Saturday, November 5, 2022

மாநிலக் கல்விக் கொள்கை- என்னுடைய ஆலோசனைகள்

 மாநிலக் கல்விக் கொள்கைகள்  வகுக்க அமைக்கப்பட்ட குழு பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகளை கேட்டறிந்தது.


ஆசிரயராகவும், தலைமையாசிரியர் என்கிற வகையிலும் எனது அனுபவங்கள் வழி எனக்கு தோன்றியவற்றை  தொகுத்து மின்னஞ்சலில் ச. மாடசாமி அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.


 மாநிலக் கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்திலும் அரியலூர் மாவட்டம் சார்பில் கலந்துகொண்ட குழுவில் சென்று நேரில் வழங்கிவிட்டு மைக் என்வசம் வந்தபோது எனது கருத்துகளில் இருந்து சில முக்கியமான விவரங்களை பேசினேன்.


நான் வழங்கிய கருத்துகள் இதோ:


மாநிலக் கல்விக் கொள்கை- சில ஆலோசனைகள்


கற்றல் கற்பித்தல்


பாடப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையாக நடத்திக் கொண்டு செல்வோமானால் 700க்கு அதிகமாக பக்க அளவு கொண்ட பாடங்களை முடிப்பது சாத்தியமில்லை. 


மாறாக கற்றல் விளைவு ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை குழந்தைகளுக்கு கொண்டு செல்ல தேவையான விஷயங்களை பாடநூல் மற்றும் வெளியே இருந்தும் தகவல்களை திரட்டி கற்பித்தலை சுவாரசியமாகவும் உரையாடல் வடிவிலேயும் கொடுக்க வகைசெய்யும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். 


 பாடம் சார் தேடலைத் தூண்டுவது மட்டுமே ஆசிரியரின் செயலாக இருக்க வேண்டும். மேலதிக விஷயங்களை பாடநூலின் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வழியாகவும் மாணவர்கள் கற்று தேற வேண்டும்.


கற்பித்தல் என்பது லெக்சர், செயல்திட்டம்,புதுமையான செயல்பாடுகள் (Novel activities) களப்பயணம், பாடப்பகுதியை கலையாக்கம் செய்து கற்பித்தல் என ஜனரஞ்சமாக மாற வழிவகை செய்ய வேண்டும்.


தன்சுத்தம், கழிவறைப் பயன்பாடு, பதின்பருவ உடல் வளர்ச்சி மாற்றங்கள் போன்றவை குறித்த நம்பகமான கருத்துகளை குழந்தைகள் அறிந்து கொள்ளல் வேண்டும். அதனை உரிய பாடத் திட்டங்கள் வாயிலாக உரிய வயது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பாடங்கள் திட்டமிடப் பட வேண்டும்.


மொழிப் பாடங்களில் நூலக வாசிப்பு, மேடைப் பேச்சு, பொதுத்தலைப்புகள், நடப்பு கால நிகழ்வுகள் குறித்த பேச்சு அல்லது கட்டுரை போன்றவைகளை இணைத்து அவற்றுக்கு மதிப்பீடுகள் வழங்கவும் வகை செய்ய வேண்டும்.


தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்த வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. எனவே இணைய பயன்பாடு, Word, Excel, Power Point,  காணொலி உருவாக்கம், மின்னணு கருவிகள் கையாளுதல் போன்ற விஷயங்கள் அறிவியல் பாடத்திட்டங்களில் வயதுக்கேற்ற அளவில் அறிமுகம் செய்யப் பட்டு செய்முறை மதிப்பீடுகள் வழங்கப் பட வேண்டும்.


உள்ளூர் வரலாறு, உள்ளூர் விவசாயம், கலைப் பொருட்கள், வரலாற்று புகழ் வாய்ந்த தொன்மையான பகுதிகள், கலைகள், கைவினைப் பொருட்கள் என உள்ளூரை மையப் படுத்திய விஷயங்களை மாவட்ட அளவிலான பாடத்திட்டத்தில் இணைக்கும் வண்ணம் பாடத்திட்டங்களில் ஒரு நெகிழ்வு தன்மையை ஏற்படுத்த வேண்டும்.


வகுப்பில் ஒரு குழந்தைகூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளின் பங்கேற்பினையும் உறுதி செய்யும் வகையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை திட்டமிட வேண்டும். பாடப் பொருளை விட அனைத்து குழந்தைகளின் பங்கேற்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பது வலியுறுத்தப் பட வேண்டும்.


    **************************


இணை மற்றும் துணை செயல்பாடுகள்


1. மாதம் ஒரு களப் பயணவழி கற்றல் முறை கட்டாயமாக்கப் பட வேண்டும். அதற்கான போக்குவரத்து வசதிகள் மாட்ட அளவில் போக்குவரத்து துறையோடு  இணைந்து  திட்டமிடப்பட வேண்டும்


2. தினந்தோறும் ஒரு பாடவேளையை விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும். மாணவர்தம் ஆர்வத்திற்கேற்ப உள் மற்றும் வெளியரங்க விளையாட்டுகளை விளையாட வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும்.


