Friday, April 13, 2018

அம்பேத்கார் பிறந்த தின சிறப்பு பதிவு- பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஏன் கூடாது?


அம்பேத்கார் பிறந்த தின சிறப்பு பதிவு- பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஏன் கூடாது?

இடஒதுக்கீடு பற்றிய அடிப்படை புரியாத அற்ப பதர்கள் போடும் அரைகுறை பிதற்றல் தான்ஏன் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது?” எல்லா ஜாதியிலும் ஏழைகள் இருக்கத் தானே செய்கிறார்கள்?” என்பது.
சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விட மிகக்கொடியது வர்ணாசிரம ()தர்மம் என்கிற பெயரில் கட்டமைக்கப் பட்ட சாதிய ஏற்றத் தாழ்வு. இதன் அடித்தளம் மிகவும் வலிமையானது மற்றும் கொடுமையானது. இது சமூக அநீதி என்கிற எண்ணம் எழாவண்ணம் கடவுளின் கட்டளை என்கிற முலாம் பூசப்பட்டு புனிதப் பூச்சூடிக் கொண்டது. எனவே இது குறித்து கேள்வி எழுப்புவது தெய்வ நிந்தனை என்று கற்பிதம் செய்யப்பட்டது. இது நமக்கு கடவுளால் விதிக்கப் பட்டது என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் தலித்துக்களின் மனது பக்குவப் படுத்தப் பட்டது. ஆக இந்த ஏற்றத் தாழ்வானது பல நூற்றாண்டுகள் நீடித்து கெட்டிப் பட்டுப் போனது.
சமூக சமத்துவம் எங்கே தொலைந்து போனதோ அங்கே சென்றுதான் சமத்துவத்தை தேடவேண்டும். ஆக சமத்துவம் மடிந்து ஏற்றத் தாழ்வுக்கு வித்திட்டது சாதிய ஏற்றத் தாழ்வு என்றால் அதனை அடித்து நொறுக்குவதற்கு அதே சாதிய ஏற்றத் தாழ்வினைக் கொண்டு தான் ஆயுதம் செய்ய வேண்டும்.
எனவே பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு கோரிக்கையானது சாதிய ஏற்றத் தாழ்வுகளை நீடிக்கச் செய்யும் ஒரு சூழ்ச்சியே அன்றி வேறில்லை. எப்படி என்று இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கூறுகிறேன் கேளுங்கள்.
சாதிய அடிப்படையில் அல்லாமல் பொருளாதார அடிப்படையிலான ஒரு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுமானால் பலநூறு ஆண்டுகாலமாக ஆதிக்கம் செய்வோர் முன்னே நிற்பார்களா அல்லது அடிமை சேவகம் செய்தவர்கள் முன்னே நிற்பார்களா?! இன்னும் சொல்லப் போனால் வாய்ப்பு என்னும் வாயிற்படியின் முன்னே நிற்கும் தகுதியோ வழிமுறையோ கூட தெரியாத நிலையில் தான் தாழ்த்தப் பட்டவர்கள் இருந்திருப்பார்கள்
 சமூகத்தின் அங்கத்தினராக இருக்கும் ஒரு பெருந்திரளான கூட்டத்திற்கு சம உரிமையை வழங்க வேண்டிய பொறுப்பு ஒரு அரசுக்கு வேண்டும். அப்படியான சம உரிமை வழங்கப் பட அவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் சம வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும். அவர்களுக்கான இடங்களை அவர்களுக்கே அவர்களுக்கு மட்டுமே உரித்தானதாக்க ஒரு சட்ட பாதுகாப்பு தரும் அம்சமே இட ஒதுக்கீடு. அவர்களுக்கு வழங்கப்பட்ட சொற்ப விழுக்காடு போக மீதி இடங்கள் தான் ஏனையோருக்காக நேந்து விடப் பட்டுள்ளதே அதை கைப்பற்றிக் கொள்ளுங்களேன். அதை விடுத்து இந்த 19/22.5 (19 in tamil nadu 22.5 in central) விழுக்காடு இடத்தையே பிடித்து தொங்கிக் கொண்டு கிடக்கிறீர்களே ஏன்?
இந்த சமூகம் தாழ்த்தப் பட்ட மாணவர்களின் மனதை சாதி என்கிற ஆயுதத்தால் ஆழமாக கீறி தாழ்வு மனப்பான்மையை விதைத்து விடுகிறது. கிராமத்தில் இருந்து படித்து மேலே வந்த எந்த ஒரு தாழ்த்தப் பட்ட மாணவனை வேண்டுமானால் கேளுங்கள் அவர்களிடம் சாதிய ஆயுதத்தால் தாக்குண்ட வடு ஒன்றாவது இருந்தே தீரும்.
தாழ்த்தப் பட்டவர்களை பாதுகாக்க ஏற்படுத்தப் பட்ட வன்கொடுமை சட்டங்களில் குற்றம் நிருபிக்கப் பட்டு தண்டனை பெறும் வீதம் மிகவும் சொற்பமாக உள்ளதைக் காட்டி அத்தனையும் போலி வழக்குகள் என்று பொத்தாம் பொதுவான எண்ணத்தில் அந்த சட்டப் பிரிவின் முனையை உச்ச நீதிமன்றமே மழுங்கச் செய்யும் இந்த தருணத்தில் ஒன்றை கூற விரும்புகிறேன்.
என்னதான் அம்பேத்கர் வகுத்து தந்து விட்டுச் சென்ற சட்டத்தில் தாழ்த்தப் பட்டோருக்கான சமூக நீதியை நிலை நிறுத்துவதற்கான கூறுகள் இருந்தாலும் அதனை நடைமுறையில் செயலாக்கம் செய்யும் அத்தனை கண்ணிகளிலும் உள்ள அலுவலர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரும் முழுமனதோடும் முனைப்போடும் செயல்பட்டால் தான் சட்டம் வழங்கும் உரிமை பயனாளியை சென்று சேரும் இல்லையென்றால் சட்டம் காகிதத்தில் மட்டுமே இருக்கும்.
2011ல் என்னோடு ஹைதராபாத் பயிற்சிக்கு ஜார்கண்டிலிருந்து வந்த சக ஆசிரியை ஒருவர் 30 வயதைக் கடந்த தலித் ஆவார். அவர் தனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கான காரணமாக விரக்தியோடு குறிப்பிட்டது, “ஒரு பனிரெண்டாம் வகுப்பு படித்த வரனாவது வேண்டும் என்று தான் காத்திருக்கிறேன் எங்கள் இனத்தில் கிடைத்தபாடில்லைஎவ்வளவு அழகாக ஜார்கண்டில் சட்டம் செயல்படுத்தப் பட்டிருக்கிறது பார்த்தீர்களா. அந்த மாநிலத்தில் உங்கள் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு அளவுகோலை கொண்டு சென்றீர்கள் என்றால் ஒரு தலித் கூட வேலையோ படிப்பதற்கான வாய்ப்பையோ பெற மாட்டார். இட ஒதுக்கீடு கொண்டு வந்ததற்கான அடிப்படை நோக்கமே சிதைந்து போகும்.
பிறக்கும் போது ஏழையாக இருக்கும் ஒருவன் பணக்காரனாக வாய்ப்பு உள்ளது. ஆனால் பிறக்கும் போது தலித்தாக இருக்கும் ஒருவன் என்னதான் படித்து பட்டங்கள் பெற்றாலும் பொருளாதார மேன்மை அடைந்தாலும் சாகும் வரை அதே சாதி தான். நீங்க தான் ஐ.ஏ.எஸ் கலெக்டர் ஆகிட்டீங்களே இனிமே நீங்க ஐயர் என்றோ ஐயங்கார் என்றோ ஒரு தலித்தை எவரும் கூறப் போவதில்லை. ஆகவே பொருளாதார ஏற்றத் தாழ்வு மாறக்கூடியது. ஆனால் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்ட சாதி மாறாதது.
இன்னும் ஒன்றை இறுதியாக சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன். இங்கே ஒரு ஏழை பிராமணனோ ஏழை ஆதிக்க சாதியினரோ அல்லது ஒரு ஏழை தலித்தோ சமமானவர்கள் கிடையாது. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோர்களாக பார்த்து பார்த்து உதவி செய்ய இட ஒதுக்கீடு சலுகை அல்ல அது சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக ஒரு இனத்திற்கு வழங்கப் பட்ட உரிமை. ஆகையால் அந்த உரிமையை பெறுவதற்கான ஒரே அளவு கோல் சாதி தானே ஒழிய பொருளாதார அளவுகோல் கிடையாது.

