Thursday, April 25, 2024
ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை
ஆசிரியப் பணி அறப்பணி!!
இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற்றும் செறுப்பு அளவு எடுப்பவர் என்று நாள் தோறும் புதுப் புதுப் பணிகள் அணிவகுத்து தான் வருகின்றன.
“நானும் நல்லவன்னு சொல்லிட்டானே என்று எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது” என்ற வடிவேல் கதை ஆகிவிட்டது எங்க கதை.
தேசிய அளவிலான பெரும் பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமின்றி அனைத்து வகைத் தேர்தல் பணி என்று எல்லாமே எங்களை நம்பியே ஒப்படைக்கப் படுகின்றன.
இந்த நாடாளுமன்ற தேர்தல் பணியில் நாங்கள் பட்ட பாட்டினை சொல்லவே இந்த கட்டுரை.
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பணியாளர் விவரங்களை சேகரித்து விடுவார்கள். ராசி நட்சத்திரம் தவிர அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட வேண்டும்.
தேர்தல் பணியில் இருந்து தப்பித்து விடலாம் என்று விண்ணப்பத்தை கொடுக்காமல் இருந்துவிட இயலாது. விண்ணப்பங்களை பெற்று Pay roll ல் உள்ள பெயர் பட்டியலோடு அலுவலகம் வாரியாக ஒப்பிட்டு (என்னா ஒரு வில்லத்தனம்!) “ஓலை“ அனுப்பி தெறிக்க விட்டுவிடுவார்கள்.
எங்கள் பள்ளி தேர்தல் விண்ணப்பங்களில் என்னுடையதை மேலே வைத்து சற்று இறுக்கமாக தைத்து கொடுத்து விட்டேன். ஓவரா தைத்த காரணத்தினால் பேப்பர் கிழிந்து விண்ணப்பம் காணாமல் போய் விட்டது. கடைசிநேரத்தில் “பின்வரும் தலைமையாசிரியர்கள் விண்ணப்பம் வழங்கவில்லை“ என்று வேலைக்கே உலை வைக்கும் ஓலை வந்துவிட்டது. உடனே புதிதாக விண்ணப்பம் தயாரித்து மூச்சு வாங்க ஓடி அன்றைக்கே கொடுத்துவிட்டேன்.
கடைசியில் என்ன ஆகிவிட்டது என்றால் கடைசி ஆளாக விண்ணப்பம் வழங்கிய எனக்கு மட்டும் தேர்தல் பணி வந்துவிட்டது. எங்கள் பள்ளி ஆசிரியர்கள் யாருக்கும் வரவில்லை. “உங்குத்தமா எங்குத்தமா யார நானும் குத்தம் சொல்ல” என்று பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டே முதல் கட்ட பயிற்சிக்கு சென்று வந்தேன்.
இரண்டாம் கட்ட பயிற்சிக்கு முதல் நாள் எங்கோ பரண்மேல் இருந்த மீதி விண்ணப்பங்களை கண்டு பிடித்து மீதமுள்ள ஆசிரியர்களுக்கும் பணி வழங்கி விட்டார்கள்.
பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை மாலை செய்தித்தாளை பார்ப்பதைக் காட்டிலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நமக்கு எந்த ஊரில் தேர்தல் பணி வழங்கப் பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது தான்.
நிச்சயமாக மாவட்டத்திற்குள் இருக்கும் ஒரு கேள்விப் படாத ஊரில் தான் பணி வழங்குவார்கள்.
20 விழுக்காடு பணியாளர்களை ரிசர்வ் என்று உட்கார வைத்திருப்பார்கள். பணியில் இருக்கும் அலுவலர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ரிசர்வில் உள்ளவர்களை கதறக் கதற இழுத்து வந்து பணி வழங்குவார்கள்.
