Friday, January 12, 2024

மலையாளக் கரையோரம் -2

மலையாளக் கரையோரம் – 2
பள்ளிப் பயணம் ஆயத்தம்!! முதல் நாள் பயிற்சி சரியாக 9.30 க்கு துவங்கியது. பரஸ்பர அறிமுக நிகழ்வினை பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மரியதாஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார். முதல் அமர்வில் பள்ளிமேலாண்மைக் குழுவில் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் என்கிற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசிரியர்கள் அனைவரும் ஆறு குழுக்களாக வட்ட வட்டமாக அமர்ந்து கொண்டு தமிழகப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தீர்வுகள் என்றொரு பட்டியலை தயார் செய்யத் துவங்கினோம். அனைத்து குழுக்களும் தீயா வேலை செய்தார்கள். சிலர் அடிஷனல் பேப்பர் கூட கேட்டார்கள். அவர்கள் தொகுத்த மொத்த விஷயங்களை பின்வரும் வகையில் அடக்கி விடலாம். “சார் எஸ்எம்சி கூட்டத்துக்கு கூப்பிட்டாக்கூட குவார்ட்டரும் கோழிபிரியாணியும் கேட்கும் அளவுக்கு மக்கள் கெட்டுப் போய்ட்டாங்க சார்” என்று ஒரு தலைமையாசிரியர் அங்கலாய்த்தார். “அவர்களுடைய தினக்கூலியை விட்டுவிட்டு வர மாட்டேங்கிறாங்க சார்!!“ “சார், முதல்ல தலைமையாசிரியர்களுக்கு அவர்களுடன் இணைந்து பணிபுரிவதிலும் பள்ளி நடவடிக்கைகளில் அவர்களின் தலையீடுகளை அனுமதிப்பதிலும் ஒரு தயக்கம் உள்ளது“ என்று மண்டையில் அடித்தார் ஒரு தலைமையாசிரியர். “அவர்களுக்குறிய அதிகாரம் என்ன என்பது தெரியாமல் இருக்கிறார்கள், பள்ளி திட்டங்களில் நமக்கு என்ன தெரியபோவுது எல்லாம் தலைமையாசிரியர் பார்த்துக் கொள்வார்“ என்கிற அலட்சிய எண்ணம் உள்ளது என்றார் ஒரு ஆசிரியர் பயிற்றுனர். முக்கியமாக " ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பது போல ஒரே மாநிலம் ஒரே நாளில் எஸ் எம் சி கூட்டம் அதுவும் நேரம் நிமிடம் துல்லியமாக அட்டவணை போடுவது என்பது சரியில்லை, ஏனெனில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை அந்த நாளில் இருக்கலாம். எனவே எந்த வாரம் என்று மட்டும் அரசு கூறினால் போதுமானது மற்றபடி கிழமை நேரம் போன்றவற்றை தலைமை ஆசிரியர்களே இறுதி செய்து கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை அனேகமாக எல்லோரிடமிருந்து வந்தது. உரிமையாளர்களை அதிகாரப் படுத்துவது தான் பள்ளி மேலாண்மைக்குழுவின் அடிப்படை நோக்கம். பள்ளிக்கு என்னென்ன தேவைகள் என்பதை பார்த்து ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கூட்டத்தில் விவாதித்து பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை தயார் செய்து தீர்மானம் இயற்றி அரசுக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் அனுப்புவது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வேண்டும் என்றார் ஷியாம் சுந்தர். இவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். மதுரை பில்லர் ஹாலில் நடைபெற்ற தலைமையாசிரியர்கள் பயிற்சியில் குழந்தைகள் உரிமை பற்றி ஒரு இரண்டு மணிநேர வகுப்பினை அவ்வளவு சுவாரசியமான பொருள் பொதிந்த வகுப்பாக கொண்டு சென்றார். குரலில் தேய்வோ சோர்வோ கிஞ்சிற்றும் கிடையாது. பிரச்சனைக்கு தீர்வு சொன்ன