Monday, March 16, 2026

கரும்பலகை – எஸ்.அர்ஷியா

சமீப நாட்களாக முழு நீளமாக ஒரு நூலை ஒரே சிட்டிங்கில் வாசிப்பது என்பது சற்று சிரமமான காரியமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதும் சரி பேருந்து பயணங்களிலும் சரி வாசிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை தீர்மானமாக கொண்டுள்ளேன். அந்த வகையில் இந்த நூலை ஒரே ஒரு சிட்டிங்கில் வாசித்து முடிக்க முடிந்தது. அர்ஷியா அவர்கள் எழுதிய ஏழறை பங்காளி வகையறா என்கிற நூலை வாசித்துள்ளேன். இஸ்லாமிய குடும்பங்களில் உள்ள நடைமுறைகளை ஒட்டி அமைந்திருக்கும். மிகவும் சுவாரசியமான நாவல். கரும்பலகை என்கிற இந்த நூல் ஒரு ஆசிரியரைப் பற்றியது. கதையை ஒட்டி பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் உபரி ஆசிரியர் பணிமாறுதல், லஞ்சம் கொடுத்து மாறுதல் பெறுதல் மற்றும் பள்ளி நடைமுறைகள் என்று தொட்டுச் சென்றுள்ளார். நூலாசிரியர் பத்திரிக்கையாளர் என்பதால் துறை சார்ந்து அவர் விசாரித்து தெரிந்து கொண்ட தகவல்களை ஒட்டி நாவல் எழுதியுள்ளார். ராஜலெட்சுமி என்கிறவர் பல ஆண்டு காலம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவிட்டு பிறகு அரசுப் பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்கிறார். அந்த சமயம் அவர் பணியேற்ற பள்ளியில் மாணவர் எண்ணிக்கை படி அவர் உபரி ஆசிரியர் என்று கணக்கிடப் பட்டு ஆசிரியர் பணியிடம் தேவைப் படும் பள்ளிக்கு பணிமாறுதல் ஆகி செல்கிறார். தினசரி சென்றுவர மிகவும் சிரமமாக உள்ள ஒரு குக்கிராமம். இதற்கிடையே சிஆர்சி பயிற்சிக்கு செல்லும் போது ஒரு ஆசிரியர் பணம் கொடுத்து பக்கத்தில் உள்ள பள்ளிக்கு மாறுதல் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தர முன்வருகிறார். முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதம் தெரிவித்து பணத்தை கஷ்டப்பட்டு புரட்டுகிறார். ஆர்டர் கைக்கு வரும் சமயம் கூடுதலாக ஐம்பதாயிரம் லஞ்சம் கேட்கப் படுவதால் பின்வாங்குகிறார். பிறகு பள்ளியோடும் மாணவர்களோடும் ஒன்றிப் போய் சிறப்பாக பணிபுரிந்து நல்ல தேர்ச்சி பெற உதவுகிறார். இந்த நிலையில் அடுத்த ஆண்டில் மறுபடியும் உபரி ஆசிரியர் மாறுதல் வந்து சேர்வதாக முடிக்கிறார். நாவலில் ஏராளமான தகவல் பிழைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன. இந்த உபரிப் பணியிடங்கள் உருவானதும் அதன் காரணமாக டிப்ளாய்மெண்ட் ட்ரான்ஸ்ஃபர் என்கிற ஒரு வழக்கம் வந்ததும் எப்போது அதிகமானது தெரியுமா? 150க்கு கீழான எண்ணிக்கை உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் ஆறு ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே வழங்கப் படும். அதற்கு மேல் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக வழங்க அரசாங்க வழிகாட்டு நெறிமுறை உள்ளது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் பெறப்படும் 1-8 விவரப்படி மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ செய்வார்கள். நான் உட்கோட்டை பள்ளியில் பணிபுரிந்த போது மாணவர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. ஒன்பதாம் வகுப்பில் ஒரு பிரிவிற்கு 110 மாணவர்கள் என்று இரண்டு பிரிவு இருக்கும். வகுப்பறை முழுவதும் மாணவர்களால் பிதுங்கி வழியும். அந்த சமயம் ஆண்டாய்வுக்கு வந்திருந்த முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் எங்கள் நெருக்கடி கருதி உடனடியாக ஐந்து புதிய ஆசிரியர் பணியிடங்களை வழங்கினார். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளில் பணிபுரியும், 1-8 கணக்கீட்டின் படி உபரி என்று கணக்கிடப்பட்ட ஆசிரியர்களை பணியிட ஆணையுடன் கூடுதலாக மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு மாற்றித் தருவார்கள். 2015 ல் இருந்து ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் என்பது கடுமையாக பின்பற்றப் பட்டது. எனவே அந்த ஆண்டில் இருந்து ஒரு பக்கம் ஓய்வு பெற்ற அல்லது பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் சரண் செய்யப் பட்டன. தேவைக்குத் தக்க உபரியான ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாமல் விருப்ப மாறுதல் நடத்த இயலாத ஆண்டுகள் எல்லாம் வந்து போயின. கதை நாயகி ராஜலெட்சுமி உபரி ஆசிரியர் பணிமாறுதலில் செல்லும் பள்ளி புதிதாக தரம் உயர்த்தப் பட்ட பள்ளி. அங்கே அறிவியல் ஆசிரியர் பணியிடம் இரண்டு இருந்ததாக சொல்லி இருக்கிறார். புதிய பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடம் அறிவியலாக இருக்காது. அடுத்து உபரி ஆசிரியர் என்று அடையாளப் படுத்தப் படுபவர் அந்த ஸ்டேஷனில் கடைசியாக பணியேற்ற இளையர் தான். அதன் படி ராஜலெட்சுமி தான் மூத்தவர். அடுத்த ஆண்டு மீண்டும் உபரிப் பணியிட மாறுதல் வழங்கப் பட்டுள்ளது. அதற்கு காரணம் மூத்த ஆசிரியர் பணியிடம் தான் உபரிப் பணியிடமாக கருதப் பட வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டு தீர்ப்பு வந்துள்ளதாக கதையை அமைத்துள்ளார். அதுபோல எதுவும் நீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. கதைக்களமாக இருக்கும் பொறண்டையூர் பள்ளிக்கு புதிதாக ஒரு தலைமையாசிரியர் வந்து சேர்கிறார். வந்து ஒரு வாரத்தில் மாறுதலாகி விடுகிறார். தலைமையாசிரியர் கையாடல் செய்கிறார் என்பதை பதிவு செய்ய அந்த கதாப்பாத்திரத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஆசிரியர். ஆனால் முழுக்க தகவல் பிழைகளுடன் கட்டமைக்கப் பட்ட பகுதியாக அது வந்துள்ளது. வந்தவுடனே நூலக புத்தகங்களும் பள்ளி ஆய்வகத்துக்கான அறிவியல் உபகரணங்களையும் வாங்கி கமிஷன் அடித்து விட்டதாக கூறுகிறார். இவர் கூறும் அந்த காலகட்டத்தில் அறிவியல் உபகரணங்களையும் பள்ளி நூலகத்துக்கு தேவையான நூல்களையும் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வாங்கி அனுப்பி விடுவார்கள். அடுத்ததாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக இரண்டு ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளதாக கூறுகிறார். காலி பணியிடம் இருந்தாலோ அல்லது ஆசிரியர்கள் கூடுகள் தேவை இருந்தாலோ மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்க இயலும். அவர்களுக்கான ஊதியம் அரசாங்கம் வழங்காது பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து தான் வழங்க முடியும். இந்த நிதி எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்றால் ஒரு பள்ளியில் ஒரு மாணவனுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியாக வசூல் செய்யப்படுவது ஐம்பது ரூபாய் மட்டுமே 360 பேர் படிக்கக்கூடிய எங்கள் பள்ளியிலேயே பெற்றோர் ஆசிரியர் கழக நிதி 18,000 வரை மட்டுமே வரும். அப்படி இருக்கும்போது அந்த சின்னஞ்சிறு பள்ளியில் 5000 கூட தேறாது. அதை வைத்து அந்த இரண்டு ஆசிரியர்களுக்கு எத்தனை மாசத்திற்கு சம்பளம் கொடுப்பார்கள்?! வந்து மூன்றே நாட்களில் ஒரு கழிவறையும் ஒரு பள்ளி கட்டிடமா கட்டுவதற்கு ஏற்பாடு செய்து தளவாடங்களை எல்லாம் இறக்கி விடுகிறார் என்று ஒரே போடாக போட்டுள்ளார். எங்கள் பள்ளியில் 8 வகுப்பறை கட்டிடங்களை நான் கேட்டு பெறுவதற்கு 7 ஆண்டுகள் ஆகிவிட்டது எனவே அவர் கூறுவது போல இது மூன்று நாட்களில் நடக்கிற காரியம் கிடையாது முதலில் பட்ஜெட்டில் நிதா ஒதுக்கப்பட வேண்டும் அதற்கு பிறகு தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான நிதி உள்ளது என்பதை கணக்கிட்டு தேவை கருதி அத்தியாவசியமாக தேவைப்படும் பள்ளிகளுக்கு மட்டுமே கட்டிடங்கள் ஒதுக்கீடு செய்வார்கள். இது ஒரு நீண்ட நடைமுறை ஓர் ஆண்டில் இந்த நடைமுறைகள் முடிவதற்கு ஆறு மாதம் எடுத்துக் கொள்ளும். தலைமை ஆசிரியர் ஜாதியை தானாகவே முன்வந்து வெளிப்படுத்தி ஜாதி லாபியை உருவாக்க முயல்வது போல அமைத்திருப்பார். அது அரிதாக சில இடங்களில் நடக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதுபோல ராஜலட்சுமி என்கிற ஒற்றை ஆசிரியர் மட்டுமே அந்த பள்ளியில் தேர்ச்சியை 100% கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தெரியும் 100% தேர்ச்சி என்பது ஊர் கூடி தேர் இழுப்பது போல ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு முயற்சி மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது. கதைநாயகி ராஜலட்சுமின் கணவர் தனசேகர் தனது ரியல் எஸ்டேட் பணியில் ஏமாற்றப்பட்டு மனம் உடைந்து போனது பற்றி மிகவும் நுணுக்கமாக ஒரு முழு அத்தியாயமே விளக்கி கூறியிருப்பார். அதுபோல பொரண்டையூர் மக்கள் சாராயம் காய்ச்சும் கலாச்சாரத்துக்குள் எவ்வாறு சென்றார்கள் என்பதை விளக்குவதற்கும் ஒரு முழு அத்தியாயத்தையே ஒதுக்கி இருப்பார் அவை இரண்டும் கதையில் இருந்து விலகி இருந்தால் சுவாரசியமாக இருந்தன. இந்த நூலுக்கான மதிப்பறையில் இவ்வளவு டீடைல் எழுதியது வாசிப்போர் பள்ளி நடைமுறைகள் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

Friday, March 13, 2026

மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை!!