சாதி எனக்கு தேங்காய் சிரட்டையில் தேனீர் தந்தது
சாதிதான் என்னை தரையில் அமர்த்தி இழிவு செய்தது
சாதி எனக்கு பள்ளிகளில் கோணிப்பை இருக்கை கொடுத்தது
சாதிதான் என்னை பொதுக்குளத்தில் குளிப்பதை தடுத்தது
சாதி எனக்கு காலணியை மறுத்தது
சாதிதான் என்னை காலனியில் ஒதுக்கியது
சாதி எம் பெண்களின் மார்பாடை மறுத்தது
சாதிதான் எம் ஆண்களின் மீசை மழித்தது
சாதி எங்களுக்கு அடிமைப் பதவி தந்தது
சாதிதான் உங்களை ஆண்டையாக்கியது
எதனால் வீழ்ந்து பட்டோமோ
அதைக்கொண்டே எழுந்து நடப்போம்
எங்களுக்காக வழங்கப் படுவது உங்கள் உடைமை அல்ல
அது எங்கள் உரிமை.அம்பேத்கார் பிறந்த தின சிறப்பு பதிவு- பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஏன் கூடாது?

அம்பேத்கார் பிறந்த தின சிறப்பு பதிவு - பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஏன் கூடாது ? இடஒதுக்கீடு பற்றிய அடிப்படை பு...