Tuesday, November 20, 2018

மொபைல் அப்ளிகேஷன் அறிவோம் -1


 ES FILE EXPLORER.
1      இது ஒரு முக்கியமான தவிர்க்க இயலாத ஆண்ட்ராய்ட்  அப்ளிகேஷன் ES FILE EXPLORER.
இந்த அப்ளிகேஷன் இல்லாதவர்கள் கீழ்காணும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்க.ஆங், இங்கேதான். 
ஃபைல் ஃபோல்டர்களை பிரித்து மேய அத்தியாவசியமானதாகும்.

மேலும் இந்த அப்ளிகேஷனை திறந்த உடனேயே உங்க போன் மற்றும் மெமரி கார்ட் இவற்றின் மெமரி ஸ்டேட்டஸ் என்ன என்று காட்டிவிடும்.

 மேலே கூறப்பட்ட WPS OFFICE ல் ஃபாண்ட் இல்லாமல் திறக்க முடியாத ஃபைல் இருந்தால் நாமாகவே அதற்குரிய ஃபாண்டை பதிவிறக்கி போட்டுக் கொள்ளலாம். தேவையான ஃபாண்டை கூகுலாண்டவரிடம் (GOOGLE) கேட்டு வாங்கி பதிவிறக்கி(download) கொள்ள வேண்டும் இப்போ download folder ல் உள்ள  font அழுத்தி பிடித்து டிக் மார்க் வந்ததும் காபி செய்யவும் (நான் ஹெட்மாஸ்டர் காபி அடிக்கமாட்டேன் என்றெல்லாம் பிடிவாதம் பண்ணவேண்டாம்) பின்னர் அந்த ஃபோல்டரில் இருந்து வெளியேறி fonts folder ல் உள்ளே நுழைந்து பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது. இப்போ திறந்தால் அந்த ஃபாண்ட் உங்க மொபைலில் ஓபன் ஆகும். ( பெரும்பாலும் பாமினி, வானவில் போன்றவை இருந்தாலே சமாளித்து விடலாம்).

படம், பாடல் என்று டவுன்லோட் செய்ததில் உங்க மெமரி கார்ட் ஓவர்லோட் ஆகி இருந்தாலும் உங்க போன் ஆமைவேகம் காட்டும். அந்த மாதிரி சமயங்களில் போன் மெமரியை திறந்து உள்ளே இருக்கும் வீடியோ, படங்கள் மற்றும் பாடல்களை அழிக்கவோ அல்லது கவுன்சிலிங் அட்டெண்ட் செய்யாமல் டிரான்ஸ்ஃபர் செய்யவோ செய்யலாம். முன்பு சொன்ன அதே காபி பேஸ்ட் டெக்னிக் தான். எந்த நினைவகத்தில் இருந்து காபி செய்ய வேண்டும் எங்கே கொண்டு போய் பேஸ்ட் செய்ய வேண்டும் என்பதை இரண்டு முயற்சிகளில் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.

மற்றும் ஒரு முக்கியமான டிப்ஸ். வாட்சாப் ல் ஆயிரக்கணக்கான செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது நாமறிந்த விஷயம் தான். நம்ம போனும் அவற்றையெல்லாம் பொறுப்பாக பேக்கப் எடுத்து GB கணக்கில் சேமித்து வைத்துக் கொண்டிருக்கும். இது தேவையில்லாத லக்கேஜ். இவற்றை நீக்கினால் கூட போனின் மூச்சுத் திணறலுக்கு இன்ஹேலர் கொடுத்தது போல் ஆகும். இதையும் செய்ய ES FILE EXPLORER. பயன்படும். இந்த அப்ளிகேஷனில் நுழைந்து வாட்சாப் ஃபோல்டரில் உள்ளே சென்றால்  database என்றொரு subfolder இருக்கும். அதில் பழைய செய்திகள் எல்லாம் msgstore என்ற பெயரில் வாரம் வாரியாக மூட்டை கட்டப்பட்டு இருக்கும். அதையெல்லாம் long pressசெய்து tick வந்ததும் delete செய்யவும். அவ்வளவுதான் கிட்டதட்ட 1ஜிபி இடம் ஃப்ரீ ஆகிவிடும். 

மேலும் இதிலேயே இலவச இணைப்பாக க்ளீனர் கூட உண்டு. நாம் எதை டெலீட் செய்தாலும் அது recycle bin ல் ஜோராக உட்கார்ந்து கொண்டு இருக்கும். நாம் திறக்கும் ஒவ்வொரு போட்டோவும் ஒரு thumbnail என்கிற சிறு ஃபைலை உருவாக்கும். இணையம் உலாவுவதாலும் சில துணை ஃபைல்கள் உண்டாகி இருக்கும். இதனை இரண்டு நாட்களுக்கொருமுறை இந்த க்ளீனரைக் கொண்டு நீக்கி சுத்தப் படுத்திக் கொள்ளலாம். 
குப்பை சுற்றுச் சூழல் சீர்கேட்டை உண்டாக்கும் என்பது டிஜிட்டல் உலகத்திற்கு ரொம்ப பொருந்தும்.