ஒரு நாள் பள்ளிக்குச் சென்றவுடன் ஒரு பிரச்சனை காத்துக் கொண்டிருந்தது. ஒரு அம்மா வந்து ஆறாம் வகுப்பு குழந்தைகளை மிரட்டிச் சென்றுள்ளார். என் பையன் கிட்ட வச்சுக்கிட்டீங்கன்னா ஸ்கூலயே இழுத்து மூடி விடுவேன் என்றெல்லாம் பேசி இருக்கிறார். என்னிடம் புகார் வந்தபோது வகுப்பு ஆசிரியரை அழைத்து அந்த அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரச் சொல்லி கூறினேன். நேரில் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளியில் படித்த ஒரு மாணவியின் அம்மா. அதிர்ந்து பேசாதவர் பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியருக்கும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கும் ஒரு பெற்றோர் அவர். அவருக்குள் ஏன் இவ்வளவு ஆவேசம்?! அவரது குழந்தை ஒரு அறிவுச் சவால் உடையவர். பள்ளிகளில் பெரும்பான்மையானவர்கள் அந்த குழந்தைகளை மிகுந்த அரவணைப்போடும் நட்புறவோடும் அனுகுவார்கள். மேலும் அவருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு இருப்பார்கள். ஒரு முறை காலை கூடுகையின்போது ஒரு மாணவன் ஒரு சிறிய பழமொழியை அழகாக சொல்லியவுடன் வழக்கத்துக்கு மாறாக கரகோஷம் எழுந்தது ஏன் இவனை மட்டும் இந்த பிள்ளைகள் கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள் என்று பார்த்தால் அவன் அறிவிச்சவால் உடையவன். கலைத் திருவிழாவின் போது ஒரு விநாயகர் பொம்மையை செய்து விட்டான் என்று அவனையும் அந்த பொம்மையையும் தூக்கிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்து பாராட்டு வாங்கி கொடுத்தார்கள். இதுதான் பள்ளி குழந்தைகளின் மனநிலை. சமயத்தில் யாராவது ஒரு சிலர் குறும்பு செய்து விடுகிறார்கள். பள்ளிக்கு சற்று பயத்துடன் பதட்டத்துடன் குழந்தையை அனுப்பும் பெற்றோர் இது மாதிரியான கசப்பான சூழல்களை கொந்தளித்து விடுகிறார்கள். ஏற்கனவே விளையாட்டுகளில் எல்லாம் தனது குழந்தையை சேர்த்துக் கொள்வதில்லை என்கிற கவலை இருந்தாலும் சேர்த்துக் கொண்ட பிறகு ஏதாவது சிறிய புறக்கணிப்போ அல்லது பிரச்சனையோ என்றால் பதறித் துடித்து விடுகிறார்கள். அவர்களது இந்த பின் தொடர்தலும் பதட்டமும் அந்த குழந்தைக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. பள்ளிக்கு வந்த அந்த அம்மாவிடம் மற்ற மாணவர்களுடன் அவன் சகஜமாக பழக வேண்டும் என்றால் அவன் பொது இடங்களில் மாணவர்களுடன் பழகும்போதும் பள்ளியில் அவன் மாணவர்களுடன் இருக்கும்போதும் ஏற்படுகின்ற சிறு சிறு சச்சரவுகளை கண்டும் காணாமல் இருந்து விடுங்கள். எதாவது பெரிய விஷயம் என்றால் மட்டும் எங்கள் மூலமாக அதனை தீர்த்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து அவனை பின்தொடர்வது உங்களுக்கு பெரிய மன உளைச்சலை தரும் அவன் இயல்பாக தன்னுடைய ஆளுமையை வளர்த்துக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். எனவே அவன் வளர்கிற வரைக்கும் நீங்கள் மனோதிடத்தையும் தைரியத்தையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பினேன். இந்த குழந்தைகளை பள்ளிகளுக்கு தொடர்ந்து அனுப்பும் போது அவர்களது ஆளுமையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. இதனை பல உதாரணங்கள் மூலமாக