Wednesday, August 22, 2018

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்….


   

யுவன் சங்கர் ராஜாவும் நா.முத்துக்குமாரும் சேர்ந்தாலே பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் தான்.
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை என்ற அங்கலாய்த்துக் கொண்ட நா.முத்துக்குமார் தான் இதயம் பேசும் நம்பிக்கை வார்த்தைகளை புரிந்துகொண்டு கவிதையாய் இந்தப் பாடலில் வடித்திருக்கிறார்.
நேஹா பேசின் என்பவர் பாடியது. அருமையான குரல். குரலில் தேன் குழைத்து என்பதை கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அனுபவரீதியாக உணர்வது இந்தப் பாடலில் தான். உள்ளபடியே இவரின் குரல் “செந்தேன் குழல்“ தான்.
பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
மோசமான சூழல்களால் மனது கலங்கி நிற்கும் போது இதமாக பேசும் இதயத்தின் வார்த்தைகள் எவ்வளவு அருமையாக உள்ளது. “புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்” அருமையான வரிகள்.
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
பாடலின் சரணங்கள் இரண்டுமே தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளால் நெய்யப் பட்டவை.
கடல் தாண்டும் பறவைகள் எவ்வாறு இளைப்பாரும் என்று எனக்கு தோன்றியதே இல்லை இந்தப் பாடலைக் கேட்கும் வரை.
அடுத்ததாக ஒரு பாஸ் கொடுத்து “அடங்காமலே“ என்று ஆரம்பிக்கும் இடம்…
சொல்பேச்சு கேளாமல் குறும்பு செய்யும் குழந்தைகள் பால் அன்னையர் காட்டும் செல்லக் கோபம் போல அந்த வரி வெளிப்படுகிறது. எவ்வளவு சொல்லியும் இந்த மனம் அடங்க மாட்டேன் என்கிறதே!!
“அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா?!!”

“கங்கை நதிக்கு மண்ணில் அணையா” என்பது போன்றது தான் நாம் மனதுக்கு போட நினைக்கும் வேலி.
இந்த சூழலை அழகாய் விளக்கும் இன்னுமொரு கவிதை பாருங்கள்.

வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?
-      கவிக்கோ அப்துல் ரகுமான்
நமது உள்ளத்தின் உள்ளே இரண்டு பேர் இருந்துகொண்டு மௌன மொழி கொண்டு தர்க்கம் புரிகிறார்கள்.  மௌனத்தின் பேரிரைச்சல் நமக்கு தாங்க இயலாததாக உள்ளது. நமது அமைதி கெடுகிறது.
உள்ளத்தின் உள்ளே உள்ள இருவரில் ஒருவன் மனம் போன போக்கில் நினைத்ததை அடைய எண்ணுகிறான். ”ஆதி யோகி” புகழ் ஜக்கியின் சொல் கேட்டு “அத்தனைக்கும் ஆசைப் படுகிறான்”
இரண்டாமவனோ சமூக ஒழுங்குக்கு கட்டுப் பட்டு நடக்கும் படி இடையறாது அறிவுறுத்திய வண்ணம் இருக்கிறான். வேலிக்கு வெளியே தலையை நீட்டிய கிளைகளை வெட்டிய தோட்டக்காரன் அவன்தான். இருந்தாலும் கூட வேலிக்கு அடியில் வேர்களை நழுவ விடுகிறான் குறும்புக்கார முதலாமவன்.
முதலாமவனை கொன்று ஒழித்துவிட வேண்டும் என்று “ஆசை“ப் படுவது தான் புத்தரின் ஞானம்.

