Thursday, May 25, 2017

இரயில் பயணங்களில்

எப்போதும் நேரம் தவறாமையை வலியுறுத்துவது எனது வழக்கம். எனவே 3.45 அதாகப்பட்டது 15.45 பல்லவன் விரைவு வண்டிக்கு எல்லோரையும் முடுக்கிவிட்டு வீட்டிலிருந்து 2.15க்கே கிளப்பிவிட்டேன். கேப் புக் பண்ணினாலும் டிராஃபிக்ல மாட்டி வண்டியை விட்டுடக் கூடாதே என்கிற நல்ல எண்ணம் தான். கார் எழும்பூரை நெருங்கும் போது அதாவது 2.45க்கு குறுந்தகவல் வருகிறது. இரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாம்.
வழக்கமாக 2.45க்கு கிளம்புவோர் என்மேல் கொலை வெறியில் இருந்தாலும் நாகரிகம் கருதி வாளாவிருந்துவிட்டனர். சரி ப்ளாட் ஃபார்ம் ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து ஃப்ரீ வைஃபை இணைப்பை பயன்படுத்தலாம் என்று பார்த்தால் நல்ல கூட்டம். நிற்பதற்குத்தான் இடம் கிடைத்தது. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாதுங்க வைஃபை நல்ல ஸ்பீடுங்க.
சற்றேரக் குறைய இரண்டு மணி நேரம் கழித்து வைகை உள்ளே வந்தது. இது தான் பல்லவனாக மறு அவதாரம் எடுக்கும் என்பது தாங்கள் அறியாதது அல்ல. அப்பாடா கஷ்டம் எல்லாம் தீர்ந்தது என்று அக்கடா என்ற இருக்க விட்டார்களா?
விழுப்புரம் வரும் முன்னரே ஒரு இடத்தில்இஞ்சின் மூர்ச்சையானது. இஞ்சின் புதிதாகையால் டிரைவருக்கு கட்டுபடாமல் சண்டித்தனம் செய்தது. ரொம்பவும் முயன்று பார்த்த போது தனது இறுதி மூச்சை விட்டு அடங்கியது. சாப்பாட்டு நேரம் ஆகையால் எல்லோரும் உணவு விற்கும் சிப்பந்திகளை எதிர் நோக்கி காத்திருந்தனர். வேண்டாத போதெல்லாம் நூறு முறை குறுக்கும் நெடுக்கும் நடப்போர் இப்போ தலை காட்டவே இல்லை. சரி ஏழு பெட்டிகள் தாண்டி பேண்ட்ரி பாக்சுக்கு போனால் எல்லாம் தீர்ந்து விட்டிருந்தது. பிரியாணி தயார் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நிற்கவே முடியவில்லை. சூடான நீராவி நிறைந்த அண்டாவில் விழுந்து விட்டது போல நல்ல சூடு. சட்டை தொப்பலாக நனைந்து விட்டது. சாப்பிட ஒன்றும் கிடைத்த பாடில்லை.
இரண்டு மணி நேரம் சென்றபின்பு ஒரு புதிய இஞ்சின் கொண்டு வந்து மெல்ல நகர்த்தி சென்றனர். விழுப்புரம் வந்த உடனே எல்லோரும் பாலைவனத்தில் நீரைக் கண்ட பிரயாணிகள் போல குதித்து இறங்கி சாப்பாடு விற்பனையாளர்களை மொய்த்து கொண்டனர். நானும் சப்பாத்தி பொட்டலம் இரண்டு வாங்கிக் கொண்டேன். உடன் வந்த தம்பிக்கு ஒரு பொட்டலம் கொடுத்து விட்டு நான் பிரித்தேன். வண்டி சங்கு(?!) ஊதி புறப்பட்டது. பொட்டலத்தின் உள்ளேயிருந்த பரோட்டாக்கள் என்னை இளக்காரமாக பார்த்தன. அடேய் எனக்கு மட்டும் எப்படிடா இப்படி விக்குறீங்க?
விருத்தாசலம் வரும் முன்னே மறுபடியும் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. டிரைவர் ஒரு அரைமணி நேரம் தாஜா பண்ணி கிளப்பி விட்டார். தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்று விருத்தாசலம் நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்கள் தப்பித்து ஓடினர்.
