Thursday, May 14, 2020

வலி- சிறுகதை



ஆசிரியர்- பாப்லோ அறிவுக்குயில்
முதலில் கதையாசிரியர் பாப்லோ அறிவுக்குயில் பற்றி பார்க்கலாம்.
90 களில் நான் எங்கள் ஊர் கிளை நூலகத்தில் உறுப்பினராகி ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் தமிழ்வாணன் நாவல்களை விரும்பி வாசித்துக் கொண்டு இருந்தேன். ஒரு நாள் மாமா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது நண்பர் அறிவழகனுடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அறிவழகன் அவர்கள் கதையெல்லாம் எழுதுவார் என்று அவரது புதிய புத்தகம் ஒன்றைக் கொடுத்தார். நான் புரட்டிப் பார்த்து விட்டு “என்ன மாமா இது எல்லாம் கிராமத்துல பேசுற மாதிரியே இருக்கு?“ என்று அலட்சியமாக பதிலுரைத்தேன். புத்தகத்தில் “பாப்லோ அறிவுக்குயில்” என்ற பெயரைப் பார்த்துவிட்டு மாமாவை பார்த்தேன், அது அவரது புனைப்பெயர். அந்தப் பெயரில் தான் கதைகள் எழுதுகிறார் என்றார்.
     அந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு இருபது ஆண்டுகள் கழித்து அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றைப் பார்த்தேன். பிறகு எங்கள் பள்ளி நூலகத்திலும் ஒரு சிறுகதைத் தொகுப்பை பார்த்தேன். இந்த “வலி“ என்ற சிறுகதை எங்கள் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்த ”கிளுக்கி” என்கிற தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கடைசி சிறுகதை.
     கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் என்று ஒவ்வொரு ஊர் மக்களின் பேச்சு வழக்கிற்கும் ஒரு நடை உண்டல்லவா? ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அரியலூர் சுற்று வட்டார கிராம மக்கள் பேசும் பேச்சு வழக்கு மொழி இவரது எழுத்துக்களில் அவ்வளவு இயல்பாக வருவது பெரும் வியப்பு. உழைக்கும் அடித்தட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டி அடக்கி ஆளும் ஆதிக்க வர்க்கம் குறித்து எழுதும் போது வியர்வையின் வீச்சத்தையும் ரத்தத்தின் நெடியையும் இவரது எழுத்துக்களில் உணரலாம்
     “அந்தியின் மஞ்சள் புன்னகையை திரையிட்டு மறைத்துக் கொண்டிருந்தது இருள்” என்று தொடங்குகிறார். டவுனில் இருந்து தனது “குக்கிராமத்திற்கு“ வருகிறான் கதைநாயகன். அவனது கிராமத்தில் இருந்து முக்கிய சாலை மூன்று கிலோமீட்டர் தொலைவு. முக்கிய சாலை சந்திப்பும் கூட முக்கியமான ஊர் இல்லை என்பதால் பெரும்பாலான பேருந்துகள் நிற்பதில்லை. இருள் கவிந்த நேரத்தில் முக்கிய சாலையில் இறங்கி ஒரு பெரிய சூட்கேசை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு செல்கிறான். சூட்கேசில் என்ன இருக்கிறது? அந்த மாத சம்பளப் பணம் முழுவதையும் புத்தக கண்காட்சியில் செலவு செய்து வாங்கிய புத்தகங்கள்தான் உள்ளன.
                அவனது நினைவில் தனது கிராமத்திற்கு பேருந்து வேண்டி முக்கிய சாலையை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் நடத்திய பெரும் மறியல் போராட்டமும், அதற்காக தானும் நண்பர்களும் கிராம மக்களும் வாங்கிய லத்தி அடிகளும் அதற்கு பிறகு ஒரு இரண்டு முறை மட்டும் ஊருக்குள் பேருந்து வந்து செல்லும் வாய்ப்பு கிட்டியதும் ஓடிக்கொண்டு இருந்தது.
     நவீன மாற்றங்கள் பழமைவாதிகளை ஏதாவது ஒரு வகையில் உளுக்கி எடுத்து விடுகின்றன. சாதிய மேலாதிக்கமும் அடக்குமுறையும் மேலோங்கி இருக்கும் அவனது கிராமத்தில் பேருந்தினால் ஒரு புதிய சிக்கல். தாழ்த்தப் பட்டவர்கள் பேருந்தில் தங்கள் அருகிலோ தங்கள் கண் எதிரிலோ அமர்ந்து செல்வதை ஆதிக்க சாதியினரால் ஜீரணிக்க இயலவில்லை. “கெவருமண்டு பஸ்ஸ விட்டாலும் விட்டானுவ பறப்பயலுவ சக்கிலிப் பயலுவளுக்கெல்லாம் திமிரு ஏறிப்போச்சு வந்து ஒரசிக்கிட்டு குந்துரானுவ” என்று சீறுகிறார்கள். இங்கே ஃப்ளாஷ்பேக் கட்டாகிறது.
     ஊருல என்ன விசேஷம் என்று நண்பர்களிடம் விசாரிக்கிறான். பேருந்தில் உக்காரப்போன மதியை மேல் சாதியினர் அடிக்க இவனும் திருப்பி அடிக்க ஊரில் பஞ்சாயத்து வைத்து மதிக்கு மட்டும் அபராதம் போட்டிருக்கிறார்கள். இதற்கு இடையில் தாழ்த்தப் பட்ட மக்கள் இடையில் உட்சாதி பிரிவினையால் அந்தப் பிரச்சனையை மற்றவர்கள் கேட்கவில்லை என்று அறிந்து கோபப்படுகிறான்.
     இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலக்காரணம் என்ன என்று ஊர் பெருசுகள் யோசித்து காரணத்தை கண்டு பிடிக்கிறார்கள். ஆமாம், இந்தப் பேருந்து ஊருக்குள் வந்து செல்வது தான் காரணம். அதனால் எதாவது பிரச்சனை பண்ணி டிரைவர் கண்டக்டரை அடித்து உதைத்து ஊருக்குள் பேருந்து வராமல் பண்ணி விடுகிறார்கள். சாதிய அடுக்கு நிலை எப்போதும் சிறு நெகிழ்வுத் தன்மையும் இன்றி மிகக் கெட்டியாக இருக்கவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
     தாழ்த்தப் பட்ட சாதியில் இருந்து வரும் நபர் வங்கி ஊழியராக இருந்தாலும் கூட தனது பெயரைச் சொல்லி அழைப்பதை பொறுத்துக் கொள்ள இயலாத ஆதிக்க மன நோயாளி  களை நான் அறிவேன்.
     ஒரு தலித் உயரதிகாரி தனக்கு கீழ்நிலையில் உள்ள ஆதிக்க சாதி ஊழியரிடம் பணி ஆய்வு நிமித்தம் செல்லும் போது தாமாகவே தரையில் அமர்ந்து கொண்டு ஃபைல் பார்ப்பதும் அந்த கீழ்நிலை ஊழியரோ நாற்காலியில் அமர்ந்த படி குனிந்து குனிந்து பதில் அளிக்கும் காட்சியையும் நான் அறிவேன். (அவ்வளவு தூரம் அஞ்சத்தக்க அளவிலான சாதிய மேலாதிக்க மனநிலை கொண்ட ஊர்கள் உள்ளன)
     இப்போது அவர்களின் நிலமை மிகவும் இரங்கத்தக்கதாக உள்ளது. என்னதான் நவீனத்தை எதிர்த்தாலும் கல்வி எல்லா மாற்றங்களையும் சாத்தியமாக்கி உள்ளது.
    

Tuesday, May 12, 2020

பொதுத்தேர்வு எனும் பெரும்பூதம் – 4 “மீனுங்களா ஓடிவாங்க மரம் ஏறலாம்!!”



