Thursday, January 28, 2021

தி கிரேட் இண்டியன் கிச்சன் மலையாளப் படம் குறித்த எனது பார்வை

 தி கிரேட் இண்டியன் கிச்சன்

வாட்சாப்பில் வலம் வருகிற பிரபலமான மீம்ஸ் களில் ஒன்று, மிக்சியை போட்டு குண்டான பெண்ணையும், அம்மியை போட்டு ஒல்லியான பெண்ணையும் படமாக போட்டிருப்பார்கள். பழமையை கைவிட்டதால் இப்படி ஆகிவிட்டார்களாம். நீங்க


ள் இந்த மீம்ஸ் ஐ வரிந்து கட்டிக் கொண்டு ஷேர் செய்தவர் எனில் “கைய கொடுங்க சார்” உங்களுக்குள்ளும் ஒரு கலாச்சார காவலர் உங்களுக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டுள்ளார்.

இந்த கலாச்சார காவலர் அவதாரம் எடுக்கும் ஆட்கள் எல்லோரும் பெண்களுக்குத்தான் நிறைய பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தந்தவண்ணம் உள்ளனர். இதுவே ஒரு சைக்கிளை போட்டு ஒல்லியான ஆணையும் பைக்கையோ அல்லது காரையோ போட்டு குண்டான ஆணையும்  வரைந்து பாரம்பரியத்தை காக்க அறைகூவல் விடுப்பார்களா?

துப்பட்டா போடுங்க தோழி என்று துப்புக்கெட்டு அலையும் கூட்டம் என்றைக்காவது சிக்ஸ் பேக் வைத்திருப்பவன் கூட கமுக்கமாக அடக்கி வாசிக்கும் போது ஃபேமிலி பேக்கைத் தள்ளிக்கொண்டு நிற்கும் குருக்களிடம் போய் ’துப்பட்டா வேண்டாம் துண்டையாவது போட்டு கலாச்சாரத்தை காப்பாத்துங்க தோழர்’ என்று கூறியது உண்டா?

சோ, நம்ம கலாச்சார கவலை எல்லாம் நைசாக எல்லா வேலைகளையும் பெண்களிடம் தள்ளிவிட்டு ஹாயாக குந்திக்கொண்டு சொகுசு காண்பதற்கு மட்டும் தான் என்பது தான் உண்மை. அவர்களைக் கட்டுப் படுத்துவதற்கென்றே ஆகம விதிகளில் ஆகப்பெரிய பட்டியலே உண்டு. அதையெல்லாம் காட்டிவிட வேண்டியதுதான். இது அனைத்து மத அடிப்படை வாதங்களுக்கும் பொருந்தும். (நீங்க இந்துக்களை மட்டும் தான் குறை சொல்வீங்களா என்று கமெண்ட வேண்டாம்.) நான் அறிந்தவரை அனைத்து மத அடிப்படை வாதங்களும் பாலின சமத்துவத்திற்கு எதிரானவையே.

காலை எழுந்தவுடன் தெய்வத்தையோ அல்லது கொழுநனையோ தொழுது (ஆமாம், பின்ன வள்ளுவர் கூட “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்றல்லவா கூறியுள்ளார்) ”சம்பவம்” நடந்திருந்தால் குளித்து முழுகி கோலம் போட்டு, கோமாதா இருந்தால் பால் கறந்து தேனீர் போட்டுக் கொண்டு வந்து வீட்டினரை எழுப்பி விட வேண்டும். (பாரதிதாசன் கூட குடும்ப விளக்கில் இப்படித்தான் சொல்லி இருக்கிறார்)

அடுத்ததாக கணவன் அலுவலகம் செல்பவனாக இருந்தால், காலை சிற்றுண்டி மற்றும் மதியப் பேருண்டி இரண்டையும் துரிதகதியில் ரெடிபண்ணி அனுப்ப வேண்டும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக கலாச்சாரத்தை காப்பாற்றி பேர் எடுக்க வேண்டுமானால், கணவனின் அன்றைய உடையை தேர்வு செய்து இஸ்திரி செய்து மாட்டிவிட வேண்டும்.

அதன் பிறகு கிச்சனில் இருக்கும் பயன்படுத்திய பாத்திர பண்டங்களை கழுவ வேண்டும். அப்புறம் துணிமணி துவைத்தல், வீடு பெருக்கி துடைத்தல் அப்புறம் நேரம் வாய்த்தால் கொஞ்சம் ஓய்வு அப்படியே மாலை சிற்றுண்டி இரவு பேருண்டி இடையிடையே தேனீர் கொட்டை வடிநீர் இத்தியாதி.

வேலைக்குச் செல்லும் கணவன் வீட்டில் இருக்கும் மனைவி எனில் நிச்சயமாக மேலே இருக்கும் வேலைகளில் எழுபத்தி ஐந்து விழுக்காடு செய்து தான் ஆகவேண்டும். அவர்களின் சிரமங்களைக் குறைக்கத்தான் மிக்சி, கிரைண்டர் குக்கர் என்று பல சாதனங்கள் வந்துள்ளன. அதற்கும் இந்த பழமை விரும்பிகளான “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல” கோஷ்டி வேட்டு வைக்கிறார்கள். அம்மியில் அரைத்தால் உடற்பயிற்சி மேலும் போனசாக சட்னி சுவையாக வரும், குக்கரில் வேகவைத்தால் சத்துகள் அழிந்து பாழாகின்றன என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நடுத்தர வர்க்க மனைவிமார்கள் கலாச்சாரத்தோடு கணவனையும் காக்க களத்தில் இறங்கி மிக்சியையும் குக்கரையும் பரணில் ஏற்றி விடுகின்றனர்.

இப்போ படத்திற்கு வருவோம். முதல் காட்சியில் கதாநாயகியின் டான்ஸ் கிளாஸை காண்பிக்கிறார்கள். இடையிடையே சுவையான குழி பணியாரம் மற்றும் பல கேரள பட்சணங்கள் தயாராவதை காட்டுகிறார்கள். அடுத்தக் காட்சியில் பெண் பார்க்கும் படலம், அதற்கடுத்து கல்யாணம். அதன் பிறகு நான் மேலே சொன்ன வேலைகள் வரிசைக் கிரமமாக மாமியாரும் மருமகளும் மூச்சு வாங்க வேர்த்து ஓடி ஓடி செய்கின்றனர்.

மாமனார் தொரை கையில் ஒரு ஸ்மார்ட் போனோடு ஈசிச் சேரில் சாய்ந்த வண்ணம் இருக்கிறார். பிரஷில் பேஸ்ட் வைத்து கொண்டு வந்து மனைவி கொடுத்தால் தான் அவர் பல் விளக்க எழுந்து போவார். ’அப்படியே ஒரு மக்கில் தண்ணீர் கொண்டு வந்து பல்லை விளக்கி விட்டு டீயை வாயில் ஊற்றி கொஞ்சம் கூடுதலாக கலாச்சாரத்தை காப்பாற்றினால் என்னவாம்?’ என்பது அவரது மைண்ட் வாய்சாக இருக்கலாம். அடுத்து தொரை வெளியே கிளம்பும் போது செருப்பை அவரது காலருகில் போட வேண்டும்.

இவ்வளவு பெரிய அக்கப் போரில் நாயகியை தனியே சிக்க வைத்துவிட்டு மாமியார் மகள் வீட்டுக்கு சேவகம் செய்ய சென்றுவிடுவாள். (அவளைப் பொறுத்தவரை போர்க்களம் தான் மாறி உள்ளது). நாயகியும் பகல் எல்லாம் ஓடி ஓடி உழைத்து விட்டு இரவில் சோர்ந்து போய் தலை சாய்க்கும் போது கணவனின் ஆசைக்கு உடல் சாய்த்து பிறகு உறங்கி அடுத்தநாள் எழுந்து குளித்து அடுத்த நாள் வேலைகளை கவனிக்க வேண்டும்.

