் நண்பர். ஆனால் அறையெல்லாம் மாறவில்லை.
’எழுப்பினால் எழுந்து கோபத்தில் அடிப்பானோ!’ என்ற கலக்கத்தில் எழுப்ப கூட பயந்தபடி வௌவௌத்து போய் விடிய விடிய நாற்காலியில் அமர்ந்தபடி உறங்கிவிட்டார்.
காலையில் புதிய நண்பர் குளித்து முடித்து ஜோராக ஆடை அணிந்து எழுப்பியிருக்கிறார்.
”என்னப்பா நைட் எங்கே போன? இங்க ஒரு புது ஆளு படுத்திருந்தான், பாக்கவே திருடன் மாதிரி இருந்தான்”
“யோவ் நான்தான்யா அது நைட் “விக்கை” கழட்டி வச்சுட்டு படுத்திருந்தேன்” என்று தலைமுடியை காண்பிக்க நண்பரோ நம்ப இயலாமல் சடங்கு சுத்துவது போல அந்த புதிய நண்பரை சுற்றி சுற்றி வந்து பார்த்து மாய்ந்து போனதாக கூறினார்.
ஆனால் பெரும்பாலானோருக்கு “விக்“ வைத்தால் இது “விக்“ தான் என்று பட்டவர்த்தனமாக தெரிவதோடு பார்க்கவே சற்று நெருடலாக நகைப்புக்குரிய வகையில் இருக்கிறது. எல்லோருக்குமே இந்தி நடிகர் “அனுபம்கெர்” மாதிரி அழகான வழுக்கை தலை இருக்காது தான் என்றாலும் வழுக்கை ஒன்றும் இழுக்கல்ல.
இன்னும் சிலரோ தலைக்கு பின்புறம் அடர்ந்து வளர்ந்திருக்கும் கேசத்தை இழுத்து முன்தலையில் வைத்து படிய வைத்து சீவி இருப்பார்கள். இவர்களுக்கு காற்று என்றாலே அலர்ஜி தான். வறுமையில் இருப்பவர் தனது சேமிப்பினை பாதுகாப்பது போல பல நிமிடங்கள் செலவழித்து முன்னுக்க கொண்டு வந்த எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் சாய்த்து விடும்.
இளம் வயதினர் கூட வழுக்கையை கண்டு கொள்ளாமல் முடியை க்ளோசாக வெட்டிக்கொண்டு கம்பீரமாக வலம் வரும் போது இந்த வயதானோர் மட்டும் இந்த வறண்ட முன் பகுதியை உண்டு இல்லை என பண்ணி விடுகிறார்கள்.
வழுக்கையோ வெள்ளை முடியோ எதுவுமே இயல்பாக இருக்க விடுவதுதான் நல்லது. எனக்கெல்லாம் டை அடிக்க ஆரம்பித்த பின்புதான் முடி உதிர்வு அதிகமாகிவிட்டது.

Monday, April 13, 2020

அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்பு பதிவு-இடஒதுக்கீடு சலுகையல்ல உரிமை என உரக்கச் சொல்வோம்



   
  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர் நமக்கு பெற்றுத் தந்த இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமையே என்பதை நாம் ஐயத்திற்கு இடமின்றி புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பெற்று பயனடைவது நமது கடமை. இது குறித்து குற்ற உணர்வோ இழிநிலை உணர்வோ கொள்ள வேண்டியதில்லை.

