Thursday, September 28, 2017

லால்குடி டேஸ் -8 லால்குடி பிருந்தாவனமும் பூவாளூர் காவேரியும் இரண்டாம் பாகம்




“அம்மா நேர்மைன்னா என்ன?”
”ம்ம்… நேர்மைன்னா நம்ம ஹமாம்”
இந்த விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள் இல்லையா?
லால்குடியில் இருந்போது என்னிடம் யாரேனும் இந்த கேள்வியை கேட்டிருந்தீர்கள் என்றால், ”நேர்மைன்னா நம்ம விஜயகாந்த்” என்றுதான் சொல்லியிருப்பேன்.
ஒருவாளி கஞ்சியில காக்கி யூனிஃபார்ம அலசிபுட்டு சொச்சத்த குடிச்சிருப்பார் போல அவரோட காக்கி உடையும் சரி குரலும் சரி அவ்வளவு விரைப்பாக இருக்கும். (பாவம், இப்போ அவர் பேச்சைக் கேட்டாலே பரிதாபமாக உள்ளது ஒரு காலத்தில் எப்படி முழங்கிய மனுசன்)
காவல் துறையில் அவர் வகிக்காத பதவியும் கிடையாது. அவர் பிடிக்காத தீவிரவாதிகளும் கிடையாது. அவரோட பேச்சுக்கு பயந்து பாவம் துப்பாக்கி குண்டே பரவால்லன்னு செத்துருவாங்க.
ஏன் வீரப்பனையே நம்ம காவல் துறை பிடிக்கறதுக்கு முன்னாடி அவர் பிடிச்சிட்டார்ப்பா.
நான் சுத்தமல்லியில் படித்த போது “கேப்டன் பிரபாகரனா“ அவதாரம் எடுத்து வீரப்பனை பிடித்தார். ஆனால் எனக்குத்தான் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவத்தை வெள்ளித்திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
நாம் இந்த மாதிரி பல படங்களை பார்க்காமல் நழுவ விட்டு பல ஆண்டுகள் கடந்து போயிருக்கும்.
லால்குடி பூங்காவனம் தியேட்டர் இந்த மாதிரி நமது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இரண்டாவது வாய்ப்பினை வழங்கும். ஆம், அவர்கள் விநியோகஸ்தர்களின் வீட்டில் “அடச்சீ இடத்தை அடைத்துக் கொண்டுள்ளதே என்று சில திரைப்பட ரீல் பெட்டிகளை (இளைஞர்களே அப்போவெல்லாம் படச்சுருளில் தான் படம் வரும்) தூக்கி வெளியே போடுவார்கள். பதுங்கி நின்று அற்புதமாக “கேட்ச்“ செய்து கொண்டு வந்து பைசா செலவு இல்லாமல் பூங்காவனத்தில் ஓட்டி கல்லா கட்டி விடுவார் அந்த சாமர்த்தியமான முதலாளி.
ரொம்ப பழங்காலத் தியேட்டர். தியேட்டரில் படத்தோட ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காட்டுவார்கள். நமது சீட் அருகில் குளிருக்கு பயந்து வந்து ஆடு மாடு கூட படுத்து இருக்கும். நமது பார்வை கோணத்தில் தூண் எதுவும் குறுக்கிடாமல் பார்த்து அமர்வது எவ்வளவு சாமர்த்தியம் தெரியுமா?
அந்த திரையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். சினிமா திரையை வெள்ளித்திரை என்பார்கள். அது வெள்ளித்திரையும் அல்ல வெள்ளைத்திரையும் அல்ல வெண்கலத் திரைதான். அவ்வளவு கண்றாவியான வண்ணத்தில் இருக்கும். போடும் படமும் பழைய படச்சுருள் என்பதால் பெருமழைக் காலத்தில் வீட்டின் கூரையில் இருந்து நீர்த் தாரைகள் விழுவது போல திரையில் இடையறாமல் கோடுகள் விழுந்த வண்ணம் இருக்கும்.
இந்த மாதிரியான ஒரு தியேட்டர் தான் எனது தலைவன் விஜயகாந்த் நடித்த வரலாற்றுச் சிறப்புக்குரிய “கேப்டன் பிரபாகரன்“ படம் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்தது.
சக விடுதி நண்பர்கள் எல்லாம் அந்த படம் ரிலீஸ் ஆன வருடத்திலேயே “கர்ம காரிய“ வீடுகளில் கல் படைக்கும் அன்று இரவு படம் போடுவார்களே அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பல முறை பார்த்து சலித்துவிட்டார்கள். கூப்பிட்டா ஒரு பய வரமாட்டேங்கிறான். அப்புறம் ஒரு தம்பியிடம் “இடைவேளை முறுக்கு இலவச டிக்கெட்“ என்கிற ஆசைகாட்டி சற்று மிரட்டி துணைக்கு அழைத்துச் சென்றேன்.
ஒரு வழியாக கேப்டன் பிரபாகரன் வீரப்பனை கைது செய்த காட்சியை கண்ணாறக் கண்டாகி விட்டது. (நம்ம கேப்டனுக்கு கூட வீரப்பனை உயிரோடு பிடிப்பது தான் நோக்கமாக இருந்தது ஆனா நிஜ போலீஸ்?!)
பூங்காவனம் காரன் பல முறை தெலுங்கு டப்பிங் படங்கள் கூட போடுவான். ஆனால் அவற்றை ஒரேநாளில் தூக்கி விடுவான். (“ஆளே இல்லாத கடையில் அவனும் எத்தனை நாட்களுக்குத் தான் டீ ஆற்றுவான்?“) மின்னல் மாதிரி மறைந்து போகும் அந்த டப்பிங் படத்தை யாவது விட்டோமா என்றால் இல்லை.