வீட்டில் ஒருத்தருக்கு சாம்பார் மற்றொருவருக்கு சட்னி. மாமனார் தொரைக்கு குக்கர் சாதம் ஆகாதாம், விறகு அடுப்பில் சோறு வடிக்க வேண்டும். மாமனாருக்கு வாஷிங் மெஷினில் துவைத்தால் துணி வெளுத்து போய்விடுமாம். (அடேய் நீ உடுத்துற லங்கோடும் வேட்டியும் ஏற்கனவே சமையலறை கைப்பிடித்துணி போலதானே உள்ளது!!) அப்புறம் சாப்பாட்டு மேசையை கொத்துபரோட்டோ போடும் தோசை கல் போல அலங்கோலம் பண்ணி வைத்து விடுகிறார்கள். இதுவே ஓட்டல் என்றால் ரொம்ப கச்சிதமாக சுத்தமாக சாப்பிடுகிறான் நாயகன். ”ஏம்பா இங்க நல்லா தானே டேபிள் மேனர்ஸ் ஃபாலோ பண்ற வீட்டில் ஏன்?” என்று கேட்டதற்காக கோபித்துக் கொண்டு சாரி கேட்கும் வரை பேச மாட்டேன் என்கிறான்.

இதுவே மாதவிடாய் காலம் என்றால் “அப்பாலே போ சாத்தானே!!” என்று விலக்கி வைத்துவிடுகிறார்கள்.

“நாளைக்கு சபரி மலைக்கு மாலை போடப் போறேன் அதனால…“ என்று முதுகை பிராண்டும் கணவனிடம் ”ஏம்பா நேரடியா ஆட்டத்தில குதிச்சா எனக்கு சரியா வரல கொஞ்சமா விளையாடிட்டு குதிக்கலாம்ல..“ என்ற கேட்டவுடன் “உன் முகரையை பாத்தா அந்த மாதிரி விளையாட தோணல“ என்று மூக்குடைக்கிறான்.

அப்புறம் மாலை போட்டுக் கொண்டு அப்பனும் புள்ளையும் பண்ற அட்ராசிட்டி இருக்கே அடடா!! இதுல வேற நாயகிக்கு மாதவிடாய் காலம் வருகிறது. பார்த்தாலே பரவசம் என்பது போய் பார்த்தாலே பாவம் என்று பதுங்கு குழிக்குள் அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

இதற்கிடையில் நாயகி வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசையை தெரிவிக்கும் போது, அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிபடாது என்கிறான் கிழவன். “மோளே, உன் மாமியார் எம்.ஏ படிச்சவதான், எம்புட்டு அழகா கலாச்சாரத்த காவ காக்குறா. போ போ கையில கரண்டிய எடுத்துக் கிட்டு கலாச்சாரத்த காப்பாத்து போ” என்று விரட்டிவிடுகிறான்.

“பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரி“ என்று கதாயநாயகி என்ன செய்கிறாள் என்பதை மட்டுமாவது சொல்லாமல் விட்டுவிடுகிறேன். இல்லன்னா “ஸ்பாய்லர் அலர்ட்“ போடவேண்டி வரும்.

நான் பார்த்து வளர்ந்த சூழல் படி, ’படத்தில் சற்று மிகையாக கூறி உள்ளார்களோ?’ என எனக்கு தோன்றியது. இதுவே வேறு சிலருக்கு ’இதுவே குறைவாகத்தான் இருக்கு, பாருங்க சில இடங்களில் கலாச்சாரம் காப்பாற்றப் படாமல் அம்போன்னு கெடக்கு’ என்று தோன்றி இருக்கலாம்.

தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்வோரும் கூட வீட்டு வேலைகள் விஷயத்தில் “அது லேடீஸ் கம்பார்ட்மெண்ட்” என்று சைலண்டாக ஒதுங்கிக் கொள்வதையே பார்த்திருக்கிறேன். “என் மனைவி தங்கமானவ, எனக்கு ஒரு வேலையும் வைக்க மாட்டா!!“ என்று பாராட்டி வேலை வாங்கும் யுத்தியை சிலர் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி பெருமையாக கூறுவார்கள்.  “எங்க வீட்ல எங்க சாருக்கு ஒரு வேலையும் வைக்க மாட்டேன்“ என்று கூறும் பரிதாப ஜீவன்களும் உண்டு.

அதுவும் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் மேலே படத்தில் சொன்னமாதிரி ஒரு கணவன் இருந்தால் அந்தப் பெண்ணின் நிலமை எப்படி இருக்கும் பாருங்கள்.

சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை மனைவியுடன் பகிர்ந்து செய்வது தனது “ஆண்மை“க்கு இழுக்கு என எண்ணும் போக்கு சிலரிடம் உள்ளது. ஆண்பிள்ளைகளைப் பொறுத்தவரை அவன் வளரும் சுற்றுச் சூழலில் எந்தமாதிரி ஆண்களைப் பார்த்து வளர்கிறானோ அப்படியே தன்னை குடும்பத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முனைவான்.

பெண்பிள்ளைகளைப் பொறுத்தவரையில் “கண்ணான கண்ணே“ என்றெல்லாம் ”ஆனந்த யாழை” மீட்டி விட்டு ஒரு குறிப்பிட்ட வயது வந்த உடன் திடுதிப்பென்று “இந்தாம்மா பிடி, இதுதான் கலாச்சாரம் இத நீ தான் கண்ணுங்கருத்துமா காப்பாத்தணும்” என்று ஒரு துப்பட்டாவை ஒப்படைத்து விடுகின்றனர்.

இவ்வளவு பேசுறியே நீ எப்படி? நானெல்லாம் வெண்ணீர் வைக்க கூட தெரியாத வெள்ளந்தி பையனா இருந்து கல்யாணத்திற்கு பிறகு பிரியாணியையே பிரிச்சி மேயும் தரமான “தாமு“வாக அவதாரம் எடுத்துள்ளேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மூன்று வயதாக இருக்கும் போது எனது மகன் அருணிடம் அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு போய் வாஷ்பேசினில் போடச் சொன்னதற்கு “நான் என்ன பொம்பளையா?” என்று கோபத்தோடு சீறினான்.

அந்த சம்பவத்திற்கு பிறகு அனைத்து வேலைகளையும் பாலின பாகுபாடு இன்றி எங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறோம் நாங்கள் ”மூவரும்”

Friday, January 22, 2021

புத்தகம் – பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து

 

புத்தகம் – பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து

ஆசிரியர் – சாந்தகுமாரி சிவகடாட்சம்

வகைமை – பயணக்கட்டுரை


     இந்தவாரம் நூலகத்திற்கு சென்றபோது ஒரு சிறுகதை தொகுப்பு எடுத்துக் கொண்டு அடுத்ததாக கட்டுரைகள் ஏரியாவிற்குள் குடைய ஆரம்பித்தேன். அப்போது கையில் சிக்கியது தான் இந்த பயணக்கட்டுரை நூல். இருப்பதிலேயே கொஞ்சம் காஸ்ட்லியான பயணச் செலவு ஆகக்கூடியது ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலாதான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால் அப்படியே இவங்க பின்னாலேயே போய் சுவிட்சர்லாந்தை சுற்றிப் பார்த்து பல லட்சங்களை மிச்சம் புடிச்சிடலாம் என்ற எண்ணத்தில் இந்த நூலையும் எடுத்துக் கொண்டேன்.

