Saturday, June 13, 2020

மாட்டுவண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா….


மாட்டுவண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா….
”ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல் எங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே” – மாட்டு வண்டி இழுத்துச்செல்லும் காளைகளின் ஓட்டத்தில் எழும் ரிதத்தை அப்படியே மெட்டாக்கி அருமையாக வார்த்தைகள் கோர்த்த பாடல் அல்லவா?

 “மாட்டு வண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா, கூட்டுவண்டி உள்ளுக்குள்ளே கூண்டுக்கிளி வாடுதம்மா…“ இந்த மென் சோகப் பாடலுக்கு மயங்காதவர் யாரும் உண்டா

“சின்னக்கிளி இரண்டும் செய்துவிட்ட பாவமென்ன,
அன்பைக் கொன்றுவிட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன” – என்ற கோரஸை மறக்க இயலுமா?

அடுத்து “இன்று நீ நாளை நான்” படத்தில் கங்கை அமரன் எழுதிய இந்தப் பாடலை அதிகமாக கேட்கமுடிவதில்லை. இதுவும் மாட்டுவண்டிப் பயணத்தை அடிப்படையாக கொண்ட பாடல்தான்.
“காங்கேயன் காளைகளே ஓடுங்கடா கெவர்மெண்டு சாலையிலே
காலுவலி தெரியாம நானும் பாட்டு பாடிகிட்டு வாரேன்” என்று அண்ணனுக்கு பொண்ணு பாக்க உற்சாகமாக போகும் சிவக்குமாரை மறக்க இயலுமா.

அப்புறம் “குடகு மலை காட்டில் ஒரு பாட்டு கேட்குதா…“ என்ற கரகாட்டக்காரன் படப் பாடல்.
இன்னும் ஏராளமான பாடல்கள் மாட்டு வண்டி பயணத்தை காட்சிகளாக கொண்டு தமிழ் சினிமாவில் வந்துள்ளன. ஆனால் இப்போதைய நவீன அறிவியல் உச்சம் தொடும் இந்தக் காலத்தில் மாட்டு வண்டிப் பயணம் என்பது அரிதாகி விட்டது. பயணங்கள் எவ்வளவு தொலைவு பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது பாருங்கள். எனக்குத் தெரிந்து மணல் அள்ளவும் சில சிறு விவசாயிகள் விவசாயம் செய்யவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாட்டு வண்டி வைத்துள்ளார்கள்.

ஆனால் இதே நவீன அறிவியல் காலத்தில் தான் துக்ளக் தனமான கொரோனா ஊரடங்கில் மாட்டு வண்டி வசதி கூட இல்லாமல் புலம் பெயர் தொழிலாளர்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு நடக்க விட்டே கொன்றோம் என்பதும் கூட எவ்வளவு சோகமான முரண்.

கப்பல் மற்றும் விமானம் நீங்கலாக மற்ற அனைத்து மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட்டையும் பயன்படுத்தி இருந்தாலும் மாட்டுவண்டிப் பயணம் மீது எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. என்னதான் கிராமத்தில் வளர்ந்து இருந்தாலும் எனக்கு அந்தப் பயணங்கள் அரிதாகவே வாய்த்து இருக்கிறது. சில பெரு விவசாயிகள் வீடுகளில் மாட்டுவண்டி இருக்கும். எங்கள் வீட்டில் இரண்டு காளைகள் வைத்து வளர்த்து வந்தார் அப்பா. விவசாய வேலைகளான ஏர் ஓட்டுதல் அப்புறம் வரகு புனை அடித்தல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்துவார். ஆனால் மாட்டு வண்டி கிடையாது.

