Saturday, April 27, 2024

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை
ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்டும்" என்று தொண்டை நரம்பு புடைக்க சொல்வார்கள். ஆனால் சிஸ்டம் என்றால் என்ன என்கிற தெளிவு பெரும்பாலும் இருப்பதில்லை. முக்கியமாக "நாம் எவ்வளவு மோசமான கட்டமைப்பை வைத்திருந்தாலும் ஒரு நல்ல ஆசிரியர் ஒருவர் இருந்தால் அந்த மோசமான கட்டமைப்பிலும் மிகச்சிறந்த மாணவர்களை அவரால் உருவாக்கி காமிக்க முடியும் என்று ஏற்கனவே அறிந்த உண்மையை இந்த நூலின் வழியாக மீண்டும் கண்டு கொண்டேன். இந்த நூல் முக்கியமாக ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து மாணவ ஆசிரியர்களுக்கும் பாடமாக வைக்கப்பட வேண்டும் . ஆசிரியர் பயிற்சி எடுத்துக் கொள்ளும் மாணவர்களுக்கு நாம் எதை சொல்லித் தருகிறோமோ இல்லையோ அவர்களது டீச்சிங் ஆட்டிட்யூட் வளர்த்துக் கொள்வதற்கு நல்ல பல புத்தகங்களை பரிந்துரை செய்ய வேண்டும். அந்த புத்தகங்களை அவர்கள் நன்கு உள்வாங்கிக் கொண்டு உள்ளார்களா என்பதையும் சோதித்து அறிய வேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் சிலர் பி எட் பட்டங்களை "வாங்கி" விடுகிறார்கள் கேட்டால் Irregular Mode என்கிறார்கள். இந்த நூலுக்கு முன்னுரை எழுதி இருப்பவர் சா மாடசாமி அவர்கள். தனது முன்னுரையில் மாடசாமி அவர்கள் "ஆசிரியர்களே தேவையில்லை என்று ரூசோ சொன்ன அதிரவைக்கும் வாக்கியத்தோடு நூல் தொடங்குகிறது ஆனால் ஆசிரியர் வகுப்பறையின் பிராணவாயு என்கிற இவனோவ் கருத்தை நோக்கி நூல் நகர்கிறது" என்கிறார். நான் முன்பு குறிப்பிட்டது போல ஒரு பள்ளியின் கட்டட மற்றும் தளவாட வசதிகளையும் அப்பள்ளி அமைந்துள்ள சமூகப் பொருளாதாரச் சூழல்களையும் கடந்து தனிமனித ஆசிரியர் பங்களிப்பு கல்வித்தரத்தை பெருமளவு உயர்த்த முடியும் என்பது தான் இந்த நூலின் அச்சாணி. இந்த கருத்தை அனைவரும் அடிக்கோடிட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நூலில் நான் தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்ட ஒரு தகவல் என்னவென்றால் ரஷ்ய கல்வியாளர் ஆண்டன் மகரன்கோ என்பவர் தான் பள்ளிகளில் பிஇடி பீரியட் என்ற ஒன்று உருவாக காரணமானவர். ஆம், 1920 க்கு பிறகு தான் விளையாட்டு பாடவேளை பள்ளிக்குள் வந்தது. அவருடைய புகழ்பெற்ற வாசகம் "குழந்தைகளோடு விளையாடு ஒரு போதும் விளையாட்டை வழிநடத்தாதே" புத்தகத்தின் முதல் பகுதி முழுவதும் பல்வேறு நாடு மத இன குழு குழுக்களில் கல்வி என்பது எப்படி எல்லாம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை மிக விரிவாக அலசுகிறது. இரண்டாவது அத்தியாயத்தில் தான் நூலின் தலைப்பான இது யாருடைய வகுப்பறை தொடங்குகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலம் தொட்டு ஒவ்வொரு முறையும் கொண்டுவரப்பட்ட கல்வி கொள்கைகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறார். கல்வித்துறை சார்ந்த அனைத்து அலுவலகங்களும் அமைந்துள்ள வளாகம் DPI வளாகம் என்று அழைக்கப்படுகிறது அதில் டிபிஐ என்பது DEPARTMENT OF PUBLIC INSTRUCTIONS என்பதை குறிக்கும் அதாவது கல்வி என்பதை போதனை என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ஆங்கிலேய அரசு கல்வியை போதனையாய் மாற்றி வெறும் கவனிப்பவராக அடிபணிபவராக மாணவர்களை வைத்தது என்கிறார். ஆங்கிலேயர்கள் வந்தது வந்தபின் கல்வி அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒன்றாக விரிவுபடுத்தப்பட்டது என்று நாம் சிலாகித்தாலும் கூட அவர்கள் என்னவோ அவர்களுக்கு தேவையான எழுத்தர் போன்ற பணிகளுக்கு உகந்தவாறு மட்டுமே கல்வியை இங்கே கட்டமைத்து உள்ளனர். அதனால்தானோ என்னவோ இன்று வரை நாம் சேவகர்களை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டுள்ளோம். ஒருபோதும் முதலாளிகளையோ பெரிய விஞ்ஞானிகளையோ அதிக அளவில் உருவாக்க வில்லை. மூன்றாவது அத்தியாயம் சற்று சுவாரசியமான தலைப்போடு "உங்களுக்கு அறிவியல் தெரியும் ராமலிங்கத்தை தெரியுமா?!" நான் கூட ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறேன் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தார்கள் என்றால் அந்த 50 மாணவர்களுக்கும் 50 விதமான முகங்களை ஆசிரியர் கொண்டிருக்க வேண்டும் அதாவது தனியாள் வேறுபாடு அறிந்து அனைவரையும் அரவணைத்தும் அனைவருக்கும் கல்வி சென்று சேரும் வகையிலும் ஆசிரியர் போதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை தான் ராமலிங்கத்திற்கு அறிவியல் நடத்த வேண்டிய ஆசிரியர் ராமலிங்கத்தின் சமூக பொருளாதார பின்னணி குறித்து தெள்ளத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்கிற பொருளில் எழுதியுள்ளார். மதிப்பீட்டு முறை என்பது மாணவர்கள் கல்வி கற்றுள்ள அளவினை அறிந்து கொள்ள உருவாக்க உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறை ஆனால் தற்போதைய நமது கல்வி கட்டமைப்பில் ஒட்டுமொத்த கல்வியும் அந்த தேர்வு என்ற ஒன்றையே சுற்றி சுற்றி ஓடி வருகிறது என்றால் அது மிகையாகாது. நூலாசிரியர் இதையே ஆசிரியர் என்பவர் யார் என்ற கேள்விக்கு மூன்று பதில்களாக கொடுத்துள்ளார். 