Tuesday, November 10, 2020

டாக்டர் ஆகணும்னா நீ படி மேன் ஓய் மீ?!!

 *டாக்டராகணும்னா நீ படி மேன் ஒய் மீ?!!*



இந்த நீட் எக்சாமை ஒரு ஸ்டாண்டர்ட் மாடல் என எண்ணிக் கொண்டு நாம் மேல்நிலை மாணவர்களுக்கு சிலபஸ் உள்ளிட்ட பல பஸ்ஸையும் மாற்றித் தொலைத்து விட்டோம். நீட் ஜேஈஈ எல்லா எக்சாமுக்கும் உள்ள சிலபஸ்க்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து இந்தியாவிலேயே ஏன் உலக அளவிலேயே ”வெயிட்” டான சிலபஸ் எங்களது தான் என்று இறுமாப்போடு மார்தட்டிக் கொள்ளலாம். சிலபஸ் மாறி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டிலேயும் அடியெடுத்து வைத்துவிட்டோம். இந்த புதிய சிலபஸ் ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்று சற்று அலசிப் பார்த்து காயப் போடுவோமா? 


1. சிலபஸ் மாறிய பின்பு புத்தகங்களின் கனம் தாங்காமல் அறிவியல் பாடப் பிரிவுகள் காத்து வாங்குகின்றன.


2. 100 விழுக்காடு தேர்ச்சிக்காக நடத்துவதா அல்லது சிலபஸ் இல் உள்ள அனைத்து விஷயங்களையும் மாணவர்கள் மகிழ்வுடன் கற்றுக் கொள்ள வழிவகை செய்வதா என்கிற குழப்பம் முன்பெல்லாம் இருக்கும். ஆனால் இப்போது குழப்பத்திற்கெல்லாம் வேலையே இல்லை. ஏன்னா தற்போதைய கனமான சிலபஸ்ல இருக்கும் பாடங்களில் ஜீன் முதல் நவம்பர் வரையிலான ஐந்து மாதங்களில் ( என்னது ஆறு மாதமா? காலாண்டு பரிட்சை லீவு எல்லாத்தையும் எந்தக் கணக்கில் வைப்பதாம்?) பாதி கிணறு தாண்டினாலே சாதனை தான்.


3. நான் முன்பு முதுகலை ஆசிரியராக வேலை பார்த்த பள்ளியில் பழைய சிலபஸ் இருந்த போது அறிவியல் பிரிவில் 38 மாணவர்களும் கலைப் பிரிவில் 12 மாணவர்களும் இருந்தனர். புதிய பாடத்திட்டம் அறிமுகமான இரண்டாம் ஆண்டில் கலைப் பிரிவில் 38 மாணவர்களும் அறிவில் பிரிவில் 12 மாணவர்களும் படித்து வருகிறார்கள். அப்போ புதிய சிலபஸ் ஐ சந்தித்த முதலாம் ஆண்டு மாணவர்கள் கதி? அவர்களில் பாதிபேர் பதினோறாம் வகுப்பு முடித்தவுடனே (அதாவது வருடம் மட்டுமே) சுவரேறிக் குதித்து ஐடிஐ பாலிடெக்னிக் என்று பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிட்டனர்.


4. எத்தனை பேர் நீட் பாஸ் பண்ணினார்கள்? எங்கள் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12 பேர் பாஸ் பண்ணி இருக்கிறார்கள். ஆசிரியரால் நடத்தி முடிக்க இயலாத, மாணவர்களால் ஒரே வருடத்தில் தாங்களாகவே படித்து முடிக்க இயலாத கனம் சிலபஸ் அவர்களால் நன்கு படித்து வந்த மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதைத் தவிர வேறு எதையும் இந்த புதிய சிலபஸ் செய்ய வில்லை என்பது தான் பெரும்பாலான அரசுப் பள்ளி நடைமுறை நிதர்சனம்.


2001 ம் ஆண்டு நான் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்த போது இருந்த பனிரெண்டாம் வகுப்பு கணிதப் பாடப் புத்தகம் இன்னும் நினைவில் உள்ளது. ஒரு கட்டை புத்தகம் மற்றும் ஒரு மெலிதான புத்தகம் என இரண்டு பகுதிகள் இருக்கும். அதுவும் பதினைந்த செமீ உயரமே இருக்கும்.