Thursday, July 26, 2018


அந்தமான் நாயக்கர்- கி.இராஜநாராயணன்
கோபல்ல கிராமம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் என்ற வெகு பிரபலமான கரிசல் காட்டு எழுத்துக்கு சொந்தக் காரரான கி.இரா அவர்கள் எழுதிய மற்றுமொரு நாவல்தான் அந்தமான் நாயக்கர்.
கோபல்ல புரத்து மக்கள் நாவலின் இரண்டாம் பாகத்தில் சுதந்திரப் போராட்ட பிண்ணனியில் அந்த கிராம மக்களின் எண்ண ஓட்டத்தை பதிவு செய்திருப்பார். அதுபோல மற்றுமொரு தேசபக்தி சார்ந்த படைப்புதான் இதுவும். இதிலும் “கோட்டிக்காரப்பயல், கும்பா, மாட்டுக்கு கூளம் போடணும்,“டங்கா“ முறிச்சி தப்ப முயன்றான், போனாப் போறான் பிசிக்கி” போன்ற கரிசல் காட்டு சொலவடைகளும் அவருக்கே உரித்தான செவி வழி கேட்ட கதைகளும் கதையோட்டத்தில் செம்புலப் பெயல் நீர் போல கலந்து இருக்கிறது.
அழகிரி என்கிற சிறுவன் மரத்தின் நுனிக் கொம்பில் ஏரி இந்திய தேசியக் கொடியை கட்டிவிடுகிறான். அவன் குடும்பம் அண்டிப் பிழைக்கும் பெரிய குடும்பத் தலைவர் “பட்டா மணியம் நாயக்கர்“ ஆங்கிலேயரிடம் அவனை காட்டிக் கொடுத்து தண்டனை பெற்று தருகிறார். ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறைக்கு சென்ற அழகிரி தப்ப முயன்றதால் தண்டனை இரட்டிப்பாகிவிடுகிறது. சுதந்திரம் பெற்று பதினைந்து ஆண்டுகள் கழித்து ஊர் திரும்புகிறார் முதியவர் அழகிரி “அந்தமான் நாயக்கராக“. அவர் சிறையில் கழித்த ஐம்பது ஆண்டுகளில் அவரது காதலி குடும்பம் வீடு மற்றும் அவரை சிறைக்கு அனுப்பிய “பட்டா மணியம் நாயக்கர்“ குடும்பம் உள்ளிட்ட யாருமே ஊரில் இல்லை.
சிறை சென்று திரும்பிய அந்தமான் நாயக்கர் தனது நிலத்தில் விவசாயம் செய்கிறார். விவசாயப் பயிருக்கு நல்ல விலை கிடைக்க வில்லை. அரசாங்க அதிகாரிகள் மற்றும் முதலாளிகளின் சுரண்டல் இவற்றுக்கு எதிராக போராட்டம் வெடிக்கிறது. போராட்டத்தில்  நடந்த தடியடியில் அடிபட்டு இறக்கிறார் அந்தமான் நாயக்கர் என்பதோடு கதை முடிகிறது.
முன்னுரையில் இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கதை என்கிறார். ஆனால் சினிமாவுக்கான கவர்ச்சியான அம்சம் எதுவும் இல்லை. ஒருவேளை படமாக எடுக்கப் பட்டிருந்தால் தோல்வியடைந்திருக்க வாய்ப்பு உண்டு.
கதைக்குள் பின்னப்பட்ட “விரலக்கா“ கதை துரோகம் தோய்ந்த துயரம். நல்லதொரு வாசிப்பு அனுபவம்.

Monday, May 28, 2018

விடுமுறையில் படித்தவைகள் 1



இந்த கோடை விடுமுறையில் முழுக்க முழுக்க ஓய்வெடுக்க நல்லதொரு வாய்ப்பு கிட்டியது. இரவின் அமைதியில் நமது புலன்கள் யாவும் நழுவிச் சென்று உறக்க நிலையை எய்துவது போல பகலில் முடியவில்லை. நானும் மதியங்களில் ஆழ்ந்த உறக்கம் போட்டு விட்டதாக எண்ணி எழுகையில் 30 நிமிடங்களே கடந்திருக்கும். ஆகையால் புத்தகங்கள் இன்றி ஓய்வு ஏது?


