Saturday, June 22, 2024
அவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுப்போம்!
"நாங்க Msc அ படிக்கப்போறோம் அப்புறம் எறும மாடு மேய்க்கப் போறோம்" என்கிற வரியோடு ஒரு கானா மாதிரியான பாடல் 90 களில் பிரபலம்.
நான் கல்லூரி படித்த காலத்தில் ஊருக்கு வரும் போதெல்லாம் விசேஷங்களில் இந்த பாடலை அலற விடுவார்கள். சரியாக இந்த வரியை பாடி என்னை வெறுப்பேற்றிய சம்பவங்களும் உண்டு.
ஊரில் வேலையின்றி இருந்த பட்டம் படித்த முந்தைய தலைமுறை மற்றும் இந்தமாதிரி தற்குறித்தனமான பாடல்கள் நிறைய பேரை கல்லூரி வாசல்களை மிதிக்க விடாமல் செய்துள்ளன.
எப்படியோ உயர்கல்வி குறித்த எதிர்மறை சிந்தனைகள் கிராமங்களில் வேர்விட்டு விஷச் செடியாக வளர்ந்து தொலைத்துவிடுகிறது. தற்போது உயர்கல்வி குறித்த ஏராளமான informations and success stories உண்டு. அவைகளை உரியோரிடம் சேர்த்து எதிர்காலம் குறித்த தெளிவான பார்வையையும் நம்பிக்கையையும் விதைக்க வேண்டும்.
ஒரு சம்பவம்.
அவர் ஒரு பிரமாதமாக படிக்கும் மாணவி. எங்கள் பள்ளியில் இருந்து ஒரு நல்ல மதிப்பெண்ணோடு வெளியே செல்வார் தனக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்ப்பார் என்று எண்ணியிருந்தோம், ஆனால் கொரோனா காரணமாக தேர்வு இன்றி பத்தாம் வகுப்பு தாண்டி சென்றுவிட்டார்.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளியில் பயின்றவருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நேரம் இந்த மாணவி ஒரு நிதி உதவி பெறும் பள்ளிக்கு (aided school)சென்று விட்டார்.
நான் கூட அவர்களுடைய பெற்றோரை கடிந்து கொண்டேன். அரசு பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் படிக்க வைத்தால் அவர் நிச்சயமாக 7.5% ஒதுக்கீட்டில் நல்லதொரு மேற்படிப்பை தேர்வு செய்து விடுவார் என்று கூறினேன்.
சென்ற ஆண்டு அந்த மாணவியை பற்றி அவரது உறவினரிடம் விசாரித்த போது 550+ மதிப்பெண்ணோடு பன்னிரண்டாம் வகுப்பை தேறி இருந்தார்.
நிச்சயமாக பொறியியல் பிரிவில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் அவர் NEET தேர்வுக்கு தயாராவதற்காக ஓராண்டு கோச்சிங் சேர்வதாக கூறியிருந்தார்.
எனக்கு சற்றே பதட்டமாக இருந்தது ஏனெனில் ரிப்பீட்டர்ஸ் கோர்ஸ் சேரும் அனைவருமே அதற்கடுத்த ஆண்டில் நல்ல மதிப்பெண்ணோடு டாக்டர் சீட் பெறுவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று.
ஆனாலும் நீட் தேர்வு எழுதி மருத்துவர் ஆவது தான் தனது லட்சியம் என்று பிடிவாதமாக ஓராண்டு சிறப்பு பயிற்சிக்கு சென்று விட்டார்.
இந்த ஆண்டு அவரது அம்மாவுடன் பள்ளிக்கு ஒரு நாள் வந்திருந்தார். அப்போது விசாரித்தால் இந்த ஆண்டு நீட்டில் மிகச்சிறப்பான ஒரு மதிப்பெண் பெற்றிருந்தார்.
உறுதியாக அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தனக்கென்று ஒரு லட்சியத்தை வரித்துக் கொண்டு விடாப்பிடியாக அதை நோக்கி பயணித்து வெற்றியும் பெற்றுவிட்டார்.
மற்றுமொரு சம்பவம்!!
இன்று ஒரு மாணவனை ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக அவனது பெரியப்பாவும் பெரியம்மாவும் வந்திருந்தனர் அவனுடைய அப்பா அம்மா வேறு ஊர் இவன் தனது பெரியம்மா வீட்டில் தங்கி படிக்க இருக்கிறான்.
ஏற்கனவே இது போல நிறைய மாணவர்கள் உறவினர் வீட்டில் தங்கி படிப்பதற்கு என்று வந்து விட்டு அடுத்த ஆண்டுகளிலேயே வேறு பள்ளிக்கு சென்று விடுவார்கள்.
அதோடு மட்டுமின்றி வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி கட்டுப்பாடு இன்றி இருப்பார்கள். படிப்பிலும் பின்தங்கி இருப்பார்கள் எனவே பள்ளியில் சேர்ப்பதற்கு நிச்சயமாக அவனுடைய பெற்றோர் வரவேண்டும் என்று கூறிவிட்டேன்.
இன்று மதியமே வந்தனர். "பள்ளியில் சேர்ப்பதற்காக நீங்கள் வர வேண்டாமா?! முழுவதுமாக அவர்களை நம்பி ஒப்படைத்து விடுவதா?! பள்ளியில் சேர்ப்பதுடன் மட்டுமே நின்றுவிடாமல் மாதம் ஒரு முறை வந்து ஆசிரியர்களிடம் அவனுடைய நடவடிக்கைகள் மற்றும் படிப்பு நிலவரம் தெரிந்து கொள்ள வேண்டும்" இன்று கறாராக கூறிவிட்டேன்.
எனது முன்னிலையில் தனது மகனுக்கு அறிவுரை கூறுவதாக எண்ணிக் கொண்டு அவருடைய அம்மா பேசினார். "எப்படியாவது ஒரு பத்தாவது வரைக்குமாவது படிச்சுக்கடா நல்லது" என்றார்.
நான் உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். "பிள்ளைகளை நல்லா படிக்க சொல்லணும் அப்படிங்கறது நல்ல விஷயம் தான், அதுக்காக பத்தாவது முடிச்சுக்கோ என்று சொல்வதா?! ஏன் ஒரு கலெக்டராகவோ டாக்டராகவோ இன்ஜினியராகவோ வரணும் அப்படின்னு பெரிய பெரிய படிப்பு பற்றி எல்லாம் சொல்ல மாட்டீங்களா?!" என்று கடிந்து கொண்டேன்.
குறிப்பாக அந்த அம்மாவிடம் இந்த விஷயத்தை கூறுவதற்கு காரணம் அவனுடைய ஊரில் இருந்து எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவருமே 8 அல்லது 9 ஆம் வகுப்புகளோடு படிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள்.
சென்ற ஆண்டில் கூட ஐந்து பேர் ஒன்பதாம் வகுப்பில் ஒரு நாள் கூட பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் அவர்கள் ஊரிலேயே சென்று பார்த்த போது ஒரு போன் நம்பர் கூட மிச்சம் வைக்காமல் வெளியூர் சென்று விட்டதாக அருகில் இருப்பவர்கள் கூறியிருந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு முகநூல் பதிவு போட்டு இருந்தேன். ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் நன்றாக படிப்பவன் அந்த ஊர் காரன் தான்.
இடையில் திடீரென்று காணாமல் போய்விட்டான். நான்காண்டுகள் கழித்து மாற்று சான்றிதழ் வாங்க வந்திருந்தான் அப்போது விசாரித்த போது தான் தெரிந்தது, பைனான்ஸ் காரர்கள் இடம் அவனது பெற்றோர் கடன் வாங்கி இருந்ததற்காக கடன்காரர்கள் இவனை பிடித்துக் கொண்டு போய் விட்டார்களாம்.
அடிக்கடி அவர்களின் தொந்தரவு தாங்காமல் பெற்றோர் இவனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். குடும்பத்தோடு வேறு ஊர் சென்று விட்டார்கள்.
இது அங்கே வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வு. நான் முதலில் கூறிய மாணவியும் சரி இந்த மாணவர்களும் சரி ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் தான் என்றாலும் இருப்பிடம் வேறு வேறு.
அந்த மாணவிக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு காணும் அளவிற்கு விழிப்புணர்வு இருந்தது மருத்துவர் ஆவதற்கு நிச்சயமாக வாய்ப்புகள் அமையும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் இந்த ஊரைச் சார்ந்த மாணவர்களுக்கு படிப்பின் மீது பெரிய நம்பிக்கை இல்லை படிப்பு என்னென்ன விஷயங்களை எல்லாம் சாதிக்கும் என்கிற விழிப்புணர்வும் கிடையாது.
உயர் கல்விக்கு வழிகாட்டி உதவி செய்ய அரசு எவ்வாறெல்லாம் முயல்கிறது என்கிற விஷயமும் தெரியவில்லை.
சென்ற ஆண்டு கூட இதே ஊரில் இருந்து பிளஸ் டூ முடித்த மாணவி தனது தம்பிகளுக்கு தாயாக இருந்து பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு கல்லூரிக் கனவே இல்லை.
தனது தம்பிகளை பள்ளிக்கு கொண்டு வந்து விட வந்த போது அழைத்து கடிந்து கொண்டேன்.
மேலும் படிப்பதற்கு என்ன வசதி வாய்ப்புகள் எல்லாம் இருக்கின்றன, என்பதையும் நான் முதல்வன் திட்டம் பற்றியும் கூறி அனுப்பி ஏதாவது ஒரு வகையில் படிப்பை தொடர வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன்.
தமிழக முதல்வர் அவர்கள் முன்னெடுத்துள்ள இந்த "நான் முதல்வன் திட்டம்" என்பது சத்தம் இன்றி பல சாதனைகளுக்கான விதைகளை ஊன்றிக் கொண்டு உள்ளது இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் அந்த விதைகள் எல்லாம் பெரு விருச்சமாக இருக்கப் போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அதே வேளையில் கல்வி சார்ந்த விழிப்புணர்வு இல்லாத இது போல பின்தங்கிய மக்கள் இருக்கும் பகுதிகளில் அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
மேலும் கல்வியால் உச்சம் தொட்ட சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளை அவர்களின் வாயாலயே இந்த பகுதிகளில் எல்லாம் கூறி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் .
கனவுகளுக்கு கூட கடிவாளம் போட்டு இருக்கும் இந்த பரிதாபத்திற்குரிய மக்களின் கடிவாளங்களை எப்படியாவது தகர்க்க வேண்டும்.
தற்போது பள்ளிகளில் மாணவர்கள் சார்ந்த தகவல்கள் EMIS PORTAL ல் மிகச் சிறப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அதில் அவுட் ஆப் ஸ்கூல் சில்ட்ரன் (OOSC) என்கிற தலைப்பில் இடைநிறுத்தம் செய்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. அந்த டேட்டா பேஸை மாவட்ட ஆட்சியர்களும் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்த தகவல்களை எடுத்து ஆய்வு செய்தோமானால் எங்கள் பள்ளியை பொருத்தவரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பழங்குடி பிரிவை சார்ந்த மாணவர்கள் மட்டுமே நிரம்ப உள்ளனர்.
மற்ற பிரிவுகளில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று இருக்கும். ஆனால் இந்த பிரிவு மாணவர்களில் 10 பேர் வந்தால் அதில் ஒரு நான்கு பேர் கூட பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து வருவதில்லை.
எனவே பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கணக்குகளை தெளிவாக பகுத்தாய்ந்தோமானால் எந்தெந்த பகுதிகளில் இருந்து இந்த மாணவர்கள் வருகிறார்கள் என்பதை கண்டறிய இயலும்.
அரசு அந்தப் பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து கல்வி சார்ந்த விழிப்புணர்வுகளை வழங்க முடியும்.
மேலும் அந்த குடும்பங்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து செல்ல என்ன காரணம் என்பதை அறிந்து அவர்கள் அதே ஊரில் தொடர்ந்து இருக்க ஏற்பாடு செய்ய இயலும்.
இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக நான் முதல்வன் திட்டம் அனைத்து மாணவர்களையும் மேற்படிப்புக்கு வாஞ்சையோடு கைபிடித்து அழைத்துச் செல்லும் வேளையில் இடை நின்ற மாணவர்களை எப்படியாவது இந்த வட்டத்துக்குள் கொண்டு வர முயல வேண்டும்.
இல்லை என்றால் சில குறிப்பிட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும்.
ஆகவே தகுதியானவருக்கு உதவிகள் வழங்குவது மட்டும் இல்லாமல் விழிப்புணர்வு இன்றி இருக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது ஒரு நல்ல அரசின் கடமை.