“காரம் விளைஞ்ச மண்ணான” ஆந்திராவில் எடுக்கும் படங்கள் யாவுமே அந்த மாநிலத்தை ஒரு “வீரம் விளைஞ்ச மண்ணாக”( ஐ மறுபடியும் விஜயகாந்த் படம்) உலகிற்கு எடுத்து காட்டும். 
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ நான் முதலில் சந்தித்ததும் கூட பூங்காவனத்தில் தான்.
பூங்காவனத்தில் படம் பார்த்த கடைசி தலைமுறையான நாங்களும் படிப்பை முடிச்சுட்டு விடுதிய காலி பண்ணி விட்டதால் படம் பார்க்க ஆள் இல்லாமல் தியேட்டரை மூடிவிட்டார்கள்.
இப்போது ”அன்பு சினிமா“ என்கிற பெயரில் தியேட்டர் வந்திருக்கிறது. ஆனால் இவர்கள் பூங்காவனத்தின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக முற்றிலும் புதிய படங்களை ரிலீஸ் செய்கிறார்கள்.
மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் கடைசி பரிட்சை எழுதி முடித்தவடன் அன்று மதியக் காட்சியே ஒரு படம் பார்த்தாக வேண்டும் என்பதை எங்கள் தலைமுறையில் இருந்து இன்று வரை தொடர்கிறார்கள் என்பதை நினைத்தால் பெருமிதமாக உள்ளது.
பரிட்சைக்கு இடையில் வரும் விடுமுறை நாட்களில் “காவேரி“ மற்றும் “பூங்காவனம்“ இரண்டையும் பார்த்தாயிற்று.
வேதியியல் பரீட்சை வினாத்தாள் “அவுட்“ ஆகி அந்த தேர்வினை இரண்டாம் முறை எழுதிய வரலாற்றுச் சிறப்புக்குறிய தலைமுறை நாங்கள். அது தான் எங்களுக்கு இறுதித் தேர்வு.
பரீட்சை முடியும் நாள் அன்று பார்த்தால் இரண்டு தியேட்டர்களிலும் பழைய படங்கள். திருச்சிக்கு பஸ் பிடித்து “பாரம்பரியத்தை“ காப்பாற்றலாம் என்றால் “பட்ஜெட்டில்“ துண்டு அல்ல வேஷ்டியே விழும் சாத்தியம் இருந்தது. எனவே புள்ளம்பாடி ”தங்கம்” தியேட்டர் போவது என்று திட்டமிட்டுக் கொண்டு தேர்வு அறையில் நுழைந்தோம்.
பரீட்சை எழுதி முடிந்தவுடன் வெளியே ஒன்று கூடி புள்ளம்பாடி செல்ல ஆயத்தமானோம். “டேய் புள்ளம் பாடிக்கு நடந்து போய்விடலாமாடா ரெண்டு ரூபா மிச்சம்” என்று விபரீதமான யோசனையை முன்வைத்த நண்பனிடம் அதற்கு நேரம் இல்லை என்பதை எடுத்துக் கூறி அந்த யோசனையை நிராகரித்து பேருந்தில் சென்றோம்.
“நூறாவது நாள்” படம் புள்ளம்பாடியில் போட்டிருந்தார்கள். (ஐ மறுபடியும் விஜயகாந்த் படம்). லால்குடி விடுதி அனுபவத்தின் இறுதி படமாக நூறாவது நாள் படத்தை பார்த்து விட்டு விடுதி திரும்பி அடுத்த நாள் அவரவர் ஊருக்கு பயணமானோம்.
இனிமே லால்குடி சினிமா அனுபவங்களே இல்லையா என மனது கிடந்து அடித்துக் கொண்டது.
கேப்டன் பிரபாகரன் படம் பார்க்க வாய்த்தது போல இதிலும் எனக்கு ஒரு இரண்டாவது வாய்ப்பு கிட்டியது.
எனது சகோதரர் “சந்திரசேகர்“ ஆசிரிய பயிற்றுநராக பணியேற்றதே லால்குடியில் தான். அனேகமாக நான்கு ஆண்டுகள் அங்கே நான் படித்த பள்ளி வளாகத்தில் இருந்த அலுவலகத்தில் பணியாற்றினார்.
ஒருமுறை அவரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். எனக்கு ஹோட்டலில் சாப்பாடு வாங்கித் தராவிட்டாலும் பரவாயில்லை பூவாளூர் காவேரி தியேட்டருக்கு அழைத்துச் சென்றே ஆக வேண்டும் அடம் பிடித்தேன். அப்போது ஓடிய படம் “காதல் சுகமானது” என்கிற படம்.
படித்த காலத்திலும் வேலைக்குச் சென்று பேச்சிலராக இருந்த போதும் வாரத்திற்கு இரண்டு படமாவது பார்த்து விடுவது உண்டு.
ஆனால் இப்போது?! இரண்டு மாதத்திற்கு ஒரு முறை படம் பார்க்கப் போகலாம் என்றால் கூட “ஏன் பொழுதுக்கும் படத்துக்கு படத்துக்குன்னு அலையிரிங்க?” என்று மனைவி அன்பாக கடிந்து கொள்கிறார்.

Tuesday, September 19, 2017

லால்குடி டேஸ்-7 இலால்குடி பூங்காவனமும் பூவாளூர் காவேரியும்

இலால்குடி பூங்காவனமும் பூவாளூர் காவேரியும்
இலால்குடியில் எங்கள் விடுதியில் அட்டெண்டர் ஆக இருந்தவர் பவுள்ராஜ் அவர்கள். வார்டன் அவரை எங்களுடன் தங்க பணித்திருந்தார். ஆனால் அவர் இரவு 9.30 பேருந்தை பிடித்து சொந்த ஊருக்குச் சென்று காலை திரும்பி விடுவார். அவர் ஊருக்குச் செல்வது எங்களுக்கு மிகப்பெரிய அனுகூலம்.