முதலில் மேலாண்மைப் பொன்னுச்சாமி எழுதிய ”முற்றுகை” என்ற நாவலை வாசித்தேன். சொர்ணம் என்கிற வாழ்ந்து கெட்ட மேல்ஜாதிக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் கதை. அவள் அழகைக் கண்டு அவளை அடைய எண்ணுகிறார் அவளது அக்கா கணவர் இரண்டாம் தாரமாக. குடும்பம் இருக்கும் சூழலில் அது சரியே என்று சம்மதிக்கிறார் அவளது அம்மா. அடுத்து அவள் பணிபுரியும் தீப்பெட்டி தொழிற்சாலை முதலாளி தன்னை முதலாளி ஆக்கியதால் அழகற்ற பெண்ணைக் கட்டிக்கொள்கிறான் மேலும் குழந்தை இல்லை எனவே அவருக்கும் சொர்ணத்தை அடைய ஆசை. அக்கா கணவரின் சூழ்ச்சியில் இருந்து தப்புவிக்க கேட்டு அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பண்ணைக் காரனின் பேரனும் தற்போது படித்து நல்ல வேலையிலும் தொழிற்சங்கவாதியாகவும் உள்ள பாரதியை நாடுகிறாள். பாரதி அவனுடைய காதலை நாகரிகமான முறையில் தெரிவிக்கிறான். அக்கா கணவரின் முற்றுகை மற்றும் சாதி மாறுபாடு காரணமாக தனக்கு விருப்பமில்லா பாரதியின் காதல் ஆசை இவற்றில் இருந்து தப்ப எண்ணி அவள் ஆலை முதலாளியின் ஆசை நாயகி ஆக முடிவெடுக்கிறாள் என்று கதை முடிகிறது.
நாவல் ஆசிரியர் எம்.பி.ஏ படித்திருப்பார் அதனால் மேலாண்மைப் பொன்னுச்சாமி என்று போட்டுக் கொள்கிறார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் மேலாண்மை என்பது அவரது ஊரைக் குறிக்கும் குறியீடு என்று பிறகுதான் தெரியவந்தது.