எனவே தங்கள் கனவுகளுக்கு கூட கடிவாளம் இட்டுக் கொண்டு மிக எளிமையாக வாழ்ந்து வரும் அவர்களின் கடிவாளங்களை தகர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நிச்சயமாக நமக்கு உண்டு.
Tuesday, June 11, 2024
சில படங்கள் சில பார்வைகள்!!
ஆட்டோகிராப் படம் ரசிக்கத்தக்க வகையில் சேரன் எடுத்திருந்தார். எனக்கு அந்த படம் சார்ந்து இரண்டு கருத்துகள் இருந்தன.
1. பள்ளிப் பருவத்தில் குழந்தைளுக்கு இடையே இருக்கும் எதிர் பாலின ஈர்ப்பினை காதல் என்பதுபோல Glorify செய்திருப்பார். இது மாதிரி படங்கள் பதின் பருவத்தினர் மனதில் நஞ்சை விதைப்பவை.
2. சேரன் இடத்தில் சுகன்யா இருந்து கொண்டு "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..." என பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறேன். ஏன் சேரனுக்கு இருந்தது போல சுகன்யாவுக்கும் பருவத்திற்கொரு ஈர்ப்பு இருந்திருக்க கூடாதா?!
இரண்டாவது பாய்ண்ட்டை படமாக எடுக்க வாய்ப்பே இல்லை என நண்பர்களோடு விவாதித்து இருக்கிறோம்.
இங்கே பையன்கள் சரக்கடிப்பதை சாதாரணமாக கடந்து போகும் சமூகம் அதே தவறை பெண்கள் செய்யும்போது வானமே இடிந்து தலைமேல் விழுந்தது போல அதிர்ந்து போகிறார்கள்.
தவறுகள் செய்வதில் கூட இங்கே பாலினபாகுபாடு நிலவுகிறது.
பிரணய விலாசம் என்றொரு மலையாளப் படம். (ஆமாங்க, ஒரு மலையாளியைவிட அதிக மலையாளப் படங்கள் பார்க்கிறேன் போல!! Thanks to OTT) நான் சொன்னது போல ரிவர்ஸ் கியர் ஆட்டோகிராப்.
நாயகனின் தாய் இறந்து போகிறார். அவருடைய பெட்டியை திறந்தால் அவரது டைரி கிடைக்கிறது. அதில் அவனது தாயார் திருமணத்திற்கு முன்பு ஒருவரை உயிராக நேசித்திருக்கிறார் என்று அறிகிறார்கள். நாயகனின் தந்தை முதலில் அதிர்ந்து கோபம் கொள்கிறார். ஆனால் நாயகன் அவரைத் தேற்றுகிறான். இருவரும் பிறகு தாயாரின் முன்னாள் காதலனைத் தேடி செல்கிறார்கள்.
இதில்கூட அந்த அம்மா உயிரோடு இருந்து இந்த விசயம் வெளிப்பட்டு இருந்தால் கதை மாறியிருக்கும்.
ஆனால் சேட்டன்கள் இந்தப் படத்தை அழகிய கவிதைபோல தீட்டியிருந்தனர்.
பூக்காலம் என்று மற்றொரு மலையாளப்படம். (சொன்னேன்ல 😀) இந்தப் படம் ஒரு பெண்ணின் திருமணம் தாண்டிய உறவினை பேசுகிறது. ஆனால் செம்ம காமடி மற்றும் ஃபீல்குட் படமாக கொடுத்திருந்தார்கள்.
என்னது, திருமணம் தாண்டிய உறவு உங்களுக்கு காமடியா?!
ஆமாம், கணவன் மனைவி இருவரும் நூறு வயதை நெருங்கும் சமயம்தான் இந்த விசயம் கணவனுக்கு தெரிய வருகிறது. ஆனால் 'சம்பவம்' நடந்தது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்.
அன்பான தம்பதிகள் அழகான பிள்ளைகள், பேரழகான பேரக்குழந்தைகள் மற்று கொள்ளுப் பேரன்கள் என மகிழ்வுடனும் குதூகலத்துடனும் செல்லும் குடும்பத்தில் மேலே சொன்ன விசயம் தெரிய வரும்போது கிழவன் என்னதான் "அவளை டைவர்ஸ் பண்ணப்போறேன்" என சீரியசாக சீறினாலும் அவர்தம் பிள்ளைகளோ பேரக்குழந்தைகளோ காமடியாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
அந்தப் பெரியவரைப் பொறுத்தவரையில் அது breach of mutual trust என்கிற கோணத்தில் விவகரத்தாகி பிரிந்து மன்னித்து இணைகிறார்கள்.
காதல் திருமணமோ அல்லது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமோ பரஸ்பர நம்பிக்கை என்பது இல்லை என்றால் உடைந்தே போகும் என்பதை அழகாக பேசும் படம்.
ஒருவருக்கொருவர் செல்போனை மாற்றினாலே உறவு முறிந்துபோகும் என்று பேசும் லவ்டுடே படம் பார்த்தபோது சிரிப்பாகத்தான் வந்தது. ஒருவர் அறியாமல் மற்றொருவர் டன் கணக்கில் ரகசியங்களை பேணும் ஒரு உறவில் நட்புக்கே சாத்தியமில்லாத போது காதல் எங்கே வருகிறது. காதல் என்பது பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கை அல்லவா?!
மேற்கூறிய இதே நேர்க்கோட்டில் மற்றொரு சிறு படத்தையும் பார்த்தேன். "மாடர்ன் லவ் சென்னை" என்கிற ஆன்தாலஜியில் பாரதிராஜா இயக்கி இருந்த "பறவைக் கூட்டில் வாழும் மான்கள்" இந்தப் படம் கணவன் திருமணம் தாண்டிய உறவில் இருக்கிறான். கணவன் மனைவி மற்றும் கணவனின் காதலி மூவரும் பரஸ்பரம் பேசி குழந்தைகள் மனம் நோகாமல் கணவனை காதலியோடு சேர்த்து வைத்துவிட்டு சுதந்திர மனுஷியாக வெளியேறும் நாயகி. என்னது பாலுமகேந்திரா வாடை வருகிறதே என்று பார்த்தால் "நண்பன் பாலுமகேந்திரா வுக்கு நன்றி" என்று படத்தை முடித்திருப்பார்.
நமது சமூகத்தில் திருமணம் என்கிற அமைப்பு ஆணை வானளாவிய அதிகாரத்தோடும் சுதந்திரத்தோடும் அதேவேளை பெண்ணை வீட்டுக்குள் மட்டுமே வைத்திருந்த வரை நம்மாளுவ நினைத்த இடத்தில் எல்லாம் கோவணத்தை அவிழ்த்தனர்.
தற்போதைய காலகட்டத்தில் இருவரும் சுயசார்போடும் சுயமரியாதையுடனும் யோசிக்கவும் வாழவும் செய்கிறார்கள்.
அதனால் லவ்&பிரேக்கப் போல திருமணமும் முறிவும் ஆகிவிட்டது.
கெட்டிபட்டுப்போன பாலின சமத்துவம் இல்லாத திருமணம் என்கிற அமைப்பு ஏற்படுத்தும் சமூக நிர்ப்பந்தங்கள் திருமணம் தாண்டிய உறவுகளை விபரீதமானதாக ஆக்கிவிடுகிறது.
சிறிது காலத்தில் தற்போதைய நிலையில் உள்ள திருமணம் என்கிற அமைப்பு முற்றிலும் வேறுவகையில் மீளுருவாக்கம் செய்யப்படலாம். "நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வருகிறேன் இருவரும் ஊதி ஊதி திண்போம்" என்கிற கதையெல்லாம் இனி வேலைக்காகாது என்றே தோன்றுகிறது.
ஆகவே எந்த நிலை உறவு ஆயினும் எந்த காலகட்டம் ஆயினும் பரஸ்பர அன்பு மற்றும் நம்பிக்கை இல்லாவிட்டால் தகர்ந்தே போகும்
Sunday, June 2, 2024
அந்த அரபிக் கடலோரம் - 5
அந்த அரபிக் கடலோரம் – 5
”மெட்ரோவில் சுத்திப் பாக்கப் போறோம்....”
எர்ணாகுளம் வந்த மூன்றாவது நாள் காலை சற்று ரிலாக்சாக கிளம்பலாம் என்று சற்று மெதுவாகவே எழுந்து கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன். அன்பழகன் மாமா வழக்கமான டீ டைம் க்கு எழுந்து விட்டதால் எழுந்து பல்துலக்கிக் கொண்டு டீக்கடைக்கு சென்றோம்.
லாட்ஜில் முதல் நாளே தேனீருக்கு ஏற்பாடு உள்ளதா என்று விசாரித்த போது, “சார் இங்க பசங்க யாரும் இல்ல, நீங்க போய் குடிச்சிக்கலாம் சார். பக்கத்துல தான் கடை இருக்கு” என்று கூறிவிட்டார்கள்.
கடைக்கு வர வாய்ப்பில்லை என்றாலும் தேனீர் பார்சல் வாங்கி வரக் கேட்டனர். வரும் போது ஃப்ளாஸ்க் எதுவும் எடுத்து வரவில்லை. ஆனால் தண்ணீர் பாட்டில்களில் மூன்று எவர் சில்வர் நீர் குடுவைகள். எனவே அதில் வாங்கி வந்தோம். ஆனால் ஆறிப் போய்விடுமே என்றதற்கு, “அதான் ஒவ்வொரு அறையிலும் எலக்ட்ரிக் கெட்டில் கொடுத்திருக்காங்களே“ என்றனர். ஆகா, அது வாட்டர் ஜக் என்றல்லவா நினைத்திருந்தோம்.
அவர்கள் அதில் தண்ணீர் சூடு செய்தே குடித்திருக்கிறார்கள். அரவர்கள் தான் கொடுத்த வாடகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சவுத் ஸ்டேஷன் முக்கில் ஒரு சின்னஞ்சிறு கடையில் பெரிய flask கண்டெய்னர்களில் டீ, காபி என வைத்துக் கொண்டு பிடித்து பிடித்து தருகிறார்கள். கூட்டம் அதிகாலை 5.30 ல் இருந்தே மொய்க்கிறது. சாயங்கால வேளைகளில் இருப்பதில்லை. காலையிலேயே வடை, சமோசா, அப்புறம் ரொட்டி மாதிரி மொத்தையாக ஒன்று என காலையிலேயே பலகாரங்களும் பறக்கின்றன.
நானெல்லாம் டயட் கான்சியஸ் பர்சன் (பொதுவில் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறேன்) என்பதால் ஸ்ட்ரிக்ட்டாக டீ போதும் என்று கூறிவிட்டேன்.
எர்ணாகுளம் அருகே சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் உள்ளது என்பதை பயணம் திட்டமிடும் போதே அறிந்திருந்தேன். ஆனாலும் கோயில் வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன்.
இவங்க கோயிலுக்கு போனா வகை தொகை இல்லாம காக்க வைப்பாங்க, சட்டைய கழட்டச் சொல்வாங்க ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டீஸ். மேலும் இந்த பயணத்தை ஆன்மீக பயணமாக மாற்றிவிடக் கூடாது என்பதால் ஒரு சிறு ஆன்மீகமற்ற அரசியல் செய்தேன். “அகிலா, அந்த கோயில் இங்கிருந்து ஒரு 120 கிமீ வருமாம், திருவனந்தபுரம் வரும் போது பாத்துக்கலாம்”
மூன்றாம் நாள் திட்டம், மரைன் டிரைவ் பகுதியை சுற்றிப் பார்ப்பது, அப்படியே வாட்டர் மெட்ரோவில் ஃபோர்ட் கொச்சி போய் விட்டு அன்று இருட்டிப் போனதால் பார்க்காத பகுதிகளை பார்த்துவிட்டு மீண்டும் வாட்டர் மெட்ரோவில் மரைன் டிரைவ் வந்து விட்டு சரவண பவனில் சாப்பிட்டுவிட்டு அப்படியே லுலுமால் போய்விட்டு லாட்ஜ் திரும்பி ரயிலை பிடிக்க கிளம்ப வேண்டியது தான்.
இரண்டு நாட்கள் எர்ணாகுளம் பகுதியை சுற்றியதால் கிட்டதட்ட எர்ணாகுளம் வாசி போல ஒரு தைரியம் பிறந்துவிட்டது. இன்றைக்கு கேப் வேண்டாம் மெட்ரோவிலேயே ஊர் சுற்றிவிடலாம் என்று முடிவு செய்தாச்சு.
