Saturday, May 14, 2016

இந்த முறை சு.சமுத்திரம் அவர்களின் நூல்.
வானொலி மற்றும் தொலைக்காட்சி யில் (AIR&DD)வேலை பார்த்தவாறே எழுத்துலகில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை  நிலை மற்றும் அவர்கள் மீதான அடக்குமுறை மற்றும் சுரண்டல்களை தனது நாவல்களிலும் சிறுகதைகளிலும் ஆவணப்படுத்தியவர். தனது 'வேரில் பழுத்த பலா' நாவலுக்காக 1990ல் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளி நூலகத்தை திறந்து புத்தகங்களை எடுத்த போது சு.சமுத்திரம் அவர்களின் 'வாடாமல்லி' நூலைக் கண்டேன். முன்னுரையில் அது 'திருநங்கைகள்' வாழ்க்கைப் பற்றிய நாவல் என்று இருந்ததால் சுவாரசியம் உந்தித் தள்ளவே எடுத்து ஒரே மூச்சில் படித்தேன். தன்னுள்ளே பெண்மையை உணரும்போது   தொடங்கி அவளது இறுதி வரையில் கதை இந்தியா முழுதும் பயணித்து அரவாணிகளின் வாழ்க்கைப்பாடு ,சவால்கள்,ஒடுக்குமுறைகள், புறக்கணிப்புகள் மற்றும் அவர்களுக்குள்ளான சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் என விரியும்.முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி கட்டுரையை விடவும் பன்மடங்கு மேலான ஆராய்ச்சி. திருநங்கைகள் பற்றி அவர்கூறியது இன்னும் என் நெஞ்சில் பசுமரத்து ஆணியாக உள்ளது. அது..' திருநங்கை என்பவள் ஆணின் உடலுக்குள் சிறைப்பட்டிருக்கும் பெண்' என்பதுதான். மேலும் கதைப்போக்கில் சிறுவனாக இருக்கும் போது 'அவன்' 'இவன்' என்றவர் திருநங்கை ஆனபின் 'அவள்''இவள்' என்பார். கதையின் இடையில் சொந்த ஊருக்கு ஆண்வேடம் தரித்து வரும்போது மறுபடியும் 'அவன்' 'இவன்' என்றே விளித்திருப்பார்.
இவரது 'கே செக்ஸ்' பற்றிய ஒரு குறுநாவலும் படித்திருக்கிறேன்.
இப்போது அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் எடுத்த புத்தகமான 'கோட்டுக்கு வெளியே' நாவல் பற்றி. விருதுநகர் பகுதியில் வாழ்ந்த நாடார் மக்களைப்பற்றிய களம். கதை அறுபதுகளின் காலகட்டத்தில் நடப்பதாக தெரிகிறது. நேர்மை , துணிவு மற்றும் சுயமரியாதை மிகுந்த கிராமத்து ஏழை நாடார் (பனையேரி) பெண் உதயம்மா. ஒவ்வொரு இனத்தினுள்ளும் ஏழை பணக்காரர் இடையேயான intra caste  untouchability பற்றி கதை உரக்கப் பேசுகிறது. மாரிமுத்து எனும் பணக்கார நாடார் தனது அவலட்சணமான முதிர்கன்னி மகள் சரோஜாவை கரையேற்ற உதயம்மாவைக்காட்டி மாப்பிள்ளை வீட்டாரை ஏமாற்றுகிறார். இதனை அறிந்த உதயம்மா சரோஜாவுக்கு ஏற்படப்போகும் பின்விளைவுகளை எண்ணி மாப்பிள்ளையை பார்த்து உண்மையை கூறி சமாதானம் செய்து சரோஜாவையே மணம் புரிய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறாள். ஆனால் திருமணம் நின்றுவிடவே அதற்கு காரணமான உதயம்மாவை ஒழித்துக்கட்ட எண்ணுகிறார் மாரிமுத்து நாடார். அதை எவ்வாறு துணிவோடு உதயம்மா எதிர்கொள்கிறாள் என்பதே கதை.
கடைசி சில அத்தியாயங்களை கடந்த போது கட்டுப்பாடின்றி என் கண்களில் நீர் தாரை பெருக்கெடுத்தது. கடைசியாக கதை புரட்சிகர இனிய திருப்பமெடுத்து  தலித் மக்களின் உணர்வுகளைப் பேசி முடிகிறது. இந்த புத்தகம் நூலகத்திற்கு வந்து பல ஆண்டுகள் ஆயினும் நான்தான் முதலில் எடுத்தது. 