ஜூன் ஜூலை மாதங்களில் விவசாய நிலங்களுக்கு எரு அடிப்பார்கள். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் சேகாரமாகும் மாட்டுச் சாணத்தை சேகரித்து எரு குழியில் போட்டு வைத்திருப்பார்கள். கடைசியில் அதை விவசாய நிலங்களுக்கு போடுவார்கள். குப்பைக் குழியில் இருந்து கொல்லைக்கு எருவை மாட்டு வண்டியில் தான் கொண்டு போவார்கள். பள்ளி விட்டு வரும் போது மாட்டு வண்டியை வழியில் பார்த்தால் புத்தகப்பையை (ஜவுளிக்கடை மஞ்சள் பைதான்) கை வழியே ஷோல்டர் வரை ஏற்றிக் கொண்டு மாட்டு வண்டியின் பின்னால் இருக்கும் மரப் பலகையை (அதோட பேர் மறந்து போச்சுங்க) பிடித்து தொங்கிக் கொண்டு வண்டியோட்டிக்கு தெரியாமல் தம் கட்டியபடி பயணிப்போம்.

அப்போது சிறிய போட்டி கூட வைத்துக் கொள்வோம். யார்தான் ரொம்ப தூரத்திற்கு தம் கட்டியபடி தொங்கிக் கொண்டே செல்வது என்பது தான் அந்தப் போட்டி. பள்ளியில் இருந்து வழக்கமான வழியில் வந்தால் இந்த வாய்ப்புகள் கிடைக்காது. அதனால் எங்கள் துவக்கப்பள்ளியில் இருந்து நேராக எங்கள் தெருவுக்கு வரும் குறுக்கு வழியில் வந்தால் இந்த வாய்ப்பு கிடைக்கும். ஒரு முறை நான் மற்றும் மூன்று நண்பர்கள் என நான்கு பேர் வந்த போது ஒரு வண்டி தென்பட்டது. வண்டியோட்டியை பார்த்தோம் சாஃப்ட் கேரக்டர் மாதிரி இருந்தது (கொஞ்சம் டெர்ரரான ஆள் என்றால் இறங்கி வந்து நையப் புடைத்து விடுவார்). எனவே பையை ஷோல்டருக்கு ஏற்றிக் கொண்டு ஓடிப்போய் ஆளுக்கு ஒரு பலகையை பற்றினோம். போட்டி துவங்கியது. எனது நண்பன் டவுசர் வாங்கி ஒரு மாதம் கூட பட்டனையோ கொக்கியையோ இருக்க விடமாட்டான். எனவே வயிறை ஒரு எக்கு எக்கி இரண்டு முனைகளையும் இழுத்து முடிந்து சொருகி வைத்திருப்பான். போட்டி முனைப்பில் தம்கட்டியபடி ஒரு நூறடி தூரம்தான் சென்றிருப்போம். அப்போது பார்த்து டவுசரின் இறுக்கம் நெகிழ்ந்து விட்டது. மெல்ல மெல்ல நழுவி கீழே விழுந்தே விட்டது. நிராயுதபாணியாக இருந்த போதிலும் அவன் போட்டியில் இருந்து கிஞ்சிற்றும் பின் வாங்கவில்லை. நாங்கள் மூவரும் பொங்கி வந்து வெடித்தச் சிரிப்பில் தம்மை விட்டு போட்டியில் தோற்று விட்டோம். தன் தீவிர முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாகிய அவன் மட்டும் இறுதி வரை நின்று வென்று பின்னர் கம்பீரமாக வந்து விழுந்து கிடந்த டவுசரை எடுத்து உடுத்திக் கொண்டான். ரொம்ப சிரிக்காதிங்க பாஸ், அப்போ நாங்க மூணாங்கிளாஸ் தான் படித்து வந்தோம்.

