Monday, November 30, 2020

தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம்

 

புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம்


ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம்

பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி

நூலாசிரியர் பணிநிறைவு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நிறைய நூல்கள் எழுதியுள்ளார். முனைவர் பட்ட ஆய்வுக்காக வழிகாட்டுதலின் போது அரியலூர் பற்றிய தகவல் சேகரிப்பு செய்து பிறகு அந்த தகவல்களை கண்ணியம் என்கிற இதழில் வெளியிட்டுள்ளார். அதுவே பிறகு நூலாக சொந்தமாக பதிப்பித்து இருக்கிறார். ஆசிரியரது ஊர் அரியலூர் மாவட்டத்தில் பழம் பெருமைப் பெற்ற திருமழப்பாடி.

நான் கல்லூரி படிக்க துவங்கிய காலத்தில் எனது ஊர் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. அப்புறம் படிப்பை முடித்த போது அப்படியே நகர்ந்து போய் பெரம்பலூர் மாவட்டமானது. பிறகு நான் வேலைக்கு வந்த போது அரியலூர் மாவட்டம் என்று அறிவிக்கப்பட்டு அப்புறம் சிங்கத்தலைவியால் திரும்பவும் பெரம்பலூரோடு இணைக்கப் பட்டது. அப்புறம் ஒரு வழியாக 2007 ல் மறுபடியும் கலைஞர் ஆட்சியில் அரியலூர் மாவட்டமாக தனிக்குடித்தனம் வந்து பால்காய்ச்சி பனங்கல்கண்டு போட்டு குடித்துவிட்டோம்.

அரியலூர் மாவட்டத்தைப் பற்றிய மற்ற மாவட்ட மக்களின் பொதுவான அபிப்பிராயம் அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது. ஆனால் உண்மை அவ்வாறு அல்ல. நல்ல பசுமையான மாவட்டம். ஏராளமான வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்யும் மாவட்டம். அப்புறம் பெரிய பெரிய சிமெண்ட் ஃபேக்டரிகள் சூழ்ந்த மாவட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். சரி போகட்டும் விடுங்க, எங்க மாவட்டத்தின் தொன்மையான சிறப்புகள் என்னவென்று எங்க மாவட்டத்து மக்களுக்கே முக்காவாசி பேருக்கு தெரியாது. எனக்கே இந்த நூல் படித்த பிறகு தான் பல விஷயங்கள் தெளிவாச்சு.

     குறிச்சி என்று முடியும் ஊர்கள் குறிஞ்சி நிலத்தை குறிப்பவை என்றும் குறிஞ்சியின் வலித்தல் விகாரமே குறிச்சி என்கிறார் ஆசிரியர். அப்படியே ஒரு லிஸ்ட்டே போடுகிறார் பாருங்கள், அட,அட!! இவ்வளவு குறிஞ்சி நிலப் பகுதிகள் நம்ம ஊருல இருந்துச்சா என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தேன். ஆமாம், நான் வேலை பார்த்த கீழக்காவட்டாங்குறிச்சி உள்ளிட்ட விழுப்பணங்குறிச்சி, அரண்மனைக்குறிச்சி, முனியன்குறிச்சி, காடுவெட்டாங்குறிச்சி,இடையக்குறிச்சி, துளாரங்குறிச்சி என்று நீளும் பட்டியல் மிகப் பெரியது.

முல்லை நிலப் பகுதி என்பது காடும் காடு சார்ந்த இடமும் அல்லவா?!. காடு எனவும் பட்டி எனவும் முடியும் ஊர்கள் யாவும் இந்த முல்லை நில வகைப்பாட்டில் அடங்கும். இந்த லிஸ்ட்லயும் ஏராளமான ஊர்கள் எங்கள் மாவட்டத்தில் உண்டு. அதே போல முல்லை நிலத்துடன் தொடர்புடைய சொல் தான் “பட்டி“(கேரளா வில் கூறும் பட்டி அல்ல) ஆமாம், ஆடு மாடுகளை அடைக்கும் இடம். அப்போ பட்டி எனப்படுபவையும் இந்த முல்லை நில வகைப்பாட்டில் வந்து விடும். எருதுக்காரன் பட்டி, மைக்கேல்பட்டி, வடக்குப் பட்டி என்று பல ஊர்கள் இந்த வகையிலும் அடங்கும். இதேபோல குளம், குழி, பள்ளம் என்பன தண்ணீர் தேங்கும் இடங்கள் அல்லவா. அந்த விகுதியுடனும் ஊர்கள் உண்டு. கரடிகுளம், புளியங்குழி, ஆலம்பள்ளம் என்று வகைக்கு பத்து ஊர்கள் இங்கே உண்டு. அப்புறம் மேட்டுப் பாங்கான நிலங்கள் மேடு என்று அழைக்கப் படும் அல்லவா. செங்கமேடு, கரைமேடு தழுதாழை மேடு(இது நான் வேலை பார்த்த உட்கோட்டை அருகே உள்ளது) என்று பல மேடுகளும் உண்டு.