     பிரபல இதயநோய் நிபுணரான சிவகடாட்சம் அவர்களின் மனைவிதான் இந்த பயணக்கட்டுரை எழுதிய “சாந்தகுமாரி சிவகடாட்சம்“ அவர்கள். இந்தப் பயணக்கட்டுரை குமுதம் சினேகிதி இதழில் தொடராக வெளிவந்துள்ளது. அந்தக் கட்டுரைகளைத்தான் தொகுத்து புத்தகமாக போட்டிருக்கிறார்.

     உலகிலேயே பணக்கார நாடுகளில் ஒன்று. மிகவும் பசுமையான அமைதியான ஐரோப்பிய நாடுதான் சுவிஸ் என்கிற சுவிட்சர்லாந்து. பால் பண்ணைத் தொழில், பால் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்கள் யாவும் தயாராகும் நாடு, சாக்லேட்டுகளுக்கு பேர் போன நாடு ம்ம்.. அப்புறம் அழகழகான வாட்சுகளை செய்து உலகெங்கும் விற்பனை செய்யும் நாடு. அப்புறம் இதைச் சொல்லவில்லை என்றால் வாசிக்கும் நீங்கள் கூட கோபித்துக் கொள்ளக் கூடும். ஆமாம், சுவிஸ் வங்கிகளும் உலகப் பிரபலம் தான். நமது நாட்டு பெரும்பணக்காரர்கள் தங்கள் பணத்தை பதுக்கி வைத்து அடைகாக்கும் வங்கிகள் சுவிஸ் வங்கிகள் தானே? சரி பயணக் கட்டுரைக்கு வருவோம்.

     இந்தியாவில் இமயமலை, கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் என்று இருக்கிறது. வட அமெரிக்க கண்டத்தில் ராக்கி மலைத்தொடர் இருப்பதாக ஒன்பதாம் வகுப்பு புவியியல் பாடத்தில் படித்திருக்கிறேன். ஐரோப்பாவில் இருக்கும் மலைத்தொடர் தான் இந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர். இந்த ஆல்ப்ஸ் மலைத்தொடர் தன்னகத்தே இருக்கும் மொத்த அழகையும் இறக்கி வைத்து இளைப்பாரும் நாடுதான் இந்த சுவிட்சர்லாந்து. 13000 அடி உயரத்திற்கு மேலான சிகரங்களே இங்கே 48 இருக்கின்றனவாம். இவையன்றி நீர் வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் என ஏராளமான இயற்கையின் அற்புதங்கள் நிறைந்த நாடு. அந்த நாட்டில் நமது பயணத்திற்கான “பாஸ்“ நாட்களுக்கு ஏற்றவாறு வாங்கி வைத்துக் கொண்டு ரயில், பேருந்து மற்றும் படகு என எதில் வேண்டுமானாலும் பயணிக்கலாமாம்.

     பனிமலையினூடாக கண்ணாடி ரயிலில் பயணம் குறித்து அவ்வளவு அழகாக எழுதி இருந்தார். நாம் பார்த்து ரசிப்பதற்கென்றே கண்ணாடிகள் மிகவும் பெரிதாக அதாவது நமது ஊர் ரயிலில் இருப்பதை போல மூன்று மடங்கு பெரிதாக வைத்திருப்பார்களாம்.

     சுவிஸ்நாட்டு சாக்லேட்டுகள் பற்றி அவ்வளவு பிரமாதமாக எழுதி இருக்கிறார். அந்தப் பகுதிகளை எல்லாம் வாயிலிருந்து எச்சில் புத்தகத்தில் ஒழுகிவிடாதவாறு சற்று லாவகமாகத்தான் கடந்தேன். அப்புறம் இந்த நெஸ்லே நிறுவனத்தின் சாக்லேட் ஃபேக்டரிக்குள் “சிற்றுலா“ அனுமதி உண்டாம். டிக்கெட் வாங்கிக் கொண்டு மொத்த ஃபேக்டரியையும் சுற்றிப் பார்க்கலாம். அங்கே இருக்கும் சாக்லேட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாமாம். (ரொம்ப நல்லவனுங்களா இருக்கானுங்களே!!) ஆனால் ஒன்று கூட வெளியே எடுத்துவர அனுமதி கிடையாதாம். என்னை எல்லாம் விட்டால் இரண்டு நாட்கள் வயிறை காயப் போட்டுக் கொண்டு உள்ளே சென்று ஒரு வெட்டு வெட்டி விடுவேனாக்கும்.

     மேட்டர்ஹார்ன் என்ற மலைச் சுற்றுலாப் பகுதிதான் உலகிலேயே அதிகமாக புகைப் படம் எடுக்கப் பட்ட பகுதியாம். அங்கே இருக்கும் ஜெர்மாட் நகரின் முக்கிய வருமானமே டூரிசம் தானாம்.

     மலை உச்சியில் கூட அழகான வாட்சுகளை விற்கும் கடை இருந்துள்ளது. ஒமேகா நிறுவனத்தின் CONSTELLATION BEGUTTE என்கிற மாடல் வாட்சின் விலையை கூறி உள்ளார். அதைப் படித்துவிட்டு ஒரு இரண்டு நிமிடங்கள் மயக்கம் போட்டுவிட்டுத்தான் மேற்கொண்டு வாசித்தேன். ஆமாம், வாட்சின் விலை மூணேகால் கோடி ரூபாயாம்.

     பல ஆண்டுகாலமாக பாறை மேல் மோதிய படி கொட்டும் அருவி என்ன செய்யும்? பாறையை குடைந்து குகையை உருவாக்கும். அப்படி ஒரு அருவியால் அமைந்த குகையினுள் லிஃப்ட் வைத்து அருவியின் வெவ்வேறு உயரங்களை வெளியே சென்று தரிசிக்க வாய்ப்பினை ஏற்படுத்தி வைத்துள்ளார்களாம். இயற்கையின் அற்புதங்களை அழகாக கடைவிரித்து வருமானத்தை வாரி சுருட்டுகிறார்கள்.

     சுவிஸ் நாட்டில் மற்றொரு விஷயம் பிரபலம். கேட்டால் வினோதமாக தோன்றக் கூடும். ஆமாம், அங்கே விதவிதமான பேனாக் கத்திகள் அழகழகாக தயார் செய்து விற்கிறார்கள். ஒரே பேனாக் கத்தி கொத்திற்குள் அவ்வளவு கருவிகளை வைத்துள்ளார்கள். ஹேன்ஸ் மெஸ்டர் என்பவர் ஒரே பேனாக்கத்திக்குள் 314 பிளேடுகளை வைத்து தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

     அடுத்து சுவிஸ் நாட்டின் மிக முக்கியமான அழகான ரம்மியமான நகரமான லூசர்ன் பற்றி எழுதியுள்ளார். கவிப் பேரரசு வைரமுத்துவை நூலாசிரியர் பேட்டி கண்டபோது அவர் தனக்கு மிகப் பிடித்த நகரம் என்று குறிப்பிட்ட நகரம் இந்த லூசர்ன் தானாம்.

     ஒரு பாலம் கட்டி அதன் உச்சியை கூரை வேய்ந்து எங்காவது மூடுவார்களா? ஆனால் சுவிட்சர்லாந்தில் அப்படி ஒரு பாலம் கட்டி கூரை வேய்ந்துள்ளார்கள். சேப்பல் பாலம் என்ற பாலம் 16 ம் நூற்றாண்டில் லூசர்ன் நகரில் ரைஸ் நதி மீது கட்டப் பட்டுள்ளது.

