Saturday, March 25, 2017

நீயா நானா வில் சித்தரித்தது போலபெண்கள் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை

நான் நீயா நானா பார்ப்பதை விடுத்து ரொம்ப நாளாகிவிட்டது. இரவு 9 மணியாக இருந்தால் கூட எப்போதாவது சேனல் மாற்றும் போது கிராஸ் ஆகும். ஞாயிறு மதியம் 3 மணி என்பது எனக்கு நள்ளிரவு 12 மணி போல ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் நேரம்.
இந்த வார எபிசோட் ஃபேஸ்புக் வாட்சப் எங்கு பார்த்தாலும் மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கப் படுகிறதே என்று யு டியூப் ல் பார்க்கலாம் என்று குடைந்தேன் இயலவில்லை. அப்புறம் பார்த்தால் ஸ்டார் குருப் தங்கள் நிகழ்ச்சிகள் யாவையும் பார்க்க பிரத்தியேக மாக ஹாட் ஸ்டார் என்கிற “ஆப்“ வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. ( அதானே பார்த்தேன்கும்கிபடத்தையே 100 தடவைக்கு மேல் போட்டு ஒட்ட ஒட்ட பணம் கறப்பவர்கள் ஆயிற்றே. விஜய் டிவியில் படம் என்றாலே நெறய பேர் மரணபீதியில் பதறி சேனல் மாற்றுகிறார்கள்)
சரி அதற்கானஆப்பைடவுன்லோட் செய்து நிறுவிக் கொண்டேன். மறுபடி அதனுள் சென்று மொழியை தேர்வு செய்தால் வரிசைகட்டி எல்லா நிகழ்ச்சிகளையும் வைத்திருக்கிறார்கள். அதில்நீயா நானாவைதேர்வு செய்து ப்ளே பண்ணி பார்த்தேன்.
கோபிநாத் வழக்கம் போல தலைப்பை சொல்லி பெண்களிடம் இருந்து வார்த்தையை பிடுங்குகிறார். அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு எல்லோரையும் விட சிறப்பாக சொல்லி வாயடைக்கச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்க வித்தியாச வித்தியாச மாக கல்யாணத்திற்கு வேண்டிய சீர்களை கேட்கிறார்கள். அதிலேயும் சில பேர் தமிழை அந்நிய மொழி மாதிரி பேசும் டயானாக்கள் (பீட்டருக்கு பெண்பால் பெயர் தெரியலேப்பா அவ்வ்..!)
எல்லோரும் அந்த சூழலில்  peer pressure ஆல் ஏற்பட்ட உந்துதலில் தான் பேசினார்கள். கோபிநாத்தும்ஆகா“ ”பலேஎன்று அவர்களை பாராட்டிக் கொண்டே வந்தார். பாவம் நமது வார்த்தையை நமக்கு எதிராக திரும்பும் என்கிற நீயா நானாவின் சூழ்ச்சி அறியாதவர்கள்.
அதிலும் ”365 நாளும் 365 சேலைபெண்ணின் கையை கவனித்தீர்களா பேச்சுக்கு பொருத்தமாக என்ன அழகாய் கைகளில் அபிநயம் காட்டினாள். நடிப்பு பின்னிட்டம்மா!

எல்லோரும் பேசி முடித்த உடன்ஸ்டார்ட் மியுசிக்என பெற்றோர்களின் அர்ச்சனைகள்.
இந்த சீன் பார்ப்பதற்குலெஷ்மி ராமகிருஷ்ணனின்குடும்ப பஞ்சாயத்து போல இருந்தது.
விஜய் டிவி படப்பிடிப்பு தளத்தில் வழக்கமாக கொடுக்கப் படும்கிளிசரின்“ அன்று ஒரு அம்மாவிடம் வழங்கப் பட்டிருந்தது போலும். அவரும் அதை எங்கோ தவற விட்டிருக்கிறார். எவ்வளவு முயன்றும் அழுகை வரவே இல்லை. இன்னும் பயிற்சி வேண்டும்( இதுவே சூப்பர் சிங்கராக இருந்தால் கண்ணீரில் படப்பிடிப்பு தளமே மிதந்து இருக்கும். )