“என்னை தேர்ச்சிப் பெறச் செய்யவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், நான் உயிரோடு இருப்பதும் சாவதும் உங்கள் கையில்” – என்ற மிரட்டலான ப்ளாக் மெயிலை நான் கண்டது பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் போது.
இன்னும் பல உருக்கமான கடிதங்களையும் கண்டதுண்டு. அந்த தேர்ச்சி என்கிற எல்லைக் கோட்டை எட்டிப் பிடிக்கத்தான் எத்தனை பிரயத்தனங்கள்.
பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பாராட்டும் பரிசும் நிச்சயம் உண்டு, பள்ளியில் உள்ள பெருமைக்குரியோர் பட்டியலில் அவர்களது பெயரை நிரந்தரமாக எழுதி வைத்துப் பெருமை படுத்துவார்கள்.
பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போதே அவர்கள் என்ன படிப்பு படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் எவ்வாறெல்லாம் முழுகவனத்தையும் படிப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்று படிப்பு படிப்பு படிப்பு என்று ஒட்டு மொத்தமாக கல்வி என்றாலே ஐந்து பாடங்களின் மதிப்பெண்களுக்குள்ளே மட்டுமே உள்ளது போல ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுவிட்டது.
முழுக்க முழுக்க தேர்வு மற்றும் மதிப்பெண் மையக் கற்றல் கற்பித்தலாகிப் போன வகுப்புகள் சுவையற்றதாகிப் போய்விட்டது. மனப்பாடம் என்கிற ஒற்றைத் திறமையை வளர்த்தது அன்றி வேறு என்ன செய்து விட்டது இந்த மதிப்பெண்களை துரத்தும் கல்வி முறை.
நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனிடம் “கரண்ட் எப்படிப்பா தயார் பண்றாங்க?“ என்று ஒரு முறை (ஆய்வு நோக்கில் இந்த ஒரே கேள்வியை பலமுறை கேட்டுள்ளேன்) கேட்டேன். பயல் பேந்த பேந்த முழிச்சான். அப்படியே சற்று அவனது மொழியில் கேள்வியை மாற்றிப் போட்டேன் “ஏசி மின்னியற்றி வேலை செய்யும் விதத்தை விளக்குக” அவ்வளவு தான் மடை திறந்த வெள்ளமென விடை வந்தது. உள்ளார்ந்த புரிதல் இல்லாமல் வெற்று வார்த்தைகளை மனப்பாடம் செய்வதில் என்ன பயன்.
நான் உட்கோட்டைப் பள்ளியில் பணிபுரிந்த போது, அறிவியல் கண்காட்சி நடத்தும் போது மெல்லக் கற்கும் பல மாணவர்கள் வித்தியாசமான பல ஐடியாக்களை செய்து காட்டுவார்கள். ஒரு பையன் ஒரு செட் குட்டி சீரியல் பல்புகளை வைத்துக் கொண்டு அவ்வளவு வித்தைகள் காட்டிவிட்டான். வகுப்பறையைப் பொறுத்தவரை அவனெல்லாம் “உனக்கு ஒண்ணும் தெரியாது உக்காருடா” ரகம் தான்.
இவர்களின் செயல்முறை அறிவுகளுக்கு வகுப்பறையில் இடம் இல்லை. பத்தாம் வகுப்பில் செய்முறைத் தேர்வு வைத்து 25 மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள். அறிவியலின் முழுத் தேர்ச்சிக்கு அன்றி அதனால் வேறு பயன்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேல்நிலை வகுப்புகளிலே கூட உபகரணங்கள் வெறும் காட்சிப் பொருட்கள் தானே?! (பல கல்லூரிகளிலே கூட இதுதான் நிலமை என்று சிலர் எண்ணுகிறீர்கள் தானே?! மைண்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டேன்)
இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் ஆண்டு மலர் தயார் செய்வதாகவும் அதற்கு அனைத்து மாணவர்களும் எதாவது ஒரு வகையில் ஒரு படைப்பை அளிக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தேன். ஒரு ஏழாம் வகுப்பு மாணவி மட்டுமே நான்கு கதைகள் எழுதி தந்துவிட்டாள். மற்றொரு மாணவி ஒரு 20 தாள்களில் படங்கள் வரைந்து வண்ணம் தீட்டி வந்து மேஜையை நிரப்பி விட்டார். ஒரு பாராட்டு முடிந்தால் ஒரு ஐந்து ரூபாய் பென்சில் கொடுத்துப் பாருங்கள் அவர்கள் அந்த திறமை அங்கீகரிக்கப்பட்டதை எண்ணி அகமகிழ்ந்து போவார்கள். விளையாட்டு, இலக்கியம் மற்றும் கலை சார்ந்த விஷயங்களுக்கு பள்ளிகளில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்று எண்ணிப் பாருங்கள்
மாநில அளவிலான கலைத் திருவிழாவிற்கு எங்கள் பள்ளியில் இருந்து ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வானான். பறையிசைப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் கலந்து கொண்டான். வகுப்பறையைப் பொறுத்தவரை அவன் 100 விழுக்காடு தேர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவன். ஆனால் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சான்றிதழை காலைவழிபாட்டுக் கூட்டத்தில் பாராட்டி வழங்கியபோது அவனது முகத்தை பார்க்க வேண்டுமே அவ்வளவு பிரகாசம். இசைக் கல்லூரியில் சேர்ந்து இந்த திறமையை வேறு லெவலுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் நீ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்று எடுத்துக்கூறி அவனது கவனத்தை படிப்பின் பக்கமும் கொஞ்சம் திருப்ப முடிந்தது.
இந்த சம்பவங்களால் உந்தப் பட்டு வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான எந்தப் போட்டியாக இருந்தாலும் மாணவர்களை தயார்செய்து அனுப்புவதை எங்கள் பள்ளியில் வழக்கமாக கொண்டுள்ளோம். மாணவர்களின் உள்ளார்ந்த திறமையை அடையாளம் காணுவது தானே பள்ளிகளின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.
எந்த திறமையும் வேண்டாம் படிப்புத் திறமை மட்டும் போதும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் வேண்டுமானால் அறியாமையால் நினைக்கலாம், பள்ளிகள் அந்தமாதிரி பொறுப்பில்லாமல் எண்ணுதலாகாது. இந்த மாதிரியான ஆட்டுமந்தை சிந்தனைகளின் விளைவுகள் என்ன தெரியுமா?
“இஞ்சினியரிங் தான் பெஸ்ட், கை நிறைய சம்பளம், எல்லோரும் ஓடுங்க ஓடுங்க” என்று கூறியதன் விளைவு, பனிரெண்டாம் வகுப்பு கணிதப் பிரிவு மாணவர்கள் எண்ணிக்கையை விட தமிழ் நாட்டில் உள்ள இஞ்சினியரிங் இடங்கள் அதிகமாக உள்ளன. அதாவது எல்லா மாணவர்களும் இஞ்சினியரிங் சேர முடிவெடுத்தாலும் இடங்கள் மீந்து போகும்.
இப்போ என்னாச்சு? ஆள் கிடைக்காமல் “அதெல்லாம் முடியாது நான் காலேஜ் ஆரம்பிச்சுட்டேன் நீ வந்து படிச்சே ஆகணும்” என்று கையை பிடித்து இழுக்கிறார்கள்.
அப்புறம் 2002 க்குப் பிறகு ஆசிரியர்கள் ஏராளமாக பணிநியமனம் செய்யப் பட்டனர். உடனே,”ஏம்பா, நல்ல சம்பளம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என ஏராளமான லீவு எளிதான(?!!) வேலை எல்லோரும் வந்து பி.எட் சேருங்கப்பா” என்று ஈர்க்கப்பட்டனர். விளைவு, மாவட்டத்திற்கு 10 பி.எட் கல்லூரிகள் ஆரம்பிக்கப் பட்டன. நானெல்லாம் டி.ஆர்.பி தேர்வு எழுதியபோது ஒரு லட்சம் பேர் கூட தேர்வு எழுதவில்லை. ஆனால் இப்போது பனிரெண்டு லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
அப்புறம் இந்த உயர் நடுத்தர மக்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டராகத்தான் ஆகவேண்டும் என்று எண்ணுகிறார்கள். உங்க பிள்ளைகளை டாக்டராகி காட்டுகிறோம் என்று கோழிப்பண்ணைப் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகின.(இஞ்சினியரிங் மோகத்தின் போதே ஆரம்பித்து விட்டது) தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிறைய தொடங்கப் பட்டன. நீட்டுக்கு முந்தைய ஆண்டு நான் கேள்விப் பட்டவரையில் நன்கொடை ஐம்பது லட்சம், அப்புறம் வருடாந்திரம் 10 லட்சம் கட்டணம். என்று ஒரு பையன் டாக்டராக ஒரு கோடி சொச்சம் ஆகிவிடுகிறது.
அப்படின்னா நீட் வந்த பிறகு நிலமை மாறிப் போச்சா? அப்படியெல்லாம் இல்லை, நாங்க மட்டும் என்ன தக்காளித் தொக்கா, எங்களுக்கு ஒரு பத்து லட்சத்தை வெட்டிட்டு காலேஜ் க்கு கட்டுங்க என்று கோச்சிங் சென்டர் காரர்கள் குறுக்கே நிற்கிறார்கள்.
இந்த நீட் எக்ஸாமுக்காக சிலபசை மாத்துறேன்னு இவங்க பர்னிச்சர உடைச்சதுல அரசுப் பள்ளிகளில் கணிதப் பிரிவே காலியாகிக் கிடக்கிறது. புது சிலபஸ் ஆரம்பித்த ஆண்டு அட்மிஷனில் அமர்ந்திருந்த போது ஒரு பையன் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவு கேட்டான். சரி என்று அட்மிஷன் போட்டு புத்தகம் பெற்றுக் கொள்ள அனுப்பி வைத்தோம். அங்கே உயிர்-தாவரவியல் புத்தகத்தை ஒரு மினி தலையணை சைசில் கொடுக்கவே பயல் ஆடிப் போய்விட்டான். புத்தகத்தை வாங்கிக் கொண்டு திரும்ப எத்தனிக்கையில் ”எப்பா நில்லுப்பா இன்னும் இருக்கு” என்று உயிர்-விலங்கியல் என்கிற அடுத்த தலையணையை எடுத்ததில் பையன் மூர்ச்சையாகிவிட்டான். மூர்ச்சை தெளிந்தவுடன் அவன் கேட்ட கேள்வி, “வாட் இஸ் த புரசிஜர் ஆஃப் சேஞ்ச் த குருப் சார்?”
கல்வி என்பது நம்மை போன்ற பின்தங்கிய நாடுகளில் வேலைவாய்ப்புக்கான ஒரு தகுதி என்ற எண்ணம் ஏற்படுவதில் தவறு இல்லை. ஆனால் ஒட்டு மொத்த நாட்டிலும் பொறியியல், மருத்துவம் இவற்றைச் சுற்றியே பணிவாய்ப்புகள் இருப்பதாக ஒரு தவறான மாயையை உருவாக்கி வைத்து இருப்பது தான் தவறு.
மற்ற படிப்புகள் மற்றும் திறமைகள் எதற்கும் மதிப்பில்லை. மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகள் விருப்பங்கள் எதற்கும் இங்கே இடம் இல்லை.
“எல்லோருமே பெரிய திறமைசாலிகள் தான், ஆனாலும் ஒரு மீனிடம் மரம் ஏற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை வைத்தோமானால் அந்த மீன் தன் வாழ்நாள் எல்லாம் தன்னை ஒரு முட்டாள் என்றே எண்ணிக் கொள்ளும்” என்று அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் கூறி உள்ளார்.
ஆனால் இங்கே நாம் பல “மெஸ்ஸி“க்களின் கால்களை ஒடித்து வகுப்பறைக்குள் உட்காரவைத்திருக்கிறோம். பல ரவிவர்மாக்களின் வண்ணத் தூரிகைகளை பிடுங்கி எறிந்துவிட்டு பேனாக்களை திணித்து இருக்கிறோம்.
அவர்கள் எதுவாக வேண்டுமானால் ஆகட்டும் அதற்கு குறைந்தபட்சத் தகுதி என்று ஒரு வகுப்பு வேண்டாமா? அதில் அவர்களின் திறமைக்கு ஒரு மதிப்பீடு வேண்டாமா? என்று கேட்கலாம்.
மாணவர்களின் பாடத்திறமையை மதிப்பீடு நிச்சயமாக செய்ய வேண்டும் தான். ஆனால் தற்போது இருக்கும் மதிப்பீட்டு முறை மாணவர்களின் உண்மையான நிலையை காண்பிக்கிறதா?
90 மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கும் 100 மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கும் உண்மையிலேயே பெரிய வேறுபாடுகள் இருப்பதாக எண்ணுகிறீர்களா?
30 க்கும் 35 க்கும் பெரிய வேறுபாடு உண்டா? 35 எடுத்தவன் அடுத்த வகுப்பு சேர்க்கைக்கும், 30 எடுத்தவனோ திருப்பூருக்கோ, சென்னைக்கோ வேலைக்குச் செல்வது நியாயமா?
எல்லோருக்கும் கிரேடு முறையில் மதிப்பீடுகளை வழங்குவதில் என்ன தடை இருக்க முடியும்.
"ஏம்பா டீச்சர்ஸ் திறமையை மதிப்பீடு செய்யவும்கூட எங்ககிட்ட இருக்கிற டூல் பொதுத்தேர்வு ஒண்ணுதாம்பா தயவு செஞ்சி அந்த ஃப்ரனிச்சர மட்டும் ஒடைச்சிடாதே!!'

"அப்போ சின்ன கிளாஸ் டீச்சர்ஸ்!!"

"அதுக்குதாம்பா 5 வதுக்கும் 8 வதுக்கும் பப்ளிக் பரீச்ச வருது!!"

"என்ன ஒரு புத்திசாலித்தனம்?!! அப்ப நல்லாசிரியர் விருது வாங்குன எல்லாரும் நல்லாசிரியர் என்று நம்பிகிட்டு இருக்குற குரூப்பா நீங்க?!"

ஆசிரியர்களின் திறமையை மதிப்பீடு செய்யவும் இந்த தேர்வுதான் அளவுகோல் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்குமானால் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன்.