தலைமையாசிரியர்களில் ஒருவர், “சார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இதற்கெல்லாம் ரூல்ஸ் போடுவதோ ரிசர்வேஷன் கொடுப்பதோ கூடாது. அந்த ஊரில் இருக்கும் பணக்கார குடும்பம், அல்லது பெரிய ஆள் இவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் பள்ளிக்கு நிறைய செய்வார்கள். அவர்கள் சொன்னா மற்றவர்கள் கேட்டுக் கொள்வார்கள்” என்று பள்ளிமேலாண்மைக்குழு சட்டகத்தின் அச்சாணியை கழற்றினார். ஷியாம் சுந்தரோ,“விடிய விடிய கதைகேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்கிறாரே” என்கிற தோரணையில் அவரை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். நானோ ஒரு தலைமையாசிரியரிடமே சமூக நீதிப் பார்வை கிஞ்சிற்றும் இல்லையே என்று தலையில் அடித்துக் கொண்டேன். ஏற்கனவே இரண்டுமுறை மைக்கை வாங்கி விட்டேன் மறுமுறை பிடுங்கினால் எனக்கு மைக்கடி நிச்சயம் என்பதால் அவருக்கு பதிலடி தரமுடியவில்லை. ஆரம்பத்தில் உறுப்பினர்களை ஆர்வமுடன் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு வரச் செய்ய அவர்களுக்கு அவர்களுடைய கூலிக்கு நிகரான ஊக்கத்தொகை வழங்கலாம் என்று பெரும்பான்மை ஆசிரியர்கள் கூறி இருந்தார்கள். ஒரு துவக்கப் பள்ளி தலைமையாசிரியரோ, நான் கூட்டம் நடக்கும் நாளில் எல்லாம் சிறு சிறு பாடல் பாடுதல் அல்லது விளையாட்டு போல வைத்து அவர்களுக்கு பரிசு தருகிறேன். எனவே ஆர்வத்தோடு கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றார். அன்று மதியம் கேரளப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அங்கே சிறப்பாக இயங்கி வரும் பெற்றோர் ஆசிரியர் கழக நடைமுறைகள் பற்றியும் மற்ற இன்ன பிற குழுக்கள் குறித்தும் ஏராளமான கருத்துகளை எடுத்து வைத்தார். மதியம் நான்காவது அமர்வில் அடுத்த நாள் பள்ளிகளுக்கு செல்ல குழுக்களை உருவாக்கினார்கள். 14 பேர் கொண்ட ஏழு குழுக்கள் அமைக்கப் பட்டன. ஏழு குழுக்களுக்கும் காலை ஒரு பள்ளி மதியம் ஒரு பள்ளி என்று 14 பள்ளிகளின் பட்டியல் தரப் பட்டது. குழுவில் ஒரே மாவட்டத்தினர், ஒரே அறையில் தங்கி இருப்போர் போன்று எதுவும் இணைந்து இருக்க கூடாது. புதியவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி நடவடிக்கைகளில் பெற்றோர் ஒத்துழைப்பு ஆகிய விஷயங்கள் மட்டுமே களப் பயண நோக்கமாக இருக்க வேண்டும். தேவையற்ற வினாக்களை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டார்கள். ஏற்கனவே எனக்கு வழித்துணையாக அரியலூர் மாவட்ட த்தில் இருந்து வரவேண்டிய வட்டார வள மைய ஆசிரியரும் இல்லை. எனது அறைத் தோழர்களும் இல்லை. முற்றிலும் புதிய குழுவில் பணியாற்ற வேண்டும். அடுத்த நாள் காலை ஏழு டெம்போ டிராவலர் வேன்கள் பயிற்சி மைய வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்தன. அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு வேனில் ஏறி அமர்ந்தோம். அந்தந்த குழு ஒருங்கிணைப்பாளர்கள் வருகைப் பதிவு செய்து கொண்டார்கள். கேரளப் பள்ளிகளின் இயங்குமுறை, பெற்றோர் பள்ளி ஒத்துழைப்பு என ஏராளமான விஷயங்களை கிரகித்து வர ஒரு பதினைந்து வினாக்கள் அடங்கிய பட்டியலோடு வேனில் ஏறி அமர்ந்தேன். “ஆமா, பள்ளிக்கூடத்தில் அப்படி என்னாத்த பாத்தீங்கோ“ என்ற உங்கள் கேள்விக்கு அடுத்த அத்தியாயத்தில் பதில் கூறுகிறேன்.