     இந்தியாவின் பிரபலமான புல்லாங்குழல் இசைக் கருவி போல சுவிட்சர்லாந்தில் மாடு மேய்ப்பவர்கள் தகவல் பரிமாற்றத்திற்கென பயன்படுத்திய ஒரு கருவி தற்போது இசைக் கருவியாக பயன்படுத்தப் படுகிறது. பெயர் அல்போர்ன். நீநீ…ளமான அடியில் வளைந்து விரியும் நாதஸ்வரம் போன்ற அமைப்பிலான கருவி. மரத்தை குடைந்து ஓட்டையாக்கி தயாரித்து இருப்பார்களாம்.

     அப்புறம் இறுதியாக மற்றொரு விஷயம், இந்த குக்கூ கடிகாரம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மணிக்கொருமுறை பறவை வெளியே வந்து குக்கூ என கூவி மணி அறிவிக்கும். (ஹைதராபாத்தில் சாலர்ஜங் மியுசியத்தில் இது போல ஒன்று உண்டு. அங்கே ஒருத்தன் சுத்தியல் எடுத்து வந்து மணியடித்து விட்டுச் செல்வான்) சுவிஸ் நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகிப் போய்விட்டதாம் இந்த குக்கூ கடிகாரம்.

     நான் கூறியுள்ளவை “டிப் ஆஃப் ஏன் ஐஸ்பெர்க்“ தான். இன்னும் ஏராளமான இடங்களைப் பற்றி மிக விரிவாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளார். சுவாரசியமான நடையில் காட்சிகளை தெளிவுற விளக்கியுள்ளார். அவரது எழுத்தின் வழியாக சுவிஸ் நாட்டை செலவின்றி தரிசனம் செய்ய முடிகிறது.

     அழகிய வண்ணப் புகைப் படங்களை இடையிடையே இணைத்துள்ளார். மிகத் தரமாகவும் நேர்த்தியாகவும் புத்தகத்தை தயார் செய்துள்ளார். அட்டைப் பட கிராஃபிக்சும் தலைப்பின் எழுத்து வடிவமும் ஏதோ பேய்க் கதைக்கானது போல வடிவமைக்கப் பட்டுள்ளது மட்டும் தான் பொருத்தமின்றி எனக்கு உறுத்தலாக இருந்தது

 

பதிப்பகம் – சாந்த சிவா பப்ளிகேஷன்ஸ் (சொந்த பதிப்பகம்)

விலை – 350

பக்கங்கள் -242

 

Wednesday, December 30, 2020

வாசிப்பு பெருவோட்டம் 2020

 

                2020 ம் ஆண்டு உலகம் முழுவதையும் முடக்கிப் போட்ட ஆண்டு என்றாலும் ஒரே ஆறுதல் கிடைத்த கேப்பில் ஏராளமாக வாசிக்க முடிந்தது. புத்தகங்கள் இல்லை என்றால் இந்த முடக்க ஆண்டு நமது சிந்தனையையும் முடக்கிப் போட்டிருக்கும். வழக்கமாக நூலகப் புத்தகங்களும் புத்தக கண்காட்சிகளில் வாங்கும் புத்தகங்களும் வாசிப்பேன். இந்த ஆண்டு ”கிண்டில் ஆப்” ஐ முழுமையாக பயன் படுத்தினேன்.

     வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல விஷயங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் நானோ ஒரு பார்வையாளனாக நல்ல நல்ல புத்தக அறிமுகங்களை உள்வாங்கி பட்டியல் தயாரித்துக் கொண்டு இருப்பேன்.  இந்த ஆண்டு வாசிப்பு பெருவோட்டம் (Reading Marathon) என்கிற தலைப்பில் வருடம் முழுவதும் வாசிக்கத் தக்க வகையிலான ஒரு ஏற்பாட்டினை செய்திருந்தார்கள். வருட துவக்கத்திலேயே எத்தனை நூல்களை வாசிக்கப் போகிறீர்கள் என்று குறிப்பிட்டு துவங்க வேண்டும். பேசிக்கலி நான் ரொம்ப சோம்பேறி ஆதலால் ஒரு ஐம்பது நூல்களை இலக்காக வைத்துக் கொண்டு துவங்கினேன்.

     இந்த ஆண்டில் வாசித்த முதல் புத்தகம் “மென் காற்றில் விளை சுகமே”. இறையன்பு அவர்கள் எழுதியது. தலைமைப் பண்பு பயிற்சிக்காக இறையன்பு அவர்கள் இயக்குனராக இருக்கும் அண்ணா மேலாண்மை மையத்திற்கு சென்றிருந்தேன். அவரது வகுப்பில் அவ்வளவு புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களை மேற்கோல் காட்டினார். சென்னையில் இருந்து திரும்பிய வேகத்தில் நூலகம் சென்று இந்த நூலை எடுத்து வாசித்தேன். நல்ல கட்டுரைகள் உள்ள சிறிய நூல்.

     அடுத்து ச.மாடசாமி அவர்கள் (அறிவொளி இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்) எழுதிய ”எனது சிவப்பு பால்பாய்ண்ட் பேனா” வகுப்பறை பயிற்றுவித்தல் குறித்த எனது பார்வையை பெரிய அளவில் மாற்றியமைத்த நூல். இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு வழங்கிய “நிஷ்த்தா“ பயிற்சியில் கருத்தாளராக சென்ற போது வகுப்பெடுக்க எனக்கு பெரிதும் இந்த நூல் உதவியது.

     அடுத்த நூலும் கல்வி சார்ந்து ச.மாடசாமி அவர்கள் எழுதிய “அன்பென்பது தந்திரமல்ல” என்ற கட்டுரை தொகுப்பு தான். அனைத்து ஆசிரியப் பெருமக்களும் வாசிக்க வேண்டிய நூல். தெருவிளக்கும் மரத்தடியும், குழந்தைகளின் நூறு மொழிகள் மற்றம் போயிட்டு வாங்க சார் போன்ற நூல்களும் இந்த ஆண்டு வாசித்து பதிவுகள் எழுதினேன்.

     நான்காவதாக ”ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும்” சக்கரநாற்காலியில் இருந்து அண்டம் அளந்த ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங் அவர்கள் உலகை உளுக்கும் பத்து கேள்விகளுக்கு விடை கூறும் வகையில் எழுதிய நூல். கடவுள் நம்பிக்கை என்கிற ஃபர்னிச்சரை அதலசிதலையாக்கி இருப்பார்.

     கம்யுனல் ஜி.ஓ என்கிற வகுப்புரிமை போராட்டம் நூல் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் எழுதிய நூல். இடஒதுக்கீட்டைப் பற்றிய சரியான பார்வை ஏற்பட அனைத்து இளைஞர்களும் வாசிக்க வேண்டிய நூல்.

     எங்கள் அரியலூர் மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவசங்கர் ஒரு அருமையான எழுத்தாளர். கிண்டில் போட்டிக்காக “தோழர் சோழன்“ என்றொரு நாவல் தமிழர் விடுதலைப் படை, பொன்பரப்பி வங்கிக் கொள்ளை, மருதையாற்றுப் பால ரயில் குண்டு வெடிப்பு மற்றும் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் போன்ற அண்மை கால வரலாற்றினை நாவல் போக்கில் சுவாரசியமாக கூறியிருப்பார். மேலும் முனைவர் அ.ஆறுமுகம் அவர்கள் எழுதிய “தமிழக வரலாற்றில் அரியலூர் மாவட்டம்“ என்கிற ஆய்வு நூல் அரியலூர் மாவட்டத்தின் வரலாற்றைப் பற்றி தெளிவாக அறிய உதவியது.

