Tuesday, May 27, 2025
From the Ashes -Saudi Arabian movie
From the Ashes -Saudi Arabian movie
கும்பகோணத்தில் நடந்த பள்ளி தீ விபத்தில் 90க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் வெளியேற வழி இன்றி தீயில் கருகி இறந்து போன விஷயத்தை நாம் மறக்க முடியாது.
அதுபோன்ற ஒரு தீ விபத்தை மையமாக கொண்டு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகள் அந்த நாட்டின் கலாச்சார கெடுபிடிகள் குழந்தைகள் மீது பெற்றோர்கள் கல்வி சார்ந்து கொடுக்கும் அழுத்தங்கள் போன்ற பல விஷயங்களை பேசும் திரைப்படம் தான் இந்த From The Ashes.
Secondary school 2300 இதுதான் அந்தப் பள்ளியின் பெயர். அது பெண்கள் மட்டுமே படிக்கக்கூடிய ஒரு பள்ளி.
கைகள் உட்பட முழு உடலையும் மறைக்கும் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் இதனை கண்காணிக்கவேறு கலாச்சார காவலர்கள் இருக்கிறார்கள். மாணவர்கள் அனைவரும் உள்ளே வந்த பிறகு வாட்ச் மேனால் பள்ளி வெளிப்புறமாக பூட்டப்படுகிறது.
பள்ளியில் படிப்பு நல்லொழுக்கம் இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை மாதா மாதம் ஹானர் செய்கிறார்கள். அந்த அடிப்படையில் மாணவி அம்ரீன் சையத் ஒவ்வொரு மாதமும் அந்த பெருமையை பெறுகிறார்.
அதே பள்ளியில் பள்ளி முதல்வரின் பெண் ராணா இரண்டாமிடத்தில் இருந்து வருகிறார். பள்ளி முதல்வருக்கு அது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. முதலிடத்தை பிடிப்பதற்கும் அம்ரின் போல சிறந்த மாணவி பட்டம் பெறுவதற்கும் ராணாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் .
மேலும் பள்ளியின் முதல்வர் தனது கணவருடன் விவாகரத்து வழக்கை நடத்திக் கொண்டு இருக்கிறார். குழந்தை ராணாவை தந்தை இடம் காண்பிக்கவே மாட்டேன் என்பதில் பிடிவாதமாகவும் இருக்கிறார்.
ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கும் குறும்பு கேங் போல இந்த பள்ளியிலும் மூன்று பேர் இருக்கிறார்கள் ஹேமா, மோனா மற்றும் மிஷல்.
பதின்பருவ குழந்தைகளுக்கு விதிக்கப்படும் அதீத கட்டுப்பாடு என்பது பிரஷர் குக்கர் போன்றது தான் சமயம் வாய்க்கும் போது வெடித்து வெளியேறிவிடும்.
தனிப்பட்ட முறையில் எனக்கு எப்போதுமே ஆண்கள் பள்ளி பெண்கள் பள்ளி என தனித்தனியே பள்ளிகளை நடத்துவதில் உடன்பாடு கிடையாது. அனைத்து பள்ளிகளுக்கு ஆண் பெண் இருவரும் படிக்கக்கூடிய இருபாலர் பள்ளிகளாக இருப்பது ஆரோக்கியமான இளைய சமுதாயத்துக்கு வழிவகுக்கும்.
சேர்ந்து படித்தாலே பேசினாலே இழுத்துக் கொண்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் என்கிற அதீத கற்பனை காரணமாக நிறையபேர் சின்னத்தம்பி பட அண்ணன்மார்கள் போலவே அலைகிறார்கள்.
ஒரு சுரங்க பாதையில் அழைத்துச் செல்வது போல குழந்தைகளை கைப்பிடித்து வேற்று ஆண்களின் பார்வை படாத வண்ணம் சிறுவயதிலிருந்தே பெண்கள் பள்ளி பெண்கள் கல்லூரி என்று பார்த்து பார்த்து வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் வேலைக்கு செல்லும் போதோ அல்லது வேறு ஏதேனும் சூழலிலோ ஆண்களோடு கலந்து பேசும்போது அந்த உறவை எப்படி பேணுவது என்று அறியாமல் இருக்கிறார்கள்.
அவர்கள் பார்த்ததெல்லாம் அவர்களது அண்ணன்மார்கள் மாமன் மார்கள் என்ற நம்பகமான நெருங்கிய வட்ட ஆண்கள். எனவே வேற்று ஆண்கள் அவர்களை அணுகும் போது அவர்களைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இருப்பதில்லை.
படத்தில் வரும் இந்த பள்ளியிலும் கட்டுப்பாடுகள் கட்டுக்கடங்காமல் விதிக்கப்படுகின்றன ஆனாலும் கூட அந்த குழந்தைகள் சிகரெட் பிடித்தல் உள்ளிட்ட ஏராளமான விதிமீறல்களை பள்ளி வளாகத்திலேயே செய்கிறார்கள்.
மாணவிகளிடமிருந்து சூயிங்கமோ அல்லது சிகிரட்டோ பறிமுதல் செய்யும் ஆசிரியர்கள் உடனடியாக மறைவிடம் ஏகி அதை துய்த்துப் பார்க்கத்தான் தலைபடுகிறார்கள்.
பள்ளியில் ஒரு குறிப்பிட்ட மாணவனை திரும்பத் திரும்ப முன்னிருத்துவது என்பது அவனுடைய வகுப்பில் அவனை தனிமைப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்பதை நான் பலமுறை கவனித்துள்ளேன். எனவே தேவைக்கு அதிகமாக ஒரு குறிப்பிட்ட மாணவர்களை அடிக்கடி முன்னிலைப்படுத்துதல் என்பது சரியாக இருக்காது.
ஆசிரியர்களை பாராட்டும் போது கூட எந்த ஒரு தனி ஆசிரியரின் சிறப்பான செயல்பாடுகளையும் உயர்த்தி பிடித்து பாராட்டுவது ஆசிரியர்களிடம் பிளவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் ஒட்டுமொத்தமாக பொதுப்படையாகவே பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
அடிக்கடி சிறந்த மாணவிக்கான விருது வாங்குவதாலும் அனைத்து செயல்பாடுகளிலும் முன்னிலை வகிப்பதாலும் இந்த படத்திலும் அப்படித்தான் அம்ரீன் சையது தனது வகுப்பில் பிற மாணவிகளின் பகையை சம்பாதித்துக் கொள்கிறாள்.
இந்தப் படத்தில் கவனித்த மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆண்களின் படங்களை ஆல்பமாக ஒட்டி வைத்து இருக்கிறார் பள்ளியின் துப்புரவு தொழிலாளி. அவரிடம் காசு அல்லது பொருள் கொடுத்து அந்த படங்களை பார்ப்பதை மாணவிகள் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியாமல் செய்கிறார்கள். இந்த விஷயம் எனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியது.
கதைக்கு வருவோம்: ஒரு நாள் அம்ரீன் தனது கணக்கு பாட புத்தகத்தை காணவில்லை என்று ஸ்டோர் ரூமில் இருந்து வேறு ஒரு பாட புத்தகம் எடுப்பதற்காக வருகிறாள். அப்போது கதவு வெளிப்புறமாக பூட்டப்படுகிறது. பதட்டத்தில் தடுமாறி விழுந்து மயக்கமாகி விடுகிறாள்.
அந்த சமயத்தில் பள்ளியில் தீ பற்றி பரவுகிறது. மாணவிகள் அனைவரும் வகுப்புகளில் இருந்து வெளியேறி மெயின் கேட் போகிறார்கள் அது வெளிப்புறமாக பூட்டப்பட்டிருக்கிறது.
துறையின் அனுமதியை பெற்று தீயணைப்பு துறைக்கும் ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்கிறார்கள். பள்ளிக் காவலாளி பள்ளியை பூட்டிவிட்டு எங்கேயோ சென்று விடுகிறார். தீயுடன் புகையும் ஏராளமாக பரவுவதால் மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
பள்ளியின் முதல்வர் தனது விவாகரத்து வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார். பள்ளியில் துணை முதல்வர் மாணவிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்ற படாதபாடு படுகிறார்.
வெளியே கதவும் பூட்டப்பட்டு இருப்பதால் கையறு நிலையில் நிற்கிறார். அது சமயம் மாடியில் கதவை திறந்து விடலாம் என்று போராடி சாவியை கண்டுபிடித்து எடுத்து மாடி கதவை திறந்து மேல் மடியில் இருந்த மாணவிகளை மொட்டை மாடிக்கு அனுப்பி காப்பாற்றி விட்டு மூச்சுத் திணறால் உயிர் துறக்கிறார். ஸ்டோர் ரூமில் பூட்டப்பட்டு கிடந்த அம்ரீனும் இறந்து போகிறாள்.
தீ விபத்துக்கு காரணமானவர் யார் அம்ரினை ஸ்டோர் ரூமில் பூட்டியது யார் என்கிற கேள்விகளோடு படம் பயணித்து அதிர்ச்சிகரமான திருப்பத்தில் முடிவடைகிறது.