என்னால் கூற முடியும். சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வெளியே சென்ற மாணவன் ஒருவன் மிக அழகாக எலக்ட்ரிக்கல் வேலைகளை பழகிக் கொண்டிருக்கிறான். தங்கள் பிள்ளைகளது இந்த வகை குறைபாட்டை பெற்றோர் ஒப்புக் கொள்வது இல்லை. இன்னும் கொஞ்சம் நாள் ஆனால் சரியாகும் என்று திடமாக நம்புகிறார்கள். எங்களுக்கு ஒரு பெற்றோர் தொடர் வற்புறுத்தலுக்கு பின் பத்தாம் வகுப்பில்தான் அவனுக்கான மருத்துவ சோதனையை முடித்து சான்றிதழை பெற்றுக்கொண்டார். உள்ளடங்கிய கல்வி என்கிற பெயரில் மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளில் சேர்ப்பதில் அரசு முனைப்பு காட்டுகிறது. பார்வைச்சவால் அங்கச் சவால் உடைய மாணவர்களை சேர்ப்பதால் இந்த பிரச்சனை ஏற்படப்போவதில்லை. ஆனால் கற்றலில் சவால் உடைய மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க ஊக்கப்படுத்தும் அரசு அவர்களுக்கு என்று ஒரு பிரத்தியேகமான மதிப்பீட்டு முறையை செயல்படுத்த இன்னும் முனைப்பு காட்டாமல் இருப்பது வியப்புக்குரியதாக உள்ளது. தற்போதைய நிலையில் அவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் என்கிற ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அந்த குழந்தைகளால் எதுவும் சொல்ல இயலாது என்பது அனைவரும் அறிந்தது தான். அவ்வாறு எழுதும் ஆசிரியர்களே அந்த மாணவர்களுக்கு தேர்ச்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் எழுதி தேர்ச்சி பெறச் செய்து விடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்து உண்மை. ஆனால் இது சரியான நடைமுறையாக இருக்காது. அவர்களுக்கு என்று தனியாக ஒரு தேர்வு முறையை ஆறாம் வகுப்பில் இருந்து உருவாக்கி செயல்படுத்தி வருவது தான் ஆரோக்கியமான நடைமுறையாக இருக்கும். தற்போதைய நிலையில் பல பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காடு குறைந்து போகும் என்று பயந்து அந்த மாணவர்களை ஒன்பதாம் வகுப்போடு டிசி வாங்கிக் கொள்ளச் சொல்லி பெற்றோரை வற்புறுத்தும் ஒரு சூழல் உள்ளது. அந்த பெற்றோரின் தர்மச்சங்கடமான மனநிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்னிடம் எட்டாம் வகுப்பிலே சில பெற்றோர் கூறியது ஞாபகம் இன்னும் உள்ளது "சார் அவன ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் வச்சிக்கோங்க சார் அப்புறம் நான் டிசி வாங்கிக்கிறேன்" என்று கூறினார்கள் நான் அவனை பத்தாம் வகுப்பு வரைக்கும் வைத்து ஸ்கிரைப் மூலமாக தேர்வில் தேர்ச்சி பெற வைத்து அனுப்பினேன். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சொல்வதே எனதுவர்களை நியமனம் செய்துவிட்டு பிறகு அந்த குழந்தைகள் சொல்வதைத்தான் நீங்கள் எழுத வேண்டும் என்கிற வகையில் எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு அதிகம் நெருக்கடி தரப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டில் தேர்ச்சி விழுக்காட்டுக்கு பயந்து பல கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை கைவிடும் சூழ்நிலை ஏற்படும். எறவே அவர்களுக்கு பிரத்தியேகமான ஒரு மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டியது அரசின் கடமை.