நூறுவிழுக்காடு தேர்ச்சிக்கும் Teaching Attitude க்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்பது தான் நிதர்சனம்
நமது மனது எல்லாவற்றையும் அளந்து ஒரு “அளவை“(Quatity) நிர்ணயித்து பழகிவிட்டது. எனவே எண்சார்ந்த மதிப்பீடுகள் நம்மிடையை பிரபலமாகி விட்டது. மதிப்பெண் மற்றும் தரம் இதையெல்லாம் நீக்கிவிட்டால் தனியார் பள்ளிகள் எவ்வாறு தங்கள் பள்ளிகளின் தரத்தை “அளவிட்டு“  விளம்பரம் செய்து சந்தைப் படுத்த இயலும்?
அப்புறம் “உங்கள் பிள்ளை சிறப்பாக படிக்கிறான்“ என்று கூறினால் நமக்கு திருப்தி இல்லை. யாரைவிடவெல்லாம் நம்ம புள்ள திறமையா இருக்கிறான். யாரெல்லாம் புள்ளய விட மேல இருக்காங்க, யாரெல்லாம் கீழே இருக்காங்க என்கிற ஒரு அடுக்கு நிலை ஏற்படுத்திக் கொண்டு மகிழ்வது என்பது பழக்கமாகிப் போனது. இரண்டாயிரம் ஆண்டுகளாக வர்ணாசிரம அடுக்கைப் பழகிக்கொண்டு இருகிக் கிடக்கும் நமது ஆழ்மன உளவியலின் வெளிப்பாடாக இருக்குமோ?
கொரானா பாதித்து இருக்கும் இந்த நேரத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையில் இருக்கும் கிரேடு முறை மதிப்பீட்டை பத்தாம் வகுப்புக்கும் பள்ளித் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்குவதை பரிசீலனை செய்ய வேண்டும். பொதுத் தேர்வு என்கிற ஒன்றெல்லாம் வேண்டாம். மதிப்பீட்டை பள்ளி ஆசிரியர்களே செய்யட்டுமே.
இனிவரும் காலங்களில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் என்ற மூன்று மாதங்களையும் பாடம் நடத்துவதற்கு நீட்டித்துக் கொடுத்தால் பாடப்புத்தகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் நின்று நிதானமாக நடத்திட இயலும். வகுப்பறைகளுக்கு வண்ணம் சேர்க்கலாமே.
“ஏம்பா,  நீங்கல்லாம் பத்தாம் வகுப்பு வந்துட்டீங்க இன்னிலேருந்து  உங்களுக்கு பி.இ.டி பீரியட் கிடையாது, நீதி போதனை பீரியட் கிடையாது, டிராயிங் பீரியட் கிடையாது, ஒன்னுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு மேல அடிக்க கூடாது, மதியம் பத்து நிமிடம் சாப்பிட்டு விட்டு டெஸ்ட் எழுதப் போயிடணும் சரியா?” என்கிற நெருக்கடிகள் இல்லாத நெகிழ்வுத் தன்மை நிறைந்த வகுப்பறைகளை உருவாக்க வேண்டுமானால் நமது மதிப்பீட்டு முறைகள் மாறியாக வேண்டும்.
குரங்குகளைப் பறக்கவும் மீன்களை நீந்தவும் கற்றுத்தரும் வகுப்பறைகள் இனியும் வேண்டாமே!!
இத்துடன் இந்தக் குறுந்தொடர் நிறைவுற்றது நன்றி.

பின்குறிப்பு: இந்த கட்டுரைகள் அனைத்தும் எனது அனுபவங்களையும் எண்ணவோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது. பெரிய பெரிய நூல்களை எல்லாம் ரெபரென்ஸ் செய்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை அன்று. இதில் கருத்தியல் ரீதியான முரண்களோ தவறுகளோ இருந்தால் நண்பர்கள் பின்னூட்டம் அளிக்க வேண்டுகிறேன்.

Sunday, May 10, 2020

பொதுத்தேர்வு எனும் பெரும் பூதம் -3




பொதுத்தேர்வு என்ற உடன் நமக்கு ஞாபகம் வருவது சென்டம் ரிசல்ட் தானே?!
இந்த சென்டம் ரிசல்ட் நமது அதிகாரிகளையும் ஆசிரியர்களையும் பள்ளிகளையும் எப்படி சுழற்றி சுழற்றி அடிக்கிறது தெரியுமா??
தேர்வு முடிவுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டங்களில் சென்டம் ரிசல்ட் வாங்கிய ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் அவ்வளவு பாராட்டும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப் படுகிறது.
இப்போதெல்லாம் எந்தப் பள்ளியிலும் தேர்ச்சி 90 விழுக்காட்டிற்கு கீழே போவது இல்லை. அதனால் 90 விழுக்காடு என்பது மிகவும் வருந்தத் தக்க தேர்ச்சி விழுக்காடு ஆகும். சென்ற ஆண்டு எங்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 97 விழுக்காடு (அதற்கு முந்தைய ஆண்டு 100). கலந்தாய்வுக் கூட்டத்தில் அருகில் அமர்ந்திருந்தவர்களை விசாரித்தால் லெஃப்ட்டில் இருப்பவர் 100 ரைட்டில் இருப்பவர் 100 முன்னால் இருப்பவர் 100 பின்னால் இருப்பவரும் 100. அதற்கு பின்னால் இருப்பவரும் கூட நானும் 100 தாங்க என்று வான்டடா வந்து வண்டியில் ஏறிக் கொண்டார். எங்கே யாராவது 150 என்று கூறிவிடுவார்களோ என்று பதட்டத்தோடே இருந்தேன்.
2002ல் நான் உட்கோட்டைப் பள்ளியில் பணியேற்ற போது பள்ளியானது 72 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருந்தது. அதற்கே ஊர்கூடி பாராட்டித் தள்ளி விட்டார்கள். அப்போதெல்லாம் 50 விழுக்காடு பெரிய தேர்ச்சி தான். வருடங்கள் ஆக ஆக பெரும்பான்மை  தேர்ச்சி விழுக்காடானது மெல்ல மெல்ல மேலே ஏறி (உபயம் “சென்டம்“ ரிசல்ட்டை உருவாக்குவது எப்படி என்கிற பயிற்சிகள்) 90 க்கு மேல் நிலை கொண்டு விட்டது.
“என்னப்பா சென்டம் ரிசல்ட் வாங்குவது நல்ல விஷயம் தானே?” என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இதற்குப் பின்னால் ஒவ்வொரு பள்ளியும் பண்ணக்கூடிய பிரம்ம பிரயத்தனம் தான் கொடுமை.
நான் பி.எட் முடித்த உடன் பணியாற்றிய தனியார் பள்ளியில் அனைத்து வகுப்புகளும் ஒரே பிரிவு தான். ஆனால் பத்தாம் வகுப்பில் “பி“ பிரிவு இருந்தது. அதற்கு நான்தான் வகுப்பாசிரியர். எடுத்த உடனேயே பத்தாம் வகுப்புக்கு வகுப்பாசிரியரா என்று எனக்கோ பெருமை புடிபட வில்லை. பிறகு தான் தெரிந்தது, ஒன்பது வருடங்களாக கட்டணம் பெற்றுக் கொண்டு விட்டு, ’உங்க பையன் சரியா படிக்க மாட்டேங்கிறான், அடுத்த வருடம் பத்தாவது வேறு, அவன பாஸ் போட்டா எங்கள் பள்ளி ரிசல்ட் பாதிக்கும், அவன ஒன்பதாவது பெயில் போட்டு இங்கே படிக்க வைக்கிறோம் அல்லது பாஸ் போட்டு கொடுக்கிறோம் வேறு எங்காவது சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று பெற்றோரிடம் டீல் பேசுவார்கள். அந்த மாதிரி டி.சி வாங்கி வந்த சோ கால்டு மெல்லக் கற்கும் மாணவர்களைக் கொண்ட வகுப்பு தான் அது.
ஆனால் அந்த வகுப்பில் உள்ளபடியே தேர்ச்சி பெற இயலாதவர்கள் என்கிற நிலையில் இருந்தவர்கள் ஒரு நான்கு பேர் தான். என்னுடைய கணிதப் பாடத்தில் இரண்டு பேரைத் தவிர எல்லோரும் தேறி விட்டனர். ஒரு பையன் 440 மதிப்பெண் எடுத்திருந்தான். (அவனும் தேற மாட்டான் என்று விரட்டப் பட்டவனே) அவர்களை மனமுவந்து சேர்த்துக் கொண்ட பள்ளியை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் ஒரு விஷயம், அந்தப் பள்ளியில் அவர்கள் படித்தது அன்அஃபிஷியல். ஆமாம், அவர்கள் அனைவரும் பிரைவேட்டாக விண்ணப்பம் செய்து தனித்தேர்வராகத்தான் தேர்வினை எதிர் கொண்டனர். (நாங்க மட்டும் எங்க பள்ளி ரிசல்டை விட்டுக் கொடுப்போமா?)
இந்த சென்டம் மோகத்தினால் சில பள்ளிகளில் (அரசுப் பள்ளிகளும் கூட விதிவிலக்கல்ல) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே மெல்லக் கற்போர் கட்டம் கட்டப் படுவார்கள். அவர்கள் இடைநிறுத்தம் செய்விக்கப்படுவார்கள் அல்லது ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சிப் பெறத் தவறுவார்கள்(இவர்கள் பெரும்பாலும் வெட்கப் பட்டுக் கொண்டு அவர்களே நின்று விடுவார்கள்). ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை சறுக்குப் பலகைப் பயணம் போல வந்தவர்களை ஒன்பதாம் வகுப்பில் வடிகட்டி பலபேர் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு பாதை மாறிப்போக இந்த சென்டம் மோகம் சிறிதளவாவது காரணமாக அமைந்து உள்ளது.
ரிசல்ட் பற்றியெல்லாம் பெரிதாக கேள்விகள் கேட்கப்படாத 90களிலேயே எங்க ஊர் பள்ளியில் எனக்கு தெரிந்த நண்பன் ஒருவனை மூன்று பெயிலாக்கினார்கள். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக தொடர்ந்து படித்து பத்தாம் வகுப்பை ஒரே தடவையில் பாஸ் செய்து காட்டினான். ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சியில் சாதிய வன்ம அரசியல் கூட இருந்து இருகிறது.
’இவன எல்லாம் பாஸ் போட்டு இருக்கீங்களே அப்புறம் ரிசல்ட் எப்படி வரும்?’ என்று நான் கோபித்துக் கொண்ட பசங்க கூட பத்தாம் வகுப்பு வந்து பாஸ் பண்ணி இருக்கிறார்கள். அதனால் ஒன்பதாம் வகுப்பிலேயே ஒருத்தனை பத்தாம் வகுப்பில் தேறுவானா தேறமாட்டானா என்று கணிப்பது முறையல்ல. எனது அனுபவத்தில் கண்டவரை, ஒன்பதாவது வரை ஒரு மாதிரியாக திரிந்த பசங்க கூட பத்தாம் வகுப்பில் வந்து முற்றிலும் பொறுப்பாக மாறி இருக்கிறார்கள்.
அதேபோல பத்தாம் வகுப்பில் 430 மதிப்பெண்கள் எடுத்த ஒரு மாணவன். அவனது கணிதப்பாட மதிப்பெண் 98. குமரப்பருவ குறும்புகளால் படிப்பில் கவனம் சிதைந்து (எவ்வளவு அறிவுரை கூறியும் எடுபடவில்லை) கணிதப் பாடத்திலேயே பெயிலாகி இருக்கிறான்.
மற்றொரு மாணவன் தந்தை இல்லாதவன். சிறுவயதிலேயே கண்டிக்க ஆள் இல்லாததால் சென்னைக்கு சென்று பல வேலைகளை செய்து, பிறகு ஒரு மூன்று ஆண்டுகள் கழித்து எப்படியோ ஞானோதயம் பெற்று ப்ரைவேட்டாக பத்தாம் வகுப்பு எழுதி அனைத்துப் பாடங்களிலும் சிங்கிள் அட்டெம்ப்ட்டில் தேர்ச்சி பெறுகிறான். பதினோறாம் வகுப்பு சேர்க்கைக்கு வருகிறான். கணிதப் பிரிவு கேட்டதால் என்னிடம் அனுப்பினார்கள். அவன் தோற்றம் அப்புறம் ப்ரைவேட் மதிப்பெண் பட்டியல் இதெல்லாம் பார்த்து அவனை நிராகரிக்கும் எண்ணத்தோடு சில கேள்விகள் கேட்டேன். அவன் அதற்கு பதில் சொல்லவே முயலவில்லை. ”பயப்படாம என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் சார், நீங்க என்ன சொல்றீங்களோ அதுப்படி கேட்டு நான் பாஸ் பண்ணிக் காட்டுறேன்” என்று கூறிய நம்பிக்கையில் சேர்த்துக் கொண்டேன். வகுப்பில் இருந்து மற்ற மாணவர்களை பின்னுக்குத் தள்ளி வகுப்பிலேயே இரண்டாம் மதிப்பெண் பெற்று பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றான்.
அப்புறம் இந்த மீத்திறன் பெற்றக் குழந்தைகள் சென்டமோ அல்லது வகுப்பில் முதல் மதிப்பெண்ணோ பெறட்டும் தவறில்லை. ஆனால் அது முடியாமல் போனாலோ அல்லது சற்று குறைந்து விட்டாலோ மிகப் பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
நான் பனிரெண்டாம் வகுப்பு கணக்குப் பாடம் எடுத்த போது எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி வேதியியல் பாடத்தில் மட்டும் பின் தங்குவார். அதனால் அந்தப் பரீட்சையின் போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று நாங்கள் கேட்காமலேயே காரணம் கூறுவார். நாட்கள் செல்லச் செல்ல வேதியியல் தேர்வு என்றாலே காலையில் இருந்தே தான் உடல் நிலை சரியில்லாமல் இருப்பது போல காண்பிக்க ஆரம்பித்து விடுவார். ஒரு முறை கடைசி திருப்புதல் தேர்வின் போது அவங்க அப்பாவோட சுகர் மாத்திரையை விழுங்கி விட்டார். உடம்பு தொப்பளாக நனைந்து மயங்கி விழுந்து பெரிய ஆர்ப்பாட்டமாகிப் போய் விட்டது.
     அந்த ஆண்டு கணிதப்பாட வினாத்தாள் மெல்லக் கற்போர் தேர்ச்சி பெற எளிதாகவும் அதிக மதிப்பெண் எடுப்போருக்கு கடினமாகவும் இருந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்து கூறும் போது, “சார் கொஸ்டின் பேப்பர் பாத்த உடனே மாடியில் இருந்து குதித்து விடலாமா என்று நினைத்தேன் சார்” என்று ஒரு குண்டைப் போட்டார். (அந்த ஆண்டு ஒரு மாணவி குதித்து விட்டார்)
இதேபோல பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் எடுத்த போது வகுப்பில் இரண்டு இணை பிரியா நண்பர்கள் இருந்தார்கள். முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் தங்கள் இருவருக்குள் இருக்க வேண்டும் என ரொம்ப வெறித்தனமாக இருப்பார்கள். ஒரு முறை ஆங்கிலத்தில் ஒருவனுக்கு நான்கு மதிப்பெண் பின்தங்கி மூன்றாமிடம் சென்று விட்டான். உடனே சிவப்பு பேனாவால் ஆங்காங்கே இரண்டு இரண்டு மதிப்பெண்களாக போட்டு தனது நண்பனுக்கு நான்கு மதிப்பெண் டோட்டலில் குறைகிறது என்று வந்தான். மீத்திற மாணவர்களின் மதிப்பெண்களை பொறுத்தவரை எங்கெங்கு தவறு செய்தார்கள் ஏன் குறைந்து போனது என்பதை குறித்துக் கொள்வது எனது வழக்கம். குறைய வாய்ப்பே இல்லை. எனவே அவன் மீது சந்தேகம் கொண்டு ஆய்வு செய்ததில் பயல் மாட்டிக் கொண்டான். ஒரு கோபப் பார்வையோடு அமர வைத்து விட்டேன்.
மாணவர்களின் மதிப்பீட்டு முறையில் மாற்றத்தைப் புகுத்த ஏ.பி.எல் மெத்தட் கொண்டு வந்து கிரேடு சிஸ்டத்தை அறிமுகப் படுத்தினார்கள். மதிப்பெண் டாக்குமெண்டேஷன் சற்று வேலை வாங்கக் கூடியதாக இருந்தாலும் மதிப்பெண் ஏற்றத் தாழ்வை ஓரளவு ஒழிக்க முடிந்தது. ஆனாலும் கூட பெரும்பாலான ஆசிரியர்களுக்கும் சரி பெற்றோருக்கும்  சரி மதிப்பெண் என்கிற அந்த “மயக்கும் மாய எண்களை“ கை விட துளி கூட விருப்பம் இல்லை. அந்த மதிப்பெண், ரேங்க் எல்லாம் இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆகவே தான் ஒன்பதாம் வகுப்பு வரையில் ஏ.பி.எல் பத்தாம் வகுப்பில் வழக்கம் போல மதிப்பெண் முறையே உள்ளது. பத்தாம் வகுப்பில் கிரேடு முறையை புகுத்த அரசும் விரும்ப வில்லை எனவே தெரிகிறது. ஆகவே தான் ஏபிஎல் மெத்தட் இருந்தாலும் கூட பக்கத்திலேயே மதிப்பெண்களை குறிக்கும் வழக்கத்தை தனியார் பள்ளிகள் செய்கிறார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் பள்ளி முகப்பில் பருவத்தேர்வுகளில் முதல் இடம் பெறுவோரின் புகைப்படங்களை பேனரில் போட்டு ஊக்குவிக்கின்றனர். அங்கே இடம் பெறாத தங்கள் பிள்ளைகள் மீது பெற்றோர் அழுத்தத்தை தருகிறார்கள்.
“IT IS NOT THE APTITUDE BUT ATTITUDE THAT DETERMINES THE ALTITUDE” திறமையைவிட மனப்பான்மையே நமது உயரங்களை தீர்மானிக்க அதி முக்கியமாகும்.
எனது அனுபவத்தில் மதிப்பெண் பட்டியலில் உள்ள எண்களுக்கும் மாணவனின் வாழ்க்கையில் பெறும் ஏற்றத்திற்கும் பெரிய அளவில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
“யோவ், என்னதான்யா சொல்ல வர்ர?” என்று நீங்கள் சீறுவது புரிகிறது. அத அடுத்த அத்தியாயத்தில் சொல்லி முடிக்கிறேன்.