1. ஒன்று தேர்வுக்கு பயிற்றுவிற்பவர். 2. தேர்வு கண்காணிப்பாளர். 3. தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டாளர் ஆமாம், மேல்நிலை வகுப்புகளைப் பொறுத்த வரையில் பார்த்தோம் என்றால் மொத்த வேலை நாட்களில் ஜூன் முதல் நவம்பர் வரை மட்டுமே பாடங்களை போதிக்கிறோம். அதன்பிறகு டிசம்பர் துவங்கி மார்ச் வரையில் தொடர்ந்து தேர்வுகளை வைத்து விடைத்தாள் திருத்தி மீண்டும் தேர்வுகளை வைத்து விடைத்தாள் திருத்தி பொது தேர்வுக்கு மாணவர்களை கூர்மைப்படுத்துகிறோம் அதாவது மொத்த வேலை நாட்களில் 40 விழுக்காடு நாட்களை தேர்வை நோக்கி மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி என்றால் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அந்த நூல்களின் உள்ள பாடப்பொருளை வெறும் ஐந்து மாதங்களில் நடத்தி விட முடியுமா இந்த ஒரு விஷயம் போதும் நாம் எந்த அளவுக்கு தேர்வினை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள. நான்காவது தலைப்பு சற்றே அதிர்ச்சிகரமான தலைப்பு "வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது" கும்பகோணம் தீ விபத்து சம்பவங்களின் போது சம்பவத்தின் போது ஆசிரியர் வாயில் கை வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என்று சொல்லிச் சென்ற கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்த அந்த நிலையிலும் மாணவர்கள் எழுந்து ஓட முயற்சிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்திருக்கிறார்கள் சில குழந்தைகள் வாயில் கை வைத்த வண்ணமே கருகி இருந்து இருக்கிறார்கள் என்றெல்லாம் கூட ஆசிரியர் கூறி இருக்கிறார். அதாவது நமது கல்வி முறையில் மாணவர்களை எந்த அளவுக்கு ஒழுக்கம் என்ற பெயரில் அடக்கி ஒடுக்குகிறோம் என்று சற்று காட்டமாக இந்த அத்தியாயத்தில் கூறியிருக்கிறார். பள்ளிகளில் பிரதானமாக நாம் கடைப்பிடி கடைபிடிக்கும் பல மரபுகளை விதிகள் என்கிற அடிப்படையில் இங்கிலாந்து சேர்ந்த கல்வியாளர்கள் ஆயிரக்கணக்கான பள்ளிகளையும் வகுப்பறைகளையும் ஆய்வு செய்து பட்டியலிட்டு உள்ளனர் அதில் மொத்தம் 4,184 விதிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது இவற்றை தொகுத்த போது உலகத்தில் உள்ள மிக நீண்ட அரசியல் சட்டமான இந்திய அரசியல் சட்டத்தில் கூட இத்தனை ஷருத்துகள் இல்லை என்று வியந்து போகிறார். நூலாசிரியர் பொருளாதாரம் பகூறி பல நுணுக்கமான வியக்க தக்க உண்மைகளை அங்கங்கே கூறியுள்ளார். ஆத்தர் ஜோன்ஸ் ஸ்டீபன் ஆல்பர்ட் போன்ற சமூக விஞ்ஞானிகள் லட்சக்கணக்கான குடும்பங்களின் மீது நடத்திய ஆய்வுகளின் முடிவில் அதீத உற்பத்தி தொழில்துறையின் புதிய முகவரியாய் மாறியபோது ஒரு வீட்டிற்கு ஒரு டிவி எனும் நிலையை உடைத்து அதே நான்கு சிறு குடும்பங்களுக்கு ஒரு டிவி பிரிட்ஜ் என்று விற்க வேண்டிய சந்தை நிர்பந்தங்களுக்காக கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனி குடும்பங்களாக பிரிந்திருக்கும் நுணுக்கத்தை சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஒரு அசாதாரண வளர்ப்பு செல்லப்பிராணியாக பாவிக்கின்றனர். உதாரணமாக என் வீட்டு நாய் குட்டிக்கரணம் அடிக்கும் பூனை தலைகீழாய் நடக்கும் எங்கள் வீட்டு கிளி பேசும் என்பது போல ஒரு குழந்தையை பாட வைப்பது கராத்தே வீணை வகுப்பு ஹிந்தி கிளாஸ் என தொடங்கி கல்விக்கான நேரம் போக மீதியை குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் குதூகலமாய் விளையாட அனுமதிக்காமல் உருப்படியாய் எதையாவது கற்க பணம் செலவழித்து உற்றார் உறவினரிடம் என் குழந்தைக்கு இந்த விஷயங்கள் தெரியும் என பிரஸ்தாபிப்பது வெளிப்படையான சமூக அம்சமாக இன்று மாறி உள்ளது. தங்கள் குழந்தைகளை இன்று வீட்டின் ஆடம்பர அலங்கார அழகு சாதனமாக கருதுகிறார்கள். RTE சட்டம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளையும் அந்த சட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும் ரொம்ப மிகவும் தெளிவாக ஆசிரியர் கூறியுள்ளார். குழந்தைகளின் குரலுக்கு செவி மடுக்காத வகுப்பறை பற்றி மிகவும் காத்திரமாக நூலாசிரியர் கூறியுள்ளார் "குழந்தைகளின் குரலுக்கு செவி மடுக்காத வகுப்பறைகள் சவக்கிடங்கை விட உயிரற்றதாக போர்க்களத்தை விட வன்முறை மிக்கதாகவே இருக்க முடியும்" என்கிறார். "தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005" (NCF2005) ஆவணம் பற்றி எத்தனை ஆசிரியர்களுக்கு தெரியும் என்று நூலாசிரியர் ஆதங்கப்படுகிறார். யஷ்பால் கமிஷனின் ஐந்து கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1. பள்ளிக்கு வெளியில் உள்ள வாழ்க்கையை பள்ளியறிவோடு தொடர்பு படுத்துவது. 2. கற்றலை பொருள் உணர மனப்பாட முறையில் இருந்து மாற்றுவதை உறுதி செய்வதோடு புரிந்து கற்றலை முன் வைப்பது 3. பாட நூல்களுக்கு அப்பாற்பட்டு படிக்கும் வகையில் கலைத்திட்டத்தை பெருமைப்படுத்துவது 4. தேர்வு முறைகளை மேலும் நெகிழ்வாக்குவதுடன் வகுப்பறையில் செயல்பாடுகளின் மூலம் புதிய வகை மதிப்பிடுதல் முறையை முன்மொழிவது. 