மக்கள் சேர்ந்து வாழும் இடம் “சேரி“ ஆகும். (அப்போ “அது“ இல்லையா? என்று நீங்கள் விழிப்பது போல நானும் விழித்தேன்.) பாருங்க “பார்ப்பனச் சேரி“ என்று கூட இங்கே ஊர் உண்டு. இப்போது இந்தப் பெயர் பார்ப்பதற்கு “முரண்தொடை“ போலத் தோன்றுகிறது தானே?!

ஊர்பெயர்களுக்குப் பின்னே இவ்வளவு பெரிய ஆராய்ச்சி உள்ளதா என்று ஆசிரியர் என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டார் பாருங்கள்!!

குன்னம் பகுதியில் (பெரம்பலூர் மாவட்டம்) கிடைத்த உருண்டையான பெரிய பொருளை டைனோசர் முட்டை என்று நெட்டிசன்கள் கலாய்த்து டிரெண்டிங் பண்ணியதை மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் உள்ளபடியே எங்கள் மாவட்டம் ”நிலவியலாளர்களின் மெக்கா” என்று அழைக்கப் படுகிறது தெரியுமா?

ஆமாம், ஃபாசில் எனப்படும் கற்படியுருவங்கள் வழியே கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்கள் இங்கே புதைந்து கிடக்கின்றன. 75 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் கூட காட்சி படுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. மேலும் இந்த மாதிரி புதை படிமங்களை காட்சிப்படுத்தியிருக்கும் ஒரு அருங்காட்சியகம் கூட இங்கே உண்டு.

அரியலூருக்கு ரயில் எந்த ஆண்டு வந்தது தெரியுமா? எனக்கும் இந்தப் புத்தகத்தின் வாயிலாகத்தான் தெரிய வந்தது. திருச்சி – விழுப்புரம் ரயில் பாதை 1929 ம் ஆண்டில் திறக்கப் பட்டது. அப்போதுதான் வழியில் இருக்கும் ஊரான அரியலூருக்கும் ரயில் நிலையம் வந்துள்ளது. தற்போது இது சென்னை – மதுரை பாதையில் முக்கிய நிறுத்தமாக உள்ளது.

அரியலூர் பெயர்க்காரணம். சங்க காலத்தில் மழநாட்டுப் பகுதியாக அறியப்பட்ட பகுதி இதுவாகும். மழவர் சேர மரபினர் ஆவர். அரிசில் கிழார் சேர மரபினரையே பாடி இருப்பதால் அரிசிலூர் என்று இருந்த பெயரே அரியலூர் என்று வழங்கி வரலாம் என்பது நூலாசிரியரின் வாதம் ஆகும். இதற்கு மற்றொரு வாதமும் உண்டு. அரி + இல் + ஊர் அதாகப்பட்டது அரியாகிய திருமால் உறையும் ஊர் அரியலூர் என்று பேராசிரியர் நடன காசிநாதன் என்ற அறிஞர் கூறியிருக்கிறார்.

அப்படியே நூலாசிரியர் தனது ஊரான திருமழப்பாடிக்கும் இந்த மழநாட்டைச் சார்ந்த மழபாடி என்று பெயர்க்காரணம் கூறியுள்ளார்.