இவற்றை எல்லாம் பார்த்து விட்டு ஒட்டு மொத்த பெண்களும் பெற்றோரிடம் இருந்து சொத்தை அபகரிப்பவர்கள் என்கிற பிம்பத்தை நமது ஃபேஸ்புக் போராளிகள் சுவீகரித்துக் கொண்டு அடுத்த போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.
மிடில் கிளாஸ் பிள்ளைகள் எல்லோரும் ஆசைகளை கட்டுப் படுத்த பழகியவர்கள். அதில் பெண் பிள்ளைகள் முன்னிலை வகிப்பார்கள்.
திருமணத்திற்கு முன்னும் சரி பின்னும் சரி பெண் பிள்ளைகள் பெற்றோரை விட்டுக் கொடுப்பது இல்லை.
அவர்கள் கேட்பதை செய்ய இயலாது என்று குடும்ப நிலையை எடுத்து கூறி எளிதாக சமாதானப் படுத்திவிடலாம் அது வீட்டில் தான் நீயா நானா அரங்கில் அல்ல.
கூடப் பிறந்தவர்களும் பெற்றோரும் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று சுயநலமாக யோசிக்கும் பெண்கள் வெகு வெகு அரிது தான்.
ஆனால் நீயா நானா இது மாதிரி நிகழ்ச்சியால் வரதட்சணை சார்ந்த பிரச்சினைக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை திணிக்க விழைகிறது.
வரதட்சணை ஆண்கள் கேட்பதில்லை பெண்கள் தான் காரணம் என்கிறசொத்தைகாரணத்தை நிறுவுவதற்கான முயற்சி.
பெண்குழந்தை வேண்டாம் என்று பயப்படும் பெற்றோருக்கு இன்றளவும் திருட்டுத்தனமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கூறிகருவறுக்கும்மையங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இன்றளவும் ஏராளமான கிராமபுரங்களில் பெண்களுக்கான நியாயமான உரிமைகள் மறுக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
குழந்தை வளர்ப்பில் கூட ஆண் பெண் பாகுபாடு பெரும்பாலான வீடுகளில் உண்டு. எனக்கு தெரிந்து பனிரெண்டாம் வகுப்பில் 1100க்கு மேல் வாங்கிய பெண்ணை மெடிக்கல் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதற்கு விண்ணப்பிக்காமலே ஆசிரியர் பயிற்சி படிக்க வைத்த பெற்றோர் உண்டு. அதுவே பையன் என்று வரும் போது மார்க் குறைவாக இருந்தும் பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு BDS வாங்கி படிக்க வைத்தார்கள்.
எதார்த்தம் இவ்வாறு இருக்கையில் ஒரு இருபது பெண்களை எடுத்துக் கொண்டு “வரதட்சணையெல்லாம் இப்போ யார் சார் கேக்குறா எல்லாம் பெண்களே கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்!“ என்று நிறுவுவது போல நிகழ்ச்சி நடத்துவது அறமாகாது.

உண்மையில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உண்டு என்று சட்டம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலும் வழங்குவது இல்லை. அப்படி என்றால் அந்தப் பெண்கள் கேட்டது சட்டப்படி சரிதானே.

Sunday, March 19, 2017

ச்சீ ச்சீ இந்தக் கதை ரொம்பப் புளிக்கும்!!