5. நாட்டின் ஜனநாயக பன்முகத் தன்மைக்கு உட்பட்டு புறக்கணிக்கப்பட்ட தனித்துவங்களை அக்கறையோடு வளர்த்தெடுத்தல். இந்த ஐந்து விஷயங்கள் தான் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பின் மிக முக்கிய முதுகெலும்பாகும். உங்கள் வாழ்நாளில் நீங்கள் அறிந்த ஒரு நல்லவரை குறிப்பிடுங்கள் என்று சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனல் கேட்டபோது 99% ஏதாவது ஒரு ஆசிரியரின் பெயரை எழுதினார்களாம். அப்படி என்றால் ஆசிரியர்களான நாம் எவ்வளவு சமூக பொறுப்புடன் கலந்து கொள்ள வேண்டும். நான் துவக்கத்தில் சொல்லியது போல கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும் ஒரு நல்ல ஆசிரியர் நல்ல மாணவர்களை உருவாக்க இயலும் என்பதை கல்வியியல் வல்லுநர்கள் ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் அவர்கள் கூறிய முக்கியமான மூன்று விஷயங்கள் 1. கற்பித்தலில் ஆசிரியர் காட்டும் முழுமையான ஈடுபாடு 2. குழந்தைகள் மீதான ஆசிரியரின் நேசம் பிணைப்பு விருப்பு. 3. தன் வேலை விஷயத்தை யாருடைய கண்காணிப்பும் இன்றி முக்கிய கடமையாக கொள்ளுதல். மேற்கண்ட இந்த மூன்று சிறப்பியல்புகளோடு கற்றல் கற்பித்தலின் நுணுக்கங்கள் பாடத்தில் வல்லமை ஆகியவை இணையும் போது ஆசிரியர்கள் மிகச்சிறந்த வகுப்பறையை கட்டமைக்கிறார்கள் என்று அவர்களின் ஆய்வு முடிவு கூறுகிறது. அடுத்ததாக வாட்ஸ் அப் மூலமாக நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் உலகத்திலேயே கல்வியில் தலைசிறந்த நாடாக இருப்பது பின்லாந்து என்பதாகும். அதை நூலாசிரியர் "கல்வியின் மெக்கா பின்லாந்து" என்கிறார். அந்த நாட்டின் கல்வி முறையை பற்றி நேரடியாக தெரிந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் கல்வியாளர்கள் அங்கே சுற்றுலா செல்கிறார்களாம் அந்த கல்வி சுற்றுலா மூலமாக 27 விழுக்காடு அந்நிய செலாவணி அந்த நாட்டிற்கு குவிகிறது என்றால் அந்த நாட்டு கல்வி முறை மீது நமக்கு மிகப்பெரிய மரியாதை உண்டாகிறது. அங்கே 13 வயது வரை குழந்தைகளில் முதலிடம் இரண்டாம் இடம் என்கிற தரப்படுத்துதல் என்கிற விஷயம் கிடையாது. நாம் அநேகமாக அனைத்து சிற்றூர்கள் வரை கல்வியில் கணினியின் பங்கினை ஐசிடி என்று பெருமிதமாக கொண்டு சென்றுள்ளோம். ஆனால் கல்வியில் உலக அளவில் முதல் இடம் பிடித்துள்ள பின்லாந்தில் வகுப்பறைகள் இன்று வரை கணினி மயமாக்கப்படவில்லை. எத்தனை கணினி மற்ற இன்னபிற தொழில்நுட்பங்கள் வந்தாலும் ஒரு வகுப்பறையில் அற்புதங்களை ஆசிரியர்தான் நிகழ்த்த முடியும் என்பதை நம்புவதால் தான் அந்த நாடு கல்வியில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அங்கே ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை தாங்களே தயாரிக்கின்றனர். இங்கே உள்ளது போல ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒரே நூல் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பாடத்தினை நடத்த வேண்டும் என்பன முதற்கொண்டு இப்போது உள்ள எமிஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேல் இடத்திலிருந்து கட்டளைகள் பாய்ந்த வண்ணம் உள்ளது. பின்லாந்துக்கு அடுத்தபடியாக கியூபாவும் கல்வியில் மிகச் சிறப்பான பணிகளை செய்து கொண்டுள்ளது. கியூபாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன் படிப்புடன் சேர்ந்து பல்வேறு பணிகளை தெரிந்து வைத்துள்ளான். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் ஒலிப்பெருக்கி பழுது பட்ட போது அங்கு வந்திருந்த ஒரு கியூபா மாணவன் தன்னிடம் உள்ள டூல் கிட் ஐ எடுத்துக்கொண்டு சென்று உடனடியாக அதனை சரி செய்தானாம். இங்கே எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள் கூட வீட்டில் பியூஸ் போனால் அவர்கள் அதை சரி செய்ய இயலாத கையறு நிலையில் தான் உள்ளனர். நான் எங்கள் ஊர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்துவார். அவர் ஒரு பாட வேளையில் அதிகபட்சமாக ஐந்து பாடங்களை முடித்து அசத்தினார். அப்படி என்ன செய்தார், வகுப்பில் தங்கு தடை இன்றி சரளமாக வாசிக்கக்கூடிய மாணவர்களை எழுப்பி பாடத்தை சத்தமாக வேகமாக வாசிக்க கூறுவார். அவர் இடையிடையே "அதான் பாரு அதான் பாரு" என்று கூறுவது தான் அந்த பாடம் குறித்து அவர் அளிக்கும் விளக்கம். இன்றைய நமது கல்விமுறையில் பெரும்பாலான இடங்களில் இந்த எடுத்துக் கூறுவது என்கிற நோய் தான் பிடித்துள்ளது. கல்வியின் கட்டமைப்பு அரசுத் திட்டங்கள் பாடத்திட்ட வடிவமைப்பு தேர்வு முறைகள் என்று என்னதான் பல வேறு விஷயங்கள் இருந்தாலும் ஒரு திறமை வாய்ந்த ஆசிரியர் தன்னைவிட திறமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கி விடுவார். என்பதுதான் இந்த நூலின் சாராம்சம் இதை புரிந்து கொண்டால் போதும் இது யாருடைய வகுப்பறை என்றால் இது மாணவர்களுடைய வகுப்பறை நல்லாசிரியர்களால் பல அற்புதங்களை நிகழ்த்த களம் அமைக்கும் வகுப்பறை என்பதை புரிந்து கொள்ள இயலும். ஆகவே இந்தியாவின் கல்வி குறித்த வரலாறை பல சான்றுகளோடு பல கல்வி குழுக்களின் சாரங்களோடு மற்றும் கல்வி உளவியல் குறித்த அறிந்து கொள்ள நிச்சயமாக இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி ஆகும்.