இந்த படத்தில் தீ விபத்து காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்து இருப்பார்கள் பார்க்கும் நமக்கே மூச்சு திணறல் ஏற்பட்டு விடும்.
மாணவிகள் தீ விபத்தில் இருந்து வெளியேறும் போது கூட அவர்களின் ஹிஜாப் மூடாமல் இருப்பது பற்றியே அங்கே இருக்கும் ஆண்கள் கவலைப்படுகிறார்கள். தீ காயத்தோடு அங்கங்கே அமர்ந்து அழுது கொண்டிருக்கும் மாணவிகள் அருகே அவர்களது தந்தையர் வந்து தனது தலையில் போர்த்தியிருக்கும் துணியை எடுத்து அந்த மாணவிகள் தலையில் போட்டு மூடுகிறார்கள்.
மத அடிப்படைவாதங்கள் என்பவை எவ்வளவு பிற்போக்குத்தனமானவை என்பதையும் பெண்கள் மீதான ஒடுக்கு முறையை மிகக் கடுமையாக கடைப்பிடிப்பதற்கு மத அடிப்படை வாதமே காரணம் என்பதையும் இந்த படத்தில் காணலாம்.
படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.
Wednesday, May 21, 2025
நானே “நானோ“-2 வரலாறு முக்கியம் அமைச்சரே!!
சென்ற அத்தியாயத்தில் நானோ டெக்னாலஜியின் சாத்தியங்கள், நானோ மீட்டர் என்றால் எவ்வளவு சைஸ் என்று ஓவர் பில்டப் கொடுத்து ஒரு ட்ரெய்லர் ஓட்டி மெயின் பிச்சர் வந்து கிட்டு இருக்குன்னு சொல்லியிருந்தேன்.
இந்த கட்டுரையின் நோக்கமானது அறிவியல் தொழில்நுட்பம் என்றாலே அலறி அடித்து ஓட்டம் பிடிப்பவர்களையும் துரத்திப் பிடித்து அவர்களும் கேட்கும் வண்ணம் இதனை வழங்குவது தான்.
ஆகையால் அதிக அளவில் ஆழ்ந்த அறிவியல் விஷயங்களை தவிர்த்து விடலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இந்த அத்தியாயத்திற்கான சோர்ஸ் கன்டென்ட் படித்து விட்டு பிளந்த வாயை இன்னும் என்னால் மூட இயலவில்லை.
நானோ டெக்னாலஜியின் ஆரம்ப விதை பற்றியது இது. இந்த விதையை ஊன்றியவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரிச்சர்ட் பி.ஃபேயின்மான்.
விதையை ஊன்றியது 1959 டிசம்பர் மாதம்.
அமெரிக்காவில் இயற்பியல் விஞ்ஞானிகள் நிறைந்த அவை ஒன்றில் அவர் நிகழ்த்திய உரையில் அவர் அள்ளித் தெளித்த தகவல்கள் யாவும் பிரமிக்கத் தக்கவை. அவர் வாயில் இருந்து வந்த ஒரு வாக்கியத்தை வாங்கி வந்து ஆய்வு செய்து நாம் ஒரு பி.எச்டி பெற்று விடலாம். ஒரு பெரிய ஆய்வுக்கான சுரங்கத்தை திறந்து காண்பித்திருப்பார்.
”நான் ஈ” படத்தில் சமந்தா பாத்தீங்களா?
”ஆமாம் கொள்ளை அழகு”
”ஆமாம் நீங்க அழக மட்டும் தான் பாத்தீங்க, நான் அறிவியல் மனப்பான்மையோடு அவர் செய்யும் வேலையை பார்த்தேன்”
”என்ன வேலை செய்யுறாங்க?”
“பென்சில் முனையில் சிற்ப வேலை செய்வாங்க”
”இத நெறய பேரு செய்வாங்களே. செய்தித்தாளில் கூட பாத்துருக்கலாமே”
’நமக்கு சமந்தா செய்தது மட்டும் தான் மனசுல நிக்குது’
ஜோக்ஸ் அபார்ட். ஃபேயின்மான் அவர்களில் பேச்சின் தலைப்பு ”There is Plenty of Room at the Bottom”. (அங்கே அடியில் ஏராளமாக இடம் உள்ளது ம்ம்.. சரியா டிரான்ஸ்லேட் பண்ணிட்டேனா?)
அவர் ஏதோ லாட்ஜ் மாடியில் நின்று கொண்டு ரூம் கேட்டு வந்தவர்களுக்கு சொன்ன பதில் போல உள்ளதா? சரி போகப் போக பெயர்க் காரணம் புரியும்.
“என்சைக்ளோபீடியாவின் 24 பாகங்கள் அடங்கிய புத்தகத்தை (அப்போது அது தான் ஆகப் பெரிய புத்தகம், இப்போது சி.டி வடிவில் சுருங்கி விட்டது) ஒரு குண்டூசி முனையில் எழுதினால் என்ன?” என்று கேள்வி கேட்டு அரங்கத்தை வியப்பில் ஆழ்த்துகிறார்.
குண்டூசி முனை ஒரு இஞ்ச் ல் பதினாறில் ஒரு பாகம் அதனை 25000 மடங்கு உருப் பெருக்கினால் அதன் பரப்பு என்சைக்ளோபீடியாவின் ஒட்டு மொத்த புத்தகங்களின் பக்கங்களின் பரப்பளவுக்கு சமம் என்று கணக்கிட்டு சொல்கிறார்.
அடுத்து உலக நூலகங்களில் உள்ள புத்தகங்களை எல்லாம் கணக்கிட்டு அதனை எழுதுவதற்கு ஒரு சூத்திரம் சொல்கிறார். அணுக்களை கொண்டு எழுதலாம் என்கிறார்.
எனவே ”கீழே இடம் உள்ளது என்பது அல்ல ஏராளமான இடம்(plenty of Room) உள்ளது என்பதே அவர் கூறியது”
“ஏம்பா ’சொல்றது சுளுவு செய்யறது இன்னா கஸ்டம் தெரியுமா’ னு நம்ம பாரதியார் சொல்லிருக்காருப்பா”
“அது திருவள்ளுவர்ங்க”
அப்போது இருந்த அறிவியல் தொழில் நுட்பங்களை கொண்டு அவ்வாறு எழுதுவதும் சாத்தியம் படிப்பதும் சாத்தியம் என்று தொழில்நுட்ப ரீதியான விளக்கமும் அளித்துள்ளார்.
எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை ரிவர்சில் மாற்றி பயன் படுத்தி எழுதலாம், அதே மைக்ராஸ்கோப் கொண்டு படிக்கலாம் என்கிறார்.
ஏற்கனவே பெரிதாக இருப்பதை கஷ்டப்பட்டு சுருக்குவானேன், அப்புறம் அதை கஷ்டப்பட்டு படிப்பானேன்? ( “நான் ஏன்டா நடு ராத்திரியில சுடுகாட்டுக்கு போவனும்” னு வடிவேல் கேட்டது போல் கேட்காதீர்கள்.)
இந்த மாதிரியான விசித்திர சிந்தனைதான் ஒரு புதிய அறிவியல் சாத்தியத்திற்கான கதவை திறந்து விட்டுள்ளது.
அடுத்து அப்போது புதிய கண்டுபிடிப்பாக இருந்த கணிப்பொறி பற்றியும் கூறத் தவறவில்லை.
”இப்போது கணினி இரண்டு அறைகளை அடைத்துக் கொண்டு ராட்சசன் போல படுத்துக் கிடக்கிறது. அதன் பாகங்களையும் இணைப்பு வொயர்களையும் 10 முதல் 100 அணுக்களின் அகலத்தில் செய்தால் அதன் அளவு மிகவும் சுருங்கி விடும்” என்கிறார். (இந்த விஷயம் இன்றளவும் கூட சாத்தியப் படவில்லை)
அதன் நினைவுத் திறனை ஒரு ”பிட்” ஐ 5 கன அணு அளவில் பதிவு செய்தால் குறுகிய இடத்தில் ஏராளமான தகவல்களை சேமிக்கலாம். (இதுவும் இன்றளவிலும் இந்த அளவு நுண்ணியதாக சாத்தியப் படவில்லை)
அவரின் கற்பனை நிஜத்திலிருந்து லட்சம் ஒளி ஆண்டு தொலைவில் இருந்தது. ஏனென்றால் அந்த காலத்தில் ஒரு ஃபிளாப்பி டிஸ்க்கையே (1.62 எம்.பி நினைவு திறன்) லாரியில் ஏற்றித் தான் கொண்டு வருவார்கள்.
”விக்கெட் கீப்பிங் க்ளவுஸ் போட்டுக் கொண்டு ஊசியில் நூல் கோர்க்க முடியுமா?” ஆனால் இதைவிடவும் பலநூறு மடங்கு கஷ்டமானது தான் அவர் கூறிய விஷயங்கள்.
அவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தக்க இயந்திரங்களின் போதாமை பற்றி மிகவும் கவலை கொள்கிறார். அப்போது இருந்த எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பின் துல்லியத் தன்மையை 100 மடங்கு மேம்படுத்த வேண்டியுள்ளது என்கிறார்.
அப்படி மேம்படுத்தினால் பல உயிரியல் சார்ந்த பல்வேறு ஆய்வுகளுக்கான வாசல்களை அது திறந்துவிடும் என்றும் கூறுகிறார்.
அடுத்ததாக இன்னுமொரு விபரீத ஆலோசனையையும் வழங்குகிறார். ”swallow the surgeon” என்கிறார்.
”ஆத்தாடி, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரை விழுங்குவதா?”
அதே தான் அறுவை சிகிச்சை செய்யும் வல்லமை படைத்த ஒரு நானோ ரோபாட்டை (சென்ற வாரம் சொன்ன நானோபாட்) விழுங்கி வைத்தோமானால் அது உள்ளே சென்று ”ஆபரேஷன்” செய்து முடித்து “மிஷன் அக்கம்ப்ளிஷ்டு” என்று மெசேஜ் தட்டிவிடும்.
மேலே தரப்பட்ட கருத்துக்கள் யாவுமே கடலில் மிதக்கும் பனிப்பாறையின் நுனி மட்டுமே (Tip of an Iceberg). அவரது உரையின் பி.டி.எஃப் வடிவத்தை இங்கே(க்ளிக்குக)இணைத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துக் கொள்ளுங்கள்.
இன்னும் சுவாரசியமான நானோ டெக்னாலஜி விஷயங்களுடன் அடுத்த எபிசோடில் சந்திக்கலாம்.
Monday, May 19, 2025
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?!!
பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு பணி முடிந்து ஆசிரியர்கள் அனைவரும் சென்று விட்டனர்.
நான் மிச்ச மீதி தபால் வேலைகளை முடித்துக் கொண்டு இருந்தபோது ஒரு பாட்டி வந்தார். வந்து அவரது இரண்டு பேரன்களின் (இரட்டையர்) மதிப்பெண்களை கேட்டார். மார்க் பற்றி பெரிய அளவில் அவருக்கு விவரம் தெரியாது என்றாலும் அவர்களது மார்க்கை (398&413)கூறி "உங்க பேர பசங்க நிறைய மார்க் வாங்கி இருக்காங்க, நல்லா படிச்சிருக்காங்க " என்று பாராட்டினேன்.
உடனே அவரது கண்ணில் கண்ணீர் வழிந்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டே "அப்பா இல்லாத பசங்க சார் அவங்க நல்லா படிச்சிக்கிட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷம்" என்றார்.
"கவலையே படாதீங்க பசங்க ஜோரா படிச்சி பெரிய வேலைக்கு போகப்போறாங்க பாருங்க" என்று நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தேன்
பொது தேர்வுகளில் எடுக்கப்படும் 100% தேர்ச்சி மகிழ்ச்சியை தருவதைக் காட்டிலும் ஒருவரும் விடுபடாமல் அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுதச் செய்து அவரவர் திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களை பெற வைப்பது என்பதே அதிக மகிழ்ச்சியைத் தரும்.
2018 இல் நான் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இன்று வரை மிகவும் சவாலாக விளங்கிய செட் என்றால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு எழுதிய மாணவர்கள்தான்.
அந்த வகுப்புக்கே நாங்கள் செல்ல மாட்டோம் என்று ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பும் அளவுக்கு பெரிய அளவில் ரகளை செய்து விட்டார்கள்.
அடுத்த நாளில் பிரச்சனையின் மையப் புள்ளியாக இருந்த நான்கைந்து மாணவர்களை தனியே அழைத்து கண்டித்து அவர்களிடம் ஒரு மணி நேரம் அளவுக்கு பேசி, ஆசிரியர்கள் அனைவரிடமும் தாங்கள் செய்தது தவறு என்று வருத்தத்தை தெரிவிக்கச் செய்து அதன் பிறகு ஆசிரியர்கள் அனைவரும் "இந்த ஒரு முறை இவர்கள் அனைவரையும் மன்னித்து விடலாம் சார்" என்று கூறி அவர்களாகவே அந்த மாணவர்களை மீண்டும் வகுப்பில் அனுமதித்தார்கள்.
பத்தாம் வகுப்பு வந்த பிறகும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அவர்கள் மீண்டும் ஏராளமான பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டும் பள்ளி பொருட்களை சேதம் செய்து கொண்டும் இருந்தனர்.
அதிலும் ஒரு மாணவனை 15 நாட்கள் சஸ்பென்ட் செய்து ஒரு பெரிய பிரச்சனையை தவிர்த்தோம்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் மிகப்பெரிய புரிதலும் அன்பும் அதிகமாகும் வகுப்புகளில் அற்புதங்கள் நடக்கும். எல்லா மாணவர்களையும் எல்லா ஆசிரியர்களும் பெரும்பாலும் நேசித்தாலும் சில சமயங்களில் மிகப்பெரிய அளவுபாசப்பிணைப்பு
ஏற்படும் செட்டுகள் அமையும்.
அதுபோன்ற சமயங்களில் அவர்களின் கல்வி அடைவு மிகப்பெரிய உச்சத்தை தொடும். எனக்கு அது போல் இரண்டு மூன்று செட்டுகள் அமைந்தன.
இந்த மாணவர்கள் செய்த காரியங்களால் ஆசிரியர்கள் & மாணவர்கள் இடையிலான பிணைப்பு குறைந்து போனால் அது கல்வி அடைவுகளிலும் எதிரொலிக்குமே என்று மிகப்பெரிய வருத்தத்தோடு தான் இருந்தேன்.
ஆனால் அவ்வாறு நடைபெறாதவாறு ஆசிரியர் மாணவர் உறவு மிகச் சுமுகமான அளவில் இருக்குமாறு பராமரித்தது நிச்சயமாக எங்களுடைய ஆசிரிய பெருமக்கள் தான்.
தொடர்ந்து மாணவர்களின் சிறு சிறு முன்னேற்றங்களை உற்சாகப்படுத்தியும் அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் அவரவர் திறனுக்கு ஏற்றவாறு பெரிய வேலைகளை சிறுசிறு வேலைகளாக உடைத்து தருவது என்று பல விஷயங்களை தொடர்ந்து முயன்ற வண்ணம் இருந்தனர்.
ஒரு மாணவிக்கு அவ்வப்போது வலிப்பு வந்துவிடும் அதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களிடம் அந்த மாணவியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் அவருக்கு பெரிய வேலைகள் எல்லாம் வழங்க வேண்டாம் படிப்பை விட அவரது உடல் நலன் ரொம்ப முக்கியம் என்று கூறியிருந்தேன். ஆனால் ஆசிரியர்கள் அவருக்கு தொடர்ந்து தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி இரவு நேரத்தில் கூட அவரிடம் தொடர்ந்து பேசி வேலை கொடுத்து whatsapp மூலமாக வாங்கி மதிப்பீடு செய்து உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என்பதை கேள்விப்பட்ட போது உள்ளபடியே நான் கலங்கிப் போனேன்.
அதுபோல் வெளியூரில் இருந்து வந்து உறவினர் வீட்டில் தங்கி படிக்கும் மாணவர்கள் அவ்வப்போது ஊருக்கு சென்றால் திரும்பி வர முரண்டு பிடிப்பார்கள்.
ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவன் பத்தாம் வகுப்பில் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே பள்ளிக்கு வருவது மற்ற நாட்களில் அவனது தந்தை தரும் பேருந்து கட்டணத்தை எடுத்துக் கொண்டு எங்காவது ஊர் சுற்றிவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு சென்று விடுவது என்று இருந்தான்.
அவனை எத்தனை முறை அழைத்து பேசினாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அவனது தந்தையை அழைத்து அவரிடமும் பேசி பார்த்தோம் .அவனது தந்தையோ அவனை கண்டிக்கும் அளவுக்கு இல்லை.
அவன் செய்த தவறுகளில் உச்சத்திலும் உச்சமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில தமிழ் தேர்வுக்கு வரவே இல்லை. அதுபோல் தேர்வு இடைப்பட்ட நாட்களில் உள்ள பயிற்சி வகுப்புகளுக்கும் வரவில்லை. அனைத்து ஆசிரியர்கள் தொலைபேசி எண்களையும் பிளாக் லிஸ்டில் வைத்திருந்தான்.