“டேய் செல்வம், அட்டெண்டர் இன்னைக்கு ஊருக்குப் போயிடுவாராடா?”
“கிளம்பறதா சொன்னார்டா“
“படத்துக்கு டயம் ஆச்சுடா”
“பேண்ட் சர்ட் போடுறாருடா”
“சரி சரி படத்துக்கு வர்றவனுங்கள கூப்பிடுறேன்“ என்று விரைந்தேன்.
அரியலூரில் இருந்து எங்களுடன் விடுதியில் தங்கியிருந்த சக நண்பன் செல்வம். சற்று முரட்டுத்தனம் நிரம்பிய வெகுளி.
செல்வமும் பாலுவும் அட்டெண்டரை பஸ் ஏற்றிவிட பஸ் ஸ்டாண்ட் சென்று அவர் பஸ் ஏறியதும் வந்து விடுவார்கள். நாங்கள் குறுக்கு வழியில் சென்று பெட்ரோல் பங்கில் காத்திருந்து அவர்களை அழைத்துக் கொண்டு செல்வதாக ஏற்பாடு.
பேருந்து கிடைக்காமல் அட்டெண்டர் விடுதி திரும்பி விட, படம் விட்டு வரும் நாங்கள் அவரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.
“ஏய் ஸ்ட்ரீட் லைட் எரியலடா நாய கீய மிதிச்சிடாம வாடா“ என்றபடி சி.எஸ்.ஐ சர்ச் தாண்டி கிழக்கு நோக்கி செல்லும் தெருவில் விரைந்து நடந்து கொண்டு இருந்தோம்.
“மணி என்னடா?”
”மணி 9.30 டா“
“பஸ் ஏறி இருப்பாராடா?”
“பஸ் ஏறி இருந்தா பெட்ரோல் பங்க் க்கு சீக்கிரம் செல்வமும் பாலுவும் வந்து விடுவானுங்க”
“சரி சரி வேகமா போ”
மூச்சிரைக்க ஓட்டமும் நடையுமாக பெட்ரோல் பங்க் வந்து சேர்ந்தோம்.
”டேய் செல்வம் டா!”
“என்னடா அதுக்குள்ள பஸ் ஏத்தி விட்டுட்டிங்களாடா?“
இருவரும் ஒருவரை ஒருவர் திரு திரு என்று பார்த்து விழித்தபடி “பஸ் ஏத்தி விட்டு பஸ் புறப்பட்ட பிறகுதாண்டா வரோம்”
சரி பிரச்சனை தீர்ந்தது என்று அரியலூர் சாலையில் விரைவாக நடக்க ஆரம்பித்தோம்.
பூவாளூர் காவேரி தியேட்டர் எப்போதும் சற்று புதிய படங்களை போடுவார்கள். அப்போது கேபிள் டிவிக்கள் இங்கொன்றும் அங்கொன்றும் முளைத்த காலம். டி.வி யே ஊரிலேயே ஒரு சில வீடுகளில் தான் இருக்கும். மக்கள் படம் பார்க்க தியேட்டருக்குத் தான் வருவார்கள். படம் பெரிய நகரங்களில் முதலில் ரிலீஸ் ஆகி 50,100, மற்றும் 200 நாட்கள் என்று படத்தின் தரத்திற்கு ஏற்ப ஓடும்.
மரண மொக்கை படமாக இருந்தாலும் 50 நாட்கள் தாக்குப் பிடித்து ஓடும். “உள்ளத்தை அள்ளித்தா“ படம் 225 நாட்கள் திருச்சி சோனா மீனா தியேட்டரில் ஓடிய வரலாற்றை எல்லாம் கண்ணாற கண்டதுடன் அல்லாமல் அந்த படத்தை மூன்று முறை சோனா மீனா தியேட்டரில் பார்த்திருக்கிறேன்..
அதனால் பூவாளூர் காவேரி மாதிரியான தியேட்டருக்கு படங்கள் ஓராண்டு கழித்து அல்லது ஆறு மாதங்கள் கழித்து தான் வரும். இப்போவெல்லாம் இந்திய தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்று ஒரு மாதத்தில் கூட போட்டு விடுகிறார்கள்.
நாங்கள் இருட்டிலே அரியலூர் சாலையில் ஓடிக்கொண்டு இருந்தது அந்தமாதிரியான ஒரு வருடம் ஆன புதுப் படத்திற்குத்தான்.
இருப்பதில் மினிமம் காஸ்ட் உள்ள டிக்கட் தான் எப்போதும் எங்கள் தேர்வு. இரவு இரண்டாவது காட்சி என்பதால் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் இல்லை.
ஸ்கிரீனுக்கு வெகு அருகில் தான் என்றாலும் எங்கள் பட்ஜெட் அதற்குத் தான் இடமளிக்கும். முதல் வகுப்பு கட்டணத்தில் இன்னோரு படம் பார்த்து விடலாம் என்கிற தொலை நோக்கு சிந்தனையும் ஒரு காரணம்.
படம் முடிந்து மறுபடியும் அரிலூர் இலால்குடி சாலையில் இரவு 1.30 சுமாருக்கு ஓட ஆரம்பித்தோம். நள்ளிரவு நேரம் என்பதால் குறுக்கு வழி உகந்தது அல்ல. ஏனென்றால் திருடன் என்று நினைத்து எங்களை நையப்புடைத்து விடும் அபாயம் அதில் உண்டு. எனவே நேரா போயி கடைசி லெஃப்ட்.
விடுதி வாசலை எட்டினோம். பேசி கும்மாளமிட்ட படி இரவின் இறுகிய மௌனத்தை கிழித்து கிடாசியபடியே நுழைந்தோம்.