கி.பி 907 முதல் கி.பி 953 வரை ஆட்சி புரிந்த பராந்தகன் மனைவியருள் ஒருத்தி பழுவேட்டரையன் மகள் ஆவாள். பழுவேட்டரையரின் ஊர் தான் பழுவூர். (அதாவது கீழப்பழூர் மேலப் பழூர் இரண்டும் இந்த மாவட்டத்தில் உண்டு) அது போல கண்டராதித்தன் பெயரில் கண்டிராதீர்த்தம் என்கிற ஊரும் இங்கே உள்ளது.

அப்புறம் நம்ம ராஜராஜச்சோழன் காலம் கி.பி.985 முதல் 1014 வரை. இதில் 1012ல் ராஜேந்திரச் சோழனுக்கு இளவரசன் பட்டம் கட்டி கங்கை கொண்டசோழபுரத்தை தலைமையாகக் கொண்டு ஆட்சி நடத்த வைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரிய வணிக நகரமாக அந்த காலத்தில் இருந்த பகுதி தான் தற்போது உள்ள செட்டித் திருக்கோணம் மற்றும் பெரியத் திருக்கோணம் (எங்க அம்மாவின் ஊர்) என்கிறார் ஆசிரியர். மருதையாற்றங்கரையில் இருந்த மதுராந்தகபுரம் என்கிற ஊர் தான் இவை என்று செட்டித்திருக்கோணம் கோயிலில் இருக்கும் கல்வெட்டை ஆதாரமாகக்காட்டி கூறுகிறார்.

சோழ அரசர்களின் வரலாற்றை கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் அலசுகிறார். அப்படியே எங்க ஊரான சுத்தமல்லி பற்றியும் உள்ளது.

“சுங்கம் தவிர்த்த சோழனை கொஞ்சம் கர்வம் தவிர்க்கச் சொல்“ என்று கமல் வீர ஆவேசமாக தசாவதாரம் படத்தில் முழங்கியது குலோத்துங்கனைப் பார்த்து தான். அவனின் பல மனைவியருள் ஒருத்தியின் பெண்மக்களில் ஒருத்தி பெயர் ”சுத்தமல்லி” ஆழ்வாராம். இப்போ தெரியுதா எங்க ஊரின் வரலாறு?

அப்புறம் அரியலூரோடு சோழர்களின் தொடர்பை கூறிய ஆசிரியர் ராஜராஜனில் துவங்கி அதன் பின்னர் வந்தவர்கள் அனைவரும் (இறுதியாக இருந்த அரியலூர் மற்றும் உடையார்பாளையும் ஜமீன்கள் உட்பட) பார்ப்பன அடிமைகளாக இருந்ததை ஆதாரங்களோடு புலப்படுத்துகிறார்.

கி.பி.1177ல் குலோத்துங்கச் சோழ சதுர்வேதி மங்கலசபையார் ஏற்படுத்திய தீர்மான நகல் ஒன்றை ஆதாரத்தோடு நமக்கு பகிர்ந்துள்ளார் நூலாசிரியர். அந்த தீர்மானங்கள் வருமாறு

அந்தணர்கள் ஏர்பிடித்து நிலங்களை உழுதல் கூடாது

பணிமக்களாக இருந்தோர் வேள், அரசு போன்ற பட்டங்களை பெறுதல் கூடாது.

தொழிலாளர்களின் நன்மை தீமைக்கு பேரிகைகள் (அதாங்க மோளம்) கொட்டுதல் கூடாது.

அவர்கள் தங்களுக்கென்று அடிமைகளை வைத்துக் கொள்ளக் கூடாது.

சிறுவிளக்குகளும் பானைகளும் செய்து விற்கும் குயவர்கள் ஒரு மேலாடை அணிந்து கொள்ளலாம்.

அடுத்து இன்னொரு அநியாயத்தை கேளுங்கள்.

”கங்கை கொண்ட சோழன் ஆட்சியில் பார்ப்பனருக்குரிய ஊரில் பிறவகுப்பாரின் நிலங்கள் விற்கப்பட வேண்டும் என்ற உத்தரவு செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள வெளிச்சேரியிலிருந்து பிற வகுப்பினரின் நிலங்கள் அந்த ஊரில் உள்ள கோயிலுக்கு விற்கப்பட்ட செய்தியை கல்வெட்டு கூறுகிறது” என்கிறார் ஆசிரியர்.

