Tuesday, March 20, 2018

வானம் வசப்படும்-3 லஞ்ச லாவண்யங்கள்



நாவலில் கனகராய முதலி என்கிற ஒரு கிருஸ்துவர் துய்ப்ளெக்ஸ்க்கு துபாஷாக இருக்கிறார். கிருஸ்துவர் என்பதால் மாதாம் துய்ப்ளெக்ஸ் (திருமதி துய்ப்ளெக்ஸ்) அவர் மீது பாசம் கொண்டவர். ஆனந்தரங்கம் பிள்ளை கனகராய முதலிக்கு அடுத்த இடத்தில் உள்ளவர். கவர்னருக்கு ஆனந்தரங்கம்பிள்ளையின் மீது அன்பும் நம்பிக்கையும் அதிகம்.
கனகராய முதலி சர்க்கரை வியாதியஸ்தர். ஒரு மனைவி மட்டுமே. குழந்தைகள் கிடையாது. ஒரு பையன் சிறுவயதில் மாண்டு போய்விட்டான். அவனது விதவை மனைவி உண்டு. தம்பி தானப்ப முதலி இருக்கிறான். அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கோடு இருக்கிறார். திடீரென நோய் வாய்ப்பட்டு இறந்து போகிறார்.
அவருடைய சொத்து மதிப்போ லட்சம் வராகனுக்கு மேல் தேறும். எனவே உடனடியாக தானப்ப முதலி மாதாம் துய்ப்ளெக்ஸை சந்தித்து பேசுகிறான். அண்ணனின் சொத்து எனக்கே வர வேண்டும். மனைவி மருமகள் இருவரும் விதவையர்கள் அவர்களது உணவு தேவைக்கு என்ன வேண்டுமோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான். (பெண்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அதுவும் விதவையர் என்றால் இன்னும் மோசம்.) கனராய முதலியின் மனைவி ஆனந்த ரங்கம் பிள்ளையை சந்திக்கிறாள். தானப்ப முதலியும் சந்திக்கிறான்.
வருகிற சொத்தில் மூன்றில் ஒரு பாகம் கவர்னருக்கு தந்து விடுவது என்ற ஏற்பாட்டில் பஞ்சாயத்து நடக்கிறது. சொத்து மதிப்பை குறைத்துக் காட்டி அரசருக்கு கிடைக்கும் கமிஷனை குறைக்க ஆனந்த ரங்கம் பிள்ளையை சந்திக்கிறான் தானப்ப முதலி.
இறுதியாக சொத்து தானப்ப முதலிக்கு என்று பஞ்சாயத்து தீர்ப்பு கூறுகிறது. கவர்னர் கமிஷன் அல்லாது மாதாம் துய்ப்ளெக்ஸ்க்கு தனியே பணம் தரப்படுகிறது. மேலும் அண்ணன் பார்த்த துபாஷ் பதவி தனக்கே வேண்டும் என்று மாதாமை வைத்து லாபி செய்ய முயற்சிக்கிறான் தானப்ப முதலி அதற்கு தனியாக லஞ்சம் தர முன்வருகிறான்.
மேலும் ஒரு ஐயர் ஒருவரும் துபாஷ் பதவி தனக்கு வேண்டும் என்கிறார். அவரும் லஞ்சம் தர முன்வருகிறார். தானப்ப முதலி கிருஸ்துவர் ஆகையால் மாதாமுக்கு அவர் பக்கம் பாசம் கொஞ்சம் அதிகமாக பொங்குகிறது. இதனை ஐயரிடம் வாய்விட்டே கூறிவிடுகிறார். இதை கேட்ட மாத்திரத்தில் துபாஷ் பதவிக்காக பூணூலை அறுத்தெறிந்து விட்டு கிருஸ்துவராக மதம் மாறி ஞானஸ்தானம் பெறுகிறார்.
”அடடே இந்த பதவி சரியான பணம் காய்ச்சி மரம் போல தெறிகிறதே” கவர்னரும் மாதாமும் யாருக்கும் உத்திரவாதம் வழங்க வில்லை. ஆனந்த ரங்கம் பிள்ளையிடம் சூசகமாக இவர் இவர் இவ்வளவு பணம் தர முன்வருகிறார்கள். ’நீ துபாஷாக வரவேண்டுமானால் அதற்கு ஒரு விலை தந்தாக வேண்டும்’ என்று மறைமுகமாக உணர்த்துகிறார் கவர்னர். ஆனால் பிள்ளையோ இதன் பொருட்டு லஞ்சம் தர தயாராக இல்லை. பதவி இல்லாவிட்டாலும் ஒரு துபாஷ் என்ன செய்து அரசுக்கு உறுதுணையாக இருக்கிறாரோ அதையெல்லாம் செவ்வனே செய்துவருகிறார் பிள்ளை. எப்படியும் பதவி தனக்கே வரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு.
கவர்னரின் படைப்பிரிவுக்கு ஆள் எடுக்கிறார்கள். அதற்கும் தகுதி இருப்பவர்களை காட்டிலும் லஞ்சமாக பணம் தருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளதாக நாவலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இஸ்லாமிய குறுநில மன்னர் ஒருவர் ஆங்கிலேயரிடம் சிறைபடுகிறார். அவர்களுடைய மனைவி மக்கள் புதுச்சேரியில் தஞ்சம் அடைகிறார்கள். அவர்கள் தங்கள் கணவரை சிறையில் இருந்து மீட்டுத்தர கோருகிறார்கள். 15 லட்சம் வராகன்கள் பணம் கட்டினால் விடுதலை கிட்டும் என்று கூறி பணம் பெற்றுக் கொண்டு 7 லட்சம் வராகன்கள் கட்டி அவரை சிறை மீட்டுத் தந்து விட்டு மீதியை ”லவட்டிக்” கொள்கிறார்கள் கவர்னரும் மாதாமும்.
கிடைக்கும் வரைக்கும் லாபம் என்கிற ரீதியில் தான் கவர்னர் பதவியை துய்ப்ளெக்ஸ் பயன்படுத்தி தனக்கு சொத்துக்களை சேர்த்துக் கொண்டுள்ளார். என்பது நாவலின் வழி தெரிகிறது.

Friday, March 16, 2018

மண்டல் கமிஷன் அறிக்கையை படித்து மெண்டலான ஒரு எழுத்தாளரின் நாவல்


மண்டல் கமிஷன் அறிக்கையை படித்து மெண்டலான ஒரு எழுத்தாளரின் நாவல்.