    1994-97 ல் ஆனந்த விகடனில் ஒரு சிறுகதை வந்திருந்தது. பெயர் “சலுகை“ என்பது நன்றாக ஞாபகம் உள்ளது. ஆசிரியர் எஸ்.ரா என நினைக்கிறேன்.(நானும் கூகுளில் தேடிவிட்டேன் இந்த கதை சார்ந்த எந்த ஒரு இழையும் கண்ணில் படவில்லை. தெரிந்த நண்பர்கள் உறுதி படுத்துங்கள் ப்ளீஸ்!)
ஒரு தாழ்த்தப் பட்ட வகுப்பு இளைஞன் ஐ.ஏ.எஸ் பாஸ்பண்ணி கலெக்டர் ஆகிறான். ஒரு பிராமணப் பெண்ணை காதலிக்கிறான். அவளது தந்தையிடம் திருமணம் குறித்து பேசச்செல்லும் போது அவர்,“நீ உனது சாதிக்குறிய இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் பாஸ் செய்திருக்கிறாய். ஆனால் திருமணத்திற்கு மட்டும் சாதி வேண்டாம் என்கிற மனநிலையில் இருக்கிறாய். நீ திரும்ப போய் பொதுப்பிரிவில் தேர்வெழுதி பாஸ் செய்து விட்டு வந்தால் தான் பெண் கொடுப்பேன்” என்கிறார்.(கதையில் இவ்வளவு வெளிப்படையாக இன்றி பாலிஷாக சொல்லி இருப்பார்கள் ஆனா மேட்டர் இது தான்) அந்த ஆபீசரும் நம்பிக்கையோடு திரும்பவும் தேர்வு எழுத செல்வதாக கதை முடிகிறது.
 அந்த கதையைப் படித்தபோது நானும் கூட அதுதானே சரி?! என்கிற மனநிலையில் இருந்தேன் என்பது தான் சோகம்.(அப்போ நம்ம அறிவு அவ்வளவுதான்!). உணர்ச்சி வசப்பட்டு தினமலர் காரன் கூறுவது போல சாதிச் சான்றிதழை கிழித்தெரிந்து சாதியை ஒழிக்க முயலாமல் விட்டேனே என்று இப்போது பெருமூச்சு விடுகிறேன்.
2002 ஜனவரியில் நான் வேலைக்கு தேர்வாகி சேர்ந்த போது எனக்கு வயது 25. பெரிய ஓடை பாலம் பழுதடைந்து இருந்த காரணத்தால் எங்கள் ஊருக்கு (ஜெமின்.சுத்தமல்லி) செல்ல அப்போது காக்கா பாளையத்தில் இறங்கி நடந்து செல்ல வேண்டும். அன்று பள்ளிக்குச் சென்று திரும்பிக் கொண்டு இருந்தேன். இருட்டி விட்டது. என்னுடன் எங்கள் ஊர் நபர் ஒருவர் நடந்து வந்தார். “ஒங்களுக்கெல்லாம் ஈசியா வேலை போட்டு கொடுத்துடுறாங்கல்ல?” என்றார். அதோட அர்த்தம் உனக்கு எந்த திறமையும் இல்லேன்னா கூட சாதிய வச்சி வேலை கொடுத்துடுறாங்க தானே என்பதுதான். இதில் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால் நான் எங்கள் சுத்தமல்லி பள்ளியில் படித்தபோது நன்கு படிப்பவன் என்பது ஊருக்கே தெரியும்.
ஜென்டில்மேன் படம் வந்தபோது அந்தப் படம் பேசும் உள்ளார்ந்த அரசியல் புரியாமல் சில்லறையை சிதறவிட்டிருக்கிறேன் என்பதை இப்போது எண்ணி நாணுகிறேன். ’நல்லா படிச்ச எனக்கு இடம் கிடைக்கவில்லை ஆனா என்னைவிட கம்மியான மார்க் வாங்கினவங்க எல்லாம் காலேஜில் சேந்துட்டாங்க’ என்கிற ஆதங்கத்தில் உயிரை மாய்த்துக் கொள்கிறான் ஒருவன்.
முக்கியமா ஒரு லாஜிக்கை இந்த இடஒதுக்கீடு எதிர்ப்பு போராளிகள் மறந்து விடுகிறார்கள். ஒரு மேல்சாதி பையனுக்கு இடம் கிடைக்க வில்லை என்றால் என்ன அர்த்தம்? பொதுவில் இருக்கும் 100 ல் 50 இடங்களுக்குள் (த.நா எனில் 31 இடங்களுக்குள்) வர திராணி இல்லை. அவனைத் தாண்டி 50 பேர் மார்க் வாங்கிட்டான் என்று தானே அர்த்தம். அவன் தனது திறமையின்மையை மறைக்க மற்றவர்கள் அவரவர்களுக்கான உணவை சாப்பிடுவதை பார்த்து ஏமாந்து எச்சில் ஒழுகிக் கொண்டு அநாகரிகமாக ஏளனம் செய்கிறான்.
அடுத்து இந்த கதைத் திருட்டில் கொடிகட்டி பறக்கும் முருகதாஸ் எடுத்த ஏழாம் அறிவு படத்தில் “ரிசர்வேஷன், ரெக்கமண்டேஷன், கரப்ஷன் இந்த மூன்றினால் தான் இந்தியா வல்லரசு ஆகல“என்று கமல் பொண்ணு கேட்டப்ப அப்படியே உடம்பெல்லாம் புல்லரிச்சி போச்சி. அப்பு முருகதாசு, என்னா ஒரு அறிவுப்பா உனக்கு என்று வியந்து போனேன்.
ஏன்னா ரிசர்வேஷன்ல வந்த இஞ்சினியர்கள் கட்டிய பாலங்கள் உடைந்து போகின்றன. டாக்டருங்க ஆப்பரேஷன் பண்ணியதால் தான் நோயாளிங்க பரலோகம் அடைகிறார்கள். ஆமாம். இதுவும் அடிக்கடி கேள்விப்படும் ஒரு செய்திதான்.
இஞ்சினியரிங் காலேஜில் எல்லோருக்கும் பரிட்சையில் பாஸ் மார்க்  40 ன்னா ரிசர்வ்டு கேட்டகரியில் வருவோருக்கு தனியா  10 மார்க் வாங்கினாவே பாஸ் என்று தூக்கிப் போட்டு விடுகிறார்கள். மெடிக்கல் காலேஜிலும் அப்படித்தான் ரிசர்வ்டு ஆட்கள் உள்ளே வந்த உடனேயே டிகிரிய பிரிண்ட் பண்ணி ஒரு பேருக்கு ஐந்து ஆண்டுகள் உட்கார வைத்து கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். வேண்டுமானால் சம்பந்த பட்ட ரிசர்வ்டு இஞ்சினியரையோ அல்லது மருத்துவரையோ கேட்டு பாருங்கள்.