Saturday, May 9, 2020

பொதுத்தேர்வு எனும் பெரும்பூதம் -2



     பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் பண்ணும் களேபரங்களை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் பொதுத்தேர்வு என்னும் பெரும்போருக்கு மாணவர்களை தயார்செய்யும் ஆசிரியர்கள், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிர்வாகம் பண்ணும் அலப்பறைகளை பார்க்கலாம்.

முதலில் ஒரு கணக்கு போடுவோம்.

”ஜூன் முதல் டிசம்பர் வரையில் மொத்தம் எத்தனை மாதங்கள்?”
”7”
”காலாண்டு பரிட்சை- செப்டம்பர் மாதம் போச்சு, அப்புறம் அரையாண்டு பரிட்சை – டிசம்பர் மாதம் போச்சு அப்புறம் இடைத்தேர்வு மற்றும் வடைத்தேர்வு அதுக்கு ஒர அரை மாதம் போச்சா? இப்போ ஏழில் மீதி என்ன?”
”நான்கரை மாதங்கள்”
”சோ, இந்த நான்கரை மாதங்களுக்குள் நூற்றைம்பது பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும் புத்தகங்களை முடிக்கவேண்டும்”
”ஏய் நிறுத்து, ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் என்னாச்சு?”
“ஏம்பா, அரையாண்டுத் தேர்வுக்கே முழு சிலபஸ்லயும் கேள்வித்தாள் அமையும்னு தெரியாதா? அதனால நவம்பரில் பாடங்களை முடிச்சாத்தான் அரையாண்டுத் தேர்வுக்கு முழு புத்தகத்தையும் படித்து தேர்வு எழுத மாணவர்களை தயார் செய்யலாம்”
“பாடங்களை முடிக்க டைம் இருக்குமா?”
”எங்கங்க டைம் இருக்கு, எல்லாம் சனிக்கிழமை, காலை மாலை வகுப்புகள் மற்றும் விளையாட்டு பீரியட், நீதி போதனை பீரியட் எல்லாத்தையும் கடன் வாங்கித்தான் முடிக்கணும்”
“அடப்பாவிகளா அந்தப் பசங்கள விளையாடக்கூட விடமாட்டீங்களா?”
”என்ன பண்றது பப்ளிக் எக்சாம்ல,”
அப்புறம் இந்த மெல்லக் கற்போருக்கு அனா ஆவன்னாவில் இருந்து ஆரம்பிக்கணும். நல்லா படிக்கிற பசங்களோட அறிவுப் பசிக்கும் தீனி போடணும். நான்கரை மாதத்தில் சிலபஸ் முடிக்க மூச்சு வாங்க ஓடியாகணும்.

இங்க ஒரு முக்கியமான விஷயம். இந்த விளையாட்டுத்துறை, நீதித்துறையை பிரிச்சி மேயுறதுலதான் கட்டப்பஞ்சாயத்தெல்லாம் நடக்கும். அப்புறம் யாராவது விடுப்பு எடுத்தால் அந்த பீரியடை யார் எடுப்பது என்று ஒரு ஓட்டப்பந்தயமே நடக்கும். அடிச்சி புடிச்சி ஓடினா அங்க அந்த சார் ஏற்கனவே தொலைபேசித் தகவல் மூலமாக வேலை கொடுத்து வைத்திருப்பார்.

விதைநேர்த்தி செய்த விதைகளை மட்டுமே பத்தாம் வகுப்பில் வைத்திருக்கும் தனியார் பள்ளிகளையும் எல்லாவித மாணவர்களையும் (சமயங்களில் தனியார் பள்ளிகளில் இருந்து ஒன்பதாம் வகுப்பு பாஸ்போட்டு விரட்டப்பட்டவர்களையும்) வைத்திருக்கும் அரசுப் பள்ளிகளையும் ஒரே தட்டில் வைத்து எடைபோட்டு தேர்ச்சி விகிதங்களை வெகுஜன ஊடகங்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தபோது தான் பிரச்சினை தொடங்கியது.