Wednesday, October 31, 2018

கசந்த பவன்


கசந்தபவன்
இதுவும் கூட 96 படக்கதை போல தான் ஆனா வேற ஃபிளேவர்.
1994-1997 காலகட்டத்தில் நான் திருச்சி தேசியக் கல்லூரியில் கணித இளங்கலை பயின்று வந்தேன்.  அம்பேத்கர் அரசு கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன்.
விடுதியில் தங்கியிருக்கும் இன்மேட்ஸ் 150 பேர் ஆனால் கெஸ்ட் ஒரு 200 பேர் என சுமார் 350 பேர் தங்கியிருக்கும் விடுதி அது. முதலாம் ஆண்டு படித்தபோது மெஸ்ஸில் சாப்பாடு வாங்க தட்டோட வந்து இன்மேட்ஸ்க்கு சாப்பாடு இல்லாமல் செய்து விடுவார்கள். இந்த போட்டியில் ஜெயிக்கும் அளவுக்கு அப்போது மனதளவிலும் சரி உடலளவிலும் சரி திறமையில்லாமல் இருந்தேன் ( ஒன்லி 47 கிலோ வெயிட் தாங்க) பல நாட்கள் காலை உணவு ஜமால் முகமது கல்லூரி வாயில் அருகே இருக்கும் தேவி ஹோட்டலில் தான். 10 ரூபாய்க்கு பூரி சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு சைக்கிளை விடுவேன்.
இரண்டாம் ஆண்டு வந்தபோது அனைத்து அறை மாணவர்களும் கலந்து பேசி அவரவர் அறைக்கு உரிய உணவினை பாத்திரங்களில் பெற்று சென்று கெஸ்ட் மற்றும் இன்மேட்ஸ் பகிர்ந்து உண்ணுவது என்கிற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் இந்த உணவு பிரச்சினை தீர்க்கப்பட்டது.

இவ்வளவு தூரம் சாப்பாட்டு விஷயத்தில் கவனம் எடுத்துக் கொள்ளும் நான் ஓட்டலில் சாப்பிடும் விஷயத்தில் கொடுக்கப்படும் ஒவ்வொரு பைசாவையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்வது என்பதில் கவனமாக இருப்பேன். எனது நண்பன் ஒருவன் என்னைக் காட்டிலும் ஒருபடி மேல். இலையை பாலீஷ் போட்டமாதிரி வழித்து எடுத்துவிடுவான்.
ஒரு முறை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புஷ்பம் ஓட்டலில் சென்று குழுவாக மதிய உணவு சாப்பிட்டோம். அது ஃபுல் மீல்ஸ் தான் வேண்டுமளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். நண்பன் சாப்பிட்டு இலையில் மல்லி கருவேப்பிலை உள்ளிட்ட அனைத்தையும் பல்லால் அரைத்து இரைப்பையில் அடைத்து விட்டான். சர்வர் ஓருவர் பார்த்துவிட்டு இப்போது தான் வந்தமர்ந்திருக்கிறார் எனக் கருதி அப்பளமும் பொறியலும் வைத்து விட்டார் என்றால் பாருங்கள்.
ஐஸ் கிரீம் என்றால் ”மைக்கில்ஸ்” தான். சிங்காரத்தோப்பு தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸ் என்று அருகருகே இரண்டு கிளைகள். பத்து ரூபாய்க்கு நான்கு ஃபிளேவர்கள் சாப்பிடுவது என்பது அங்கே மட்டுமே சாத்தியம். எனவே ஷாப்பிங் போகும் போது முதல் செலவு “மைக்கில்ஸ்” தான். அதே நினைப்பில் சமீபத்தில் குடும்பத்தோடு சென்று நன்றாக வாங்கி கட்டிக் கொண்டேன்.( உங்கப்பாவோட சிக்கனத்துக்கு (கஞ்சத்தனம் இடக்கரடக்கல்) அளவே இல்லடா)
இரவு நேர ஷாப்பிங் எனில் கேரளா மெஸ்ஸில் “கோமாதா” வறுவலுடன் பரோட்டா. அவ்வளவு சுவையாக இருக்கும். பரோட்டாவின் சுவையைக் காட்டிலும் எனது அண்ணன் அறிவழகன் அந்த பரோட்டா+வறுவல் பற்றி சொல்லக் கேட்பது இன்னும் சுவையாக இருக்கும். அங்கேயே தரைதளத்தில் ஒரு ஸ்வீட் பீடாக்கடை அவ்வளவு சுவையாக வாய்நிறைய இனிப்பான பீடா நன்றாக இருக்கும்.
நடுப்பகல் வேளை உச்சிவெயில் நேர உலா என்றால் 25 ரூபாய் பேண்ட் பாக்கெட்டில் வசந்தபவனுக்காக தனியே எடுத்து வைத்துவிடுவோம். சும்மா ஜில்லுன்னு ஏசி.  ஒரு பெரிய தட்டுக்குள் அழகழகாய் குட்டி குட்டி கிண்ணங்களில் பொறியல் வகைகள். பெரிய அப்பளம் என பார்க்கும் போதே வாயில் உமிழ் நீர் ஊற்றெடுக்கும். உணவின் சுவை என்றால் அவ்வளவு சுவை.
25 ரூபாய் 35 ஆனது பிறகு 50 ஆனது. அப்புறம் பெரிய இடைவெளிக்கு பிறகு ஒரு முறை சென்றபோது 120 என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.  விலை ஏறிய போதெல்லாம் தரம் குறைந்த வண்ணமே வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் ஷாப்பிங் முடிந்து கலைத்து போய் சாப்பிடலாம் என்று மக்கள் கடலால் வசந்தபவனில் கரை ஒதுங்கினோம். சாப்பாடு அடடே ஆச்சரியக்குறி 80 ரூபாய் தான். ஆனால் சுவை சுத்த மோசம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை. 90களில் டிசைன் செய்த இன்டீரியர் சேர் டேபிள் எதுவும் மாற்றவே இல்லை. எல்லாம் பெயர்ந்து போய் இருந்தது. ஏசியும் தான்( அப்போது போலவே உச்சி வெயிலிலும் வெடவெடக்கும் குளிர் அடிக்கும் ஏசி). வாஷ்பேசினுக்கு கீழே உள்ள ஷெல்ஃப் மூடப்படாமல் ஒரே அழுக்காக தட்டு முட்டு ஜாமான் போட்டு ஒரே ”கலீஜா” இருந்தது. ஒரு காலத்தில் நினைத்தாலே இனிக்கும் என்று இருந்த வசந்தபவன் இன்று கசந்த பவன் ஆகிப்போனது.