”புளிய மரத்தில் புளி உளுக்க ஏறியவர் தவறி விழுந்து மரணம்” செய்தியை பார்த்ததும் ”பகீர்” என்றது.
உடனே அம்மாவுக்கு போன் செய்து “புளி உளுக்க ஆள் கூப்பிடாதே வேணும்னா கீழ உழுவறத மட்டும் பொறுக்கிக்க” என்று சொல்லிவிட்டேன்.
எங்க வீட்டு புளியமரத்துக்கு வயது 75 ஐ தாண்டி இருக்கும். தரையோடு செங்குத்தாய் வேர் பிடித்து “நாட்டாமை விஜயகுமார்“ மாதிரி சும்மா கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும்.
அந்த வழியாக செல்வோருக்கு இளைப்பாற நிழலை வள்ளலாக வாரி இறைக்கும் “ஏசி” வசதியுடன். அவர்கள் வீட்டு கூரையில் கூட கதிரவன் ஒலி ஊடுருவும் ஆனால் எங்கள் மரம் கதிரவனின் ஒலியை தரை தொட அனுமதித்தது இல்லை.
மூன்று பேர் சேர்ந்தால் கூட கட்டியணைப்பது சிரமம். அவ்வளவு பருத்த மரம். நானும் சில புளிய மரங்களை பார்த்திருக்கிறேன் “மண்டியிட்ட யானை“ கணக்காக கீழே வளைந்து தரையை தொட்டுக் கொண்டிருக்கும். பால் மறவா பாலகர்கள் கூட கிளை பிடித்து ஏறி ஊஞ்சல் ஆட அனுமதிக்கும்.
 இந்த விஷயத்தில் எங்கள் மரம் கண்டிப்பான பேர்வழி. பெரியவர்கள் கூட ஏணியின் உதவி இல்லாமல் அதன் கிளை பற்ற இயலா வண்ணம் ஓங்கி உயர்ந்தது. அருகில் உள்ள மாமரத்தில் நாங்கள் நுனிக் கொம்பு வரை ஏறி உள்ளதிலேயே கடைசி மாங்காய் வரை பறித்து தின்றிருக்கிறோம் ஆனால் இந்த புளியமரத்திடம் எங்களால் கடைசி வரை ஜெயிக்க இயலவில்லை.
புளியமரம் காய்க்கத் தொடங்கியவுடன் நாங்கள் மரத்தை அன்னாந்து ஏக்கமாய் பார்த்த வண்ணம் சுற்றி சுற்றி வருவோம். வடை சுட்டுக் கொண்டிருக்கும் அம்மா பிள்ளைகளுக்காக சுடும் போதே ஓரிரு வடையை ஏமாந்து போகக் கூடாதென்று எடுத்துக் கொடுப்பார். அதுபோல புளியமரம் எங்கள் மீது இரக்கம் கொண்டு ஒன்றிரண்டு செங்காயை வீசும். தரையில் வீழ்ந்தவுடன் பாய்ந்து சென்று எடுத்துக் கொள்வோம்.
“செங்காய்“ புளியானது காயாக இருக்கும் போது ஓட்டுடன் ஒட்டி உறவாடும். செங்காயாகும் போது அந்த உறவு விரிசல் விடும்.
உங்கள் காதலியின் முகத்தை முற்றிலும் புதிய பரிமாணத்தில் காண வேண்டுமானால் அவளிடம் ஒரு புளியங்காயை கொடுத்து கடிக்கச் சொல்லுங்கள். அந்த புளிப்புத் தாங்காமல் அதே நேரம் அதில் கிரங்கி கண்மூடி “ஸ்ஸ்…அப்பா” முகத்தை அஷ்ட கோணலாக்குவாள். புளியங்காயை பற்றி நினைக்கும் போதே நாவில் புளிப்பு உணரப்பட்டு நீர் சுரந்து விடும். புளியங்காய் பற்றி “உள்ளத்தால் உள்ளளும் தீதே“ , “ச்ச்..ட்“ அடச்சே கீ போர்டில் ரெண்டு சொட்டு எச்சில் விழுந்து விட்டதே.