”நூறுசதவீத ரிசல்ட்டை உருவாக்குவது எப்படி?” என்கிற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சியெல்லாம் 2004க்குப் பிறகு வைக்க ஆரம்பித்தார்கள்.
கருத்தாளராக வேறொரு மாவட்டத்தில் இருந்து “சென்டம்“ என்கிற அடைமொழியோடு பெயர் கொண்ட ஒருவர் பேச வந்திருந்தார். ப்ளு ப்ரிண்ட் படி தேர்ச்சிக்குத் தேவையான 35 மதிப்பெண்களுக்கு தேவையான பகுதிகள் இவைதான். நான் இவற்றை ஜூனிலேயே முடித்து விடுவேன். அப்புறம் எல்லா மாதங்களும் கோச்சிங் தான் என்று அவர் கூறி முடித்த போது கைத்தட்டலில் கட்டிடமே அதிர்ந்தது. அவருடைய வகுப்பில் இருக்கும் மெல்லக் கற்போர் தவிர்த்த ஏனைய மாணவர்களை நினைத்து கவலை கொண்டேன்.

இந்த பயிற்சிகளில் நான் கற்றுக் கொண்ட முக்கிய வித்தைகளில் ஒன்று ”மல்டிபில் சாய்ஸ் புக்பேக் கொஸ்டின்ஸ காரணகாரியமெல்லாம் நோண்டாம அப்படியே ஆன்சர மனப்பாடம் செய்ய வைங்க போதும்”
பாடம் பாடத்திட்டம் எல்லாம் படித்து உணர்வதற்கு அல்ல, தேர்வெழுதி அடுத்த வகுப்பை அடையத்தான் என்கிற விஷயம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆழ்மனதில் பதிந்து போனது.

ஒண்ணுமே புரியாம மனப்பாடம் செய்து தேர்ச்சி அடைவதற்கும் பிட் அடித்து தேர்ச்சி அடைவதற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. ரெண்டு பயலுக்கும் பாடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.

இப்போ சிலபஸ் மாறிப் போனதில் கத்துக்கிட்ட மொத்த வித்தைகளும் வீணாகப் போய்விட்டன. (நீட் என்கிற செறுப்புக்குத் தக்கவாறு கால்களை வெட்டிக்கொண்ட கதையை தனிப் பதிவாக எழுதுகிறேன்)

சிலபஸ் அருமையாத்தான் இருக்கு. புத்தகம் சிறப்போ சிறப்பு க்யு.ஆர் கோட் மூலமா வீடியோ லிங்க் எல்லாம் கொடுத்து அசத்தி இருக்காங்க, ஆனா அதையெல்லாம் என்ஜாய் பண்ணி நடத்த நேரம் இருக்கான்னா இல்ல என்பது தான் சோகமான நிஜம்.

ஒரு முறை பாரதிதாசன் பல்கலைக்கழக கலைநிகழ்ச்சிகள் போட்டியில் நடனப் போட்டிக்கு இரண்டு மாணவர்கள் மேக்கப் போடு மேடை ஏறிய நேரத்தில் ”ஏப்பா குழு நடனம் என்றால் குறைந்தபட்சம் நான்கு பேராவது ஆடணுமேப்பா” என்று தடுக்கப் பாய்ந்தார்கள். உடனே வேடிக்கைப் பார்க்க வந்த சக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் நீட்டாக இன் பண்ணிக்கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு மேடை ஏறினார்கள். முன்னவர்கள் அழகாக பாடலுக்கு நடனம் ஆடினார்கள். இவர்களோ மேடையின் குறுக்கும் நெடுக்குமாக லெப்ட் ரைட் போட்டபடி நடந்து போனார்கள். கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.

இப்போ ஏன் இந்தக் கதை? இந்த வினாத்தாள் மாதிரி என்ன என்பதை கொரோனாவுக்கு முந்தைய வாரம் வரையிலும் தொடர்ந்து மாற்றியவண்ணமே உள்ளனர். ப்ளுபிரிண்ட் கிடையாது சரி ஓகே. ஆனால் என்ன மாதிரியான வினாவகை, எவ்வளவு மதிப்பெண் பகிர்மானம் என்று எதையுமே சரியாக இறுதி செய்யவில்லை. ஒவ்வொரு முறை வினாத்தாளை பார்க்கும் போதும் ஆசிரியர்களுக்கு ஏமாற்றமாகவே உள்ளது. இருந்தாலும் அந்த ரெண்டு பசங்க லெப்ட் ரைட் போட்டு நடந்து சமாளிச்ச மாதிரி நமது ஆசிரியர்கள் சமாளிக்கத்தான் வேணும்.

சுதந்திரப் போராட்ட கால அவஸ்தைகளைவிட இந்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுதந்திரம் படும் பாடு இருக்கே அதை சொல்லி மாளாது. அதிகாலை நடைப்பயிற்சிக்கு செல்லும்போது ஆட்டோவில் பள்ளிச் சீருடையில் மாணவர்கள் செல்லும் காட்சியைக் காணும் போதெல்லாம், ’வீட்டில் இருக்கும் பசங்களுக்கே இந்த நெலமன்னா விடுதியில் இருக்கும் பசங்க ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகக் கூட நேரம் இருக்குமா’ என்று யோசிப்பேன்.

கல்யாணம் காதுகுத்து என்று எந்த விழாவும் கிடையாது, டிவி, சினிமா மற்றும் பாடல் என எந்த ஒரு கேளிக்கையும் கிடையாது. குமரப் பருவத் துவக்கத்தில் கொண்டாட்டமான வண்ண வண்ண சிந்தனைகள் விரியும் வயதில் பொதுத்தேர்வு என்கிற “துறவு வாழ்க்கை” மேற்கொள்ள வற்புறுத்தப் படுகிறார்கள்.

ஒரு முறை எனது மாணவன் ஒருவன் பையில் இருந்து ஹான்ஸ் பொட்டலம் ஒன்றை எடுத்தேன். அப்புறம் தனியே அழைத்து விசாரித்தபோது, “சார் போன வருசம் பத்தாவது “---“பள்ளியில் படிச்சப்ப நைட் ஸ்டடி வைப்பாங்க சார், நான் அடிக்கடி தூங்கி விழுந்து அடி வாங்குவேன். அப்போது தான் மத்த பசங்கள கேட்ட போது ஹான்ஸ் போட்டா தூக்கம் வராது என்று சொன்னாங்க சார். அப்போ பழகியது சார்” என்று கூறினான்.

இந்த வலுக்கட்டாய நைட் ஸ்டடியின் பக்க விளைவுகள் மைய விளைவுகள் என்ன என்று தனியார் பள்ளி விடுதியில் தங்கி பணிபுரியும் ஆசிரியர்களைக் கேட்டால் பல புத்தகங்கள் போடும் அளவுக்கு கதை தேறும்.

பப்ளிக் பரிட்சை பற்றிய பில்டப்புகளில் ஆகச் சிறந்த கேவலமான ஒன்று என்றால் பெற்றோருக்கு பாதபூஜை என்று இவர்கள் அடிக்கும் கூத்து தான். கிருஸ்துவ பள்ளிகளிலும் இது சற்று வேறு வடிவில் இருக்கும். கேரளத்து மாந்திரீகர்களிடம் மந்திரிச்ச தாயத்து வாங்கி கட்டாதது தான் பாக்கி. மற்ற எல்லா மந்திர தந்திர கூத்துகளும் பொதுத்தேர்வை மையப்படுத்தி அரங்கேற்றுகிறார்கள்.

இந்த விஷயங்கள் எல்லாம் ஏற்படுத்திய உளவியல் ரீதியான தாக்கத்தில் அவர்கள் வீடே பரீட்சை முடியும் வரையில் அரவிந்தர் ஆசிரமம் போல ஆகிவிடும்.

இவ்வளவு கூத்து அடிக்கிற நேரத்தில் பாடத்தை மாணவர்கள் என்ஜாய் பண்ணி புரிந்து கொள்ளும் அளவுக்கு நடத்திவிட்டால் அவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு மனப்பாடம் செய்ய வேண்டியது இல்லை.. புரிந்த விஷயங்களை மீட்டுருவாக்கம் செய்து விடைத்தாளில் எழுத பெரிதாக ஒன்றும் மெனக்கெட தேவை இல்லை என்கிற உண்மை இந்த பரபரப்புகளுக்கு இடையில் ஏறாது.

பத்தாம் வகுப்புக்கென கைக்கொண்ட தேர்வு மையக் கற்பித்தலை ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளிலும் அமல் படுத்தி தொலைப்பதால் அடிப்படை மிகவும் பலகீனமாகிப் போகிறது.

பொதுத்தேர்வுகள் இல்லாத வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வாய்ப்பு பெற்ற ஆசிரியர்கள் பாக்கியவான்கள். அவர்களின் அனைத்து விதமான கற்பித்தல் சோதனைகளையும் பரிசோதித்து கற்றல் கற்பித்தலை இன்பமயமாக மாற்றிவிடுவார்கள்.

Friday, May 8, 2020

தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக் கொண்டிருக்கிறோமா? பொதுத்தேர்வு என்னும் பூதம் - 1