அடுத்து மற்றொரு விஷயம். சாத்திரங்களில் வல்ல பார்ப்பனர்கள் கூறும் நீதிப்படியே தீர்ப்பு கூறும் வழக்கமும் இருந்திருக்கிறது. கம்மாளர்கள் அரசனிடம் பார்ப்பனர்களைப் போல உரிமையை வலியுறுத்திக் கேட்டபோது கம்மாளர் பூணூல் அணிந்து கொள்ளலாம் என்கிற சலுகை வழங்கப் பட்டிருக்கிறது. உய்யக் கொண்டான் திருமலைக் கல்வெட்டு ஆதாரம்.

1330 முதல் 1378 வரை மகமதியர்கள் ஆட்சி நடைபெற்றுள்ளது. அதன் அடையாளமாக அரியலூர் மாவட்டத்தில் அலிநகரம் (இப்போ அல்லிநகரம்), உசேன் நகரம் (உசனாவரம்) அமீனாபாத், கயர்லாபாத், உசேனாபாத் என்றெல்லாம் ஊர்ப் பெயர்களில் ஆதாரங்கள் தேங்கியிருக்கின்றன.

அரியலூரையும் உடையார்பாளையத்தையும் சற்றேரக்குறைய 500 ஆண்டுகாலம் முறையே மழவராயர் மற்றும் உடையார் ஆட்சி செய்துள்ளனர். அதாவது விஜயநகர அரசர்கள், தில்லி சுல்தான்கள், நவாபுகள்,நாயக்கர்கள் இறுதியாக கிழக்கிந்தியக் கம்பெனி என எல்லோருக்கும் பாரபட்சம் இன்றி கப்பம் கட்டியபடி பொட்டாட்டம் ஆண்டு வந்துள்ளார்கள்.

அப்புறம் எங்கள் மாவட்டத்தில் மற்றொரு ஆன்மீக சுற்றுலாத்தளம் ஏலாக்குறிச்சி மாதாக் கோயில். வீரமாமுனிவர் கட்டிய பேராலயம். ரங்கப்ப மழவராயர் என்பவரே 1734 ல் வீரமாமுனிவருக்கு ஆலயம் கட்டி இறைத் தொண்டு புரிய 63 குழி நிலம் வழங்கியுள்ளார். சமயத்தைப் பரப்புவதற்கு தமிழைக் கற்ற அவர் தமிழின் இனிமை மற்றும் இலக்கியத் தொன்மையில் மனமயங்கி தேம்பாவணி படைத்துள்ளார். அப்புறம் தொன்னூல் விளக்கம் என்று “குட்டித் தொல்காப்பியம்“ படைத்துள்ளார். தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை படைத்தவர் தமிழரல்லாத ஒருவர்தான் என்று நாம் தமிழர் தம்பிகள் செவிகளில் விழும் படி அரியலூர் மாவட்டத்தில் இருந்து கூறிக்கொள்கிறேன்.

உடையார்பாளையம் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் ஆகும். “சின்னநல்லப்ப காலாட்கள் தோழ உடையார்“ என்பார் தனது அண்ணன் கொலையுண்ட காரணத்தால் இடம்பெயர்ந்து இங்கே வந்து தனது நகரை நிர்மானித்து அமர்ந்து ஆட்சி புரிந்துள்ளார். நான் உடையார்பாளையத்தில் வேலை பார்த்த போது வியந்த விஷயம், அங்கே ஒவ்வொரு தெருவும் சாதிப் பெயரால் வழங்கப் படும். இன்று வரையிலும் அந்த தெருவில் அந்த சாதியினரே இருக்கின்றார்கள். தங்கம் மற்றும் செம்பு நாணயம் அச்சிட்டுள்ளார்கள். இன்னமும் அந்த நாணய சாலை கோட்டையினுள் இருக்கிறதாம். 1801 க்கு பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியார் தலையீட்டால் நாணய அச்சடிப்பு நிறுத்தப் பட்டுள்ளது.