Wednesday, October 17, 2018

அறிவியல் கட்டுரையாளர் திரு என்.இராமதுரை அவர்கள் மறைவு



கொல்லிமலை ஹில் டேல் பள்ளியில் வேலை பார்த்தபோது ஒரு முறை புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த பீரோ வை திறந்து ரகம் வாரியாக புத்தகங்களை அடுக்கிக் கொண்டு இருந்த போது விண்வெளி சார்ந்த புத்தகம் (செய்தித் தாளில் வந்ததை கத்தறித்து பைண்டிங் செய்யப்பட்டது) ஒன்று கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்தால் வேலை மற்றும் சாப்பாட்டு நேரம் நீங்கலாக மற்ற எல்லா நேரமும் அந்த புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன். அது அப்பல்லோவின் தோல்வியடைந்த விண்வெளித் திட்டம் பற்றியது. புத்தகத்தின் எழுத்து நடை அவ்வளவு எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.
அந்த காலகட்டத்தில் இராமதுரை அவர்கள் தினமணியில் அவ்வப்போது எழுதுவார். அவரது கட்டுரைகளுக்காகவே கொஞ்சநாள் தினமணி வாங்கினேன். பிறகு “அறிவியல்புரம்” என்ற வலைப்பூ (www.ariviyal.in) வில் எழுதி வந்தார் .
“அறிவியலில் கடினமான கருத்துக்கள் என்று எதுவும் இல்லை, ஆனால் அதை எளிமையாக எடுத்தியம்ப வல்ல ஆட்களுக்குத்தான் பற்றாக்குறை” என்று கூறுவார்கள். இராமதுரை அவர்களின் கட்டுரைகள் எனக்கு விண்வெளி, அணுவிஞ்ஞானம் மற்றும் சில இயற்பியல் சார்ந்த விஷயங்களில் பேரார்வத்தை ஏற்படுத்தித் தந்தது என்றால் மிகையில்லை.
அவரது இறப்பு அறிவியல் ஆர்வலர்களுக்கு பேரிழப்பு. அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, October 10, 2018

”நியுட்ரினோக்கள்” பற்றி ஒரு எளிய அறிமுகம்.