“உஷ்…டேய் சத்தம் போடாத, அங்கபாரு ஃபேன் சத்தம் கேட்குது“
“டேய் ஆமாண்டா, அப்படின்னா பதினோறாம் வகுப்பு ஹால்ல அட்டெண்டர் படுத்துருக்கார்”
“டேய் செல்வம் என்னடா, பஸ் ஏத்தி விட்டிங்களா இல்லயாடா?”
“படத்துக்கு டயம் ஆச்சின்னு பஸ்டாண்ட் வந்தவுடன் போயிட்டு வரோம்னு சார்ட்ட சொல்லிட்டு வந்துட்டோம்டா” என்றான் பரிதாபமாக
“டேய் சைலண்டா போய் லுங்கி மாத்திக் கிட்டு போர்வைய எடுத்துக் கிட்டு வந்து வராண்டாவில் படுத்துக்கலாம் வாடா“
“வேணாம்டா அப்படியே வராண்டாவில் படுத்துக்கலாம்“
“எல்லோரும் பேண்ட் சர்ட்ல இருக்கோம் காலையில் மாட்டிக்குவோம்“
“சரி வா உள்ள பாத்து மிதிச்சிடாம வா“ என்றபடி நான் முன்னே சென்றேன்.
இது என்னடா இது சம்மந்தம் இல்லாம இங்க நீளமா குச்சி மாதிரி என்று காலால் இடறினேன் “ஆத்தாடி அட்டண்டர் காலு”
“ம்ம்… யாருப்பா அது…”
எனது இரும்புப் பெட்டிக்கும் அமிர்தராஜின் பெட்டிக்கும் இருந்த இடைவெளியில் அப்படியே சம்மணமிட்டு சுவற்றோடு சாய்ந்து கொண்டேன். எல்லோரும் கிடைத்த இடத்தில் அப்படியே தரையோடு தரையாக பதுங்கிக் கொள்ள கடைசியாக வந்த செல்வம் செய்வதறியாமல் விழித்தபடி நின்று கொண்டு இருந்தான்.
“டேய் செல்வம் என்னப்பா இந்த நேரத்தில?“
“சார் …. அது வந்து…சார்…”
“சினிமாவுக்கு போனிங்களாப்பா?“ அக்கரையோடு பஸ்டாண்ட் வந்தது இப்போ நள்ளிரவில் விழித்தபடி நிற்பது ஒன்னும் ஒன்னும் இரண்டு என்று கண்டு பிடித்து விட்டார்.
“சரி சரி போய் படு காலையில் பேசிக் கொள்ளலாம்“
ஏறக்குறைய ஒரு அரைமணி நேரம் இருந்த பொசிஷனில் அசையாமல் இருந்த நாங்கள் எல்லோரும் அரவம் அடங்கிய பின் மெதுவாக உடை மாற்றி வராண்டாவில் வந்து படுத்துக் கொண்டோம்.
காலையில் எழுந்த போது மணி ஏழு.
வார்டன் ரூமில் கூட்டம்.
எட்டிப் பார்த்தால் செல்வம் கைக்கட்டிக் கொண்டு நின்றான்.
“யார் யார் சினிமாவுக்குப் போனது நீயும் பாலுவும் போனிங்களா?”
“இல்லசார் நான் மட்டும் தான் சார்” என்று எங்களை காப்பாற்றும் முனைப்பில் இருந்தான்.
அவன் காட்டிக் கொடுக்காமலே அவராக யூகிக்கும் அளவுக்கு பாலு அவரோட “பேட் புக்கில்“ இருந்தான்.
நான் மெல்ல அறையில் தலையை நீட்டினேன்.
“பாருப்பா ஜெயராஜ் இந்த பையன் நைட்டு சினிமாவுக்குப் போயிருக்கான்”
“செல்வம், ஜெயராஜ பாரு நல்லா படிக்கிறான். எந்த பாடத்திலும் பெயில் ஆகறது இல்ல ரேங்கும் பத்துக்குள்ள வந்துடறான். அவன் கூட சேர்ந்து படி மத்த பசங்க கூட சேர்ந்து வீணாப் போயிடாதே” படத்திற்கு செல்லும் திட்டம் வகுத்த சூத்திர தாரியே நான் தான் என்றாலும் என் மீது கிஞ்சிற்றும் சந்தேகம் வராத வகையில் அவருடைய “குட் புக்கில்“ இருந்தேன்.
இதுவே சற்று நீளமாகி விட்டது

லால்குடி டேஸ் ல் “இலால்குடி பூங்காவனமும் பூவாளூர் காவேரியும்” அடுத்த இன்னும் சுவாரசியமான எபிசோட் வரும்.

Saturday, September 16, 2017

தரமணியும் தகழி சிவசங்கரன் பிள்ளையும்


அட இது என்னப்பா தலைப்பு மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட மாதிரி?“
தரமணி படத்தையும் தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்களின்பாப்பி அம்மாளும் குழந்தைகளும்“(மலையாளம் டு தமிழ் மொழிபெயர்ப்பு) என்கிற நாவலையும் சமீபத்தில் பார்த்ததால் இந்த பதிவு.
நீங்க மொட்டத்தலன்னு நினைத்தால் மொட்டத்தல இல்ல மொழங்காலுன்னு நினைத்தால் மொழங்கால்
தரமணி ஆண்ட்ரியாவின் கெரியர் கிராஃப்ல ஒரு குறிப்பிடத்தக்க படம். இயக்குநர் ராம் அவர்கள் வெகு நாட்கள் முன்னரே எடுத்து கூவி கூவி வித்தும் வியாபாரம் செய்ய முடியாமல் முக்கி முனகி இப்போ வெளி வந்து வெற்றிப் படமாக ஆகியிருக்கு.