இன்றைக்கு (20.05.2024) எங்களது இருபதாவது இணையேற்பு நாள். நேற்று இரவு அகிலாவுக்கு மேக்ஸ் கடையில் புத்தாடை வாங்கினோம் அல்லவா. எனக்கு நான் இந்த மாதம் ஒரு நாள் திருச்சிக்கு சென்றபோது மூன்று காட்டன் பேண்ட், மூன்று செட் டீ சர்ட் வாங்கி இருந்தேன். அதில் ஒன்றை இன்றைக்காக வைத்திருந்தேன்.
விசேஷ நாள் என்பதால் காலையிலேயே உற்சாகமாக கிளம்பிவிட்டோம். காலை உணவை வழக்கம் போல் பேக் ரெஸ்டாரண்டில் முடித்துக் கொண்டோம். அங்கே பெரும்பாலும் வெண்ணீர் வைக்கிறார்கள். வெட்டி வேர் போல ஏதோ ஒரு பட்டையை போட்டு காய்ச்சி இளம் பிங்க் கலர் (கெமிஸ்ட்ரி பிராக்டிகலில் வாலுமெட்ரிக் டைட்ரேஷனில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை கோனிக்கல் ஃபிளாஸ்க்கில் உள்ள சோடியம் ஹைட்ராக்சைடில் விடும் போது 20 எம்எல் ல் ஒரு நிறம் வரும் அல்லவா அந்த நிறம்) தண்ணீர் தருகிறார்கள். இதே நீர் தான் எங்களுக்கு திருவனந்தபுரம் டிரெயினிங்கிலும் கொடுத்தார்கள்.
பேக் இன் ல் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் எர்ணாகுளம் சவுத் மெட்ரோ ஸ்டேஷன் உள்ளது. என்னைத் தவிர அநேகமாக அனைவருக்கும் இதுதான் முதல் மெட்ரோ பயணம். எட்டு டிக்கெட் கேட்டால் ஒரே டிக்கெட்டில் எட்டு போட்டு கொடுத்துவிட்டனர். அங்கே கேட் பாஸ் ல் ஸ்கேன்னரை எட்டு முறை தனித்தனியே டிக்கெட்டால் முத்தமிட்டால் தான் கேட் திறக்கிறது.
திறந்து மூடும் நேர இடைவெளியில் அகிலா சாமர்த்தியமாக காலை நுழைத்தவுடன் ப்ளாஸ்டிக் டோர் டப்பென்று சாத்தியது. (ச்சே, என்ன ப்ளாஸ்டிக்கோ, என்னா டோரோ,அப்படி ஒன்றும் வலிக்க வில்லையாம்!!)
இரண்டு நிமிடங்களுக்குள் நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துவிட்டது. மறுபடியும் எட்டு முத்தங்கள் எட்டு கேட் பாஸ்கள். வெளியே வந்து மரைன் டிரைவுக்கு ஆட்டோ பிடித்தோம். ஐம்பது ரூபாயில் மூன்று நிமிடங்களில் மரைன் டிரைவ் வந்துவிட்டது.
எர்ணாகுளம் ஆட்டோக்கள் பற்றி இங்கே கூறியே ஆக வேண்டும். எந்த இடத்திலும் ஆட்டோ பேரம் பேசாமல் கண்மூடிக் கொண்டு ஏறலாம். நாங்கள் எதிர் கொண்ட வரை மிகச் சரியான நியாயமான கட்டணம் தான் கேட்கிறார்கள். ரயில் நிலையத்தில் இறங்கி நாங்கள் ஆட்டோ கேட்ட போது மறுத்து பக்கத்துல தான் சார் நடந்தே போயிடுங்க என்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
மரைன் டிரைவ் பகுதியும் கடல் புறத்தின் எக்ஸ்டென்ஷனான பேக்வாட்டர்ஸ் போலத்தான் உள்ளது. துறைமுகம் அமைப்பதற்காக மணல் தோண்டி எடுத்து ஆழப்படுத்தி ஒரு தீவையே அமைத்திருக்கிறார்கள்.
மரைன் டிரைவ் பகுதியில் உள்ளே நுழையும் இடத்தில் அப்துல் கலாம் பெயரில் ஒரு தூண் உள்ளது. அதில் நிறைய உருவங்கள் செதுக்கி இருந்தது. அப்புறம் கரையை ஒட்டி நீளமான பேவர் ப்ளாக் காரிடார் தான இந்த மரைன் டிரைவ் பகுதி.
ஆலப்புழா போல இங்கேயும் கொஞ்சம் அசந்தால் போட்டில் இழுத்து போட்டு போட்டியை உருவிவிடுவார்கள் போல் தெரிகிறது. கையை பிடித்து இழுக்காத குறையாக அழைக்கிறார்கள்.
மரைன் டிரைவின் இரண்டு முனைப் பகுதிகளிலும் அழகான புதுமையான பாலங்கள் உள்ளன. இரவில் வண்ணமயமாக இருக்கும் போல. நாங்கள் போனது காலை பத்துமணி. அங்கே சுவிஸ்கடிகார மணிக்கூண்டு சிறிதாக அழகாக உள்ளது. அந்த ப்ரிட்ஜ் பகுதியில் வித வித மான கோணங்களில் படம் எடுத்துக் கொண்டோம்.
மரைன் டிரைவின் ஒரு ஓரத்தில் தான் ஹைகோர்ட் வாட்டர் மெட்ரோ ஸ்டேஷன் உள்ளது. டிக்கெட் கேட் பாஸ் என வழக்கமான மெட்ரோ நடைமுறைகள் தான இங்கேயும். லேண்ட் மெட்ரோ முழுக்க முழுக்க வானத்தில் தான் பறக்கிறது.
சென்னையில் தான் பூமிக்கும் வானத்துக்கும் குதிக்கிறது. எனவே அவைகளில் கூட்டம் பிதுங்க பிதுங்க ஏறிக் கொள்கிறார்கள். ஆனால் வாட்டர் மெட்ரோ அப்படி செல்ல முடியாது அல்லவா? எனவே உள்ளே வந்தவர்களை பட்டியில் அடைக்கவே ஒரு அறை உள்ளது. அங்கே வரிசைக் கிரமமாக அமர்ந்து கொள்ள வேண்டும். வாட்டர் மெட்ரோ போட் வந்தவுடன் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டும் அனுமதிக்கிறார்கள். முதல் மெட்ரோவுக்கு எங்களுக்கு அடுத்த ஆளோடு முடிந்து விட்டது. லேட்டாக அடுத்த மெட்ரோவில் இடம் கிடைத்தாலும் ஜன்னல் சீட் கிடைத்ததில் மகிழ்ச்சி.
முழுவதும் குளிரூட்டப்பட்டு மிகவும் தூய்மையாக பராமரிக்கப் படுகிறது. உள்ளே அமர்ந்திருக்கும் போது எல்இடி திரையில் அவசரகால பாதுகாப்பு முறைகள் பற்றி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அளுங்கள் குளுங்கள் இல்லாமல் அழகாக செல்கிறது. மிகப் பிரமாண்டமான கண்ணாடி ஜன்னல் வழியாக கடலை பார்க்க முடிகிறது.
நாங்கள் கடந்தபோது ஒரு பெரிய கப்பலில் இருந்து சரக்கு (ஏங்க இது கண்டெய்னர்ங்க) இறக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. எங்களை கடந்து சென்ற ஒரு பெரிய இரண்டு மாடி படகு அந்த கப்பலுக்கு அருகே சென்றது. அங்கே கப்பலோடு பார்த்த போது தம்மாதுண்டாக தெரிந்தது. இந்த ஒப்பீட்டு காட்சியில் தான் கப்பலின் மிக பிரமாண்டமான உயரம் எங்களுக்கு விளங்கியது.
அது ஏன் இந்த சரக்கு கப்பல்களில் M S C என்று ஆங்கில எழுத்துக்களை பெரிதாக எழுதி வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை விஷயம் அறிந்தவர்கள் விளக்கி கூறுங்கள்.
இருபது நிமிடங்களில் ஃபோர்ட் கொச்சி சென்று விட்டது. ஃபோர்ட் கொச்சி அருகே நெருங்கிய போது டால்பின்கள் தண்ணீரில் இருந்து குதித்து மேலெழும்பின. மக்கள் கூட்டமாக ஆர்ப்பரித்து அந்த ஒரு பக்கமாக சென்றுவிட்டனர். போட் ஒரு பக்கமாக சாய்ந்து விடுமோ என்கிற பயத்தில் நான் செல்லவே இல்லை. இவ்வளவு பெரிய போட்டை என் 90 கிலோ எடையால் தாங்கி பிடித்து காப்பாற்றிவிடலாம் என்கிற ஒரு நப்பாசைதான். ஆனால் போட்டில் ஒரு அளுங்கல் குளுங்கல் இல்லை.
இறங்கி அப்படியே நடந்து இடங்களை பார்த்துக் கொண்டே சென்றோம். இளநீர் கடை இருந்தது. யாரைக் கேட்டாலும் வேண்டாம் என்றுவிட்டார்கள். “எனக்கு தாகமாக இருக்கு நான் குடிக்கிறேன்“ என்று நின்று கொண்டேன். “நல்ல வழுக்கையாக கொடுங்கள்“ என்று கூறியது தான் தாமதம் ஒவ்வொருவராக தங்களுக்கும் வேண்டும் என்று வந்துவிட்டார்கள். எட்டு பேரில் ஏழு பேர் இளநீர் குடித்தோம். நான் என்னுடையது மற்றும் அகிலாவுடையது என்று இரண்டு இளநீர் வழுக்கைகளையும் சாப்பிட்டேன். (ஒரு வேளை வழுக்கை சாப்பிட்டால் வழுக்கை விழாதோ?!)
முதல் நாள் வந்த போது பூட்டிக் கிடந்த வாஸ்கோடகாமா நினைவிடமான அந்த சர்ச் இன்று திறந்து இருந்தது. வாஸ்கோடகாமா சடலம் அந்த பேராலயம் உள்ளேதான் தகனம் செய்யப் பட்டுள்ளது. மீண்டும் சில ஆண்டுகள் கழித்து சடலத்தின் மிச்ச சொச்சங்கள் தோண்டப்பட்டு லிஸ்பன் எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தகனம் செய்யப் பட்டுள்ளதாக அங்கே குறிப்பிட்டுள்ளார்கள்.
அங்கங்கே நின்று பார்த்து படம் எடுத்துக் கொண்டு இருந்த போது லேசாக துவங்கிய மழை சட சடவென அடித்துப் பெய்தது. நானும் சித்துவும் ஓரே ஓட்டமாக ஓடி மெட்ரோ ஸ்டேஷனில் தஞ்சமடைந்தோம். ஏன் சும்மா நிப்பானேன் என்று டிக்கெட் க்யு வில் நின்று டிக்கெட் எடுத்துவிட்டேன். மழைக்காக ஒதுங்கி நின்ற மற்றவர்களும் ஆட்டோ பிடித்து ஸ்டேஷன் வந்து விட்டனர். கேட்டில் டிக்கெட் களை ஒற்றி எடுத்தவுடன் கழிவறைக்கு எடுத்தேன் ஓட்டம். நல்ல மழை வேறு அல்லவா. மெட்ரோ ஸ்டேஷன் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப் படுகின்றன.
மீண்டும் மரைன் டிரைவ் பகுதிக்கே வந்துவிட்டோம். வாட்டர் மெட்ரோ வைபின் ஐலேண்ட் பகுதிக்கும் இயக்கப் படுகிறது. எங்களுக்கு நேர நிர்வாக எல்லைக்குள் அந்த திட்டம் இல்லாத காரணத்தினால் செல்லவில்லை.
சரவண பவன் ஓட்டல் மரைன் டிரைவ் பகுதியில் இருக்கு ஆனால் எவ்வளவு தொலைவு? மேப்பில் 600 மீ போட்டு தெளிவான படம் வரைந்து பாகங்கள் குறித்து இருந்தனர்.
எனவே அனைவரையும் “தோ கிலோ மீட்டர் ” தாத்தா கணக்காக பக்கம் தான் வாங்க என்று நடக்க வைத்தே அழைத்துச் சென்று விட்டோம்.