Thursday, January 11, 2024

மலையாளக் கரையோரம் – 1
“தைய்ய தைய்ய தைய்யா தைய்யா தக தைய்ய தைய்ய தைய்யா”- கேரளப் பயணம். சமக்ர சிக்ஷ அலுவலகத்தில் இருந்து பள்ளி மேலாண்மைக் குழு தொடர்பான ஒரு பயிற்சிக்கு கேரளா செல்ல உங்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம் என்றார்கள். “ஓ.கே சார், ஆனா எதுவா இருந்தாலும் பொங்கலுக்கு பிறகு வந்தால் போறேன் சார்” “கவலைப் படாதீங்க சார் ஜனவரி கடைசில தான் வரும் ” என்று தெம்பூட்டினார்கள். அப்படி சொன்ன அடுத்த ரெண்டாம் நாளே ஜனவரி இரண்டு அன்று மூட்டையை கட்டுங்க என்று மெயில் வந்து விட்டது. புத்தாண்டில் பள்ளி திறப்பு அன்று போக முடியவில்லையே என்று வருத்தமாகிவிட்டது. இருந்தாலும் பரவாயில்ல ஒரு ஓசி டூர் வாய்ப்பை விடலாமா என்று மூட்டையை கட்டி முதுகில் கட்டிக் கொண்டு வண்டி ஏறிவிட்டேன். என்னுடன் துணைக்கு வர வேண்டிய ஆசிரியர் ஒருவர் மருத்துவ காரணங்களால் கடைசி நேரத்தில் வரஇயலவில்லை. ஆக, சோலோ ஜர்னி தான். திருச்சி திருவனந்தபுரம் இன்டர் சிட்டி ரயிலில் ஏழு மணிக்கெல்லாம் ஏறி அமர்ந்து விட்டேன். பயிற்சி நடைபெறும் AGRICULTURAL COOPERATIVE STAFF TRAINING CENTER இடத்திற்கு செல்லும் வழிமுறைகள் பற்றி கூகுளை குடைந்து கொண்டிருந்தேன். “ஆமா ஆமா கேரளா தான், திருவனந்த புரம் தான், டிரெயினிங் தான்“ என்று பின் சீட்டில் இருந்து ஒரு குரல். “திருவனந்தபுரத்தில் ஏதோ அக்ரி ட்ரெயினிங் சென்டராம்...” முன்னாடி சீட்டில் இருந்து ஒரு குரல். இதற்கிடையே வாட்சாப்பில் டிரெயினிங்க்காக ஆரம்பித்த குழுவில் “இண்டர் சிட்டில வரவங்க யாரெல்லாம்” என்று போல் நடந்தது. மொத்த பயிற்சி எண்ணிக்கையில் கால்வாசி பேர் அந்த ட்ரெயின்ல தான் இருந்தோம். “அப்பாடா, நாம தனி ஆள் இல்ல நம்ம பின்னால தமிழ்நாடே நிக்கிது“ என்ற தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தேன். பக்கத்து சீட்டில் உள்ளவர்கள் இட்லி தோசை என கடை விரிக்க எனக்கும் நாவில் ஒரு கங்கை ஊற்றெடுத்தது. “சார் பேன்ட்ரி எந்த பாக்ஸ்?” என்றேன் அருகில் இருந்த ஒருவரிடம். பிக் பாஸ் ல் “எதே திருவள்ளுவரா” என்று கேட்ட ஜி.பி. முத்து போல ஜெர்க் ஆனார். எதிர் சீட் பெண் “சார் இந்த வண்டில பேண்ட்ரி எல்லாம் இருக்காது, மதுரைல டிபன் விப்பாங்க வாங்கிக்கோங்க“ என்றது காதில் செந்தேன்குழலாக ஒலித்தது. மதுரைல இறங்கி இட்லி பார்சல் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து ட்ரெயின் புறப்படும் முன்பாகவே பிரித்துவிட்டேன். உள்ளே பார்த்தால் அருமையாக மூன்று இட்லிகளும் சாம்பார் சட்னி என கட்டி வைத்திருந்தனர். சட்னியை பிரித்தால் உள்ளே ஒன்றுமே இல்லை, பேஸ்ட்டின் அந்திமக்காலத்தில் பிதுக்குவது போல முயற்சித்தால் கொஞ்சமே கொஞ்சமாக வந்தது. பயபுள்ள, சட்னி கரண்டிய தொடைச்ச பேப்பர பார்சலாக்கிவிட்டான் போல!! ஆரல்வாய்மொழியை (ஏங்க, இது ஊர் பேருங்க) நெருங்கும் போது ராட்சத காற்றாடிகள் கண்ணில் படத் துவங்கின. அவற்றை