உடையார்பாளையம் உடையார்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள நூலில் இருந்து ஒரு வாக்கியம் மட்டும் சொல்கிறேன். “நல்லப்ப உடையாருக்கு எட்டு மனைவிகளும், ஐம்பத்திரண்டு தாசிகளும் முப்பது பிள்ளைகளும் இருந்தனர்“ (90“s kids க்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துகிறேன்)

ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுகாரர்களுக்கும் ஆதிக்கப் போட்டி நடந்த போது ஆங்கிலேயர் பிரெஞ்சுகாரர்கள் இருவருக்கும் கப்பம் செலுத்தி தங்கள் ஆட்சிக்கு பங்கம் வராமல் “டீல்“ செய்திருக்கிறார்கள் உடையார்பாளைய ஆட்சிக் காரர்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் இந்த ஜமீன்கள் மத்தியில் பார்ப்பனிய மேலாதிக்கம் கொடிகட்டி பறந்துள்ளது. உதாரணம் பாருங்கள்.

“கும்பகோணம் சங்கராச்சாரியார் மடத்திற்கு தேவமங்கலம் என்ற ஊரைச் சார்ந்த நாற்பது காணி நிலத்தைக் கொடை வழங்கினார்“

“வடமொழியும் வேதமும் கற்றுத்தர ஒரு பள்ளியை நிறுவினர்“

“கும்பகோணத்தில் வடமொழி வேதம் பயிலும் மாணவருக்கு ஆண்டுக்கு ஐம்பது உரூபா உதவித் தொகை வழங்கியுள்ளார்“

“திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளிக்கு கட்டடம் கட்ட மூவாயிரத்து ஐநூறு நன்கொடை அளித்துள்ளார். (தேசியக் கல்லூரி குழுமம் இந்திராக காந்திக் கல்லூரி குழுமங்களின் முன்னோடி தான் தேசிய உயர்நிலைப் பள்ளி. முழுக்க முழுக்க பார்ப்பனியர்களின் கல்வி நிலையங்கள்)

இந்த மாவட்டங்களில் இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்களில் 1950களில் ஏராளமான ஆசிரியர்கள் இருந்ததற்கு ஒரு அரியவகை காரணத்தை ஆசிரியர் அழகாக புலப்படுத்தி உள்ளார். (ரொம்ப லென்த்தா போவதால் வேண்டாம்)

இறுதியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மிகப் பெரும் ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை சேர்த்துள்ளார். அப்புறம் இங்கே நடந்த வங்கி கொள்ளை, ரயில் வெடிப்பு, மற்றும் வெள்ளத்தில் ரயில் கவிழ்ந்த சம்பவங்கள் என முக்கிய நிகழ்வுகளையும் பதிவு செய்யத் தவற வில்லை.

அரியலூர் என்றில்லை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதுபோல ஒரு ஆவணப் பதிவு போன்ற ஒரு நூல் எழுதப் பட வேண்டும்.

இந்த நூலின் ஒவ்வொரு எழுத்தும் ஆதாரங்களைக் கொண்டே நெசவு செய்யப் பட்டுள்ளது. எவ்வளவு கல்வெட்டுகள், இலக்கியங்கள், செப்பேடுகள், அரசு ஆவணங்கள், ஆளுமைகள் என நூலாசிரியர் திரட்டி எழுதி இருப்பது வியப்பைத் தருகிறது. குறைந்தபட்சம் அரியலூரைச் சார்ந்தவர்களாவது படிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

பாவேந்தர் பதிப்பகம் என்கிற பெயரில் அவரே பதிப்பித்து இருப்பதால் நூல் நூலாசிரியரிடமே கிடைக்கும்.

 

 

 

1 comment:

  1. பெரிய திருக்கோணம் எங்கள் குலதெய்வம் ஸ்ரீபூர்ணா ஸ்ரீபுஷ்கலா ஸமேத ஸ்ரீஉத்தண்ட ஐயனார் கோயில் உள்ள ஊர்.
    அங்கே ஸ்ரீஅபிதப்ருஹத்குஜாம்பாள் ஸமேத ஸ்ரீஆதி மத்யார்ஜுனேஶ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அது சோழர்கள் காலத்தில் கட்டிய ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில். அந்தக் கோயிலை இப்போது புனருத்தாரணம் செய்து வருகின்றனர். அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாகத் தெரிகிறது.

    ReplyDelete

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...