அப்பாடா அடுத்து அரியலூர்தான். வண்டி காரைக்குடி போனா என்ன போகாட்டி என்ன நாம இறங்கிக் கொள்ள வேண்டியது தான் என்று சுயநலமாக எண்ணியது தவறுதான். அது இஞ்சினுக்கு எப்படி தெரிந்ததோ உடனே படுத்துக் கொண்டது. ஈச்சங்காடு என்கிற குக்கிராம ஸ்டேஷனில். நேரமோ இரவு பன்னிரெண்டை கடந்து விட்டிருந்தது.
எங்கள் இரயிலைத் தவிற எல்லா இரயில்களும் சற்றும் நேரம் தவறாமல் எங்களை கடந்து சென்று எங்களை வெறுப்பேற்றியது. சரி பக்கத்து டிராக் ரயிலை மறித்தால் வழிக்கு வந்து விடுவார்கள். நிவாரணம் விரைவாக கிடைக்கும் என்று  எண்ணி ராமேஸ்வரத்தில் இருந்து வரும் இரயிலை மறிப்பது என்று முடிவு செய்து ஒரு இருபது பேர் கொண்ட பெருங்கும்பல்(?) பக்கத்து டிராக்கில் குறுக்காக நின்றனர். ஆனால் டிரைவர் பார்த்தாரோ இல்லையோ தெரியவில்லை கொஞ்சம் கூட வேகத்தை குறைக்க வில்லை ஆதலால் முற்றுகை போராட்ட வீரர்கள் தங்கள் வேகத்தை கட்டுப் படுத்திக் கொண்டு வேகமாக சிதறி ஓடிவிட்டனர். ஒரு வழியாக முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில் பயணிகள் “அப்படித்தாங்க நாங்க போன வருடம் திருப்பதி போனப்ப…“ என்கிற ரீதியில் கதைகளை எடுத்து விட ஆரம்பித்து விட்டார்கள். ஒரு தம்பி ஒருவன் “இன்னும் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் ஆகும்” என்று கூறி தனது பையை தலைக்கு வைத்து அந்த குக்கிராம ஸ்டேஷனின் பெஞ்சில் படுத்துக் கொண்டார். டிரைவர் சங்கை முழக்கினார். எல்லோரும் ஓடிச் சென்று ஏறிக் கொண்டோம். எனக்கு முன்னால் அந்த “ஒரு மணி நேர கெடு“ தம்பி ஏறிக் கொண்டு இருந்தார். அப்புறம் பார்த்தால் டிரைவர் “ஹாரனாவது“ அடிக்குதான்னு பார்த்திருக்கார் அதை நம்பி நாங்கள் ஏறி இருக்கிறோம். “நான் சொன்னேன்ல“ என்ற படி அந்த தம்பி இப்போ ரயிலின் ஒரு காலி இருக்கையை படுக்கையாக்கிக் கொண்டார். அவர் முடிவு சரிதான். அவர் காரைக்குடி போக வேண்டியவராச்சே.
நள்ளிரவு இரண்டு மணிக்கு ஒரு வழியாக வண்டி நகர ஆரம்பித்தது. “பார்ரா இப்போ இவ்வளவு வேகமா போவுது“ என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் விரைந்து சென்றது. பத்து நிமிடத்தில் அரியலூர் சென்றடைந்தோம்.
இரவு ஏழு முப்பதுக்கு வரவேண்டியது அதிகாலை இரண்டு முப்பதுக்கு வந்து சேர்ந்தது.
சைக்கிளில் போகும் போது பஞ்சரானால் தள்ளிக் கொண்டு போய்விடலாம், அதுவே புல்லட்டில் போகும் போது பஞ்சரானால்?!
பேருந்தில் போகும் போது பிரேக் டவுன் ஆனால் இறக்கி அடுத்த பேருந்தில் ஏற்றி விடுவார்கள், அதுவே இரயிலில் பிரேக் டவுன் ஆனால்?!
இரயிலில் போகும் போது இஞ்சின் ரிப்பேரானால் நின்று சரி செய்துகொண்டு செல்லும் வாய்ப்பாவது இருக்கிறது அதுவே விமானமாக இருந்தால்?!