ஆசிரியர்கள் அவனுக்கு வாட்ஸ் அப்பில் உருக்கமாக வாய்ஸ் நோட் அனுப்பியும் கூட அதை அவன் ஓபன் செய்து கேட்டிருந்தும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
அதன் பிறகு அவர்கள் ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் தொலைபேசி அவனது பெற்றோரையும் அவனையும் பள்ளிக்கு அழைத்து நீங்களே பேசி அவனை பரிச்சை எழுதும் அளவுக்கு சரி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
இந்த திட்டம் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியது. மீதி தேர்வுகள் அனைத்தையும் எழுதி 70 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவன் பயிற்சி வகுப்புகளுக்கு வரவில்லை என்றாலும் கூட தேர்வுக்கு வந்து காத்திருக்கும் நேரத்தில் கூட அவனை அழைத்து அவனிடம் பேசி உற்சாகப்படுத்தி தேர்ச்சி அடையும் அளவுக்கு அவன் இருக்கிறானா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க காலை மாலை மற்றும் சனிக்கிழமைகள் என அனைத்து நாட்களிலும் வேலைகளை பிரித்துக் கொண்டு செய்த ஆசிரியர்களை எண்ணி நான் வியப்படைந்தேன். நானே கூட சில சமயங்களில் "டீச்சர் இருந்த வாரம் ரெஸ்ட் எடுங்களேன்" என்று கூறியும் கூட அவர்கள் "வேண்டாம் சார் கொஞ்சம் வேலை இருக்கு" என்பார்கள்
உள்ளபடியே இந்த செட்டு மாணவர்கள் நினைத்து நான் பயந்தபடி இருந்தாலும் ஆசிரிய பெருமக்கள் அவர்களின் பேரன்பையும் பெருங்கருணையையும் காண்பித்து அவர்களை தங்கள் வழிககு கொண்டு வந்து 100 விழுக்காடு தேர்ச்சியை எட்ட வைத்தனர்.
ஆசிரியர்களின் தொடர் உழைப்புக்கு அங்கீகாரமாக பள்ளி சராசரி மதிப்பெண் 360 என்கிற உச்சத்தை இந்த ஆண்டு எட்டியது.
எங்கள் கிராம மக்கள் மத்தியில் எங்கள் பள்ளி மீது பேர் அபிமானம் இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் எங்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பெரும் உழைப்பு தான்!!
பத்தாம் வகுப்பு என்று இல்லாமல் மற்ற வகுப்புகளிலும் அடிப்படை திறன்கள், கையெழுத்து, கல்வி இணை செயல்பாடுகள் கலை இலக்கியம் விளையாட்டு என்று மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்க்க அவர்கள் காட்டும் ஆர்வமும் உழைப்பும் மிகப் பெரியது. அதுபோல ஒவ்வொரு ஆசிரியரும் அவர்களது வகுப்பில் உள்ள அனைத்து பெற்றோரிடமும் தொடர்ந்து நேரிலும் தொலைபேசியிலும் பேசி நட்புறவோடு சம்பந்தப்பட்ட மாணவனின் வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள்.
எங்கள் பள்ளி ஆசிரியர்களில் குழு புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்பது தான். அதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
Tuesday, April 29, 2025
முஜிகே!! பிலிப்பைன்ஸ் மொழித் திரைப்படம்
முஜிகே!!
பிலிப்பைன்ஸ் மொழித் (கொரியாவும் உண்டு) திரைப்படம்
முஜிகே என்றால் korean மொழியில் வானவில் என்று அர்த்தம்
பூவே பூச்சூடவா படத்தில் நதியா ஐந்து வயது குழந்தையாக இருந்தால் & பாட்டி சித்தியாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுதான் இந்தப் படம்!!
குழந்தை முஜிகே அவளது அம்மாவுடன் விளையாடிக் கொண்டிருப்பதில் படம் துவங்குகிறது.
பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை துருவித்துருவி விசாரித்துக் கொண்டே இருக்கிறாள் குழந்தை. ஏன் என்று பார்த்தால் "நீ சொர்க்கத்துக்கு போன பிறகு நான் பறந்து வந்து உன்னிடம் சேர்ந்து விடுவேன் அல்லவா?!" என்று கூறுகிறாள்.
அதற்கு பிறகு தான் தெரிகிறது தாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறாள்
அவளது தந்தை அவளது தாயை விட்டுவிட்டு போய்விட்டதாக தெரிகிறது. ஆனாலும் முஜிகேவின் அப்பா உன்னை பார்க்க நிச்சயமாக வருவார் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்.
அவள் மரண படுக்கையில் இருக்கும் போது அவளது தந்தை முஜிகேவை கொரியாவில் இருந்து பிலிப்பைன்ஸ்க்கு அழைத்து வந்து விடுகிறார்.
முஜிகேவின் சித்தி சன்னி (சன்ஷைன்) ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்கிறாள். குழந்தைகள் என்றாலே அவளுக்கு பிடிக்காது. மற்றபடி ஊரில் எல்லோரிடமும் மிகவும் பணிவாகவும் மரியாதையாகவும் பழகக்கூடிய பெண்ணாக இருப்பதால் அவளை எல்லோருக்கும் பிடிக்கிறது.
குழந்தையை பிடிக்காது என்று சொல்லும் சன்னியை நம்பி அவளது தந்தை முஜிகேவை வீட்டிற்கு அழைத்து வருகிறார். சன்னிக்கு அவளை பிடிக்கவே இல்லை.
முதலில் முஜிகேவும் சன்னியும் முட்டி மோதிக் கொண்டாலும் விரைவில் ஒருவரோடு ஒருவார் பிரிக்க முடியாத அளவு இணக்கம் கொள்கிறார்கள்.
சன்னியின் கோபத்துக்கான காரணம் காண்பிக்கப்படும் போது நெகிழ்ச்சி!!
இந்த தருணத்தில் சன்னி மிகவும் விரும்பும் அவளது இலட்சிய வேலைக்கான வாய்ப்பு அமைகிறது ஆனால் முஜிகேவைப் பிரிந்து வெளிநாடு செல்ல வேண்டும்.
முஜிகே மேல் கொண்ட பாசத்தால் அந்த வேலையை துறக்கிறாள் சன்னி.
வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் போது விஜி கேவின் தந்தை முஜிகேவை அழைத்துக் கொண்டு செல்ல கொரியாவில் இருந்து வக்கீலோடு வருகிறார். விபத்தில் சிக்கி இத்தனை நாள் நினைவில்லாமல் இருந்ததாக கூறி தனது குழந்தை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்கிறார்.
முஜிகே தந்தையோடு கொரியா சென்றாளா அல்லது சன்னியோடு பிலிப்பைன்ஸ் ல் தங்கி கொண்டாளா என்பதை படத்தை பார்க்கும்போது தெரிந்துகொள்ளுங்கள்.
மிகவும் எளிய கதையும் வலிய உணர்வுகளையும் கொண்ட படம்.
பிலிப்பைன்ஸ் ல் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் அந்த குழந்தையின் மீது அன்பு பாராட்டுவது சிறப்பாக இருக்கிறது.
தாய்மை அடைந்தால் தான் 100% பெண் என்கிற பாக்கியராஜ் டெம்ப்ளேட் ரீலை இந்தப் படத்தில் பியூட்டி பார்லர் காட்சியில் வைத்திருக்கிறார் இயக்குநர்.
சித்தி சன்னியாக வரும் நடிகை நல்ல அழகு, சிறப்பாகவும் நடித்துள்ளார்.
முஜிகேவாக வரும் குழந்தையை எப்படி இவ்வளவு அட்டகாசமாக நடிக்க வைத்துள்ளனர் என ஆச்சரியமாக இருக்கிறது. முக்கியமாக சன்னி வெளிநாடு செல்வதாக கூறிக்கொண்டு அவளுக்கு சடை பின்னி விடும் காட்சியில் அந்த குழந்தையின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும்.
சண்டை சச்சரவு ரத்தம் துப்பாக்கி எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க நேர்மறை உணர்வுகளின் தொகுப்பாக படத்தை தந்துள்ளார் இயக்குனர்.
நெட்ஃபிளிக்ஸ் ல் உள்ளது பாருங்கள்!!
Friday, April 4, 2025
இனியாவது புரிந்து கொள்வோமா? தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு)
நூல்: இனியாவது புரிந்து கொள்வோமா?
தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு)
தொகுப்பு: இனியன்
சில ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் அறிவுரை கூறி முடித்து சுவீட் காரம் எல்லாம் கொடுத்து முடித்தபிறகு மாணவர்கள் யாரையேனும் பேச வைக்கலாமே என்று எனது அவாவை தெரிவித்தேன்.
வகுப்பறையில் வாயடிக்கும் மாணவர்கள் எல்லாம் தெறித்து ஓடினார்கள். அப்போது தானாகவே பேச முன்வந்தார் “சுந்தரி“(இந்த பேரை சும்மா வச்சிக்குவோம்)
வணக்கம் எல்லாம் கூறி முறையாகவெல்லாம் பேசத் துவங்கவில்லை. அவர் சொல்லவேண்டும் என்று நினைத்த ஒன்றை சொல்வது மட்டுமே அவரது நோக்கம்.