ஐடி கம்பெனியில் கை நிறைய சம்ளம் வாங்கும் (ஐடி கம்பெனின்னாலே கைநிறைய சம்பளம் தானேப்பா மேல சொல்லுங்க) ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் ஆல்தியா (கலாச்சார காவலர்களின் பல்வேறு போராட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவே ஆல்தியாவை ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக  பிரசவித்திருக்கிறார் இயக்குநர் ராம்)
திருமணம் செய்துகொண்ட அன்புக் கணவன் ஓரினச் சேர்க்கை பிரியன் எனத் தெரிந்து அவரை Character assassination செய்து விடாமல் கவனமாக அவரைப் பிரிந்து வாழ்கிறார் தனது பையனுடன்.
அவருடைய வாழ்க்கையில் ஹீரோ என்ட்ரி ஆகிறார். இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். ஹீரோவுடைய பொசசிவ்னஸ் சந்தேகத்தையும் சிக்கலையும் உண்டாக்க சண்டையிட்டு பிரிகிறார்கள்.
பின்பு பரஸ்பரம் வருந்தி சேர்கிறார்கள்.
ஆண்ட்ரியா சிகரெட் பிடிக்கிறார் தண்ணி அடிக்கிறார் சமயத்தில் வேற்று ஆண்களை கட்டிப் பிடிக்கிறார்.
தனுஷ் தண்ணி அடிக்கும் போதும் சிகெரெட் பிடிக்கும் போதும் இது தவறான விஷயமாச்சே!” என எவ்வளவு கோபப் பட்டேனோ அதே அளவு கோபம் தான் ஆண்ட்ரியா மீதும் ஏற்பட்டது. சற்றும் மிகையாக கோபப் பட வில்லை.
கலாச்சார சிலுவையை பெண்கள் மீது மட்டும் சுமத்தி விட்டு ஹாயாக நடந்து வரும் ஆண்களுக்கு மாபெரும் அறச்சீற்றமோ காட்சியை கண்டதும்அபிஷ்டு அபிஷ்டு லோகம் கெட்டுடுத்துடா, கலி முத்திடுத்துடாஎன்று ஒவ்வாமையும் ஏற்படலாம்.
மொத்தத்தில் ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கூட கொடுக்கலாம். அவ்வளவு அருமையான நடிப்பு.
யுவன் பாடல்கள் மட்டும் பிண்ணனியில் அசத்தி இருக்கிறார்.
வசனங்கள் அற்புதம்.
சமூக அக்கரையை தொனிக்கும் வாய்ஸ் ஓவர் என்றாலும் சற்று ஓவர்.
அடுத்ததாக “பாப்பி அம்மாளும் குழந்தைகளும்“ தகழி சிவசங்கரம் பிள்ளை அவர்கள் எழுதிய நாவல். ஏற்கனவே இவர் எழுதிய ஒரு நாவல் ஒன்றை ஓரளவு இதே ஜானர்ல படித்ததாக ஞாபகம்.
இப்போ தூர் வாருகிறேன் என்று சொல்லி மண்ணை வாரி விற்று விட்டதால் தண்ணீர் நிறைந்த எந்த ஏரியில் கால் வைத்தாலும் வைத்தவுடன் மூழ்க வேண்டியது தான். கரையிலேயே 10 அடி ஆழம் தோண்டியிருக்கிறார்கள். அது போல நாவலில் நுழைந்த உடனேயே கதையின் ஆழத்திற்கு இட்டுச் செல்லும் உத்தியில் கதை சொல்லி இருக்கிறார்.
பாப்பி அம்மாள் தனது மகன் பத்மநாபன் வருகைக்காக காத்திருக்கிறார். இரண்டு ஓணங்களுக்கு முன் சென்றவன் இந்த ஓணத்திற்கு வருவதாக சொல்லி கடுதாசி போட்டிருக்கிறான். தாய்க்கு ஒரே தர்மச் சங்கடமாக இருக்கிறது. பத்மநாபனின் தந்தை இறந்த பிறகு பாச்சுப் பிள்ளை என்பவருடனான ”நட்பில்” கார்த்தியாயினி பிறந்தாள். அப்போது அவனுக்கு 10 வயது. பாச்சுப் பிள்ளை குழந்தை தன்னுடையது அல்ல என்று கை விரிக்கிறார். புறமுதுகு காட்டி ஓடி ஒளிந்து கொள்கிறார்.  இப்போது வயிறு மேடிட்டு இருக்கிறது கேசவன் நாயரின் ”நட்பில்”
தமிழ்நாட்டில் டீ கடை வேலை செய்யும் பத்மநாபனுக்கு விஷயம் தெரியாது. இப்போது மேடிட்ட வயிற்றுக்கு காரணத்தை எப்படி 14 வயது இளைஞனிடம் விளக்குவது? கேசவன் நாயருடனான நட்பை அவன் எவ்வாறு புரிந்து கொள்வான் என்றெல்லாம் பலவாறு பயந்து கொண்டு இருக்கிறாள். ஆனால் அவனோ அந்த விஷயத்தை இயல்பாக ஏற்றுக் கொள்கிறான். தாய் மீது மிகுந்த அன்பு பாராட்டுகிறான்.
சுற்றத்தார் வழக்கம் போல அவளின் “இந்த“ நட்புக்கள் குறித்து ஏசினாலும் பாப்பி அம்மாள் அனைவரிடமும் மிகுந்த அன்போடு நடந்து தனக்கு உதவிகள் பெற்றுக் கொள்கிறார். மேலும் அடுத்த பிரசவத்தில் நாராயணனை பெற்றெடுக் உதவியும் கிடைக்கப் பெறுகிறாள். அவர்களின் ஏச்சு மொழிகளுக்கு மௌனத்தை பதிலாக வைத்திருக்கிறாள். கேசவன் நாயரின் நட்பை உறுதியாக தொடர்கிறாள்.