     பாலின சமத்துவம் என்பது சமூக நீதியின் ஒரு அங்கம் எனவே எப்போதும் அதுகுறித்த கட்டுரைகளை வாசிப்பது எனக்கு பிடிக்கும். இந்த ஆண்டில் தான் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்“ வாசித்து வியந்தேன். விகடன் பதிப்பக வெளியீடான “ஆண்பால் பெண்பால் அன்பால்” என்ற தலைப்பில் பாலின சமத்துவம் குறித்த பிரபலங்களின் பார்வையை கட்டுரையாக வடித்து தொகுத்திருந்தார்கள். நல்ல சுவாரசியமான தொகுப்பு. பா.ராகவன் தினகரனில் தொடராக எழுதிய ”மகளிர் மட்டும்“ என்ற கட்டுரைத் தொகுப்பையும் வாசித்தேன்.

     கு.சின்னப்ப பாரதி என்கிற கம்யுனிஸ்ட் எழுத்தாளரை எனது கொல்லி மலை பள்ளி நாட்களிலேயே அறிவேன். அவருக்கு சொந்தமாக “பாரதி காடு“ என்கிற தோட்டம் அங்கே உண்டு. அவரது எழுத்தை நான் வாசித்ததே கிடையாது. எனவே நூலகத்தில் “சர்க்கரை“ என்கிற தலைப்பில் சர்க்கரை ஆலைத் தொழிலாளிகள் சுரண்டலுக்கு உள்ளாதல் போராடுதல் முதலாளிகள் அவர்களை ஒடுக்க முயலுதல் குறித்து எழுதிய நாவலை வாசித்தேன்.

     மதுரையை கதைக்களமாக வைத்து பத்திரிக்கயாளர் “அர்ஷியா“ அவர்கள் எழுதிய “ஏழரைப் பங்காளி வகையறா” என்கிற நாவல் மதுரையில் இருந்த ஒரு வாழ்ந்து கெட்ட இஸ்லாமிய குடும்பத்தின் துயரத்தை கண்முன் நிறுத்தியது. மதுரையில் இருக்கும் இஸ்லாமிய சின்னங்கள் குறித்து “மாபர்“ என்கிற  தலைப்பில் யாசின் எழுதிய நூலை கிண்டிலில் வாசித்தேன்.

     வெங்கட் நாகராஜ் என்பவர் டெல்லியில் தங்கி பணிபுரிந்து வருபவர். சனி,ஞாயிறு என்றால் நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறார். அவரின் பயண அனுபவங்களை அருமையான புகைப்படங்களுடன் கிண்டில் நூல்களாக மாற்றி விடுகிறார். அவரது “கடைசி கிராமம்“ வாசித்த பின்பு அடுத்த சுற்றுலா இமய மலை தான் என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அவரது இன்ன பிற பயணக் கட்டுரை நூல்கள் அனைத்துமே வாசித்து விட்டாலும் பதிவு செய்யவில்லை. இமாலய ரைடு என்கிற தலைப்பில் கணேசன் என்பவர் சாரு மற்றும் சிலருடன் இமய மலையில் பைக் சாகச பயணம் மேற்கொண்டது குறித்து எழுதிய நூலும் வாசித்தேன். சென்னையில் இருந்து மாருதி எர்டிகாவில் ”கர்துங்லா பாஸ்“ வரை சென்று வந்த குடும்பத்தினர் எழுதிய பயணக்கட்டுரையும் சுவாரசியம்.

     இந்த ஆண்டில் வாசித்த ஆகப் பெரிய நூல் “ஓநாய் குலச் சின்னம்“ தான். மங்கோலிய மேய்ச்சல் நிலக் காடுகள் மற்றும் ஓநாய் பற்றிய ஒரு அருமையான சூழலியல் நாவல். கிண்டிலில் நல்வாய்ப்பாக இலவசமாக வெளியிடப் பட்ட போது பதிவிறக்கிக் கொண்டேன். அப்புறம் “ஜாக் லண்டன்“ எழுதிய Call of the wild என்கிற நூலின் மொழிபெயர்ப்பான “கானகத்தின் குரல்” பனிச்சறுக்கு வண்டி இழுக்கும் ஓநாய்களைப் பற்றி அவற்றின் பார்வையிலேயே எழுதப் பட்ட உலகப் புகழ் பெற்ற நாவல் வாசித்து மகிழ்ந்தேன்.

     ஆண்டன் செக்காவ் “பச்சோந்தி“ என்கிற சிறுகதை வாயிலாக பள்ளி நாட்களிலேயே பரிச்சயம். எனவே கிண்டிலில் ஆண்டன் செக்காவ் சிறுகதைகள் வாசித்து மகிழ்ந்தேன். எளிய இனிய ஆழமான கதைகள். அப்படியே அதே ரஷிய எழுத்தாளர் ஒருவர் குறுநாவல்களுக்கு பெயர் போனவர். சிங்கிஸ் ஐத்மாத்தவ். அவரின் முதல் ஆசிரியர் குறுநாவலும் வாசித்தேன்.  

     ஜப்பானில் சூழலியல் விவசாயப் புரட்சி செய்த மாசானபு அவர்கள் எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி விவசாயம் குறித்த மாற்று சிந்தனையை வழங்கியது. அப்புறம் மற்றொரு சுயமுன்னேற்ற மொழிபெயர்ப்பு உலகப் புகழ் வாய்ந்த “என்னுடைய ச்சீஸை நகர்த்தியது யார்?” கார்ப்பரேட் உலக மாற்றங்களுக்கு ஏற்ப ஊழியர்களின எண்ணத்தில் நிலையாமையை சகஜமாக்கும் வகை புத்தகம் என்றே இதனை பதிவு செய்தேன். மற்றுமொரு மொழி பெயர்ப்பு நாவல் ஸ்டெஃபான் ஸ்வைக் எழுதியது. “யாரோ ஒருத்தியின் கடிதம்”. இந்த நாவலை அடிப்படையாக வைத்து தங்கர் பச்சான் “தென்றல்“ என்று ஒரு படமே எடுத்துள்ளார்.

     எனது நட்பு வட்டத்தில் இருக்கும் ஒரு ஆசிரிய நண்பர் தனது முதல் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வாயிலாக பதிப்பித்து இருந்தார். “சிலேட்டுக் குச்சி“. படித்த மற்றும் போதித்த வகுப்பறைகள் வாயிலாக பல விஷயங்களை பேசும் ஒரு சுவாரசியமான நூல். சிரிக்கவும் சிந்திக்கவும் கண்களை நனைக்கவும் கூட பல உண்மைச் செய்திகள் உண்டு.

     அடுத்து எனது முகநூல் நண்பர்  வழக்கறிஞர் “பாவெல் சக்தி“ எழுதிய “நகர்துஞ்சும் நல்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த 8 தஸ்தாவேஜூக்கள்“ என்ற அருமையான சிறுகதை தொகுப்பு வாசித்து வியந்தேன். அவர் தனது தொழில் நிமித்தம் கண்ட கேட்ட விஷயங்களில் இருந்து பல சரடுகளை எடுத்து அழகாக சிறுகதைகளாக வார்த்துள்ளார். அருமையான மொழி மற்றும் இலக்கிய வளம் உள்ள இளம் வழக்கறிஞர் அவர். உயர் நீதி மன்ற நீதிபதியில் இருந்து இந்து தமிழ் நூல் அரங்கம் உட்பட பல உயர் அங்கீகாரங்களை பெற்ற நூல் அது.