Sunday, May 8, 2016

நான் என்ன சொல்றேன்னா....

நான் என்ன சொல்றேன்னா....
ஈஷா குப்தா என்ற பெண் இந்தியாவை தனது பைக்கில் சுற்றி வரும் சாதனைப் பயணம் மேற்கொண்டவர். தனது அனுபவங்களை 'தி இந்து' வில் எழுதி வருகிறார். நேற்றைய பகுதியில் ஜார்கண்ட் மாநில பயண அனுபவங்களை கூறியிருந்தார். அது காடுகள் நிறைந்த தேசம். இன்று வரை அனைத்து ஊர்களுக்கும் மின்வசதி என்ற நிலை ஏற்படவே இல்லை. தொடக்கப்பள்ளிகள் எல்லா கிராமங்களிலும் இல்லை என்கிறார்.
தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆண்டு நாட்டையே குட்டிச்சவராக்கி விட்டதாக நாம் அங்கலாய்க்கும் திராவிட கட்சிகள் 90 களிலேயே எல்லா குக்கிராமங்களுக்கும் (மலைகிராமங்கள் உட்பட) மின்வசதி வழங்கி விட்டன. தொடக்கப் பள்ளி இல்லாத ஊர்கள் உண்டா?!
CCRT பயிற்சிக்கு சென்ற போது ஜார்கண்ட் மாநில ஆசிரியர்கள் 3 பேரை சந்தித்தேன். அவரது சம்பளத்தைவிட நம் மாநிலத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளரின் சம்பளம் அதிகம். இந்தி மொழியில் சரளமாகப் பேசும் அவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியவில்லை அவர்களிடம் பேசமுயன்று கொஞ்சம் இந்தி கொஞ்சம் பரதநாட்டியம் (கை கால் கண் இவற்றால் பேசவேண்டும் அல்லவா) கற்றுக் கொண்டது தான் மிச்சம்.
இந்தி எதிர்ப்பு மட்டும் நடத்தாமல் போயிருந்தால் நமது ஆங்கில அறிவும் அவர்கள் போலத்தான் இருந்திருக்கும். வெளிநாட்டுக்காரன் இண்டர்வியூவில் நம்மிடம் பரத நாட்டியம் ஆடியே நாக்கு தள்ளி ஆணியே புடுங்க வேண்டாம்னு ஓடியிருப்பான். வெளிநாட்டு வேலை கணினி தொடர்பான வேளைகளில் ஆதிக்கம் என தமிழ்நாட்டவர் உலக அரங்கில் கம்பீரமாக வலம் வர காரணம் இந்தியை 'தம்பி நீ கொஞ்சம் ஒதுங்கு' என்றதுதான்.
ஐய்யயோ இந்தி படிக்காமல் என் வாழ்க்கையே வீணாப் போயிடுச்சே இந்த கலைஞர் மட்டும் இல்லைன்னா நானும் இந்தி நல்லா படிச்சு ராஜஸ்தானுக்கு 'டைல்ஸ்' ஒட்டவோ அல்லது பீகாரில் கட்டிட வேலைக்கோ போயிருப்பேன் என்று புலம்புவோர் தனியே சொந்த முயற்சியில் 'இந்தி பிரச்சார சபா' மூலமாக கிட்டத்தட்ட இலவசமாக இந்தி பயிலலாம்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நிலை வந்ததால் தானே நமக்கு மத்திய அரசின் பல திட்டங்கள் வந்து சேர்ந்தது. தேசிய கட்சிகள் என்ன கரணம் போட்டாலும் இங்கே காலூன்ற முடியாததற்கு என்ன காரணம்? மாநில கட்சிகள் மீது மிகப்பெரிய அதிருப்தி இல்லாதது தானே!  மத்தியில் ஆளும் பாஜகவையே அனாதையாக அலைய விட்டிருக்கிறோம். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடெங்கும் மோடி என்ற ஊடகங்களால் உருவாக்கப்பட்ட அலை அடித்த போதும் இங்கு ஒரு சலசலப்பும் இல்லையே!
2G ஊழல் செய்தது திமுக தானே என்று சொல்வோரே சற்று கேளுங்கள். திமுக ஊழலற்ற பரிசுத்தமான கட்சி என்று சொல்வது எனது நோக்கமல்ல. அனைத்து கட்சியிலும் ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்வது இங்கே வாடிக்கை தான். 'அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டும் கார்பரேட் கம்பெனிகள் அதில் ஒரு பகுதியை துறை சார்ந்த அமைச்சருக்கு லஞ்சமாக வழங்கும் ' என்பதுதான் கட்சி பாகுபாடு இன்றி அனைவருக்குமான லஞ்ச சூத்திரம். அதற்கு திமுகவும் விதிவிலக்கல்ல.
அப்போது அந்த 'ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி'?!!
பகிரங்க ஏலம் மூலமாக 2G அலைக்கற்றையை எடுத்து ஏகபோக லாபம் ஈட்ட நினைத்த முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் செய்த கைங்கர்யம் தான். ₹176000.... க்கு ஏலம் எடுத்தவன் அந்த பணத்தை எங்கிருந்து லாபத்தோடு எடுப்பான்?! நம்ம பாக்கெட்டிலிருந்து தானே?!! அந்த ஏலத்தொகை கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்றே. 3G அலைக்கற்றையே 36000 கோடிக்குத்தான் ஏலம் போயிருக்கிறது என்பதை அறிக. நேற்று நான் போட்ட டேட்டா 1.5GB@₹264 போன மாதம் அதே விலை ஆனால்2GB ! டேட்டா பயன்படுத்தும் நண்பர்களே 3 மாதங்கள் தொடர்ந்து டேட்டா சேவை ஒரே விலையில் இருந்தது உண்டா?! பகிரங்க ஏலம் மூலமாக இப்போது மொத்தமும் அவர்கள் கையில். பொன்முட்டை இடும் வாத்தை அறுத்து பார்த்த கதைதான்.