நாவல்: புவியிலோரிடம்
ஆசிரியர்: பா.ராகவன். நிலமெல்லாம் ரத்தம், மாயவலை போன்ற உலக அரசியல் பற்றியெல்லாம் புத்தகங்கள் எழுதிய அதே ராகவன் தான்.
இடஒதுக்கீடு பற்றியோ சமூக நீதி குறித்தோ தெளிவான பார்வையோ புரிதலோ இல்லாமல் (இருந்தலும் அதை வெளிக்காட்டிக் கொள்வது தனது இனத்தின் மேலாதிக்கத்தை பாதிக்கும் என்று கள்ள மௌனம் காப்போர்) இந்தியா முன்னேறாமல் போனதற்கு காரணம் ரிசர்வேஷன் சிஸ்டம் தான் என்ற பிதற்றும் போலி அறிவு ஜீவி கூட்டத்தின் மூத்த உறுப்பினர் என்ற தன்னை அடையாளம் காட்டிக்கொண்டுள்ளார் திருவாளர் பா.ராகவன்.
கதை இதுதான். ஒன்பது பிள்ளைகள் கொண்ட மெகா ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த வாசுதேவன் தான் கதைநாயகன். அது மிகவும் வறுமையில் வாடும் ஏழை பிராமண குடும்பம். வாசுவைத் தவிர அனைவரும் கிடைத்த வேலையை பார்த்து பொருள் ஈட்டுகிறார்கள். இருந்தாலும் அவர்கள் வறுமைநிலை மாறவில்லை.
வாசு ஒருவன் தான் பனிரெண்டாம் வகுப்பு தேறுகிறான் அதுவும் பார்டரில். அவனை எப்படியாவது கல்லூரி படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும் என்பது அந்த ஏழை பிராமண தந்தையின் பேரவா. அதை எப்படியாவது நிறைவேற்றத் துடிக்கும் மற்ற சகோதரர்கள். இறுதியில் நாடார் என்று போலி ஜாதி சான்றிதழ் பெற்று ஒரு நாடார் நடத்தும் கல்லூரியில் அடையாளம் அழித்து சேருகிறான். இரண்டு ஆண்டுகள் நன்றாகத்தான் போகிறது. மூன்றாம் ஆண்டு பையனுக்கு குற்ற உணர்ச்சி தலை தூக்குகிறது. (ஆமாம் பிராமணன் என்றாலே நேர்மை தவறாதவன் தானே வேணும்னா இயக்குனர் சங்கரை கேளுங்கள்) படிப்பை பாதியில் விட்டு விட்டு டெல்லிக்கு திருட்டு ரயில் ஏறுகிறான்.
அங்கே டெல்லியில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்த அரசியல் அரங்கில் முஸ்தீபுகள் நடக்கின்றன. அது பற்றி கதாப்பாத்திரங்கள் வாயிலாக தனது எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் மிஸ்டர் ராகவன்.
டெல்லியில் எல்லோருக்கும் கூழைக் கும்பிடு போட்டு கிடைத்த வேலைகளைப் பழகி செய்து வீட்டுக்கு பணம் அனுப்புகிறான். இயந்திரமாய் உழைக்கிறான். இறுதியில் ஒரு நல்ல வேலை கிடைத்து சிங்கப்பூர் சென்று தொழில் செய்து பணக்காரனாகிறான். சொந்த நாட்டில் குடும்பத்தினருக்கு ஒரு தொழில் ஏற்படுத்திக் கொள்ள எண்ணுகிறான். ஒரு என்.ஆர்.ஐ தொழில் தொடங்க எஃப்.சி (முன்னேறிய வகுப்பு) ஆக இருப்பது தடையல்லவே என்று கேள்வி வேறு எழுப்புகிறான்.
உலக வரலாறுகளை எல்லாம் கரைத்துக் குடித்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பல அற்புதமான புத்தகங்களை எழுதிய பா.ராகவன் அம்பேத்கர் எழுத்துக்களை படிப்பதால் தனது அறிவு தீட்டாகி விடும் என்று கருதி இருப்பார் போலும். மனிதருக்கு சமூக நீதி குறித்த புரிதல் கிஞ்சிற்றும் இல்லை. நாவல் முழுவதுமே இட ஒதுக்கீட்டை சலுகை அல்லது கை தூக்கி விடுவது என்கிற ரீதியில் தான் எழுதியுள்ளார். இட ஒதுக்கீடு என்பது உரிமை என்கிற எண்ணம் மனிதருக்கு சுத்தமாக இல்லை.
நாவலில் அவர் ஏழ்மை பிராமண குடும்பத்தை ரொம்ப பிரமாதமாக படைத்துள்ளார். அவர் சித்தரித்துள்ள ஏழைக் குடும்பத்தின் அன்றாட அலுவல்களை பார்க்கும் எந்த ஒரு உண்மையான ஏழையும் பொறாமை கொள்வார். உள்ளபடியே அனைத்து ஜாதியிலும் ஏழைகள் என்போர் உழைப்பை சுரண்டக் கொடுத்து குறைவான வருமானம் ஈட்டுவார்கள். கணவன் மனைவி இருவரும் பாடுபடுவார்கள். மூன்று வேளை உணவு என்பது கனவாகவே இருக்கும். கவிச்சு என்பதெல்லாம் பண்டிகை காலங்களில் தான் அதுவும் பண்டிகை கொண்டாட கடன் வாங்கி அதை அடுத்த பண்டிகை வரையில் அடைப்பார்கள்.
ஆனால் இங்கு ”ஆம்படையான்” மட்டுமே வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டில் பெண்களோ மூன்று வேளையும் உணவு தயாரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு என்று ஈடுபடுகிறார்கள்.
ப்ளஸ் டூ வில் பார்டரில் பாஸாகி விட்டு டிகிரியும் இன்கம்ப்ளீட் ஆனாலும் வாசுவின் முன்னேற்றத்திற்கு தடையாக நிற்பது தனது முன்னேறிய ஜாதி என்கிற அடையாளம் மட்டுமே. அதனால் அவன் ஃபாரின் சென்று பெரிய பிஸினஸ் மேன் ஆகிறான் என்கிறார்.
ஒரு இடத்தில் அவனே சொல்கிறான், ”சம்பாதிக்க வேண்டும் சாப்! வரி கட்டி மாளாத அளவுக்கு சம்பாதிக்க வேண்டும். நான் பிராமணன், அரசு வேலை கொடுக்காது (ஆமா இவரு டிகிரியில் டிஸ்டிங்ஷன்ல பாஸாகிட்டாரு)” என்று பேசிக் கொண்டே போகிறார். படிப்பு அரைகுறை என்றும் சொல்கிறார். (அப்போ எந்த ஜாதியில் அரைகுறை படிப்பாளி வேலை வாங்கி இருக்கிறார் என்று உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்)
பிராமணன் வேலை கேட்டு வரும்போது அரசு அவர்களை பிடித்து வெளியே போடா என்று குப்புற தள்ளுவது போல நாவலில் பிராமணன் என்றால் அரசாங்கம் வேலை தராது என்கிறார். அப்படின்னா 100 விழுக்காடு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதா என்ன? சொல்லவே இல்ல!!
ஒரு பிராமணனுக்கு வேலை கிடைக்க வில்லை என்றால் இடஒதுக்கீடு நீங்களாக மிச்சமுள்ள ஐம்பது விழுக்காட்டு இடத்தை பொதுப் போட்டியில் கைப்பற்றும் திராணியற்று இருந்திருக்கிறான் என்றல்லவா அர்த்தம்.
கதையில் ஒரு இடத்தில் கூறுகிறார், “திறமையற்றவர்கள் வேலை செய்வதால் தான் பாலம் இடிகிறது சாலை வீணாகிப் போகிறது” என்கிறார். நண்பர்களே உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், மேற்கூறிய இரண்டுக்கும் காரணங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியாதா?!
இன்னும் சில மர மண்டைகளுக்கு புரிவதே இல்லை, படிப்புக்கான இட ஒதுக்கீடு என்பது கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு மட்டுமே. அங்கே எல்லோருக்கும் பொதுவான தேர்வு வைக்கிறார்கள். அதில் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் என்று ஒரு இலக்கு உண்டு. அனைத்து ஜாதியினரும் அந்த குறைந்த பட்ச மதிப்பெண்ணை பெற்றால் தான் பாஸாக முடியும். பாஸான அனைத்து பொறியாளரும் பாலமோ ரோடோ போட தகுதியுள்ளவர்கள்தான், பாஸான அனைத்து மருத்துவர்களும் வைத்தியம் பார்க்க தகுதியுள்ளவர்கள் தான் என்று பல்கலைக் கழகம் அங்கீகாரம் வழங்கிய பிறகு இவர்கள் என்ன தகுதி பற்றி பேசுவது?!
ஒரு ஏழை ஐயங்கார் படிப்பறிவு இல்லாவிட்டால் ஒரு ஓட்டல் நடத்தி பிழைத்துக் கொள்வார். அங்கே அவர் முதலாளி. ஐயங்கார் ஓட்டல் என்பதே அந்த ஓட்டலுக்கு நல்ல விளம்பரம். எல்லோரும் நாக்கை தட்டிக்கொண்டு சாப்பிட வந்து விடுவார்கள்.
ஒரு ஏழை தலித் படிப்பறிவு இல்லாவிட்டால் அவர் ஏதாகிலும் பிஸினஸ் செய்ய இயலும் வகையில் இந்த சமூகம் உள்ளதா? அவர் தனது உழைப்பை யாரேனும் ஒரு முதலாளியிடம் சுரண்டக் கொடுக்கிறார். வாயைப் பொத்தி வேலை பார்த்துவிட்டு விசுவாசமாய் நடந்து கொண்டு கொடுத்த காசை வாங்கிக் கொள்வார்கள் என்று அங்கே தலித் ஏழைகளுக்கு கடும் கிராக்கி.
எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பது அதிகார பரவலாக்கத்திற்கும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கும் தேவையான ஒரு தற்காலிக ஏற்பாடுதான். எல்லோரும் பொதுப் போட்டிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் அளவிற்கு ஆடுகளம் இன்னும் பண்படுத்தப் படவில்லை என்பது தான் உண்மை.


