Monday, September 11, 2017

லால்குடி டேஸ்- 6 “சும்மா ஜி்ல்லுன்னு ஒரு குளியல்



“ஜில்லுன்னு ஒரு குளியல்“
கடைசியாக எப்போது ஆற்றில் குளித்தீர்கள்?
கடைசியாக எப்போது ஏரியில் குளித்தீர்கள்?
கடைசியாக எப்போது பம்பு செட்டில் குளித்தீர்கள்?
மேற்காணும் மூன்று கேள்விகளுக்கும் உங்கள் பதில் இல்லை என்று இருக்குமானால் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணங்களை இழந்து விட்டீர்கள் என்று தான் பொருள்.
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலை காண்பறிது.
நிலம் கூட மழை நீரால் நனைக்கப் படும் போது மகிழ்ந்து நறுமணம் வீசி உற்சாகமாக தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. எனவே நம்மை நாளும் புதுப்பித்து உற்சாகமாக்குவது குளியல் தானே?
அந்தக் குளியல் மேற்காணும் வகையில் இருந்தால் நாள் முழுவதும் உங்கள் உற்சாகம் குன்றாமல் அப்போது மலர்ந்த மலர் போல இருப்பீர்கள்.
நீந்த தெரியுமா உங்களுக்கு? இல்லையெனில் சிறு பொழுது மீனாக அவதாரம் எடுத்து நீரினை ஆட்சி செய்யும் அற்புதத்தை நீங்கள் அனுபவித்து இருக்கப் போவதில்லை.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு கும்மாளக் குளியல்களின் அனைத்து வகைகளையும் நன்றாக அனுபவித்து உள்ளேன்.
ஐந்தாம் வகுப்பில் நண்பர்களோடு எங்கள் ஊரின் குட்டையில்தான் நீச்சல் பழகினேன். அந்த நீச்சலின் பரிணாம வளர்ச்சியானது ஓடைக் குளியல் மற்றும் கிணற்றுக் குளி(தி)யல் என்று வளர்ச்சி அடைந்திருந்த காரணத்தினால் நீரைக் கண்டு எனக்கு பயம் கிடையாது.
இப்போது லால்குடிக்கு வருவோம். ஜூன் மாத தொடக்கத்தில் பம்பு செட்டுக் குளியல் தான் எங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் கோடை கால இறுதியானதாலும் ஆற்றிலோ வாய்க்கால்களிலோ தண்ணீர் இருக்காது. எங்களது பம்பு செட்டுக் குளியலுக்கான ஏரியாவை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். இரயில் தண்டவாளப் பகுதிக்கு மேற்கு அல்லது அரியலூர் ரோட்டோர பம்பு செட்டுகள். நான் சொல்வது 25 ஆண்டுகளுக்கு முன்னால் என்பதை மனதில் ஆழமாக இருத்திக் கொள்ளுங்கள். பம்பு செட்டுகளில் நீர் அருவி மாதிரி நல்ல விசையோடு கொட்டும்.
     இப்போது லால்குடியை நெருங்கும் போது ஒரு பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கும் இல்லையா. அதுதான் வீடுகளின் தொடக்கம். அது வரையிலும் வயல் வெளிகள்தான். அந்த பெட்ரோல் பங்கிற்கு எதிரே கூட ஒரு பம்பு செட் இருந்தது. நாங்கள் பல முறை குளித்திருக்கிறோம். இப்போது சற்றேறக்குறைய கூழையாறு வரையிலுமே வீடுகளோ அல்லது ப்ளாட்டுகளோ இருப்பதை பார்க்கும் போது கால் நூற்றாண்டு காலத்திற்குள் ஒரு வளமான ஊர் சிதைக்கப் பட்டு நகரம் எனும் நரகமாக மாறிக் கிடக்கிறது.
“அண்ணே ரெட்ட மோட்டார் ஓடுதுண்ணே“
“ஏலேய் ஷம்முவம் உட்றா வண்டிய“ என்று படை பறிவாரங்களோடு கிளம்பினோம்.