Tuesday, May 3, 2016

ஒரு கடிதம் எழுதினேன்...

'அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்....'
'காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்...'
'ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்...'
'காலெமெல்லாம் காதல் வாழ்க...'
'நிலா நீ வானம் காற்று...'
'பூவே இளைய பூவே...
தம்பி ராமகிருஷ்ணா கூச்சப்படாமல் மாற்றங்களையும் படித்துக் காட்டவும்'
இந்தப் பாடல்கள் எல்லாம் கடிதம் வழி காதல் வளர்த்தவை. கடிதங்கள் பரிமாறாத காதலர்கள் அனேகமாக இல்லை எனலாம். இதுபோலவே கடிதங்கள் மீது காதல் இல்லாதவர்கள் இல்லவே இல்லை என்றே கூறலாம். அப்போதெல்லாம் நமது வீட்டின் முன்னால் தபால்காரர் நிற்பதைக் காணும் போது அவ்வளவு பரவசமாக இருக்கும். கணவனிடமிருந்து மனைவிக்கு, காதலனிடமிருந்து காதலிக்கு, பிள்ளைகளிடமிருந்து பெற்றோருக்கு என்று வகை வகையாக உறவுப்பாலத்தின் முக்கிய கண்ணியாக இருப்பதால் ஊரில் எல்லோருக்கும் பிடித்தமானவர் தபால்காரர்.
இப்போதைய தகவல் யுகத்தில் எதையும் உடனுக்குடன் பரிமாற இயல்கிறது. காத்திருப்பின் சுகம் மறைந்து போய்விட்டது. அப்போதெல்லாம் மரண செய்தி கூட குறைந்த பட்சம் 12மணி நேரமாகும் உரியவரை சென்றடைய. தந்தியை பார்த்ததுமே தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விடுவர். தந்தி என்றாலே மரணச்செய்தியாகத்தான் இருக்கும். இப்போது தந்தி சேவையே மரணித்து செய்தியாகிவிட்டது.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து கடிதம்  படித்துக்காட்டுவது மற்றும் எழுதிக் கொடுக்கும் வேலை மூலமாக கடிதங்களுடன்  அறிமுகம்.
'அடுத்த வாரத்துக்குள்ள பணம் வரலன்னா எல்லாரும் மருந்து குடிச்சு செத்து போவோம்' அப்டினு எழுதுப்பா"
"ஐய்யயோ நான் மாட்டேன்"
"இல்ல சாமி, அப்பதான் அந்த ஆளு காசு அனுப்புவாரு"
"வேணும்னா புள்ளைக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பத்திரி க்கு போக பணம் வேணும்னு எழுதட்டா?"
"சரி சாமி"
இந்தமாதிரி கடிதங்கள் எழுதவும் வேண்டியிருக்கும்.