எங்க கொல்லைக்கு எரு அடிக்கும் போது மாட்டு வண்டியில் செல்ல முழு உரிமையுடன் கூடிய வாய்ப்பு கிட்டியது. எரு அள்ளிக் கொட்டியி பின்பு பின்னால் இருக்கும் காலியான இடத்தில் நின்று கொண்டு பயணிக்கலாம். சென்று வர சற்றேரக்குறைய ஒரு மணிநேரம் ஆகும். ஆமாம், எங்கள் தெருவில் இருந்து ஒரு நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பொட்டாங்காட்டிற்கு செல்ல வேண்டும். மண் சாலை அப்புறம் தார் போடாத கல்சாலை அப்புறம் மறுபடியும் மண்சாலை. மண்சாலையில் அதுவும் மணற்பாங்கான இடத்தில் வண்டி மெதுவாக ஊர்ந்த படி செல்லும் போது லிஃப்டில் கீழே இறங்கும் போது ஏற்படும் லேசானது போல ஒரு உணர்வு ஏற்படும். எருவை அப்படியே குடை சாய்த்துவிட்டு கொஞ்சம் மண்வெட்டியால் மண்வெட்டி எருவின் மேல் போடுவார்கள். ஏன் என்றால் வெறும் சாணம் என்றால் பறக்காது ஆனால் குப்பைக் கூளம் கலந்த எரு ஆடிமாதக்காற்றில் பறந்து விடும். அதனால் அதன் மேல் பேப்பர் வெயிட் மாதிரி மண் வெட்டி போடுவார்கள். திரும்பி வரும் போது வண்டியில் தாராளமாக அமர்ந்து கொள்ளலாம். வண்டி லேசாக இருப்பதால் ஜல் ஜல் என்று தாள லயத்துடன் மாடுகள் வேகமெடுக்கும். பயணமும் ரொம்பவும் குதூகலமாக இருக்கும். இந்த க்ளவுட் நைன் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா எனக்கு அது போலத்தான் இருக்கும்.

     மாட்டு வண்டியை விட இந்த கூட்டு வண்டிப் பயணம் செய்ய இன்றளவும் எனக்கு ஏக்கமாகத்தான் உள்ளது. சினிமாக்களிலும் கதைகளிலும் பார்க்க நேர்கையில் என்னுடைய ஆசை பலமடங்கு ஆகிவிடுகிறது. அது அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறு நகரும் அரண்மனை போலத்தான் எனக்கு தோன்றுகிறது.

     அந்தக் காலத்தில் பெண் அழைப்பிற்கு கூட்டு வண்டியைத்தான் அனுப்புவார்கள். இந்த காலகட்டத்தில் முயற்சித்து விடாதீர்கள், திருமணம் நின்றுபோகும் அபாயம் உள்ளது. நான் சிறுவனாக இருந்த போது பெரியதிருக்கோணத்தில் (அம்மாயி ஊர்)  இருந்து பெண் அழைத்துக் கொண்டு வான்டராயன்கட்டளை செல்வதான ஒரு திருமணம். ஆகா கூட்டு வண்டிப் பயணம் இவ்வளவு சீக்கிரமாக சாத்தியப்பட்டதே என்ற மகிழ்ச்சியில் திருமண விருந்து சாப்பாடு கூட இறங்கவில்லை.

     ஆனா பிரச்சனை என்னவென்றால் இந்த பெண் அழைப்பை போல போரடிக்கும் விஷயம் எதுவும் இல்லை. பெண் அழைக்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து பரிசம் போட வருவார்கள். அந்த பரிசப் பெட்டியை என்னவோ ஸ்டேட் பேங்க் லாக்கர் ரேஞ்சுக்கு இவருதான் பிரிக்கணும் என்று முக்கியஸ்தர்களுக்காக காத்திருப்பார்கள். அப்போது பார்த்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் வரும் பாருங்க, இந்த திருமணம் இந்த மட்டில் நின்றுபோகுமோ என்று நம்மை கதிகலங்கச் செய்யும். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து சாப்பிட உக்காருவார்கள். அப்பாடா எல்லாரும் சாப்பிட்ட உடனே கிளம்ப வேண்டியது தான் என்று போக்கிரி பட பிரகாஷ்ராஜ் மாதிரி கஷ்டப்பட்டு விழித்துக் கொண்டு இருந்தேன். அதற்கு பிறகு தான் அடுத்த பூகம்பம் ஆரம்பமானது.