OMNIPRESENT  என்ற வார்த்தையை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
இந்த அண்ட சராசரங்களான பிரபஞ்ச வெளி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது என்று தானே பொருள்.
உள்ளபடியே அவ்வாறு நிறைந்திருப்பது எதுவோ?
உண்டியல் ஆரம்பித்து அதன் எதிரே உள்ள சிசிடிவி கேமரா உட்பட இந்த வெளியெங்கிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் அன்றி வேறு யார்??
சரி அது ”ஆன்மீகம்“ வேற டிப்பார்ட்மண்ட்.
அறிவியலை பொறுத்தமட்டில் இந்த பிரபஞ்ச வெளியெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது “நியுட்ரினோக்கள்” எனப்படும் மிகவும் நுண்ணிய துகள் தான். நுண்ணிய என்றால் எவ்வளவு சின்னது?
ஒரு நானோ மீட்டரில் எட்டு ஹைட்ரஜன் அணுக்கள் கொள்ளுமாம். அந்த அணுவில் இருக்கும் எலக்ட்ரான் துகளின் எடையில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு எடை உள்ளது தான் இந்த நியுட்ரினோக்கள். ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 3 லட்சம் கிமீ ) பிரபஞ்ச வெளியில் பயணம் செய்தபடி உள்ளது.
ஆமாம், இது எங்கே உண்டாகிறது?
நியுட்ரினோக்களின் ஊற்றுக்கண்ணானது கருந்துளைகளின் மோதல்,சூப்பர் நோவாக்களில் நடக்கும் பெருங்கிளர்ச்சி மற்றும் கதிரியக்க சிதைவுகள். இதற்கு மின்சுமை இல்லை ஆதலால் மின் புலங்களாலோ காந்த புலங்களாலோ பாதிக்கப் படாமல் “இருக்கிற இடம் தெரியாமல்“ பயணிக்கிறது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா இந்த துகள்கள் எதையும் ஊடுருவிச் செல்ல வல்லது. புவியின் இந்த பக்கத்தில் இருந்து துளைத்துக் கொண்டு அந்தப் பக்கத்திற்கு சென்றுவிடும். அதுவும் ஒளியின் வேகத்தில்.அதாவது ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் புவியை எக்ஸ்-ரே எடுத்து படம் காட்டிவிட்டு சென்றுவிடும்.
நீங்கள் இதை படிக்கும் இந்த நேரத்தில் லட்சக்கணக்கான நியுட்ரினோக்கள் உங்கள் உடலை ஊடுருவியபடி உள்ளது. இந்த துகள் எதனுடனும் அவ்வளவு எளிதில் வினைபுரியாது. ஆகவே நம்மை துளைத்துக் கொண்டு செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை.
சரி இந்த நியுட்ரினோக்களை பிடித்து ஆய்வு செய்து படம் வரைந்து பாகங்களை குறிக்கலாம் என்றால் இது அவ்வளவு எளிதாக கையில் தனியாக சிக்காது. விண்வெளியில் இருந்து எப்படி நியுட்ரினோக்கள் மழையெனப் பொழிகிறதோ அதே மாதிரி காஸ்மிக் கதிர்களும் வந்த வண்ணம் உள்ளன. அதிவேகத்தில் கும்பலில் கலந்து செல்வதால் நியுட்ரினோக்கள் எளிதில் பிடிபடுவதில்லை.
அப்படியும் விட்டுவிட முடியாதில்லையா? அதனால நம்ம விஞ்ஞானிகள் எல்லாம் ஆராய்ச்சி செய்து காஸ்மிக் கதிர்களை நைசா கழட்டி விட்டு நியுட்ரினோக்களை தனித்து பிடித்து ஆய்வு செய்யும் நியுட்ரினோ டிடெக்டர்கள்  புவிக்கடியில் 1கி.மீ ல் அமைக்கப் படுகின்றன. இப்போது ஜப்பான், கனடா, மெக்சிகோ, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் அண்டார்டிகா வில் இந்த நியுட்ரினோ டிடெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.

சரி பிடிச்சி ஆய்வு பண்ணி அப்படி என்னத்த கண்டுபிடிச்சாங்க?
ஐஸ்கிரீம்ல பல ஃபிளேவர்கள் வருகிற மாதிரி இந்த நியுட்ரினோக்கள் 3 ஃபிளேவர்கள்ல வருதாம் 1. எலக்ட்ரான் நியுட்ரினோ, 2. மியுவான் நியுட்ரினோ, 3. டௌ நியுட்ரினோ.
சரி விடுங்க ரொம்பவம் சயின்டிஃபிக்கா போற மாதிரி இருக்கு, இதனால எதாவது பயன் உண்டா அத மட்டும் சொல்லுங்க!!
அணுக்கழிவுகளில் இருந்து நியுட்ரினோக்கள் வெளியே வருவதால் இரகசியமாக அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு ஆயுதபூஜை கொண்டாடும் நாடுகளை உளவு பார்க்க இயலும் .
பூமியை ஊடுருவ வல்ல துகளாக இருப்பதால் அப்படியே ஒரு எக்ஸ்-ரே எடுத்து கொடு என்று உரிமையாக கேட்டுக் கொள்ளலாம். மினரல்ஸ் மற்றும் ஆயில் டெப்பாசிட் எங்குள்ளது என்பதை துள்ளியமாக கணிக்க இயலும்.
நியுட்ரினோ துகள் மீது தகவல்களை ஏற்றி பரிமாற்றம் செய்ய இயலும் என்று ஆய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. எனவே நியுட்ரினோக்களை கேரியர் வேவ்ஸாக பயன்படுத்தி தகவல் தொடர்பை சாத்தியமாக்கினால் கடலுக்கடியில் கூட டவர் பிராப்ளம் இருக்காது. இன்டர் பிளானிடரி இன்டர் ஸ்டெல்லார் தகவல் தொடர்புகள் கூட எதிர்காலத்தில் சாத்தியப்படும்.