அடுத்த நாவல் டாக்டர் மு.வ அவர்கள் எழுதிய “நெஞ்சில் ஒரு முள்” என்கிற நாவல். ஒரு நடுத்தர வர்க்கத்து முதிர்கன்னி வடிவு பி.ஏ படித்தவள். (கதைக்களம் 60-70களில் என்பதை மனதில் இருத்தவும்) அவள் படிப்புக்கேற்ற வேலையோ அல்லது வரனோ அமையவில்லை.
பணக்கார சீமாட்டி ஒருத்து வீட்டுக் கணக்கு வழக்கு எழுதுவதற்காக அவளை வேலைக்கு அமர்த்துகிறாள். அவருக்கு இரண்டு பெண்கள். பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறாள். யாரையாவது காதலித்து அழைத்து வாருங்கள் கல்யாணம் செய்து வைக்கிறேன் என்கிற அளவில் சுதந்திரம் வழங்குகிறாள். அவளே வடிவுக்கும் இரண்டாம் தாரமாக ஒரு முக்கால் கிழவனை பார்த்து வடிவு மற்றும் பெற்றோரை திருமணத்தினால் கிடைக்கும் வசதியான வாழ்க்கையை கூறி சமாதானம் செய்து திருமணம் நடத்தி வைக்கிறாள். அவனோ ஒரு குடிகாரன் சூதாடி மற்றும் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்புபவன்.
ஒரு முறை சண்டை போட்டுக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வரும் வடிவு அங்கே பெற்றோர் இல்லாத காரணத்தினால் மறுபடியும் இரயில்வே ஸ்டேஷன் செல்ல முயல்கையில் அவளது முன்னால் காதலனைக் காண்கிறாள். அவன் வீட்டில் மனைவி மக்கள் இல்லாத சந்தர்ப்பாமாக போய்விட இருவரும் உல்லாசமாக இருந்து விடுகிறார்கள். வடிவு குற்ற உணர்ச்சியில் புழுவாக துடிக்கிறாள். அதன் பிறகு கணவனுக்கு இணங்கி சகித்து வாழ்கிறாள். இதற்கிடையில் அவள் கர்ப்பமடைகிறாள். அவள் கணவன் தனது வாரிசு என்று சந்தோஷப்பட்டு பொறுப்பானவனாக மாறுகிறான். இவள் அந்த கருவின் விதை தனது காதலன் போட்டது என்று உணர்ந்து மனதினுள் வருந்தியபடி இருக்கிறாள். மகனும் பிறந்து பொறுப்பாக வளர்ந்து கல்லூரி செல்கிறான். அங்கே அன்பரசி என்ற பெண்ணை காதலிக்கிறான். இரு குடும்ப பெற்றோரும் மிகவும் பெருமிதமாக அவர்களின் படிப்பில் உள்ள பொறுப்பையும் காதலில் உள்ள கண்ணியத்தையும் நோக்குகிறார்கள்.
விஜயா குடும்பம் பொறுப்பற்ற வாழ்க்கை நடத்திய காரணத்தினால் குடும்பம் வசதி வாழ்க்கை எல்லாம் இழந்து நோய்வாய்ப் பட்டு விஜயா இறந்து போகிறாள். வடிவின் கணவனின் நண்பரான ஜமீன்தார் இறந்து போகிறார். வடிவின் கணவன் இறந்து போகிறான்.
திடீரென ஒருநாள் மகனின் காதலனான அன்பரசி தன் முன்னாள் காதலனின் மகள் என உணர்கிறாள். வடிவின் மகன் கண்ணழகனுக்கும் அன்பரசியின் தந்தை தான் ”பயாலஜிக்கல் ஃபாதர்”. எனவே திடீரென மகனின் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு அந்த வலியை தாங்க முடியாமல் அனாதை இல்லம் ஆரம்பிக்கிறாள் என கதையை முடிக்கிறார்.
கதையின் முக்கிய சாராம்சமாக கதையின் இடையிலேயே ஒரு விஷ(ய)த்தை முன்வைக்கிறார் மு.வ ”நெறிபிறழ் நடத்தைக்குச் சென்று மீண்ட பெண்கள் கணவனுக்கு கட்டுப் பட்டு இல்லறத்தை நடத்துகிறார்கள். மற்றோர் தனது கற்பின் நேர்மை குறித்த செறுக்கோடு கணவனின் சொல்பேச்சைக் கேட்பதில்லை”
கதைமாந்தர் சொல்வது போல மற்றொரு முரணான கருத்தை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ”ஆத்திகர்கள் எப்போதும் பிறர் நலத்தை மனதில் எண்ணி அன்பொழுக கடவுளை வணங்கி வாழ்கிறார்கள், நாத்திகர்களோ எப்போதும் தன்னலத்தையே பெரிதாக எண்ணி கடவுளை வணங்காமல் ஒழுக்கமற்று திரிகிறார்கள்” என்கிறார். இதையே கண்ணதாசனும் அர்த்தமுள்ள இந்து மதம் என்கிற குப்பையில் கூறியிருக்கிறார்.

Saturday, March 24, 2018

ரிசர்வ்டு VS டிசர்வ்டு (RESERVED VS DESERVED)