இடஒதுக்கீட்டு உரிமை உள்ளே நுழைவதற்கு மட்டும் தான், உள்ளே நுழைந்த பின்பு பார்த்தசாரதிகளுக்கும் பஞ்சத்து சாரதிகளுக்கும் ஒரே தேர்வுத்தாள் தான், ஒரே பாஸ் மார்க் தான். அப்புறம் எப்படி இவனுங்கு இப்படி கிளப்பி விடுறானுங்க?
இதில் இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால் இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு பெற்ற ஒரு எம்பிசியோ அல்லது பிசியோ எஸ்ஸி ஆட்கள் இருக்கும் இடத்தில் அவர்களை சிறுமை படுத்துவதாக எண்ணி இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும். அதனாலதான் திறமை இல்லாதவன் எல்லாம் வேலைக்கு வந்துடுறான் என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதன் காரணம் ஆயிரம் ஆண்டு கால வரலாறு கொண்டது. பார்ப்பனீயம் மேல் மாடியில் நிலையாக வீற்றிருக்க வேண்டுமெனில் ஏனைய கீழ் அடுக்கினர் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இருத்தல் ஆகாது. இணக்கமாக இருந்தா அவனுங்க சூழ்ச்சி தெரிந்து போய் கும்மாங்குத்து விழுந்து விடும் அல்லவா? எனவே சூழ்ச்சி செய்து அவர்களிடையே தொடர்ச்சியாக ஒரு பகை நெருப்பை புகைய விட்ட வண்ணம் இருப்பார்கள். அது இப்போதும் தொடரத்தான் செய்கிறது.
புராணக் கதைகளோடு சட்டப் பாதுகாப்பும் கூட அவர்கள் வசம் இருந்தது. ஆம், “பெண்களும் சூத்திரர்களும்(ஓ.சி பிரிவு நீங்களாக அனைவருமே இதற்குள் அடங்குவார்கள் என்பதை அடிகோடிட்டு வாசித்துக் கொள்க) சொத்து சேர்ப்பது பாவம். அவர்களது உழைப்பிற்கு கூலியாக சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்கிறது மனுநீதி. மனுநீதியின் படி பிராமண பெண்களும் கூட சூத்திரர்களுக்கும் கீழானவர்களே. பெண்கள் பிறக்கும் போது தந்தை, மணமானபின்பு கணவன், வயதான காலத்தில் மகன்கள் இவர்களின் பேச்சைக் கேட்டுத் தான் நடக்க வேண்டும். அவர்கள் எப்போதும் ஆணுக்கு அடிபணிந்து சேவையாற்ற வேண்டியது என்கிறது மனுநீதி.
இப்போது நடப்பது மன்னராட்சி அல்ல மக்களாட்சி. நாடு எல்லோருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் பொதுவான நாட்டில் ஒரு வர்ணத்தார் மட்டும் எல்லா நிலைகளிலும் அமர்ந்து கொண்டு அதிகாரம் செலுத்திக் கொண்டு இருப்பது நியாயம் ஆகாது. எனவே தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற முன்மொழியப்பட்டது. இதனை வலியுறுத்தி முடியாமல் தானே காங்கிரசில் இருந்து பெரியார் வெளியேறினார்.
நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இருந்தால் தான் அதிகாரப் பரவலாக்கம் சாத்தியமாகும். ஈராயிரம் ஆண்டு காலமாக பல்வேறு மதப் புரட்டுகளால் வேற்றுமையும் ஒடுக்குமுறையும் ஆழமாக வேரூன்றி இருக்கும் நாட்டில் சட்டப் பாதுகாப்பு இருந்தும் கூட அதிகாரப் பரவலாக்கத்தை முழுமையாக அமல் படுத்துவது குதிரைக் கொம்பாக உள்ளது.
நாடு எல்லோருக்கும் பொதுவானது. அனைத்து சாதி மக்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கச் செய்யும் போது தான் சமத்துவத்தை நிலை நாட்ட முடியும். அதற்கு இடஒதுக்கீடு கட்டாயமாக தேவை. எனவே இட ஒதுக்கீடு நமது அடிப்படை உரிமை. அது நம்மீது இரக்கப்பட்டு அரசாங்கத்தால் வழங்கப் படும் சலுகை அல்ல என்பதை அம்பேத்கர் பிறந்த நாளான இன்று தெள்ளத் தெளிவாக புரிந்துகொள்வோமாக.
 இன்னமும் இடஒதுக்கீடு கொடுக்கத் தான் வேண்டுமா?
ஆமாம் நிச்சயமாக கொடுக்கத் தான் வேண்டும். ஏதோ திராவிட இயக்கங்கள் இருந்த காரணத்தினால் தமிழ்நாட்டில் அதிகாரப் பரவலாக்கம் 50 விழுக்காடு அளவில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வட இந்தியாவில் நிலமை மிகவும் மோசம்.
இடஒதுக்கீட்டு உரிமையை பயன்படுத்துவது என்பது முழுமையாக வெற்றி பெற்றால் மட்டும் சமத்துவம் முழுமையாக வந்துவிடாது. எப்போது வர்ணாசிரம (அ)தர்ம அடித்தளத்தில் வலுவாக கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்து மத மூட நம்பிக்கைகள் உடைகிறதோ அப்போது தான் உண்மையான சமத்துவம் அடைய முடியும்.
இன்று கூட பாருங்கள் தமிழ்ப்புத்தாண்டு என்று நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஆண்டின் பெயர் தமிழில் உள்ளதா? 
ஒரு பழைமையும் பாரம்பரியமும் மிக்க மொழியின் பெயரில் ஆண்டுகளை செத்த மொழியான சமஸ்கிருத பெயரிட்டு அழைக்கிறோம் என்றால் நம் மொழியை எந்த அளவுக்கு இழிவு படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் அளவுக்கு அறிவு வேண்டும். 