Friday, March 9, 2018

முதல் ஆசிரியர்- குறு நாவல் ஒரு பார்வை


முதல் ஆசிரியர்- குறு நாவல் ஒரு பார்வை

“அப்பாடா வசந்தபவன்ல ஒரு ஆனியன் ரவா தோசை பிரமாதமா சாப்டாச்சி, இனி அரியலூர் பஸ் ஏரி விட வேண்டியதுதான்”
“ம்ம்ம்… இது வேணாம் தகரம் அங்கங்கே பெயர்ந்து தொங்குது, ஹாங், அதோ ஒரு தனியார் பேருந்து அதில் போகலாம்”
தனியார் பேருந்துகளில் மூன்று பேர் அமரும் இருக்கைகளில் இரண்டு பேர் டிக்கியே முழுசா ஃபிட் ஆகாது. எனவே ஏதேனும் ஒரு பொடிப்பயலை அழைத்து நடுவில் அமர வைத்துக் கொள்ளலாம்.
“டேய் பையா இங்க வாப்பா, இங்கே உட்கார்” என்று ஒரு பொடியனை கூப்பிட்டேன்.
“இதோ வர்ரேண்ணே”, என்று பையை வைத்து இடத்தை உறுதி செய்து விட்டு போனான்.
நானும் நிம்மதியாக உணர்ந்தேன்.
“டேய், என்னடா ஒரு சுமோ மல்யுத்த வீரன அழைச்சிட்டு வர்ரே?!”
“மாமா அதோ அங்க நடுவில் உக்காருங்க, எனக்கு ஃப்ரண்ட்ல சீட்டு இருக்கு”
அந்த சுமோ வீரன் நடுவில் உட்கார்ந்ததும் நான் கம்பி கிடுக்கில் எலிபோல சிக்கிக் கொண்டேன் அக்கரையில் இருந்தவரோ ஜன்னல் கிடுக்கில் பல்லி போல ஒட்டிக் கொண்டு இருந்தார்.
“ம்ம்..சார் ம்ம்.. எங்கே போறீங்க” என்றேன் முக்கி முனகி
“தம்பி அரியலூர் போறேம்பா”
“ஆஆஆ…”
கம்பி கிடுக்கில் தலையை கொடுத்தபடி பையில் இருந்து புத்தகத்தை எடுத்தேன்.
“முதல் ஆசிரியர்” – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

பேர்ல கடைசி எழுத்து “வ்“ னு வருதா அப்ப அவரு இரஷ்ய எழுத்தாளர் தான்.
கதைக்களமும் ரஷ்யாதான். ஆனா இப்போ அந்த இடம் கஜகஸ்தான் என்கிற தனி நாடாக பிரிந்து விட்டது. ஆம் சோவியத் ரஷ்யா சிதருண்ட போது பிரிந்து போனது. அந்த நாட்டில் “குக்குரெவ்” என்கிற மலை கிராமத்தில் தான் கதை நடக்கிறது.
ஒரு பள்ளியின் புதிய கட்டிட திறப்புவிழாவிற்கு அந்த பள்ளியில் இருந்து படித்து தற்போது பிரபல விஞ்ஞானியாக இருக்கும் அல்தினாய் அழைக்கப் படுகிறார்.
பழைய நினைவுகளில் மூழ்கி திளைக்கும் எண்ணத்தோடு  வருபவர் அவரது முதல் ஆசிரியரான துய்ஷேன் இராணுவ பணி முடித்து தற்போது தபால் கார வேலை பார்க்கிறார் என்று அறிகிறாள். இரவு விருந்தில் பல்வேறு எண்ணங்கள் அவள் மனதில் அலையடிக்க அமைதி தொலைந்து போகிறது அவள் கடைசி ரயிலை பிடித்து மாஸ்கோ கிளம்புகிறாள்.
“பள்ளியக்ரஹாரம் எறங்கு, யோவ் பெருசு நகர்ந்து உள்ளே போ! வர்ரவங்களுக்கு இடம் வேணாமா?”
பக்கத்தில் எங்களை நசுக்கி பிழிந்து கொண்டிருக்கும் பெருசை எங்கே போகச் சொல்ல?!
மறுபடியும் புத்தகத்தில் மூழ்கினேன்.
மாஸ்கோ சென்று சேர்ந்த பின்பு விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறாள். அன்று உடனடியாக திரும்பியமைக்கு மன்னிப்பு கோரி ஆரம்பமாகும் கடிதம் “துய்ஷேன் பள்ளி” பற்றிய ஃபளாஷ்பேக்கை கூறுகிறது.
குன்றின் மீது இருந்த ஒரு பாழடைந்த குதிரை லாயத்தை சீர்படுத்தி அரைகுறை வசதிகளுடன் ஒரு பள்ளியாக்க முனைகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரன் “துய்ஷேன்”.
அறியாமையில் ஊறிக் கிடக்கும் மக்களுக்கு படிப்பின் மகத்துவம் புரியாத காரணத்தினால் அவர்கள் எதிர்க்கிறார்கள். அரசாங்கத்திடம் இருந்து பெற்று வந்த ஆணையை காட்டி பணிய வைக்கிறார்.
குழந்தைகள் ஆர்வத்தோடு அவருடன் செல்கிறார்கள். தாய் தந்தை இல்லாமல் சித்தியின் அரவணைப்பில் வளரும் சிறுமி அல்தினாய் முனைப்புடன் பள்ளி செல்ல முனைகிறாள். சித்தி தடுக்க, துய்ஷேன் பேசி சம்மதிக்க வைக்கிறார்.