ஒபாமா ஆட்சி காலத்தில் வழக்கம் போல அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருந்த மோடி ஒபாமாவிடம் உரையாடியதாக ஒரு உரையாடல் முகநூல் மற்றும் வாட்சாப் ல் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
மோடி,“எங்க இந்தியர்கள் தான் இங்கே வேலை பார்க்கிறார்கள். எங்க நாட்டிலும் வேலை பார்க்கிறார்கள். ஆனால் உங்க நாடு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது எங்க நாடு வளரவே இல்லையே” (”நீர் ஒரு மங்குணி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை நிருபித்துக் கொண்டு இருக்கிறீர்என்றெல்லாம் ஒரு பிரதமரை வையப்டாது ஆமாம் சொல்லிட்டேன்)
ஒபாமா, “நீங்கள் ரிசர்வ்டு க்கு வேலை கொடுக்கிறீர்கள், நாங்களோ டிசர்வ்டுக்கு வேலை கொடுக்கிறோம் வெரி சிம்பிள்என்று பதிலளிக்கிறார்.
ஆமாம் இந்த ரிசர்வ்டு என்றால் என்ன? டிசர்வ்டு என்றால் என்ன என்பதற்கு கோனார் நோட்சை புரட்டியபோது வந்ததை சொல்கிறேன்.
ரிசர்வ்டு என்பது ரிசர்வேஷனைத்தான் குறிக்கிறது. ரிசர்வ்டு என்பவர்கள், தகுதியற்ற, திறமையற்ற, அறிவில்லாத ஏன் இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாத எஸ்ஸி என்கிற ஒற்றை சாதிச்சான்றைக் கொண்டு தங்குதடையின்றி அனைத்து வேலைகளுக்கும் சென்று கொண்டிருக்கும் ஒரு மூடர் கூட்டம். இதில் கடுகளவேணும் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால் ஒரு வேலையில் இருக்கும் எஸ்ஸியை காண்பித்து வேலையில் இல்லாத படித்த மேல்வர்க்க நபரிடம்இவருக்கு எப்படி வேலை கிடைத்தது?“ என்று கேட்டுப் பாருங்கள். அவர் என்னை விட இன்னும் விளக்கிக் கூறுவார்.
அப்படின்னா டிசர்வ்டு என்போர் யாரு? கண்ணன் கவச குண்டலத்தோடு பிறந்தது போல பிறக்கும் போதே ஒரு கையில் ரூல்டு நோட்டும் மற்றொரு கையில் அப்சரா பென்சிலும் வைத்துக் கொண்டு பிறந்து நர்சை வியப்பில் ஆழ்த்திய மேல்வர்க்க மக்கள் (அட அட பிறந்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே!!) டிசர்வ்டு கேட்டகரி ஆட்கள் படிக்கிறார்கள் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்கே போனாலும் அவர்களின் ஜாதியை கேட்டு குப்புற புடித்து தள்ளி விடுகிறார்கள். இப்படி விரட்டி விரட்டி அடித்த காரணத்தினால் விரக்தி அடைந்து தனது திறமைகள் அனைத்தையும் ஒரு டிராலி சூட்கேசில் வைத்து பூட்டி எடுத்துக் கொண்டு மேல்நாடுகளில் சென்று கடைவிரிக்கிறார்கள். அந்த நாடு காம்ப்ளான் குடித்த சிறுவன் கணக்காக மூன்று மடங்கு வேகமாக வளர்ச்சி அடைந்து விட்டது என்று சைன்டிஃபிக்காக நிரூபிக்கப் பட்டுள்ளது.
