Wednesday, October 26, 2016

சுதந்திர போராட்டத்தை பிண்ணனியில் எழுதினால் அது விருதுக்கு தகுதியான படைப்பா?

கி.இராஜநாராயணன் அவர்களின் நாவலான “கோபல்ல கிராமம்“ லைப்ரரியில் கிடைத்தது. மிகவும் அருமையான நாவல். பத்து வரிகளுக்குள் சொல்லி முடிக்கத்தக்க ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதனை ஒரு 170 பக்க நாவலாக கொடுத்திருக்கிறார் திரு.கி.இராஜநாராயணன் அவர்கள்.
கதைக்காலம் 1858 க்கு முந்தைய காலகட்டம். தொலை தொடர்பு வசதிகளோ, செய்தித் தாளோ இல்லை. எந்த ஒரு அரசாங்கத்தின் ஆட்சியிலோ அல்லது இராஜாவின் ஆட்சியிலோ இல்லாத ஒரு பகுதியைச் சேர்ந்த மக்கள் தாங்களாகவே அமைத்துக் கொண்ட ஒழுங்குடன் கூடி வாழும் கிராம நாகரிகத்தை அதன் தோற்றம் முதல் கதை தொட்டுச் செல்கிறது.
மங்கத்தாயாரு அம்மாள் என்ற 137 வயது பாட்டியின் கதை சொல்லல் மூலமாக கதையானது அவர்களின் முன்னோர்கள் ஆந்திரப் பகுதியில் இருந்து ஒரு துளுக்க ராஜாவின் பெண்ணசையினால் துரத்தப்பட்டு வருடக்கணக்கில் நடந்து வந்து தற்போதைய பகுதியை திருத்தி விளைநிலமாகவும் கிராமமாகவும் ஆக்கி வாழ்ந்த வரலாறை கூறுகிறார். கதையின் பாதிப்பகுதியை இந்தஃப்ளாஷ் பேக்தான் ஆக்கிரமித்துள்ளது.
மக்கள் நாடோடியாக வந்து ஒரு இடத்தில் தங்கி வீடுகள் விளைநிலங்கள் அமைத்து ஒரு கிராமத்தை எவ்வாறு நிர்மானிக்கிறார்கள் என்ற வரலாற்றை சுவை குன்றாமல் சுவாரசியமாக சொல்லி இருப்பார். நாவலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கினாலும் தகும்.

இந்த நாவலின் sequel போல வெளிவந்த ”கோபல்ல புரத்து மக்கள்“ ஐ படிக்க ஆவல் மேலோங்கியது. லைப்ரரியில் தொல்லை பண்ணி விசாரித்து காத்திருந்து கிட்டதட்ட ஓராண்டு கழித்து கிடைத்தது.
”கோபல்லபுரத்து மக்கள்“ 
ஆனந்த விகடனில் தொடராக வந்த நாவல். முதல் பாகம் அவரது இயல்பான கரிசல் வட்டார வழக்கு மற்றும் பழக்க வழக்கங்கள் அதனுள்ளே ஒரு அமரக்காதல் என்று விரிகிறது. மேலும் நாகரிகத்தாலும் அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் விளையும் புதிய விஷயங்களை அக்கிராமத்தார் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்று சுவைபட கூறியிருப்பார். 

கிட்டப்பன் மற்றும் அச்சிந்தலு காதலில் தோற்று இருவரும் வேறு வேறு இடங்களில் மணமாகி பின்னர் இருவரது வாழ்க்கையும் சீரழிந்து பின்னர் ஒன்று கூடுகிறார்கள்.இந்த கதையில் கிராமத்து வழக்கங்கள் கொண்டாட்டங்கள் வீரசாகசங்கள் என அவருக்கே உரிய கவித்துவமான விஷயங்கள் இருக்கும்.

இந்த நாவலின் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க சுதந்திர போராட்ட களத்தை சுவீகரித்துக் கொள்கிறது. சுதந்திர போராட்ட வேட்கை கோபல்ல கிராம மக்களிடையே எவ்வாறு பரவுகிறது என்று ஆரம்பித்து போரின் போக்கை பின்பற்றி செல்லும் போது பள்ளியில் படித்த அசுவாரசியமான ஒரு வரலாற்று பாடபுத்தகமாக மாறிவிடுகிறது. 

கதை ஓட்டத்தில் “செம்புலப் பெயல் நீர்”போல கலந்து வரலாற்றை விவரிக்கும் கி.ரா வுக்கு என்னவாயிற்று? தண்ணீரில் கரையாத பொருளை வலிந்து தண்ணீரில் கரைத்தால் என்னவாகும் திப்பை திப்பையாக மிதந்து அலங்கோலமாக காட்சியளிக்கும் அல்லவா. அந்தமாதிரிதான் உள்ளது நாவலின் இரண்டாம் பாகம். இயல்பிலேயே அழகிய தோற்றம் கொண்ட மங்கையொருத்தி “மேக்கப்“ போடுகிறேன் என்று தன் அழகை சிதைத்துக் கொண்டமாதிரி கி.ரா வின் இயல்பான கரிசல் நடை முடமாகி கிடக்கிறது.

பள்ளிகளில் நடக்கும் பேச்சுப் போட்டிகளில் சுதந்திர போராட்டத்தை மையப் படுத்தி எதாவது சொன்னாலே பரிசில் கிடைக்கும். சாகித்திய அகாடமி விருது பெறவும் பள்ளி சிறார்கள் செய்த உபாயத்தை பின் பற்றுவது ரசிக்கும் படியாக இல்லை. அமரர் கல்கி அவர்களுக்கும் கூட சுதந்திர போராட்டக் களத்தை பின்னணியாக கொண்டு அவர் எழுதிய “அலைஓசை“ நாவலுக்காகத் தான் அவ்விருது கிடைத்தது. கி.இரா அவர்களுக்கும் கோபல்ல கிராமத்திலே ”சுதந்திர போராட்டத்தை” கலந்து விட்டதால் தான் விருது கிட்டியிருக்கும் போல.


அவரது “கோபல்ல கிராமம்“ தான் விருதுக்கு முற்றிலும் தகுதியான நாவல். அதற்கு “நோபல் பரிசு“ கொடுத்தாலும் தகும்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...