ஒவ்வொரு நாளும் குழந்தைகளை பள்ளிக்கு துய்ஷேனே அழைத்து செல்கிறார். அல்தினாய் அவருக்கு உறுதுணையாக செல்கிறாள். அல்தினாய்க்கு துய்ஷேன் மேல் அளவில்லா அன்போடு இருக்கிறாள்.
பாடபுத்தகங்கள் கிடையாது சிலபஸ் கிடையாது கற்பித்தல் துணைக்கருவிகள் கிடையாது. அவருக்கு என்ன தெரிகிறதோ அதையே அவர் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறார்.
அந்த காலக்கட்டம் ரஷ்ய புரட்சி நடந்த காலம். கம்னியூஸ்ட்கள் வசம் ஆட்சி அதிகாரம் வருகிறது. துய்ஷேன் கம்னியூஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆகிறார். லெனின் அவர்களின் மரணமும் கதையோட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து கண்டியூரைத் தாண்டியது. டிரைவர் ஆடியோ பிளேயரை மீண்டும் இயக்கினார்.
“ஆனந்த ராகம் கேட்கும் காலம்…”இளையராஜா வாணிஜெயராமைக் கொண்டு காதினில் தேன்பாய்ச்சினார்.
”ஆகா என்ன ஒரு இசை என்ன ஒரு பாடல்… இந்த பாடல் ஓடும் போது படிப்பது இந்த பாடலுக்கு செய்யும் அவமரியாதை என்பதால் படிப்பதை சற்று நேரம் ஒத்திப் போட்டேன்.
துய்ஷேன் பள்ளி வழக்கம் போல இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது தான் அந்த ஆபத்து வந்து சேர்ந்தது. சித்தி ஒருவனிடம் பணம் பெற்றுக் கொண்டு அல்தினாயை “ஓட்டிக் கொண்டு” செல்லும்படி கூறிவிட்டாள்.
ஒரு மூன்று பேர் குதிரையில் வந்தனர். பள்ளியில் வந்து சித்தி திமிராக அல்தினாயை வெளியே அனுப்பும் படி கேட்கிறாள். விஷயம் அறிந்த துய்ஷேன் மறுக்கிறார்.
“அவள் நன்கு படிக்கும் பெண் அவள் விஞ்ஞானியாக வாய்ப்பு உள்ளது. அவளை பெரிய ஊரில் உள்ள பெரிய பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கப் போகிறேன். அவளுக்கு திருமணம் வேண்டாம்” என்று மறுக்கிறார்.
கைகலப்பு நடக்கிறது. வந்தவர் துய்ஷேனை நைய்யப் புடைக்கிறார்கள். அவர் அடிப்பட்ட நிலையிலும் அவளை காப்பாற்ற போராடுகிறார். இயலவில்லை.
அவளை கவர்ந்து கொண்டு சென்றவர்கள் ஒரு இடத்தில் கூடாரம் அமைத்து தங்குகிறார்கள். அடுத்த நாள் நெடுந்தொலைவு பயணத்திற்கு திட்டமிடுகிறார்கள். அல்தினாய் அவர்களிடமிருந்து தப்பி செல்ல வழி கிடைக்குமா என்று ஆராய்கிறாள்.
துய்ஷேன் “மிலிஷியா“ உதவயோடு வந்து அல்தினாயை மீட்டு அவர்கள் மூவரையும் சிறைக்கு அனுப்புகிறார்.
“வாழைப்பழம் இருவது ரூவா, வாழைப்பழம் இருவது ரூவா” என்கிற குரல் கலைக்க புத்தகத்தில் இருந்து எழுந்தேன்.
’ஓ, திருவையாறு வந்துடுச்சா?!’ .
பக்கத்தில் இருந்த சுமோ வாழைப்பழம் வாங்க வேகமாக முன்புறம் சாய்ந்தது. அவரது வேகம் எனக்கு சோகம். வழக்கமாக திருவையாரில் ஒரு 30 பேர் இறங்கினால் 40 பேர் ஏறுவார்கள். ஆக உட்புற அழுத்தத்தோடு வெளிப்புற அழுத்தமும் சேர்ந்து கொண்டது.
மறுபடியும் புத்தகத்தை பிரித்தேன்.
துய்ஷேன் உதவிகள் பெற்று மாஸ்கோவில் அல்தினாய் படிக்க ஏற்பாடு செய்கிறார். அவள் படித்து நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக ஆகிறாள்.
பள்ளி திறப்பு விழா அன்று துய்ஷேன் ஆர்வத்தோடு முன்னாள் மாணவர்களின் வாழ்த்து தந்திகளை பெற்று வந்து விநியோகம் செய்துவந்தார். விருந்து நடந்த அரங்கிற்குள் வருவதற்கு நேரம் இல்லை. அல்தினாய் புதிய பள்ளிக்கு “துய்ஷேன் பள்ளி“ என்ற பெயர் வெகுப் பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரை செய்கிறாள். என்று கதை முடிகிறது.
புத்தகத்தை மூடி வைத்து விட்டு குறுநாவலில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து சிந்திக்கலானேன். வண்டி கீழப்பழூரைத் தாண்டியது. எனக்கும்
”சுமோ” விடமிருந்து விடுதலை கிடைத்து வேறு இருக்கைக்கு மாறினேன்.
ஜன்னல் வழியாக இரவு நேரக் காற்று “ஜில்“ என்று வீசியது.
முதலில் பள்ளியை மறுதலிக்கும் மக்கள் அரசாங்க ஆணை கடிதத்தை கண்டவுடன் உடனடியாக கீழ்படிகிறார்கள். அரசின் மீதுள்ள பயம் அந்த காலகட்டத்தில் இருப்பதை உணர முடிகிறது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய உடனே இருக்கிற வசதி குறைவான உள்கட்டமைப்பைக் கொண்டு மக்களுக்கு கல்வி வழங்க பரவலாக ஆட்களை அனுப்பியதில் இருந்து கல்விக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
லெனின் இறந்த சம்பவம் ஒரு தேசிய சோகமாக எல்லோராலும் உணரப்படுவது கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை இரயிலில் பயணம் செய்யும் விஞ்ஞானி அல்தினாய் துய்ஷேன் மாதிரி ஒருவர் வெளியில் நிற்பதைப் பார்த்து சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்துகிறாள்.
பின்பு அவர் இல்லை என்று தெரிகிறது. மக்கள் அனைவரும் ’போரின் போது காணாமல் போன உறவினரை காணும் தவிப்பு’ எனக் கருதி போரின் கொடுமை பற்றி அங்கலாய்ப்பதுடன் தண்டம் வசூல் செய்ய வந்த இரயில்வே அதிகாரிகளிடம் சண்டையிடவும் செய்கிறார்கள்.
“போர்கள் நாடுகளுக்கு கவுரவத்தை அளிக்கலாம், ஆனால் சாதாரண மக்களுக்கு சோகத்தை மட்டுமே கொடுக்கிறது” என்று பதிவு செய்கிறார்.
அந்த காலத்தில் இரஷ்யாவிலும் சிறுவயது திருமணங்கள் போன்ற பிற்போக்குத் தனம் நிலவி வந்திருப்பதும் பெண்களை போகப் பொருளாக நடத்தியதும் நாவலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
துய்ஷேனும் அல்தினாயும் சேர்ந்து இரண்டு பாப்ளார் மரங்கள்(அப்படித் தாங்க கதையில் வருது சத்தியமா அந்த மரம் கருப்பா சிவப்பான்னு கூட எனக்கு தெரியாது. கதையில் கூறியுள்ளபடி பார்த்தால் அது உயரமாக வளரும் மரம் என்று தெரிகிறது. எனவே நான் “நெட்டிலிங்கம்” மரத்தை கற்பனை செய்து கொண்டேன்) நடுகிறார்கள். மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். அந்த இரட்டை பாப்ளார் மரங்கள் பின்னாளில் பள்ளியின் அடையாளமாகிப் போகிறது.