     எங்கள் அரியலூர் கவிஞர் தோழர் மௌனன் யாத்ரிகா அவர்களின் “அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது” என்கிற அற்புதமான கவிதைத் தொகுப்பு வாசித்து முடித்தேன். இந்த மாதத்தில் அவரது மற்றொரு வேட்டை கவிதை தொகுப்பான “வேட்டுவம் நூறு“ நம்மை வேட்டை வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் அற்புதப் படைப்பு. எந்த நாட்டுக்கும் பொருந்தும் பொதுவான வேட்டை நுணுக்கங்களை சூழலியல் சமநிலை குறித்த அக்கரையோடு அணுகும் கவிதைகள். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் நிச்சயமாக பெரிய அளவில் பேசப்படும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு மட்டுமின்றி இன்னுமொரு அருமையான எழுத்தாளரும் எங்கள் மாவட்டமான அரியலூரில் உண்டு. அவர் “பாப்லோ“ அறிவுக்குயில். அரியலூர் ஸ்லாங்கை துள்ளியமாக தனது கதைகளில் கையாளுவார். அவரது “கிளுக்கி“ சிறுகதை தொகுப்பு அற்புதமான எளிய மக்களின் வாழ்க்கையை பேசும் படைப்பு.

     முகில் அவர்களின் சிரிக்கச் சிரிக்க சரித்திரம், செங்கிஸ்கான், மற்றும் பயணச்சரித்திரம் வாசித்து முடித்தேன். இன்னும் உணவுச் சரித்திரம் 1 மற்றும் 2 திறந்திடு சீசேம் காத்திருக்கின்றன. சுவாரசியமான நடையில் எழுதும் இளம் எழுத்தாளர்.

     கி.ரா வின் படைப்புகள் பெரும்பாலும் வாசித்து விட்டேன். விட்ட குறை தொட்ட குறையாக “அந்தமான் நாயக்கர்“ நூலகத்தில் கிடைத்து வாசித்தேன். அப்புறம் இதுவரை பதிப்பில் வராத ருசியான கதைகளை யும் வாங்கி வாசித்தேன்.

     வேல ராம்மூர்த்தி அவர்களின் “குற்றப் பரம்பரை“ நாவலை ஒரே மூச்சில் வாசித்து மூர்ச்சையானேன். நல்ல திரைக்கதை போல சுவாரசியமாக எழுதியுள்ளார்.

     ஈ.கோலை என்கிற புனைப்பெயரில் எழுதும் தண்டபாணி தென்றல் என்கிற முகநூல் நண்பர் எழுதிய அறிவியல் கட்டுரைத் தொகுப்பான ஜீன் திருத்தம் அருமையான அறிவியல் கட்டுரை நூல். எளிமையான நடையில் சிக்கலான அறிவியலை எழுதியுள்ளார். கிண்டில் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

     ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர் தனது 60 களின் பொறியியல் கல்லூரி கால கல்லூரி, அரசியல், பொதுவுடைமை சித்தாந்தம், தொழிற்சாலை, வேலை நிறுத்தம் என்று பல விஷயங்களை தொட்டு எழுதிய “விடியலை நோக்கி முடிவற்றப் பயணம்“ என்கிற நூல் நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது.

     முதன் முதலாக பாமரனின் எழுத்துக்களை நூலாக வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. குமுதம் வார இதழில் வந்த டுபாக்கூர் பக்கங்கள் மின் நூலாக கிண்டிலில் வாசிக்க கிடைத்தது. அவரது எள்ளல் நடையில் வரும் மனிதம் போற்றும் எழுத்துக்கள் நம்மை கீழே வைக்காமல் வாசிக்கத் தூண்டுபவை.

     இந்த ஆண்டு சில நூல்கள் பாதியில் நிற்கின்றன. அதில் முக்கியமான ஒன்று சேப்பியன்ஸ். ஆமாம் அந்த சுவாரசியமான நூல் எனது மொபைல் பழுதாகி மாற்றப் பட்ட பரபரப்பில் இடைவெளி விழுந்து விட்டது. பிறகு அதனை தொடரவே இல்லை. 70 விழுக்காடு முடித்துள்ளேன்.

     அப்புறம் இந்த “ரசவாதி“ முடித்து விட்டேன் ஆனால் பதிவு எழுதவில்லை. எழுதணும்.

     அப்புறம் இன்னும் சில நூல்கள் வாசித்து முடித்தாலும் என்னை கவரவில்லை எனில் அதனை எழுதுவது இல்லை என்கிற கொள்கைப் படி எழுதப்படாமல் விடுபட்டது.

     இந்த ஆண்டின் வாசிப்பில் என்னை மிகவும் கவர்ந்த நாவல் என்றால் அது “ஓநாய் குலச் சின்னம்“ தான். கிட்டத்தட்ட இரண்டு வார காலம் வைத்து வைத்து வாசித்தேன். மங்கோலியாவின் மேய்ச்சல் நிலப் பகுதியில் ஆடுகளுடன் கிடையில் வசித்தது போன்ற ஒரு அனுபவம்.

     கட்டுரையில் எல்லாமே சிறப்பானவையாக இருந்தாலும் எனக்கு பல புதிய பார்வைகளை ஏற்படுத்திய பேராசிரியர் அன்பழகனின் “கம்யுனல் ஜி.ஓ வகுப்புரிமைப் போராட்டம்” மற்றும் ச.மாடசாமி அவர்களின் “என் சிவப்பு பால்பாய்ண்ட் பேனா” என்னை வெகுவாக கவர்ந்தவை.

     சிறுகதைகளில் குழப்பமே இல்லை பாவெல் சக்தியின் “செங்கோட்டு யானைகள்….” தொகுப்பு தான்.

     கவிதையில் மௌனன் யாத்ரிகா எழுதிய வேட்டுவம் நூறு. இதனை கவிதை வடிவ “ஓநாய்குலச் சின்னம்“ என்று கூட கூறலாம்.

    

Friday, December 25, 2020

விடியலை நோக்கி முடிவற்றப் பயணம்… (நாவல்)

 

நூல் - விடியலை நோக்கி முடிவற்றப் பயணம்… (நாவல்)

ஆசிரியர் – த.ஜெ.பிரபு



   ஆசிரியர் த.ஜெ.பிரபு அவர்கள் ஒரு பேராசிரியர். 1965 காலகட்டத்திலேயே பொறியியல் படித்துள்ளார். அவர் படித்த காலகட்டத்தில் இருந்த பொறியியல் கல்லூரி இளைஞர்களின் எண்ணவோட்டம், அரசியல் விழைவு மற்றும் வேலையின்மை, காதல், திருமணம் என்று பல விஷயங்களை தெளிந்த நீரோடை போல எழுதியுள்ளார்.

நாவல் ஆறு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. 428 பக்கங்கள் உள்ளது. ஒரு துப்பறியும் நாவலைப் போல விறுவிறு வேகத்தோடு எல்லாம் படிக்க இயலாது. மிகவும் பொறுமையாக ரசித்து ரசித்து வாசிக்க வேண்டிய நாவல். நான் இந்த நாவலை சுமார் 10 நாட்களுக்கு மேலாக வாசித்து வந்தேன்.