என்னுடைய 22 ஆண்டு சர்வீஸில் எந்த தேர்தல் பணியிலும் எனக்கு ரிசர்வ் வந்ததே இல்லை. தேர்தல் ஆணையத்தில் Randomisation செய்யும் கணினி கூட “ஒரு திறமையான தேர்தல் அலுவலரை“ விட்டுவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக வேலை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
எனக்கு இந்த முறை பணி வழங்கப்பட்ட கிராமத்தின் பெயரை பாதுகாப்பு காரணங்களுக்காக ( ”யாருடைய பாதுகாப்பு?” ”என்னுடையது தான்”) ”எக்ஸ்” என்றே குறிப்பிட்டு விடுகிறேன்.
போற ஊருல இரவு உணவு ஏற்பாடு ஆகி இருக்கும். எனவே மதிய உணவை ஜெயங்கொண்டத்தில் உள்ள பாலாஜி பவனில் ஃபுல் கட்டு கட்டிக் கொண்டேன். முன்ன பின்ன ஆனால் தாங்கணுமே.
பள்ளி வளாகத்தில் நுழைந்த உடன் ஷாமியானா பந்தல் பந்தாவாக வரவேற்றது. கிராம நிர்வாக அலுவலரும் வரவேற்றார். 100 டிகிரி வெயிலில் கொதிக்கும் தார் சாலையில் வந்த களைப்பு தீர பூத் உள்ள வகுப்பறையில் குப்புற அடித்து படுத்துவிடலாம் என்று ஓடோடி வந்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
கதவை திறந்த மாத்திரத்தில் மும்பை கேட் வே ஆஃப் இண்டியாவில் புறாக்கள் பறப்பது போல வௌவால்கள் பட பட வென பறந்து வெளியே வந்து திகிலை கிளப்பியது.
சினிமாக்களில் ஹீரோ காலை வேகமாக தரையில் ஊன்றினால் புழுதி பறக்கும் அது சுத்தமான டைல்ஸ் போட்ட தரையாக இருந்தாலும் சரி பூங்காக்களில் இருக்கும் பேவர் பிளாக் தரையானாலும் சரி புழுதி பறந்தால் தான் சண்டையில் பொறி பறக்கும் எஃபக்ட் வரும் அல்லவா.
ஆனா எந்த சண்டை சச்சரவும் இல்லாமலே நான் கால் வைத்த மாத்திரத்தில் புழுதி பறந்தது அந்த பூத் இருந்த அறையின் தரையில். வௌவால்களின் படபடப்பு புழுதி பறந்த எஃபக்ட் இதையெல்லாம் ஒரு சில பழைய திகில் படங்களில் மட்டுமே பார்த்திருந்த சக தேர்தல் அலுவலர்கள் எல்லோரும் மூட்டை முடிச்சுகளோடு முப்பது அடி தூரம் ஓடிவிட்டார்கள்.
அப்புறம் ஆள் பிடித்து அறையை தண்ணீர் தெளித்து கூட்டச் செய்து புழுதியின் கோபத்தினை தற்காலிகமாக தணித்தோம். ”ஒரு ரெண்டு நாளைக்கு பொறுத்துக்கங்கப்பு!!”
எங்கள் பள்ளி பூத் இருந்த அறையை நான்கைந்து முறை வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு கட்டிடத்தின் வெளிப்புறம் பெரிய லைட் உள்ளே இன்னும் இரண்டு லைட் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். இப்படி தெரிந்திருந்தால் இருந்த ரெண்டு ஃபேன்களையும் நானே ஸ்டூல் போட்டு ஏறி கழட்டியாவது எக்ஸ்ட்ராவாக இரண்டு ஃபேன்களை வாங்கி இருக்கலாம்.
ஆனால் நான் போன அந்த ”எக்ஸ்” ஊரில் இந்த மாதிரி எந்த சடங்கு சம்பிரதாயங்களையும் சம்மந்தப் பட்ட அலுவலர்கள் ஆற்றவே இல்லை. அதிகாரிகள் கேட்ட போதெல்லாம் “ஐயா நம்ம ஏரியாவில் இருக்கும் பூத் எல்லாமே சும்மா தக தகன்னு கண்ணாடி மாதிரி ஜொலிக்குதுங்கய்யா” என்று கூறிவிட்டு வாளாவிருந்து விட்டார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.