நூல் – வன்முறையில்லா வகுப்பறை ஆசிரியர் – ஆயிஷா நடராசன்

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைக்கு காரணம் என்ன, வன்முறை இன்றி வகுப்பறையை கையாளும் முறைகள் என்ன என்பது குறித்தெல்லாம் அறிவியல், உளவியல் மற்றும் நடைமுறைகள் ஆகிய விஷயங்களை முன்வைத்து ஆய்வு செய்து எழுதியுள்ளார் நூலாசிரியர். என்னைப் பொறுத்தவரை “என் சிவப்பு பால்பாய்ண்ட் பேனா“ வுக்கு பிறகு கற்றல் கற்பித்தல் குறித்த மிக முக்கியமான நூல் என்று இதனைக் கூறுவேன். “ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்கு பிடிக்கும் என்பதைப் போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்கு பிடிக்கும் என்று கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது. – கரோலின் டிவிக், குழந்தை உளவியலாளர். இவ்வாறு துவங்கும் நூலில் உள்ள முதல் புள்ளிவிவரமே நமது பள்ளி அமைப்பின் தோல்வியை பறைசாற்றுகிறது. ஆமாம், 99.1 விழுக்காடு குழந்தைகள் பள்ளியைக் கண்டு அஞ்சுகிறார்களாம். மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பள்ளிக் கூட அதிகார சூழலால் பாதியில் படிப்பை துறக்கும் குழந்தைகள் 4 மடங்கு அதிகம் என்கிறார். Parents are the teachers in Home; where as Teachers are the parents in School என்று அலங்காரமாக சொல்லிவிடுகிறோம். “ஹலோ பாஸ் கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடாதீங்க, அப்படி எல்லாம் இரண்டு உறவுகளும் ஒன்றல்ல” என்கிறார் ரஷ்ய கல்வியாளர் ஆண்டன் மக்கெரென்கோ. ஆதாரமாக ஒரு வேறுபாட்டு பட்டியலையே தருகிறார். இவர அவ்வளவு லேசுபட்டவராக நினைத்து விடாதீர்கள். “குழந்தைகளுக்கு முதல் உரிமை” என்று முழங்கிய இவரது கல்வி முறையினால் தான் 1927 ல் விளையாட்டு பாடவேளை பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளது. ஒழுக்க நெறி என்கிற பெயரில் தங்கள் கட்டளைகளுக்கு தலையாட்டும் பிரஜைகளை உருவாக்கும் ஆங்கிலேய கல்வி முறையில் இருந்து இந்த விஷயத்தை மட்டும் உடும்பு பிடியாக கெட்டியாக பிடித்துக் கொண்டு விட மறுக்கிறோம். மூன்றாவது அத்தியாயத்தில் மாணவர்களை நாம் தண்டிக்கும் முறைகளைப் பற்றிய பட்டியலை தந்துள்ளார். யுனிசெஃப் அமைப்பின் பட்டியலில் உள்ள அந்த தண்டனை முறைகளை பார்த்தால் நமக்கே பதறுகிறது. அதே வேளையில் நாங்கல்லாம் பிள்ளைகளை அடிப்பதே கிடையாது என்பவர்கள் கையாளும் நூதன தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதை வாசித்தால் “இதற்கு நீங்க அடிப்பதே பரவாயில்லை“ என்கிற அளவில் உள்ளது. “அந்த காலத்துல எல்லாம் குருகுலத்தில்…“ “நம்மை உள்ளயே உட்ருக்க மாட்டாங்க அதானே?” “நீங்க குருவா ஆசிரியரா? என்கிற அத்தியாயத்தில் “அந்த காலத்துல எல்லாம் …“ என்று துவங்கும் பழம் பெருமை ஃபர்னிச்சரை உடைக்கிறார். என்னதான் கட்டுப்பாடுகளை திணிக்கும் கல்விமுறை என்றாலும் பிரிட்டிஷ் கல்விமுறைகள் பாகுபாடுகளை நீக்கி சமத்துவத்தை கொண்டு வந்தன என்று உதாரணங்களோடு நிறுவியுள்ளார். வகுப்பறை ஜனநாயகம் பற்றி பேசும் அத்தியாயத்தில் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள “தண்டனைகளின் பின் விளைவுகள்“ பற்றி ஆசிரியர்கள் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். இந்த பகுதி எனக்கே பல விஷயங்களில் அறிவுக் கண்களை