Sunday, April 12, 2020


புத்தகம்  சர்க்கரை (நாவல்)
ஆசிரியர் கு.சின்னப்பபாரதி
பதிப்பகம் NCBH

கொரானா விடுமுறை காலத்தில் படிப்பதற்கு புத்தகங்கள் இல்லாமல் திண்டாடிவிடக் கூடாதே என்கிற எண்ணத்தில் சம்பள பில் போடப் போன போது லைப்ரரி பீரோவில் இருந்து கொஞ்சம் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தேன். அவற்றில் ஒன்று தான் இந்தப் புத்தகம்
இந்த நூலின் ஆசிரியர் கு.சின்னப்பபாரதி அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கொல்லிமலையில் ஹில்டேல் பள்ளியில் வேலை பார்த்த போது நாங்கள் பள்ளி செல்லும் வழியில் “பாரதிக் காடு“ என்கிற ஒரு பெரிய தோட்டம் உண்டு. அது இவரது தோட்டம் என்பது அந்த தோட்ட பணியாளர் ஒருவர் எங்கள் பள்ளி தமிழாசிரியர் இளவரசு அவர்களிடம் SPOKEN ENGLISH வகுப்புக்கு மாலை வேளைகளில் வருவார் அவர் மூலமாகத் தான் தெரியும். ஆனால் அவரின் நாவல் ஒன்றை இப்போது தான் படிக்கிறேன்.
நாவலின் பெயரில் மட்டும் தான் இனிப்பு உள்ளதே ஒழிய கதைமாந்தர்களின் வாழ்க்கை முழுக்க கசப்பாகத்தான் உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அரசாங்கமே முதலாளிகள் போல ஊழியர்களின் போராட்டங்களை கையாளுகிறது. தொழிலாளர்கள் சுரண்டல் சமூகத்தில் எந்த வகையில் எல்லாம் நடக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த நாவலைப் படியுங்கள்.
கரும்பு ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.  தங்கள் கரும்பு பருவம் வந்து வெட்டப்படாமல் நட்டமாகின்றது என விவசாயிகள் தொழிலாளர்களுக்கு எதிராக அணிவகுக்கின்றனர். பொது ஜனமோ ’நாமே நித்தம் வேலை என்பது இல்லாமல் கால் வயிறு கூட நிரம்பாமல் கெடக்கோம் மொல்லாளி இவனுங்களுக்கு எவ்வளவு கொட்டிக் கொடுக்கிறாரு அதுவும் பத்தலன்னு திமிரு எடுத்துப் போயி வேலை நிறுத்தம் பண்றானுவ, அவனுங்கள எல்லாத்தையும் தொரத்தி விட்டுட்டு புது ஆளுங்கள போட்டா தான் இவனுவ திமிரு அடங்கும்’. முதலாளி வர்க்கமோ இவனுங்களுக்கு பணிஞ்சி போயிட்டம்னா இதக் காட்டியே ஒவ்வொரு முறையும் எதாவது பண்ணுவானுவ என்கிற நிலையில் இருக்கின்றனர்.
2002ல் நான் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்த ஆண்டில் அம்மையார் ஜெ அவர்களின் ஆட்சி. அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல உரிமைகள் நீக்கப்பட்டன. அதற்காக ஊழியர்கள் ஒரு பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அரசு போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. அத்தோடல்லாமல் அரசு நிதியில் இருந்து 98 விழுக்காடு பணமானது அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கே போய்விடுகிறது என்ற அவதூறான விஷமப் பிரச்சாரத்தை முதல்வரே செய்தார். இதனால் பொது மக்கள் “இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மிக அதிகம், நாங்கள் அதில் கால்வாசி சம்பளத்தில் பணிபுரியத் தயாராக இருக்கிறோம்” என்றெல்லாம் கூறினார்கள். இந்த பேட்டியை மர்மப் புன்னகையோடு எதிர் கொண்ட ஜெ அவர்கள் 2003க்குப் பிறகு பணியில் சேர்வோருக்கு பங்களிப்பு ஓய்வு ஊதியம் என்கிற அறிவிப்பை வெளியிட்டு ஓய்வு ஊதியத்திற்கு ஆப்பு வைத்தார். அத்தோடல்லாமல் கால்வாசி சம்பளத்தில் மக்கள் வேலை பார்க்க தயாராக உள்ளனரே என்று 2004ல்தேர்வு செய்யப் பட்ட ஆசிரியர்களை கன்சாலிடேட்டட் பே என்கிற அடிப்படையில் பணியில் சேர்த்து 4000 மற்றும் 4500 ஐ சம்பளமாக கொடுத்தார். எந்த வாய் கால்வாசி சம்பளத்தில் பணிபுரிய தயார் என்றதோ அதே வாய் ”எங்கள் உழைப்பை குறைந்த சம்பளத்திற்கு சுரண்டாதே முழு நேர காலமுறை ஊதியம் கொடு” என்று போராட்டத்தில் இறங்கியது. தேர்தல் நெருங்கிய போதும் கூட அவர்களின் கோரிக்கைக்கு ஜெ அவர்கள் செவி சாய்க்க வில்லை. பிறகு வந்த கலைஞர் ஆட்சியில் தான் அவர்கள் காலமுறை ஊதியம் பெற்றார்கள் என்பது வரலாறு.
இந்த மாதிரி சமூகநாவல்களில் எப்போதும் அடித்தளம் விரிவாக போட்டுத் தான் கதையை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் கதையின் சில அத்தியாயங்களை பிடித்து தள்ளிக் கொண்டு தான் போக வேண்டும். அதன் பிறகு நமது கண்கள் ரெக்கை கட்டிக் கொண்டு நாவலில் சிறகடித்து பறக்க ஆரம்பித்து விடும்.
ஒரு விவசாயம் சார்ந்த கிராமப் பகுதியில் கரும்பு ஆலை துவங்கப் படுகிறது. அதில் முதலாளி தொழிலாளர்களையும் கரும்பு விவசாயிகளையும் எப்படி சுரண்டுகிறார். தொழிலாளர்களின் எழுச்சி எவ்வாறு போராட்டமாக உருகொள்கிறது, முதலாளி வர்க்கம் போராட்டத்தை எப்படி எதிர்கொள்கிறது போராட்டத்திற்கு பிந்தைய நிலவரங்கள் என்று நாவல் முழுவதும் சிவப்பு சிந்தனை நிறைந்து வழிகிறது. ஒடுக்கப்பட்ட கீழ் வர்க்கமும் ஒடுக்கப்பட்டு சாதி அடுக்கில் கீழே கிடக்கும் வர்க்கமும் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்கள் ஒன்று சேர்ந்து மேலே இருப்போரை எதிர்க்காமல் இருக்க எந்த மாதிரியான அரசியல் சூழ்ச்சி அவர்கள் இருவரையும் தொலைவிலேயே நிறுத்தி வைத்து உள்ளது என்பதையும் கதைக் கட்டமைப்பிலேயே தொட்டுச் செல்கிறார்.
நாவலில் அவர் ஒரு கிராமத்தில் உள்ள தாழ்த்தப் பட்டவர்களின் தெரு வாழ்க்கை முறை, உயர்சாதி ஏழை விவசாயக் குடும்பம், ஜமீன் குடும்பம், ஆலை உள்கட்டமைப்பு மற்றும் முதலாளிகளின் உளவியல் போன்ற அனைத்தையும் மிக அருமையாக எழுத்தில் வடித்துள்ளார். முக்கியமாக செத்த மாட்டைக் கொண்டு போய் அறுத்து பங்கிட்டு உண்ணும் விஷயத்தை அவ்வளவு நுணுக்கமாக விவரித்துள்ளார். தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களது வாழ்க்கை நிலை குறித்து எந்தப் புகாரும் இன்றி ’இது நமக்கு விதிக்கப்பட்டது’ என்கிற நிலையில் தான் அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் ஏற்கின்றனர் என்று அவர்தம் உளவியலை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.
மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், கதையில் அவர் பயன் படுத்தியுள்ள சொலவடைகள், “ஆகா“ என ஆச்சரியத்துடன் வாயை பிளக்க வைக்க வல்லவை. உதாரணத்திற்கு சிலவற்றை கீழே கொடுக்கிறேன் பாருங்கள்
“அம்மியில் குத்தினா என்ன ஆட்டுரலில் குத்தினா என்ன, நெல் அரிசியானா சரி தான்”
“கொட்டு முழக்கு பெரிசுதான் ஆனா கோமணத்துக்கு பஞ்சந்தான்”
“பெருமைக்கு புல்லுபோட்டா எருமைக்கு வயிறு நிறையுமா?”
“மச்சாம் பாலு குடிக்கத்தான் மாடு செனைபட்டுதுங்குற கதையா இருக்கே”
“கூதலுக்கு இல்லாத சேலை கூடாரம் கட்டப் போச்சாம்”
“எலி இல்லாத வலைய நாய் பறிக்காது தெரியுமா”