     சத்யகுமார் என்ற ஒரு பையன் 60 களில் சென்னையில் பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலைக் கழகமாக இருக்கலாம் என்பது எனது யூகம்.) இடம் பிடித்து சைக்கிளில் ஏறிச் செல்வதில் நாவல் துவங்குகிறது. இப்போதெல்லாம் கல்லூரிகளில் படிப்போருக்கு (ஏன் 90 களில் கல்லூரி படித்த எங்களுக்கும் தான்) ரேகிங் என்றால் என்னவென்றே தெரியாது. ரேகிங் என்ற பெயரில் சில சீனியர்களின் சீண்டல்கள் எல்லை மீறாது. அம்மாதிரியானவர்களோடு ஒரு நட்பு மலரும். ஆனால் சிலர் ரேகிங் என்ற பெயரில் அருவெருக்கத்தக்க செயல்களை எல்லாம் செய்யச் சொல்லி வற்புறுத்துவார்கள். கதை நாயகன் சத்யா அந்த மாதிரியான ஒரு தருணத்தில் எதிர்த்து பேசிவிடுகிறான். அப்போது இஞ்சினியரிங் மாணவர்கள் கல்லூரியில் ஆங்கிலத்தில் உரையாடுவதை ஃபேஷனாக வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை நாவல் வழி உணர முடிகிறது.

     இப்போது பைக் வைத்திருப்பவர்கள் ஹெல்மெட் போடவில்லை என்றால் போலீஸ் க்கு பயந்து பயந்து செல்வோம். (இப்போது அந்த லிஸ்ட்டில் மாஸ்க்கும் இணைந்திருப்பது தான் பரிதாபம்) அந்த காலத்தில் சைக்கிள் வைத்திருப்போர் மாலை வேளைகளில் லைட் இல்லாமல் சென்றால் போலீஸ் பிடித்துவிடும். சத்யாவும் போலீஸ் இடம் சிக்கி கோர்ட்டில் சென்று ஃபைன் கட்டுகிறான்.

நாவலின் இரண்டாம் பாகம் சத்யாவின் இறுதி ஆண்டில் துவங்குகிறது. முதலாம் ஆண்டு நட்பு குழாம் இன்றி முற்றிலும் வேறு ஒரு குழுவில் இப்போது உள்ளான். இங்கே அரசியல் சித்தாந்தங்கள் பற்றிய தர்க்கங்கள் மாணவர்களிடையே நடக்கிறது. சத்யாவுக்கு சீனாவின் அரசியல் சித்தாந்தங்களின் மீது ஈர்ப்பு. பிரகாசம் என்றொரு நண்பன் தீவிர சோஷலிசவாதி. சோவியத் ரஷியா குறித்து சிலாகித்து பேசுகிறான். அவனுடைய தோழி கீதாவுடன் தர்க்கம் செய்து செய்து தனது கம்யுனிச அறிவை கூர்தீட்டிக் கொள்கிறான். சத்யா வின் உற்ற தோழனாக பாண்டியன் ஆகிறான்.

     பாண்டியன் படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கிறான். பிறகு சொற்ப சம்பளத்தில் வேலைக்குப் போகிறான். கதைகள் எழுதுகிறான்.

     சத்யாவும் ஆரம்பத்தில் சிறிய வேலை பிறகு ஒரு பெரிய வேலை அப்புறம் அதில் இருந்து வெளியேற்றப் படுதல் இறுதியாக ஐஐடியில் ஆராய்ச்சி என்று செல்கிறான்.

     பிரகாசம் கீதாவோடு காதலில் இருக்கிறானோ என்று குடும்பத்தினர் ஐயப்படுகிறார்கள். ஆனால் டிகிரி முடிந்தவுடன் கம்யுனிஸ்ட் கட்சி உதவியுடன் மேற்படிப்புக்கு சோவியத்யூனியன் செல்கிறான்.

     கீதாவை குடும்பத்தினர் திருமணம் செய்து கொண்டு பிஸினஸ் பார்க்க வற்புறுத்துகின்றனர். அவள் ஐஐடி யில் ஆராய்ச்சி செய்கிறாள். தொடர் ஆய்வுகளுக்காக டேராடூன் செல்கிறாள். கதை முடியும் வரையில் அவள் திருமணம் முடிந்தபாடில்லை. பெற்றோரின் கெஞ்சலுக்காக அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கச் சென்ற சத்யா ஐஐடியில் ஆராய்ச்சி மாணவனாக சேர்ந்தது தான் மிச்சம்.

     இப்போதும் கூட நாம் கண்கூடாக பார்க்கலாம், கல்லூரிகாலத்தில் படிக்காமல் விட்டேத்தியாக திரிந்தவர்கள் நல்ல நிலையில் செட்டில் ஆகி இருப்பார்கள். ஆனால் பிரமாதமாக படித்தவர்கள் சிறிய வேலையில் ஒட்டிக் கொண்டு கிடப்பார்கள். நாவலிலும் ஆசிரியர் இந்தக் காட்சிகளை பதிவு செய்கிறார்.

     மூன்றாம் பாகத்தில் புதிதாக வேலைக்குச் செல்வோர் அங்கே உள்ள வேலை தெரிந்த சீனியர்களால் இரண்டாவது முறையாக உள்ளார்ந்த “ரேகிங்“க்கு ஆளாகிறார்கள் என்பதை பதிவு செய்துள்ளார்.

     நான்காம் பாகத்தில் தொழிலாளர்கள் நலன், முதலாளிகள் மனநிலை, போராட்டம், தொழிற்சாலையை மூடி தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தினால் வழிக்கு வருவார்கள் என்று முதலாளிகள் காய் நகர்த்துவது. என்று செல்கிறது.

     நாளைக் காலையில் 10.00 மணிக்கு வெளியூரில் பொதுத்தேர்வுக்கு செல்ல வேண்டும், ஆனால் எழுந்து மணி பார்க்கையில் கடிகாரம் 9.45 என்கிறது. “ஐயய்யோ போச்சே“ அலறியடித்துக் கொண்டு எழுந்தால் கனவாக இருக்கும். கதையோட்டத்தில் ஆசிரியர் பாண்டியனின் ஒரு கதையை நைசாக கலந்து விட்டிருப்பார். இறுதியில் அது கதையோட்டத்தில் “ஓ கதையா?” என்கிற ஒரு ஆசுவாசத்தை தருமாறு விறுவிறுப்பாக அமைந்திருந்தது.

     எங்கே முடிகிறது என்று கண்டறிய இயலாமல் முடித்தது சற்றே ஏமாற்றமாக இருந்தது.

 அறுபதுகளின் காலகட்ட சென்னை, பொறியியல் கல்லூரி, கம்யுனிச அரசியல், வேலையின்மை, தொழிற்சாலைகள், தொழிலாளர் பிரச்சனை என்று நாவல் பல தளங்களை படம் பிடித்துக் காட்டுகிறது. நிச்சயமாக வாசிக்கத்தக்க ஒரு அருமையான படைப்பு.

வேட்டுவம் நூறு (கவிதைத் தொகுப்பு)

 

   புத்தகம்வேட்டுவம் நூறு (கவிதைத் தொகுப்பு)

 கவிஞர்மௌனன் யாத்ரிகா



 உலகப் பிரசித்திப் பெற்ற அற்புதமான சூழலியல் நாவல்ஓநாய்குலச் சின்னம்அதற்கு நிகரான மேய்ச்சல் நிலம் மற்றும் கானகம் சார் வேட்டை வாழ்க்கையை பேசும் கவிதை வடிவம் என இந்தத் தொகுப்பை கூறினால் அது மிகையன்று.