குடும்பம் நல்ல நிலைமை அடைகிறது. பத்மநாபன் தமிழகத்தில் நல்ல ஓட்டல் நடத்தி நிறைய சம்பாதிக்கிறான். நல்ல வீடு கட்டி வாழ்கிறார்கள். கேசவன் நாயர் இறுதி வரை பாப்பியின் ”தோழனாகவே” உறுதுணையாக வருகிறார். குடும்ப நிர்வாகத்தை திறம்பட நடத்துகிறார். இந்நிலையில் பாச்சுப் பிள்ளை (கார்த்தியாயினியோட அப்பாங்க) நோய்வாய்ப்பட்டு போக்கிடம் இல்லாமல் வந்து நிற்க பாப்பி அம்மாள் அவரையும் அரவணைத்து சாகும் வரை அடைக்கலம் தந்து நல்லடக்கமும் செய்கிறாள்.
நானும் கூட சில வாழும் பாப்பி அம்மாள்களை கண்டிருக்கிறேன். ஊரோ சமூகமோ தூற்றினாலும் கூட அவர்கள் நெஞ்சுறுதியோடு தங்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள். பாப்பி அம்மாள்களிடம் நான் கண்ட பொதுவான அம்சம் அவர்கள் நிரம்ப கருணையோடு இருக்கிறார்கள்.
என்னதான் கலாச்சாரம் பண்பாடு என்று நம்மை நாமே விலங்கிட்டுக் கொண்டு சமுதாயச் சிறையில் வாழ்ந்தாலும் ஒரு சிலர் இந்த கலாச்சார விலங்கை எல்லாம் துணிவோடு தகர்த்து தனக்கு பிறருக்கு எந்த துன்பமும் தராத தனக்கு நன்மை பயக்கும் பாதையை தேர்ந்தெடுத்து நெஞ்சுரத்தோடு பயணிக்கிறார்கள்.
கலாச்சாரத்தை பெண்களின் உடைகளிலும் குடும்ப கவுரவத்தை பெண்களின் யோனியிலும் வைத்து பாதுகாக்கும் பண்பாட்டு பாது காவலர்களுக்கு தரமணியோ அல்லது தகழியின் நாவலோ குமட்டலான படைப்புதான்.
இப்போ புரிகிறதா தலைப்புக்காண காரணம். இரண்டு படைப்புகளும் “உனக்கு உகந்ததான வாழ்க்கையை யாரையும் புண்படுத்தாமல் பயமின்றி வாழ்வதில் தவறில்லை“ என்று கூறுவதில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சை இட்டுக் கொள்கின்றன.



Monday, September 11, 2017

லால்குடி டேஸ்- 6 “சும்மா ஜி்ல்லுன்னு ஒரு குளியல்



“ஜில்லுன்னு ஒரு குளியல்“
கடைசியாக எப்போது ஆற்றில் குளித்தீர்கள்?
கடைசியாக எப்போது ஏரியில் குளித்தீர்கள்?
கடைசியாக எப்போது பம்பு செட்டில் குளித்தீர்கள்?
மேற்காணும் மூன்று கேள்விகளுக்கும் உங்கள் பதில் இல்லை என்று இருக்குமானால் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணங்களை இழந்து விட்டீர்கள் என்று தான் பொருள்.
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலை காண்பறிது.
நிலம் கூட மழை நீரால் நனைக்கப் படும் போது மகிழ்ந்து நறுமணம் வீசி உற்சாகமாக தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. எனவே நம்மை நாளும் புதுப்பித்து உற்சாகமாக்குவது குளியல் தானே?
அந்தக் குளியல் மேற்காணும் வகையில் இருந்தால் நாள் முழுவதும் உங்கள் உற்சாகம் குன்றாமல் அப்போது மலர்ந்த மலர் போல இருப்பீர்கள்.
நீந்த தெரியுமா உங்களுக்கு? இல்லையெனில் சிறு பொழுது மீனாக அவதாரம் எடுத்து நீரினை ஆட்சி செய்யும் அற்புதத்தை நீங்கள் அனுபவித்து இருக்கப் போவதில்லை.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு கும்மாளக் குளியல்களின் அனைத்து வகைகளையும் நன்றாக அனுபவித்து உள்ளேன்.
ஐந்தாம் வகுப்பில் நண்பர்களோடு எங்கள் ஊரின் குட்டையில்தான் நீச்சல் பழகினேன். அந்த நீச்சலின் பரிணாம வளர்ச்சியானது ஓடைக் குளியல் மற்றும் கிணற்றுக் குளி(தி)யல் என்று வளர்ச்சி அடைந்திருந்த காரணத்தினால் நீரைக் கண்டு எனக்கு பயம் கிடையாது.
இப்போது லால்குடிக்கு வருவோம். ஜூன் மாத தொடக்கத்தில் பம்பு செட்டுக் குளியல் தான் எங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் கோடை கால இறுதியானதாலும் ஆற்றிலோ வாய்க்கால்களிலோ தண்ணீர் இருக்காது. எங்களது பம்பு செட்டுக் குளியலுக்கான ஏரியாவை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். இரயில் தண்டவாளப் பகுதிக்கு மேற்கு அல்லது அரியலூர் ரோட்டோர பம்பு செட்டுகள். நான் சொல்வது 25 ஆண்டுகளுக்கு முன்னால் என்பதை மனதில் ஆழமாக இருத்திக் கொள்ளுங்கள். பம்பு செட்டுகளில் நீர் அருவி மாதிரி நல்ல விசையோடு கொட்டும்.