நாங்கள் போன நேரத்திற்கே மீல்ஸ் முடிந்து விட்டது. மீல்ஸ் முடிந்து விட்டது என்றதுமே சாரதியும் அருணும் உற்சாகமாகி விட்டார்கள். அவர்கள் விருப்பம் போல் ஃப்ரைட் ரைஸ் சப்பாத்தி என்று தெறிக்க விட்டனர். ஒரே ஒரு மீல்ஸ் அன்பழகன் மாமாவுக்கு கொடுத்து விட்டோம். நான் அந்த மட்ட மதிய வேலையில் தோசை சாப்பிட்டேன். ஏனெனில் சரவண பவன் தோசை ஒரு யுனிக்கான சுவையோடு இருக்கும். சென்னையில் சாப்பிட்ட அதே சுவை எர்ணாகுளத்திலும். இதே சரவண பவன் தோசை சுவை தஞ்சாவுர் பழைய பேருந்து நிலைய வசந்த பவனிலும் கிடைக்கும். (சரியான சாப்பாட்டு ராமன் என்று நினைக்க வேண்டாம். எனக்கு ஜீரண சக்தியோடு ஞாபக சக்தியும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா🤣)
சரவண பவனில் இருந்து இரண்டு ஆட்டோக்களில் மெட்ரோ ஸ்டேஷன் விரைந்தோம். தலா நாற்பது ரூபா தான். மெட்ரோவில் லுலு மால் செல்வது தான் சுலபம். ஏனெனில் மெட்ரோ ஸ்டேஷன் டவரில் லுலு மாலின் மூன்றாவது மாடியை இணைக்கும் ஒரு நடைபாதையை சொருகி வைத்துள்ளார்கள். ஏற்கனவே திருவனந்தபுரத்தில் லுலுமால் சென்றிருக்கிறேன். நான் பெரும்பாலும் மால் களில் எதையும் வாங்குவதில்லை. வேடிக்கை மட்டும் தான். நிறைய கடைகள் அழகாகவும் அலங்காரமாகவும் உள்ளன. போட்டோ எடுப்பதற்கென்றே ஏராளமான பகுதிகள் உள்ளன.
வந்ததற்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்போம் என்று அனைவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கினேன். As I told earlier I am diet conscious You know?! எனவே என்னைத் தவிர அனைவருக்கும் வாங்கினேன். திருச்சி மெயின்காட்கேட்டில் இருவது ரூவாய்க்கு கிடைக்கும் அதே கோன் இங்கே எழுவது ரூபாய். அது போல காபி 90 ரூபாய்.
நான் பார்த்த வரையில் ஸ்டேஷனரி பொருட்கள் லார்ஜ் ஸ்கேல் பேக்கிங் உள்ளன. அவை சற்று மலிவாக தெரிந்தன. பர்த்டே சாக்லேட் கொடுக்கும் பசங்களுக்கு கொடுப்பதற்காக எனது மேசை டிராவில் டப்பாவில் பேனாக்கள் வைத்திருப்பேன். அதற்காக ஒரு டப்பாவை எடுத்து பார்த்தேன். ஏற்கனவே ஒரு லெதர் பவுச்சை நான் ”விலை அதிகம் ஆனால் குவாலிட்டியாக இல்லை” என்று நிராகரித்த காரணத்தினால் (இதெல்லாம் கம்பெனி சீக்ரெட் பாஸ்) அகிலாவின் பார்வையின் உஷ்ணம் தாங்காமல் அந்த டப்பா தானாக கீழே இறங்கியது.
லுலுமாலில் இருந்து வெளியே வந்த போது உலகம் இருட்டிவிட்டிருந்தது. அடப்பாவிகளா இவ்வளவு ஈசியா நேரம் போயிடுதே!!
பழனி போனா பஞ்சாமிர்தம் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். ஐயப்பன் கோயில் என்றால் டாலர் பொறி. அது போல கேரளா என்றால் நேந்திரம் சிப்ஸ். ஆகவே மெட்ரோ ஸ்டேஷன் அருகிலேயே அனைவரும் சேர்ந்து மொத்தமாக 1700 ரூபாய்களுக்கு தீனி வாங்கினோம்.
பேக் இன் ரெஸ்டாரண்டில் இரவு உணவை (Actually ‘LAST SUPPER’ in Baque in) முடித்துக் கொண்டு லாட்ஜ் வந்து பேக்கிங் வேலைகளை தொடங்கினோம்.
குடும்பத்தோடு சுற்றுலா சென்றாலே போகும் போது 100 கிலோ எடை உள்ள லக்கேஜ் வரும் போது குறைந்தபட்சம் 125 கிலோ ஆகிவிடும். 200 கிலோவை தாண்டுபவர்களை எல்லாம் பார்த்துள்ளேன்.
இரவு திருச்சி செல்லும் அதே கொச்சின் காரைக்கால் விரைவு வண்டி தான். 10.25 க்கு எடுக்கிறது. நான் அனைவரிடமும் ரயில் பத்து மணிக்கு என்று கூறி வைத்து கிளப்பி கூட்டி வந்திருந்தேன். (மறுபடியும் கம்பெனி சீக்ரெட் பாஸ்) ரிட்டர்ன் பயணத்தில் இரண்டு லோயர் பெர்த் கிடைத்திருந்தது. நான் லோயர் பெர்த்தில் படுத்து கண்ணை மூடி திறந்தால் திருச்சி வந்து விட்டது.
ஆக, இவ்வாறாக எங்கள் பயணம் இனிதே நிறைவுற்றது.
அடுத்த நாள் அமர்ந்து எனது நோட் பேட் ஆப்பில் அவ்வப்போது இட்டு வைத்திருந்த செலவு கணக்குகளை மீட்டு எடுத்து டைரியில் போட்டு கூட்டி வகுத்தால் சராசரி தலா செலவினம் 6500 ரூபாய் வந்திருந்தது. ஆக்சுவலாக நான் தோராயமாக ஏழாயிரம் வரலாம் என்று கூறியிருந்தேன். பரவாயில்லை ஒரு நல்ல டூர் மேனேஜருக்கான சர்வ லட்சணங்களும் வந்து விட்டன என்று என் முதுகை நானே தட்டிக் கொண்டு மாலை வரை ஒரு செம்ம தூக்கம் போட்டேன்.
எங்க அடுத்த டூர் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநில பகுதிகள் அல்லது அந்த மான்.
எங்களது திட்டமிடல் மற்றும் பயணம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடும் என்கிற வகையில் தான் இந்த தொடர் கட்டுரைகளை எழுதினேன்.
வாசித்த அனைவருக்கும் நன்றி.
Thursday, May 30, 2024
அந்த அரபிக் கடலோரம் - 4
அந்த அரபிக் கடலோரம் -4
ஆலப்புழாவில் ஒரு குட்டி டைட்டானிக்
”ஏங்க நேத்து வந்த கார் ரொம்ப சின்னது, எட்டு பேருக்கு பத்தவே இல்லை”
“நாளைக்கு கப்பல் மாதிரி பெரிய வண்டி எடுத்துடலாம் விடு”
கேப் அனுப்பிய டிராவல்ஸ் காரரிடம் சொன்னபோது, “ஓ, அதுதான் நேற்று வந்த டிரைவர் வரமாட்டேன் என்கிறாரா?, சரிங்க சார் இன்றைக்கு இன்னோவா வரச் சொல்றேன் ஜாலியா போய்ட்டு வாங்க“ என்று மலையாள வாடை கமழும் தமிழில் கூறினார்.
“அவன் ஒரு பட்டு வேட்டி பற்றிய கனாவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது” என்று ஒரு கவிதை உண்டு. அந்த கோவணம் களவாடப் பட்ட கதையை கடைசியில் சொல்கிறேன்.
எர்ணாகுளத்தில் இருந்து ஆலப்புழா அறுபது கிமீ க்கு அப்பால் இருந்தது. ரயில் பயணம் பற்றி எல்லாம் அரியலூரில் திட்டமிடும் போதே யோசித்த மாத்திரத்தில் நிராகரித்து விட்டேன்.
அந்த மார்க்கத்தில் நிறைய ரயில் வண்டிகள் ஓடினாலும் காலை எட்டு மணிக்கு பிறகு பதினோறு மணிக்குத்தான் இருந்தது. அகிலாவின் பஞ்ச்சுவாலிட்டி பற்றி அகிலமே அறியும் என்பதால் ரயில் பயணத்திட்டம் யோசித்த மாத்திரத்தில் ஈவிரக்கம் இன்றி கைவிடப் பட்டது.
நாங்கள் அனைவரும் கிளம்பிய பிறகும் அவர்கள் மூவரில் ஒருவர் “மோட்டார் மோகன்“ கணக்காக உறங்கிக் கொண்டு இருந்தார். எனவே இவர்களுக்கு கேப் தான் சரி.
எர்ணாகுளம் சுற்றுவட்டாரத்தில் எவரிடமாவது வெளியாட்கள் ஆலப்புழா என்றால் உடனடியாக முழ நீளத்திற்கு ஒரு கேட்டலாகை எடுத்து போட், ஹவுஸ் போட் என்று கதைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அனைவருமே கமிஷன் நிமித்தம் பல போட் காரர்களுடன் டை அப் வைத்துள்ளார்கள்.
ஒரு வழியாக இழுத்துப் பறித்து அனைவரும் ஒன்பதுக்கெல்லாம் எங்கள் ஆஸ்தான உணவு விடுதிக்கு சென்றுவிட்டோம். எல்லோரும் பூரி தோசை என்று பொளந்து கட்ட நாங்கள் புட்டு கடலைக் கறி என்று “நாம இப்படிக்கா போவோம்“ என்று உண்டோம். சாப்பிட்டு முடிக்கவும் இன்னோவா வருவதற்கும் சரியாக இருந்தது.
“கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் ரயிலிலேயே சென்று இருக்கலாம்“ என்று வேதனைப் படும் அளவுக்கு ஆலப்புழா சாலை மோசமாக இருந்தது.
எர்ணாகுளத்தில் இருந்து தெற்கே திருவனந்தபுரம் வரையில் செல்லும் மேற்கு கடற்கரை ஹைவே தான் அது. முழு சாலையும் ஃப்ளை ஓவராகவே போடப் போகிறார்கள் போல. சென்னையில் மெட்ரோ தூண்கள் போல வரிசையாக தூண்கள் நிர்மானிக்கப் பட்டு வந்தன. நடுவே வேலைகள் நடந்த காரணத்தால் எஞ்சியுள்ள இடத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
9.30 க்கு கிளம்பி 11.40க்கு ஏற்கனவே கேப் காரர் மூலமாக புக் செய்திருந்த போட் அருகே சென்றோம்.
இன்றைக்கு வந்திருந்த டிரைவர் தம்பிக்கும் பாதைகள் பரிச்சயம் இல்லை. இவர் மலப்புரம் ஏரியாவாம்.
போட் ஓட்டும் அந்த வயதான மாலுமி எங்களுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தார். போட்டில் இருந்த நாற்காலிகள் டர்க்கி டவலை போர்த்தி இருந்தன. நடுவே ஒரு 3க்கு 5 பெட் இரண்ட திண்டுகள் என ஒரு அராபிய ஷேக்கின் ஷோக்கான படுக்கை அறை போல காட்சி அளித்தது.
போட்டின் முகப்பில் இருந்த முக்கோண முனை எவர்சில்வர் கம்பி அமைப்பால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அதன் முகப்பில் கேட் வின்ஸ்லெட் டி காப்ரியோ இணை மாதிரி போஸ் கொடுக்கலாமா என்று யோசித்தேன். பிறகு தான் எனது எடை மண்டையில் உறைத்தது. அந்த பெரிய டைட்டானிக்குக்கு ஏற்பட்ட அவல நிலை இந்த குட்டி டைட்டானிக்குக்கு ஏற்பட வேண்டாமே என்று பெரிய மனது பண்ணி அந்த முயற்சியை முலையிலேயே கிள்ளி கடாசிவிட்டேன்.
ஆலப்புழா மெயின் ரோட்டில் இருந்து கிழக்கு நோக்கி வாய்க்காலாக சென்று உள்ளே கடல் போல பரந்து விரிந்து கிடக்கிறது அந்த பேக் வாட்டர்ஸ். அந்த வாய்க்கால் கரை எங்கும் ஏராளமான போட் கள் அணிவகுத்து சுற்றுலாப் பயணிகளுக்காக காத்து கிடக்கின்றன.
அங்கே சாலையில் நடக்கும் போது Affirmative ஆக ஒரு பார்வை பார்த்தாலே போதும் ஆளை இழுத்து போட்டில் தள்ளிவிடுவார்கள் போல அவ்வளவு வெறித்தனமாக கேட்கிறார்கள்.
போட் லேசாக குளுங்கியபடி கிளம்பியது. அந்த குறுகலான வாய்க்காலைக் கடந்து விரிந்த பேக் வாட்டர்ஸ் பகுதியை அடையும் வரை போட் ஆமை வேகத்தில் தப்பு தப்பு நத்தை வேகத்தில் தான் செல்கிறது.