Sunday, April 5, 2020


புத்தகம்:தோழர் சோழன்
ஆசிரியர்: எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் (முன்னால் சட்டமன்ற உறுப்பினர்)


      அமேசான் கிண்டில் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தேர்வான புத்தகங்களில் ஒன்றுதான் இந்த ”தோழர் சோழன்” நாவல். கிண்டில் புத்தகங்களை வைத்து வைத்து படிப்பது தான் எனது வழக்கம். ஆனால் இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். அவ்வளவு சுவாரசியம் விறுவிறுப்பு. மேலும் 1987 காலகட்ட எங்கள் மாவட்ட உண்மைச் சம்பவங்கள் என்பதால் இன்னும் ஆர்வம் மேலிட கதையோடு ஒன்ற முடிந்தது. இப்போது கிண்டிலில் இலவசமாக கிடைக்கிறது. உடனடியாக பதிவிறக்கி வைத்து படியுங்கள்.
      
நூலாசிரியர் சிவசங்கர் அவர்களை நான் முதன்முதலாக பார்த்தது தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்பான விழா ஒன்று மாளிகைமேட்டில் அப்போதைய கல்வி அமைச்சர் திரு தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெற்றது. அப்போது அருகாமைப் பள்ளியான உட்கோட்டை பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் விழாவுக்குச் சென்றிருந்தோம். விழாவில் தங்கம் தென்னரசு பேசும் போது சிவசங்கர் அவர்களை குறிப்பிட்டு “மந்திரிக்கு முந்திரி மாலை போட்ட சிவசங்கர் அவர்களே“ என்று விளித்தார். ஆம் மிகப்பெரிய சைஸ் மாலை ஒன்றை முந்திரிப் பருப்புகளால் தயார் செய்திருந்தார். இந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடக் காரணம் கதையில் நான் மேலே குறிப்பிட்ட மாளிகை மேடு கிராமம் வருகிறது. உட்கோட்டைப் பள்ளியை பற்றியும் வருகிறது.

      கல்கியின் வரலாற்று நாவல் படித்திருப்போருக்கு தெரியும். உண்மை வரலாற்று நிகழ்வுகளின் ஊடாக கற்பனைக் கதாப் பாத்திரங்கள் (பொன்னியின் செல்வன் – நந்தினி) மற்றும் சம்பவங்களை புகுத்தி கதையை சுவாரசியமாக முன்னெடுத்துச் செல்வார்.
      சிவசங்கர் அவர்களும் உண்மைச் சம்பவங்களை (1987ல் அரியலூர் மற்றும் தமிழக அளவில் நடந்தவை) எடுத்துக் கொண்டு அதில் கற்பனைக் கதாப்பாத்திரங்களைப் புகுத்தி ஒரு சுவாரசியமான விறுவிறுப்பான வரலாற்று புனைவை தந்துள்ளார்.
      மருதையாற்று ரயில் பால குண்டு வெடிப்பு, பொன்பரப்பி வங்கிக் கொள்ளை, வன்னியர் சங்கம் நடத்திய இடஒதுக்கீட்டுப் போராட்டம் போன்ற உண்மைச் சம்பவங்களை எடுத்துக் கொண்டு சோழன் என்னும் புரட்சிகர எண்ணமும் தமிழர் விடுதலைப் படைஆதரவு நிலைப் பாடும் கொண்ட ஒரு இளைஞன் மூலமாக கதையை நகர்த்துகிறார்.
      1999ல் நான் பி.எட் டிரெய்னியாக பணிபுரிந்த பள்ளியில் இருந்த கணித ஆசிரியர் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும் வகுப்புக்குள் நுழைந்து கடைசி இரண்டு பெஞ்ச் மாணவர்களை மட்டும் அடிப்பார் அல்லது முட்டிப் போடச்சொல்வார். என்னவென்று விசாரித்த போது தான் தெரிந்தது கடைசி இரண்டு பெஞ்ச் மாணவர்கள் அவரிடம் டியுசன் செல்லாதவர்கள். அவரே வகுப்பாசிரியர் (உள்ளுர் வேறு) என்பதால் “வேண்டாத” மாணவர்களை உடனடியாக கண்டு பிடிக்க இந்த உத்தி. அப்போது முடிவு செய்தேன் அரசுப் பள்ளி வேலைக்கு சென்ற பின்பு நான் நிச்சயமாக எனது மாணவர்களிடம் கணிதப் பாடத்தை விற்பதில்லை என்று. கதையில் தோழர் சோழன் முதல் முறையாக ஒரு சம்பவம் செய்கிறார். அந்த சூழலைப் படித்த போது சற்றே அதிர்ந்து போனேன். உட்கோட்டைப் பள்ளி கணக்கு வாத்தியார் டியுசன் போகாத பசங்களை குறி வைத்து அடிக்கிறார். மாணவர்களின் குமுறல் கேட்டு அந்த ஆசிரியரை சோழன் “தட்டி“க் கேட்கிறார். அப்போது நான் அங்கு பணிபுரியவில்லை என்றாலும் அந்த சம்பவம் எனக்கு உறுத்தலாக இருந்தது. இது சார்ந்த ஒரு முகநூல் பதிவு பின்னூட்டத்தில் அது கற்பனை என்று ஆசிரியர் கூறியிருந்ததைப் படித்த பின்பு தான் ஆறுதலாக இருந்தது.
      கதைக்களமாக தமிழர் விடுதலைப் படை போன்ற ஒரு புரட்சிகர அமைப்பின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டு கதை பின்னுவது சற்று சிக்கலான விஷயம். அதுவும் அரசியல் தலைவர் என்பதால் கதையில் வரும் கருத்துக்கள் இவரது அரசியல் சார்பாக புரிந்து கொள்ளப் படும் அபாயம் உள்ளது. எனவேதான் ஆழமான உரையாடல்களை திட்டமிட்டே தவிர்த்துள்ளார்.   
      