எவ்வளவுக்கு எவ்வளவு சொகுசு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ரிஸ்க்கும் அதிகம் உள்ளது. வழவழப்பான சாலைகள் பெருகப் பெருக விபத்து எண்ணிக்கையும் கூடிக்கொண்டு தானே உள்ளது.

Friday, May 12, 2017

பாடல்களோடு எனது பயணம்

அது ஒரு அரையடி உயரமும் முக்கால் அடி நீளமும் உள்ள ஒரு ஜந்து. எங்கள் வீட்டில் எப்போதும் நடுவில் வீற்றிருக்கும். எல்லோருக்கும் பிடித்தமானவன். ஏனென்றால் வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும். எனக்கு நாடகங்கள், ஒலிச்சித்திரம் மற்றும் சிறார் அறிவியல் நிகழ்ச்சிகள். ஏனையோர்க்கு பாடல்கள் மற்றும் தொடர் நாடகங்கள்.

நீங்கள் நினைப்பது சரிதான். எங்கள் வீட்டில் இருந்த பிளிப்ஸ் ரேடியோதான் அது. எனது கையில் ஸ்குரு டிரைவர் கிடைக்கும் போதெல்லாம் நான் அதற்கு ஆபரேஷன் செய்வது உண்டு. மர அலமாரியின் மேல் அடுக்கில் இருந்து தவறி விழுந்து “அதல சிதலையா” ஆகியதுண்டு. வீட்டில் யாருக்கும் தெரியாமல் நானே ஆபரேஷன் செய்து காப்பாற்றி விட்டேன்.

ஒரு முறை அனைவரும் வாசலில் படுத்து உறங்கிய போது திடீரென மழை “சட சட“ என்று அடித்து பெய்ய ஆரம்பித்து விட்டது. எல்லோரும் வாரி சுருட்டிக் கொண்டு உள்ளே ஓடி வந்து விட்டோம். பதட்டத்தில் ரேடியோவை வாசலிலேயே விட்டு விட்டோம். காலையில் பார்த்த போது தண்ணீரில் மூழ்கி விழுந்து மண்ணும் தண்ணீருமாக ஆகி விட்டது. அப்போது தான் மெக்கானிக்கிடம் சென்றதாக நினைவு.

ஊரில் எல்லோரும் டேப் ரிக்கார்டர் வாங்கும் போதெல்லாம் நான் ஏக்கத்தோடு பார்ப்பது உண்டு. எங்கள் தந்தை எங்கள் படிப்பை கருத்தில் கொண்டு வாங்கவில்லை.

 பெரியவனானதும் சம்பாதித்து ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கி அதில “விதி“ மற்றும் “ஒரு தாயின் சபதம்“ பட கதைவசன கேசட்டை போட்டு ஆசை தீர கேட்க வேண்டும் என்று பலமுறை எண்ணியது உண்டு. அப்போது நான் மிகச் சிறியவன் ஆதலால் நாடகங்களும் ஒலிச் சித்திரங்களும்( அதாவது படங்களின் கதை வசனம்) தான் என்னை கவர்ந்தவைகளாக இருந்தன. மற்றவர்களுக்கோ பாடல்கள் தான் பிடிக்கும். இதனால் ஏற்பட்ட தகராறில் எங்கள் வீட்டு “ப்ளிப்ஸ்“ ரேடியோ பல முறை மண்டை பிளக்கப் பட்டு வீழ்ந்தது உண்டு. அப்புறம் என்ன மறுபடியும் “இரகசிய ஆப்பரேஷன்“ தான்.

ஆண்டுகள் கடந்தன. நானும் படித்து பெரியவனானேன். தனியார் பள்ளியில் ரூபாய் 2250 க்கு வேலையில் சேர்ந்தேன். முதல் மாத சம்பளத்தில் ரூபாய் 1950க்கு 2001 ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கி விட்டேன். என்ன டேப் ரிக்கார்டர் என்கிறீர்களா? வேறு என்ன “ப்ளிப்ஸ்“ தான். இதற்கு நான் ஒரு போதும் ஆப்பரேஷன் செய்ததில்லை.