நாங்கள் இரண்டு மணி நேரங்கள் பேசி இருந்தோம். இரவு தங்கும் வகையிலான ஹவுஸ் போட்டுகளும் உண்டு. ஏற்கனவே சென்று தங்கிய நம்பகமான இரண்டு நண்பர்கள் அது வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தனர். மேலும் அவ்வளவு நேரத்தை ஒரே இடத்தில் விரயம் செய்ய எங்களுக்கும் விருப்பம் இல்லை. வந்திருப்பதே மூன்று நாட்கள் அதில் ஏன் இவ்வளவு நேரத்தை இங்கேயே செலவழிப்பானேன்.
ஒரு போட் ரைட் போதும். வேண்டுமானால் அந்தமான் சென்றால் கப்பலில் பிரயாணம் செய்ய முயற்சிக்கலாம் என்று மனதிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.
குறுக்கே நெடுக்கே ஏராளமான சிறிய ரக மற்றும் பெரிய ரக படகு வீடுகள் ஊர்ந்தபடி சென்றன.
அந்த தண்ணீருக்குள் உள்ள நிலப்பரப்பில் தென்னை மரம் சூழ அழகிய வீடுகள் இருக்கின்றன. நாம் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டுமானால் வண்டி அவசியம் என்பது போல அங்கே வசிப்போர் வீட்டிற்கு வீடு சிறிய ரக போட்களை வீட்டின் முன்னே கட்டிப் போட்டிருக்கிறார்கள்.
வீட்டின் முன்னே துணி துவைக்கிறார்கள். அமர்ந்து அரட்டை அடிக்கிறார்கள். சிறுவர்கள் கூடிக்கலைந்து விளையாடுகிறார்கள். சிலர் தூண்டில் போட்டு அந்த தண்ணீரிலேயே மீன் பிடிக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும் சிறு நிலப் பரப்பில் விவசாயமும் செய்கிறார்கள்.
அங்கங்கே துண்டு துண்டாக நிலப்பரப்புகள் தென் படுகின்றன. அவை அனைத்திலும் வீடுகள் நெருக்கமாக உள்ளன. அந்த துண்டுகுளை இணைக்க டவுன் பஸ் சேவை போல படகு சர்வீஸ் இயக்கப் படுகிறது.
இந்த துண்டுகளுக்கு இடையே ஒரு துவக்கப்பள்ளி கூட இருக்கிறதா அந்த பகுதி மாணவர்கள் அங்கே படிக்கிறார்களாம். அந்தப் பள்ளி ஆசிரியர் எந்த பகுதி ஆளாக இருப்பார், அவர் தினமும் போட்டில் ஏறி பள்ளிக்கு வந்து செல்வாரா? அவருடைய பணி அனுபவம் எவ்வாறு இருக்கும்?! என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தேன்.
வாடகைக்கு படகு எடுத்த தற்கு பதிலாக அந்த டவுன் போட் சேவையை பயன்படுத்தியிருந்தால் குறைவான கட்டணத்தில் முழு பேக்வாட்டர்ஸ் பகுதியையும் வலம் வந்திருக்கலாம்.
எங்கள் மாலுமி தாத்தா அங்கே இருந்த ஒரு வீட்டின் அருகே நிறுத்தி “இங்கே சாப்பாடு அருமையாக இருக்கும் கண்டிப்பாக சாப்பிடுங்கள்“ என்கிறார். அந்த ஓட்டல் வீட்டின் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் சாப்பிடச் சொல்லி கையை பிடித்து இழுக்கிறார்கள்.
“ஏம்மா, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா, எங்க சொந்தக் காரங்க கூட இவ்வளவு வற்புறுத்த மாட்டாங்களே”
இறுதியாக தேனீர் மட்டும் அருந்திக் கொள்கிறோம் என்று ஒரு டீலிங்குக்கு வந்தோம். இந்த வற்புறுத்தலுக்கு பின்னால் அந்த மாலுமி தாத்தாவின் டீலிங் இருந்தது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
அந்த வீட்டின் முன்னால் இருந்த மரத்தில் ஒரு வளர்ப்பு கழுகு இருந்தது. கையை நீட்டினால் வந்து அழகாக அமர்ந்து கொள்கிறது, எட்டு பேரில் ஒருத்தர் பாக்கி இல்லாமல் போட்டோ எடுத்துக்கொண்டோம்.
ஆக, இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரத்தை அந்த மாலுமி தாத்தா இப்படியே ஓட்டிவிட்டார். அங்கிருந்தே யு டர்ன் போட்டு திருப்பி விட்டார். அந்த வாய்க்கால் கரை நத்தை வேக பகுதி போக அரை மணி நேரம் வர அரைமணி நேரம். பரந்து விரிந்த பகுதி போக கால் மணி நேரம், வர கால் மணி நேரம். சாப்பிட வற்புறுத்தி ஒரு அரை மணி நேரம். “யோவ் நல்லா இருக்குய்யா உங்க டீலிங்கு” இனி செல்ல உள்ள நண்பர்கள் இந்த விஷயங்களை முன்பே தெளிவாக உடைத்து பேசிவிட வேண்டும் என்பதற்காகவே இந்த விஷயத்தை இங்கே சொல்கிறேன்.
ஒன்று நாற்பதுக்கு மிகச் சரியாக ஏறிய இடத்திலேயே இறக்கி விட்டார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த டிரைவரை எழுப்பினோம். நல்ல நிலையிலேயே அவருக்கு ஒரு இடமும் தெரியாது. இப்போ தூக்க கலக்கம் வேற. “தம்பி ஒரு நல்ல ஏசி ஓட்டலா பார்த்து நிறுத்துப்பா” என்றேன். “அதெல்லாம் ரோட் சைட்ல பாத்துக்கலாம் சார்.
”சாப்பிட்ட பிறகு ஆலப்புழா பீச், லைட் ஹவுஸ் அப்புறம் மராரி பீச் போகணும்பா. சீக்கிரம் ஓட்டலை காட்டுப்பா” என்றேன்.
சாலை ஓரத்தில் கேசியாக் என்று பார்க்கிங் வசதியோடு ஒரு ஓட்டல் தென்பட்டது. “ஆத்தி பார்க்கும் போதே காஸ்ட்லி ஓட்டல் மாதிரி இருக்கே“ என்று எனக்கு பயம் கவ்வியது.
“சார் டேபிள் எதுவும் ஃப்ரீயா இல்ல” என்று செக்யுரிட்டி சொன்னவுடனே, “சரி சரி வண்டிய விடுங்க வேற இடம் போகலாம்” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிளம்பி விட்டேன்.
வழியில் இன்னும் இரண்டு ஓட்டல்கள் தென்பட்டன. அது நேற்றைய ஃபோல்க்லோர் மியுசிய ஓட்டல் போல இருந்ததால் மகளிரணி நிராகரித்துவிட்டார்கள்.
“யப்பா ஆலப்புழாவ விட்டு எர்ணாகுளம் ரோட் எடுக்காத, நாம ஆலப்புழா பீச் போகணும்“ என்றவுடன் யு டர்ன் போட்டு திரும்பினோம். தற்போது கேசியாக் ஓட்டலில் இடம் ஃப்ரீயாக இருப்பதாக டிரைவர் என்னை கேக்காமலேயே உள்ளே விட்டுவிட்டார். பசி வேகத்திலும் அங்கு இருந்த ஏசி மோகத்திலும் அனைவரும் குதித்து ஓடி விட்டனர். “உங்க வேகம் எனக்கு சோகம்“ என்ற நொந்தபடியே நான் இறுதியாக உள்ளே சென்றேன்.
நான் போட்டிங் போகும் போதே, “நாங்க வர லேட் ஆனாலும் ஆகும் நீங்க சாப்பிட்டு விடுங்கள்“ என்று டிரைவர் தம்பிக்கு 200 ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தேன். அவர் சமத்துப்பிள்ளையாக அங்கேயே சாப்பிட்டிருந்தார்.
உள்ளே சென்றதும் ஆளாளுக்கு ஒரு மெனு கார்டை ஏதோ ரிசல்ட் வந்த செய்தித்தாளைப் போல வாசித்து கொண்டு இருந்தார்கள்.
அனைவருமே புதிதாக ஏதாவது ட்ரை பண்ணுவோம் என்கிற மனநிலையில் இருந்தனர்.
நானும் அன்பழகன் மாமாவும் மட்டும் மீல்ஸ் சாப்பிட்டோம். மற்றவர்கள் ஏராளமாக ஆர்டர் செய்ய அனைத்திலும் லேசாக தொட்டுப்பார்த்து பிட்டு வாயிலே போட்டுக் கொண்டேன்.
சாப்பிட்டு முடித்த பிறகு பில்லை நீட்டினார்கள். 3800 ஆகி இருந்தது. “அடேய்களா, நேற்று மூன்று வேளை சேர்த்து கூட இவ்வளவு ஆகலையேடா“ என்று புலம்பியபடியே பில்லை செட்டில் செய்தேன்.
இதற்குள் நான்கு மணி முப்பது நிமிடம் ஆகி இருந்தது. இனிமேல் ஆலப்புழா பீச்சும் கிடையாது லைட்ஹவுசும் கிடையாது என்று டிக்ளேர் செய்துவிட்டேன்.
லைட்ஹவுஸ் 100 படிகள் கொண்டது. நிச்சயமாக இப்”போதை”ய நிலையில் இவர்களால் ஏற முடியாது. ஆகவே எர்ணாகுளம் ரூட்டில் 13 கிமீ போய் மேற்கு புறமாக உள்ளே வண்டியை விட்டால் மராரி பீச் வந்துவிடும்.
இடையில் ரயில்வே கிராசிங் வேறு ஒரு பதினைந்து நிமிடங்களை காலி செய்துவிட்டது. நேராக மராரி பீச் மணல் ஓரம் நிறுத்தி இறக்கி விட்டார்.
“ஆகா, அழகான, ரம்மியமான, தூய்மையான வெள்ளை மணல் பீச்”
அலைகள் அவ்வப்போது சீறினாலும் சீராக வந்த வண்ணம் இருந்தன.
ஏராளமான பேர் குளியல் போட்டு கும்மாளமடித்துக் கொண்டு இருந்தனர்.
அன்பழகன் மாமா கரையில் அமர்ந்து கொண்டார். அவரிடம் பொருட்கள் பை எல்லாவற்றையும் வைத்து விட்டு ஏழு பேரும் கடலில் இறங்கிவிட்டோம்.
கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை நனைத்த வண்ணம் என்னை நோக்கினான். மாமா ஒன்றும் சொல்லமாட்டார் போல் தெரிகிறதே என்று தொப்பென்று குதித்து கும்மாளமிட துவங்கிவிட்டான். அவனைத் தொடர்ந்து சித்துவும் குதித்துவிட்டான். அருண் இம்மியளவும் உணர்ச்சி வசப்படாமல் கால்களை மட்டுமே நனைத்துக் கொண்டு நின்றான். இறுதியாக சாரதி அருணை அலையில் தள்ளிவிட்டு நனைத்து விட்டான்.
கல்லூரியில் இளங்கலை படித்த காலத்தில் பூம்புகார் கடலில் நீந்திச் சென்ற அனுபவம் உண்டு. மாற்றுடை இல்லாத காரணத்தினால் ஆவலை அடக்கிக் கொண்டு இடுப்பு நனையும் ஆழம் வரை மட்டுமே சென்றேன்.
ஆலப்புழா பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் கடலில் குளிக்க நினைத்தால் மராரி பீச் நல்ல சாய்ஸ். தூய்மையான மணல் பகுதி. அருமையான தண்ணீர். குளித்து கரையேறிய பிறகு உடலை நனைத்துக் கொள்ள குளியலறை வசதியும் உள்ளது.
நாங்கள் திரும்பி வந்த கோலத்தை பார்த்து டிரைவர் கதறியே விட்டார். “குளிக்காம கொள்ளாம வண்டில கால் வைக்காதீங்க பாஸ்“ என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார்.
எனவே குளியலறை பகுதியில் இருந்த பைப்பில் கைகால்களை சுத்தபத்தமாக கழுவிவிட்டு மணலை சுத்தமாக உதறித்தள்ளிவிட்டுத்தான் வண்டியில் ஏறினோம். இருந்த போதிலும் நான் ஈரமான உடையுடன் சீட்டில் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து மௌனமாக அழுதபடியே வண்டி ஓட்டினார்.
எட்டரை மணிக்கு லாட்ஜ் க்கு சென்று உடை மாற்றிக் கொண்டு தான் எங்க ஆஸ்தான ஓட்டலில் ஆஜர் ஆனோம்.
அதற்கடுத்த நாள் எனக்கும் அகிலாவுக்கும் இணையேற்பு நாள் என்பதால் புத்தாடை எடுக்க வேண்டும் என்று “மேக்ஸ்“ க்கு என்னை இழுத்துச் சென்று விட்டனர்.