ஆவேஷம் -மலையாளப்படம்

நான் லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் மேல்நிலை வகுப்புகள் 1992-1994 ல் படித்தேன். அருமையான ஆதிதிராவிடர் நல விடுதியில் இரண்டு ஆண்டுகள் வாசம். என்னை "லால்குடி டேஸ்" என்கிற நூல் எழுதுமளவுக்கு பாதித்த அனுபவங்கள். (அமேசான் கிண்டிலில் உள்ளது வாசியுங்கள்) 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கிடையில் இரண்டு கோஷ்டிகள், அவர்களுக்குள் எப்போதும் ஒரு பகை புகைந்து கொண்டே இருந்தது. ஆண்டு இறுதித் தேர்வு முடியும் தருவாயில் அது சண்டையாக வெடித்தது. வலு குறைவாக இருப்பதாக கருதப்பட்ட மாணவர்கள் லோக்கல் ரவுடிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு வலுவாக இருந்ததாக கருதப்பட்ட மாணவர்களை சாலைகளிலேயே நைய புடைத்து விட்டனர். கிட்டத்தட்ட ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரியில் நடந்ததை போன்ற ஒரு சம்பவம். அந்த காலகட்டத்தில் மீடியா வீடியோக்கள் இது மாதிரியான செட் அப் பரவலாக இல்லாத காரணத்தினால் அது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கவில்லை. மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்த ஒரு அண்ணனுக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது அந்த அளவுக்கு இரத்தக் கலரியான ஒரு சண்டை. ஆவேசம் படத்தின் கதை சற்றேறக்குறைய இது போன்றது தான். கேரளாவில் இருந்து மூன்று மாணவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள். வழக்கம் போல சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்கிறார்கள். கல்லூரிக்கு வெளியே லேசாக ஆதிக்கம் செலுத்த முனையும் போது இந்த கேரள மாணவர்கள் "சீனியர் ஜூனியர் எல்லாம் காலேஜ்ல தான் வெளியில் எல்லாம் கம்முனு போங்க" என்று எதிர்த்து பேசி விடுகிறார்கள். அதனால் இரவு நேரத்தில் கும்பலாக வந்து இவர்களை கடத்திக் கொண்டு போய் நான்கு நாட்கள் நன்கு வைத்து செய்கிறார்கள். அதனால் ஆவேசமடைந்த அந்த கேரள பையன்கள் எப்படியாவது இங்கே உள்ளூரில் உள்ள ஒரு ரவுடி உடன் சினேகம் கொண்டு சீனியர்களை பழிவாங்கி விட வேண்டும் என்று வெறிகொண்டு தேடுகிறார்கள். அப்படி சிக்குபவர் தான் நம்ம ஃபகத் ஃபாசில். அவரது துணைகொண்டு சீனியர்களை அடித்தார்களா ? திரும்ப ஃபகத் ஃபாசில் இடம் இருந்து விலகி தங்களது படிப்பை தொடர்ந்தார்களா இல்லை புலிவாலை பிடித்த கதை ஆனதா? என்கிற விஷயத்தை சிரிக்க சிரிக்க சொல்லும் படம் தான் இது. அவ்வளவு நகைச்சுவை. ஒரு பெரிய ரவுடிக்கான எந்த ஒரு புறத்தோற்றமும் இல்லாத ஃபகத் ஃபாசில் கழுத்து நிறைய செயின் கை நிறைய மோதிரம் மற்றும் மீசை உடல் மொழி இவற்றை வைத்து தெறிக்க விட்டிருப்பார். அவ்வளவு அசுரத்தனமான ஒரு நடிப்பு. அவருடன் இருக்கும் சக ரவுடிகளுக்கும் மிக அருமையான சண்டைக் காட்சிகளை அமைத்து இருப்பார்கள். ஏனோ தெரியவில்லை அவர்களுடன் இருக்கும் அனைத்து ரவுடிகளும் Y=-x^2 என்கிற parabola வடிவ மீசையே வைத்துள்ளார்கள். படத்தில் ஒரு அம்மா கதாப்பாத்திரம் தவிர வேறு பெண் கதாப்பாத்திரமே இல்லை. கல்லூரியில் கும்பலோடு கும்பலாக சில பெண்கள் வருகிறார்கள் அவ்வளவுதான். ஃபகத் ஃபாசிலின் குடும்ப தயாரிப்பு. நன்றாகவே கல்லா கட்டுகிறது. தொடர்ந்து மலையாள படங்கள் தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமா என்பது தெரியவில்லை. ஏனெனில் போதுமான பல நல்ல படங்கள் தமிழில் வராத காரணத்தினால் அந்த வெற்றிடத்தை கச்சிதமாக மலையாளப் படங்கள் நிரப்புகின்றன என்று சொல்லலாம். மஞ்சு மேல் பாய்ஸ் படத்துக்கு பிறகு இந்த படத்துக்கும் நான் பார்த்த தியேட்டரில் இருக்கைகள் அநேகமாக நிரம்பி இருந்தன. பக்கா தியேட்டரிக்கல் மெட்டீரியல் நிச்சயமாக தியேட்டரில் குழந்தைகளோடு பார்த்து இந்த கோடை விடுமுறையை கொண்டாடலாம்.