பில்டிங் ரூஃப் இரண்டு இடங்களில் பெயர்ந்து கொண்டு இருந்தது. ஃபேனை ஐந்தில் வைத்தால் ஒட்டு மொத்தமாக பெயர்ந்து கொண்டு தொபீர் என்று கபாலத்தில் விழுவது போல பயம் காட்டியது. ஆனால் சூழலோ “ஃபேனை பன்னெண்டுல வைடி மாலா” என்பது போல வியர்த்து கொட்டியது.
என்னுடன் வந்த சக அலுவலர் என்னை பார்த்த பார்வையில் இருந்து அவர் மைண்ட் வாய்ஸை நான் கண்டுகொண்டேன். “நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது“
“டேய் புலிகேசி வெளியே வாடா“ என்பது போல ஒரு பிளிரல் பார்த்தால் கிராமத்தில் இருந்து ஒரு வயதானவர் தேனீர் எடுத்து வந்திருந்தார். “ஐயா ஒரு முப்பத்தாறு மணி நேரத்திற்கு உங்க சத்தத்தின் அளவை ஒரு ஐம்பது டெசிபல் குறைத்துக் கொள்ளுங்கள் ஐயா இல்லன்னா பில்டிங் இடிச்ச கேசுல உள்ள போய்டுவீங்க” என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன்.
வெளியே போனால் எதிரே இருந்த சத்துணவு மையக் கட்டிடத்தின் அருகே “இடிக்கப் பட வேண்டிய கட்டிடம் அருகே செல்லாதீர்கள்“ என்கிற போர்டு கிடந்தது.
“மேடம் ஆக்சுவலா இந்த போர்டு அந்த பூத் கட்டிடத்தில் தான் இருந்திருக்கணும்?“ என்று விஏஓ விடம் காமெடியாக கூறினேன்.
“சார் அந்த போர்டு நேற்றுவரை அங்கதான் இருந்தது“ என்று பீதியை கிளப்பினார்.
அப்போது தான் அடுத்ததாக ஒரு நான்கு பேர் கொண்ட அடுத்த படை வந்தது.
“என்ன மேடம் ரெண்டு பூத்தா?“ என்றேன்.
“ஆமா சார் அந்த ரூம் நடுவுல ஸ்கிரீன் போட்டுக்கோங்க”
“ஆமா, இருக்குறது புறாக் கூண்டு அதுலு பார்ட்னர்ஷிப் வேற” என்று அரசு பட வடிவேல் போல அங்கலாய்த்தபடி தேனீர் அருந்தினோம்.
இவ்வளவு ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு என்னவென்றால் எங்க பூத்துக்கு 400 ஓட்டு பக்கத்து பூத்துக்கு 1000 ஓட்டு.
எங்க பள்ளி வளாகத்தில் ஒரு பூத் மட்டுமே அதற்கே தேவையான மேசைகள், நாற்காலிகள், ஏஜெண்ட்டுகள் அமர இருக்கைகள், ஓட்டிங் கம்பார்மெண்ட் அடிக்க ஏதுவாக பெரிய பிளைவுட் டேபிள் என்று எடுத்து வைத்து இருந்தோம். இருபால் ஆசிரியர்களின் கழிவறைகளையும் சிறப்பாக சுத்தம் செய்து வைத்திருந்தோம்.
ஆனால் நமக்கு வாய்த்த தலைமையாசிரியர் மிக மிக திறமைசாலி மற்றும் சாமர்த்தியசாலி. ஆமாம், பாழடைந்த மண்டபத்தை கூட்டாமல் கூட கொடுக்கிறோமே என்கிற குற்ற உணர்வு கிஞ்சிற்றும் இல்லாதவர். அதே வேளையில் பூத் இடிந்து விழுந்தால் ஃபர்னிச்சர் டேமேஜ் ஆக வாய்ப்பு இருக்கிறதே என்கிற அக்கரையில் இரண்டு பழைய மேசைகள் தவிர எதையுமே விட்டு வைக்க வில்லை.