“ஒரு நாள் இங்கிலீஷ் மிஸ்கிட்ட டவுட் கேட்டேன். அவங்க என் பக்கத்தில் அமர்ந்து எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. எங்கம்மா பக்கத்தில் உக்காந்து இருப்பது போல சந்தோசமா இருந்தது“ என்று கூறிவிட்டு கண்ணீரை சுண்டிவிட்டு உட்கார்ந்து கொண்டார்.
“டேய் ஜன்னலை சாத்துடா எவ்வளவு தூசி வருது பாரு” என்று மிரட்டலாக கூறி நாசூக்காக நானும் துடைத்துக் கொண்டேன்.
ஒரு வினாடியில் அத்தனை பேரையும் கலங்க வைத்து விட்டார்.
விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தந்தையும் பாராமுகமாக இருப்பவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.
ஒரு சின்ன அக்கரை ஒரு அரவணைப்பு அந்தப் பெண்ணை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை எண்ணி வியந்து போனோம்.
ஒருமுறை உங்கள் படிப்புக்கு இடையூறாக இருக்கும் விஷயம் என்ன என்று எழுதித் தாருங்கள் என்று கேட்டபோது ஒரு மாணவி “இப்போ எனக்கு அப்பா இருந்தா எப்படி இருக்கும்“ என்று அடிக்கடி நினைப்பு வருகிறது என்று எழுதிக் கொடுத்து இருந்ததை வாசித்த போது மனது அவ்வளவு கனத்து போனது.
தம்பி இனியன் தொகுத்து வெளியிட்டு இருக்கும் “இனியாவது புரிந்து கொள்வோமா? தனிப் பெற்றோர் – குழந்தைகள் என்கிற நூலை வாசித்த போது தான் எனது பள்ளி அனுபவங்கள் நெஞ்சில் அலையடித்தன.
இந்த கட்டுரைத் தொகுப்பு அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும். முக்கியமாக ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் வாசித்தால் “தனிப்பெற்றோர்“ பற்றிய பெரிய புரிதல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். கல்வி தளத்தில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு உள்ளது என்பதை தெளிவாக உணர்த்தும் நூல் இது.
திரைக்கலைஞர் ரோகிணி அவர்களின் நேர்த்தியான முன்னுரை மற்றும் முனைவர் ராம் மகாலிங்கம் அவர்களின் தனிப்பெற்றோர் குறித்த விரிவான பார்வை நமது சூழலுக்கும் அமெரிக்க சூழலுக்கும் இடையேயான பெரிய அளவிலான வேறுபாடுகளை உணர்த்தி கட்டுரைக்குள் செல்லும் ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஃபர்ஸ்ட் பாலிலேயே சிக்ஸர் அடிப்பது போல முதல் கட்டுரையே வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் எழுதியது. கட்டுரையை சினிமா படங்களில் உள்ள தனிப்பெற்றோர் சூழலில் இருந்து துவங்கினாலும் “வாழ்க்கை ஒன்றும் சினிமா அல்லவே மூன்று மணி நேரங்களில் முடிந்துவிட“ என்று நடைமுறைகளை தனது பணி அனுபவங்கள் வாயிலாக கூறுகிறார்.
நமது சமூகத்தில் பிடிக்காத குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறி கண்ணியமாக வாழ்க்கையை அமைத்து கொள்ள மணவிலக்கு பெறுவது எவ்வளவு சிக்கலாக உள்ளது என்பதையும், தனிப்பெற்றோராக குழந்தை வளர்ப்பது வெவ்வேறு பொருளாதார சூழலில் இருப்போருக்கு இருக்கும் வெவ்வேறு சிக்கல்களையும் சிறப்பாக அலசி உள்ளார்.
அவ்வை சண்முகி படத்தையும் அதன் ஆங்கில மூலமான மிஸஸ் டவுட்ஃபயர் படத்தையும் இருவேறு கலாச்சார சூழலோடு ஒப்பிட்டு இருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
மனநல மருத்துவர் சிவபாலன் அவர்களது கட்டுரை இரண்டாவதாக வந்துள்ளது. பெற்றோர் என்ற வார்த்தைக்கு “பயாலஜிக்கல் கார்டியன்“ என்கிற சொல்லாடலை கண்டு வியந்து போனேன். தனிப்பெற்றோர் மற்றும் அவர்தம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களை உளவியல் ரீதியாக அலசி உள்ளார்.
தனிப்பெற்றோர் எந்தெந்த விஷயங்களை எல்லாம் தாங்களே கற்பிதம் செய்து கொண்டு தேவையற்ற மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டி இருந்தார்.
அருள்மொழி அவர்களின் கட்டுரையை முதல் பாலில் சிக்ஸர் என்று சொல்லி இருந்தேன் அல்லவா. ஆனால் ஆசிரியர் சுடரொளி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை வாசித்த போது லப்பர் பந்து அகிலா அடித்த சிக்ஸரை போல இருந்தது.
ஏனெனில் அவரும் ஆசிரியர் என்பதால் நேரடி கள அனுபவங்களைக் கொண்டு கட்டுரையை வடித்திருந்தார்.
துவக்கநிலை வகுப்பில் இருக்கும் தனிப்பெற்றோர் குழந்தைகளிடம் ”குடும்பம்“ என்கிற விஷயத்தை நடத்துவதில் கூட எத்தனை பெரிய சிக்கல் ஏற்படும் என்பதை அவர் விவரித்தபோது ஆச்சரியமாக இருந்தது.
ஆசிரியர் சுடரொளி அவர்களின் கட்டுரை அனைத்து ஆசிரியர்களாலும் வாசிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் பிரச்சனையை தீர்க்க ஒரு ஆசிரியர் எந்த அளவுக்கு இறங்கி செயல்படமுடியும் என்பதை இவர் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.
நமது சமூகத்தில் கற்பு கலாச்சாரம் என்றெல்லாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிற்போக்குத் தனமான விஷயங்கள் எவ்வளவு பெரிய சமூக சிக்கல்களுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை ஆசிரியர் தமிழ் ஆசான் அவர்களின் கட்டுரையில் காணமுடிகிறது.
எங்கள் பள்ளியிலும் கூட ஒரு தனிப்பெற்றோர் குழந்தை 9 ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தபோது திருமண ஏற்பாடுகள் செய்தார்கள். அந்தப் பெண் ஒன்பதாம் வகுப்பு படித்தாலும் தகுந்த சீருடையுடன் ஐந்தாம் வகுப்பில் அமர வைத்தாலும் ஒரு வித்தியாசமும் தெரியாது. அவ்வளவு சிறு குழந்தை அவர்.
அவரது அம்மா மற்றும் உறவினரை அழைத்து “பேசி“ மனதை மாற்றினோம்.
பதின்பருவ குழந்தைகளின் தனிப்பெற்றோர் தாயாக இருக்கும் பட்சத்தில் அவர் மறுமணம் செய்து கொள்வதால் ஏற்படும் உளவியல் சிக்கல்களை மிகச் சிறப்பாக விவரித்துள்ளார்.
அது போன்ற மனச்சிக்கல்களை அந்த மாணவரிடம் தொடர்ந்து உரையாடுவதன் வாயிலாகத்தான் புரிய வைக்க முடியும் என்பதை உதாரணத்தோடு விளக்கி கூறி உள்ளார் ஆசிரியர் தமிழ் ஆசான்.
முனைவர் விசயலெட்சுமி அவர்களின் கட்டுரை தனிப்பெற்றோருக்கும் (தாயார்) அவர்தம் குழந்தைகளுக்கும் சமூகத்தில் ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து பேசுகிறது.
ஆசிரியர்கள் மாணவர்தம் உளச் சிக்கல்களை வந்து சொல்லும் அளக்கு ஒரு ஸ்பேஸ் ஏற்படுத்தி தரவேண்டும். முக்கியமாக தனிப்பெற்றோர் குழந்தைகள் தனக்கு நேர்ந்தவற்றை கூறுவதற்கு நம்பகமான தளம் ஆசிரியர்கள் என நம்பும் அளவுக்கு ஒரு கட்டமைப்பு பள்ளிகளில் அவசியம்.
நான் எவ்வளவு கண்டிப்பான ஆசிரியராக இருந்தாலும் மாணவர்கள் என்னிடம் பாடம் சாரா விஷயங்களை இயல்பாக பேச வாய்ப்பு வழங்குவேன்.
அது போல ஒரு முறை சாதாரணமாக பேசிய போது ஆலமரமாக வேர்விட்டிருந்த பெரிய பிரச்சனையை கண்டறிந்து வேரோடு களைந்தோம்.
தனியார் பள்ளிகள் மனநல ஆலோசகராக இருக்கும் கார்த்திக் அவர்களது கட்டுரை தனிப்பெற்றோர் கணவனை இழந்தவர் எனும்போது தாத்தா பாட்டி அல்லது சுற்றத்தார் தூண்டுதலின் பேரில் தாயின் ஒழுக்க நிலையை கண்காணிக்கும் பொறுப்பை அந்த குழந்தைகள் எடுத்துக் கொள்வது குறித்து பேசி உள்ளார்.