மொத்தத்தில் 79 பக்கங்களில் ஒரு அருமையான படைப்பு. பூ. சோமசுந்தரம் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
பஸ் வேகமாக அரைவட்டமடித்தபடி வந்து அரியலூர் பேருந்து நிலையத்தில் நங்கூரமிட்டது. இறங்கி வண்டியை ஸ்டாண்டில் இருந்து எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றேன். வண்டியின் பின்னால் அல்தினாயும் துய்ஷேனும் அமர்ந்திருப்பதாக தோன்றியது.




Monday, February 12, 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? How to apply for NEET exam?


நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
How to apply for NEET exam?


எதற்காக நீட்?
இந்த மானங்கெட்ட பயலுவ எவ்வளவு சொல்லியும் கேக்காம படிக்காத பாடத்தில் கேள்வி கேட்டுத்தான் மருத்துவக் கல்லூரிக்கான இடங்களை நிரப்புவோம்னு ஒத்த கால்ல நிக்கிறானுவ.
ஆகையால் நம்ம மாநில பாடத்திட்ட குழந்தைகளும் இந்த எழவெடுத்த பரிச்சைய எழுதித்தான் டாக்டர் கனவ நனவாக்கனும்.
“நீ யார்ரா கோமாளி எங்க மாநில மருத்துவ கல்லூரியில சீட்ட நிரப்ப வர்ர?” அப்படின்னு கேக்குற அளவுக்கு வலிமையான அரசு இல்லாத காரணத்தினால் வந்த கேடு.
தகுதி?!
படிப்புன்னா குறைந்த பட்சம் பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயாலஜி குருப் இல்லன்னா ப்யுர் சயின்ஸ் குருப்.
வயது?
07-05-1993க்கும் 1-01-2002க்கும் இடையில் பிறந்தவர்கள் எஸ்ஸி எஸ்டியாக இருந்தால் 7-05-1988 க்கும் 01-01-2002 இடையில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
மதிப்பெண் தகுதி எதாவது?!
ஆம் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல் ஊனமுற்றோர் என்றால் 45 விழுக்காடு
எஸ்ஸி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் எனில் 40 விழுக்காடு குறைந்த பட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்குறிய இணையதள முகவரிக்கான இணைப்பை கீழே தந்துள்ளேன்.
ஆமாம் இதுக்கு என்னா செலவு ஆகும்?
எஸ்ஸி எஸ்டி பிரிவினர் என்றால் 750 ரூபாய் இதர பிரிவினருக்கு 1400 ரூபாய்
எப்போ விண்ணப்பிக்கனும் எப்போ பரிச்சைன்னு கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?
08-02-2018 முதல் 09-03-2018 அன்று நள்ளிரவு 11.50 வரையில் விண்ணப்பங்களை ஆன்லைனில் நிரப்பி மேலேற்றம் செய்ய வேண்டும்.
பணம் செலுத்த 10-03-2018 நள்ளிரவு 11.50 வரையில் எடுத்துக் கொள்ளலாம்.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும். உரிய இணையதளத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
தேர்வு 06.05.2018 அன்று நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்னர் என்னவெல்லாம் வைத்திருக்க இருக்க வேண்டும்?!
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறு ஆதார் கார்டிலும் பெயர் பிறந்த தேதி மற்றும் இன்ன பிற விவரங்களும் பிழையின்றி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆதார் சென்டர்களில் சென்று அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஸ்கேன் செய்து 100 kb அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் (கம்ப்யுட்டர் சென்டரில் செய்பவர்களுக்கு அவர்களே ஸ்கேன் செய்து அட்ஜஸ்ட் செய்து விடுவார்கள்). கையெழுத்தினை போட்டு அதையும் ஸ்கேன் செய்து 25 kbக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
கட்டாயமாக போன் நம்பர் இருக்க வேண்டும். ஒரே வீட்டில் இருவர் அப்ளை செய்தால் இருவருக்கும் தனித்தனி போன் நம்பர்களை வழங்க வேண்டும். (இப்போ ஸ்காலர்ஷிப் வெப்சைட்டிலும் இப்படித்தான் கேட்கிறார்கள். ஒரு வீட்டில் 3பேர் உதவித்தொகை வாங்கினால் 3 பேருக்கும் தனித்தனி போன் நம்பர் வேண்டும் என்கிறார்கள்)
அப்புறம் இ-மெயில் ஐடி ஒன்று கொடுக்க வேண்டும்.
பணம் எப்படிங்க கட்டறது?!
பணமும் ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும். ஏடிஎம் கார்டு, நெட்பேங்கிங் அல்லது இ-வாலட் (ஏர்டெல்மணி, வோடபோனோட எம் பைசா அல்லது பேடி எம் போன்றவை) இவை மூலம் செலுத்த வேண்டும். கம்ப்யுட்டர் சென்டரில் அப்ளை செய்தால் அவர்களே செலுத்தி விட்டு உங்களிடம் பெற்றுக் கொள்வார்கள்.
தேர்வு மையங்கள் எங்கெல்லாம் உள்ளது?
12 தேர்வு மையங்கள்.
1.சென்னை 2. காஞ்சிபுரம்    3.கோயம்புத்தூர் 4.கம்பம்   5.மதுரை  
6.நாமக்கல் 7.ரங்காரெட்டி (இந்த ஊர் எங்கேயாவது கேள்வி பட்டிருக்கிறீர்களா?)     8.திருவள்ளுர்    9,சேலம்   10. திருச்சி
11.திருநெல்வேலி 12.வேலூர்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேர்வு மையம் வச்சா கொறஞ்சா போயுடும்?!
அம்புட்டுதாங்க விஷயம்.
இதுக்கு மேல பரிச்சை அன்னிக்கு நம்ம டவுசர அவுப்பாய்ங்களா? சட்டைய கிழிப்பாய்ங்களா? கோமணம் கட்டிக்கிட்டு வரச்சொல்லுவாய்ங்களான்னு எங்கிட்ட கேக்காதீங்க. எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது சொல்லிபுட்டேன் ஆமாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இணைப்பு https://cbseneet.nic.in/cbseneet/Registration/Newreg.aspx
விண்ணப்பித்தல் தொடர்புடைய விவரங்கள் அடங்கிய இணைப்பு
தேர்வு மையங்கள் அடங்கிய பட்டியல்