உள்ளடக்கத்தை பொருத்தவரை எல்லாவற்றையும் போட்டு திணித்திருக்க மாட்டார்கள். ஒரு கருத்து, ஒரு திறன் அது சார்ந்த ஐந்து விதமான கணக்குகள் எடுத்துக்காட்டில் இருக்கும் அதையொட்டி ஒரு இருபது கணக்குகள் பயிற்சியில் இருக்கும். எனவே எடுத்துக் காட்டை குறு குறுவென ஒரு ஐந்து நிமிடம் பார்த்தால் போதும் பயிற்சிக் கணக்கை மாணவர்கள் தாங்களாகவே போட்டுவிட முடியும்.  சிலபஸ் மாறிய போது கெடு வாய்ப்பாக இந்த முறை மாறிவிட்டது. ஆமாம் அப்போது வந்த புதிய கணக்கு புத்தகங்களில் ஏராளமான கருத்துகளும் திறன்களும் இருக்கும். எடுத்துக்காட்டில் பத்துவிதமான கணக்குகள் இருக்கும். பயிற்சியில் வேறுவிதமாக ஒரு இருபது கணக்குகள் இருக்கும். ஆக முப்பது கணக்கையும் ஆசிரியரால் மட்டுமே அனைத்து மாணவர்களுக்கும் கற்றுத்தர இயலும். (விதிவிலக்காக சில மீத்திற மாணர்வகள் கொஞ்சம் கணக்குகளை தாங்களாகவே முயன்று போடுவார்கள்)


இப்போது உள்ள கணக்குகளை வீட்டில் செய்து பார்க்காமல் ஆசிரியர்களால் கூட போட இயலாது எனும் வகையில் தான் சிலபஸ் வடிவமைக்கப் பட்டுள்ளது. பயிற்சியின் போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த தலைப்புகள் எல்லாம் பள்ளி அளவில் உள்ளது என்று பெருமை வேறு.


நீட் மற்றும் ஜேஈஈ போன்ற பரிட்சைகள் தரத்துக்கான அளவுகோல் என்பதை விட பெருவாரியான ஏழை மாணவர்களை விலக்கி வைப்பதற்கும் தனியார் பயிற்சி மையங்கள் என்கிற ஒரு பெரு வணிக கால்வாயை திறந்து விடுவதற்குமான சாதனம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. ஆனாலும் கூட அந்த பரிட்சை தவிர்க்க முடியாத ஒன்றாக திணிக்கப் பட்டிருக்கிறது. அதன் பொருட்டு சிலபஸ் ஐ மாற்றியதன் மூலம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டு விட்டோம் என எண்ணுகிறேன். வருடத்திற்கு ஆறு லட்சம் மாணவர்கள் பரிட்சை எழுதுகிறார்கள் என்றால் மேற்காணும் ஒசத்தியான படிப்புக்கான தேர்வு எழுதுவோர் 25 விழுக்காட்டினர் என்றாலே அதிகம். மீதுமுள்ள 75 விழுக்காட்டினரின் மீது அந்த தேர்வினை காரணம் காட்டி இந்த கனமான சிலபஸ் திணிக்கப் படுகிறது.


பொதுவான சிலபஸ் ஒன்றை தயார் செய்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு வேண்டுமானால் அனைத்து அறிவியல் பிரிவு பாடங்களுக்கும் நீட் மற்றும் ஜேஈஈ சிலபஸ்ஸை ஒட்டி ஒரு துணைப்பாட நூலை தயார் செய்து வழங்கிவிடலாம். அந்த பரிட்சைக்கு தயார் ஆவோர் மட்டும் அதை படித்துக் கொள்ளட்டுமே.


கல்லூரிகளில் இயற்பியல் வேதியியல் பாடப் பிரிவுகளில் சேர உள்ள மாணவர்களுக்கு இவ்வளவு ஆழமான விஷயங்கள் தேவையில்லை. நீங்கள் காட்டி பயமுறுத்தும் ஆழத்தால் ஏராளமானோர் கலைப் பிரிவில் கரை ஒதுங்குகிறார்கள். கிராமபுர ஏழை மாணவர்களை அறிவியல் புலத்தில் இருந்து விலக்கி வைப்பதை கச்சிதமாக தற்போதைய புதிய அறிவியல் பிரிவு புத்தகங்கள் செய்கின்றன என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.


மீண்டும் ஒருமுறை தலைப்பை படியுங்கள், அவர்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிப்பது தான் இந்த கட்டுரையின் தலைப்பு.

1 comment:

  1. உண்மைதான். இன்று கிராமப்புறங்களில் (எங்க ஏரியாவில் கூட) அறிவியல் பிரிவு மாணவர்களே இல்லை.

    ReplyDelete

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...