ஆனால் நாங்கள் விடுவதாக இல்லை. அவர் திரும்பி வந்து எங்க மேல கேஸ் போட்டாலும் பரவாயில்லை என்று கிராம உதவியாளர் வசம் இருந்த பள்ளி சாவியை வாங்கி நாற்காலிகளை எடுத்துக் கொண்டோம்.
இதற்கிடையில் இயற்கை உபாதை கழிக்க கழிவறை சென்ற சக அலுவலர் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். “சார் பாத்ரூம்ல தவளை சார்” என்றார். ஆமாம் அந்த கழிவறை தவளைகளின் குடியிருந்த கோயில். இந்த பள்ளி ஜீவகாருண்யத்தின் மொத்த உருவமாக இருக்கிறதே.
“என் ஆள அடிச்சது எவண்டா“ என்கிற தோரணையோடு கதவைத் தள்ளினேன். அங்கே ஜன்னல் மேலே இருந்த இரண்டு தவளைகள் என்னை உற்று நோக்கியபடி கிஞ்சிற்றும் பயப்படாமல் இருந்தன. “காலை மட்டும் உள்ளே வைத்து பாரடா, கபாலத்தை கவ்வுகிறேன்“ என்று அவை சூளுரைப்பது போல தெரிந்தது.
“சார் நான் பக்கத்துல இருக்கிற ஏரிக்கே போய்ட்டு வந்து விடுகிறேன் சார்” என்று வேகமாக கிளம்பினார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியதே என்று வருந்திய அந்த வேளை இருள் லேசாக கவ்வியிருந்தது.
“சார் அங்க ஏரிபகுதியில் பாம்பு இழையுது சார்“ என்று ஈனஸ்வரத்தில் வருத்தத்தோடு கூறினார். அடுத்த நாள் கிளம்பும் வரை ஐம்புலன்களையும் அடக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப் பட்டார்.
நானெல்லாம் தவளையை மதிக்கறதே கிடையாது. பாம்பே வந்தாலும் பதறாம சிதறாம (கவனத்தை சொன்னேன்) போற ஆளு. அதனால் துணிந்து கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றேன். பார்த்தால் தாழ்ப்பால் கிடையாது. Necessity is the mother of Invention ஆமாம், புதியதொரு யோகா பொசிஷனை அந்த இக்கட்டான சூழல் எனக்கு பயிற்றுவித்தது.
இரவு உணவு முடிந்த பிறகு தூங்குவதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்களுடன் உள்ள இரண்டு பெண் ஆசிரியர்கள் பள்ளியில் தலைமையாசிரியர் அறையில் உறங்கினர்.
காவல்துறையினர் இருவரும் வராண்டாவில் படுத்திருந்தனர். எங்கள் பூத்ஆசிரிய நண்பர் பள்ளியின் மற்றொரு அறையை திறந்து படுத்துக் கொண்டார்.
பக்கத்து பூத்தின் தலைமை அதிகாரியாக வந்திருந்த மற்றுமொரு தலைமையாசிரிய நண்பர் “விழுந்தா நாட்டுக்கு விழாவிட்டால் வீட்டுக்கு“ என்று வீரவசனம் பேசியபடி பூத் அறையில் ஃபேனுக்கு அடியிலேயே படுத்துக் கொண்டார். ஏனென்றால் வாக்கு இயந்திரத்தை உயிரினும் மேலானதாக மதித்து இந்திய ஜனநாயகத்தை கட்டிக் காக்க வேண்டும்.