அவர்கள் நால்வரை மட்டும் சாப்பிடக் கூறிவிட்டு நான் அவர்களோடு மேக்ஸ் க்கு சென்று அகிலாவுக்கு சுடிதார் வாங்கிக் கொண்டு ஓட்டலுக்கு திரும்பி சாப்பிட்டு விட்டு அறையில் சென்று படுத்த போது மணி 11.30.
கார் காரன் கோவணம் களவாடிய கதையை விட்டுவிட்டேனே!!
முந்தைய நாள் எர்டிகா வில் இடித்து பிடித்துக் கொண்டு பயணம் செய்த காரணத்தினால் டிராவல்ஸ் காரர் பெரிய மனதோடு இன்னோவா அனுப்பியதாக கூறியிருந்தேன் அல்லவா.
அவர் தான் அறிந்த தொடர்புகளில் இருந்து ஒரு இன்னோவாவை அனுப்பி இருந்தார். அந்த வண்டி கருப்பா சிவப்பா என்று கூட அவருக்கு தெரிந்திருக்க வில்லை.
பிரச்சனை என்ன என்றால் டிரைவர் சீட் வரிசைக்கு அடுத்த வரிசை சீட் இரண்டு தனி சீட்டுகளால் ஆனது. இரண்டு பேர் தனித்தனியே தான் அமர இயலும். ஆக எட்டு பேருக்காக என்று அனுப்பிய வண்டி ஏழு பேர் செல்வதற்கு கூட உகந்தது இல்லை.
ஏற்கனவே நிறைய நேரத்தை கடத்தி விட்டதால் வண்டி மாற்ற நேரம் இல்லை என்று அதற்குள்ளேயே அமர்ந்து சுற்றி முடித்துவிட்டோம்.
இதற்கிடையே காலை சரியாக பதினோறு மணிக்கு ஆலப்புழா போகும் போதே, நானும் சித்துவும் தட்கலில் ரிட்டர்ன் டிக்கட் வெற்றிகரமாக போட்டு விட்டோம்.
இந்த முறை தொடர்ச்சியாகவே எட்டு டிக்கெட்டுகளும் கிடைத்துவிட்டன.
நாளைக்கு எர்ணாகுளம் லோக்கல் தான். மெட்ரோவில் போய்விடலாம் என்று முடிவு செய்து மூன்றாம் நாள் கேப் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
Tuesday, May 28, 2024
அந்த அரபிக் கடலோரம் -3
அந்த அரபிக் கடலோரம் – 3
”இனி ஒரு மியூசியம் பக்கம் போனீங்க அவ்வளவுதான்…”
எர்ணாகுளத்தில் எங்கள் முதல் விசிட் எங்க தெரியுமா? வேற எங்க ஹோட்டல் தான். சவுத் மெட்ரோ ஸ்டேஷன் அருகிலேயே சித்தூர் ரோட்டில் பேக் இன் என்கிற ஏசி ரெஸ்டாரண்ட்.
இரவு திருச்சியில் ரயில் புறப்பட்டபோது சாப்பிட்டது. நானாவது காலை எழுந்தவுடன் ரயிலிலேயே பல் தேய்த்து காபி குடித்துவிட்டிருந்தேன். மற்ற அனைவரும் குளித்து முடித்து தான் உணவு என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டனர்.
எனவே தான் கேப் வரும் கேப்பில் “வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்று கிளம்பி விட்டோம்.
ஏறக்குறைய காலியாக கிடந்த ஓட்டலில் திடீரென எட்டு பேர் நுழைந்தவுடன் அளவில்லா சந்தோசமாகிவிட்டார்கள். இட்லி, தோசை, பூரி, புட்டு என்று ஒவ்வொருவரும் ஆர்டரை தெறிக்க விட்டார்கள்.
ஏசி ஓட்டல் வேற, ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கு, மெனு கார்ட கூட கண்ணுல காட்ட மாட்டேங்குறாய்ங்க, பில் எவ்வளவு எகிற போகுதோ என்று எனக்கு சற்றே கலக்கமாக இருந்தது.
வேண்டிய அளவுக்கு உண்டு முடித்து பில்லை பார்த்தால் 800 சொச்சம் தான். அதாவது 100 ரூபாய் ஆவரேஜ்.
தலைவா மூணு நாளும் காலை மாலை உங்க ஓட்டல் தான் என்று மனதிற்குள் கூவிக் கொண்டேன்.
முதல் தோசையை வாயில் வைத்த போதே கேப் டிரைவர் வந்து விட்டதாக போன் அடித்தார்.
ஏற்கனவே மேப் எல்லாம் பார்த்து லிஸ்ட் போட்டு இருந்தேன். நான் ஹில் பேலஸ் போங்க என்று சொல்ல வாய் எடுத்த கண நேரத்தில் டிரைவரும் ஹில் பேலஸ் தான சார் என்றார்.
பழைய தமிழ் பாடல் ஒன்று “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்“ என்று தொடங்கும். இந்த ஹில் பேலஸ் எட்டடுக்கு மேல் தான் கட்டியுள்ளார்கள். உள்ளே நுழைந்த மாத்திரத்தில் டிரைவர் நான் பார்க்கிங்ல இருக்கேன் கிளம்பும் போது போன் அடிங்க சார் என்று நழுவி விட்டார்.
நான்கு அடுக்கு ஏறும் போதே நாக்கு தள்ள துவங்கிவிட்டது. அப்புறம் பார்த்தால் ஆறாவது அடுக்கு வரைக்கும் கார் வருகிறது. அடிப்பாவி பயலே பேதில போவான் இப்படி ஏற விட்டுட்டானே என்று டிரைவரை சபித்துக் கொண்டே ஏறினோம்.
கேரளாவின் மிகப்பெரிய ஆர்க்கியாலஜிக்கல் மியுசியம் இதுதான். கொச்சி மகாராஜா தனது சொந்த செலவில் 1865 ல் கட்டியுள்ளார். கொச்சியின் நிர்வாக தலைமையிடமாக இருந்துள்ளது. 55 ஏக்கர் பரப்பில் கேரள பாரம்பரிய கட்டுமானக் கலையை பிரதிபலிக்கும் 49 கட்டிடங்களுடன் பரந்து விரிந்து கிடக்கிறது. கொச்சி ராஜ வம்சம் இந்த மாளிகையை 1980 ல் தான் கேரள மாநில அரசு வசம் இதனை ஒப்படைத்திருக்கிறது.
சந்திரமுகியின் முன்னோடியான மலையாள மணிசித்திர தாழ் படம் இங்கே எடுக்கப் பட்டுள்ளதாம்.
பேலஸ் முழுக்க முழுக்க அந்த கால கலைப் பொருட்களை பார்வைக்கு வைத்துள்ளார்கள். அந்த கால ஆயுதங்கள், அரச குடும்பத்தினர் செல்லும் பல்லக்குகள், உடைகள் மற்றும் நகைகள் என்று ஏராளமாக இருந்தது. குற்றவாளிக்கு நடுவீதியில் கூண்டில் அடைத்துப் பூட்டி தொங்க விட்டு தண்டணை வழங்கும் கூண்டு ஒன்றை தொங்க விட்டு இருந்தனர். முதலில் ஏதோ என்று கடந்து விட்டேன். அப்புறம் குறிப்பை படித்த போதுதான் அதன் கொடூரம் அறிந்து அதிர்ந்தேன்.
பேலஸ் ல் எங்கேயும் சேதம் செய்து விடக் கூடாது என்று மிக கவனமாக பராமரிக்கிறார்கள். அங்கங்கே பெடஸ்டல் ஃபேன் தான் நிற்கிறது. அதனைச் சுற்றி நம்ம ஆட்கள் காற்று வாங்க நிற்கிறார்கள்.
முடித்து இறங்கும் போது ஞாபகமாக டிரைவரை அழைத்து மேலேயே வரச் சொல்லி விட்டேன். “ஏம்பா, போகும் போது மேலே விட்டிருக்கலாம்ல?”
“சார் எனக்கும் தெரியாது சார் நானும் இந்த ஏரியாவுக்கு புதுசுதான் சார்” என்றார்.
அடுத்ததாக Folklore Museum செல்ல வேண்டும். “நோ, மதிய சாப்பாடு எங்கன்னு பாத்து கூட்டிட்டு போங்க, சாப்பிடாம ஒரு அடி நகர முடியாது“ என்று அத்தனை பேரும் ஏக காலத்தில் தர்ணா செய்தனர்.
“சார் அங்க பக்கத்துல போய் சாப்பிட்டுக்கலாம் சார்” என்று வண்டியை எடுத்தார். ஓட்டினார் ஓட்டினார் ஓட்டிக் கொண்டே இருக்கிறார். வந்த இடமெல்லாம் இரண்டாம் முறை வந்து போவதை நானே கவனித்து விட்டேன்.
நான் முந்தைய நாள் இரவு மேப்பில் பார்த்த போது பத்துக்குள் தான் கிமீ காட்டியது. ஆனால் இவர் இதுவரை 20கிமீ ஓட்டிவிட்டார்.
“பாஸு, உங்களுக்கு வழி தெரியலையா?”
“சார் நான் திருவனந்தபுரம், இங்க அவ்வளவு பழக்கமில்ல”
“ சொல்லி இருந்தா மேப் போட்டு இருப்பேனே”
“அந்த Folklore Museum போய் இருக்கேன் சார். பக்கத்தில் சின்ன ஓட்டல் இருக்கு” என்றார்.
அப்புறம் நான் மேப்பை போட்டு வழி காட்டிக் கொண்டே சென்றேன்.
அங்கே ஓட்டலைப் பார்த்தால் சின்னது கிடையாது மிகவும் சின்னஞ்சிறியது. மொத்தமே 12 பேர் தான் உக்கார முடியும். எங்க எட்டு பேர பார்த்ததும் உற்சாக மிகுதியில் தனியா உக்காந்து இருந்த ஒரு பையனை வேறு பத்தி விட்டு விட்டார் அந்த முதலாளி.
“சுத்தம் சோறு போடும்” என்றாலும் கூட சுத்தமான இடத்தில் தான் வயிற்றுக்கு சோறு போட வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு வாழும் கொள்கை கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அகிலா, கயல் அண்ணி மற்றும் லதா அக்கா.
இடத்தை பார்த்த மாத்திரத்தில் பார்வையாலேயே நிராகரித்துவிட்டனர்.
“டிரைவர் சார், இப்போ எழுந்து திரும்பி போனா ஓட்டல் காரர் வெட்டுவாரோ?“ என்பதை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” என்று ஓட்டம் எடுத்தோம்.
ஆன் தி வே யில் ஓட்டல் ஆரியாஸ் ஐ கடந்த ஞாபகம் இருந்ததால் அதற்கு ரூட் போட்டு சென்றோம்.
அருமையான சாப்பாடு. மிகவும் சரியான விலையில் இருந்தது.
“ஜெயின் காலேஜ்ல உனக்கு பிடித்த விஷயம் என்ன?” கேட்டால் முகம் எல்லாம் பல்லாக “சித்தப்பா, அங்க மதியம் சாப்பிடும் போது எத்தனை அப்பளம் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்க“ என்பான் சித்து.
அவன் இரண்டாவது அப்பளம் கேட்க, அடுத்து அருண் கேட்க, அடுத்து நான் பாயாசம் இரண்டாவது கப் கேட்க என்று தெறிக்க விட்டோம்.
என்னையும் டிரைவரையும் தவிர அனைவரும் தமிழ்நாட்டு சின்ன அரிசி சாப்பாடு சாப்பிட்டனர். நானெல்லாம் பாம்பு திங்கும் ஊருக்குச் சென்றால் நடு கண்டத்தை எடுத்து கடிக்கும் ஆள். பில் மிகவும் நியாயமான ரேட் தான் வந்தது. 9 பேருக்கு 800 சொச்சம் தான். பில்லில் இரண்டாம் அப்பளம் பாயாசம் என்று எதுவும் இல்லாதது கண்டு நிம்மதி கொண்டேன்.
திரும்ப folklore museum சென்றோம். நுழைவுக் கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கிறார்கள். கேரளாவில் அனைத்து கிராம நகரங்களில் இருந்து அனைத்துவிதமான பாரம்பரிய கலைப் பொருட்கள், நடன நாடகங்களின் போது பயன்படுத்தப் படும் பொருட்கள் என மூன்று மாடி நிறைய குவித்து வைத்துள்ளார்கள். இது முழுக்க ஏசி செய்துள்ளார்கள். இந்த கலைப் பொருட்கள் அனைத்துமே தனி ஒரு மனிதராக ஜார்ஜ் ஜெ தய்லத் என்பவர் சேகரித்துள்ளார். மியுசியம் அமைந்துள்ள மூன்றடுக்கு மர மாளிகை முழுக்க முழுக்க கேரள பாரம்பரிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது. நுழைவுக் கட்டணம் சற்று அதிகம்.