இரயில் தண்டவாளத்தில் இருந்து மேல் புறம் இறங்கி அய்யன் வாய்க்கால் போகும் வழியில் ஒரு வாழைத்தோப்பின் முகப்பில் ஒரு இரட்டை மோட்டார் உண்டு. நடுவில் பெரிய தொட்டி. தொட்டியின் இரண்டு பக்கமும் இரண்டு மோட்டார் ரூம்கள். அவற்றில் இருந்து பீரங்கி போல கம்பீரமாக எதிரெதிராய் இரண்டு நீர் கொட்டும் பைப்புகள். தொட்டியின் நடுவில் நீர் கீழே விழ சரிவாக ஒரு சாரம் போல ஒரு அமைப்பு. நீர் ஓடி விழும் இடமோ சிறு குட்டை போல காட்சியளிக்கும்.
எங்கள் எல்லோருக்கும் மிக விருப்பமான குளியல் இடம் அதுவே. தொட்டியில் ஏறிக் கொண்டோமானால் இரண்டு நீர் வீழ்ச்சிக்கு நடுவே சிக்கிக் கொண்ட அனுபவத்தை உணரலாம்.
ஷாம்பு போடாமலே நமது முடியெல்லாம் பஞ்சு போல மிருதுவாய் ஆகி விடும். தலையில் சொற்ப முடி மட்டுமே உடையவர்கள் அதிலே குளிப்பார்களானால் அவர்கள் தலைசோதலையாக மாறுவது திண்ணம்.
சிமெண்டு திட்டுகளில் துவைத்த துணியை ஒவ்வொன்றாக அந்த நீரில் காண்பித்தால் நன்கு அலசப் பட்டு துணி புதிது போல காட்சி தரும்.
 குளிக்கும் போது தொட்டியில் உள்ள சாரம் வழியாக குட்டைக்குள் நீர்ச் சறுக்கு விளையாடுவது உண்டு. ஐந்தாறு பேர் கொண்ட எங்கள் படை சென்றாலே அங்கே ஐம்பது அறுபது பேர் உள்ளது போல ஒரே கூச்சலும் கும்மாளமும் தான்.
எனது நண்பன் ஒருவன் ஒரு முறை நீர்ச் சறுக்கிய போது உராய்வினால் நைந்து போயிருந்த அவனது ஜட்டியின் பின்புறம் மொத்தமாய் கிழிந்து போக அதை உணராமல் அவன் குட்டையில் இருந்து எழுந்து அடுத்த சறுக்கலுக்கு முயற்சித்தான். அவனது 90 விழுக்காடு நிர்வாண நிலையை இரண்டு ஆண்டுகளுக்கு பரிகாசம் செய்து கொண்டு இருந்தோம்.
இங்கே ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். நாங்கள் எவ்வளவுதான் கூச்சலும் கும்மாளமுமாய் குளித்தாலும் பம்பு செட்டுக் காரர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு செல்வார்களே ஒழிய ஒரு முறை கூட இங்கே ஏறாதே அங்கே குளிக்காதே என்றெல்லாம் கண்டித்ததில்லை.
1992 களில் சரியாக ஜூன் 12 ம் தேதியே மேட்டூரில் நீர் திறக்கப்பட்டு காவிரியில் நீர் ஓடும். காவிரியில் நீர் வந்த உடனே லால்குடி விவசாய நிலங்களின் நீர் நாளமான அய்யன் வாய்க்கால் மற்றும் சில வாய்க்கால்களிலும் நீர் திறந்து விடப் படும்.
அய்யன் வாய்க்கால் சற்று சிறிய ஓடை ஆகும். சில இடங்களில் குறுகலாக ஆழமாகவும் சில இடங்களில் அகலமாக ஆழம் குறைவாகவும் இருக்கும். அனேக இடஙகளில் குளிப்பதற்கு ஏதுவாக படித்துறைகள் உண்டு.
தண்ணீர் அதிகமாக போகும் நாட்களில் நாங்கள் சிறுவர்களை அனுமதிப்பதில்லை. ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே வாய்க்காலில் குளிப்போம். நடு வாய்க்காலில் கழுத்து வரை செல்லும் நீர் நம்மை இழுக்க எத்தனிக்கையில் எதிர்த்து காலூன்றி குளிப்பது ஒரு இனிமையான சவால்.
எங்கள் சக மாணவர் நெல்சன் ஒரு முறை நீரில் முங்கி எழும்போது கழுத்தில் மாலையோடு எழுந்தார். சரஸ்வதி சபதம் படம் போல எந்த இராஜ்ஜியத்திற்காவது அரசனாக யானையால் தேர்ந்தெடுக்கப் பட்டாரோ என்று தேடினால் அருகில் ஒரு யானையும் இல்லை. ஆடிப் பெருக்கு என்று எந்த சோம்பேறி தம்பதியினரோ காவேரி படித்துறையில் விட வேண்டிய மாலையை அய்யன் வாய்க்காலில் விட்டிருக்கின்றனர் அது நெல்சன் கழுத்தில் அழகாக விழுந்து விட்டது.