ஆகவே அந்த பேய் பங்களாவில் வாக்கு இயந்திரத்தை கட்டியணைத்தபடி உறங்கியாக வேண்டும். ஆனால் உறக்கம் தான் வரவே இல்லை. நானும் சுற்றி சுற்றி வந்து பார்க்கிறேன் என்னை தவிர வளாகத்தில் அனைவருமே நிம்மதியாக உறங்கினார்கள். இரண்டு பேர் குட் நைட் மணிகண்டன் கணக்காக குறட்டை வேறு விட்டு வயிற்றெரிச்சலை கிளப்பினார்கள்.
இரண்டரை மணிக்கு லேசாக உறக்கம் தழுவியது. சரியாக மூன்றரைக்கெல்லாம் பக்கத்து பூத் சார் வந்து எழுப்பி விட்டார். சார் எந்திரிங்க நானெல்லாம் குளிச்சுட்டேன் பாருங்க என்றார். “உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்” என்றபடி எழுந்தேன்.
வாக்குப் பதிவு செவ்வனே நடைபெற்றது. எங்களுக்கு நானூறு வாக்காளர்கள் தான் என்பதால் மதியத்திற்கு மேல் சும்மாவே தான் உட்கார்ந்திருந்தோம். ஆனால் பக்கத்து பூத் மாலை ஆறுமணி வரை பரபரப்பாகவே இருந்தது.
வாக்கு பதிவை க்ளோஸ் செய்து மிஷின்களை அவற்றுக்குறிய பெட்டிகளில் வைத்து சீல் வைத்து விட்டு டாக்குமெண்ட்களை அதற்குறிய கவர்களில் வைத்து விட்டு “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…“ என்றபடி காத்திருந்தோம் காத்திருந்தோம் இரவு இரண்டு மணி வரை காத்திருந்தோம்.
முதல் நாள் வேறு ஒருமணி நேர போதா உறக்கம் ஆகையால் வாக்குபதிவு இயந்திரத்தை ஒட்டி பெஞ்சை போட்டு லேசாக கண்ணயர்ந்தேன். இரண்டரைக்கு மண்டல அதிகாரி பொட்டி எடுக்க வந்து எழுப்பினார். “ஆமா, நான் எங்க இருக்கேன், நீங்க எல்லாம் யாரு” என்று ஃப்ரண்ட்ஸ் பட சார்லி கணக்காக ஒரு பத்து நிமிடங்கள் தட்டு தடுமாறி பிறகு சமாளித்தேன்.
மூன்று மணிக்கு வண்டியை கிளப்பி, வழியில் இரண்டு நைட் கடைகளில் தேனீர் அருந்தி விட்டு அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்து படுத்தேன். காலை ஒன்பதரைக்குத்தான் எழுந்தேன். ஆக அரசு எங்களை நம்பி ஒப்படைத்த ஒரு மகத்தான பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தி மனதில் ஏற்பட்டது.
பள்ளிக் கட்டிடம், கழிவறை, ஃபர்னிச்சர் வசதிகள் என ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அந்த கிராம நிர்வாக அலுவலர் அவரால் இயன்ற அளவில் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தார். அது போல கிராமத்தினர் சிறப்பான முறையில் உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். வாக்குப் பதிவு முடிந்த பிறகும் கூட இரவு உணவை சிறப்பாக ஏற்பாடு செய்து வழங்கினார்கள்.
ஏஜெண்டுகளும் சரி வாக்காளர்களும் சரி எந்த வித சிறு வாக்குவாதமோ விதிமீறலோ இன்றி நான் கூறிய சட்டதிட்டங்களை முறையாக அனுசரித்து வாக்குப் பதிவு மகிழ்ச்சியாக முடிய ஒத்துழைப்பு வழங்கினார்கள். அந்த வகையில் அந்த “எக்ஸ்“ கிராமத்தை நினைத்து மகிழ்ச்சி தான்.
Subscribe to:
Post Comments (Atom)
First Look முக்கியம் பாஸ்!!
First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
அருமை ஐயா.
ReplyDeleteSuperb Sir, antha oor pera Sollunga. Comedya erukku.
ReplyDelete