    
1992 ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினேன். அப்போது தேர்வு மையம் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி. இப்போது சுத்தமல்லியில் மேல்நிலைப் பள்ளியே உள்ளது. மேலும் அங்கேயே தேர்வு மையமும் உள்ளது. எல்லோரும் தினந்தோறும் உடையார்பாளையம் சென்று தேர்வு எழுதவேண்டும். மாணவர்கள் வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க செல்ல வேண்டும். மாணவியர்கள் தங்களது அண்ணன் அல்லது அப்பாவுடன் வருவார்கள்.
     தேர்வு பற்றிய பில்டப் ரொம்ப ஓவராக கொடுப்பார்கள். பறக்கும் படை வந்து பிட் அடிப்பவர்களை பிடிப்பார்கள் என்றெல்லாம் பீதியை கிளப்புவார்கள். ’பறக்கும் படைன்னா பறந்து வருவார்களோ’ என்று பயந்தபடியே யோசித்திருக்கிறேன். சரி பிட் அடிப்பவர்கள் தானே பயப்பட வேண்டும் நாம் எதற்கு என்று சமாதானம் ஆகிவிடுவேன்.
     பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும் டியுசன் வகுப்புக்கு செல்வார்கள். “பிள்ளைகளை ரொம்ப நேசிக்கிறவங்க டியுசன் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க” என்கிற அளவுக்கு டியுசன் முக்கியமாகப் போய்விட்ட நாட்கள் அவை. எங்கள் ஊரில் அப்போது இரண்டு டியுசன்கள். இரண்டு பேருக்கும் “சபாஷ் சரியான போட்டி”. நல்ல ரிசல்ட் கொடுத்து அடுத்த  ஆண்டு டியுசன்ல நிறய மாணவர்களை சேர்த்து விட வேண்டும் என்று படாத பாடு படுவார்கள்.
     இந்தப் போட்டியில் கொடுமை என்னவென்றால் டியுசன் ஆசிரியரே மதில் சுவரில் ஏறிகுதித்து பிட் சப்ளை செய்தது தான். தேர்வில் கேட்கப்பட்ட எஸ்ஸே, பாரகிராஃப் மற்றும் மெமரி போயம் இவற்றை ஒரு கல்லை வைத்து சுருட்டி குறி பார்த்து விர் விர்ர் என்று எறிவார்கள். அந்த மாதிரி என் மேலேயும் ஒரு கல் வந்து விழுந்து தொலைத்தது. எனக்கு பின்னால் இருந்த பையனை நோக்கி எறியப்பட்ட பிட் இலக்கு தவறி என் காலில் அடித்தது. பின்னால் இருந்தவன் பிட்டை எடுக்க கையை மெல்ல கொண்டு வருகிறான். இன்விஜிலேட்டர் நான்தான் பிட் அடித்துவிட்டேன் என நினைக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் அந்த பிட்டை நானே எடுத்து நல்ல பிள்ளையாக அவரிடம் கொடுத்து விட்டேன்.
     காம்பவுண்ட் எகிறி குதித்ததால் முட்டியை சிராய்த்துக் கொண்டும் காம்பவுண்ட் அருகில் இருந்த கருவை முள் பதம் பார்த்த விழுப்புண்களோடும் பரிதாபமாக நின்ற அவர் “கொலை வெறியோடு“ என்னை பார்த்த பார்வை இன்றளவும் என் நினைவில் அகலாமல் உள்ளது.
     என்னவோ தேர்வுகளில் வெட்டி முறித்தது போல இறுதி தேர்வு முடிந்தவுடன் களைப்பு நீங்க ஒரு திரைப்படம் தியேட்டரில் சென்று பார்ப்பது வழக்கம். பரிட்சை முடிந்தவுடன் ஒரு அழுத்து அழுத்தி ஜெயங்கொண்டம் சென்று படம் பார்த்த பிறகு தான் எல்லோரும் வீடு திரும்புவார்கள். நான ஜெயங்கொண்டத்தில் இருந்த எனது சித்தப்பா வீட்டில் தங்கி தேர்வு எழுதியதால் நானும் எனது அண்ணன் சேகரும் அடுத்த நாள் மார்னிங் ஷோ ஜனகர் தியேட்டரில் “சின்னக் கவுண்டர்“ படம் பார்த்து கடமையை நிறைவேற்றினோம்.
     அப்புறம் இந்த ரிசல்ட் வருவது மாதிரி ஒரு களேபரம் நீங்களெல்லாம் நினைத்துக் கூட பார்த்திருக்க இயலாது. இப்போவெல்லாம் ஒரு வருடம் முன்னேயே தேர்வுத் தேதி மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி கொடுத்துவிடுகிறார்கள். 90 களில் பேப்பர் காரன் வால் போஸ்டரில் “பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்“ என்று கொட்டையாக போட்டு விட்டால் அவனுக்கு சில ஆயிரம் பிரதிகள் அதிகமாக விற்பனையாகும். ஆனால் பேப்பரை வாங்கி பார்த்தால் உள்ளே எங்காவது மூலையில் ”பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே இறுதியில் வரலாம் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்று ஒரு குட்டிச் செய்தி போட்டு ஏமாற்றுவார்கள்.
     மாலைமுரசு மற்றும்  மாலை மலர் என்ற மாலை செய்தித்தாள்கள் இப்போது வருகின்றனவா என்பது கூட தெரியவில்லை. அப்போது எங்காவது டீ கடைகளில் பார்க்கலாம். ஆனால் ரிசல்ட் வருகிற அன்றைக்கு அந்தப் பேப்பருக்கு டோக்கன் போட்டு முன்பதிவெல்லாம் செய்வார்கள். (டி.ராஜேந்தரின் “வீராசாமி” படத்திற்கு ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிய ஃபீலிங்) ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் என பெரிய மகாமக கூட்டமே நிற்கும். திருச்சியில் இருந்து வரும் ஒவ்வொரு பேருந்தையும் எட்டி எட்டி பார்ப்பார்கள்.
     ஒரு வழியாக ஏதாவது ஒரு பேருந்தில் வந்து விடும்(வீராசாமி பட பொட்டி வந்துடுச்சி). அப்புறம் பேப்பரை வாங்கி ரிசல்ட்டை பார்க்க வேண்டியது தான். தொடர்ந்து பத்து எண்கள் பாஸாகி இருந்தால் 17-26 என்று போட்டிருப்பார்கள். 18 முதல் 25 வரையிலான பசங்க மதிப்பெண் பட்டியலை பார்க்கும் வரை பீதியுடனே அலைவார்கள்.
சில வேளைகளில் அச்சுப் பிழையினால் ஒரு எண் விட்டுப் போயிருக்கலாம். அந்த மாணவனின் துயரத்தை சொல்லில் வடிக்க இயலாது. ஜெயங்கொண்டம் பள்ளியில் படித்த எனது நண்பன் ஒருவனுக்கு அவனது எண் வரவில்லை. நாம பெயில் தான் ஆகிட்டோம் என்று பேப்பரை சுருட்டி அக்குளில் சொருகிக் கொண்டு ’வீட்டிற்கு போகலாமா இல்ல எதாவது பஸ் ல ஏறி எங்கயாவது ஓடிப் போகலாமா’ என்று தீவிரமாக சிந்தித்தபடி நின்றான். நல்வாய்ப்பாக அவனது சித்தப்பா அவனை கொத்தாக பிடித்துக் கொண்டு நேராக பள்ளிக்குச் சென்று மதிப்பெண் பட்டியலை பார்த்து தேர்ச்சி என்பதை உறுதி செய்து கொண்டு வீட்டிற்கு பயலை பத்திரமாக அழைத்து வந்தார். இல்லை என்றால் என்ன ஆவது.
     அப்போதெல்லாம் தேர்ச்சி விழுக்காடு 50 இருந்தாலே பெரிய விஷயம். எனவே அனேகம் பேர் தேர்வில் தோல்வியுற்றிருப்பார்கள். தேர்ச்சி அடைந்த மாணவர்கள் சாக்லேட் வாங்கி ஊருக்கே விநியோகம் பண்ணுவார்கள். (முக்கியமாக பெயிலான மாணவனின் பெற்றோருக்கு) பெற்றோர்களோ தங்கள் பிள்ளை எதையோ சாதித்தது போல அகமகிழ்ந்து போவார்கள். பெயிலான மாணவனின் பெற்றோர் என்ன செய்வார்கள் தெரியுமா? வீட்டில் பெயிலானதற்காக தூக்கி போட்டு மிதி மிதி என மிதித்தாலும் கூட வெளியில் சொல்லும் போது "புள்ள ஒரு பாடத்துல ஒரு மார்க்ல விட்டுபுடுச்சி” என்று விட்டுக் கொடுக்காமல் சொல்லுவார்கள்.


Saturday, May 2, 2020

கொஞ்சம் கடலை போடலாமா?



வேர்க்கடலை, நிலக்கடலை மற்றும் மல்லாட்ட இந்த மாதிரி எத்தனை பேர்தான் இந்தக் கடலைக்கு இருக்குன்னே தெரியல. எத்தனை பேர் இருந்தாலும் எனக்கு பால்ய வயதிலிருந்தே மிகவும் பிடித்தமான “ஆர்கானிக்“ தின்பண்டம்னா அது இந்தக் கடலை தான்.
எனது துணைவியார் ’உங்களுக்கு ரொம்ப கொழுப்புத்தான்’ என்று செல்லமாக கடிந்துகொள்ளும் போதெல்லாம் அதற்கெல்லாம் காரணம் நான் சாப்பிட்டக் கடல தான் என மெல்லமாக நினைத்துக் கொள்வேன். சின்ன வயசில் இருந்து எத்தனை வெரைட்டி எத்தன விதமாக சாப்பிட்டுத் தள்ளியிருக்கேன். அதை எல்லாம் அப்படியே செக்கில் ஆட்டி இருந்தால் கூட ஒரு 100 லிட்டர் கடலை எண்ணை தேறும்.
எங்க மணல் கொள்ளையில் கல்ல போடுவாங்க. நிலத்தில் வெதக் கல்ல போடுவதற்கு மில்லில் எல்லாம் கொடுத்து கல்லய அடிக்கப் படாது. கல்லயோடு நுனி மொக்கு செதயக் கூடாதில்ல. அதனால கையாலயேதான் ஒடைக்கணும். அப்போவெல்லாம் ஒரு கூடை கல்ல ஒடைக்க நாலணா அல்லது ஐம்பது பைசா கூலி. நிறய உடைக்கணும்னு சிலபேறு லாவகமா ரெண்டு கையாலயும் கல்லய எடுத்து தரையில் மோதி சிதைத்து பிளந்து போடுவாங்க. அப்புறமா தொளும்பு தனியா பயிறு தனியான்னு கையாலயே பீராஞ்சிருவாங்க. அதிலயும் சிக்காத தொளும்பு எல்லாம் மொறத்துல போட்டு பொடைக்கும் போது வந்துடும். அப்புறமா மொறத்தாலயே நேம்பி ’நண்ணி’ பயிறு தனியா போடுவதற்கு தோதான முத்தின பயிறு தனியா பிரிச்சுடுவாங்க. கல்ல ஒடைக்க போனவங்க நண்ணி பயிற வறுத்து திங்க எடுத்துட்டு வந்துடுவாங்க.
     கல்ல போடுறது (அட அது இல்லைங்க, இது நிலத்துல வெதக்கறது) பாக்கவே அழகான ஒரு விஷயம். ஏற்கனவே நிலத்த ரெண்டுதடவ உழுது மண்ண பொரட்டி போட்டு வைப்பாங்க. அப்புறம் வெதக்கும் போது நூல் புடிச்சமாதிரி கலப்பைய புடிச்சி உழுதுகிட்டே போவாங்க. பின்னாடி பொம்பள ஆளுங்க ஒரு புட்டில பயிர வச்சிக்கிட்டு கையால அள்ளி மூடி வச்சிக்கிட்டு ஆட்காட்டி விரல் வழியா ஒவ்வொண்ணா நழுவ விட்டுக்கிட்டே போவாங்க. ஒரு ஆளு புட்டி தீர தீர எடுத்து தந்துகிட்டே போவாங்க.
     பால் பச்சக் கல்ல ( நாங்க கடலய கல்ல ன்னு தான் சொல்லுவோம் ’புய்ப்பம்’ மாதிரி) சாப்பிட்டுருக்கீங்களா. அது ஒண்ணும் இல்ல கல்ல முத்திடுச்சா இல்லையான்னு செக் பண்ணுறதுக்காக புடுங்கி பாப்பாங்க. புடுங்கிய கல்லக் கொடிய திரும்ப நட்டா வைக்க முடியும். அப்படியே கல்ல இருக்கும் வேர் பகுதிய அங்கே வாய்க்கால்லயோ பள்ளத்திலயோ தேங்கி இருக்கிற தண்ணியில ஒரு அலசு அலசிபுட்டு ஒவ்வொண்ணா உரிச்சி சாப்புட வேண்டியது தான். நல்லா முத்திய கடலையை அந்த பால் பச்சை பருவத்தில சாப்பிடுவது அவ்வளவு ருசி. நிச்சயமா இது அனைவருக்கும் கிட்டாது. ஏன்னா கல்ல ஆயும் போது கொடிய ரெண்டு நாளு உலர்த்திட்டு தான் ஆயவிடுவாங்க. அதனால கல்ல ஆஞ்ச பின்ன சாப்பிடுவது கூட ரெண்டுநாள் உலர்ந்த கல்லதான்.
     பச்சகல்ல சாப்பிடுவது அவ்வளவு அலாதியான சுகம். அது ஒரு தியானம் மாதிரி. கை தானா கல்லய துளாவி எடுத்து அனிச்சையாக உரிக்கும். வாய் தானாக திறக்கும். என்னதான் கிரிக்கெட் ஃபீல்டிங்கில நான் மோசமான ஆளா இருந்தாலும் கல்லய வாயில விட்டெறிவதில் ஜான்டிரோட்ஸ் கூட எனக்கு பின்னாலதான் நிக்கணும். அந்த சமயத்தில் கல்லயின் சுவையை ரசித்து ருசிப்பதில் தான் மனம் லயித்து இருக்கும். மனம் வேறு எதையும் உணராது. அதனால தான் கல்ல சாப்பிடுறது ஒருவகையான தியானம் என்கிறேன். எங்கம்மா கல்லய உரிச்சி உரிச்சி மொத்தமா தருவாங்க. ஆனா வேணாம்னுடுவேன். கல்ல சாப்பிடுறது என்பது நல்ல தேர்ந்த செழிப்பான கல்லய தேர்வு செய்வது, கல்லயின் நடு வயிற்றில் ஒரு கட்டை விரலால் ஒரு அமுக்கு அமுக்கி ரெண்டாக உடைப்பது அப்புறம் பயிர வாயிலும் தொளும்ப தனியாவும் போடுவது என்கிற எல்லாமும் இணைந்து இருந்தால் தான் அந்த செயல் முழுமை பெறும். இதில் கூட தேர்ந்த அனுபவம் இல்லாதவர்கள் “ஸ்பூனரிசம்“ என்கிறது போல தொளும்பை வாயிலும் கல்லய கீழேயும் எறிகிற பிழையை செய்வார்கள்.
     அடுத்த ஒரு விஷயம், காஞ்சிகிடக்கும் கல்லக் கொடிய முட்டா போட்டு கொளுத்தி அதுல பச்சக்கல்லய போடணும். கொடி நல்லா கொளுந்தி முடியிற வரைக்கும் காத்திருக்கணும். அப்புறமா கல்லய லாவகமா அப்புறப் படுத்தணும். கிட்டத்தட்ட கருப்பு கலர்ல தோளு இருக்கும். சூடா இருக்கும் போதே அத உரிச்சோம்னா பச்சக்கல்லயில இருக்குற நீர் வத்தி தோள் சுருங்கி இருக்கும். சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். அத எப்படி உங்களுக்கு சொல்றது?! பிஞ்சி முந்திரிபருப்ப கீணி சாப்பிட்டு இருக்கீங்களா (இல்லையா?, சாரி பாஸ், ஒண்ணும் பண்ண முடியாது) அந்த மாதிரி இருக்கும். அதுலயும் கொஞ்சம் கருகி இருப்பது லைட்டா கசப்பு ஏறி இன்னும் அருமையா இருக்கும். இதே புராசஸ் காஞ்ச கல்லைக்கும் பொருந்தும். அது நாம சட்டியில வறுத்த கல்லய விட வேற லெவல் டேஸ்டா இருக்கும்.