     இப்போது லால்குடியை நெருங்கும் போது ஒரு பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கும் இல்லையா. அதுதான் வீடுகளின் தொடக்கம். அது வரையிலும் வயல் வெளிகள்தான். அந்த பெட்ரோல் பங்கிற்கு எதிரே கூட ஒரு பம்பு செட் இருந்தது. நாங்கள் பல முறை குளித்திருக்கிறோம். இப்போது சற்றேறக்குறைய கூழையாறு வரையிலுமே வீடுகளோ அல்லது ப்ளாட்டுகளோ இருப்பதை பார்க்கும் போது கால் நூற்றாண்டு காலத்திற்குள் ஒரு வளமான ஊர் சிதைக்கப் பட்டு நகரம் எனும் நரகமாக மாறிக் கிடக்கிறது.
“அண்ணே ரெட்ட மோட்டார் ஓடுதுண்ணே“
“ஏலேய் ஷம்முவம் உட்றா வண்டிய“ என்று படை பறிவாரங்களோடு கிளம்பினோம்.
இரயில் தண்டவாளத்தில் இருந்து மேல் புறம் இறங்கி அய்யன் வாய்க்கால் போகும் வழியில் ஒரு வாழைத்தோப்பின் முகப்பில் ஒரு இரட்டை மோட்டார் உண்டு. நடுவில் பெரிய தொட்டி. தொட்டியின் இரண்டு பக்கமும் இரண்டு மோட்டார் ரூம்கள். அவற்றில் இருந்து பீரங்கி போல கம்பீரமாக எதிரெதிராய் இரண்டு நீர் கொட்டும் பைப்புகள். தொட்டியின் நடுவில் நீர் கீழே விழ சரிவாக ஒரு சாரம் போல ஒரு அமைப்பு. நீர் ஓடி விழும் இடமோ சிறு குட்டை போல காட்சியளிக்கும்.
எங்கள் எல்லோருக்கும் மிக விருப்பமான குளியல் இடம் அதுவே. தொட்டியில் ஏறிக் கொண்டோமானால் இரண்டு நீர் வீழ்ச்சிக்கு நடுவே சிக்கிக் கொண்ட அனுபவத்தை உணரலாம்.
ஷாம்பு போடாமலே நமது முடியெல்லாம் பஞ்சு போல மிருதுவாய் ஆகி விடும். தலையில் சொற்ப முடி மட்டுமே உடையவர்கள் அதிலே குளிப்பார்களானால் அவர்கள் தலைசோதலையாக மாறுவது திண்ணம்.
சிமெண்டு திட்டுகளில் துவைத்த துணியை ஒவ்வொன்றாக அந்த நீரில் காண்பித்தால் நன்கு அலசப் பட்டு துணி புதிது போல காட்சி தரும்.
 குளிக்கும் போது தொட்டியில் உள்ள சாரம் வழியாக குட்டைக்குள் நீர்ச் சறுக்கு விளையாடுவது உண்டு. ஐந்தாறு பேர் கொண்ட எங்கள் படை சென்றாலே அங்கே ஐம்பது அறுபது பேர் உள்ளது போல ஒரே கூச்சலும் கும்மாளமும் தான்.
எனது நண்பன் ஒருவன் ஒரு முறை நீர்ச் சறுக்கிய போது உராய்வினால் நைந்து போயிருந்த அவனது ஜட்டியின் பின்புறம் மொத்தமாய் கிழிந்து போக அதை உணராமல் அவன் குட்டையில் இருந்து எழுந்து அடுத்த சறுக்கலுக்கு முயற்சித்தான். அவனது 90 விழுக்காடு நிர்வாண நிலையை இரண்டு ஆண்டுகளுக்கு பரிகாசம் செய்து கொண்டு இருந்தோம்.
இங்கே ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். நாங்கள் எவ்வளவுதான் கூச்சலும் கும்மாளமுமாய் குளித்தாலும் பம்பு செட்டுக் காரர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு செல்வார்களே ஒழிய ஒரு முறை கூட இங்கே ஏறாதே அங்கே குளிக்காதே என்றெல்லாம் கண்டித்ததில்லை.
1992 களில் சரியாக ஜூன் 12 ம் தேதியே மேட்டூரில் நீர் திறக்கப்பட்டு காவிரியில் நீர் ஓடும். காவிரியில் நீர் வந்த உடனே லால்குடி விவசாய நிலங்களின் நீர் நாளமான அய்யன் வாய்க்கால் மற்றும் சில வாய்க்கால்களிலும் நீர் திறந்து விடப் படும்.
அய்யன் வாய்க்கால் சற்று சிறிய ஓடை ஆகும். சில இடங்களில் குறுகலாக ஆழமாகவும் சில இடங்களில் அகலமாக ஆழம் குறைவாகவும் இருக்கும். அனேக இடஙகளில் குளிப்பதற்கு ஏதுவாக படித்துறைகள் உண்டு.
தண்ணீர் அதிகமாக போகும் நாட்களில் நாங்கள் சிறுவர்களை அனுமதிப்பதில்லை. ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே வாய்க்காலில் குளிப்போம். நடு வாய்க்காலில் கழுத்து வரை செல்லும் நீர் நம்மை இழுக்க எத்தனிக்கையில் எதிர்த்து காலூன்றி குளிப்பது ஒரு இனிமையான சவால்.
எங்கள் சக மாணவர் நெல்சன் ஒரு முறை நீரில் முங்கி எழும்போது கழுத்தில் மாலையோடு எழுந்தார். சரஸ்வதி சபதம் படம் போல எந்த இராஜ்ஜியத்திற்காவது அரசனாக யானையால் தேர்ந்தெடுக்கப் பட்டாரோ என்று தேடினால் அருகில் ஒரு யானையும் இல்லை. ஆடிப் பெருக்கு என்று எந்த சோம்பேறி தம்பதியினரோ காவேரி படித்துறையில் விட வேண்டிய மாலையை அய்யன் வாய்க்காலில் விட்டிருக்கின்றனர் அது நெல்சன் கழுத்தில் அழகாக விழுந்து விட்டது.