Thursday, April 25, 2024

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!!
இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற்றும் செறுப்பு அளவு எடுப்பவர் என்று நாள் தோறும் புதுப் புதுப் பணிகள் அணிவகுத்து தான் வருகின்றன. “நானும் நல்லவன்னு சொல்லிட்டானே என்று எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது” என்ற வடிவேல் கதை ஆகிவிட்டது எங்க கதை. தேசிய அளவிலான பெரும் பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமின்றி அனைத்து வகைத் தேர்தல் பணி என்று எல்லாமே எங்களை நம்பியே ஒப்படைக்கப் படுகின்றன. இந்த நாடாளுமன்ற தேர்தல் பணியில் நாங்கள் பட்ட பாட்டினை சொல்லவே இந்த கட்டுரை. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பணியாளர் விவரங்களை சேகரித்து விடுவார்கள். ராசி நட்சத்திரம் தவிர அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட வேண்டும். தேர்தல் பணியில் இருந்து தப்பித்து விடலாம் என்று விண்ணப்பத்தை கொடுக்காமல் இருந்துவிட இயலாது. விண்ணப்பங்களை பெற்று Pay roll ல் உள்ள பெயர் பட்டியலோடு அலுவலகம் வாரியாக ஒப்பிட்டு (என்னா ஒரு வில்லத்தனம்!) “ஓலை“ அனுப்பி தெறிக்க விட்டுவிடுவார்கள். எங்கள் பள்ளி தேர்தல் விண்ணப்பங்களில் என்னுடையதை மேலே வைத்து சற்று இறுக்கமாக தைத்து கொடுத்து விட்டேன். ஓவரா தைத்த காரணத்தினால் பேப்பர் கிழிந்து விண்ணப்பம் காணாமல் போய் விட்டது. கடைசிநேரத்தில் “பின்வரும் தலைமையாசிரியர்கள் விண்ணப்பம் வழங்கவில்லை“ என்று வேலைக்கே உலை வைக்கும் ஓலை வந்துவிட்டது. உடனே புதிதாக விண்ணப்பம் தயாரித்து மூச்சு வாங்க ஓடி அன்றைக்கே கொடுத்துவிட்டேன். கடைசியில் என்ன ஆகிவிட்டது என்றால் கடைசி ஆளாக விண்ணப்பம் வழங்கிய எனக்கு மட்டும் தேர்தல் பணி வந்துவிட்டது. எங்கள் பள்ளி ஆசிரியர்கள் யாருக்கும் வரவில்லை. “உங்குத்தமா எங்குத்தமா யார நானும் குத்தம் சொல்ல” என்று பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டே முதல் கட்ட பயிற்சிக்கு சென்று வந்தேன். இரண்டாம் கட்ட பயிற்சிக்கு முதல் நாள் எங்கோ பரண்மேல் இருந்த மீதி விண்ணப்பங்களை கண்டு பிடித்து மீதமுள்ள ஆசிரியர்களுக்கும் பணி வழங்கி விட்டார்கள். பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை மாலை செய்தித்தாளை பார்ப்பதைக் காட்டிலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நமக்கு எந்த ஊரில் தேர்தல் பணி வழங்கப் பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது தான். நிச்சயமாக மாவட்டத்திற்குள் இருக்கும் ஒரு கேள்விப் படாத ஊரில் தான் பணி வழங்குவார்கள். 20 விழுக்காடு பணியாளர்களை ரிசர்வ் என்று உட்கார வைத்திருப்பார்கள். பணியில் இருக்கும் அலுவலர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ரிசர்வில் உள்ளவர்களை கதறக் கதற இழுத்து வந்து பணி வழங்குவார்கள். என்னுடைய 22 ஆண்டு சர்வீஸில் எந்த தேர்தல் பணியிலும் எனக்கு ரிசர்வ் வந்ததே இல்லை. தேர்தல் ஆணையத்தில் Randomisation செய்யும் கணினி கூட “ஒரு திறமையான தேர்தல் அலுவலரை“ விட்டுவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக வேலை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு இந்த முறை பணி வழங்கப்பட்ட கிராமத்தின் பெயரை பாதுகாப்பு காரணங்களுக்காக ( ”யாருடைய பாதுகாப்பு?” ”என்னுடையது தான்”) ”எக்ஸ்” என்றே குறிப்பிட்டு விடுகிறேன். போற ஊருல இரவு உணவு ஏற்பாடு ஆகி இருக்கும். எனவே மதிய உணவை ஜெயங்கொண்டத்தில் உள்ள பாலாஜி பவனில் ஃபுல் கட்டு கட்டிக் கொண்டேன். முன்ன பின்ன ஆனால் தாங்கணுமே. பள்ளி வளாகத்தில் நுழைந்த உடன் ஷாமியானா பந்தல் பந்தாவாக வரவேற்றது. கிராம நிர்வாக அலுவலரும் வரவேற்றார். 100 டிகிரி வெயிலில் கொதிக்கும் தார் சாலையில் வந்த களைப்பு தீர பூத் உள்ள வகுப்பறையில் குப்புற அடித்து படுத்துவிடலாம் என்று ஓடோடி வந்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கதவை திறந்த மாத்திரத்தில் மும்பை கேட் வே ஆஃப் இண்டியாவில் புறாக்கள் பறப்பது போல வௌவால்கள் பட பட வென பறந்து வெளியே வந்து திகிலை கிளப்பியது. சினிமாக்களில் ஹீரோ காலை வேகமாக தரையில் ஊன்றினால் புழுதி பறக்கும் அது சுத்தமான டைல்ஸ் போட்ட தரையாக இருந்தாலும் சரி பூங்காக்களில் இருக்கும் பேவர் பிளாக் தரையானாலும் சரி புழுதி பறந்தால் தான் சண்டையில் பொறி பறக்கும் எஃபக்ட் வரும் அல்லவா. ஆனா எந்த சண்டை சச்சரவும் இல்லாமலே நான் கால் வைத்த