இது சார்ந்து நான் பள்ளிகளில் கண்ட வகையில் ஏராளமான மனக்குமுறல்கள் உண்டு. மகனின் கண்காணிப்பு தாளாமல் மாமியார் வீட்டில் இருந்து தாய்வீட்டுக்கு புலம் பெயர்ந்த தனிப்பெற்றோர் எல்லாம் உண்டு.
ந.சரவணன் அகதிகள் வாழ்வியலோடு தொடர்புடைய செயற்பாட்டாளர். அவர் தனது கட்டுரையில் அகதிகளில் 90 விழுக்காடு தனிப்பெற்றோர் தான் என்று கூறியுள்ளது அதிர்ச்சியாக இருந்தது. இது சார்ந்து அவர் மேலதிக தகவல்களோடு விவரித்தபோது ஒவ்வொரு விஷயமும் புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அகதிகள் வாழ்வியல் குறித்து புரிந்து கொள்ள இந்த கட்டுரை எனக்கு வாய்ப்பாக அமைந்தது.
அகதிகள் குறித்த எந்த விதமான சட்டநடைமுறைகளையும் உருவாக்காமல் ஒரு சிறு ஏற்பாட்டோடு அவர்களை பராமரிப்பது எவ்வளவு தூரம் மனிதநேயத்திற்கு எதிரானது என்பதை சரவணன் அவர்கள் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரை எழுதியுள்ள பழங்குடியின நலவாழ்வுச் செயல்பாட்டாளரான தனராஜ் அவர்கள் பழங்குடியினர் வாழ்வியல் குறித்து மிகச்சிறப்பாக கூறியுள்ளார். பளியர் சமூகத்தின் வாயிலாக தனிப்பெற்றோர் என்பதெல்லாம் இங்கே ஒரு விஷயமே கிடையாது. எது கிடைத்தாலும் எல்லோரும் பகிர்ந்து உண்போம் என்பதே அவர்களின் வாழ்வியல் முறையாக உள்ளது.
“அவள் என் தங்கச்சிதான் சார், அவளுக்கும் துணை வேணும்ல, என்ன பண்ண முடியும். என் கணவரோட தொடர்புல இருந்தா என்ன தப்பு அவ என்ன செய்வா?” இந்த வரிகளை படித்தபோது வியந்தே போனேன்.
நாம் செய்தித் தாள்களில் வாசிக்கும் பாதி குற்றச் செயல்பாடுகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் வேட்கையோடு தொடர்புடையவை தானே?!
இயல்பான பாலியல் வேட்கையை நாம் கற்பு கலாச்சாரம் என்றெல்லாம் புனிதப் படுத்தி வைத்திருப்பதால் எவ்வளவு சிக்கல்கள் தெரியுமா?
22 வயதில் ஒரு கைக் குழந்தையோடு கணவனை இழந்த ஒரு பெண் வாழ்நாள் முழுவதும் ஆண்துணை இன்றி மாமனார் மாமியாருக்கு சேவகம் செய்து அவர்களை சார்ந்து இருந்து குழந்தையை வளர்ப்பது எவ்வளவு மனித தன்மையற்ற செயல் என்பதை ஆடை வடிவமைப்பாளர் தாரணி அவர்களின் கட்டுரை கூறுகிறது.
கட்டுரையை தொகுத்தளித்திருக்கும் தம்பி இனியனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால் எடுத்துக் கொண்ட பிரச்சனையின் அத்தனை பரிமாணங்களையும் அலசி ஆராயும் ஆளுமைகளை வைத்து இந்த கட்டுரைகளை பெற்று பதிப்பித்துள்ளது மிகப்பெரிய செயல்.
கல்வி தளத்தில் குழந்தைகளோடு அதிகம் புழங்கும் ஆசிரிய சமூதாயம் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் இது. ஏனெனில் தனிப்பெற்றோர் குழந்தைகளின் தனிப்பட்ட பல உளச்சிக்கல்கள் குறித்து இந்த நூல் பேசி உள்ளது.
இந்த கட்டுரைகளில் உள்ள பிரச்சனைகளையும் தீர்வுகளையும் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொண்டு நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்த்து விட இயலாது மாறாக அந்த பிரச்சனைகள் பற்றிய அறிவையும் புரிதலையும் இந்த நூல் நிச்சயமாக வழங்கும்.
Saturday, March 15, 2025
தலைநகரம் – 4 "குளிர்நகரம்"
விமானம் தரையிறங்கிய உடனே நமது லக்கேஜ் எந்த கன்வேயரில் வரும் என்று கன்வேயர் நம்பர் கொடுத்துவிடுகிறார்கள்.
கதவை திறந்த மாத்திரத்தில் டெல்லி குளிர் என்னை ஆட்கொண்டது. கையில் வைத்திருந்த பையில் நல்வாய்ப்பாக ஒரு சால்வையை வைத்திருந்தேன். எடுத்து நன்றாக போர்த்திக் கொண்டேன்.
ரன்வேயில் இருந்து விமான நிலையத்தினுள் அழைத்துச் செல்ல பேருந்து வந்தது. சீட் இருந்தாலும் ஒரு கார்னரில் நின்றுகொண்டேன். “குளிருக்கு பயந்தவர்கள் எல்லாம் என்னோடு நின்று கொள்ளுங்கள்“ என அழைக்காவிட்டாலும் நல்ல கூட்டமாக சூழ்ந்து நின்று கொண்டார்கள்.
கன்வேயரை நான் நெருங்கவும் எனது சாம்பல் வண்ண சூட்கேஸ் வரவும் சரியாக இருந்தது. முதல் வேலையாக சூட்கேஸை திறந்து ஜெர்கினை எடுத்து மாட்டிக் கொண்டேன்.
இதற்கிடையில் ஸ்ரீனிவாசன் சார் அழைத்தார். “சார் நான் அறைக்கு வந்து விட்டேன். அறை எண் 305 ல் உங்கள் பெயரையும் சேர்த்துள்ளேன்“ என்றார்.
நாங்கள் தங்குவதற்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக டிஜிட்டல் நூலக (DELNET)கெஸ்ட் ஹவுசை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஸ்டார் ஓட்டலை விஞ்சும் வகையில் மிகச் சிறப்பான அறைகள். பெண் ஆசிரியர்களுக்கு குதுப் ரெசிடென்சி என்கிற ஓட்டலை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
“ஸ்ரீனிவாசன் சார், ஏர்போர்ட்டில் இருந்து டெல்நெட்டுக்கு கேப் எவ்வளவு கேட்டாங்க சார்“ கேப் காரர்களிடம் ஏமாந்து விடக்கூடாது இல்லையா?
“அங்கே நின்றிருந்த கேப் ஐ பிடித்தேன் சார், 800 ரூபாய் கேட்டார்கள்”
சரி நாமும் கேப்போம், “டெல்நெட் – ஜவர்லால் நேரு யுனிவர்சிட்டி எவ்வளவு பையா” என்று ஆங்கிலம் இந்தி என்று கலந்து கட்டி அடித்தேன்.
கொஞ்சமும் இரக்கம் இன்றி 1200 கேட்டனர். விமான நிலைய வாயிலில் ப்ரீ பெய்ட் டாக்சி சர்வீஸ் இயங்குகிறது. அவர்களிடம் கேட்டால் 400க்கு சீட்டை கிழித்து கொடுத்தனர். உடனே ஒரு டிரைவர் கையை பிடித்து அழைத்துக் கொண்டு கருப்பு மஞ்சள் கேபில் அமர வைத்தார். என்னுடைய சாமர்த்தியத்தை எண்ணி நானே வியந்து கையை பின்னால் கொண்டு போய் முதுகை தட்டிக் கொண்டேன்.
ஆனால் டெல்லியில் இரவு 7-9 தாறுமாறான டிராபிக் ஜாம் ஆகிறது. 8 கிமீ தூரத்திற்கு ஒரு மணிநேரம் ஆகிவிட்டது.
நான் எளிதான ஆங்கிலத்திலும் டிரைவர் இந்தியிலும் பேசிக்கொண்டே பயணித்தோம்.
டெல்நெட் க்கு மேப் போட்டு அவருக்கு உதவினேன். உள்ளே லக்கேஜ் எல்லாம் எடுத்து வந்து கொடுத்தார். அவருக்கு ஒரு 100 ரூ டிப்ஸ் கொடுத்து தேங்க் யு பையா என்று வழி அனுப்பி வைத்தேன்.
ரிசப்ஷனில் அவ்வளவு கனிவோடும் மரியாதையோடும் பேசினார்கள். எனது நண்பர் ஏற்கனவே 305 ல் புக் பண்ணி இருக்கிறார் என்றேன். பிறகு அதே அறையில் எனது விவரங்களையும் பதிவு செய்து கொண்டு ஆதார் நகல் எடுத்து வைத்துக் கொண்டனர். எனது பையையும் சூட்கேஸையும் கொண்டு வந்து அறையில் தந்தார்கள்.
