Wednesday, October 19, 2016

சூரப் பழம் பறிக்க வாரீங்களா

“சூர“சம்ஹாரம்

இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் அல்லது கிணற்றில் குதித்தல் காடுகளில் சுற்றித்திரிதல் என்று கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சாகசமும் மகிழ்ச்சியும் எல்லை மீறும்.

யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் ஓடிப்போகும் கதாநாயகி போல் வீட்டிலிருந்து நைசாக நழுவி காத்திருக்கும் மற்ற நண்பர்களுடன் கலந்து காலை பத்து மணி போல எங்கள் வனவாசம் ஆரம்பிக்கும். தெருவில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தாண்டியதும் வயல் வெளிகள் முடிந்து “பொட்டாங்காடு“ ஆரம்பிக்கும்.
அங்கே இரண்டு பாதைகள் பிரியும். இடது புறம் சென்றால் துவரை,வரகு, கம்பு போன்ற பயிர்கள் விளையும் புன்செய் நிலப்பரப்புகள். நல்ல பாதைகள் வரப்புகள் நிறைந்தது. அதிகம் பேர் ஆள் அரவம் இருக்கும். வலதுபுறம் சென்றால் அரசாங்க முந்திரி காடு. ஆள் அரவம் இல்லாதது. But we took the one less travelled by. That makes all the difference.
எங்கள் இலக்கு “சூரப்பழம்“ தான். குழந்தைகளிடம் பென்சிலை கொடுத்து கிறுக்க செய்து அதன் மேல் வட்ட வட்டமாக சிறு இலை வரைந்தால் அது தான் சூரப்பழ செடி. ஒழுங்கில்லாமல் வளரும் புதர் வகையை சார்ந்த முள் நிறைந்த செடி. மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள் கைகளில் ஒரு கருவி இருக்கும். மூட்டையில் குத்தி இழுத்தால் பிடி நழுவாது. அந்த கருவி உருவாக யோசனை கொடுத்ததே சூர முள்ளாகத்தான் இருக்கும். சட்டையில் கோர்த்துக் கொண்டால் எடுப்பது சிரமமாகிவிடும். வெகு லாவகமாக சட்டைக்கு சேதாரம் இல்லாமல் எடுக்க வேண்டும்
செடியில் சூரக் காய்களும் பழங்களும் வெள்ளிக் கொலுசில் சத்தம் செய்யும்  முத்துக்கள் போல கிளையோடு கொத்துக் கொத்தாய் ஒட்டிக் கொண்டிருக்கும். பழம் பழுத்து விட்டால் விதையை இன விருத்திக்காக வெளியேற்றியாக வேண்டும் அல்லவா? எனவே தான் பெரும்பாலான காட்டுப் பழங்களின் காம்புகள் இற்று விடும். லேசாக ஆட்டினாலே விழுந்து விடும். விருட்சமாய் அடுத்த பயணம் தொடங்க வேண்டுமல்லவா? சூரப்பழமும் அப்படித்தான். நாவல் பழக் கலரில் சைக்கிள் சக்கரத்தில் இருக்கும் “பால்ரஸ்“ அளவில் இருக்கும் ஒரு மினி இலந்தை பழம்.
முதலில் குச்சி கொண்டு லேசாக தட்டினால் பழங்கள் உதிரும். (ஒரு போதும் குச்சியால் வேகமாக அடித்து காயையும் பிஞ்சுகளையும் உதிர்ப்பதில்லை. அதெல்லாம் பழம் பறிக்கும் எதிக்ஸ்). லாவகமாக முட்களை விலக்கி குனிந்து சென்று பழங்களை மென்மையாய் கூட்டி அள்ள வேண்டும். சிலபேருக்கு மரத்தில் இருந்து நேரடியாய் உதிர்த்து சாப்பிடப் பிடிக்கும். அவர்களெல்லாம் கிளையை இழுத்து பழங்களை உதிர்ப்பர். மண்ணில் படாமல் சாப்பிட்டால் இன்னும் அருமையல்லவா?
அடுத்து பழத்தின் சுவை, லேசான புளிப்பு கலந்த ஆழ்ந்த இனிப்பு. பழத்தில் சதைப்பகுதி என்று சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இருக்காது. மெல்லிய தோல் பகுதிக்கும் கொட்டைக்கும் இடையே உள்ள இடைவெளி அரை மில்லி மீட்டர் கூட இருக்காது. அந்த சின்ன இடைவெளி தான் அமிழ்தமான சுவையை கொடுக்கும் பகுதி.

ஒவ்வொன்றாக சாப்பிட இது ஒன்றும் இலந்தைப் பழம் அல்ல. ஒரு கைப்பிடி அள்ளி வாயில் போட்டுக் கொண்டு குதப்ப வேண்டும். தோல் கிழிந்து சுவை வெளிப்படும். சுவை முழுவதும் உறிந்து சப்பிய பின் விதைகளை துப்பி விட வேண்டும். ஒன்றிரண்டு விதைகள் நழுவி தொண்டை கடந்து இரைப்பையில் தஞ்சமடையக் கூடும் ஜாக்கிரதை. 

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...