பார்த்த போது THE BOY WHO HARNESSED THE WIND என்கிற படம் தான் ஞாபகம் வந்தது. அங்கே தொடங்கிய பசுமை திருவனந்தபுரம் வரை கேப் விடாமல் தொடர்ந்து வந்தது ட்ரெயினில் வரும் போதே திருநெல்வேலிக்கார ஆசிரியர் ஒருவர் தெள்ளத் தெளிவாக வாட்சாப் குழுவில் பயிற்சி மையம் செல்ல வழி சொல்லி விட்டார். சார் இறங்கும் போது எங்கள விட்றாதீங்க என்று அவரை அழைத்து கூறிவிட்டேன். ஒட்டு மொத்த தமிழ்நாடே அவர் பின்னாடி தான் நிக்கும் என்று நினைத்து ட்ரெயினை விட்டு இறங்கி அவரிடம் போய் பார்த்தால் அவர் ஒரு தனிமரமாக நின்று கொண்டு இருந்தார். வழி தெரிந்து போனதால் மொத்த கூட்டமும் மூட்டையில் இருந்து அவிழ்ந்த நெல்லிக்காய்களாக சிதறிப் போனது. எப்போதுமே வித்தைகளை இன்ஸ்டால் மெண்டில் சொல்லித்தரணும், மொத்தமாக கொட்டிக் கவிழ்த்தால் கத்துக் கொடுத்தவனுக்கே மரியாதை இருக்காது போல என்கிற தத்துவைத்தை அவசரகதியிலும் கற்றுக் கொண்டு ஆட்டோ பிடித்தோம். சற்றேறக்குறைய நான்கு நாட்கள் திருவனந்தபுரவாசி ஆகிவிட்டதால் ரிட்டன் ட்ரெயினுக்கு “யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க“ என்று தனியே தன்னந்தனியே கிளம்பிவிட்டேன். திருவனந்தபுர சேட்டன்களுக்கு தமிழ்ல பேசினாவே தெளிவாகப் புரிகிறது. அவர்கள் மலையாளம் பரைஞ்சாலும் தெளிவா மனசிலாவுது. எத்தன படம் அமேசான்லயும் நெட்ஃபிளிக்ஸ்லயும் பாத்துருப்போம். முக்கியமா ஒரு விசயம், திருவனந்தபுரத்தில் பயணம் செய்யும் போது ஆட்டோவில் கூட சீட் பெல்ட்டை போட்டுக் கொள்வது உத்தமம். எந்த சாலையும் ஏற்ற இறக்கம் இல்லாமல் இல்லை. அதுவும் 45 டிகிரி ஏறுகிறது. இறங்கும் போதெல்லாம் இப்போ பிரேக் ஃபெயிலியர் ஆனா என்ன ஆவது என்கிற எண்ணம் வந்து வயிற்றைக் கலக்கியது. ரிட்டன் பயணத்தில் உஷாராக ஆட்டோ சேட்டனிடம் கேட்டு நல்ல கடையில் நேந்திரம் சிப்ஸ், உன்னி அப்பம், அப்புறம் கொஞ்சம் முறுக்கு மிக்சர் வாங்கிக் கொண்டேன். அப்படியே சப்பாத்தி குருமாவும். வரும்போது ஏசி பெர்த் தான் புக் பண்ணி இருந்தேன். சைட் லோயர் கிடத்தது. எதிர் வரிசையின் வலது புறம் ஒரு கேரள தம்பதி மற்றும் குழந்தைக்கு பெர்த்தை அடுக்கடுக்காக கொடுத்திருந்தார்கள். நான் ஏறிய உடன் சப்பாத்தியை பிச்சி கிடாசிட்டேன். வயித்துக்குள்ள தாங்க. டேஸ்ட் கொஞ்சம் கம்மிங்கிறதால அப்படி சொல்லிட்டேன். அந்த கேரளப் பெண்ணும் பையனும் குழந்தை பிடிவாதமாக கேட்டதால் அப்பர் பெர்த்தில் சேஃப்டி செய்து படுக்க வைத்து விட்டனர். (ஆழம் தெரியாமல் காலை விடுவது மட்டுமல்ல, உயரம் தெரியாமல் கையை விடுவதும் தவறு என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது பின்னாடி சொல்றேன்) இருவரும் ஒரு பெரிய மொந்தையான பார்சலை பிரித்தனர். அடுக்கடுக்காக மிருதுவான வாசமான பரோட்டாக்கள் அழகாக அடுக்கி வைக்கப் பட்ட பார்சல் அது. அதற்கு சைட் டிஸ் செம்ம திக்கான, காரசாரமான சிவப்பான சிக்கன் கிரேவி. வாசம் தூக்கி அடித்ததில் அப்பர் பெர்த்தில் எனக்கு தலை முட்டியது. நல்ல