Sunday, September 30, 2018

”பரியேறும் பெருமாள் பிஏ பிஎல் மேல ஒரு கோடு”


பின்னாடி வேகத்தோடு வரும் இரயில், தண்டவாளத்தில் துண்டால்  பிணைக்கப் பட்டிருக்கும்  கருப்பி என்கிற நாய், காப்பாற்ற ஓடிவரும் நாயகன் பரியன். இரயில் வந்து நாயை சிதைத்து சின்னாபின்னமாக்கி செல்கிறது. இப்படி முதல் காட்சியிலேயே இறந்து போகும் கருப்பி படம் நெடுக மட்டுமல்ல படம் பார்த்த பின்பும் மனதை விட்டு அகல மறுக்கிறாள். நாய் வளர்ப்போர் அந்த காட்சியில் கதறுவது நிச்சயம்.
தோழி அன்போடு அக்கா திருமணத்திற்கு கூப்பிடுகிறாள். பரியனை மட்டுமே கூப்பிடுகிறாள். ஆசையோடு சட்டை பேண்ட் ஓசி வாங்கி உடுத்திக் கொண்டு கையில் அன்பளிப்போடு போகிறான். அங்கே நைச்சியமாக பேசி ஒரு தனியறைக்குள் ஆனந்தியின் அப்பா அழைத்துச் செல்கிறார். பின்பு ஒரு நான்கைந்து பேர் திடுமென உள்ளே வந்து இவனை புரட்டி எடுக்கிறார்கள். முத்தாய்ப்பாக முகத்தில் மூத்திரம் பெய்கிறார்கள். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்றெல்லாம் எண்ணாதீர்கள், வாயில் மலம் கரைத்து ஊற்றப்பட்ட சம்பவமெல்லாம் நடந்தது தான் இந்த தமிழ்நாடு.
“எல்லோராலயும் நெனச்சத நெனச்ச மாதிரி இங்கே பேசமுடியாது சார், நான் ஒரு தடவ பேச முயற்சி பண்ணப்பவே முகமெல்லாம் பேந்து போச்சு” என்று வலியோடு சொல்லும் பரியன்.
“நீங்க நீங்களாவே இருக்கிற வரைக்கும், நான் நாயாவே இருக்கணும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்கே எதுவுமே மாறாது சார்” என்று இறுதியாக தீர்க்கமாக சொல்கிறான் பரியன்.
அப்பப்பா இந்த ஆங்கிலம் நம்ம பசங்கள இந்த பாடு படுத்துகிறதே. என்று தெளிவாக கூறுகிறார் இயக்குனர். இத்தோடு இந்தியும் திணித்து இருந்தா “ஆணியே புடுங்க வேண்டாம்” னுட்டு ஒரு பயலும் படிக்க போயிருக்க மாட்டான். இங்கே ஆங்கிலம் ஒரு மொழி என்பதைத் தாண்டி அறிவாக பார்க்கப் படுகிறது என்பதையும் தெளிவாகவே சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
பேருந்து புறப்படுகிறது, அறுபது வயதுக்கு மேல் மதிக்கத் தக்க ஒருவர் ஓடி வந்து பேருந்தில் ஏற முனைகிறார். படியில் இருக்கும் இளைஞன் கைத் தூக்கி விட்டு அவரை காப்பாற்றி ஏற்றுகிறான். படியில் ஒற்றைக்கால் பிடிக்க ஒற்றைக் கை என தொங்கியபடி வரும் அந்த இளைஞனின் கையை வெடுக்கென்று இழுத்து விட்டு கீழே விழுந்து சாகும் படி செய்கிறார் அந்த முதியவர். அந்த களேபரத்தில் எல்லோரும் கீழே இறங்கி ஓடிவிட பேருந்துக்குள் ஒருத்தி கதறுகிறாள். இதற்கு மேல் ஒன்றுமில்லை எல்லாம் புரிந்து போனது. அந்த தாத்தா அதே டெக்னிக்கோடு பல சம்பவங்கள் செய்கிறார். அது ஆத்தாளுக்கு கொடுக்கும் பலி என்றே எண்ணி செய்வதாக வேறு கூறுகிறார். அவரை திரையில் காட்டும் போதெல்லாம் அடிவயிறு கலங்குகிறது. அவ்வளவு மிரட்டலான ஆனால் பார்க்க எளிமையான கதாப் பாத்திரம்.
பரியனின் தந்தை அனேகமாக எந்த சினிமாவிலும் கதாநாயகனின் தந்தையாக இப்படி ஒரு பாத்திரம் படைக் கப்பட்டது இல்லை. நடைமுறை வாழ்க்கையில் நாம் கடந்து சென்ற பாத்திரம் தான். ஆனால் அவர்தம் பின்னணி குறித்தெல்லாம் நாம் யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். அந்த கதாப்பாத்திரம் குறித்த விஷயம் சஸ்பென்ஸாகவே இருக்கட்டும். திரையில் பார்த்து அதிருங்கள்.
கதாநாயகி ஆனந்தி “கயல்“ படத்திற்கு பின்பு இந்தப் படத்தில் தான் தேவதையாக தெரிகிறார். வெகுளித்தனமாக பேசும் கருணையுள்ளம் கொண்ட கல்லூரி மாணவியாக அருமையாக நடித்திருக்கிறார். அரசு மருத்துவமனைக்கு வெளியே பரியனோடு பேசும் அந்த ஒருக்காட்சி போதும்.