  

Friday, February 9, 2018

லால்குடி டேஸ்-24 ஆஸ் அயாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்….


லால்குடி டேஸ்-24 ஆஸ் அயாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்….

டி.என்.பி.எஸ்ஸி தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலானோருக்கு ஒரு கேள்வி வெகு பரிச்சயமாக இருக்கும். அது ’ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டு இருந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த மன்னன் யார்?’ என்பது தான் அது. விடை நீரோ மன்னன். இது நான் 9ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது பொது அறிவு புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்.
இந்த ’பிடில்’ என்கிற வார்த்தை எனக்கு அதற்கு பின் பரிச்சயமானது லால்குடி விடுதியில் தான். “யோவ் பிடில் வாசிக்காதய்யா?“ இந்த வார்த்தைகள் கேலி செய்ய பயன்படும். அப்படி எதை கேலி செய்வார்கள் என்று தெரியுமா?
பதின்ம வயது மாணவர்கள் புதிதாக ஜட்டி உடுத்த ஆரம்பித்து இருப்பார்கள். சரியாக உலர்த்தாமல் எடுத்து அணிந்து கொள்வதால் தொடை இடுக்குகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அந்த இடங்களில் கடுமையான நமைச்சல் ஏற்படும். பந்து வீச்சாளர்கள் பந்தினை பேண்டில் தேய்ப்பது போல பசங்களும் சொறிந்து கொள்வார்கள். அந்த இடங்களில் சொறிந்து கொள்வதைத்தான் ’பிடில்’ வாசிப்பது என்று லால்குடி விடுதியில் கேலியாக சொல்வார்கள்.
பிடில் வாசிப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. விடுதியாக இருந்தால் எதற்கும் கவலைப்படாமல் சொறிந்து கொள்ளலாம். ஆனால் பள்ளியில் மற்ற இடங்களில்? விடுதியில் வெளிப்படையாக சொறிந்து கொள்பவர்கள் பள்ளியில் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு நாசூக்காக சொறிந்து கொண்டு பரவசம் அடைவார்கள். அப்போது கூட சக விடுதி நண்பர்கள் வந்து “பிடில் வாசிக்காதடா“ என்று கையை தட்டி விடுவார்கள். அந்த சமயங்களில் பாதிக்கப்பட்டோர் கொலைவெறியாகி விடுவதுண்டு.
அது மட்டுமல்லாமல் 6 முதல் 12 வகுப்பு வரையிலான அனைவருக்குமே கை இடுக்குகளில் சொறி எனப்படும் சிறு கொப்புளங்கள் ஏற்படுவதுண்டு. அது சற்றே அதிகமாகி நன்கு பரவ ஆரம்பித்து விடும். விடுதி வாழ்க்கையில் “சொறி“யால் பாதிக்கப் படாதவர்கள் வெகு சொற்பமாகத்தான் இருப்பார்கள். காரணம் லால்குடி விடுதி நாங்கள் இருந்த போது 160 பேர் தங்க இடமளித்த விடுதி. அதில் 6முதல்8 வகுப்பு வரையில் எல்லோரும் ஒரு பெரிய ஹாலில் தான் படுத்துக் கொள்வார்கள். எனவே இதன் தாக்கம் அந்த மாணவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
மருத்துவரிடம் சென்றால் பென்சிலின் ஊசி போட்டு தடவிக் கொள்ள மருந்தும் தருவார். அந்த மருந்து வித்தியாசமான வாசனையுடன் ரோஸ்மில்க் மாதிரி இருக்கும். விடுதியில் 6 -8 மாணவர்களிடம் தடவிக் கொள்ள தேங்காய் எண்ணை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ’ரோஸ் மில்க்’ வைத்திருப்பார்கள்.
சக மாணவர்களுக்கு வேறு பல உடல் நலக் குறைபாடுகள் வந்து விட்டால் போதும் அவனை கவனிக்கிறேன் என்கிற பேரில் “ஆகா நாம பெரிய வியாதியஸ்தர் ஆகி விட்டோமோ?” என்று அவனை மன ரீதியில் நலிவடையச் செய்து விடுவார்கள்.
அப்படித்தான் ரவிச்சந்திரன் (போன அத்தியாயத்தில் மாலதியிடம் பேசிய வீரதீரச் சிறுவன்) ஒரு முறை காய்ச்சலால் அவதிப் பட்டான். இரவு 11 மணிக்கு ஒரு நான்கு பேர் கொண்ட குழு அவனை மருத்துவ அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சாதாரணக் காய்ச்சல் தான் என்று கூறி விட்டு பாரசிடமால் மாத்திரை வழங்கி விட்டார் டூட்டியில் இருந்த நர்ஸ். ஒரு பன் டீ வாங்கி கொடுத்து அழைத்து வந்து விடுதியில் மாத்திரை சாப்பிட வைத்தோம். அவனோ ”ஊசி வேணும்னா போட்டுக்குவேன் மாத்திரை முழுங்க இயலாது” என்று சொல்கிற கேஸ். அவனை கட்டாயப் படுத்தி விழுங்க சொன்னோம். என்னவோ இமய மலையை பெயர்த்து எடுத்து வாயில் போடுவது போல பயந்து பயந்து போட்டு தண்ணீரை ஊற்றிய வேகத்தில் ”வ்வ்வா” என்று குமட்டி வெளியேற்றி விட்டான். அரசு மருத்துவமனையில் கொடுத்த மூன்று மாத்திரைகளையும் இப்படியே வீணடித்து விட்டான். “வாடா திரும்பவும் போய் ஊசி போட்டுகிட்டு வரலாம்“ என்றதற்கு  “நான் ஆடு திருடு போன மாதிரி கனவு கண்டேங்க” என்று அப்பாவியாக சொல்வது போல “ஆள விடுங்கடா சாமி எனக்கு காய்ச்சல்லாம் இல்லடா” என்று கூறி விட்டான்.
விடியற்காலை காய்ச்சல் கடுமையாக அடிக்க ஆரம்பித்து விட்டது. அப்புறம் அட்டெண்டரை எழுப்பி கூறினோம். அவர் ரயில்வே ஸ்டேஷன் நேர் எதிர் புறம் (அப்போது) புதிதாக தோன்றிய நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். காய்ச்சல் கடுமையாக இருந்த காரணத்தினால் அட்மிஷன் போட்டுவிட்டார்கள். காலையில் அவனுடைய ஊருக்கு செல்லும் பேருந்தில் பார்த்து அந்த ஊர்க் காரர்களிடம் செய்தி சொல்லி விட்டோம்.
இரவு மாத்திரையை ஒழுங்காக சாப்பிட்டு இருந்தாலே சரியாகி விட்டிருக்கும். டாக்டர் ஊசி போட்டவுடனேயே சரியாகி விட்டிருந்தது. அவனும் பழையபடி உற்சாகமாகி விட்டான். (இப்போ வாடா எத்தனை மாலதி வந்தாலும் பேசுறேன் என்கிற படி) கிட்டத்தட்ட இரண்டு சனி ஞாயிறுகள் ஊருக்கு செல்லாத காரணத்தினால் அம்மாவை பார்த்தவுடன் இவன் மெழுகாக உருகி விட்டான். மகன் ஆஸ்பிட்டல் பெட்டில் இருக்கிறான் என்கிற ஒரு விஷயம் போதாதா அம்மாக்கள் அழுது ஊரைக் கூட்ட. இரண்டு பேரும் கட்டிக் கொண்டு அழுததை பார்த்த அந்த அழகிய நர்ஸ் கூட இரண்டு சொட்டு கண்ணீரை சுண்டி விட்டெறிந்தபடி பணியை தொடர்ந்தார்.
“அம்மா டிஸ்ச்சார்ஜ் பண்ணிக் கூட்டிக்கிட்டு போயிடலாமா அம்மா” என்று நண்பன் ராஜவேலு கேட்டான்.
“புள்ள துரும்பா எளச்சிட்டான் சாமி, ரெண்டு நாள் வச்சிருந்து குளுக்கோஸ் ஏத்திக் கிட்டு போகலாம் சாமி” என்றார் அன்பொழுக. (மக்களே இந்த காய்ச்சல் அவன் எடையில் ஒரு மில்லி கிராமை கூட பாதிக்க வில்லை என்பது தான் உண்மை. குண்டுக் கல்யாணம் கூட துரும்பாக இளைத்திருப்பதாகத்தான் அவருடைய அம்மா நினைப்பார். ஏனென்றால் அதுதான் அம்மாக்கள் சைக்காலஜி)
காலையில் எல்லோரும் வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பி போய்விட்டோம். அழகிய நர்ஸ் பற்றிய செய்தி அதற்குள் விடுதி முழுக்க மூங்கில் காட்டு தீயாக பரவியது. கேட்ட மாத்திரத்தில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்குமே ரவிச்சந்திரன் மேல் பொங்கி எழுந்த பாசத்தை அடக்க முடியாமல் சிரம பட்டார்கள். அப்புறம் எல்லோரும் கூடிப் பேசி “அவன் ரெண்டு நாளைக்கு பெட்டில் இருப்பான்னு அம்மா சொல்லிட்டாங்க, அதனால நாம நான்கு நான்கு பேரா போகலாம். 11ம் வகுப்பு பசங்க வேண்டாம்பா கூட்டம் அதிகமா இருந்தா ஆஸ்பிட்டல்ல சத்தம் போடுவாங்க”  என்று முடிவு செய்தோம்.
ஆஸ்பிட்டல் போனா அங்கே வாசல் முழுக்க செருப்பாக இறைந்து கிடந்தது “ஆஹா எதோ ஒரு கேஸ் மண்டைய போட்டுருச்சு போல“ என்று நினைத்த படி உள்ளே போனோம். அங்கே ஒரு பாட்டி ஒரு பத்து பேரை நிற்க வைத்து ஒற்றை ஆளாக மறித்தபடி நின்றார். நாங்க போய் ரவிச்சந்திரனை பார்க்கணும் என்ற உடனே அவரின் கோபம் உச்சத்திற்கே போய்விட்டது. ஏன்னா பாதி கிராமமே அவனை பார்க்க திரண்டு வந்திருந்தது. அவர்களில் பாதி பேரேடுதான் அந்த பாட்டி சடுகுடு ஆடிக் கொண்டு இருந்தார்.
ஒரு வழியா அவர்களை எல்லோரையும் துரிதப்படுத்தி அனுப்பி விட்டார். ரவி அம்மாவே எங்களை வெளியே வந்து உள்ளே கூட்டிச் சென்றார். ரவி சேரில் உக்கார்ந்து கொண்டு எங்களை பெட்டில் அமரச் சொன்னான். அவனுக்கு வந்திருந்த ஆரஞ்சு ஆப்பிள் என எங்களுக்கு பரிமாறப்பட நாங்கள் உற்சாகமாக தின்று கொண்டு இருந்தோம்.
“ஏப்பா இங்க யாருப்பா பேஷண்டு? தம்பி பேஷண்டுக்கு தாம்பா பெட்டு எறங்குங்கப்பா” என்று விரட்டினார்.
நாங்க அசையவே இல்லையே. ’ஒரு காய்ச்சலுக்கு பெட்ல சேந்துகிட்டு இன்னக்கி முழுக்க டென்ஷன் பண்ணிட்டாங்களே’ என்று புலம்பிய படி பாட்டி இடம் பெயர்ந்தார்.
அந்த நர்ஸ பாக்காம அந்த இடத்தை விட்டு அசையப்போவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தோம்.
“டேய் யார்ரா அந்த பாட்டி ரொம்ப வெரட்டுது?”
“டேய் அவுங்க இன்னைக்கு டே டூட்டி நர்ஸ்” என்றான் ரவி.
“என்னது நர்ஸா?“ என்று நான்கு பேரும் கோரஸாக கேட்டபடி பெட்டில் விழுந்து மூர்ச்சையடைந்தோம்
வயதானவர்களும் நர்ஸாக இருப்பார் என்கிற உண்மையை உணர்ந்த நாள் அன்று.
இன்னும் ஒரு அத்தியாயம் இதே வகையில் உண்டு வெய்ட் பண்ணுங்க.

