Saturday, October 29, 2016

ஆசிரியப் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி!

தீபாவளி அன்று காலை நண்பர் ஒருவரின் மகள்- ஏழாம் வகுப்பு சிறுமி- இனிப்பு மற்றும் பலகாரம் எடுத்துக் கொண்டு வந்தாள்.
பலகார தட்டை இடமாற்றம் செய்துகொண்டு இருந்தார் துணைவியார். அதுவரை பேசிக் கொண்டிருக்கலாமே என்று
 “என்னம்மா பட்டாசெல்லாம் வெடிச்சாச்சா?” என்று கேட்டது தான் தாமதம்
தடாலென்று எழுந்து பணிவோடு இடது கையைக் கட்டிக்கொண்டு வலது கை விரல்களை மூடி ஒவ்வொரு விரலாய் விடுவித்தபடி
 ”சயின்ஸ், மேத்ஸ், சோசியல் எல்லாம் படிச்சிட்டேன் அங்கிள்” என்றாளே பார்க்கலாம். எனக்கோ சிரிப்பை அடக்க இயலவில்லை. இருந்தாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல்
“இல்லம்மா பட்டாசு வெடிச்சிட்டியா ன்னு கேட்டேன்” என்றேன்.
“வெடிச்சிட்டேன் அங்கிள்” என்று அமைதியாக சொன்னாள்.



சில வருடங்களுக்கு முன் என்னிடம் ஒரு சிறுவன் ரொம்பவும் வாஞ்சையோடு ஒட்டிக்கொண்டு குறும்புகள் செய்வதும் தோள்பட்டையில் தொங்குவதும் என இருந்தான்.
அவனுடைய அம்மா “டேய் அங்கிள் மேத்ஸ் சார்டா“ என்று சொல்லி விட்டார். அதிலிருந்து அவன் என்னிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு 10 அடி விலகியே நிற்பான்.
 என்னைக் காணும் போதெல்லாம் “அட்டேன்ஷன்“ பொசிஷனுக்கு வந்து பிறகு “லெஃப்ட் ரைட்“ போட்டு நடக்க ஆரம்பித்து விடுவான்.
எதிர்காலத்தில் இராணுவத்தில் வேலைக்குச் சென்றால் என்னை நன்றியோடு நினைவு கூர்வான் என்று நினைக்கிறேன்.


எப்போதும் என்னை ஆசிரியராகவே பார்க்கும் மனப்பான்மை சுற்றத்தார் மற்றும் உறவினர் மத்தியில் அதிகமாக உள்ளது. அதனாலேயே சிறார்கள் என்னிடம் பேசும் போதெல்லாம் சத்தம் சில டெசிபல் குறைத்து தான் பேசுகிறார்கள்.


No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...