     என்னவோ கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு பொறந்த ஊருல யாரையுமே பார்க்க முடியாதது போல ஒவ்வொருவரையும் கட்டிக் கொண்டு அவ்வளவு அழுகை அழுவார்கள். (இல்லைன்னா “கல்நெஞ்சக்காரி கொஞ்சமாவது கண்கலங்குறாளா பாரேன்” என்று வடிவேலு போல ஊரார் திட்டுவார்கள்). இந்த லேடீஸ் மட்டும் அவ்வளவு தண்ணிய எங்கதான் தேக்கி வச்சிருப்பாங்களோ கொட்டி நனைச்சுடுவாங்க. சம்மந்தமே இல்லாம வழியில போறவங்க கூட வந்து கட்டிக் கிட்டு ஒரு பாட்டம் அழுது விட்டு தான் போவார்கள். எல்லாம் முடிந்து கிளம்பி வண்டியில் ஏறும் தருணம் பார்த்து வேறு ஒரு தெருவில் இருந்து ஒரு தோழியர் கூட்டம் வரவே மறுபடியும் அங்கே பல ஜீவநதிகள் பிரவாகமாக ஆரம்பித்துவிட்டது. உறக்கம் எனது கட்டுப்பாட்டை மீறி போய்விட்டது. நல்ல நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன்.

     அடுத்த நாள் நான் விழித்த போது வானத்தில் பறந்து கொண்டு இருந்தேன். ஆமாம், வண்டி வாண்டராயன் கட்டளை வந்து சேர்ந்து விட்டது. வண்டியில் உறங்கி கிடந்த சிறார்களை எல்லாம் கட்டிட வேலையின் போது சித்தாள் செங்கல்லை தூக்கிப் போட்டு பிடிப்பது போல தூக்கி போட்டு கை மாற்றி இறக்கி வைத்தார்கள். ஆகவே கூட்டு வண்டியில் பிரயாணம் செய்திருக்கிறேன். ஆனால் அது எனக்கே தெரியாது. எனவே அதை கணக்கில் கொள்ள இயலாது. விமானப் பயணத்தைக் காட்டிலும் எனக்கு இந்த கூட்டு வண்டிப் பயணத்தின் மேல் தான் தீராத ஆவல் உள்ளது.

     கடலை காயவைத்து அடித்த பின்பு அதனை ஜெயங்கொண்டம் கடலை கமிட்டியில் விற்பது வாடிக்கை. அதற்கு கடலை பயிர் மூட்டைகளை ஏற்றியபடி மாட்டு வண்டியில் இரவில் பயணப்படுவார்கள். சுத்தமல்லி, தத்தனூர், மாந்தோப்பு, உடையார்பாளையம் வழியாக ஜெயங்கொண்டம். திருச்சி நெடுஞ்சாலைப் பயணம். அதுவும் மாட்டு வண்டியில் நிலவொளியில். நினைக்கும் போதே சிலிர்க்கிறது அல்லவா. நிலவொளியும் மாட்டு வண்டியும் என்கிற விஷயம் என்னை வெகுவாக ஈர்த்த காரணத்தால் ஒரு வருடம்(எட்டாம் வகுப்பு என நினைவு) அப்பா என்னை கேட்டதுமே ஆர்வத்தோடு செல்வதற்கு ஒப்புக்கொண்டேன். தனியாக அல்ல, ஒரு ஐந்து பேர் அவரவர் கடலை பயிரை விற்க கிளம்பினார்கள். வேலை பளு காரணமாக அப்பா என்னை அவர்களோடு அனுப்பினார்.

     ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டுவதென்பது கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அனுபவப் பூர்வமாக அந்த பயணத்தில் தான் உணர்ந்தேன். ச்சே ச்சே இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது போங்க. பயணத்தின் ஆரம்பத்திலேயே ஒரு தவுசண்ட் வாட்ஸ் பல்பு கொடுத்தார்கள்.