டேப் ரிக்கார்டர் வாங்கினால் போதுமா அது பாடுவதற்கு கேஸட் போட வேண்டுமே. நான் வேலை பார்த்தது கொல்லிமலையில் உள்ள “ஹில் டேல்“ மெட்ரிக் பள்ளி. அங்கே ஆசிரியர்களுக்கு பிரத்தியேகமாக தங்கும் அறைகள் உண்டு. அங்கே ஒரு டபுள் டெக் டேப் ரிக்கார்டர் இருந்தது. இளவரசு சார் அருமையான ஜேசுதாஸ் பாடல் தொகுப்பு வைத்திருப்பார். அவர் ஜேசுதாஸ் அவர்களின் “டை ஹார்ட்“ விசிறி. அது மட்டுமல்லாமல் அவர் ஒரு “வழுக்கை இல்லாத“ அப்துல் ஹமீது. நடமாடும் திரையிசைப் பாடல் அகராதி. அவருடன் ஆலோசித்து பாடல்களின் பட்டியலை தயார் செய்வேன். மலையில் இருந்து இறங்கும் போது ஜெயங்கொண்டத்தில் உள்ள ரெக்கார்டிங் சென்டரில் கொடுப்பேன். ரெக்கார்டிங் சென்டர் காரரோ பாடல் தொகுப்பை பார்த்து மண்டையை பிய்த்துக் கொள்வார். இருந்தாலும் நேரம் எடுத்துக் கொண்டு அனைத்துப் பாடல்களையும் போட்டுக் கொடுத்து விடுவார்.

புதுப் படங்களில் பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாகி இருந்தால் இரண்டு புதுப்படங்கள் அடங்கிய ரெடிமேட் கேஸட் வாங்கி விடுவேன். அந்த வகையில் முதலில் வாங்கியது “ரோஜாக் கூட்டம்“ மற்றும் “காசி“.
வேலைகிடைத்து ஜெயங்கொண்டத்தில் “பேச்சிலர் மேன்ஷனில்“ தங்கிய போது எனது உற்ற துணைவன் எனது டேப் ரிக்கார்டர் தான். அறையில் நுழைந்தவுடன் லைட்,மின் விசிறி மற்றும் டேப் ரிக்கார்டர் ஸ்விட்ச் மூன்றையும் ஒருங்கே தட்டி விட்டுதான் அமர்வேன். என் அறை வராண்டாவின் அருகே வரும் போதே நான் அறையில் இருப்பதை நண்பர்கள் ஊகித்து விடுவார்கள். பாடல் சத்தம் கேட்டால் இருக்கிறேன், அமைதியாக இருந்தால் அறையில் இல்லை அல்லது உறங்கியிருப்பேன்.
சில இயக்குனர்கள் நல்ல இசை ரசனை உடையவர்களாக இருப்பதால் எனக்கு நல்ல பாடல் தொகுப்பது இன்னும் இலகுவாகிப் போய்விடும். மணிரத்னம் இளையராஜா மற்றும் மணிரத்னம் ரஹ்மான் என்றொரு தொகுப்பும் என்னிடம் இருந்தது.

அப்புறம் பெஸ்ட் ஆஃப் சித்ரா, மனோ, ஜெயச்சந்திரன், ஜேசுதாஸ் மற்றும் இளையராஜாவின் குரலில் என்று ஒரு தொகுப்பும் தயார் செய்திருந்தேன். என்னை பார்க்க வரும் நண்பர்கள், பக்கத்து அறை நண்பர்கள் மற்றும் கீழே தேனீர் கடை பணியாளர்கள் எல்லோரும் என்னுடைய பாடல்களை பாராட்டும் போதெல்லாம் எனக்கு இரத்தத்தில் “டோப்பமைன்“ ஏறும்.

கீழே இருந்த டீக்கடை பையன் ஒரு முறை ஒரு கேசட்டை குறிப்பிட்டு கேட்டான். சரி நம்ம புகழ் டீக்கடை வரை பரவட்டுமே என்று கொடுத்தேன். ஆனால் நாட்கள் பலவாகியும் அது திரும்பி வரவே இல்லை. என்னடா என்று பார்த்தால் எதிர் வீட்டு இளம் பெண்ணை வசீகரிக்க அதில் ஒரு பாடலை தினந்தோரும் அதிகாலை நேரங்களில் போட்டுக் கொண்டு இருந்திருக்கிறான். அந்தப் பெண்ணும் அவனின் தொடர் பாடல் விடு தூதில் மயங்கி விட்டதாக கேள்விப் பட்டேன். அது என்னப் பாடல் என்றால் “காலங் காத்தாலே ஒரு வேலை இல்லாம…” என்ற பாடல். இந்த பாடல் விடு தூது பிறகு பெரும் பிரச்சனையாகி “வெப்பன் சப்ளையர்“ ஆகிய நானும் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருந்த காரணத்தினால் கேஸட்டை உடனே வாங்கி விட்டேன்.