     அடுத்தது பச்சக்கல்லய அவிச்சி சாப்பிடுவது. (குறிப்பு எழுதிக்க நோட்டு எடுக்காதிங்க இது சிம்பிள் பிராசஸ் தான்) இதுல பெருசா ஒண்ணும் மெனக்கெட வேண்டாம். கல்லய அலசிக்கணும். அப்புறம் ஒரு அலுமினியக் குண்டான்லயோ அல்லது குண்டுலயோ அல்லது மண்சட்டியிலயோ தண்ணி வச்சி கல்லய முழுகுற அளவு போட்டு உப்பு போட்டு மூடிவச்சிட்டு வேற வேல எதுவும் இருந்தா போய் பாருங்க அது பாட்டுக்கு வெந்துக்கிட்டு கிடக்கும். எடுத்து தண்ணிய வடிச்சிப்புட்டு ஆற வச்சி சாப்பிட வேண்டியது தான். சுடுற பச்சக்கல்லயில நீர் வத்தி இருக்கும், ஆனா இதுல நீர் ஏறி இருக்கும். இதே அவிச்ச கல்லய ஒரு நாள் வெயில்ல காய வச்சி சாப்பிட்டிங்கன்னா அந்த சுட்டக் கல்ல டேஸ்ட்ல பாதி டேஸ்ட் கிடைக்கும்.
     இருந்த கல்லய எல்லாம் நல்லா காயவச்சிட்டாங்கப்பா, என்னப்பா பண்றது? இது கொஞ்சம் டெலிகேட் பொசிசன் தான். ஏன்னா பச்சக் கல்ல அளவுக்கு காஞ்சக் கல்லய ட்ரை பண்ணாதிங்க, அப்புறம் நீங்க டாய்லெட்லயே குத்த வச்சி உக்கார வேண்டி வந்துரும். ஆனா எல்லாருக்கும் இல்ல. நானெல்லாம் படிக் கணக்குல காஞ்சக் கல்லய சிங்கிள் சிட்டிங்ல சாப்பிட்டுருக்கேன். காஞ்ச கல்லய வறுத்து சாப்பிடுறது இன்னும் சிறப்பா இருக்கும். தொளும்போட வறுப்பது ஆபத்தில்லாதது. ஏன்னா டைமிங் மிஸ்ஸானாலும் பிரச்சின இல்ல. உறிச்ச கல்லய வறுக்கறது கொஞ்சம் டெலிகேட்டான விஷயம். கொஞ்சம் டைமிங் மிஸ் ஆனாலும் நீங்க வெறும் சார்கோல் திங்கிற மாதிரிதான் திங்க வேண்டி வரும். வண்டியில வச்சி கல்ல வறுக்குறவங்க அதானல தான் மணல் போட்டு வறுப்பாங்க.
     இந்த வறுத்த கடல விஷயத்தில எனக்கு நேர்ந்த இந்த அநீதிய நான் சொல்லியே ஆகணும். லால்குடி ஆஸ்டல்ல தங்கி இருந்தப்ப சாயங்காலம் ஆனா கிண்கிணி என்று சத்தம் எழுப்பிய படி கல்ல பயற உப்பு சேர்த்து  வறுத்துக் கிட்டே விப்பாங்க.  நானும் ஆஸ்டல் போன புதுசுல வாங்கி சாப்பிடலாமேன்னு ஒரு நாலணாவுக்கு (2கே கிட்ஸ், ஃபார் யுவர் இன்பர்மேசன் நாலணா என்றால் இருபத்தி ஐந்து பைசா) வாங்கினேன். நானும் ஒரு படி இல்லனாலும் ஒரு டம்ளர் அளவாவது தருவாங்கன்னு வாய பொளந்துகிட்டு எச்சி ஒழுக நின்னேன். அவன் ஒரு பத்து பதினஞ்சி பயிற ஒரு கூம்பு மாதிரி சுருட்டி வச்ச பேப்பர்ல போட்டு மடிச்சி தரான். வாசல்ல இருந்து ஆஸ்டல் படி ஏறுறதுக்குள்ள தீந்து போச்சு. (இந்த ”லேஸ்” காரன் படிச்ச ஸ்கூல்ல இவந்தான் ஹெட்மாஸ்டர் போல)
     காய்ந்த கல்லய ஊறவெச்சி அவிச்சி கொண்டக் கடல மாதிரி தாளிச்சி அலங்காரமா சாப்பிடுவது எல்லாம் லேட்டஸ்ட் பரிணாம வளர்ச்சி. அதெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது. ஆனாலும் ”ஆல இல்லாத ஊருக்கு இலுப்ப பூ சக்கர“ என்பது போல திருச்சி போறப்பல்லாம் சத்திரம் பஸ்டாண்டில் வாங்கி சாப்பிடுவது உண்டு.
     வறுத்த கல்லயோ காஞ்ச கல்லயோ சாப்பிட்ட பின்பு கொஞ்சமாக வெல்லமோ சக்கரயோ சாப்பிடுவது நல்லது (”பின்” விளைவுகளில் இருந்து தப்பிவிடலாம்) என்பார்கள். அந்த சேர்க்கையில் தான் கடலைமிட்டாய் கண்டுபிடித்திருப்பார்கள் போலும். இப்பவும் எனக்கு மிகப் பிடித்த தின்பண்டம் “கடலைமிட்டாய்“ தான். தனியாக கடைக்குச் செல்லும் போதெல்லாம் ஒரு ஐந்து ரூபாய் கடலை மிட்டாய் (அப்போவெல்லாம் இது வெறும் ஐம்பது பைசா தான் தெரியுமா) வாங்கி சாப்பிடுவது உண்டு. (துணைவியாருக்கு தெரிந்தால் “ஏற்கனவே இருக்கிற கொழுப்பெல்லாம் பத்தாதா?” என்று “மரியாதையாக“ கோபித்துக் கொள்வார்)
     “பொறிவிளங்காய்“ என்று கடலை மிட்டாய் மாதிரியான சேர்க்கையை அப்படியே உருண்டையாக (கிட்டத்தட்ட ஒரு கிரிக்கெட் பால் சைசில்) பிடித்து விடுவார்கள். இது விழுப்புரம் மாவட்டத்தில் பிரபலம் என நினைக்கிறேன். ஏனென்றால் தீனி செய்வதில் விற்பனரான எங்க “செஞ்சி“அத்தை (அண்ணியின் அம்மா, அத்தை செய்யும் அதிரசம் ரொம்பச் சிறப்பு) பல முறை செய்து எடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இதை சாப்பிட நீங்க வெறும் கையோடு உக்கார முடியாது. சுத்தியலும் கையுமாக உக்காந்தீங்கன்னா அப்படியே ஒரு மாமல்லபுர சிற்பியின் லாவகத்தோடு உடைத்து உடைத்து சாப்பிடலாம்.
     அப்புறம் கல்ல உறிச்சி சாப்பிடுவதில் என்ன மிஞ்ச யாரும் கிடையாது என்கிற ஒரு இறுமாப்ப்பு இருந்தது அல்லவா? ஆனா அதுவும் ஒரு நாள் உடைந்து தரைமட்டமானது. எங்க நடுசித்தப்பா எதிரில் அமர்ந்து ஒருமுறை கல்ல சாப்பிட்டேன். அவரின் வேகமும் அளவும் பார்த்து வியந்து போனேன். கல்ல அரைக்கிற மிஷின் கூட இவரிடம் தோற்றோடும். கொஞ்சம் நேரம் அமர்ந்தாலும் அரை கூட கல்லய உரித்து தள்ளி விட்டார். அவர் சாப்பிடுவதை பார்க்கும் எவருக்கும் கல்ல சாப்பிடும் ஆர்வம் தொற்றிக் கொள்ளும். அவ்வளவு வேகத்திலும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்.
     இப்போ என்ன திடீர்னு “கடலை போடலாமா” ன்னு எழுத ஆரம்பிச்சிட்டீங்க? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. இந்த லாக்டவுன்லயும் ஒரு அம்மா தட்டு வண்டியில் வைத்து பச்சக்கடலையை படி இருபது ரூபான்னு விக்கிறாங்க. நானும் ஒரு இருபது ரூபாய்க்கு வாங்கி இருக்கேன். இன்னைக்கு அவித்து சாப்பிடணும்.

