Friday, February 15, 2019

உப்புமா என்றால் கேவலமா??


உப்புமா என்றால் கேவலமா??

ரவா உப்புமா  என்றால் நிறைய பேருக்கு பெத்த அலர்ஜி. அது சார்ந்த ஜோக்ஸ், நையாண்டி பாடல்கள் என்று இணையத்தில் கூட அந்த வெறுப்பின் சாரங்களை ஆங்காங்கு பார்க்க முடிகிறது.
கொல்லி மலை ஹில் டேல் பள்ளியில் வேலை பார்த்த போது கடைசி நேரத்தில் தோசை மாவு தீர்ந்து போனால் உப்புமா கிண்டி போடுவார்கள். அப்போதிலிருந்தே எனக்கு உப்புமா என்றால் மெத்தப் பிடித்தமாகிப்போனது.
அப்புறம் மாலை நேர சென்னை டூ அரியலூர் இரயில் பயணத்தின் போது விழுப்புரத்தில் கிடைக்கும் உப்புமா வித் தேங்காய் சட்னி ஆகா என்ன சுவை என்ன சுவை! சாப்பிட்டவங்க கை தூக்குங்க பாக்கலாம்.!!
வண்டி செங்கல் பட்டு ஸ்டேஷன் தாண்டியதுமே எனது நாவில் உள்ள சுவை மொட்டுக்கள் உப்புமாவுக்காக கிளர்ந்து எழுந்து ஏங்கி நிற்கும். நானும் பிப்ரவரி 14 ம் தேதி காதலியை சந்திக்கச் செல்லும் காதலனைப் போல உற்சாகமாகிவிடுவேன்.
பொது இடங்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்கள் என்றால் எனது துணைவியாருக்கு சுத்தமாகப் பிடிக்காது. என் பையனும் அப்படியே. என்னதான் அவனுக்க பிடித்த தின்பண்டம் என்றாலும் பொது இடத்தில் “நோ“ தான். ஆக இவர்கள் இருவருக்கும் தெரியாமல் இறங்கி வாங்கி சாப்பிட்டு முடிக்க வேண்டுமே என்கிற தவிப்பு வேறு.
விழுப்புரம் நெருங்கியதுமே “அகிலா, உனக்கு எதாவது இறங்கி வாங்கி வரணுமா?”
“அதான் இன்னும் ஒரு மணி நேரத்தில் அரியலூர் போய்டுவோமே அங்கே பாத்துக்கலாம்”
“அப்ப சரி, நான் கொஞ்சம் காத்தாட பின்னாடி வாசப்படிகிட்ட நிக்குறேன்”
“இங்கேயே நல்லா காத்து வருதே”

“அட உக்காந்தே இருக்குறது கால் வலிக்குதுப்பா”
“அப்பா, நானும் வரேன்” இது அருண்.
”ஏய் டோர் பக்கத்துல நிக்க கூடாது வேணாம் போகாதே” இது அகிலா.
’அப்பாடா தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ அருண வந்தா காரியமே கெட்டுடும்.
ஒரு வழியாக விழுப்புரம் வந்தாச்சு.
நின்றதும் ஒரு இருபது ரூபாய் சில்லறை எடுத்து வைத்துக் கொண்டு ஓடினேன்.
டேய் என்னடா இது அநியாயம் இருபது முப்பது பேரு நிக்கிறீங்க, டிரெயின் எடுக்கறதுக் குள்ள வாங்கணுமே
ஆனா விக்கிறவர் ரொம்ப சுறுசுறுப்பு, தொன்னை மாதிரியான ஒரு வட்டுவில் வழித்து நிரப்பி சட்னி போட்டு மலமலவென கூட்டத்தை கரைத்துக் கொண்டு இருந்தார். எனக்கும் வாங்கி விட்டேன்.

குணா படக் கமல் லட்டுவை ஏந்திச் செல்வது போல உப்புமாவை பயபக்தியோடு ஏந்திச் சென்று வாயில் அருகே நின்றுகொண்டு வாயருகே கொண்டு சென்றால் அருண் பொசுக் கென்று எழுந்து பின்னால் பார்த்தான். (ஏண்டா உன் பாசத்துக்கு ஒரு அளவு இல்லையாடா) நான் கண்ணிமைக்கும் நேரத்தில் உப்புமாவை கடல் மட்டத்திற்கு கீழே இரண்டடி தாழ்த்தி மறைத்துக் கொண்டு ஒரு ஹாய் சொல்லி அட்டெண்டன்ஸ் போட்டேன்.
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 
கழையிடை ஏறிய சாறும்,
 
பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
 
பாகிடை ஏறிய சுவையும்;
என்ற பாரதிதாசன் கணக்காக தேங்காய் சட்னியில் ஊறிய உப்புமாவை விரல்களால் திரட்டி சட்னி சொட்டச் சொட்ட எடுத்து நாவினில் வைத்தவுடன் சுவை அரும்புகள் உச்சபட்ச சுவையை மூளைக்கு உணர்த்தவே சுவையில் மெய் மறந்தபடி சாப்பிட்டு முடித்தேன். இரயில் இன்னும் கிளம்பவில்லை. நான் நாவால் சப்புக் கொட்டி சாப்பிடுவதை வாயைபிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்த ஒரு பெரியவரின் சுயக்கட்டுப்பாடு கட்டுடைத்து அவரை கடை நோக்கித் தள்ளியது. ஒரே ஓட்டமாக ஓடி வாங்கிக் கொண்டு வந்து அவர் ஏறவும் இரயில் கிளம்பவும் சரியாக இருந்தது. நானும் கையில் வைத்திருந்த ஒரு ஹால்ஸ் மிட்டாயை போட்டு வாசம் வராமல் தடுத்தாட் கொண்டு இருப்பிடம் நோக்கிச் சென்றேன்.
இந்த மாதிரி எந்த வித ஆதாரமோ சேதாரமோ இல்லாமல் பத்து தடவைக்கு மேல் விழுப்புர இரயிலடி உப்புமாவை சுவைத்திருப்பேன்.
என்னதான் உப்புமாக் காதலர்களாக இருந்தாலும் கோதுமை ரவா உப்புமா என்றாலே “ஜெர்க்“ ஆகி தெறித்து ஓடிவிடுவார்கள். நானும் அப்படியே ஆனால் வேறு வழியின்றி உள்துறை அமைச்சரின் (அதாங்க இல்லத்தரசி) மிரட்டலுக்கு பணிந்து அள்ளி விழுங்கியிருக்கிறேன். ஆனால் அந்த உப்புமாவைக் கூட நாவால் சப்புக் கொட்டி உண்ணும் காலம் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
ஆமாம், தலைமையாசிரியர்களுக்கான ஒரு பயிற்சி கிணத்துக் கடவு அக்ஷயா இன்ஜினியரிங் காலேஜில் நடந்தது. அந்த காலேஜ் கேண்டீனில் தான் எங்கள் உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது. ஒரு கேரள ஜோடிதான் கேண்டீன் நடத்தினார்கள். என்ன ஒரு சுவையாகவும் இன்முகத்தோடும் உணவு படைத்தார்கள் எங்களுக்கு. மறக்க இயலாத அனுபவம்.
கோதுமை ரவா உப்புமாவைக் கூட எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடும் அளவுக்கு சுவையாக சமைத்திருந்தார்கள். நிச்சயமாக அவர்கள் கோதுமை ரவையை அவர்களே தயார் செய்திருக்க வேண்டும். கடையில் விற்கும் ரவையை காட்டிலும் சற்று நைசாக அரைத்திருந்தார்கள். செய்வதற்கும் முன் இலேசாக வறுத்திருப்பார்கள் என்று அவதானிக்கிறேன். எப்பவுமே லார்ஜ் ஸ்கேல்ல செய்யும் போது உப்புமா நன்றாக வெந்து வழ வழ என்று இருக்கும் என்று விழுப்புரம் இரயில் நிலையம் மீது சத்தியமா சொல்கிறேன்.
இங்கேயும் அப்படித்தான் உப்புமா அதுவும் யாருக்குமே பிடிக்காத கோதுமை ரவா உப்புமா அவ்வளவு மென்மை, அவ்வளவு சுவை அதுவும் சாம்பாரில் கூட அழகாக ஜோடி சேர்ந்துகொண்டு கண்சிமிட்டி வசீகரித்தது. எனது நாவின் சுவையரும்புகள் நீண்ட நாட்களுக்கு பின் உப்புமா சுவையில் திக்குமுக்காடிப் போயின என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு நான்கு முறை எழுந்து சென்று வாங்கி நாவின் சுவையரும்புகளை சுவையில் குளிப்பாட்டினேன். நான்கு முறையும் சிரித்துக் கொண்டே இன்முகத்தோடு பரிமாரினார் அந்த கேரள நங்கை. நான்காவது முறை வாங்கிய போது கொஞ்சம் கூச்சமாக “ஹிஹி.. ரொம்ப டேஸ்ட்டா செஞ்சிருக்கீங்க” என்று வழிந்தேன்.
“அப்பா, அம்மா வராங்களா பாருங்க”
“இல்லையே ஏண்டா”
“இந்தாங்க“ என்று ஒரு கைப்பிடி உப்புமாவை அள்ளி எனது தட்டில் வைத்துவிட்டு “அம்மா சாப்பிட்டு முடிச்சுட்டேன், அப்பா தான் இன்னும் சாப்பிட்டு கிட்டு இருக்காரு” என்ற படி ஓடினான். பரவால்ல உப்புமா தானே என்று எண்ணியபடி சட்னியில் முக்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். நாவின் சுவையரும்புகள் இப்போதும் கிளர்ந்து எழுந்து திட்டித் தீர்த்தன.

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...