செம்ம குளிராக இருந்தது. ரூம் ஹீட்டரில் உற்பத்தியான வெப்பக் காற்று ஐந்தடி தூரத்திற்குள் குளிர்ந்து போனது. Shoe socks கழட்டி தரையில் கால் வைத்தால் ஃப்ரீசரில் விரலால் அழுத்தும் போது ஒட்டிக் கொள்ளுமே அப்படி ஒட்டியது. கார்ப்பெட் தாண்டி கால் வைக்க முடியவில்லை. உடனே சாக்ஸை எடுத்து போட்டுக் கொண்டேன். நல்வாய்ப்பாக பாத்ரூமில் வாட்டர் ஹீட்டர் சிறப்பாக இயங்கியது.
அறையில் பெரிய மர அலமாறிகள் இருந்தன. எங்க லக்கேஜ் க்கு அது தாராளம். மேசையில் ஒரு கெட்டில், கண்ணாடி டம்ளர்கள், அரை லிட்டர் வாட்டர் பாட்டில்கள் இருந்தன. பாத்ரூமில் சீப்பு பேஸ்ட் சோப்பு ஷாம்பு இருந்தன.
அறையில் ஒரு பெரிய எல்இடி டிவி டிடிஎச் இணைப்புடன் இருந்தது. ஆனாலும் நாங்க என்ன முயற்சித்தாலும் பாலிமர் நியுஸ் தவிர எதுவும் வரவில்லை. பாலிமர் என்றாலே “பார்க்க்க்கவே அப்ப்பாவி போல் இருக்கும் இவர்தான்....” என்கிற குரல் நினைவில் வந்து பீதி ஊட்டியதால் இந்தி பாடல்களே தேவலை என்று விட்டு விட்டோம்.
இரவு வந்து சேர்ந்த விஷயத்தை வாட்சாப் குழுவில் பதிவிட்டோம். அடுத்த நாள் காலை 8.45 க்கு எங்களை பிக் அப் செய்ய பேருந்து வரும் என்றனர். 8 மணிக்கு பெண்கள் விடுதிக்கும் அடுத்து எங்களுக்கும் என்றிருந்தனர்.
இரவு ஒன்பது மணி சுமாருக்கு மெஸ் ஹாலுக்கு சென்றோம். அங்கு பிரட் பட்டர், சப்பாத்தி, குருமா, கேரட், முள்ளங்கி, பீட்ரூட் என பச்சையாக வெட்டி வைத்திருந்தார்கள். சோறும் கெட்டித் தயிரும் கூட இருந்தது. எதை சாப்பிடுவது எதை விடுவது என்று ஒரே இன்ப அவஸ்தையாக இருந்தது. அப்பாடா இதற்கு மேல் இனிப்பு சீரகம் கூட உள்ளே நுழைய இடம் இல்லை என்கிற நிலையில் எழவே மனது வராமல் எழுந்து கொண்டேன்.
ஆனால் எப்போதுமே சோதனைகள் நம்மை ஆட்கொள்வதும் நாம் அதனை வென்று காட்டுவதும் தானே வாடிக்கை. போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா?
“சரி சரி என்ன சோதனைன்னு சொன்னா தானே நாங்களும் எமோசனா கனெக்ட் ஆவோம்“ என்று நீங்கள் பொங்குவது புரிகிறது.
எலுமிச்சம் பழம் சைசுக்கு குலோப் ஜாமூன்களை ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் ஜீராவில் நீச்சலடிக்க வைத்து இறுதியாக எடுத்து வந்தனர். நானோ உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்று தூங்கலாம் என்று அறைக்கு செல்ல எழுந்தேன்.
சுனாமியின் போது உள்வாங்கிய அலைபோல் என்கால்கள் உள்வாங்கி மெஸ் ஹாலுக்குள் சென்றுவிட்டன. சரி பரவாயில்லை என்று ஒரு குட்டி கிண்ணத்தில் இரண்டு ஜாமூன்களையும் அது நீந்தி கரையேற போதுமான ஜீராவையும் கொண்டு வந்து ஒரு ஓரமான டேபிளில் அமர்ந்தேன்.
“என்ன பாஸ் சீரகம் போக கூட இடம் இல்லை என்றீர்களே?“ மைண்ட் வாய்ஸ்
“ஆமா பாஸ் என்ன தான் எள் போட்டா எள் எடுக்க முடியாத கூட்டமாக இருந்தாலும் ஒரு விஐபி வந்தா பிளந்து வழி விடுறது இல்லையா? குளோப் ஜாமூன் விஐபி பாஸ்!”
'இத சரியா செய்ய எவ்வளவு சண்டை, கிண்டல் கேளி என்று போராடி கட்டுரை எழுதி கண்கலங்கி இருப்பேன்' என்று ஆனந்த கண்ணீரை ஜீராவில் கலந்து சிறு வில்லளை எடுத்து வாயில் போட்டேன் அது அழகாக நழுவி கூட்டத்தை பிளந்து கொண்டு இரைப்பையில் ஆழத்தில் சேர்ந்தது. வெறும் காய் கறி சாலட் சாப்பிட்டு எழுந்த வடகிழக்கு நண்பர் ஒருவர் சபலப்பட்டு நான்கு ஜாமூன்களை கபளீகரம் செய்தார். நாம பரவாயில்லை என்று நகைத்துக் கொண்டேன்.
விடியற்காலை வழக்கம் போல ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு தட்டியது. போய் ஹீட்டர் போட்டு வைத்துவிட்டு கெட்டிலில் தண்ணீர் வைத்து பல்விலக்க பயன்படுத்திக் கொண்டேன். ஐந்து முப்பதுக்கெல்லாம் குளித்துவிட்டேன்.
சிறிது நேரத்தில் கைகள் நடுங்கத்துவங்கின. ஆனால் அது குளிரால் அல்ல. தேனீருக்காக. கதவைத் திறந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தால் எந்த அறையும் திறக்க்க வில்லை. தரைதளத்தில் கூட ஆள் அரவம் இல்லை.
கெட்டில் வைத்திருந்த டிரேயின் ஓரத்தில் நான்கு வண்ணங்களில் பௌச் கள் மிளிர்ந்தன. பார்த்தால் பால் பவுடர் பாக்கெட், டீ பேக், காபி பவுடர் பாக்கெட் மற்றும் சர்க்கரை என இருந்தன. கெட்டிலில் தண்ணீரை கொதிக்க வைத்து பால்பவுடர் போட்டு எடுத்து கிளாசில் ஊற்றி டீ பேக் போட்டு வைத்தேன்.
ஸ்ரீனிவாசன் சாருக்கும் ஒரு “பாயசத்தை“ போட்ருவோம் என்று முயன்றேன் அதிகாலையில் பழக்கம் இல்லை என்று தப்பித்துக் கொண்டார்.
மளமளவென காலைப் பணிகள் முடிந்த காலை சற்று எளிய உணவுதான். இட்லி பூரி அவ்வளவு தான். காபியும் இருந்தது.
8.45 க்கு எதிர்பார்த்தபடியே பேருந்து வரவில்லை. எல்லோரும் டெல்னெட் வளாகத்தில் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். புகைப்படம் எடுத்து முடிக்கவும் பேருந்து வந்து சேர்ந்தது.
பேருந்து எய்ம்ஸ் ஐ கடந்த போது அருகே அடுக்கி வைத்திருந்த “செங்கல்” பார்த்ததும் மனதுக்குள் ஒரு குபீர் சிரிப்பு பூத்தது.
லால் பாக் கடந்து ஒரு யு டர்ன் போட்டது. அண்ணாந்து பார்க்கும் உயரமும் நீள அகலமும் உடைய ஒரு கட்டிடத்தை அடைந்தோம். இந்தியன் ஹேபிட்டட் சென்டர் என்கிற ஒரு அருமையான வளாகம். மாநாட்டின் முதல் நாள் இனிதே துவங்கியது.
தொடரும்....
Friday, March 7, 2025
மகளிர் தின சிறப்பு பதிவு
மகளிர் தின சிறப்பு பதிவு
சமூகத்தில் எவ்வளவுதான் கல்வி வேலை வாய்ப்பு அதிகாரம் என்றெல்லாம் மகளிர் மேலே வந்தாலும், இன்னமும் பல இன்னல்கள் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது.
இளம் வயது திருமணங்கள்- நகர்புரத்தில் வாழ்ந்து வரும் பெண்களுக்கு விசித்திரமான ஒன்றாக தோன்றலாம், ஆனால் முகத்தில் அறையும் எதார்த்தம் என்னவென்றால் இன்னமும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுமிகளுக்கு குழந்தை திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.அதுவும் அவர்களுடைய பெற்றோரின் முழு சம்மதத்தோடு.