அடுத்த ஓராண்டில் எனக்கு திருமணமாகி விட்டது. வீட்டில் சி.டி ப்ளேயரும் வந்து விட்டது. எனது அண்ணன் சந்திரசேகர் நல்ல பாடல்களின் எம்.பி3 தொகுப்பு போடும் போதெல்லாம் எனக்கும் ஒரு காப்பி போட்டு விடுவார். பத்து பதினைந்து சி.டி மற்றும் டிவிடிக்களில் எனது சற்றேரக் குறைய 100 கேசட்டுகளும் அடங்கிப் போய் விட்டது. எனது கேசட் ப்ளேயரில் சிலந்தி வலை பின்ன ஆரம்பித்து விட்டது.

ஜெயங்கொண்டத்தில் இருந்து திருமானூருக்கு வீடு மாறும் போதுதான் எல்லா கேசட்டுகள் மற்றும் டேப் ரிக்கார்டரை ஒருவருக்கு கொடுத்தேன். அவரும் கூட அதை எத்தனை நாட்கள் வைத்திருந்திருப்பார் என்று தெரியவிவல்லை. ஏனென்றால் அப்போது செல்போன்களே சிறந்த பாடல் கேட்கும் கருவியாகவும் ஆகி விட்டிருந்தது. அதுவும் கொரியன் மொபைலாக இருந்தால் திருவிழாவில் ரேடியோ செட் கட்டியது போல தெருவையே தெறிக்க விடும்.

தற்சமயம் எனது மொபைலில் கிட்டத்தட்ட ஆயிரம் அருமையான பாடல்களின் தொகுப்பு உள்ளது. நான் வாங்கிய சிடிக்கள் மற்றும் டிவிடிக்களில் இப்போது சிலந்திகள் குடியேறி விட்டன.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே

                                -நன்னூல்.

Wednesday, May 10, 2017

பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையம்

தந்தை பெரியார் அறிவியல் மையம்
சென்னை வருபவர்கள் பார்க்கும் இடங்கள் பல இருந்தாலும் சிறு பிள்ளைகளை கூட்டி வருபவர்கள் தவற விடக் கூடாத இடம் ஒன்று உண்டென்றால் அது தந்தை பெரியார் அறிவியல் மையம் தான்.
கிண்டி காந்தி மண்டபம் சாலையில் உள்ளது. உள்ளேயே பிர்லா கோளரங்கமும் உண்டு.
”சென்னை வந்ததிலிருந்து ஒரே போர்ப்பா எங்கேயுமே வெளிய போகலப்பா. ஒரு முறை தி.நகர் போனேன் அவ்வளவு தாம்பா”
சரி பாகுபலி 2 போகலாம் என்றால் பத்து நாளாகியும் ஆன்லைனில் டிக்கெட் கிடைக்க வில்லை.  எல்லாம் முதல் வரிசை. படம் ஏற்கனவே பிரம்மாண்டம். அதை முதல் வரிசையில் உட்கார்ந்து பார்த்தால் கழுத்து வலியும் காது வலியும் வருவது உறுதி என்று அந்த யோசனையை நிராகரித்தேன்.
ஏற்கனவே ஒரு முறை திருச்சி கோளரங்கத்திற்கு கூட்டிப் போவதாக வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் இவர் லீவு விட்ட அடுத்த நாளே சென்னை கிளம்பி விட்டதால் போக இயலவில்லை. எனவே சென்னையில் கோளரங்கம் இருக்கிறதா என்று கூகுலில் தேடினேன். இலவச இணைப்பாக பெரியார் அறிவியல் மையமும் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தது.