     “தம்பி ஜெயராஜு வண்டி மூட்டை எல்லாம் ஏத்திக்கிட்டு வர லேட்டாகும் நீயும் அந்த அண்ணனும் கடைசி பஸ்ல போயி கமிட்டில இருங்க நாங்க ஏத்திக்கிட்டு எந்நேரம் ஆனாலும் வந்துடுறோம்” என்று என்னை பேருந்தில் ஏற்றி விட்டார்கள். ஒப்புக் கொண்டு திரும்ப மாற்றி பேச இயலாதே.

     அங்கே போனா கமிட்டியில் கடலை பயிர் விற்கும் கட்டிடம் ஒரு கிரிக்கெட் மைதானம் அளவுக்கு மொசைக் தரையோடு அழகாக இருந்தது. இரவு பத்துமணிக்கு கிரிக்கெட் விளையாடும் அளவு இருந்த இடம் பதினோரு மணிக்கு படுத்துறங்கும் அளவு மட்டுமான இடமாக சுருங்கியது, பின்பு நெருக்கியடித்து படுக்குமளவு சுருங்கியது. எங்க மூட்டை வந்த போது அந்த மூட்டை மேல் அமர்ந்து கொண்டே தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டு போனது. ஆமாம் அந்த இடம் முழுக்க அவ்வளவு மூட்டைகள்.

     அடுத்த நாள் காலை வந்து தரப் பரிசோதனை செய்து விலை குறித்துக் கொண்டு செல்வார்கள். பிறகு எடை போட்டு விற்று கைக்கு பணம் வர அடுத்த நாள் இரவு மணி ஏழு ஆகிவிட்டது. மாட்டு வண்டிப் பயணத்திற்கு ஆசைப்பட்டு நான் மாட்டிக் கொண்டு விழித்த கதைதான் இது. ஆனாலும் கூட அந்த முழு நாளும் ஹோட்டலில் பரோட்டா தோசை என சாப்பிட்டது மறக்க இயலாது. அப்போதெல்லாம் ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது போல எளிதல்ல. அனேகமாக நான் பரோட்டா சாப்பிட்டது அதுதான் முதல்முறை. ஜனகர் தியேட்டர் அருகே இன்றளவும் உள்ள கடையில் தான் சாப்பிட்டேன்.

     தெருவில் சக்கரவல்லிக் கிழங்கு விற்பனைக்கு வருவோம் அப்போதெல்லாம் மாட்டு வண்டியில் அந்த கிழங்கு கொடி அதன் மேல் சாக்கு அப்புறம் மூட்டை என பரப்பி வைத்திருப்பார்கள். வண்டி தளத்திற்கு கீழே மாடு சாப்பிட வைக்கோல் இருக்கும். அவர்களின் அந்த வண்டியை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். நினைத்த இடத்தில் மாட்டின் பூட்டவிழ்த்து விட்டு அமர்ந்து சாப்பிடலாம். கொஞ்சம் உறங்கலாம். அப்புறம் அடுத்த ஊருக்கு பயணப்படலாம். தெருவில் வரும் வேறு எந்த வியாபாரத்திலாவது இவ்வளவு சொகுசான ஏற்பாடுகள் உள்ளதாக தெரியவில்லை.

     இப்போதும் கூட எங்காவது மாட்டு வண்டியை காணும் போது எனது வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு அந்த மாட்டு வண்டியின் பின்னால் தொங்கலாமா என்கிற ஆசை ஊற்றெடுக்கும். ஆனால் வண்டி குடைசாய்ந்து இரண்டு மாடுகளும் வண்டியோட்டியும் அந்தரத்தில் பரிதாபமாக தொங்குவதை நினைத்துப் பார்க்க சகியாமல் ஆசையை அடக்கிக் கொள்கிறேன்.

    




No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...