      கதையில் எனது பெயரில் ஒரு கதாப் பாத்திரம் வருகிறது. (போயும் போயும்

 அந்தப் பாத்திரத்திற்கா எனது பெயர் வைக்கவேண்டும்) பரியேறி சமர் செய்த அக்காலச் 

சோழனின் ஊரிலிருந்து சைக்கிளேறி சமருக்குச் செல்பவன் தான் நமது “தோழர் சோழன்”

Tuesday, March 31, 2020

வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யுனல் ஜி.ஓ)


புத்தகம்: வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யுனல் ஜி.ஓ)
ஆசிரியர்:பேராசிரியர் க.அன்பழகன்

     புத்தகம் “கம்யுனல் ஜி.ஓ“ உச்ச நீதி மன்றத்தால் முடக்கப்பட்ட நேரத்தில் “அவால்“ எல்லாம் எப்படி குதூகலம் அடைந்திருப்பார்கள் என்கிற கற்பனை (நையாண்டி தொனிக்கும்) உரையாடலில் ஆரம்பித்து வகுப்புரிமைப் போராட்டம் உருவான விதம் வளர்ந்த வரலாறு அரசியல் அமைப்பின் முதலாவது சட்டத்திருத்தம் மூலமாக சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டதோடு முடிகிறது. ஆழமான ஆய்வு சமூக நீதி குறித்த மிகச்சரியான பார்வை ஆங்காங்கே எள்ளல் என அருமையாக எழுதியிருக்கிறார் பேராசிரியர். (ஒரு இடத்தில் “உலக உத்தமர்“ என்று காந்தியை விளித்திருப்பார்).
     ”வர்ணாசிரம (அ)தர்மத்தைத் தோற்றுவித்து, ஜாதிக்கொரு தொழிலென மக்களை ஒப்புக்கொள்ள வைத்து, அதை ஒப்பாமல் மக்கள் புரட்சி எண்ணம் கொள்ளாமல் இருக்க மூடநம்பிக்கைகளையும், பொய்க்கதைகளையும் புகுத்தி அறிவை அடிமைப்படுத்தி, எவரேனும் அதற்கு மாறாகப் புரட்சி செய்தால் அடியோடு ஒழிக்க மனு (அ)நீதியை வகுத்து அதை அரசுகளெல்லாம் ஏற்ற நடக்கச் செய்தல்” படிக்கும் போதே தலைசுற்றும் அளவுக்கு சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தை  ஆழமாக சமூகத்தில் வேரூன்றும் அளவுக்கு ஆயிரம் ஆண்டுகாலமாக ஒரு விஷ விருட்சமாக வளர்த்தெடுத்த பார்ப்பனிய சூழ்ச்சிகளை தோலுரிக்கும் ஒரு அருமையான புத்தகம் தான் இது,
     பார்ப்பனரல்லாதோருக்கு கல்வி உரிமை கிஞ்சிற்றும் கிடையாது, படிப்பது பார்ப்பன மக்களின் ஏகபோக உரிமை என அனுபவித்து வந்த நிலையை மாற்ற1917 ல் நீதிக்கட்சி முயற்சித்து வெற்றி கொண்ட ஒரு அரசாணை தான் கம்யுனல் ஜி.ஓ.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேவை என்கிற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் மத்தியில் 1920 களில் உதித்தது. என்னதான் பெரியார் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்குள்ளே இருந்து வற்புறுத்தினாலும் பார்ப்பன சூழ்ச்சி அதற்கு செவிசாய்க்கவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வருவதற்கு காரணமே வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாததுதான்.
கம்யுனல் ஜி.ஓ என்ன சொல்கிறது?
மொத்தம் உள்ள 12 இடங்களில்
இந்து பார்ப்பனரல்லாதோருக்கு     5
பார்ப்பனருக்கு                   2
முகம்மதியர்களுக்கு              2
கிருஸ்தவர்களுக்கு               2 (ஆங்கிலோ இந்தியர்கள் அடக்கம்)
மற்றவர்களுக்கு                  1(ஆதிதிராவிடர்கள் அடக்கம்)