அகலமாக திறந்தது எனலாம். சென்னையில் DPI வளாகம் தான் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அனைத்து அலவலகங்களும் உள்ள இடம் என்பது ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனா, DPI என்றால் என்ன? Department of Public Instruction. இது ஆங்கிலேயர்கள் ஆதிக்க மனப்பான்மையுடன் நமது கல்வித்துறைக்கு வைத்த பெயர். இதுவே இங்கிலாந்தில் BCE- Board of control of Education இவ்வாறு செல்லும் அத்தியாயத்தில் நமது கல்விமுறையில் உள்ள ஆசிரியர்களின் தண்டனை வழங்கும் மனோபாவத்தின் நதி மூலத்தை ஆங்கிலேயர் காலம் முதலாக ஆய்வு செய்துள்ளார். “எனக்கு பனிரெண்டு வயது ஆகும் வரை எனது பெயர் “ஷட் அப்“ என்று நினைத்திருந்தேன்“ – சார்லி சாப்ளின் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்வரை நாம் எந்த அளவுக்கு அவர்களை சுதந்திரமாக வளர்க்கிறோம் என்பதைத் தான் சாப்ளின் நையாண்டியாக தெரிவித்துள்ளார். ஒரு தவறை ஏன் செய்யக்கூடாது என விளக்குவதோடு, எது சரியான செயல் என்பதையும் பதமாக எடுத்துக் கூறுவதன் மூலமும் சரியான செயலை உடனுக்குடன் அங்கீகரிப்பதன் மூலமும் தக்கவைத்தலும் தாத்தா பாட்டிகளின் பரிவும் பாசமும் தோழமையும் மிக்க நெறிபடுத்துதலின் உள்ளடக்கமாக இருப்பதை காணமுடியும் என சரியான உதாரணம் கொண்டு கூறியுள்ளார். மேலும் தற்போதைய குடும்ப அமைப்பில் இது தவிர்க்கப் பட்டு ப்ரீ-ஸ்கூல் கலாச்சாரத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் கூறியுள்ளார். மாணவர்களின் ஒழுங்கீனமான நடத்தைக்கான காரணம், அவர்களை புரிந்து கொள்வது எப்படி என்பன பற்றி இரண்டு அத்தியாயங்களில் பள்ளி அளவில் நடந்த சம்பவங்களைக் கொண்டு தெளிவாக விளக்கி கூறியுள்ளார். குமரப்பருவ மாணவர்களின் நடத்தை சிக்கல்களை அவர்களின் மூளை வளர்ச்சி குறித்த அறிவியல் ஆய்வுகளின்பால் நின்று ஆசிரியர் தக்க உதாரணங்களுடன் விளக்கி உள்ள இந்த அத்தியாயம் மிகவும் இன்றியமையாத ஒன்று. அறிவியல் மற்றும் உளவியல் வழி நின்று பேசும் இந்த அத்தியாயங்களில் உள்ள பொருட்கள் பி.எட் பாட வகுப்புகளில் வைக்கப் பட வேண்டும். மாநிலத்திற்கான புதியக் கல்விக் கொள்கை கருத்துரு உருவாக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்த போது பி.எட் குறித்து பேசவில்லை. பிரிதொரு வேளையில் நண்பர் ஒருவர் கேட்ட போது எழுதிய அனுப்பியவற்றில் பி.எட் வகுப்புகளுக்கான பாடங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் பற்றி கூறி இருந்தேன். முக்கியமாக பி.எட் படிப்பில் Irregular mode என்கிற ஒரு சட்டத்திற்கு புறம்பான தவறான முறை முற்றிலும் இல்லவே இல்லை என்பதை கண்காணிப்பு அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைக்கு செல்லாத ஒருவர் எவ்வாறு நல்ல ஆசிரியராக பயிற்சி எடுக்க இயலும்? இதை வாசிக்கும் எனது மாணவர்கள் MJ sir கொடுக்காத தண்டனையா அவரா இப்போது இப்படி பேசுவது என்று நினைக்க கூடும். என்ன செய்வது தலை வழுக்கை ஆன பின்பு தான் என் கையில் சீப்பு கிடைத்தது. நிச்சயமாக வாசிப்புகள் “அடச்சே நாம இப்படி எல்லாம் தவறாக நடந்து கொண்டு இருந்திருக்கிறோமே” என்று வருந்தச் செய்து எனது செயல்பாடுகளை திருத்தி அமைத்தவண்ணம் உள்ளன. ஆசிரியப் பெருமக்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.