3. வாரம் தோறும் பள்ளி அளவில் போட்டிகள்,  மன்றக் கூட்டங்கள், கருத்தாளர்கள் வருகை  இருக்குமாறு வாரத்தில் ஒரு நாளில் மதியம் கடைசி இரு பாடவேளைகளை திட்டமிட வேண்டும்.


4. கல்விச்சுற்றுலா அரசு செலவில் அழைத்துச் செல்ல வழிவகை செய்தல் வேண்டும்.


5.  தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை, தோல்விகளை ஏற்றுக் கொண்டு கற்கப் பழகுதல், தற்கொலைக்கு எதிரான மனநிலை, நல்லொழுக்கம், வன்முறைக்கு எதிரான மனநிலை, சமூக நல்லிணக்கம், சமத்துவ எண்ணம், பாலின சமத்துவம் போன்றவைகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை வடிவமைத்து மதிப்புக் கல்வி (Value Education) வழங்கப் பட வேண்டும்.


6. பேசு- மாணவர் மனசு- மாணவர்கள் தங்கள் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதற்கு வழிவகை செய்து ஆலோசனை வழங்கும் வகையில் ஒரு பாடவேளை திட்டமிடப் பட வேண்டும்.


7. பல்வகை மன்ற செயல்பாடுகளுக்கு மாவட்ட அளவில் திட்டமிடல் செய்து சிறப்பான பொது செயல்பாடுகளை அனைத்து பள்ளிகளும் பொதுவான கால அட்டவணைப்படி செய்யுமாறு அறிவுறுத்தப் பட வேண்டும்.


8. பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஒரு முறை உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த பல தரப்பட்ட வாய்ப்புகள் குறித்த ஒரு வழிகாட்டு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப் பட வேண்டும்.


***********************************


மதிப்பீட்டு முறை


நமது மதிப்பீட்டு முறைகள் அனைத்தும் மதிப்பெண்களை துரத்துவதாகவே அமைந்துள்ளது.


 அந்த மதிப்பெண்களும் வாசித்து மனப்பாடம் செய்து எழுதும் ஒற்றை திறமை மூலம் மட்டுமே பெறப்படுகிறது என்பது வேதனை.


குழந்தைகள் மத்தியில் பாகுபாட்டை விதைப்பதோடு மட்டுமின்றி சில குழந்தைகள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி பிஞ்சு மனதில் அழுத்தத்தையும் வேதனையையும் இந்த மதிப்பீட்டு முறை ஏற்படுத்துகிறது.


பாகுபாடுகள் நிறைந்த இந்த சமூக அமைப்பு மதிப்பெண் மூலம் ஏற்படுத்தப் படும் படிநிலைகளை விரும்புகிறது. 


“உங்கள் பையன் சிறப்பாக இருக்கிறான்“ என்று கூறினால் பெற்றோருக்கு திருப்தி இல்லை. அதுவே ஒரு எண்ணை கூறி ” உங்கள் பையன் இவர்கள் அனைவரையும் விட மேலானவனாக உள்ளான் ” என்று கூறினால் பரம திருப்தி அடைய பழகிவிட்டார்கள். எனவே தான் CCE மதிப்பீட்டு முறை பரவலான வரவேற்பை பெற இயலாமல் போனது.


1. தேர்வு என்பது மனப்பாடம் செய்வது எழுதுவது என்ற ஒற்றைத் தன்மையில் இருந்து மாறவேண்டிய நேரம் இது. உரையாற்றுதல், செயல்திட்டம் சமர்ப்பித்தல், களப்பயண தகவல் சேகரிப்பு, கலையாக்க செயல்பாடு என இன்னும் பல கூறுகளை உள்ளடக்கிய வகையிலான மதிப்பீட்டு முறையை கண்டறிய வேண்டும். அனைத்து விதமான திறன்களையும் அங்கீகரிக்கும் வண்ணம் இந்த புதிய முறை இருக்க வேண்டும்.


2. வருடம் முழுவதும் படித்து வருட இறுதியில் தேர்வு என்பதை விட “கற்றல் விளைவுகள்“ வாரியான செயல்பாடுகளை மதிப்பீடு செய்து 50  விழுக்காடு மதிப்பெண்களும் மீதமுள்ள 50 விழுக்காடு வருட இறுதியில் மேலே சொன்னவாறு புதிய முறையில் தேர்வு வைத்து வழங்கப் பட வேண்டும்.


3. பல்வகை திறன்களை பாடத்தோடு இணைத்து வெளிப்படுத்தும் புதிய மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்படாது மாறாக தேர்வினை ஆர்வத்துடன் எதிர் நோக்கி காத்திருப்பார்கள்.