அதாவது 100 க்கு 3 பேராக உள்ள பார்ப்பனருக்கு 100க்கு 17 உத்தியோகங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆதிதிராவிடர்களுக்க 12 ல் ஒன்று அதுவும் ஏனையோர் என்கிற பிரிவில்.
இதை பார்த்தவுடன் பார்ப்பனர் நெஞ்சம் பதறுகிறது. ஆனாலும் அவர்கள் எதையும் தான் நேரடியாக எதிர்க்க மாட்டார்கள் அல்லவா?
 அவர்கள் இன்று வரை வைத்துக் கொண்டு வரும் ஓயாத ஒப்பாரியான “தகுதி“ மற்றும் ”திறமை” குறித்த நீலிக்கண்ணீர் வடிக்கலாயினர்.
 இந்த நூலில் “தகுதி மற்றும் திறமை” என்கிற வெற்றுக் கூச்சலையும் அதன் பின்னால் உள்ள சூழ்ச்சியையும் ஒரு சேப்டரே ஒதுக்கி “வச்சு செஞ்சிருக்கார்” பேராசிரியர்.
     என்னதான் அரசாணை போட்டாலும் கல்லூரி சேர்க்கையின் போதே பார்ப்பனிய “கைங்கர்யம்“ வேலை செய்துவிடும் என்பதால் கம்யுனல் ஜி.ஓ எந்த அளவில் பின்பற்றப் படுகிறது என்பதை கண்காணிக்க ”கல்லூரிக் குழு” என்கிற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்கள். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது “கம்யுனல் ஜி.ஓ“ வை பின் வாசல் வழியாக வந்து எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருதும் ஆட்சியாளர்கள் “கலி முத்திடுத்து லோகம் கெட்டுடுத்து” தகுதி திறமைக்கு லோகத்துல மதிப்பில்லாமல் போயிடுத்து என்று நீலிக்கண்ணீர் வடித்து மெரிட்டுக்கு என்று 20 விழுக்காடு பெறுகின்றனர். பார்ப்பனிய ஒதுக்கீடு மற்றும் மெரிட் என்று இரட்டை வாசலை திறந்து கொண்டு மேலிட பதவி வகிக்கும் பார்ப்பனிய துணை கொண்டு கல்லூரிகளில் மற்றவர்களுக்கு உரிய இடத்தையும் அபகரிக்கிறார்கள். மேலும் கல்லூரிக் குழு வையும் கலைத்து விடுகிறார்கள்.
     இருந்தும் கூட அவர்களின் ஆசை தீரவில்லை. அனைத்து பிரிவு மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசாங்கத்தில் 100 விழுக்காடு பதவிகளையும் நாமே வகிக்க வேண்டும் என்கிற பேராசையால் சுப்ரீம் கோர்ட் வரை சென்று ( இந்தியா சுதந்திரம் அடைந்து புதிய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு) சட்ட நுணுக்கத்தை காட்டி வெற்றிகரமாக நீக்கி விடுகிறார்கள்.
     சென்னை மாகாணம் (அப்போது அது தானே பெயர்) முழுவதும் பள்ளி கல்லூரிகளில் போராட்டம் வெடிக்கிறது. இந்த காலத்தில் மக்கள் பணத்தில் கொழுத்த சூப்பர் ஸ்டார் ”சிஸ்டம்” இஞ்சினியர்கள் கூட போராட்டம் தவறு என்று கூறி இளைஞர் எழுச்சியை காயடித்து விட்டு திரும்ப எழுச்சி வரட்டும் அப்போ வரேன் என்று பிதற்றுகிறார்கள்.
     மாணவர்கள் தங்களது படிப்பு உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். அரசியல் சட்டம் புனிதமானது. அந்த சட்ட திட்டங்களை நாம் தான் மதிக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் மீது பார்ப்பனியம் கோமியம் தெளிக்க பார்க்கிறது. போராட்டக் காரர்களோ “மக்கள் நலனுக்காகத் தான் சட்டம், நலன் கெடும் என்றால் சட்டத்தை திருத்தலாம் தவறில்லை” என்று சட்ட திருத்தத்திற்கான வழிமுறையும் சட்டத்திலேயே உள்ளது என சுட்டிக்காட்டுகின்றார்கள். (உப்புக்கு பிரயோஜனம் இல்லாத ஜல்லிக்கட்டுக்கு எழுச்சியோடு போராடிவிட்டு ”நீட்“ டில் கோட்டை விட்டிருக்கிறோம் நாம்)
     வேறு வழியின்றி கல்வியில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் முதலாவது சட்டத்திருத்தமாக 1951 ல் வெற்றிகரமாக நிறைவேறுகிறது. ஆம், அரசியல் சட்டத்தையே மக்கள் நலனுக்காக முதல் முறை திருத்தம் செய்ய காரணமாக இருந்தது திராவிடம். அப்போது கோட்டை விட்டிருந்தோம் எனில் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் பலபேர் கல்லூரியை பார்த்திருக்க இயலாது.
     இடஒதுக்கீடு என்பது என்னவோ ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே அனுபவிக்கும் “சலுகை“ என்கிற எண்ணம் பெரும்பாலான பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மத்தியில் இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். அவர்களே தகுதி திறமை பற்றி பேசி சக ஆதிதிராவிட மாணவர்களை சிறுமை படுத்த முயல்வதையும் கண்ணுற்றிருக்கிறேன். இடஒதுக்கீடு என்பது உரிமை என்பதோ அதன் அடிப்படையோ தெரியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பலபேர், அமர்ந்திருக்கும் கிளை மீதே கோடரி வீசும் போதெல்லாம் ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே இடஒதுக்கீட்டு “சலுகை“க்காக சிலுவை சுமந்திருக்கிறார்கள்.
     தற்போது 28 மதிப்பெண் எடுத்துவிட்டு EWS என்கிற ஒதுக்கீட்டில் வங்கிப் பணியாளர் பணியினை பெற்றவர்களிடம் கேட்டுப் பாருங்களேன் “தகுதி திறமை“ என்னவாயிற்று என்று, அவா எல்லோரும் “செலக்டிவ்“ செவிடர்களாகி விடுவார்கள். 80 மதிப்பெண் எடுத்த எஸ்.ஸி, ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்காத பணி 28 மதிப்பெண் எடுத்த முற்பட்ட வகுப்பில் பிறந்த வருடம் 8 லட்சம் வருமானம் ஈட்டும் ”ஏழை”களுக்கு கிடைக்கிறது.
     இன்றைய இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை என்கிற புரிதலாவது குறைந்தபட்சம் தேவை.

    

Monday, March 23, 2020

‘டிரைவிங் லைசன்ஸ்” மற்றும் ”அய்யப்பனும் கோஷியும்”