பெரியார் அறிவியல் மையம், கோளரங்கம் மற்றும் 3டி ஷோ எல்லாம் ஒரே பேக்கேஜ் ஆக கட்டணம் பெரியவர்களுக்கு 60 சிறுவர்களுக்கு 30. சோ ஒரு 90 ரூபாயில் சோலி முடிஞ்சது.
ஆட்டோவில் தான் போய் இறங்கினோம். நுழைவு வாயிலில் டிக்கெட் கொடுக்கிறார்கள். பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை. வெயில் சுல்லென்று அடித்தது. திறந்த வெளியில் நிறைய இயற்பியல் அடிப்படை அறிவு சார்ந்த உபகரணங்களை நிறுவியிருக்கிறார்கள்.
ஒரு போர் விமானம் நிறுத்தப் பட்டிருந்தது. PSLV ராக்கெட் மாதிரி ஒன்று செங்குத்தாக நின்றது. ஒரு ரயில் எ ஞ்சின் ஒன்று. இரண்டு பரவளைய அரை வட்டங்கள் 100 அடி இடைவெளியில் நிறுவப்பட்டு அவற்றின் குவிய முனையில் வளையங்கள் உள்ளன. இரண்டு பேர் அவற்றின் குவிய முனைகளில் நின்று குசு குசுத்தாலும் அடுத்தவருக்கு அழகாக எதிரொலிக்கப் படுகிறது. அருண் ரொம்பவும் வியந்த ஒரு விஷயமாக இது அமைந்தது.
மேலும் பல சுவாரசியமான விஷயங்கள் நிறுவியிருக்கிறார்கள். நேரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து கோளரங்கம். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் மாறி மாறி காட்சிகள் நடைபெறுகின்றன. நல்ல ஜில்லென்ற ஏசி. வட்டமாக 360 டிகிரி அரங்கம். மேற்கூறையின் அரை கோளம் தான் திரை. நடுவில் புரஜெக்டர். காட்சிகள் பல்வேறு புரஜெக்டர்கள் மூலமாக கூட்டாக காண்பிக்கப் படுகின்றன. முதலில் பயந்த குழந்தைகள் (அருண் உட்பட) பின்பு சுவாரசியமாகி விட்டனர். ஆனால் உள்ளடக்கம் அவ்வளவு நன்றாக இல்லை. விண்வெளியில் காண வேண்டிய விஷயங்கள் எவ்வளவு உள்ளன. ஆனால் இங்கு விண் மீன் திரள் மற்றும் செவ்வாய் கிரகம் பற்றி மட்டுமே காட்சிகள் உள்ளன. இணையத்திலேயே எவ்வளவோ காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன. எவ்வளவு பெரிய ஆயுதமாக இருந்தாலும் நாம் அதை வைத்து ”முதுகு சொறிந்து” பரவசம் அடைகிறோம்.(கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணுங்க பாஸ்!)
அடுத்து அப்படியே எல்லோரையும் வரிசையாக எதிரே உள்ள 3டி தியேட்டருக்கு பார்சல் செய்கிறார்கள். வாயிலில் ஒரு பிரத்தியேக கண்ணாடி வழங்கப் படுகிறது.(அட இதெல்லாம் மைடியர் குட்டிச் சாத்தான் கால டெக்னிக்). ஒரு சிறிய படக் காட்சி பார்வையாளர்களை பயமுறுத்தி பரவசமடைய செய்கிறது.
அடுத்து DRDO வின் காட்சியரங்கம். ராணுவம் சார்ந்த நிறைய விஷயங்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.
அப்புறம் ISRO வின் பல விதமான ராக்கெட்டுகள் மற்றும் சாதனங்கள். அடுத்து அணுசக்தி துறையின் காட்சிக் கூடம். நிறய அணு உலை சார்ந்த சாதனங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. உள்ளே ஓர் அறையில் படக்காட்சி அரங்கம். அங்கே அணு உலை எவ்வளவு பாதுகாப்பானது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அதன் பிரதான நோக்கம் அதுவாகத்தான் இருக்கும் போல.
எல்லா இடங்களிலும் குழந்தைகளே செய்து பார்க்கும் வண்ணம் சாதனங்கள் உள்ளன. பாதி இயங்கவில்லை என்பது தான் சோகம்.
உள்ளே கேண்டீன் வசதி உள்ளது. அதனால் நொறுக்கு தீனி மற்றும் மதிய உணவு பற்றிய கவலை வேண்டாம். வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்றும் சாப்பிடலாம்.
காலை 10 மணிக்கு உள்ளே சென்றால் பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்து விட்டு மாலை 4 மணிக்கு வெளியே வரலாம். வாசலிலேயே ஆட்டோ உண்டு.

மதநம்பிக்கைகளை புறந்தள்ளி விட்டு மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு அறிவியல் ஆய்வை மேற்கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் அறிவியல் பார்வையை செலுத்துங்கள் என்ற பகுத்தறிவு பகலவன் பெயரை அறிவியல் மையத்திற்கு வைத்திருப்பது வெகுப் பொருத்தம் தான். ஆனால் அங்கே இருக்கும் எல்லா சாதனங்களையும் நன்கு பராமரித்து வரும் குழந்தைகளின் அறிவியல் மனப்பான்மை வளர உதவிடுங்கள்.


ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...