"எப்படியாவது பன்னிரண்டாம் வகுப்பை பாஸ் பண்ணி விட்டேன் என்றால் எனக்கு நிச்சயமாக கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும், என்னை கணித பாடத்தில் தேர்ச்சி அடைய செய்யுங்கள் நீங்கள் என்ன சொன்னாலும் நான் அதை செய்து விடுகிறேன்" என்று கேட்ட மெல்ல கற்கும் மாணவி ஒருவருக்கு அந்த காலகட்டத்தில் கணித பாடத்தில் தேர்ச்சி அடைய தேவையான 70 மதிப்பெண்களை எடுக்க சூட்சுமங்களை சொல்லிக் கொடுத்தேன்.
மிக ஆர்வத்தோடு எல்லாவற்றையும் கற்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
ஓராண்டுக்கு பிறகு அந்த மாணவியை நிறைமாத கர்ப்பிணியாகத் தான் ஒரு பேருந்து நிலையத்தில் காண நேர்த்தது.
அதுபோல 470 க்கு மேல் எடுத்த மிகப் பிரமாதமாக படிக்கக்கூடிய ஒரு மாணவி பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் வாங்க வந்த போது ஃபைலை வைத்து கழுத்தை மறைத்தவாறு நின்றார்.
உற்றுப் பார்த்தால் தாலி கயிறு!!
இன்னமும் கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை நடுத்தர வர்க்க பெற்றோர் தங்களுடைய குடும்ப கவுரவம் தனது பெண்ணிடம் மட்டுமே இருப்பதாக கருதுகிறார்கள்.
எந்த காதல் பிரச்சினையும் இன்றி அவர்களை பாதுகாப்பாக திருமணம் செய்து கொடுத்து விட்டால் தங்களது அனைத்து கடமைகளும் பாதுகாப்பாக கௌரவம் குறையாமல் நிறைவேறி விட்டதாக நினைக்கிறார்கள்.
ஆண் குழந்தைகள் காதல் வயப்பட்டாலும் அல்லது அது போன்று சொல்லிக்கொண்டு ஏதேனும் கிறுக்குத்தனங்களை செய்து கொண்டிருந்தாலும் லேசாக கடிந்து கொண்டு கடந்து விடும் அதே பெற்றோர் தான் வதந்தியாக கூட காதல் என்கிற பெயரோடு பெண்ணின் பெயர் இணைத்து பேசப்படுமானால் உடனடியாக பள்ளி செல்வதை தடுத்து திருமணம் செய்து வைக்க முற்படுகிறார்கள்.
நிச்சயமாக இந்த மாதிரியான கொடுமையான இளம் வயது திருமணங்களுக்கு அந்த குழந்தையை சுற்றி இருக்கும் சமூகம் நூறு விழுக்காடு முற்றிலும் உடந்தை.
ஏனென்றால் தற்போது 1098 என்கிற ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்தாலே போதும் இது போன்ற குழந்தை திருமணங்களை நிச்சயமாக தடுத்துவிடலாம். புகார் அளிப்பவர் பெயர் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.
இதுபோல ஆசிரிய பெருமக்களும் தங்கள் பள்ளிக்கு நீண்ட காலம் வருகை தராத மேல்நிலை வகுப்பு மாணவிகள் இருந்தால் 'இவருக்கும் திருமணம் ஆகி இருக்குமோ அல்லது அதற்கான ஏற்பாடுகள் இருக்குமோ' என்று சந்தேகித்தால் கூட இந்த உதவி எண்ணை நாடலாம் அதில் ஒன்றும் தவறு இல்லை.
பதின்பருவத்தில் இயல்பாகவே வரும் எதிர் பாலின கவர்ச்சியை காதல் என்று விதந்தோதும் சினிமாக்களும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கலுக்கு நிச்சயமாக பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் ஆரோக்கியமாக பேணப்பட வேண்டிய எதிர் பாலின நட்பினை காதல் என்று கற்பிதம் செய்து கொண்டு மாணவர்கள் பெண்களிடம் அத்து மீறுவது போன்று சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டு தான் இருக்கிறது .
இது போலான சமயங்களில் பெற்றோர்கள் மிகுந்த பதட்டத்திற்கு உள்ளாகி குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள்.
பதின் பருவத்தில் இருக்கும் பையன்கள் மது அருந்துதல் புகைபிடித்தல் போன்ற காணொளிகளை ஒரு லேசான கோபத்தோடு கடந்து போகிற அதே நபர்கள் தான் அது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண் குழந்தைகளின் காணொளிகளை கண்டதும் குய்யோ முறையோ என்று பொங்கி கொண்டு வேகமாக இணையத்தில் பரப்பி வைரலாக்கி அந்த குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றார்கள்.
இது அந்த குழந்தைகளின் செயலை ஞாயப்படுத்துவதற்காக அல்ல ஆனால் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கிரிமினல் குற்றங்களில் கூட பெயர்கள் வெளியிட கூடாது என்கிற சட்டம் இருக்கிறபோது இதுபோல காணொளிகளை பரப்புவது சட்டவிரோதமும் கூட.
பாலின சமத்துவம் என்கிற எண்ணம் சமூகத்தில் பரவலாக ஏற்படும் போதுதான் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும் குற்றங்களும் குறையும்.
ஆனால் பாலின சமத்துவம் என்கிற இலக்கை அடைய நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி தான் உள்ளது.
எனது பணி அனுபவம் சார்ந்து பல விஷயங்களை பாலின பாகுபாடு ஆழமாக ஊறிப்போன சம்பவங்களை கண்டுள்ளேன்.
மாற்றுத்திறனாளி ஆண் குழந்தைகளை எப்பாடுபட்டாவது படிக்க வைத்து ஒரு அரசு வேலைக்கு அனுப்பி வைத்து விடவேண்டும் என்கிற முனைப்பு உள்ள பெற்றோரை கண்டுள்ளேன். அதுபோல மிகச் சிறப்பான பணிக்கு அனுப்பியும் உள்ளார்கள்.
அதே வேளையில் மிகவும் நன்கு படிக்க கூடிய குழந்தைகளை வீட்டிலேயே முடக்கி அவர்களுக்கான கல்வி வாய்ப்பினை வழங்க எந்த முயற்சியும் எடுக்காமல் அவர்களுடைய திறமைகளை வீணாக்கிய பெற்றோரையும் கண்டுள்ளேன்.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் பாண்டட் லேபர் ஆக வேலைக்கு சென்ற ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் மிக அதிகம்.
அவர்களது திருமணத்திற்கு பணம் சேர்க்கிறேன் என்கிற பெயரில் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
இதுபோல வேலைக்குச் சென்ற ஒரு குழந்தையை மீட்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத செய்தோம் அவர் தேர்ச்சி பெற்றுவிட்டார் , ஆனாலும் அடுத்த ஆண்டு மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்ற மாணவி ஒருவர் "நான் முதல்வன் திட்ட" தேடலில் கூட அகப்படாமல் தன்னுடைய தம்பிகளை வீட்டில் இருந்து பார்த்துக் கொள்கிறார், அப்பா அம்மா இருவரும் வேறு ஊரில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுக் குடும்ப அமைப்புகள் மிக தகர்ந்து போனதற்கான காரணம் என்ன தெரியுமா?! அங்கே சாதாரணமாகவே அன்றாடம் குவியக் கூடிய வேலைகளில் நிலவிய பாலின பாகுபாடு தான்.
சமத்துவமற்ற எந்த ஒரு அமைப்பும் நிச்சயமாக நொறுங்கி விழுந்து மடியும். மிஞ்சி இருக்கும் தனி குடும்ப அமைப்பு நீண்ட காலம் நீடிக்க வேண்டுமானால் இணையருக்கு இடையே பாலின சமத்துவ எண்ணம் நிலவ வேண்டும்
குழந்தைகளிடம் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதிலும் கூட பாலின சமத்துவத்தை கவனமாக பேணுவது என்பது அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மகளிர் தினத்தில் பெண்களை தேவதை என்றோ தெய்வம் என்றோ போற்றி புகழ வேண்டாம்.
மேலே கூறியுள்ள தகவல்களை சற்று மனதில் நிறுத்திக் கொண்டு பாலின சமத்துவத்தை நாம் இருக்கும் இடம்தோறும் பேணுவதோடு அல்லாமல் உடன் இருப்போரிடமும் வலியுறுத்தி வருவோமானால் அதுவே மகளிர் தினத்திற்கு நாம் அவர்களுக்கு கூறும் நல்ல வாழ்த்து செய்தியாக அமையும்.
" சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"
Subscribe to:
Posts (Atom)
Balan malayalam movie
பாலன் - மலையாளம் ஒரு வேலையாக சென்னை வந்திருந்தேன் ஒரு மாலைப் பொழுதில் தியேட்டர்ஸ் நியர் மீ என்று கூகுளில் தேடினேன். பார்த்தால் பொடனிக்கு பி...
-
லால்குடி டேஸ்-21 ”இஸ்திரி பெட்டி” மீசையும் ஆசையும் அரும்பும் பருவத்தில் ஆண்கள் தங்களை கம்பீரமாக காண்பித்துக் கொள்ள மிகுந்த அக்கரை...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...