     வேலையில்லாமல் வீட்டில் பாதுகாப்புக் காரணங்களுக்காக முடங்கியிருந்த வேளைகளில் அமேசான் ப்ரைம் வீடியோ அப்ளிகேஷன் துணைகொண்டு சில படங்கள் பார்த்து பொழுது போக்கினேன். சப்டைட்டில் துணை இருப்பதால் மொழி எல்லைகள் கடந்து படங்கள் பார்க்க முடிவது மிகப்பெரிய வாய்ப்பு.
     கே.வி.ஆனந்த் இயக்கிய முதல் படத்தில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசியபடி வரும் கொடிய வில்லனாக முதன் முதலில் பிரித்விராஜ் ஐ பார்த்தேன். அதன் பிறகு நினைத்தாலே இனிக்கும், மொழி போன்ற படங்களில் பார்த்திருக்கிறேன்.
     அதிகார பலம் மிக்க ஒருவரும் நேர்மையும் நெஞ்சுரமும் நிறைந்த சாதாரண ஒரு சுயமரியாதை மிக்க ஒரு அரசு ஊழியருக்கும் ஏற்படும் ஒரு உரசல் எந்த எல்லை வரை செல்லும் என்கிற சரடை எடுத்து திரைக்கதை அமைத்து சமைத்த அருமையான மலையாள திரைப்படங்களே தலைப்பில் நான் கூறியவை.
     டிரைவிங் லைசன்ஸ்- ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் பிருத்வி. ஒரு படத்தின் க்ளைமாக்ஸ் படமாக்கி விட்டு தனது மனைவியின் ஆப்பரேஷனுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நியாயமான நெருக்கடி. ஆனால் படமாக்க வேண்டிய லொகேஷனில் அனுமதி வாங்க நடிகரின் டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் தேவை என்கிறார்கள். ஆனால் டிரைவிங் லைசன்ஸ் எங்கேயோ தொலைந்து விட்டது. ஒரு டூப்ளிகேட் லைசன்ஸ் அப்ளை செய்து வாங்க வேண்டும். அதற்கு ஒரு தரமாவது நேரில் செல்ல வேண்டும். வந்து செல்வது ரகசியமாக வைக்கப் பட வேண்டும் என்று தனது உதவயாளரிடம்  கறாராக சொல்கிறார்.
     மோட்டார் வெஹிக்கிள் இன்ஸ்பெக்டர், பிருத்வியின் அதிதீவிர ரசிகர். அந்த நடிகரின் கட் அவுட்டை தனது கட்டிலுக்கு அருகிலேயே வைத்து ஆராதிக்கும் நடிகரின் தீவிர விசிறி. மேற்படி நடிகரின் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டதால் டூப்ளிகேட் வேண்டும்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை நேரில் வரவழைத்து பையனுடன் ஒரு செல்ஃபி எடுத்து பீற்றிக் கொள்ள திட்டமிடுகிறார். அடுத்த நாள் நடிகர் வருகிறார். அப்பனும் பிள்ளையும் ஆர்வத்தோடு பரிசு பொக்கே என ரெடி செய்து காத்திருக்கிறார்கள்.
     ஆர்.டி.ஓ ஆபீஸ் வாசலில் காரை தானே ஓட்டியபடி வந்து இறங்குகிறார் நடிகர். இறங்கிய உடனே நிருபர்கள் சூழ்ந்து கொண்டு இப்போது தான் டிரைவிங் லைசன்ஸ் வாங்குறீங்களா? அப்புறம் எப்படி கார் ஓட்டுறீங்க? ஒரு பொறுப்பான நடிகர் சட்டத்தை மீறலாமா? என கேப் விடாமல் கேள்விகள் கேட்டு திணற அடிக்கிறார்கள்.
     தலை வெடிக்கும் கோபத்தோடு ஓடி வந்து ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வந்து தாழிட்டுக் கொண்டு யார் மீடியாவுக்கு சொன்னது என கொந்தளிக்கிறார். நேரம் காலம் தெரியாமல் மோட்டார் வெஹிக்கில் இன்ஸ்பெக்டர் மகன் பொக்கே வை நீட்ட வாங்கி விசிறி அடிக்கிறார். மகன் கோழிக்குஞ்சு போல பயந்து போய் தனது அப்பாவின் பின்னால் ஒளிகிறான்.
     ரசிகராக இருந்த MVI பரம எதிரி போல ஆகிறார். அதன் பின்னர் லைசன்ஸ் வாங்க ஏகப்பட்ட கெடுபிடிகளை கறாராக கடைபிடிக்கும் MVI க்கும் நடிகருக்கும் மான பரபரப்பான தருணங்கள் படத்தை ஒரு திரில்லர் ரேஞ்சுக்கு கொண்டு செல்கிறது.

அய்யப்பனும் கோஷியும்- அய்யப்பன் மிக நேர்மையான நெஞ்சுறுதி கொண்ட சுயமரியாதை மிக்க எஸ்.ஐ. கோஷி பணக்காரர், ரிட்டையர்டு மிலிட்டரி. ஒரு நாள் மது தடைசெய்யப்பட்ட வனப்பகுதியில் அய்யப்பனும் அவர்களின் போலிஸ் சிப்பந்திகளும் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சரி முடித்து விட்டு கிளம்பளாம் எனும் போது கோஷியின் வண்டி வருகிறது. டிரைவர் வண்டி ஓட்டுகிறார். கோஷி பின் சீட்டில் மது போதையில் கதவில் சாய்ந்து நல்ல உறக்கத்தில் வருகிறார். சோதனை செய்கிறபோது கதவை திறக்கையில் பொத்தென்று வெளியே வந்து விழுந்து தூக்கம் கலைகிறார். அதன் பின்னர் கோபம் தலைக்கேறி சிறுத்தையாய் சீறுகிறார். அவரின் வண்டியில் இருந்த மது பாட்டில்கள் எடுத்து சீல் வைக்கப் படுகின்றன. அவர்மேல் வழக்க போடப்படுகிறது. ஸ்டேஷன் கொண்டு வந்த பின்பு தான் தெறிகிறது அவர் பெரிய இடத்தின் தொடர்புகள் உள்ள பெரிய குடும்பத்து ஆள் என்பது.
அதன் பின்பு மேலதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அவரை சமாதானப் படுத்தும் விதமாக சீல் வைத்த பாட்டில் ஒன்றை பிரித்து மது ஊற்றிக் கொடுத்தபடி அய்யப்பன் பேசுகிறார். சீல் பிரித்தது மது வை ஊற்றி விட்டு மீதம் காலி இடத்தில் தண்ணீர் ஊற்றி ஈடு செய்வது வரை கோஷி தனது செல்போன் கேமராவில் படமாக்கி விட்டு சிறைக்கு செல்கிறார்.
     அய்யப்பனுக்கு வேலை போகிறது. இருவருக்குமான உரசலில் கோஷி தனது தரப்பை சரிசெய்து பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணினாலும் அவரது கட்டுப்பாடு இன்றியே பிரச்சனை முற்றிக் கொண்டே செல்கிறது.
     சற்றேறக் குறைய 3 மணி நேர படம். நல்ல பரபரப்புடன் செல்கிறது. நல்ல கிராமிய மெட்டில் அமைந்த மூன்று பாடல்கள் மனதை ஈர்க்கின்றன. படத்தின் பின்னணி இசை அமர்க்களம்.

     ஒரு நடிகர் ஒரே கதையில் இரண்டு முறை நடிக்க மிகுந்த தைரியம் வேண்டும். இரண்டு படங்களுமே ஒரே கதையம்சம் கொண்டவை தான் என்றாலும் இரண்டும் படமாக்கப் பட்ட சூழல் வரிசையாக முளைவிடும் சிக்கல்கள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன. இருவருக்கிடையே உள்ள ஈகோ சார்ந்த் பல பிரச்சனைகளை நாம் நமது அலுவலகங்களிலோ அல்லது உறவினர்கள் மத்தியிலோ பார்த்திருப்போம். படத்தின் திரைக்கதை அந்த இருவரின் பிரச்சனை முளைவிடுவது, வளர்வது மற்றும் முற்றுவது என்று பரபரப்பாக செல்கிறது.


Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...