Sunday, February 4, 2018

வானம் வசப்படும் -2 புலவருக்கும் புரவலராகவும் தேவரடியார்க்கு நிழல் தரு விருட்சமாகவும்


வானம் வசப்படும் -2 புலவருக்கும் புரவலராகவும் தேவரடியார்க்கு நிழல் தரு விருட்சமாகவும்

தமிழ் எம்.ஏ என்கிற படத்தில் தமிழ் படித்த காரணத்தினால் வாழ வழியின்றி வாழ்க்கையை வீணடித்தவன் கதை பற்றி பார்த்திருப்போம். இலக்கியத்தை வாழ்வாதாரமாக கொண்டிருப்போர் அதைக் கொண்டு பொருளாதார நிறைவோடு வாழ இயலாது என்பது அந்நாளில் இருந்து இந்நாள் வரையில் நிதர்சனம்.
புகழ் வெளிச்சம் தம் மீது படுமாறு நின்று கொண்டு இருப்போர் மட்டுமே காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என வணிக ரீதியாகவும் இலாபகரமான “தொழிலாக“ இலக்கியத்தை கொண்டிருக்கிறார்கள். அதனால் வணிக சமரசங்களுக்கு உட்பட்டே இலக்கியம் படைக்கின்றனர்.
அன்றைய காலகட்டத்தில் தமிழ் புலமை மிகுந்தோரெல்லாம் தனவந்தர்களை புகழ்ந்து பாடல் புனைந்து அவர்களது உள்ளத்தை குளிர வைத்து பரிசில் பெற்றுச் சென்று வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
வானம் வசப்படும் கதையில் வரும் ஆனந்தரங்கம் பிள்ளை கூட தமிழ் இலக்கிய ஆர்வலராக கதை மூலம் அறியப் படுகிறார். தமிழ் புலவர்களுக்கு பரிசுகளும் பண்டங்களும் கொடுத்து அவர்கள் பசி போக்கி தமிழ் தொண்டுக்கு புலவர்களை தயார் படுத்தியிருக்கிறார்.
இராம கவிராயர் என்கிற ஒரு புலவரின் வீட்டில் அடுப்பங்கரையில் அல்ல அடுப்பினுள்ளேயே பூனை படுத்து நீல் துயில் கொள்ளும் அளவுக்கு அடுப்புக்கு ஓய்வளித்து பட்டினியை உணவாக கொண்டு தம் மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். குழந்தை பசியால் வாடி வதங்கிப் போய் கிடப்பது பொறுக்காமல் ஆனந்தரங்கம் பிள்ளையின் கொடைதன்மை பற்றி கேள்வியுற்று புதுச்சேரி விரைகிறார்.
வீட்டிலே போய் பார்க்கிறார், அங்கே அவர் இல்லை, களத்து மேட்டில் அவர் இருப்பதாக தகவல் கூறிவிட்டு அவர்தம் நிலை கண்டு இரங்கி உணவு தயார் செய்து அளிக்க முனைகிறார் அவரது மனைவி. ஆனால் அதை அவர் மறுதளித்து களத்து மேட்டுக்கே விரைந்து சென்று பாடல் பாடுகிறார். பாடலின் உள் பொருளாக தனது நிலை பற்றியும் விளக்கி பாடுகிறார்.
ஆனந்தரங்கரோ ”சரி பொறும்” என கூறி காக்க வைத்து விட்டு வேறு அலுவல்களை பார்க்கிறார். ராமகவிராயருக்கோ குழந்தையின் நிலை கண் முன்னே வந்து வந்து போகிறது. எனவே பொறுக்க மாட்டாமல் அவர் முன்னே வந்து ஞாபகப் படுத்தியவண்ணம் இருக்கிறார். அதற்கு “பறக்காதீரும் புலவரே” என்கிறார். அதற்கும் பதிலாக ஒரு பாடலை பாடுகிறார்.
“பொக்கு பறக்கும்; புறா பறக்கும்
குருவி பறக்கும் குயில் பறக்கும்,
நக்குப் பொறுக்கிகளும் பறப்பார்
நானேன் பறப்பேன் நராதிபனே?
திக்கு விஜயம் செலுத்தி, உயர்
செங்கோல் நடத்தும் அரங்கா! நின்
பக்கம் இருக்க ஒரு நாளும்
பறவேன், பறவேன், பறவேன்”
என்ற பாடலை கேட்டு அவரது அவசரம் அறிந்து உரிய பொருளும் பொன்னும் துணிமணிகளும் கொடுத்து அனுப்புகிறார். தீர்ந்து போனதும் என்னை வந்து பாருங்கள் என்று வேறு கூறுகிறார்.
தாசி எனும் தேவரடியார்கள்
1740- 50 களில் கோவில் தோறும் தேவரடியார்கள் என்கிற பெயரில் தெய்வத்திற்கு நேர்ந்து விட்ட தாசிகள் இருந்திருக்கிறார்கள். முக்கிய நிகழ்வுகளில் அவர்களது ஆட்டம் இன்றியமையாத வழக்கமாக இருந்துள்ளது. நல்ல அழகும் “திறமையும்“ உடைய தாசிகள் “எட்டுத் திக்கும் விட்டெறிய“ (பேரும் புகழோடும் என்பதற்கான பிரபஞ்சனின் பதம்) வாழ்ந்திருக்கிறார்கள்.
நஞ்சை புஞ்சை நகை நட்டு என ஏராளமான சொத்து சுகத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
தாசி குலத்தில் பெண் பிறந்தால் மிகப் பெரிய கொண்டாட்டமாக இருந்துள்ளது. தாயானவள் ஓய்வு பெறும் வயதை எட்டும் போது மகளை தொழிலில் இழுத்து விடுவாள். அதுவும் தாசி மகள் இளைய தாசியை கன்னி கழிக்க பெரும் பணக்கார ஆண்களிடம் மிகப் பெரிய போட்டி இருந்துள்ளது. தாசி வீட்டில் பிறக்கும் ஆண்பிள்ளை வேண்டா பிள்ளை தான். ஆட்களை கூட்டி வருவது போன்ற சில வேலைகளுக்கு அவர்களை பழக்குவார்கள்.
தாசி முதுமையடையும் போது மேக நோய் கண்டிருந்தால் அவளிடம் சென்று வந்த அனைத்து பணக்கார வீட்டுக் காரர்களும் வைத்தியரை தேடி ஓடுவார்கள். தாசியானவர்கள் தனது பெண் பிள்ளைகள் வயது வந்தவுடன் ஆண்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது குறித்தும், அவர்களிடமிருந்து பரிசுகளை பெற என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் நுணுக்கமாக பயிற்றுவித்துள்ளனர்.( இது குறித்து பிரபஞ்சன் அவர்கள் தனது நீல நதி என்கிற நாவலிலும் அழகாக விவரித்துள்ளார்.)
கதையில் பானுகிரகி என்கிற தாசி பெரும் பணக்காரியாக வாழ்ந்திருக்கிறாள். அதே போல பொன்னி என்கிற வேதபுரீஸ்வரர் கோவில் ஆட்டக்காரியும் கூட வசதியான வாழ்வுதான் வாழ்ந்திருக்கிறார்கள்.
அருமையாக பாடல் பாட வல்லவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பி செய்த குறும்புகள் குறித்து பாடல் மூலமாக ஆனந்த ரங்கருக்கு உணர்த்துகிறாள் பானுகிரகி. அதை புரிந்து கொண்டு தனது தம்பியை கண்டிக்கிறார் ஆனந்த ரங்கர்.
இது போல சொர்ணம் என்கிற தாசிக்கு பிறந்த மகன் ஆறுமுகம் எதுவும் தெரியாத தத்தியாக வாழ்கிறான். அவனை அழைத்து திருட்டு பழக்குகிறார்கள். அவன் காவலர்களிடம் மாட்டி சிறை சென்று பின்பு அடிமையாக மொரிஷியஸ் தீவுக்கு விற்கப் படுகிறான்.
பெரிய தனவந்தர்கள் கேட்டால் இல்லை என்று கூறும் சுதந்திரம் வேசிப் பெண்டிருக்கு இருந்திருக்க வில்லை. அவர்கள் என்னதான் பணத்தில் திளைத்தாலும் அவர்களின் இறுதிகால வாழ்க்கை இரங்கத்தக்கதாகத்தான் இருந்து உள்ளது.