சற்றேறக்குறைய தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய பின்னரும் தங்கள் எதிர்ப்புகளையெல்லாம் கேள்விகளாக கேட்டு ஜோசியரின் ரீல் சுற்றும் வேலையை இலகுவாக்கி விடும் வாடிக்கையாளர் போல முழு கடிதத்தையும் படித்துக்காட்டிய பின்னும் 'வேறு எதாவது எழுதியிருக்கா?' என்று திரும்ப திரும்ப கேட்பார்கள்.
குறைவாகப் படித்தோரின் கையெழுத்து அழுத்தம் திருத்தமாக இருக்கும் பிழைகள் இருப்பினும் இலகுவாக திருத்தி படித்து விடலாம். மெத்தப் படித்தோர் சேர்த்து எழுதறேன் என்று கிறுக்கி தள்ளி விடுவார்கள். சூர முள் நடுவே இருந்து ஒவ்வொரு பழமாக உதிர்த்து எடுப்பது போல ஒவ்வொரு வார்த்தையாக உதிர்த்து பின் கோர்த்து வாக்கியமாக சொல்ல வேண்டும். அதனால் இந்தமாதிரி கடிதங்களை மனதினுள் rough draft எடுத்து அதை fair draft ஆக வெளியே சொல்ல வேண்டும். முக்கியமாக எதிர் வீட்டுமாமாவின் லெட்டரை நானோ என் அக்காவோ அன்றி வேறு யாராலும் படிக்க இயலாது. சில இடங்களில் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போயிருக்கும் வார்த்தைகளை யூகித்து இட்டு நிரப்ப வேண்டி இருக்கும்.
"எப்போ வரேன்னு எதாவது எழுதியிருக்குதாப்பா?" என்று எதிர்பார்ப்போடு கேட்கும் சமீபத்தில் திருமணமான அக்காக்களிடம்,
"போன மாசம் தானக்கா போனாரு!!" என்று விவரம் புரியாமல் அபத்தமாய் கேட்டதுமுண்டு.
பலதரப்பட்ட கடிதங்களை கண்டு வளர்ந்த எனது கடிதம் ஒன்றும் முரசொலியில் வரும் கலைஞரின் கடிதத்தையோ இந்திராவுக்கான நேருவின் கடிதத்தையோ போன்ற செவ்வியல் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்.
முதல் வரியில் அம்மா அப்பா நல விசாரிப்பு.இரண்டாம் வரியில் நன்றாக படிப்பதாக(?!) கூறல். மூன்றாம் வரி deadline உடனான பணத்தேவை காரணத்தோடு. அடுத்து நன்றி. இவ்வளவுதான். ஒவ்வொரு கடிதத்திலும் எனது விடுதி விலாசம் தெளிவாக எழுதி விடுவேன். மணியார்டர் இலகுவாக விரைந்து வரவேண்டுமல்லவா?!.
பட்டப் படிப்பு முடித்தபோது எல்லோரிடமும் ஆட்டோகிராப் வாங்கினேன். ஒருவருக்கும் கடிதம் எழுதினேனில்லை. காதல் கடிதம் எழுதும் வாய்ப்பு அமையவே இல்லை(அவ்வ்வ்..!!). மனைவிக்கு கடிதம் எழுதிக்கொள்ளலாம் என்று வாளாவிருந்துவிட்டேன். அதற்குள்ளாக தகவல் புரட்சியின் விளைவாக செல்போன் வந்து தொலைத்து விட்டது.

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...