யோகி பாபுவுக்கு ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு படம் நெடுக வரும் நண்பன் பாத்திரம். உருவம் சார்ந்த பகடியேதும் இன்றி ஆரோக்கியமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடம். அருமையாக நடித்துள்ளார்.

“கருப்பி என் கருப்பி நகத்தடமே என் பாத…” அருமையான பாடல். அப்புறம் கதாநாயகன் தந்தையின் அறிமுகக் காட்சி பாடலான “எங்கும் புகழ் துவங்க …” என்கிற கிராமியப் பாடலை அப்படியே திருவிழாக்காலத்தில் தரையில் உட்கார்ந்து பார்த்த அதே மணத்தில் கொடுத்திருக்கிறார். படத்தின் நேட்டிவிட்டியின் நம்பகத்தன்மையை தூக்கிப் பிடிப்பதில் ஒளிப்பதிவோடு பின்னணி இசையும் இணைந்து நிற்கிறது. தாராளமாக டவுன்லோட் செய்யுங்கள். ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது.

அப்புறம் பரியனாக நடித்த கதிரை பற்றி சொல்லவே இல்லையே?!
அவர்தான் படம் முழுவதும் தெறிக்க விட்டுருக்காரே. அவரோட கெரியர் கிராஃப் சும்மா சர்ர்ருன்னு மேல போகப் போகுது பாருங்க.



Friday, September 28, 2018

இளம் பருவத்துத் தோழி- பால்யகால சகி(மலையாள நாவல்)



நூலகத்தில் புத்தகங்கள் எடுக்கும் போதெல்லாம் ஒரு மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றையோ அல்லது சிறுகதை தொகுப்பு ஒன்றையோ தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த முறை மலையாள இலக்கியத்தின் மாபெரும் எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் அவர்கள் எழுதிய பால்யகால சகி நாவலின் தமிழ் வடிவம் “இளம் பருவத்துத் தோழி” என்கிற பெயரில் சுரா அவர்களால் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது.
மஜித் ,சுஹரா ஆகியோரின் இளம் பிராயத்தில் கதை தொடங்குகிறது. வசந்தபாலனின் வெயில் படத்து கதை போல ஒரு தோல்வியுற்றவனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை.
மஜித் சற்ற பணக்கார குடும்பத்தில் பிறந்தவன். படிப்பில் பின் தங்கி இருந்தாலும் கூட உயர்நிலைப் பள்ளி படிப்பிற்காக வெளியுர் சென்று படிக்கும் அளவு வசதி படைத்த இஸ்லாமிய குடும்பத்து பிள்ளை.
சுஹரா அதே ஊரில் உள்ள ஏழைக் குடும்பத்து பெண்பிள்ளை. தந்தை இறந்து போகிறார். ஆகையால் நன்றாக படித்தும் கூட ஐந்தாம் வகுப்போடு வசதியின்மையினால் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
இருவரும் மோதலில் தொடங்கி இணைபிரியா சிறுபிராய விளையாட்டுத் தோழர்கள் ஆகின்றனர். சுஹராவையும் நாமே படிக்க வைக்கலாமே என்று தந்தையிடம் கோரிக்கை வைக்கும் அளவிற்கு சுஹரா மேல் அக்கரையும் பாசமும் கொண்டவன் மஜித். அந்த பாசமே வளர்ந்தபின்பு காதலாக பரிணாம வளர்ச்சி அடைகிறது.
தந்தையுடன் கோபித்துக் கொண்டு நாடோடியாக ஓடிப்போய் ஊருடன் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்துவிட்டு மஜித் 10 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்புகிறான்.
அந்த பத்து ஆண்டுகளில் சுஹரா ஒரு குடிகாரனுக்கு இரண்டாம் தாரமாக திருமணமாகி சென்றிருக்கிறாள். மஜித்தின் தந்தையின் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு ஏழையிலும் ஏழையான குடும்பமாக ஆகிவிடுகிறது.
சுஹராவுக்கு புணர்வாழ்வு அளிப்பது, மணமாகாத இரண்டு தங்கைகளை மணமுடிப்பது போன்ற நோக்கங்களோடு மறுபடி வெளியூருக்கு சம்பாதிக்க போகிறான். அங்கே விபத்தில் சிக்கி ஒரு காலை இழக்கிறான். பின்பு ஒர ஓட்டலில் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்கிறான். ஆண்டுகள் உருண்டு ஓடுகின்றன. சுஹரா நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறாள் என்று முடிகிறது கதை.
வெறும் 65 பக்கங்களுக்குள் காவியமாய் வார்த்தைகளால் நெசவு செய்திருக்கிறார் பஷீர். இளம் பருவத்து குறும்புகள் கற்பனைகள் என அற்புதமான இரண்டு அத்தியாயங்கள். கண்டிப்பாக நாம் நமது இளம் பருவத்துடன் பொருத்திப் பார்க்க இயலும். மஜித்தின் சுன்னத் கல்யாணம் சுஹராவின் காது குத்து என இஸ்லாமிய குடும்ப வழக்கங்கள் மற்றும் அது சார்ந்த மூடப் பழக்கங்களை சாடியிருப்பார்.