அடுத்ததாக வண்டியை ஃபோர்ட் கொச்சி ஏரியாவுக்கு விட்டோம். அங்கே டட்ச் பேலஸ், காய்ர் மியுசியம், Jews town, வாஸ்கோடகாமா நினைவிடம் அப்புறம் பீச்சாங்கரை மற்றும் சீன மீன்பிடி வலைகள் என்று ஏராளம் இருந்தன.
டட்ச் பேலஸ் மியுசியம் ல் “இன்று உலக மியுசியம் நாள் எனவே இன்று மட்டும் அனைவருக்கும் நுழைவுக் கட்டணம் இல்லை” என்று போர்டு தொங்கியது. அடப்பாவி “ஹில் பேலஸ், ஃபோல்க் லோர்” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டேன்.
“அப்பா, மியுசியம் போதும்பா, பீச் போகலாம்பா” என்று அருண் கூறவும் சித்துவும் சாரதியும் ஏக காலத்தில் ஆமோதித்தனர்.
பீச்சாங்கரை அருகே இருந்த வாஸ்கோடகாமா நினைவிடம் நாங்கள் போன நேரம் மூடிவிட்டனர். வெளியே நின்று சில படங்கள் எடுத்துக் கொண்டோம்.
பீச்சாங்கரையில் நுழையும் போதே மீன் “வாச்சம்“ அடித்து விரட்டியது. மிகவும் சிறிய பீச் தான். ஒரே ஒரு சிறு இடத்தில் தான் தண்ணீரில் கால் வைக்க முடிகிறது. அங்கேயும் கிளிஞ்சல்களாக கிடந்ததால் நான் இறங்கவே இல்லை.
எல்லோரும் டீ டீ என்று கேட்டதால் அங்கே ஒரு கண்றாவி தேனீரை வாங்கி கீழே ஊற்றினோம்.
சீக்கிரமே கிளம்பி ஆழ்ந்த நித்திரையில் இருந்த டிரைவரை எழுப்பி ஓட்டலுக்கு திரும்பலாம் என்றோம். நன்றாக அலைந்து திரிந்த காரணத்தினால் அனைவருக்கும் சரியான பசி.
டிரைவர் மீண்டும் எர்ணாகுளத்துக்கு சடங்கு சுற்றிவிடக் கூடாதே என்கிற பயத்தில் நானே மேப் ஓப்பன் செய்து கொண்டேன். எல்லோருக்கும் பயங்கர பசி என்பதால் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரும் அருகே இருப்பவரை கடித்து வைத்துவிடும் அபாயம் இருந்ததை மறுப்பதற்கு இல்லை.
மறுபடியும் இரவு உணவுக்கு பேக் டு பேக் டு பேக் இன் ரெஸ்டாரண்ட். காலையில் மெனு கார்ட் கொடுக்காத காரணத்தினால் அனைவரும் சாப்பாட்டு மேசையில் அம்பியாக சமர்த்தாக சாப்பிட்டார்கள். தற்போது மெனு கார்ட் கொடுத்தவுடன் சித்து, சாரதி, அருண் மூவரும் மெனு கார்டில் அந்நியனாக பாய்ந்தனர். ஆளாளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்யவும் எனக்கு லேசாக வயிற்றை கலக்கியது. ஆனாலும் பில் 1200 க்குள் தான் வந்தது.
சித்து, சாரதி மற்றும் அருண் மூவரும் தனி அறை. நள்ளிரவு வரை சிஎஸ்கே, ஆர்சிபி மேட்ச் பார்த்துவிட்டு கண்ணீர் மல்க உறங்கச் சென்றனர். நானெல்லாம் படுத்த மாத்திரத்தில் நித்திரை தழுவிக் கொண்டது.
Monday, May 27, 2024
அந்த அரபிக் கடலோரம் 2
அந்த அரபிக் கடலோரம் -2
அனைத்து சாலைகளும் திருச்சி நோக்கி
நாங்கள் சுற்றுலாவுக்கு எர்ணாகுளம் செல்ல புக் செய்தது காரைக்கால் டு எர்ணாகுளம் விரைவு வண்டி. அரியலூருக்கும் அந்த ரயிலுக்கும் ஒட்டும் கிடையாது ஒறவும் கிடையாது. ஆகவே திருச்சியிலிருந்து புக் பண்ணி இருந்தோம்.
இப்போ சிக்கல் என்னவென்றால் அனைத்து நபர்களையும் திருச்சியில் சரியாக எட்டு மணிக்குள் அசெம்பிள் செய்தால் தான் எர்ணாகுளம் ரயிலை பிடிக்க இயலும்.
அருண், அகிலா மற்றும் நான் மூவரும் அரியலூர் காரர்கள் சித்தார்த் சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக அரியலூர் ஏற்கனவே வந்திருந்தான். ஆக நாங்கள் நான்குபேரும் மாலை ஐந்தரை மணி வைகை எக்ஸ்பிரஸ் பிடித்து திருச்சி செல்வதாக திட்டமிட்டுக் கொண்டோம்.
அகிலாவின் அக்கா கயல்விழி அதாவது சித்துவின் அம்மா சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ்ஸை சரியான நேரத்தில் பிடிக்க வேண்டும். அந்த விஷயம் தான் வயிற்றில் கிலோ கணக்கில் புளியை கரைத்தது. காரணம்? ( ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் போய்ட்டு வந்துடலாம்)
ஏதோ ஒரு தொடர்விடுமுறை சமயம் அருணையும் அகிலாவையும் சென்னையில் விட்டுவிட்டு பணிநிமித்தம் நான் அடுத்தநாளே மாலை பல்லவன் விரைவு வண்டியை பிடித்து அரியலூர் வரவேண்டும்.
“ஏங்க, கயலக்கா வெஜிடபிள் பிரியாணி செய்யுறதில் எக்ஸ்பர்ட், அதனால மதியம் சாப்பிட்டுவிட்டு ட்ரெயினுக்கு கிளம்புங்க சரியா இருக்கும்“ என்றார் எனது இணையர் அகிலா.
சுவையான வெஜிடபிள் பிரியாணியை கடைசியாக பாரதிதாசன் பல்கலைக் கழக விடுதியில் சாப்பிட்டது. எனவே அகிலா வெஜிடபிள் பிரியாணி என்று சொன்ன மாத்திரத்தில் நாவில் எச்சில் பெருகி தரையில் வீழ்ந்து உருண்டது.
ஏற்கனவே சிரத்தையுடன் செய்பவர் தான் கயல் அண்ணி, அகிலா வேறு எக்ஸ்பர்ட் என்று உசுப்பிவிட்டதால் டபுள் சிரத்தையோடு கிச்சனுக்குள் புகுந்தார். கற்றுக் கொண்ட அத்தனை வித்தைகளையும் பிரியாணியில் காண்பிக்க தயாரானார
அப்போது இந்திராநகர் CPWD QUARTERS ல் இருந்தார்கள். எதிர் வரிசை கடைகளில் காய்கறி மளிகை சாமான்களை சித்து மூட்டை கட்டி வாங்கி வந்தான்.
காலையில் பத்து மணிக்கு துவங்கிய வேலை ஒரு மணிக்கு கேரட் நறுக்கும் அளவுக்கே வளர்ந்து இருந்தது.
ஒன்று முப்பதுக்கு தலையை நீட்டினால் அங்கே புதினா இலையை அலசிக் கொண்டு இருந்தார்.
இனிமேல் இது நமக்கில்லை என்று உமிழ்நீரை உள்ளே தள்ளி பூட்டிவிட்டு எக்மோருக்கு ஊபர் கேப் புக் பண்ணிவிட்டேன்.
விழுப்புரம் தாண்டும் வேளையில் தான் அங்கே வெஜிடபிள் பிரியாணி டேபிளுக்கு வந்திருந்ததாக அகிலா தொலைபேசினார்.
ஃப்ளாஷ்பேக் முடிந்தது. எங்கள் அனைவருக்கும் இரவு உணவை வீட்டிலேயே செய்து எடுத்து வருகிறேன் என்று கிச்சனுக்குள் வன்முறையைத் துவங்கிவிடுவாறோ என்கிற பயத்தில் தான் நாங்கள் கலவரமடைந்தோம்.
இறுதியாக கயல் அண்ணி தாம்பரத்தில் சரியான நேரத்தில் ரயிலைப் பிடித்து எங்கள் வயிற்றில் ஆவின் பாலை ஆறவைத்து வார்த்தார்.
நான் பயணத்தின் போது சாப்பாட்டிற்காக பெரிதாக ஒன்றும் மெனக்கெட மாட்டேன். ரயில் நிலையங்களிலோ அல்லது ரயில் பேண்ட்ரியிலோ வாங்கி வயிற்றை நிறைத்துக் கொள்வேன். எனது வயிறும் சமர்த்துப் பிள்ளையாக எதைப் போட்டாலும் செரித்து விடும்.
கயல் அண்ணிக்கு அடுத்ததாக லதா அக்காவும் கடைகளில் சாப்பிட விரும்ப மாட்டார். எனவே எட்டு பேருக்கும் பெரம்பலூரில் வீட்டிலேயே தோசை சட்னி பொடி என்று ஏகத்துக்கு தயார் செய்ய துவங்கிவிட்டார்.
நாங்கள் அரியலூரில் வைகையை பிடித்த போது லதா அக்கா, அன்பழகன் மாமா மற்றும் சாரதி பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் நெரிசலாக இருக்கிறது என்று ஒவ்வொரு திருச்சி பேருந்தையும் விட்டுக் கொண்டே நின்றிருக்கிறார்கள்.
சரியாக ஏழறை மணிக்கெல்லாம் திருச்சியை அடைந்து விட்டோம். அவர்கள் மூவரும் அப்போதுதான் மெயின்காட்கேட்டை நெருங்கினார்கள். சரியாக முப்பது நிமிடத்திற்குள் திருச்சி ஜங்ஷனை அடைய வேண்டும்.
எர்ணாகுளம் ரயிலின் ரன்னிங் ஸ்டேட்டஸ் பார்த்தால் இன்றைக்கு பார்த்து எள்முனையளவும் தாமதமின்றி ஜப்பான் காரன் மாதிரி சரியான நேரத்திற்கு வந்து கொண்டு இருந்தது.
ஏழு முப்பத்தி ஐந்துக்கு அவர்களுக்கு போன் பண்ணினால், “மாப்ள, தோ இப்பதான் இறங்க போறோம், பஸ்பிடித்து வந்துடுறோம்“ என்றார் மாமா.
“மாமா இன்னும் அரை மணி நேரத்தில் ரயில் வந்துவிடும், அப்படியே ஆட்டோ பிடித்து வேகமாக வந்து விடுங்கள்“ என்றேன்.
நேரம் ஏழு நாற்பத்தி ஐந்து. அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. நடைமேடையில் வேறு அறிவிப்பு செய்ய துவங்கிவிட்டார்கள்.
“ஏங்க, ஒன் பாத்ரூம் போகணும்” இது அகிலா. மனதிற்குள் எவ்வளவு கொலைவெறி ஆகியிருப்பேன் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
ரயில் நிலையத்துக்கு வெளியேதான் கழிவறை இருந்தது. கழிவறை சென்று திரும்பிய போது ஏழு ஐம்பத்தி ஐந்து.
“மாமா, ஏ2பி பக்கத்தில் நிக்கிறோம் எங்க வரணும்?“ என்று சாரதி அழைத்த போதுதான் மனது ஆசுவாசம் அடைந்தது.
இரண்டு முறை தனித்தனியே தட்கலில் டிக்கெட் போட்டதால் நான்கு பேருக்கு எஸ்1, மூன்று பேருக்கு எஸ்3, ஒருவருக்கு எஸ்4 என்று தனித்தனியே பிரித்து தான் கிடைத்தது.
“ஏங்க, இங்க எஸ்1 க்கு வாங்க, டிடிஆர் சாரதிக்கு ப்ரூஃப் கேக்குறாங்க” என்று அகிலா அழைத்தார். எனது பெட்டியில் வந்த டிடிஆர் பெயரைக் கேட்டதோடு சரி. அவங்க டிடிஆர் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் போல.
சாரதி ஆதார் எடுத்து வர மறந்துவிட்டான். ராமு மாமாவுக்கு போன் பண்ணி வாட்சாப்பில் அனுப்பக் கூறினோம். மொபைலில் காண்பித்ததை ஏற்க மறுத்து கோபித்துக் கொண்டு போய்விட்டார். இறங்குவதற்குள் இ ஆதார் டவுன்லோட் செய்து காண்பிக்கிறேன் மேடம் என்று கூறிவிட்டு அமைதியாக திரும்பிவிட்டேன்.