Thursday, April 30, 2020

புத்தகம் : ஏழரைப் பங்காளி வகையறா




புத்தகம் : ஏழரைப் பங்காளி வகையறா
ஆசிரியர்: அர்ஷியா (சையத் உசேன் பாஷா)
பதிப்பகம் : நியு செஞ்சுரி புக் ஹவுஸ்
      தமிழில் வந்த முதல் உருது முஸ்லிம் நாவல் என்று புத்தக உரையில் போட்டிருந்தார்கள். மற்ற நேரம் என்றால் இந்த புத்தகத்தை எடுத்திருப்பேனா என்று தெரியாது. இப்போது கொரோனா காலத்தில் புத்தகங்கள் எதுவும் ஸ்டாக் இல்லாத காரணத்தால் பள்ளியில் இருந்து எடுத்து வந்திருந்த இந்த 400 பக்க நாவலைக் கையில் எடுத்தேன். ஒரு நான்கு நாட்களில் படித்து முடித்து விட்டேன்.

      நூலாசிரியர் அர்ஷியா என்கிற சையது உசேன் பாஷா அவர்கள் பல பத்திரிக்கைகளில் வேலை பார்த்துள்ளார். மேலும் பல சிறுகதைகளும் சில நாவல்களும் எழுதியுள்ளார்.

      ”வெயில்” படம் பார்த்திருக்கிறீர்களா?. இந்த கதையின் மையஓட்டமும் ஒரு தோல்வியுற்றவனின் கதைதான். “குந்தித் தின்றால் குன்றும் மாளும்” என்கிற பழமொழிக்கு ஏற்றாற்போல ஒருவன் வாழ்க்கையை வாழ்வதற்கான எந்த ஒரு வேலையோ, தொழில் திறமையோ இல்லாமல் சும்மா விட்டத்தைப் பார்த்து உக்காந்து பத்து பிள்ளைகள் பெற்று நம்பி உள்ள அனைவரையும் கொடுமையான ஏழ்மையில் தள்ளி மாண்டு போகிறான்.
      அது என்ன ஏழரைப் பங்காளி வகையறா? 15ம் நூற்றாண்டு வாக்கில் மதுரைக்கு வந்து செட்டில் ஆகிறார் இஸ்மாயில்.( இவர் வந்தது குறித்து நான்கு விதமான ஊகக் கதைகளை சொல்கிறார் ஆசிரியர்) அவருக்கு ஏழு மகன்கள் ஒரு மகள். பெரியவர் நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். இறக்கும் தருவாயில் சொத்து பிரித்து கொடுக்க எல்லா பிள்ளைகளையும் அழைக்கிறார். சொத்தினை சரிபாதியாக பிரிக்கச் சொல்கிறார். அதில் ஒரு பாதியை மறுபடி ஏழாக பிரிக்கிறார். அந்த பங்கினை மகன்களுக்கு கொடுக்கிறார். சரிபாதியாக பிரிக்கப் பட்ட மற்றொரு பங்கினை மகளுக்கு வழங்குகிறார்(பெண் குழந்தைகளுக்கு சொத்துரிமை இல்லாத காலகட்டம் அது என்பதை அறிக) . அதில் இருந்து கிளைத்து பெருகியது தான் இந்த ஏழரைப் பங்காலி வகையறா.
      சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னர் இருந்த காலத்தில் ரஜாக் சாயபுவிடம் கதை தொடங்குகிறது. சொந்தமாக இரண்டு செக்குகள் வைத்த எண்ணை ஆட்டி ஏவாரம் செய்து செழிப்பாக இருக்கிறார் ரஜாக்.ஜொகரா அவரது மனைவி. தம்பதியருக்கு சொத்து பத்தெல்லாம் இருந்தும் குழந்தை இல்லை. பிறகு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. சையது தாவூத் என்று பெயரிட்டு மகிழ்கிறார்கள். ரஜாக் பணக்கொழுப்பில் பெண்கள் தொடர்பில் நிறய இழக்கிறார். மனைவி ஜொகராவும் வீடு வீடாக சென்று அமர்ந்து பொழுது போக்குகிறாள். தாவூத் தானாகவே பணக்கார மெருகு குறையாமல் வளர்கிறான். சொத்து தான் அழிந்தது போக இன்னும் இருக்கே. ரஜாக் சாயபுவும் “மௌத்(இறப்பு)“ ஆகிறார்.
      இந்த நிலையில் தான் குத்தூஸ் வருகிறார். இளைஞனாக இருக்கும் தாவூத்தை அழைத்துக் கொண்டு மீதம் இருக்கும் சொத்து பத்தை பராமரிக்க முன்வருகிறார். நாம்மால முடியல யாராவது செஞ்சி சாப்பாட்டுக்கு கொடுத்தா சரிதான் என்று தாவூத்தும் சம்மதிக்கிறான்.
      “ஆபில்பீ” என்கிற பெண்ணை பார்த்து தாவூத்துக்கு ஊரே வியக்கும் வண்ணம் விமரிசையாக திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை சில ஆண்டுகள் நல்லபடியாகத் தான் போகிறது. பிறகு தான் குத்தூஸ் பாயின் உண்மையான முகம் தெரிகிறது. தாவூத் இடம் பவர் பத்திரம் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர் அவனது உரிமையில் இருக்கும் அனைத்து இடங்களையும் தனது மனைவி பெயரில் எழுதிக் கொள்கிறார்.

      இந்நிலையில் வருடம் தவறாமல் தாவூத் ஆபில்பீ தம்பதியினர் புள்ளையா பெற்று தள்ளுகிறார்கள். மீதம் இருக்கும் கொஞ்சம் இடத்தில் இருந்து வரும் வருமானத்தில் பத்து பிள்ளைகளை வளர்க்கிறார். பிள்ளைகள் வளர வளர நிலம் தேய்ந்த வண்ணம் வந்து அதுவும் இல்லாமல் போகிறது. மூத்த மகள் அனார்கலி திருமணக் கடனில் வீட்டில் இருந்த பாத்திர பண்டங்களும் வீடும் விற்பனையாகிறது. 
      திரும்ப ஓப்பனாகும் கதை குட்டிப் பயல் சையத் உசேன் பாஷா பள்ளியில் மதிய உணவுக்காக ஆர்வத்தோடு காத்திருக்கையில் ஆரம்பிக்கிறது. யார் ஊட்டு புள்ளையோ சோத்துக்கு ஆளா பறக்குதே என்று நினைக்கும் வேளையில் அது தாவூத் மகன்களில் ஒருவன் என்பதை திறக்கிறார் ஆசிரியர். திரும்ப சில அத்தியாயங்களில் அவனுடைய பார்வையில் அவர்களது ஏழ்மை விவரிக்கப் படுகிறது. வீட்டை விற்ற பின்பு வீட்டில் உள்ள ஆபில்பீ மற்றும் குழந்தைகளுக்கு போக்கிடம் இல்லாத நிலையில் தவித்து நிற்கிறார்கள். தாவூத் விரக்தியோடு காணாமல் போகிறார். ஆபில்பீயும் ஏழு குழந்தைகளும் உற்றார் உறவினர் எவரும் அவர்களுக்கு உதவ முன்வராத சூழலில் காணாமல் போகிறார்கள்.
      ஒருமாதம் கழித்து திரும்ப வரும் தாவூத் குடும்பமே காணாமல் போனது குறித்து அறிந்து தவித்து போகிறான். இந்த நிலையில் அவனது நிலை குறித்து வருந்தி குற்ற உணர்ச்சியில் குத்தூஸ் பாயே அவனது கடன்களை தானே அடைத்து விட்டு பிள்ளைகளை தேடிக் கண்டு பிடிக்க ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து உதவுகிறார்.
      பிள்ளைகளை கண்டு பிடித்து வந்து ஒரு இடத்தில் குடிசை போட்டு மீண்டும் ஏழ்மை வாழ்க்கை வாழ்கிறார்கள். உசேன் மட்டும் மிகுந்த முயற்சியோடு நன்றாக படிக்கிறான். கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் தனக்காகவும் குடும்பத்துக்காகவும் பயன்படுத்த எத்தனிக்கிறான். ( உசேன் கதாப்பாத்திரத்தை காணும் போது “Capernaum” படத்தில் வரும் சிறுவன் “சைன்” ஐ தான் நான் உருவகப்படுத்திக் கொண்டேன். இந்தக் கதையில் வரும் உசேனுக்கும் அந்தப் படத்தில் வரும் “சைன்“ க்கும் அவ்வளவு பொருத்தம்) இறுதியில் ஏழ்மை நிலையில் இருந்து மீளாமலேயே ஒரு நாள் தாவூத் இறந்தும் போகிறார் என்று கதையை முடிக்கிறார்.
      விக்ரமன் படங்களைப் பார்த்து வளர்ந்த நமக்கு கதையை படிக்கும் போது ஏதாவது ஒரு புள்ளியில் அற்புதம் நடந்து தாவூத் குடும்ப நிலை மாறிவிடாதா? என்கிற ஏக்கம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அற்புதங்கள் சினிமாவில் தான் எளிதாக சாத்தியப் படுகிறது. நிஜத்தில் நாம் தான நமது உழைப்பால் நமது வாழ்வை அற்புதமாக மாற்ற வேண்டும். இந்தக் கதையில் வரும் தாவூத் எந்த முயற்சியோ தொழில் திறமையோ இல்லாமல் இருப்பதோடு குறைந்த பட்ச சாமர்த்தியம் கூட இல்லாமல் இருப்பதையும் அநியாயமாக இழந்து ஏழ்மையில் விழுகிறான்.
      படத்தில் வரும் குத்தூஸ் பாத்திரம் மிக நுணுக்கமாக விவரிக்கப் பட்டிருக்கிறது. ஏமாற்றி பிடுங்கிக் கொள்வோரின் உளவியலை அவ்வளவு அழகாக வர்ணித்திருப்பார் ஆசிரியர். இவ்வளவு தூரம் அடித்துப் பிடித்து சொத்து சேர்த்த குத்தூஸ் இறக்கும் போது பிரேதத்தில் இருந்த வைர மோதிரத்தை மகள்களில் ஒருவள் லவட்டிக் கொள்கிறாள். மகள் மருமகள்கள் என அனைவரும் இவளாக இருக்குமோ அவளாக இருக்குமோ என்று ஒருவரை ஒருவர் மனதிற்குள் சந்தேகப் பட்டவண்ணம் இருப்பார்கள்.
      ஆபில்பீ திருமணமான புதிதில் தாவூத்தை வேலைக்குச் செல்ல வலியுறுத்துகிறாள். அதனால் அவன் பல நாட்கள் கோபித்துக் கொண்டு முகம் கொடுத்து பேசாமல் போகிறான். பின்னர் வருடத்திற்கு ஒன்று என்று குழந்தை பெறும் வேலையில் இருவரும் மும்மரமாகிப் போகிறார்கள்.
      நாவலில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை முறை திருமண, சாவு சடங்குகள் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளன. மேலும் அவர்கள் குடும்பங்களில் புழக்கத்தில் உள்ள பல “உருது“ சொற்களையே ஆசிரியர் பயன்படுத்தி உள்ளார். அவ்வண்ணம் பயன்படுத்துகையில் அடியில் அவற்றுக்கான அர்த்தங்களையும் தந்துள்ளார்.
      ஆழ்ந்து வாசிக்க விரும்பினால் இந்த நாவல் ஒரு நல்ல சாய்ஸ்.

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...