“செங்காய்“ பருவம் மனிதர்களின் குமரப்பருவம்(adolescent) மாதிரி. இந்தப் பருவத்தில் பையன்களும் பெண்களும் பாதுகாப்பாய் கரம் பற்றி இருந்த பெற்றோரிடம் இருந்து தங்கள் கரங்களை மெல்ல விடுவித்துக் கொள்வர். அது போல இது காரும் தங்களை பாதுகாத்த ஓட்டிலிருந்து மெல்ல புளி தங்களை விடுவித்துக் கொள்ளும். ஆனால் சுவையோ இனிப்பும் அல்லாது புளிப்பும் அல்லாத ஒரு கலவையான சுவை. கடிக்கும் போது மாவுமாதிரி வழுக்கிக் கொண்டு கொட்டை தனித்து பிரியும். எவ்வளவு கடும் புளிப்பு கொண்ட புளியை உடைய மரமாயினும் செங்காய் மட்டும் வெல்லக் கட்டி தான்.
புளி நன்கு பழுத்து விட்டால் ஓட்டினை முற்றிலும் விவகாரத்து செய்து உள்ளே ஒடுங்கிக் கொள்ளும். எங்கள் மரத்து புளியானது ஓடு என்னும் பெட்டியில் பத்திரமாக நரம்பினால் முடிந்து வைத்த “பஞ்சாமிர்தம்” என்று சொன்னால் அது மிகை அல்ல. அப்படி ஒரு இனிப்பு சுவை கொண்ட புளி . “யப்பா என்னா இனிப்பு” என்று சிறுவர்களின் கல்லடி படும் எங்கள் புளி “காய்த்த மரம்” பழமொழி எவ்வளவு உண்மை “காய்த்த மரம் கல்லடி படும்”
ஓடு உடைக்க வசதியாக இருக்க வேண்டும் என வாசலில் காய வைத்தால் பாதையோடு போவோர் வருவோர் எல்லாம் ஒன்றை எடுத்து விண்டு வாயில் போட்டு நாக்கு மற்றும் கன்னக் கதுப்புகள் மூன்றையும் உள்நோக்கி இழுத்து மொத்த இனிப்பையும் ஒரே உறிஞ்சில் சுவைத்து விட பேராசை கொள்வார்கள்.
புளிசாதம் செய்யும் சமையல் விற்பன்னர்கள் எல்லோரும் புளிரசம் வைத்தபின் சிறு துண்டு வெல்லக்கட்டியை போடுவார்கள் சுவை கூட்டுவதற்காக. ஆனால் எங்க மரத்துப் புளியை கரைத்து ஊற்றினால் போதும் புளி ரசத்திற்கு ஒரு தனி சுவை வந்துவிடும். பிரச்சினை என்னவென்றால் இந்த சுவை ரகசியம் “எங்கள் ஊர் அறிந்த“ ஒன்று. சற்று தாமதித்தாலும் காற்றில் இற்று விழும் புளியம் பழங்கள் எங்களுக்கு சொந்தமில்லை. இதன் பொருட்டு எங்கள் அம்மா ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுவார்.
புளியம் பழத்தில் இருந்து ஓடு நீக்குவது சற்று கடினமான விஷயம். காம்பினை சுற்றிலும் லேசாக தட்டி அப்படியே கூடாக பிரித்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். முதல் மரியாதை படத்தில் சிவாஜி மீன் சாப்பிடுவது மாதிரியெல்லாம் இதில் பண்ண இயலாது. நான் பல முறை முயன்று இருக்கிறேன். அரை ஓடு கூடாக வந்தாலே பெரும் வெற்றிதான். தரையில் ஒரே தட்டு தட்டி ’சினிமாவில் வில்லன் அடி வாங்கி விழும் போது நொறுங்கும் இற்றுப் போன மரச் சாமான்கள்’ போல நொறுக்க வேண்டும் பின்பு புளியோடு ஒட்டியிருக்கும் சில ஓட்டுத் துகல்களை தட்டிவிட்டு தனியே போட்டு விட வேண்டும்.
அதன் பின்னர் கொட்டை எடுத்தல் “ரொம்ப கஷ்டம்“ கையில் எண்ணை தடவிக் கொண்டு ஒரு கோணி ஊசி அல்லது ஊக்கு கொண்டு கீறி பிதுக்கி எடுக்க வேண்டும், ’வயிற்றில் ஒரு கீறு கீறி பிள்ளையை வெளியே எடுக்கும் மருத்துவரின் லாவகத்துடன்’ . புளி கொட்டை எடுக்கும் போது வீடெங்கும் புளியங்கொட்டை கறுப்பு முத்துக்களாய் சிதறி கிடக்கும்.
பிறகு மரத்துக்கும் புளிக்கும் தொப்புள் கொடி பந்தமாய் இணைக்கும்  நரம்பினை நீக்குதல். காம்பினை பிடித்துக் கொண்டு புளியினை இழுத்தால் பிரிந்து விடும். அந்தக் காம்பினைத் தூக்கி எறிந்து விடுவதில்லை. அந்த நரம்பு மண்டலம் எங்கள் வீட்டுக் குழம்புக்கு ஒரு மண்டலம் புளி வழங்கும்.
அடுத்து புளியங்கொட்டை அதை என்ன செய்வது? அது அடுத்த பதிவில். இதுவே சற்று நீண்டு விட்டது. இப்போதெல்லாம் பதிவு பதினைந்து வார்த்தைகள் தாண்டி விட்டாலே இளைய தலைமுறையினர் தாண்டி போய் விடுகிறார்கள். 