மாத்திரத்தில் புழுதி பறந்தது அந்த பூத் இருந்த அறையின் தரையில். வௌவால்களின் படபடப்பு புழுதி பறந்த எஃபக்ட் இதையெல்லாம் ஒரு சில பழைய திகில் படங்களில் மட்டுமே பார்த்திருந்த சக தேர்தல் அலுவலர்கள் எல்லோரும் மூட்டை முடிச்சுகளோடு முப்பது அடி தூரம் ஓடிவிட்டார்கள். அப்புறம் ஆள் பிடித்து அறையை தண்ணீர் தெளித்து கூட்டச் செய்து புழுதியின் கோபத்தினை தற்காலிகமாக தணித்தோம். ”ஒரு ரெண்டு நாளைக்கு பொறுத்துக்கங்கப்பு!!” எங்கள் பள்ளி பூத் இருந்த அறையை நான்கைந்து முறை வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு கட்டிடத்தின் வெளிப்புறம் பெரிய லைட் உள்ளே இன்னும் இரண்டு லைட் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். இப்படி தெரிந்திருந்தால் இருந்த ரெண்டு ஃபேன்களையும் நானே ஸ்டூல் போட்டு ஏறி கழட்டியாவது எக்ஸ்ட்ராவாக இரண்டு ஃபேன்களை வாங்கி இருக்கலாம். ஆனால் நான் போன அந்த ”எக்ஸ்” ஊரில் இந்த மாதிரி எந்த சடங்கு சம்பிரதாயங்களையும் சம்மந்தப் பட்ட அலுவலர்கள் ஆற்றவே இல்லை. அதிகாரிகள் கேட்ட போதெல்லாம் “ஐயா நம்ம ஏரியாவில் இருக்கும் பூத் எல்லாமே சும்மா தக தகன்னு கண்ணாடி மாதிரி ஜொலிக்குதுங்கய்யா” என்று கூறிவிட்டு வாளாவிருந்து விட்டார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. பில்டிங் ரூஃப் இரண்டு இடங்களில் பெயர்ந்து கொண்டு இருந்தது. ஃபேனை ஐந்தில் வைத்தால் ஒட்டு மொத்தமாக பெயர்ந்து கொண்டு தொபீர் என்று கபாலத்தில் விழுவது போல பயம் காட்டியது. ஆனால் சூழலோ “ஃபேனை பன்னெண்டுல வைடி மாலா” என்பது போல வியர்த்து கொட்டியது. என்னுடன் வந்த சக அலுவலர் என்னை பார்த்த பார்வையில் இருந்து அவர் மைண்ட் வாய்ஸை நான் கண்டுகொண்டேன். “நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது“ “டேய் புலிகேசி வெளியே வாடா“ என்பது போல ஒரு பிளிரல் பார்த்தால் கிராமத்தில் இருந்து ஒரு வயதானவர் தேனீர் எடுத்து வந்திருந்தார். “ஐயா ஒரு முப்பத்தாறு மணி நேரத்திற்கு உங்க சத்தத்தின் அளவை ஒரு ஐம்பது டெசிபல் குறைத்துக் கொள்ளுங்கள் ஐயா இல்லன்னா பில்டிங் இடிச்ச கேசுல உள்ள போய்டுவீங்க” என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். வெளியே போனால் எதிரே இருந்த சத்துணவு மையக் கட்டிடத்தின் அருகே “இடிக்கப் பட வேண்டிய கட்டிடம் அருகே செல்லாதீர்கள்“ என்கிற போர்டு கிடந்தது. “மேடம் ஆக்சுவலா இந்த போர்டு அந்த பூத் கட்டிடத்தில் தான் இருந்திருக்கணும்?“ என்று விஏஓ விடம் காமெடியாக கூறினேன். “சார் அந்த போர்டு நேற்றுவரை அங்கதான் இருந்தது“ என்று பீதியை கிளப்பினார். அப்போது தான் அடுத்ததாக ஒரு நான்கு பேர் கொண்ட அடுத்த படை வந்தது. “என்ன மேடம் ரெண்டு பூத்தா?“ என்றேன். “ஆமா சார் அந்த ரூம் நடுவுல ஸ்கிரீன் போட்டுக்கோங்க” “ஆமா, இருக்குறது புறாக் கூண்டு அதுலு பார்ட்னர்ஷிப் வேற” என்று அரசு பட வடிவேல் போல அங்கலாய்த்தபடி தேனீர் அருந்தினோம். இவ்வளவு ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு என்னவென்றால் எங்க பூத்துக்கு 400 ஓட்டு பக்கத்து பூத்துக்கு 1000 ஓட்டு. எங்க பள்ளி வளாகத்தில் ஒரு பூத் மட்டுமே அதற்கே தேவையான மேசைகள், நாற்காலிகள், ஏஜெண்ட்டுகள் அமர இருக்கைகள், ஓட்டிங் கம்பார்மெண்ட் அடிக்க ஏதுவாக பெரிய பிளைவுட் டேபிள் என்று எடுத்து வைத்து இருந்தோம். இருபால் ஆசிரியர்களின் கழிவறைகளையும் சிறப்பாக சுத்தம் செய்து வைத்திருந்தோம். ஆனால் நமக்கு வாய்த்த தலைமையாசிரியர் மிக மிக திறமைசாலி மற்றும் சாமர்த்தியசாலி. ஆமாம், பாழடைந்த மண்டபத்தை கூட்டாமல் கூட கொடுக்கிறோமே என்கிற குற்ற உணர்வு கிஞ்சிற்றும் இல்லாதவர். அதே வேளையில் பூத் இடிந்து விழுந்தால் ஃபர்னிச்சர் டேமேஜ் ஆக வாய்ப்பு இருக்கிறதே என்கிற அக்கரையில் இரண்டு பழைய மேசைகள் தவிர எதையுமே விட்டு வைக்க வில்லை. ஆனால் நாங்கள் விடுவதாக இல்லை. அவர் திரும்பி வந்து எங்க மேல கேஸ் போட்டாலும் பரவாயில்லை என்று கிராம உதவியாளர் வசம் இருந்த பள்ளி சாவியை வாங்கி நாற்காலிகளை எடுத்துக் கொண்டோம். இதற்கிடையில் இயற்கை உபாதை கழிக்க கழிவறை சென்ற சக அலுவலர் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். “சார் பாத்ரூம்ல தவளை சார்” என்றார். ஆமாம் அந்த கழிவறை தவளைகளின் குடியிருந்த கோயில். இந்த பள்ளி ஜீவகாருண்யத்தின் மொத்த உருவமாக இருக்கிறதே. “என் ஆள அடிச்சது எவண்டா“ என்கிற தோரணையோடு கதவைத் தள்ளினேன். அங்கே ஜன்னல் மேலே இருந்த இரண்டு தவளைகள் என்னை உற்று நோக்கியபடி