Saturday, February 3, 2018

”எங்கள் தந்தை முத்துவேல்”- நினைவு அஞ்சலி


”எங்கள் தந்தை முத்துவேல்”- நினைவு அஞ்சலி

“அப்பா, அப்பா, நான் மேத்ஸ்ல ஃபர்ஸ்ட் மார்க்பா! 100 மார்க்பா!!” என்று உற்சாக பட்டாசாய் நான் வந்து கூறும் போது,
“அப்படியா சரி”  என்று மட்டும் சிக்கனமாக பேசுவார். ஆனால் முகம் மட்டும் ’ஏன் 110 மார்க் வாங்கினா என்னவாம்?’ என்பது போன்ற பாவனையில் இருக்கும்.
மாலை வேளைகளில் பசங்களுடன் விளையாடிக் கொண்டு இருப்பேன். ஆனால் எந்த விளையாட்டாக இருந்தாலும் அப்பாவின் சைக்கிளில் இருந்து பிரத்தியேகமாக ஒலிக்கும் பெல் சத்தத்தில் சப்தநாடியும் ஒடுங்கிப் போய் வீட்டுக்கு சிட்டாக பறந்து விடுவேன்.
”சேத்துக்குறோம் ஆனா உங்கப்பா வந்துட்டா உட்டு அடிச்சிட்டு ஓடக்கூடாது” இது தான் நண்பர்கள் என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள எனக்கு போடும் கண்டிஷன்.  
ஆனாலும் பெல் சத்தத்தை கேட்காமல் நானே அசட்டையாக இருந்தாலும் கூட அவர்கள் தான் என்னை உசுப்பிவிடுவார்கள். ஒரு வேளை எனக்கு முன்னரே அப்பா வீட்டினுள் புகுந்து விட்டால் இருக்கவே இருக்கு பின்பக்க வாசல்.
அப்பா கேட்கும் முதல் கேள்வியே “ஜெயராஜ் எங்கே?” என்பது தான்.
நானோ உடனே கையில் சிக்கிய புத்தகத்துடன் கதவைத் திறந்து கொண்டு வெளிப்படுவேன்.
ஏதோ ஒண்ணாம் வகுப்பில் ஒரு நாள்தாங்க லீவு போட்டேன், அதுக்கு போய் அப்பா பக்கத்து வீட்டு கணேசன் அண்ணனுடன் எனக்கு மாடு வாங்கி கொடுத்து மேய்க்க விடுவது பற்றியும் பண்ணை அமைப்பு குறித்து சீரியஸாக உரையாட ஆரம்பித்து விட்டார்(என்னா ஒரு வில்லத்தனம்). அதன் பிறகு நான் பத்தாம் வகுப்பு வரையில் லீவே எடுத்தது இல்லை. பத்தாம் வகுப்பில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு வாரகாலம் அப்பா கூறியதற்கு இணங்க விடுப்பு எடுத்தேன்.
வடிவேல் ஊத்தாப்பம் ஆர்டர் செய்யும் ஜோக் பார்த்திருப்பீர்கள். மழைச்சாரல் மாதிரி 16 கரண்டி நெய்யெல்லாம் ஊற்றச் சொல்லி ஒரு நீளமான ஆர்டரைத் தருவார். சர்வரோ சிம்பிளாக “அய்யாவுக்கு ஒரு ஊத்தாப்பம்” என்று சிம்பிளாக சொல்லிவிடுவார். அது போலதான் கல்வி ஆண்டு துவக்க நாட்களில் நான் இது வேண்டும் அது வேண்டும் என்று பெரிய பட்டியலையே தருவேன். அவரோ சிம்பிளாக எது அவசியமோ அதை மட்டும் வாங்கி வருவார்.
பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அந்த காலத்தில் மாலை செய்தித் தாளில் தான் வெளிவரும். ரிசல்ட் பார்த்து விட்டு வெற்றியோடு திரும்பும் மாணவர்கள் பேருந்தில் இருந்து குட்டிக் கரணம் போட்டுத் தான் இறங்குவார்கள். அந்த ஆட்டம் அன்று முழுவதும் ஊருக்கே இனிப்பு வழங்கி முடிக்கும் வரை நீடிக்கும். நானோ வீட்டில் தவிப்போடு காத்திருப்பேன். அனேகமாக தூக்கம் சொக்கும் நேரம் செய்தித் தாளோடு வருவார். ஓரு ஆரஞ்சு மிட்டாய் கூட எனது தேர்ச்சியின் பொருட்டு நான் வழங்கியது கிடையாது. எனது தேர்ச்சியின் பால் அவருக்கு கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை ஆதலால் பரபரப்படைய மாட்டார். எந்த சூழலிலும் உணர்வெழுச்சியால் அடித்துச் செல்லப் பட்டவரில்லை. ஆரோக்கியமான உணர்வுசார் நுண்ணறிவு (EMOTIONAL INTELLIGENCE) கொண்டவர்.
ஆனா பாருங்க முடிவெட்டிக் கொள்ள பணம் கொடுத்து தா.பழூருக்கு அனுப்பி வைப்பார். 5ம் வகுப்பு வரையிலும் அவரே வெட்டி விடுவார். கடையில் எங்களுக்கு முடி வெட்டி விடமாட்டார்கள் என்பதால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தா.பழூருக்கு முடி வெட்டிக் கொள்வதற்காகவே செல்வேன். எந்த வகையிலும் எனக்கு தாழ்வு மனப்பான்மையோ எனது சுயமரியாதைக்கு பங்கமோ வர விட்டதில்லை அவர்.
பள்ளி பருவத்தில் தீனி வாங்குவதற்கு நயா பைசா கூட தரமாட்டார். “எதுவா இருந்தாலும் நான் வாங்கி வரேன் வீட்டில் சாப்பிடு” என்று சொல்லிவிடுவார் கறாராக. இலால்குடி விடுதியில் படித்த போது கூட போக 10 வர 10 செலவுக்கு 10 என் 30 ரூபாய் மட்டும் தருவார். ராணி காமிக்ஸ் புத்தக வாடகை 25 பைசா மட்டும்(அந்த கால லெண்டிங் லைப்ரரி) தவறாமல் தருவார்.
ஆனா பாருங்க கல்லூரி காலத்தில் நான் 200 கேட்டால் கூட 300 அனுப்பி வைப்பார். அது என் மேல் அவர் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு மரியாதை என்று உணர்ந்து கொண்டேன்.
இவ்வளவு தூரம் ப்ராக்டிகல் சைக்காலஜியை கையாண்ட எனது தந்தை படித்தது வெறும் ஐந்தாம் வகுப்பு மட்டுமே. பார்த்தது அரசாங்க தலையாரி (கிராம காவலர் இப்போது கிராம உதவியாளர்) உத்தியோகம். அறிந்தது பத்திரம் எழுதுவது, நில அளவை என ஏராளமானவை. எழுத்து பிழை ஒன்று கூட காணவியலா எழுத்து நடை உடையவர்.
எங்கள் குடும்ப பெரியாராம் எங்கள் நடு சித்தப்பாவின் வழி காட்டுதலுக்கு இணங்க எனது அண்ணன் திருமணத்தை ஊரே வியக்கும் வண்ணம் ஒரு சுயமரியாதை திருமணமாக நடத்திக் காட்டினார். வீட்டின் பின்புறம் சினிமா திரையரங்கம் போல முக்கோண வடிவ நீளமான பந்தல் போட்டார். அனைத்து சாதியினரும் விருந்து உண்ட சமபந்தி போஜன திருமணவிழா அது.
எங்கள் ஊரில் அனைவரும் பார்த்து பிரமிக்கும் வண்ணமாக அப்பா எங்கள் நால்வரையும் நன்கு வளர்த்து படிக்க வைத்து அழகு பார்த்தவர். அனேகமாக எங்கள் ஊரின் முதல் பட்டதாரி பெண் எனது அக்கா ஜெயபாரதி தான்.
குழந்தைகளுக்கு படிப்பை விட பெரிய சொத்து வேறு எதுவும் இருக்க இயலாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். இப்போது நாங்கள் அதை அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறோம். அவர் எங்களுக்கு மீன் சாப்பிட வழங்குவதைக் காட்டிலும் மீன் பிடிக்க கற்றுத் தருவதே சாலச் சிறந்தது என்றுணர்ந்தார்.
எந்த சூழ்நிலையிலும் எனது தந்தை கண்கலங்கியதை நான் கண்டதில்லை. ஒரு மூன்று முறை தான் நான் பார்த்திருக்கிறேன்.
முதலாவது, எங்கள் ஊரில் மூங்கில் பிளாச்சில் தட்டி செய்து கோவிலில் பாதுகாப்பு அரண் வைத்திருந்தார்கள். சிறுவர்கள் நாங்கள் அதை பிடித்து தொங்கியபடி நடந்து சாகசம் செய்வோம். அப்போது ஒரு கயிறு திரி திரியாக அறுந்து வருவதை க்ளோசப் பில் யாரும் காட்டாத காரணத்தினால் அஜாக்கிரதையாக நான் தொங்கியபோது தட்டியும் என்னோடு சேர்ந்து தொங்கி பின் என்னோடே கீழே விழுந்தது. முட்டிக்கு கீழே இருந்த சதைப் பகுதி கொத்து பரோட்டா ஆகிவிட்டது. ரத்தம் வெள்ளமாய் பீரிட்டு வழிந்தோடியது. ஓவென்று அலறி துடித்தேன். எனது அப்பா சைக்கிளில் வேகமாக வந்து இறங்கி ஓடி வந்தார். அய்யய்யோ அப்பாவுக்கு தெரியாமல் விளையாட வந்து இப்படி ஆகிவிட்டதே என்கிற பயத்தில் நான் வாயை பொத்திக் கொண்டேன். ரத்தத்தை பார்த்த மாத்திரத்தில் அவர் கண்ணில் வழிந்த நீரை அப்போது தான் முதலில் கண்டேன்.
இரண்டாவதாக நடந்த சம்பவம் நான் மூன்றாவது படித்த போது நடந்தது. புளியமரத்தில் புளியாங்கா அடிப்பது மாணவர்களின் வாடிக்கை. மரத்தை நோக்கி மாணவர்கள் விர்ரென்று கருங்கல்லை எறிவார்கள். அப்படி எறியப்பட்ட கல்லொன்று கீழே விழவில்லை. சரியாக நான் மரத்தை கடக்கையில் செந்துறையை சுற்றி திருச்சிக்கு செல்லும் சுந்தரம் பஸ் போல பொத்தென்று எனது மண்டையில் விழுந்தது. தா.பழூருக்கு தையல் போட சென்றோம். எனக்கு மரத்துப் போகிற ஊசி போட்டு விட்டுத்தான் தையல் போட்டார்கள். எனக்கு ஊசி இறங்குவது சரக் சரக் என்று தான் உணரமுடிந்தது. ஆனால் எனது தந்தையின் கண்ணில் கண்ணீர் கட கட வென்று வழிந்தோடியது.
மூன்றாவது முறை, எனது விடுதிகால பொறுப்பற்ற தனத்தினால் படிப்பில் சற்று அசட்டையாக இருந்துவிட்ட காரணத்தினால் ஏற்பட்ட துன்பம். அவ்வளவுதான்.
எனது தந்தை தனது எழுபதாவது வயதில் இயற்கை எய்தினார். 2004 வது வருடம். நான் உட்கோட்டை பள்ளியில் பணியேற்று இரண்டாண்டுகள் கடந்த போது.
எனது வாழ்விலும் சரி எங்கள் குடும்பத்திலும் சரி அனேக விழாக்கள் அவரது மறைவுக்கு பின்பு நடந்தேறிய வண்ணம் உள்ளது. அது தான் இயல்பும் கூட. வாழ்க்கை சக்கரம் எதன் பொருட்டும் நிற்பதில்லை. அது இந்த பூமியை போல தொடர்ந்து சுழன்ற வண்ணம் உள்ளது என்பது தான் நிதர்சனம். ஆனாலும் கூட அவரின் இல்லாமை மனதில் ஒரு வெறுமையை தருகிறது. எனது இந்த எண்ணம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது தான், இருந்தாலும்  உணர்வுகள் பகுத்தறிவு அறிவதில்லையே.
சீறிப் பாயும் புதுப் புனல் போல நினைவுச்சரங்களில் இருந்து சம்பவங்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனாலும் கூட இத்துடன் முடிக்கிறேன்.





Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...