Tuesday, March 7, 2017

சக்கரைவல்லிக் கிழங்கு


சக்கரைவல்லி கிழங்கு

“இரத்தச் சர்க்கரை சமனின்மை“(sugar patients) உள்ளவர்கள் தயவு செய்து மேற்காண் பெயரைக் கூட உச்சரிக்காமல் நகர்ந்து போவது உத்தமம்.

பேரைக் கேட்டதும் “இந்து“ படத்தில் வரும் “சக்கரை வல்லிக் கிழங்கு நீ தான் சமைஞ்சது எப்படி…” என்ற பாடல் நினைவுக்கு வந்தால் நீங்கள் தமிழ் சினிமா பார்த்துக் கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டீர்கள் என்று அர்த்தம். எனக்கெல்லாம் சுத்தமாக ஞாபகம் வர்லீங்கோ(?!)

“உன் பேரைச் சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..” இந்தப் பாடல் காதலன் காதலி உறவுக்குப் பொருந்துமோ இல்லையோ எனக்கும் சக்கரைவல்லிக் கிழங்குக்கும் உள்ள உறவுக்கு மிக்கப் பொருத்தம்.

கொக்கி அறுந்த டவுசரின் முனைகளை முடிச்சு போட்டு மானம் காத்த சிறு பிராயம் தொடங்கி சொட்டை பின்னோக்கியும் தொப்பை முன்னோக்கியும் இறங்கும் எனது தற்போதைய கட்டிளம் காளைப் பருவம்( பாஸ் உங்க வயசு 40 பாஸ்) வரையில் இந்த சக்கரைவல்லிக் கிழங்கு ஆசை ‘ஹட்ச்“ நாய்க்குட்டியாய் பின் தொடர்ந்து வருகிறது.

“யாகாவாராயினும் நாகாக்க…“ வள்ளுவனின் இந்தக் குறட்பாவை  மட்டும் இந்தக் கிழங்கின் சுவை விஷயத்தில் என்னால் கடைபிடிக்க இயலவில்லை.

அப்போ எனக்கு ஏழு வயதிருக்கும் நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.( ஏழு வயசுன்னா இரண்டாம் வகுப்பு தானே ஏன் இந்த பில்டப்பெல்லாம்). இந்தக் கூட்டு வண்டி தெரியுமா? மாட்டு வண்டியில் பொருத்தமான “அக்ஸஸரீஸ்“ எல்லாம் இணைத்து மேற்புறத்தை உருளையை செங்குத்தாய் வெட்டி கவிழ்த்தது போன்ற அமைப்பால் கூரை அமைத்தால் கூட்டு வண்டி ரெடி. கோவிலுக்கு வண்டிக் கட்டிக் கொண்டு செல்வார்கள். திருமண காரியங்களில் மணப் பெண்ணை அழைக்க இந்த கூட்டு வண்டி பயன் படுத்துவார்கள். ( இப்போ முயற்சித்தீர்கள் என்றால் திருமணம் நின்று போவது திண்ணம்). அப்புறம் இந்த சக்கரைவல்லிக் கிழங்கு இந்த வண்டியில் தான் வைத்து விற்பார்கள்.

மாட்டு வண்டியில் உட்காரும் பரப்பில் கிழங்கின் பச்சையான கொடியினை பரப்பி அதன் மேல் உறுத்தாமல் இருக்க கோணி சாக்கினை விரித்து குறைந்தபட்சம் இரண்டு பேர் அமர்ந்திருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று மூட்டைகளில் சக்கரைவல்லிக் கிழங்கு வைத்திருப்பார்கள். ஒரு தராசு ஒன்று இருக்கும். வண்டியை இழுக்கும் மாட்டுக்கு பசி எடுக்கும் போதெல்லாம் இந்த பச்சைக் கொடியை இழுத்து போடுவார்கள்.