கிஞ்சிற்றும் பயப்படாமல் இருந்தன. “காலை மட்டும் உள்ளே வைத்து பாரடா, கபாலத்தை கவ்வுகிறேன்“ என்று அவை சூளுரைப்பது போல தெரிந்தது. “சார் நான் பக்கத்துல இருக்கிற ஏரிக்கே போய்ட்டு வந்து விடுகிறேன் சார்” என்று வேகமாக கிளம்பினார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியதே என்று வருந்திய அந்த வேளை இருள் லேசாக கவ்வியிருந்தது. “சார் அங்க ஏரிபகுதியில் பாம்பு இழையுது சார்“ என்று ஈனஸ்வரத்தில் வருத்தத்தோடு கூறினார். அடுத்த நாள் கிளம்பும் வரை ஐம்புலன்களையும் அடக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப் பட்டார். நானெல்லாம் தவளையை மதிக்கறதே கிடையாது. பாம்பே வந்தாலும் பதறாம சிதறாம (கவனத்தை சொன்னேன்) போற ஆளு. அதனால் துணிந்து கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றேன். பார்த்தால் தாழ்ப்பால் கிடையாது. Necessity is the mother of Invention ஆமாம், புதியதொரு யோகா பொசிஷனை அந்த இக்கட்டான சூழல் எனக்கு பயிற்றுவித்தது. இரவு உணவு முடிந்த பிறகு தூங்குவதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்களுடன் உள்ள இரண்டு பெண் ஆசிரியர்கள் பள்ளியில் தலைமையாசிரியர் அறையில் உறங்கினர். காவல்துறையினர் இருவரும் வராண்டாவில் படுத்திருந்தனர். எங்கள் பூத்ஆசிரிய நண்பர் பள்ளியின் மற்றொரு அறையை திறந்து படுத்துக் கொண்டார். பக்கத்து பூத்தின் தலைமை அதிகாரியாக வந்திருந்த மற்றுமொரு தலைமையாசிரிய நண்பர் “விழுந்தா நாட்டுக்கு விழாவிட்டால் வீட்டுக்கு“ என்று வீரவசனம் பேசியபடி பூத் அறையில் ஃபேனுக்கு அடியிலேயே படுத்துக் கொண்டார். ஏனென்றால் வாக்கு இயந்திரத்தை உயிரினும் மேலானதாக மதித்து இந்திய ஜனநாயகத்தை கட்டிக் காக்க வேண்டும். ஆகவே அந்த பேய் பங்களாவில் வாக்கு இயந்திரத்தை கட்டியணைத்தபடி உறங்கியாக வேண்டும். ஆனால் உறக்கம் தான் வரவே இல்லை. நானும் சுற்றி சுற்றி வந்து பார்க்கிறேன் என்னை தவிர வளாகத்தில் அனைவருமே நிம்மதியாக உறங்கினார்கள். இரண்டு பேர் குட் நைட் மணிகண்டன் கணக்காக குறட்டை வேறு விட்டு வயிற்றெரிச்சலை கிளப்பினார்கள். இரண்டரை மணிக்கு லேசாக உறக்கம் தழுவியது. சரியாக மூன்றரைக்கெல்லாம் பக்கத்து பூத் சார் வந்து எழுப்பி விட்டார். சார் எந்திரிங்க நானெல்லாம் குளிச்சுட்டேன் பாருங்க என்றார். “உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்” என்றபடி எழுந்தேன். வாக்குப் பதிவு செவ்வனே நடைபெற்றது. எங்களுக்கு நானூறு வாக்காளர்கள் தான் என்பதால் மதியத்திற்கு மேல் சும்மாவே தான் உட்கார்ந்திருந்தோம். ஆனால் பக்கத்து பூத் மாலை ஆறுமணி வரை பரபரப்பாகவே இருந்தது. வாக்கு பதிவை க்ளோஸ் செய்து மிஷின்களை அவற்றுக்குறிய பெட்டிகளில் வைத்து சீல் வைத்து விட்டு டாக்குமெண்ட்களை அதற்குறிய கவர்களில் வைத்து விட்டு “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…“ என்றபடி காத்திருந்தோம் காத்திருந்தோம் இரவு இரண்டு மணி வரை காத்திருந்தோம். முதல் நாள் வேறு ஒருமணி நேர போதா உறக்கம் ஆகையால் வாக்குபதிவு இயந்திரத்தை ஒட்டி பெஞ்சை போட்டு லேசாக கண்ணயர்ந்தேன். இரண்டரைக்கு மண்டல அதிகாரி பொட்டி எடுக்க வந்து எழுப்பினார். “ஆமா, நான் எங்க இருக்கேன், நீங்க எல்லாம் யாரு” என்று ஃப்ரண்ட்ஸ் பட சார்லி கணக்காக ஒரு பத்து நிமிடங்கள் தட்டு தடுமாறி பிறகு சமாளித்தேன். மூன்று மணிக்கு வண்டியை கிளப்பி, வழியில் இரண்டு நைட் கடைகளில் தேனீர் அருந்தி விட்டு அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்து படுத்தேன். காலை ஒன்பதரைக்குத்தான் எழுந்தேன். ஆக அரசு எங்களை நம்பி ஒப்படைத்த ஒரு மகத்தான பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தி மனதில் ஏற்பட்டது. பள்ளிக் கட்டிடம், கழிவறை, ஃபர்னிச்சர் வசதிகள் என ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அந்த கிராம நிர்வாக அலுவலர் அவரால் இயன்ற அளவில் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தார். அது போல கிராமத்தினர் சிறப்பான முறையில் உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். வாக்குப் பதிவு முடிந்த பிறகும் கூட இரவு உணவை சிறப்பாக ஏற்பாடு செய்து வழங்கினார்கள். ஏஜெண்டுகளும் சரி வாக்காளர்களும் சரி எந்த வித சிறு வாக்குவாதமோ விதிமீறலோ இன்றி நான் கூறிய சட்டதிட்டங்களை முறையாக அனுசரித்து வாக்குப் பதிவு மகிழ்ச்சியாக முடிய ஒத்துழைப்பு வழங்கினார்கள். அந்த வகையில் அந்த “எக்ஸ்“ கிராமத்தை நினைத்து மகிழ்ச்சி தான்.