4. கற்றுக் கொண்ட ஒட்டு மொத்த பாடத்திறன்களையும் ஒற்றைத் தேர்வுத்தாளில் கொட்டி மதிப்பெண் எதிர்நோக்கி காத்திருக்கும் முறையை குறைத்துக் கொள்ள வேண்டும்.


5.  தேர்வு முறைக்குள் அனைத்து மாணவர்களின் துடிப்பான பங்கேற்பும் இடம் பெறும் வண்ணம் கடினப் பட்டு போய் கிடக்கும் இந்த வழக்கமான தேர்வு முறையை மாற்றி பன்முகத்தன்மை உடையதாக மாற்றி அமைக்க வேண்டும்.


மு.செயராசு

தலைமையாசிரியர்

அரசு உயர்நிலைப் பள்ளி

நாகமங்கலம்

அரியலூர் மாவட்டம்

9790225620

jayarajsir@gmail.com


Thursday, November 3, 2022

Stop not your struggle till last breath

 "நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் " யாருக்கு?! யாருக்கோ!!




ஆமாம் எங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள இந்த மரத்தின் நுனிக்கொம்பில் உள்ள தழையை உண்ண ஆசைப்பட்டு முன்னங்காலை தூக்கி வைத்து ஊன்றி இழுத்து வளைத்து இந்த மரத்தை குற்றியிலும் கொலையுயிருமாக  போட்டுவிட்டு ஓடிவிட்டன வழக்கமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாகமங்கலம் ஆடுகள்!!

வளாகத்தில் மேய்வதற்கு வாகாக எவ்வளவு தான் புதர்களும் புல்லும் மண்டி கிடந்தாலும் இந்த ஆடுகளுக்கு நுனிக்கொம்பில் உள்ள ருசியான இலைகள் தான் இலக்கு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த மரம் வளர்ந்த போது விறுவிறு என வளர்ந்து பூமியோடு 90 டிகிரி கோணத்தில் கணகம்பீரமாக காட்சியளித்து கொண்டிருந்தது. இந்த ஆடுகள் அதனை வளைத்த காரணத்தால் கூன் விழுந்து  முப்பது டிகிரிக்கு சாய்ந்து விட்டது.

அந்த மரத்தின் இடுக்கண் கலைவதற்காக ஒரு கோலினை ஊன்றி அதை ஒரு 80 டிகிரி அளவிற்கு நிமிர்த்தினோம் ஆனாலும் அந்த ஊன்றுகோலை அடுத்த சில வாரங்களிலேயே தட்டி விட்டன அந்த அடங்காத ஆடுகள்.

இந்த சம்பவத்துக்கு பிறகு ஓரளவு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைந்துவிட்டது. ஆடுகளின் தொல்லை வெகுவாக குறைந்து போய்விட்டது. ஆனால் கூன் விழுந்து போன அந்த மரத்தை மட்டும் ஒன்றும் செய்யவே இயலவில்லை ஏனென்றால் 30 லிருந்து 80க்கு மீண்டும் நிமிர்த்தி கட்டினால் அந்த மரம் முறிந்து போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.
அதனால் அதை எதுவுமே செய்ய வேண்டாம் அப்படியே விட்டுவிடுங்கள், முடிந்தால் பிழைக்கட்டும் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டேன்.

இங்கேதான் அந்த மரத்தின் தற்காப்பு உத்தி (struggle for survival) வேலை செய்யத் தொடங்கியது.

ஆமாம், பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் நடத்திய பௌதிகம் மாணவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ அந்த மரத்துக்கு புரிந்து போனது என்று நினைக்கிறேன்.

ஆமாம் கிழக்கு பக்கமாக முப்பது டிகிரி சாய்ந்து இருக்கும் மரத்தை நிமிர்த்துவதற்காக மேற்கு பக்கம் நிமிர்த்தும் வகையில் மரத்தண்டில்   இடையில் இருந்து அங்கங்கே கிளைகள் தோன்றி செங்குத்தாக வளர துவங்கியது சிறிது நாட்களில் மரமும் மெல்ல மெல்ல எழும்பி தற்போது இந்த அளவில் உள்ளது.

தற்காப்பு உத்தி சூழலுக்கு தக்கவாறு தன்னை பாதுகாத்துக் கொள்ள மரங்கள் எந்த அளவுக்கு பௌதிகத்தை துணைக்கு அழைத்துக் கொள்கின்றன என்பதை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அப்பப்பா இயற்கையில் தான் எவ்வளவு விந்தைகள்?!

இதற்கு பின்புலத்தில் உள்ள அறிவியல் ஏதேனும் இருந்தால் விஷயம் அறிந்தவர்கள் விளக்கிக் கூறுங்கள்.





ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...