2014ம் ஆண்டில் மம்மூட்டி நடிப்பில் இந்த நாவல் படமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

Saturday, September 22, 2018

தடைக் கற்களே படிக்கற்களாய்…


தடைக் கற்களே படிக்கற்களாய்…


“சார் நீங்க கம்ப்யூட்டர் கோர்ஸ் எங்க படிச்சீங்க?”
“கம்ப்யுட்டர் கோர்ஸா நானா? எல்லாம் ஒரு குத்து மதிப்பா பயன்படுத்தறது தான் சார்!”
“சார் பொய் சொல்லாதீங்க!”
“உண்மையிலேயே முயன்று தவறி கற்றல்( Trial and Error method) முறை தான் சார்”
கொஞ்சம் யோசிச்சிப் பாத்து எனக்கு நானே கேட்டுக் கொண்டேன், ’ஆமா, நாம கம்ப்யுட்டர் எங்க எப்படி கத்துகிட்டோம்’
ஃப்ளாஷ் பேக்-1
நாங்க முதுகலை கணிதத்திற்கு ஃபீஸ் கட்டும் போது கம்ப்யுட்டர் கட்டணம் என்று ஒரு ஐநூறு தனியாக வாங்கினார்கள். அதற்காகவே மதியம் மூன்று மணிக்கு பிறகு எங்கள் டிப்பார்ட்மண்ட் அருகில் இருந்த கம்ப்யுட்டர் லேபிற்குள் அனுமதிக்கப் பட்டோம்.
புலிகேசி படத்தில் அந்தப்புரத்தில் இருந்து “யாரங்கே“ என்று குரல் கொடுத்தவுடன் படைவீரர்கள் ஓடிவந்து புலிகேசியை போட்டு அழுத்தி விடுவார்கள் அல்லவா? அது போல மணி மூன்று அடித்ததும் எல்லோரும் ஓட்டமாக ஓடி லேபில் உள்ள நாற்காலிகளை உருட்டியபடி போய் விழுந்து அங்கே லேப் இன்சார்ஜ் பத்மநாபனை தள்ளிவிடுவோம்.
“யப்பா பிஜி மேத்ஸ் கொஞ்சம் அமைதியாக இருங்கப்பா“ என்று கெஞ்சுவார்.ஏன் இந்த அக்கபோர்?? லேபில் இருக்கும் கம்ப்யுட்டர்களில் விண்டோஸ் மல்டிமீடியா உள்ள கணினி இரண்டுதான். மற்றவை எல்லாம் கருப்பு திரையில் பச்சை எழுத்துக்களாக தோன்றும் மோனோக்ரோம் வகைக் கணினி தான். அந்த விண்டோஸை பிடிக்கத்தான் அந்த போட்டா போட்டி.
இளங்கலை மூன்றாம் வருடம் படிக்கும் போது, ’நாம ஏன் டைப்பிங் கத்துக்க கூடாது என என் ஞானதிருஷ்டியில் உதித்தது’ அதனால் எங்கள் அம்பேத்கர் அரசு விடுதி இருந்த அண்ணா விளையாட்டரங்கம் பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஒரு இன்ஸ்டிட்யுட்டில் சேர்ந்து லோயர் பாஸ் பண்ணிட்டேன். அதனால் கணினி விசைப் பலகையில் (key board) A,B,C,D கலைந்து கிடந்தபோது நான் ஆச்சரியப் படவில்லை.
“டேய் ஜெயராஜ் நல்லா வேகமா டைப் பண்றான்டா, அவனுக்கு டைப் தெரியுமாம்டா” என்றொரு சேதி காற்றலைகளில் பறந்து எங்கள் சீனியர் விச்சுவின் காதுகளை அடைந்தது.
ஃபிளாஷ்பேக்-2
பாரதிதாசன் பல்கலைக் கழக கணிதத்துறையில் முதுகலை கணிதம் படித்த காலம். எங்கள் சீனியர் விச்சு என்கிற விஸ்வநாதன் தன்னோட ப்ராஜக்ட் வொர்க் டைப் பண்ண கூப்பிட்டார். 1998ல் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகையின் உள்புறம் பெரியார் கம்ப்யுட்டர்ஸ் என்று ஒன்று இருந்தது. அங்கேதான் நம்ம சீனியர் விச்சு ப்ராஜக்ட் டைப் பண்ண கேட்டிருக்கிறார். பாடம் கணிதம் என்றவுடன் சென்டர் காரர் பின்னங்கால் பிடரியில் பட காம்பவுண்ட் சுவரேரி குதித்து ஓடியிருக்கிறார். (ஆமா பின்ன ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களும் பத்தாம கிரீக் லத்தீன் இன்னும் என்னவெல்லாமோ சிம்பல் என்கிற பெயரில் வந்து தொலையும். ’என்னய்யா இது ப்ராஜக்ட்ல ஏ,பி,சி,டி ய விட இந்த எழுத்து ஜாஸ்தியா இருக்கு’ பாதியிலேயே துரத்தப்பட்ட பரிதாப வரலாறு எல்லாம் கணித முதுகலை மாணவர்களுக்கு உண்டு.)