அடுத்த குளியல் ஸ்பாட், “கூழையாறு”. திருச்சிக்கு பேருந்தில் செல்வோர் பூவாளூர் தாண்டியதும் சாலையின் குறுக்கே பெரிய பாலம் பார்த்திருப்பீர்கள். அதுதான் கூழையாற்றுப் பாலம். தற்போது இருப்பது புதிய பாலம். இதற்கு முன் சற்று குறுகிய பழைய பாலம் இருந்தது.
மழைக்காலங்களில் நீர் இரு கரைகளையும்  தழுவியபடி செல்லும். அந்த நாட்களில் எங்களுக்கு கொண்டாட்டம் தான். பாலத்தின் மீது இருந்து நீரில் குதித்து குளிப்பது தான் எங்கள் இன்றியமையாத கொண்டாட்டம். இங்கு வயது வரம்பில்லாமல் நீச்சல் தெரிந்தவர்கள் அனைவரும் கேட்டுக் கேள்வி இல்லாமல் “பொத் பொத்“ என்று குதித்து கும்மாளமிடுவோம். ஆனால் நான் முதல் முறை குதித்த போது எங்கள் குழுவில் இருந்த சின்னஞ்சிறு ஆறாவது மாணவன் எல்லாம் குதித்த பின் தான் எனக்கு துணிச்சல் வந்து குதித்தேன். என்னதான் கிணற்றுக் குளியல் எல்லாம் பழகி இருந்தாலும் சுழித்துக் கொண்டு ஓடும் நீரை பார்த்தாலே ஒரு மிரட்சி தானே?
நாட்கள் செல்லச் செல்ல நீரின் அளவு குறைந்து மணற்பரப்புக்கு நடுவே ஒரு சிறு வாய்க்கால் போல நீர் ஓடும். நாங்கள் குழி பறித்தோ அல்லது சற்று படுத்தபடியோ குளிப்போம். அந்தமாதிரி நாட்களில் எங்கள் கொண்டாட்டம் வேறு வடிவில் இருக்கும். “பீச் கபாடி” – ஆம் களம் இறங்கும் வீரர்கள் அனைவரும் ஜட்டியுடன் ஆடுவார்கள். நான் இயல்பிலேயே சற்று கூச்ச சுபாவம் உள்ளவன் ஆதலால் எனக்கு மேட்ச் ரெஃப்ரீ ரோல் தான்.
ஆடிச் செல்லும் போது சில அசந்தர்ப்ப சூழல்களில் ஜட்டி மாட்டிக் கொள்ள “ஜட்டியா பாய்ண்டா“ என்கிற கையறு நிலை வந்து விடும். நெல்சனைத் தவிர அனைவருமே “ஜட்டியே“ என்று முடிவெடுத்து மானம் காத்து நிற்பர்.
சனி ஞாயிறுகளில் கூழையாற்றுக் குளியலுக்கு பின்பு விடுதியில் இட்லி சாம்பார் அல்லது தேங்காய்ச் சட்னி என்பது தான் மெனு. துணி துவைத்த களைப்பு, விளையாட்டுக் களிப்பு எல்லாம் தீர குறைந்தபட்சம் ஒரு பதினைந்து இட்லிகளை உள்ளே தள்ளி படுத்தோமானால் மதிய சாப்பாட்டுக்குத் தான் எழுவோம்.
அன்று காலை மணி ஆறரை இருக்கும், நான் குளித்த போது தண்ணீரில் ஏதோ தட்டு பட்டது, எடுத்துப் பார்த்தால், கவர் பிரிக்காத ரின் சோப்பு.
“டேய் நிர்மா சோப் ஒரு பாக்கெட்டு டா” இது இராஜவேல்.
“அண்ணே லைபாய் சோப்ணே” இது ஒரு சிறுவன்.
பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குளியல் அல்லது துணி சோப்போடு எழுந்தனர். ஆனால் ஒன்றிலும் நுரைத்து வரக் காணோம். பிறகு தான் உணர்ந்தோம். “டூப்ளிக்கேட்“ சோப்புக்களை சோதனைக்குப் பயந்து ஜலசமாதி செய்து சென்றிருக்கிறார்கள். என்ன ஒரு ஈவிரக்கமற்ற மனது. நாம் ஆறுகளைக் காக்க தவறியதன் விளைவுதான் இப்போது ஆறுகள் யாவும் வெற்று மணல்வெளிகளாக மாறிப்போயின.
“காவிரியை கடக்க பரிசல் தேவையில்லை
ஒட்டகமே போதும்“ என்றான் ஒரு புதுக் கவிஞன்.
இன்று கூட செய்திகளில் கரூர் அருகே சாயப்பட்டரையால் நீரெல்லாம் ஒரே நுரையாக ஓடியதை வருத்தத்தோடு காண நேர்ந்தது.
ஆற்றில் குளித்த நாம் இப்போது பக்கெட்டுக்கு பழகிவிட்டோம். நமது பிள்ளைகள் மக்கில் குளிக்க பழகி விடுவார்கள். எதிர் கால சந்ததியினர் ஈரத்துணியால் உடலை துடைத்துக் கொள்ள பழகி விடுவார்கள்.
2050 களில் பழைய படத்தில் வரும் குளியல் காட்சியை பார்க்கும் ஒருவன் குளியல் என்கிற பெயரில் எவ்வளவு நீரை வீணடித்திருக்கிறார்கள் என்று சபிக்கப் போவது உறுதி.


ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...