பெரிய வடிவான பரோட்டாவை இரண்டாக கிழித்து சிக்கனை உள்ளே வைத்து அரைமடியாக மடித்து அப்படியே வாயில் வைத்து (நம்மாளுங்க ஆப் பாயில் சாப்பிடும் லாவகத்தோடு) அவன் மெல்லும் போது எனது கங்கை நதி தொண்டை வழியாக இறங்கியது. அநேகமாக கணவன் மனைவி இருவரும் பதினைந்து பரோட்டாக்களை விழுங்கி செரித்திருந்தனர். “பாக்க டம்மி பீஸா இருக்க பயங்கரமான ஆளா இருக்கியேடா” என்று தான் தோன்றியது. பரோட்டா ஏக்கத்தில் சீக்கிரமாகவே உறங்கிவிட்டேன். இரவு பனிரெண்டு மணிக்கு கழிவறை செல்ல உந்துதல். எழுந்து மொபைல் டார்ச் அடித்து செறுப்பை தேடினால் ஒன்று தான் இருக்கிறது. எவனோ அரைத்துக்கத்தில் நடந்தபோது செறுப்பை எட்டி உதைத்துவிட்டான் போல. அதுவும் எங்கோ சென்று விட்டது. அப்படியும் போக வாய்ப்புள்ள அனைத்து இடங்களையும் பார்த்து விட்டேன். அடுத்த லோயர் பெர்த்தில் ஒரு இளம் பெண் உறங்கிக் கொண்டு இருந்தார். அங்கே டார்ச் அடிப்பது நான் தர்மடி வாங்க வழிவகுத்துவிடும் என்பதால் ஒற்றை செறுப்போடு கழிவறை சென்று நடராசரின் அனைத்து நடனமுத்திரைகளையும் பயன்படுத்தி சோலியை முடித்து வந்தேன். உறங்கியபடியே வந்ததில் மதுரை வந்ததே தெரியவில்லை. நல்வாய்ப்பாக மதுரை கடைசி நிறுத்தம். விடிந்தவுடன் வைகையில் அரியலூர் செல்ல ஏற்பாடு செய்திருந்தேன். மெல்ல மெல்ல கூட்டம் கரைந்தபிறகு செறுப்பை கண்டுபிடித்துவிட எண்ணி பின் தங்கினேன். மிகச் சரியாக நான் கணித்திருந்தது போல அந்த இளம் பெண் சீட்டுக்கு அடியில்தான் கிடந்தது. எதிர் சீட் குட்டிபாப்பா டாப் பெர்த்தில் கை நீட்டிக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள். நம்ம பரோட்டா தம்பதியினர் கைகளை உயர்த்தியும் டாப் பெர்த்தை தொட முடியவில்லை. அவளும் இவங்கள நம்பி குதிக்க தயாராக இல்லை. பரோட்டாவுக்காக பழிவாங்க இது நேரமில்லை என்று நானே அவளை தூக்கி இறக்கினேன். வைகை வர இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. ஆகவே ஏசி லௌஞ்சில் டிக்கெட் எடுத்து உட்கார்ந்து கொண்டே தூங்கினேன். வைகையிலும் ஏசிதான் புக் செய்திருந்தேன். ஓசில கிடைக்குதுன்னு ஏசில புக் பண்ணியது எம்மாம் பெரிய பிசகு என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். ஆமாம், அநேகமாக 5 டிகிரி வைத்திருப்பார்கள் போல. பயணத்தில் எங்குமே பயன்படுத்தி இராத அந்த ஜெர்கினை எடுத்து முதன் முறையாக போட்டுக் கொண்டேன். அப்படியும் குளிராகத்தான் இருந்தது.
அரியலூர் வந்ததே தெரியவில்லை. உள்ளபடியே வைகை விரைவு வண்டிதான். அரியலூர் வந்து இறங்கியவுடன் “தனியா போய் ஊர்சுற்றி விட்டா வர்ரீங்க?!” என்கிற கோபம் அருணிடம் இருந்தும் அவன் அம்மாவிடம் இருந்தும் என்னென்ன ரூபங்களில் வரப்போவுதோ என்ற பயம் மனதை லேசாக பிறாண்டியது. “மாணிக்கம் நீ கேரளாவில் என்ன செய்து கொண்டு இருந்தாய்?“ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது அடுத்த அத்தியாயத்தில்.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...