காம்பவுண்ட் தாண்டுவதற்குள்ளாக அவரை அல்லேக்கா பிடித்து மல்லாக்க தள்ளி ” நீ கம்ப்யுட்டர் மட்டும் கொடு டைப் பண்ண நம்ம கைவசம் ஒரு அடிமை சிக்கியிருக்கான் என்ன சொல்ற?” என்று கேட்க அந்த “டீலிங்” ரொம்ப பிடித்து போய் அவரும் ஒப்புக் கொண்டு விட்டார்.
அப்புறம் என்ன நான்கு பரோட்டா வாங்கி கொடுத்து நாற்பது பக்கங்களை டைப் பண்ண வச்சிட்டார் நம்ம அண்ணன் விச்சு. அப்போ MS Word 95  என்கிற அப்ளிகேஷன் தான். ஓப்பன் பண்ணியதும் அழகான ஒரு பேனா முனை தோன்றும். ஒவ்வொரு முறை சிம்பள் வரும் போதும் ஆப்ஷன்ஸ் க்குள்ள போய் சிம்பல் ஓப்பன் பண்ணி க்ளிக் பண்ணி எடுக்க வேண்டும். இப்போ எவ்வளவோ மாறிப் போச்சு.
ஃப்ளாஷ்பேக்-3
நான் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்தபோது எங்களது ப்ராஜெக்ட்டுக்கும் அதே பிரச்சனை தான். எங்கே சென்றாலும்“யப்பா உங்க ப்ராஜக்ட் ரெடி பண்ற நேரத்தில மற்ற சப்ஜக்ட்ல 4 ரெடி பண்ணிடுவேன். எவ்வளவு காசு கொடுத்தாலும் உங்க ப்ராஜெக்ட் வேணாம்பா, விட்ருங்கப்பா என்னைய” என்று கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க கெஞ்சினார்கள்.
அப்போது எங்க டிப்பார்ட்மெண்ட் ஆபீஸில் யுனிவர்சிட்டி ஸ்டாஃப் சொசைட்டி ஆபீஸ் இருந்தது. அதில் எழுத்தராக இருந்த அண்ணன் ஒருவர் “நம்ம வீட்டு பக்கத்தில் ஒரு சென்டர் இருக்கு நான் சொல்லிவிடுரேன்” என்று எங்க பரிதாப நிலை கண்டு இரங்கினார்.
அன்று மாலையே அவரோடு டாண்ணு சென்று அந்த சென்டரில் நின்றோம்.
பாலக்கரை காவேரி தியேட்டருக்கு எதிரில் உள்ள போலிஸ் ஸ்டேஷன் வழியே செல்லும் தெருவில் நான்காவது கடை தான் மேற்படி சென்டர்.
“வாங்க வாங்க உக்காருங்க. ப்ராஜக்டா பாஸ்? எத்தன? அஞ்சு பேருக்கா? சரி உக்காருங்க டீ சாப்புடுங்க” (அட அட என்ன ஒரு மரியாத என்ன ஒரு உபசரிப்பு )
“என்ன சப்ஜெக்ட்? மேத்ஸா??” அந்த கடைசி எழுத்தான ”ஸா” வை உச்சரிக்கும் போதே அவர் முகம் கோணிக்கொண்டது.
”மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து” என்ற திருக்குறள் எல்லாம் படிக்காதவர் போல. கடைசி வரை அவர் சொன்ன அந்த டீ வரவே இல்லை.
“வழக்கமா மேத்ஸ் ப்ராஜக்ட்லாம் பண்றதில்ல நீ சொல்றதால தாம்பா, நீங்களே நைட் ஒன்பது மணிக்கு மேல வந்து டைப் பண்ணி ரெடிப் பண்ணிக்கோங்க நான் வந்ததும் பிரிண்ட் எடுத்து தரேன் என்ன ஓகே வாப்பா?”
”சரிண்ணே நாங்களே டைப் பண்ணிடுறோம்” என்று சொன்னபடி டைப் பண்ணிட்டு அர்த்த ராத்திரியில் அந்த அண்ணன் வீட்டில் தங்கி ஒரு நான்கு நாட்களில் முடித்து விட்டோம்.
ஒரு ஐந்து ப்ராஜெக்ட் டைப் பண்ணியதில் எம்எஸ் வேர்ட் அத்துபடியானது. ஆக பைசா செலவு இல்லாம கம்ப்யுட்டர் கோர்ஸ் கத்துக்கிட்டேன். அவர்கள் பேசாமல் ப்ராஜக்ட் அடித்து தந்திருந்தால் எனக்கு கணினி கற்கும் எண்ணம் தோன்றியிருக்குமோ என்னவோ!!



Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...