     கவிஞர் மௌனன் யாத்ரிகா அவர்களுடையஅந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டதுகவிதைத் தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்தேன். அவ்வளவு அருமையான கவிதைத் தொகுப்பு. இந்த கவிதைத் தொகுப்பு குறித்து ஏற்கனவே முகநூலில் எழுதியுள்ளேன். இங்கே வாசியுங்கள்(https://www.facebook.com/groups/1444591182255718/permalink/3261244523923699)

 மேலும் பேய்த்திணை, புத்தர் வைத்திருந்த தானியம் போன்ற கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். கவிஞர்கள் என்றாலே கவித்துவமான செவ்வியல் தன்மையோடு சிறுகதை புனைவதில் வல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஆமாம், குமுதம் கொன்றை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது இவரது சிறுகதைதூங்கா இரவுகள்”. அருமையான சிறுகதை. வாசித்துப் பாருங்கள் (https://www.facebook.com/jayarajsir/posts/10216930020196610)

 

     இந்த கவிதைத் தொகுப்பு சூழலியல் சார்ந்து பேசும் வேட்டை வாழ்க்கையைப் பற்றிய அருமையான கவிதைத் தொகுப்பு. சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் சு.தியோடர் பாஸ்கரன் அவர்கள் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியுள்ளார். உள்ளடக்கத்தோடு கனக்கச்சிதமாக பொருந்து  அட்டைப் படம் மற்றும் கண்ணுக்கு விருந்தாகும் அற்புதமான ஓவியங்கள் என புத்தகம் அட்டகாசமாக உள்ளது.


     கவிஞர் வேட்டுவம் நூறு என்கிற தலைப்பில் நூறு கவிதைகளை முகநூலில் தொடராகவே எழுதி வந்து பிறகு புத்தகமாக்கி உள்ளார்.இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கத் துவங்கிய அடுத்த கணமே நாம் கையில் வில், அம்பு, ஈட்டி என்று வேட்டைக் களத்தில் இருப்பது போல உணர்வோம்.

     கலைப்பைப் பார்க்காதே மேலும் நடப்போம்

     காட்டுக்கு நம் வயிற்றின் சுருக்கம் தெரியும் இந்த வரிகளில் வேட்டுவம் எவ்வாறு கானகத்தோடு உணர்வுப் பூர்வமாக ஒன்றியுள்ளது என்பதை உணரலாம்.

     பொழுது போக்காக வேட்டையாடித் திரிந்த நவீனகால நாகரிக வேட்டையாடிகளுக்கு அது சாகசம். ஆனால் வயிற்றுப் பாட்டிற்கு வேட்டையாடுவோர்களுக்கு அது கானகத்திடம் பெறும் யாசகம்.

     பொருந்தாச் சூழலை பொறுத்தருள விலங்குகள் அறியாது

     அவற்றுக்கு வயிறே முதன்மை

     குடல்கள் சொல்வதை குளம்படிகள் கேட்கும்

     நம்முடைய குடலின் மொழி காலில் வெளிப்படுவதைக் கேள்

     எங்கோ இருக்கும் இரையின் பெயரை

     அது சொல்லிக் கொண்டு போகிறது

காடை முட்டைகள் நான் சாப்பிட்டது கிடையாது, ஆனால் கவிஞரின் வரிகள் எனக்கு நாவில் நயகராவையே சுரக்க வைத்து விட்டது போங்கள்.

     “…காடையின் முட்டைகள் கிடைக்கும்

     இலையில் மூடித் தீயில் வைத்தால்

     நம் நாக்கில் ஓடையே சுரக்கும்

காடை ஃப்ரை பள்ளியில் இரண்டு முறை விருந்தின் போது சாப்பிட்டு இருக்கிறேன். காடை முட்டையை சொன்ன கவிஞர் காடைக் கறியை விட்டு வைப்பாரா? பாருங்கள்

ஏலே பங்காளி

சூட்டைத் தூக்கிவிட்டாலும்

உடம்பை இரும்பாக்கும் காடைக்கறியைக்

காட்டில் சுட்டுத் திண்ண வேண்டாம்

மிளகு சேர்த்து அறைத்த சாந்தில் ஊறவைத்து பொறித்தால்

வயிற்றில் பத்துக் கவளம் சோறு இறங்கும்

நவநாகரிக வாழ்க்கை சூழலியல் மண்டலத்தை கன்னா பின்னாவென்று சிதைத்துப் போட்டுவிட்டது. ஆனால் வேட்டை என்பது சூழலியல் அழிப்பு கிடையாது, மாறாக அது உணவுச் சங்கிலியின் எந்த ஒரு கண்ணியும் சிதையாமல் காக்கும் ஒரு செயல் என்பதை கவிஞரின் வரிகள் இப்படி கூறுகின்றன.

     ஏலே பங்காளி

     உணவுச் சங்கிலியை இந்தக் காடு

     இறுக்கிக் கட்டி வைத்திருக்கிறது

     அதை அவிழ்க்கும் நுட்பத்தைத் தேடு

தமது இணையோடு களித்திருக்கும் இரையை தொந்தரவு செய்யாமல் நகர்ந்து விடும் நாகரிகம் அறிந்தவர்கள் வேட்டுவர்கள்.

காட்டுயிர்களின் காமம் போற்றுதல் வேடர்க்கு அறம் என்று ஒரு கவிதையை முத்தாய்ப்பாக முடிக்கிறார்.

வேட்டையில் திட்டமிடல் வியூகம் அமைத்தல் இன்றியமையாதது. கவிஞர்களின் வரி இப்படிச் சொல்லியபடி செல்கிறது

விலங்கின் தப்பிக்கும் திசையை

நம் வேட்டை நாய்களால் அடைத்துவிடு

மற்றுமொரு கவிதையில் இப்படிக் கூறுகிறார்.

கண்ணுக்குத் தெரியாத வேலியைக்

காட்டில் கட்டத் தெரிந்தவனே வேட்டுவன்

வேட்டையாடும் மனிதர்கள்தான் ஆள்,அம்பு, வில் என்று உட்புகுகிறார்கள். ஆனால் விலங்குகள்?!!

உடலைத் தவிர வேறு ஆயுதங்களைப்

பயன்படுத்தத் தெரியாது என்றபோதும்

அது நிராயுதபாணி அல்ல உண்மை தானே?!

கவிச்சு உண்ணாத வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா?” என்று அசைவப் பிரியர்கள் சைவர்களைக் கேட்பதும்கண்றாவி அதெல்லாம் எப்படித் திங்கிறீங்க?“ என்ற சைவர்கள் அசைவ உணவுக்காரர்களைக் கேட்பது என்கிற இந்தப் பிரிவினை எல்லாம் சமீபத்தில் வந்தது தானே?!! பழங்கால வாழ்க்கையில் உணவுப்பிரிவினை எல்லாம் இல்லை.

கோரையில் கோர்த்துள்ள விராலைப்

பார்வையிலேயே குழம்பு வைக்கும் ஒருத்தி

நாகரிகம் பார்த்து நாக்கைச் சாகடிக்கும்

கொழுநனை இன்று தாளிக்கப் போகிறாள்

ஏலே பங்காளி

கடைவாயில் ஈரம் ஊறாமல் களி தின்ன முடியாது

கவிச்சையில்லாத உடம்பும் குழம்பும் காரஞ்சாரமாக இருக்காது

வேட்டுவர்களை விரட்டி கானகத்தை சிதைக்கும் சூழலியல் கேடுகளை கவலையோடு பதிவு செய்து வேட்டுவத்தை முடிக்கிறார் கவிஞர்.

மேலே நான் கொடுத்துள்ளவையெல்லாம் வெறும் டிரெய்லர் ( TIP OF AN ICE BERG) தான்.

கவிதையை நேசிப்போர், கவிச்சையும் நேசிப்போர் மற்றும் இயற்கையை நேசிப்போர் அனைத்து தரப்பின் ஆர்வத்தையும் நிறைவு செய்யும் ஒரு அற்புதமான கவிதைத் தொகுப்பு.

 

    

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...