(இந்த அவல நகைச்சுவை ரிசர்வ்டு கேட்டகரியை சேர்ந்தவர்களின் ஃபேமிலி குருப்பில் சிலாகித்து விவாதிக்கப்பட்டது. என்னன்னு? ஒபாமாவின் கருத்து மிகச்சரி என்பதாகத்தான்)
அப்படின்னா பொதுப்பிரிவுக்கான 50 விழுக்காடு இடங்களை எப்படி நிரப்புகிறார்கள் என்றெல்லாம் குதர்க்கமாக கேள்வி கேட்க கூடாது. வேலையின்றி இந்த மாதிரியெல்லாம் புலம்புவோர் அந்த 50 விழுக்காடு இடத்திற்கு போட்டியிட்டு தோற்று துவண்டு போன திறமையற்றவர்கள் என்று யாராவது சொன்னீங்கன்னா மூஞ்சிமேல பூரான் உட்ருவேன். ஏன்னா கடவுள் இருக்குன்னு சொன்னா கேள்வி கேட்காம நம்புற மாதிரி எஃப்சி(முன்னேறிய பிரிவினர்) என்றாலே அறிவாளி தான் என்பதை நம்பவேணும். அதே மாதிரி 50 இடத்திற்கு போட்டிபோட்டு கிடைக்காத விரக்தியில் எங்க இடங்களை பிடித்துக் கொண்டது அந்த திறமையற்ற 20 பேர் தான் என்றுஎன்று கூறினாலும் நம்ப வேண்டும். இல்லையின்னா தெய்வகுத்தமாயிடும் சொல்லிட்டேன்.
ரிசர்வேஷன், ரெக்கமண்டேஷன், கரப்ஷன் இந்த மூன்றினால் தான் இந்தியா வல்லரசாகலஎன்று கமல் பொண்ணு கேட்டப்ப அப்படியே உடம்பெல்லாம் புல்லரிச்சி போச்சி. அப்பு முருகதாசு, என்னா ஒரு அறிவுப்பா உனக்கு என்று வியந்து போனேன்.
ஏன்னா ரிசர்வேஷன்ல வந்த இஞ்சினியர்கள் கட்டிய பாலங்கள் உடைந்து போகின்றன. டாக்டருங்க ஆப்பரேஷன் பண்ணியதால் தான் நோயாளிங்க பரலோகம் அடைகிறார்கள். ஆமாம். இதுவும் அடிக்கடி கேள்விப்படும் ஒரு செய்திதான்.
இஞ்சினியரிங் காலேஜில் எல்லோருக்கும் பரிட்சையில் பாஸ் மார்க்  ஒன்னுன்னா ரிசர்வ்டு கேட்டகரியில் வருவோருக்கு தனியா ஒரு 10 மார்க் வாங்கினாவே பாஸ் என்று தூக்கிப் போட்டு விடுகிறார்கள். மெடிக்கல் காலேஜிலும் அப்படித்தான் ரிசர்வ்டு ஆட்கள் உள்ளே வந்த உடனேயே டிகிரிய பிரிண்ட் பண்ணி ஒரு பேருக்கு ஐந்து ஆண்டுகள் உட்கார வைத்து கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். வேண்டுமானால் சம்பந்த பட்ட ரிசர்வ்டு இஞ்சினியரையோ அல்லது மருத்துவரையோ கேட்டு பாருங்கள்.(வெறித்தனமா அடிச்சி மூஞ்சிய பேத்தாங்கன்னா நான் பொறுப்பில்ல மக்கா)