அடுத்த குளியல் ஸ்பாட், “கூழையாறு”. திருச்சிக்கு பேருந்தில் செல்வோர் பூவாளூர் தாண்டியதும் சாலையின் குறுக்கே பெரிய பாலம் பார்த்திருப்பீர்கள். அதுதான் கூழையாற்றுப் பாலம். தற்போது இருப்பது புதிய பாலம். இதற்கு முன் சற்று குறுகிய பழைய பாலம் இருந்தது.
மழைக்காலங்களில் நீர் இரு கரைகளையும்  தழுவியபடி செல்லும். அந்த நாட்களில் எங்களுக்கு கொண்டாட்டம் தான். பாலத்தின் மீது இருந்து நீரில் குதித்து குளிப்பது தான் எங்கள் இன்றியமையாத கொண்டாட்டம். இங்கு வயது வரம்பில்லாமல் நீச்சல் தெரிந்தவர்கள் அனைவரும் கேட்டுக் கேள்வி இல்லாமல் “பொத் பொத்“ என்று குதித்து கும்மாளமிடுவோம். ஆனால் நான் முதல் முறை குதித்த போது எங்கள் குழுவில் இருந்த சின்னஞ்சிறு ஆறாவது மாணவன் எல்லாம் குதித்த பின் தான் எனக்கு துணிச்சல் வந்து குதித்தேன். என்னதான் கிணற்றுக் குளியல் எல்லாம் பழகி இருந்தாலும் சுழித்துக் கொண்டு ஓடும் நீரை பார்த்தாலே ஒரு மிரட்சி தானே?
நாட்கள் செல்லச் செல்ல நீரின் அளவு குறைந்து மணற்பரப்புக்கு நடுவே ஒரு சிறு வாய்க்கால் போல நீர் ஓடும். நாங்கள் குழி பறித்தோ அல்லது சற்று படுத்தபடியோ குளிப்போம். அந்தமாதிரி நாட்களில் எங்கள் கொண்டாட்டம் வேறு வடிவில் இருக்கும். “பீச் கபாடி” – ஆம் களம் இறங்கும் வீரர்கள் அனைவரும் ஜட்டியுடன் ஆடுவார்கள். நான் இயல்பிலேயே சற்று கூச்ச சுபாவம் உள்ளவன் ஆதலால் எனக்கு மேட்ச் ரெஃப்ரீ ரோல் தான்.
ஆடிச் செல்லும் போது சில அசந்தர்ப்ப சூழல்களில் ஜட்டி மாட்டிக் கொள்ள “ஜட்டியா பாய்ண்டா“ என்கிற கையறு நிலை வந்து விடும். நெல்சனைத் தவிர அனைவருமே “ஜட்டியே“ என்று முடிவெடுத்து மானம் காத்து நிற்பர்.
சனி ஞாயிறுகளில் கூழையாற்றுக் குளியலுக்கு பின்பு விடுதியில் இட்லி சாம்பார் அல்லது தேங்காய்ச் சட்னி என்பது தான் மெனு. துணி துவைத்த களைப்பு, விளையாட்டுக் களிப்பு எல்லாம் தீர குறைந்தபட்சம் ஒரு பதினைந்து இட்லிகளை உள்ளே தள்ளி படுத்தோமானால் மதிய சாப்பாட்டுக்குத் தான் எழுவோம்.
அன்று காலை மணி ஆறரை இருக்கும், நான் குளித்த போது தண்ணீரில் ஏதோ தட்டு பட்டது, எடுத்துப் பார்த்தால், கவர் பிரிக்காத ரின் சோப்பு.
“டேய் நிர்மா சோப் ஒரு பாக்கெட்டு டா” இது இராஜவேல்.
“அண்ணே லைபாய் சோப்ணே” இது ஒரு சிறுவன்.
பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குளியல் அல்லது துணி சோப்போடு எழுந்தனர். ஆனால் ஒன்றிலும் நுரைத்து வரக் காணோம். பிறகு தான் உணர்ந்தோம். “டூப்ளிக்கேட்“ சோப்புக்களை சோதனைக்குப் பயந்து ஜலசமாதி செய்து சென்றிருக்கிறார்கள். என்ன ஒரு ஈவிரக்கமற்ற மனது. நாம் ஆறுகளைக் காக்க தவறியதன் விளைவுதான் இப்போது ஆறுகள் யாவும் வெற்று மணல்வெளிகளாக மாறிப்போயின.
“காவிரியை கடக்க பரிசல் தேவையில்லை
ஒட்டகமே போதும்“ என்றான் ஒரு புதுக் கவிஞன்.
இன்று கூட செய்திகளில் கரூர் அருகே சாயப்பட்டரையால் நீரெல்லாம் ஒரே நுரையாக ஓடியதை வருத்தத்தோடு காண நேர்ந்தது.
ஆற்றில் குளித்த நாம் இப்போது பக்கெட்டுக்கு பழகிவிட்டோம். நமது பிள்ளைகள் மக்கில் குளிக்க பழகி விடுவார்கள். எதிர் கால சந்ததியினர் ஈரத்துணியால் உடலை துடைத்துக் கொள்ள பழகி விடுவார்கள்.
2050 களில் பழைய படத்தில் வரும் குளியல் காட்சியை பார்க்கும் ஒருவன் குளியல் என்கிற பெயரில் எவ்வளவு நீரை வீணடித்திருக்கிறார்கள் என்று சபிக்கப் போவது உறுதி.


2 comments:

  1. குளியலின் குளுமையை கடைசி வரி நிஜம் சுட்டுவிட்டது

    ReplyDelete
  2. குளியலின் குளுமையை கடைசி வரி நிஜம் சுட்டுவிட்டது

    ReplyDelete

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...