Saturday, February 28, 2026

தாய் கிழவி

தாய்க் கிழவி
ஊரே இவ எப்படா ஒழிந்து போவா என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு ரவுடி பேபி கிழவி ராதிகா‌. சொந்த மகன்களும் கிழவி எப்ப ஒழிவா சொத்த பிரிச்சுகிட்டு கடன்களை அடைத்து வாழ்க்கையை கொண்டாடலாம் என்று தவம் கிடக்கிறார்கள். சாக கிடக்கும் தருவாயில் அதே மகன்கள் கிழவியை காப்பாற்ற லட்சக்கணக்கு கடன் படுவதோடு கோயில் குளம் எல்லாம் ஏறி வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள் பாசத்தில் அல்ல நிர்ப்பந்தத்தில். நீண்ட நேரம் புகழ்ந்து கொண்டிருக்கும் பட்டாசு அதிரிபுதிரியாக வெடிக்கும் அல்லவா அது போல படத்தின் முடிச்சுகள் அவிழும் போது தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்து கொண்டாடி மகிழ்ந்தார்கள். அறிமுக இயக்குனர் சிவகுமார் பலே கில்லாடி தான். படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனும் தான் ஏனென்றால் படத்தின் கதை நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இருக்கும் பட்சத்தில் செலவை படத்திற்கு செய்யாமல் ப்ரமோஷனுக்கு செய்து லாபம் அடைந்து விடலாம் என்கிற அருமையான பார்முலாவை பிடித்துள்ளார்!! ராதிகா கிழவி கதாபாத்திரத்தை அசால்டாக அடித்து நொறுக்கி இருக்கிறார். இயக்குனர் கமல் அவர்களின் அதி தீவிர விசிறி போல. படத்தில் கமலை பற்றி போற்று போற்று என்று போற்றி இரண்டாவது பட வாய்ப்பை ராஜ்கமல் இடமிருந்து பெற்றுள்ளார். முனீஸ் காந்த் முதிர் கண்ணனாக நடித்துள்ளார். எதற்காக இந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் உருக்கமாக சொல்லும் இடம் அனைவரையும் கலங்க செய்து விடுகிறது. கோவில் அருகில் இருக்கும் ஒரு குடிகாரர் வாய்ப்பு கிடைத்ததும் சாமியார் ஆக முயற்சிப்பதும் தனக்குத்தானே "கங்காரு அடிகளார்" என்று பெயர் சூட்டிக் கொள்வதும் சரியான காமெடி அண்ணன்களிடம் படித்தவன் என்கிற கெத்து காண்பிக்க பால சரவணன் மருத்துவர் பேசும் ஆங்கிலத்தை அவரது முக பாவத்தை வைத்து புரிந்து கொண்டதாக மொழியாக்கம் செய்யும் இடம் சரியான கிச்சுகிச்சு. பால சரவணன் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். கமலின் தீவிர ரசிகராக ரேடியோ செட் காரராக வரும் சிங்கம் புலி சிரிப்பு புலி. பொருளாதார சுயசார்பு நிலையே பெண்களுக்கு சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் பெற்று தரும் என்கிற மையச்சரடை வைத்து அழகான படத்தை நமக்கு தந்துள்ளார் அறிமுகம் இயக்குனர்

கரும்பலகை – எஸ்.அர்ஷியா

சமீப நாட்களாக முழு நீளமாக ஒரு நூலை ஒரே சிட்டிங்கில் வாசிப்பது என்பது சற்று சிரமமான காரியமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்ப...