இந்த படத்தில் பாத்திங்கன்னா 80 விழுக்காடு தண்ணி அப்படியே 2 சொட்டாக நம்ம பொதுப்பிரிவு ஜீனியஸ் வாயில் இறங்குது. பயபுள்ள தாகத்தில மெலிஞ்சி போயிடுச்சி. ஆனா நம்ம ரிசர்வுடு கேட்டகரி ஆளு 20 விழுக்காடு தண்ணி பம்பு செட்லே இருந்து பீறிட்டு வருது அத அப்படியே அலேக்கா குடிச்சிட்டு மல்லாக்க படுத்துருக்கார். இந்த கார்ட்டுனிஸ்ட்டுக்கு நோபல் பரிசோ அல்லது ஆஸ்கார் விருதோ வழங்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். “இந்த மாதிரியான கேடு கெட்ட அமைப்பை மாற்ற ஷேர் செய்யுங்கள்” என்று வேறு கூறுகிறார்கள் மடையர்கள். 20க்கும் 80க்குமே வித்தியாசம் தெரியாத இவர்கள் தான் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் என்று சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டும். இல்லையின்னா சாமி கண்ண குத்திடும்.

அப்படியே அடுத்ததாக இந்த படம் தான், வாய்ப்புகளை ஒரு தொட்டியில் தளும்ப தளும்ப நிரப்பி நேரா எஸ்எஸி ஆளுங்களுக்கு வழங்குறாங்க, அவர்கள் பார்த்து எஸ்டி ஆளுங்களுக்கு வழங்குறாங்க அவர்கள் அதிலிருந்து சொற்பமான அளவு ஓபிசி ஆளுங்களுக்கு வழங்குறாங்க. அப்புறமா கட்ட கடைசில இங்க் ஃபில்லரால ரெண்டு சொட்டு பொதுப்பிரிவினருக்கு வழங்குறாங்க. சொன்னா நம்பணும் அந்த தொட்டியில் தளும்ப தளும்ப கிடந்த வாய்ப்புகளில் சரி பாதி அதாவது 50 விழுக்காடுதான் அந்த இரண்டு சொட்டு. எவ்வளவு சூழ்ச்சியான படம் பார்த்தீர்களா? இதைப்பார்த்த ரெண்டு இடஒதுக்கீட்டுப் பிரிவு இஞ்சினியரிங் மாணவர்கள் அதை முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். கீழே வேறு ”இந்தியனா இருந்தா இத ….” அதே தான்.
பொதுப்பிரிவில் 50 விழுக்காடு இருந்தாலுமே அவர்களுக்கு ஏன் அந்த ஒதுக்கீட்டுப் பிரிவின் மேல் அத்துணை கோபம் என்று தெரியவில்லை. இதில் இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால் இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு பெற்ற ஒரு எம்பிசியோ அல்லது பிசியோ எஸ்ஸி ஆட்கள் இருக்கும் இடத்தில் அவர்களை சிறுமை படுத்துவதாக எண்ணி இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும். அதனாலதான் திறமை இல்லாதவன் எல்லாம் வேலைக்கு வந்துடுறான் என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதன் காரணம் ஆயிரம் ஆண்டு கால வரலாறு கொண்டது. பார்ப்பனீயம் மேல் மாடியில் நிலையாக வீற்றிருக்க வேண்டுமெனில் ஏனைய கீழ் அடுக்கினர் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இருத்தல் ஆகாது. எனவே சூழ்ச்சி செய்து அவர்களிடையே தொடர்ச்சியாக ஒரு பகை நெருப்பை புகைய விட்ட வண்ணம் இருப்பார்கள். அது இப்போதும் தொடரத்தான் செய்கிறது.
இடஒதுக்கீடு என்பது அதிகாரப் பரவலாக்கத்திற்கும் அனைத்து இனத்தினரையும் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும் அவசியம். ஒருவேளை இந்தமாதிரி ஒரு ஏற்பாடு இல்லாமல் இருந்தால் 3 விழுக்காடு பார்ப்பனர்களும் இன்ன பிற மேலடுக்கு வர்ணத்தாரும் எல்லா அமைப்புகளிலும் அதிகாரத்தில் இருந்து கொண்டு இருப்பார்கள். ஏனைய வர்ணத்தார் அவர்களுக்கு என்று உள்ள வேலைகளை செவ்வனே செய்து கொண்டு இருக்க வேண்டும். இருப்பதிலேயே கீழ் வர்ணத்தார் கொத்தடிமைகளாக காலம் முழுக்க இன்னல் பட வேண்டும்.
சம்புகன் என்ற இழிசாதிக் காரன் வேதம் பயின்று தவம் செய்த மாபாதக செயல் புரிந்தான். இந்த பாப செயலில் இருந்து லோகத்தை பாதுகாக்க கடவுளான ராமன் அவன் தலையை கொய்து மனுநீதியை நிலைநாட்டியதாக வால்மீகி இராமாயணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
இப்போது இருக்கிற உயர்சாதி ராம பக்தர்களும் கூட மனுநீதியை நிலைநாட்ட தலைபடுகிறார்கள். ஆனால் பாவம் சம்புகனின் எண்ணிக்கை கோடிகளை தாண்டிவிட்டதால் செய்வதறியாது திகைத்து இந்த மாதிரி கார்ட்டுன்களை பரப்பி தங்கள் அரிப்பை  போக்கிக் கொள்கிறார்கள்.
இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களின் போது எந்த ஒரு தலித்தும் தாங்கள் சிறுமை அடைவதாக தாழ்வு மனப்பான்மை கொள்ளல் ஆகாது. மாறாக உரிமையை வென்றெடுத்த பெருமிதமும் வெற்றி புன்முறுவலும் முகத்தில் தவழ கம்பீரமாக எதிர் வாதம் செய்பவர்களை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் “இட ஒதுக்கீடு சலுகை அல்ல அது நம் உரிமை” என்று உரக்க முழங்குவோம்.

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...