இந்த அருணும் சாரதியும் காற்று வரவில்லை என்று கழிவறை அருகில் இருந்து வாசல் புறம் இருந்தார்கள். நான் பையை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கிவிட்டேன்.
காலையில் கண்விழித்த போது கொச்சி ஏர்போர்ட்டின் பரந்து விரிந்த பகுதி கடந்து போய்க்கொண்டு இருந்தது.
இறங்கியவுடன் ஆட்டோவுக்கு விசாரித்தேன். ”நீங்க சொல்ற ஓட்டல் அடுத்த இரண்டாவது ரைட்டில் தான் இருக்கு நடந்தே போயிடுங்க“ என்று கூறிவிட்டார் அந்த ஆட்டோ டிரைவர்.
தூக்க கலக்கத்தில் ஒரு வாக்கிங் போல லக்கேஜ் எல்லாவற்றையும் இழுத்து பறித்துக் கொண்டு நடக்க வைத்து தங்கும் விடுதிக்கு அழைத்து வந்து விட்டேன்.
முதல்நாளே புக்கிங் டாட் காம் தளத்தில் செக் இன் டைம் காலை ஏழு மணி என்று வலியுறுத்தி கூறி இருந்ததால் மூன்று அறைகள் தயாராக இருந்தன.
தூய்மையான விசாலமான அறைகள். மிகவும் தூய்மையான கழிவறைகள். மினரல் வாட்டரைவிட வாஷ் பேசின் வாட்டர் மிகுந்த சுவையாக இருந்தது.
காலையிலேயே ரிசப்ஷனில் காருக்கு கேட்டிருந்தேன். ஒன்பதரைக்கு எல்லாம் கார் வந்து விட்டது.
இனி எர்ணாகுளம் பயண அனுபவங்கள் தான்.
அந்த அரபிக் கடலோரம் -1
"அந்த அரபிக் கடலோரம்…" -1
முன் பயணத்திட்டம்
ஜனவரி மாதம் நான் திருவனந்தபுரம் பயிற்சிக்காக போனதில் இருந்தே எனது மகனும் மனைவியும் எங்களையும் அங்கே சுற்றுலா கூட்டிக் கொண்டு போயே ஆகவேண்டும் என்று ஐந்து மாதகாலமாக ஒற்றைக் காலில் நின்று கொண்டு இருந்தார்கள்.
பிரச்சனை என்னவென்றால் நான் திருவனந்தபுரத்தை மூன்று நாட்கள் தங்கி இருந்து பார்த்து முடித்தாயிற்று. கன்னியாகுமரியும் குடும்பத்தோடு போய் வந்தாச்சு. ஆக ஒரு மூன்று நாட்கள் பயணத்திட்டம் என்றாலும் அதற்கேற்றாற்போல புதிய இடங்களை பார்த்து வருவது போல திட்டமிட வேண்டும்.
எங்களோடு எனது இணையரின் அக்கா கயல்விழி மற்றும் மகன் சித்தார்த்தன் என்கிற சித்து(கணினி பொறியியலாளர்) வருவார்கள். அப்புறம் லதா அக்கா அவரது இணையர் அன்பழகன் மாமா (இருவரும் ஆசிரியர்கள்) நிச்சயமாக இணைவார்கள். இந்த குழு எங்களின் வழக்கமான ”டூரிணையர்கள்”
மார்ச் மாத இறுதியில் மே மாதம் வரட்டும் உங்களை நிச்சயமாக அழைத்துச் செல்கிறேன். இடம் மட்டும் திருவனந்தபுரம் இல்லை கோழிக்கோடு மற்றும் வயநாடு என்று சொல்லி வைத்தேன்.
ஏப்ரல் மாத வாக்கில் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்த போது “உண்மையை சொல்லுங்க இந்த வருடம் டூர் போறோமா இல்லையா?” என்று கழுத்தில் கத்தி வைத்துவிட்டார்கள். அப்போது தப்பிப்பதற்காக பாலக்காடு கோயம்புத்தூர் என்று சொல்லி வைத்தேன்.
பள்ளி முடிந்தது, பள்ளியின் 6-9 மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை தயார் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் கூட்டத்தில் சமர்ப்பித்தேன்.
மே மாதம் ஆறு தேதி கரைந்து போனது. அடுத்த நான்கு நாட்களில் பத்தாம் வகுப்பு ரிசல்ட்.
அப்படின்னா மார்க் ஷீட் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும், டிசி தயார் செய்ய வேண்டும். ஆக மே மாதம் 13 தேதிகள் கரைந்தோடி விட்டன.
சரி 18-21 தேதிகளில் செல்லலாம் என்று முடிவு செய்தாகி விட்டது. “போகணும்னு தோணறது ஆனா எங்க போகணும்னு இன்னும் முடிவாகலையே” என்று தங்கப்பதக்கம் ஜுனியர் சிவாஜி கணக்காக கண்ணைக் கசக்கி யோசித்துக் கொண்டே இருந்தேன்.
சரி கொச்சி – எர்ணாகுளம் – ஆலப்புழா போய்விடலாம், கடல், பேக்வாட்டர்ஸ், படகு சவாரி என்று என்ஜாய் பண்ணலாம் என்று முடிவு செய்து விட்டோம். மைத்துனர் மகன் சாரதியும் (அருணின் வயதொத்தவர்) பயணத்தில் இணைந்தார்.
குகனோடு ஐவர் ஆனோம் என்பது போல சாரதியோடு எண்வர் ஆனோம். ஆமாம் மொத்தம் எட்டு பேர்.
தங்குமிடம் குறித்து அலசி ஆராய ஏராளமான ஆப்(பு)கள் இருக்கின்றன. நான் கூகுளாண்டவரிடம் வினவினால் அவரோ ஒரே இடத்தை ஆப்வாரியான ரேட்டோடு காட்டிக் கொடுத்தார். புக்கிங் டாட் காம் ல் குறைவாக காட்டியதால் அவர்களை அணுகி மூன்று தங்கும் அறைகளை பதிவு செய்து கொண்டேன். மூன்று நாட்களுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் காட்டியது. பணம் எல்லாம் நேரில் கட்டிக் கொள்கிறேன் என்று கறாராக கூறிவிட்டேன்.
ஆனால் ஐஆர்சிடிசி ஆப்பில் எவ்வளவு தேய் தேய்த்து பார்த்தாலும் ஒரு டிக்கெட்டும் அகப்படவில்லை. ஆக 17ம் தேதி காலை பதினோறு மணிக்கு தட்கல் ரேஸ் ஓடியாகவேண்டும்.
விடுமுறை தினங்கள் போன்ற பிசியான பயண நாட்களில் ஐஆர்சிடிசி யில் தட்கலில் உள்ள டிக்கெட்டுகளை கைப்பற்றுபவர்கள் அந்தக் கால திருச்சி மாரீஸ் 70 எம்எம் தியேட்டரில் ஐந்து ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட்டை எடுப்பவருக்கு நிகரான சாமர்த்தியசாலிகள்.
நான் அந்த டிக்கெட்டை பலமுறை கைப்பற்றி உள்ளேன். ஆக அந்த ரேசுக்கு நான் முற்றிலும் தகுதியானவன் தான்.
கூகுளாண்டவர் உதவியுடன் இடங்களையும் தெளிவாக தேர்வு செய்துவிட்டேன். முதல் நாள் எர்ணாகுளம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். இரண்டாம் நாள் ஆலப்புழா பேக்வாட்டர்ஸ் படகு சவாரி மற்றும் பீச். மூன்றாம் நாள் கொச்சி எர்ணாகுளத்தில் மீதமுள்ள இடங்களைப் பார்த்து விட்டு லுலுமாலில் “வேடிக்கை மட்டும்“ பார்த்துவிட்டு கிளம்புவதாக திட்டம் போட்டாயிற்று.
முதலில் இடங்களை அடையாளமிட்டுக் கொண்டு குறித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு இடத்திற்கும் இடையேயான தொலைவுகளை கூகுள் மேப் துணையோடு பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மேப்பை பார்த்தால் போதும் எங்கிருந்து எங்கே எப்படி என்பதை பயண நாளில் நமது எண்வர் குழு கிளம்பும் வேகத்துக்கு ஏற்ப தீர்மானித்துக் கொள்ளலாம்.
ஆனாலும் மனதில் ஒரு உத்தேச திட்டத்தை வகுத்து நோட்பேட் ஆப்பில் குறித்துக் கொண்டுவிட்டேன்.
பதினேழாம் தேதி பத்து மணிக்கெல்லாம் போன், லேப்டாப் எல்லாவற்றிலும் சார்ஜ் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்டு பத்தே முக்காலுக்கெல்லாம் சித்து போன் மற்றும் என்னுடைய போன் லேப்டாப் என்று ரெடி பண்ணி அமர்ந்து விட்டோம்.
தட்கலில் ஒரே ஐடிக்கு எட்டு டிக்கெட் எடுக்க இயலாது. எனவே சித்து நான்கு டிக்கெட் நான் நான்கு டிக்கெட் எடுப்பது என்று தீர்மானித்து பெயர் வயது என குறித்துக் கொண்டும் பிரித்துக் கொண்டும் அமர்ந்தோம்.
பதினோறு மணிக்கு எனது போனில் ஐஆர்சிடிசி ஆப் ”சுத்திச் சுத்தி வந்தீக….” என்று கைவிட்டது. உடனே லேப்டாப்பில் பிரௌசரில் ஏற்கனவே இட்டு வைத்திருந்து ஐஆர்சிடிசி போர்ட்டலை ரீலோட் செய்தேன். என்ன ஆச்சரியம் உடனே உள்ளே போய்விட்டது.
உள்ளே புகுந்து மடமடவென்று நான்கு டிக்கெட்டுகளை போட்டு விட்டு சித்துவைக் கேட்டால் “சித்தப்பா என்னோட போன் இன்னும் சுத்திக்கிட்டே தான் இருக்கு என்றான். அதே படம் அதே பாடல் “சுத்திச் சுத்தி வந்தீக…”
சரி மறுபடியும் லேப்டாப்பில் டிக்கெட் நிலவரத்தை பார்த்தால் வெய்ட்டிங் லிஸ்ட் 29 என்று காட்டியது. நிலவரம் கலவரமாகிப் போனது.
இப்போ என்ன செய்வது. டிக்கெட் கிடைக்காத நான்கு பேருமே நீண்ட நேர பேருந்து பயண ஒவ்வாமை உடையவர்கள். பயணத்திட்டத்தையே ஒத்திவைத்துவிடலாமா என்று அவநம்பிக்கையாக யோசித்தபோது தான் ஒரு பளீர் மின்னல் வெட்டியது.
"Premium Tadkal"- ப்ரீமியம் தட்கலை சற்று எட்டிப் பார்த்தால் என்ன என்று உள்ளே சென்று எட்டிப் பார்த்தால் 27 டிக்கெட்டுகள் கெட்டியாக இருந்தன.
“எலேய் சம்முவம் உட்றா ப்ரீமியம் தட்கலுக்கு வண்டிய…“ என்று பாய்ந்தேன்.
தட்கல் நானூறு என்றால் ப்ரீமியம் தட்கல் தொள்ளாயிரம் ரூபாய். “கைபுள்ள விட்றாதடா, வேற வழியில்ல நமக்கு டிக்கட்டப் போடு பேசிக்கலாம்” என்று அசரீரி ஒலித்தது. டக்கென்று தட்டி புக் செய்துவிட்டேன்.
ஆக லாட்ஜில் ரூம் ரெடி, பயணத்திற்கு டிக்கெட் ரெடி ஆட்களும் அவரவர் இடங்களில் இருந்து திருச்சியில் ரயில் கிளம்பும் நேரமான இரவு எட்டு மணிக்கு வருவதற்கும் ரெடி.
ஆகா, பயணத்திட்டம் இவ்வளவு சுளுவா முடிந்துவிட்டதே என்று ஆசுவாசம் அடைந்தேன். ஆனால் அடுத்தநாள் அசம்பிள் ஆவதில் இவ்வளவு இழுபறி ஆகும் என்று நினைக்கவே இல்லை. என்ன இழுபறி?! வெயிட் அன்ட் சீ இன் தி நெக்ஸ்ட் எபிசோட்.
Subscribe to:
Posts (Atom)
Hichiki - Hindi movie(2018)
Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...
-
லால்குடி டேஸ்-21 ”இஸ்திரி பெட்டி” மீசையும் ஆசையும் அரும்பும் பருவத்தில் ஆண்கள் தங்களை கம்பீரமாக காண்பித்துக் கொள்ள மிகுந்த அக்கரை...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...