Thursday, April 11, 2024

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத்தினால் அந்த படம் மெகா ஹிட் அடித்ததோடு இன்றி கௌதம் குறிப்பிடத்தக்க ஸ்டைலிஷ் இயக்குனர் ஆனார். இன்று பார்த்த படம் விஜய் ஆண்டனி நடித்த "ரோமியோ". அருணும் அகிலாவும் ஒரு திருமண சடங்கிற்காக சென்னை சென்றிருந்தார்கள். லீவு நாள் வேறு. ஆகவே இந்த சுதந்திரப் பொன்னாளை அவசியம் கொண்டாடியே தீர வேண்டும். என்ன செய்யலாம் என்று தீவிர யோசனையில் கடைத்தெருவை கடந்தபோது ரோமியோ பட ரிலீஸ் போஸ்டர் கண்ணில் பட்டது. முதலிரவு அறையில் புதுமாப்பிள்ளை கையில் பால் செம்பு, பெண்ணோ ஒரு தேர்ந்த BAR TENDER ன் நேர்த்தியோடு சரக்கை குவலையில் குடைசாய்த்துக் கொண்டு இருந்தாள். ஆகா, ஏதோ சம்பவம் இருக்கு என்று எண்ணி டிக்கெட் புக் பண்ணினேன்.* (ஆனா, போஸ்டரில் இருந்த அந்த காட்சி படத்தில் இல்லை என்று படம் முடிந்தபோது ஆதங்கத்தோடு இரண்டு பேர் பேசிக்கொண்டு சென்றனர்) தியேட்டர் போன பிறகு தான் புரிந்தது அவ்ளோ அவசரமாக ஆன்லைனில் புக் பண்ணி இருக்க வேண்டாம் என்று. பாதி தியேட்டர் கூட நிரம்பவில்லை. சரி படத்திற்கு வருவோம். நமது கலாச்சாரத்தில் பெற்றோர் தங்கள் பாசத்துக்குறிய குழந்தைகளுக்கு நடத்தும் ஆகச்சிறந்த வன்முறையான சூதாட்டம் என்பது ARRANGED MARRIAGE தான். (எனக்கெல்லாம் எனது விருப்பம் தான்) ஒவ்வொரு பையனுக்கும் பெண்ணுக்கும் பெற்றோரிடம் ஒரு முகமும் பர்சனலாக வேறுமுகமும் உண்டு. இது தெரியாமல் மடத்தனமாக "என் பையன் கழுதையை கட்டிக் கொள்ள சொன்னாலும் கட்டிக் கொள்வான்" என்று பெருமை பீத்தக் கலையம் வேறு!! நமது சமூக சூழலில் திருமணம் மிகவும் புனிதமாகவும், வாழ்க்கையின் அதிமுக்கிய படிநிலையாகவும் பார்க்கப் படுகிறது. எனவே தான் திருமண பந்தம் ஒவ்வாத சூழலிலும் வாழ்நாள் முழுவதும் சகித்துப் போக நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். பொருந்தாத திருமண உறவை முறித்து வெளியேறி ஆசுவாசம் அடைவோரை பற்றி மிகவும் மோசமான அபிப்பிராயத்தையும் அவர்கள் குறித்த தவறான முன் அனுமானத்தையும் சமூகம் கட்டமைத்துக் கொள்கிறது. இந்தப் படத்தின் கதைகூட மௌனராகம் படம் போன்றதுததான். ரேவதிக்கு கார்த்திக் என்பதற்கு பதிலாக அவளது லட்சியம். நாயகிக்கு சற்றும் நாயகன் மீது விருப்பம் இல்லை. ஆனாலும் அவளது லட்சியத்தை அடைய உதவுகிறான். இதன் காரணமாக நாயகி மனது மாறி இணைந்தார்களா என்பதுதான் கதை!! சுவாரசியமான தெளிவான திரைக்கதை. வசனங்களும் சிறப்பு. "சார், ஹீரோவை பார்த்து நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று ஹீரோயின் கேக்குறா சார், அதுக்கு ஹீரோ ஓங்கி அறையுறான் சார்?" "அறைஞ்சா?!, அறைஞ்சா ஆம்பளை ஆயிடுவானா?!, சார் என்ன சார் சீன் வைக்கிறீங்க கொஞ்சம் நல்லதா வைங்க சார். இத மாத்திடுங்க" கதையை நகைச்சுவையாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். எல்லோர் கேரக்டர்களிலும் காமடி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. ஆனால் மொத்த நகைச்சுவையும் விஜய் ஆண்டனியால் காலி ஆகிவிடுகிறது. பாவம் அவருக்கு சுத்தமாக காமடி வரவில்லை. விஜய் ஆண்டனி இடத்தில் கார்த்தி இருந்தால் பிரித்து மேய்ந்திருப்பார். ஆனால் படம் தொய்வில்லாமல் நன்றாகவே செல்கிறது. நிச்சயமாக பார்க்கலாம்.

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...