“சக்கரவல்ல்லிக் க்க்கிழங்ங்..கே….” என்று உரத்தக் குரலில் ஒலி எழுப்புவார்கள். என் போன்ற சிறார்க்கு எல்லாம் இந்தக் குரல் “செந்தேன் குழல்”

பெரும்பாலும் எவரும் காசு கொடுத்து கிழங்கு வாங்குவதில்லை. “ச்சீச்சீ“ நீங்க நினைக்கிற மாறி இல்லைங்க காசுக்கு பதிலா நெல் அல்லது நிலக்கடலை போன்றவற்றை கொடுத்து வாங்கிக் கொள்வோம் பண்டமாற்று முறை அமலில் இருந்த காலம். வண்டி வீதி வழி போகும். வேண்டியவர்கள் “ஏ கிழங்கு நில்லுங்க“ என்று நிறுத்தி வாங்க வேண்டியது.

வண்டி எங்கள் வீட்டைக் கடக்கும் போது நான் அம்மாவிடம் போய் கெஞ்சுவேன்.

 “சரி நிக்கச் சொல்லு வாங்குவோம்“ என்று கூறிவிட்டு போய் அடுக்குப் பானைகளை (தானியங்கள் நிரம்பிய பெரிய பானைகளை அடுக்கடுக்காய் சுவற்றின் மூலைகளில் சாய்த்து வைத்து இருப்பார்கள்) திறந்து பார்த்தால் அது காசு தீர்ந்த “ஏடிஎம்“ ஆக பல் இலிக்கும்.
“அப்பன்னா குதிர்ல இறங்கி எடு” என்பார்கள்.
 “யப்பா நான் நாலு எடம் போவணும் வெரசா வாப்பா!“ என்று வண்டிக்காரர் அவசரப்படுத்துவார்.
“அவசரத்துல கை விட்டா அண்டாவுல கூட கை நுழையாது“ என்பது போல வழக்கமாக ஒரே துள்ளலில் ஏறும் குதிரில் இப்போ ஏறுவது ரொம்ப கடினமாக உள்ளது.

 “சரிப்பா எடுத்து வைங்க வரும் போது நிப்பாட்டுறேன்” என்று கூறி விட்டு “எல சம்முவம் உட்றா போவட்டும்“ என்று கிளம்பி விட்டார்கள். திரும்பி வருவதற்குள் கிழங்கு தீர்ந்து விடக் கூடாதே என்று இஷ்ட தெய்வங்களை எல்லாம் குதிருக்குள் இருந்தபடி வேண்டிக் கொண்டேன்(அப்போ விவரம் அறியாமல் பெரும் பக்தி மானாக இருந்தேன்).

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடுத்த முறை அவிப்பதற்கான நெல்லையும் சேர்த்து என்னை வைத்தே எடுத்து விட்டார்கள். “ஏம்மா ஒரு ஐந்து கிலோ வாங்கிக்கலாம்மா“ என்றேன். “உதைபடுவே படுவா“ என்று திட்டிக் கொண்டே ஒரு கிலோ கிழங்கிற்கான நெல்லை மட்டும் என்னிடம் கொடுத்தார்கள். நான் அதை வைத்துக் கொண்டு ரோட்டில் உக்காந்து கொண்டேன். நிறுத்தாமல் சென்றால் சாலை மறியல் செய்வதாய் உத்தேசம்.

உலகத்திலேயே வெகு இலகுவாக மிகச் சுவையான ஒரு தின்பண்டம் செய்யும் முறை ஒன்று உண்டென்றால் அது சக்கரைவல்லிக் கிழங்கு செய்யும் முறைதான். கிழங்கினை அலசி முனைகளை வெட்டி நீக்கி குறுக்காக இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி அகலமான மண்சட்டியில் கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் வைத்து தேவையான அளவு உப்பு போட்டு வேக வைக்க வேண்டியது. வேக வைப்பதற்கு முன்பு கிழங்கின் தோல் கிழங்கோடு அன்றில் பறவை

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...