Saturday, March 30, 2024

கம்யூனல் ஜி.ஒ - பேராசிரியர் அன்பழகன்

வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யுனல் ஜி.ஓ) புத்தகம்: வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யுனல் ஜி.ஓ) ஆசிரியர்:பேராசிரியர் க.அன்பழகன் புத்தகம் “கம்யுனல் ஜி.ஓ“ உச்ச நீதி மன்றத்தால் முடக்கப்பட்ட நேரத்தில் “அவால்“ எல்லாம் எப்படி குதூகலம் அடைந்திருப்பார்கள் என்கிற கற்பனை (நையாண்டி தொனிக்கும்) உரையாடலில் ஆரம்பித்து வகுப்புரிமைப் போராட்டம் உருவான விதம் வளர்ந்த வரலாறு அரசியல் அமைப்பின் முதலாவது சட்டத்திருத்தம் மூலமாக சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டதோடு முடிகிறது. ஆழமான ஆய்வு சமூக நீதி குறித்த மிகச்சரியான பார்வை ஆங்காங்கே எள்ளல் என அருமையாக எழுதியிருக்கிறார் பேராசிரியர். (ஒரு இடத்தில் “உலக உத்தமர்“ என்று காந்தியை விளித்திருப்பார்). ”வர்ணாசிரம (அ)தர்மத்தைத் தோற்றுவித்து, ஜாதிக்கொரு தொழிலென மக்களை ஒப்புக்கொள்ள வைத்து, அதை ஒப்பாமல் மக்கள் புரட்சி எண்ணம் கொள்ளாமல் இருக்க மூடநம்பிக்கைகளையும், பொய்க்கதைகளையும் புகுத்தி அறிவை அடிமைப்படுத்தி, எவரேனும் அதற்கு மாறாகப் புரட்சி செய்தால் அடியோடு ஒழிக்க மனு (அ)நீதியை வகுத்து அதை அரசுகளெல்லாம் ஏற்ற நடக்கச் செய்தல்” படிக்கும் போதே தலைசுற்றும் அளவுக்கு சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தை ஆழமாக சமூகத்தில் வேரூன்றும் அளவுக்கு ஆயிரம் ஆண்டுகாலமாக ஒரு விஷ விருட்சமாக வளர்த்தெடுத்த பார்ப்பனிய சூழ்ச்சிகளை தோலுரிக்கும் ஒரு அருமையான புத்தகம் தான் இது, பார்ப்பனரல்லாதோருக்கு கல்வி உரிமை கிஞ்சிற்றும் கிடையாது, படிப்பது பார்ப்பன மக்களின் ஏகபோக உரிமை என அனுபவித்து வந்த நிலையை மாற்ற1917 ல் நீதிக்கட்சி முயற்சித்து வெற்றி கொண்ட ஒரு அரசாணை தான் கம்யுனல் ஜி.ஓ. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேவை என்கிற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் மத்தியில் 1920 களில் உதித்தது. என்னதான் பெரியார் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்குள்ளே இருந்து வற்புறுத்தினாலும் பார்ப்பன சூழ்ச்சி அதற்கு செவிசாய்க்கவில்லை. தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வருவதற்கு காரணமே வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாததுதான். கம்யுனல் ஜி.ஓ என்ன சொல்கிறது? மொத்தம் உள்ள 12 இடங்களில் இந்து பார்ப்பனரல்லாதோருக்கு 5 பார்ப்பனருக்கு 2 முகம்மதியர்களுக்கு 2 கிருஸ்தவர்களுக்கு 2 (ஆங்கிலோ இந்தியர்கள் அடக்கம்) மற்றவர்களுக்கு 1(ஆதிதிராவிடர்கள் அடக்கம்) அதாவது 100 க்கு 3 பேராக உள்ள பார்ப்பனருக்கு 100க்கு 17 உத்தியோகங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆதிதிராவிடர்களுக்க 12 ல் ஒன்று அதுவும் ஏனையோர் என்கிற பிரிவில். இதை பார்த்தவுடன் பார்ப்பனர் நெஞ்சம் பதறுகிறது. ஆனாலும் அவர்கள் எதையும் தான் நேரடியாக எதிர்க்க மாட்டார்கள் அல்லவா? அவர்கள் இன்று வரை வைத்துக் கொண்டு வரும் ஓயாத ஒப்பாரியான “தகுதி“ மற்றும் ”திறமை” குறித்த நீலிக்கண்ணீர் வடிக்கலாயினர். இந்த நூலில் “தகுதி மற்றும் திறமை” என்கிற வெற்றுக் கூச்சலையும் அதன் பின்னால் உள்ள சூழ்ச்சியையும் ஒரு சேப்டரே ஒதுக்கி “வச்சு செஞ்சிருக்கார்” பேராசிரியர். என்னதான் அரசாணை போட்டாலும் கல்லூரி சேர்க்கையின் போதே பார்ப்பனிய “கைங்கர்யம்“ வேலை செய்துவிடும் என்பதால் கம்யுனல் ஜி.ஓ எந்த அளவில் பின்பற்றப் படுகிறது என்பதை கண்காணிக்க ”கல்லூரிக் குழு” என்கிற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்கள். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது “கம்யுனல் ஜி.ஓ“ வை பின் வாசல் வழியாக வந்து எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருதும் ஆட்சியாளர்கள் “கலி முத்திடுத்து லோகம் கெட்டுடுத்து” தகுதி திறமைக்கு லோகத்துல மதிப்பில்லாமல் போயிடுத்து என்று நீலிக்கண்ணீர் வடித்து மெரிட்டுக்கு என்று 20 விழுக்காடு பெறுகின்றனர். பார்ப்பனிய ஒதுக்கீடு மற்றும் மெரிட் என்று இரட்டை வாசலை திறந்து கொண்டு மேலிட பதவி வகிக்கும் பார்ப்பனிய துணை கொண்டு கல்லூரிகளில் மற்றவர்களுக்கு உரிய இடத்தையும் அபகரிக்கிறார்கள். மேலும் கல்லூரிக் குழு வையும் கலைத்து விடுகிறார்கள். இருந்தும் கூட அவர்களின் ஆசை தீரவில்லை. அனைத்து பிரிவு மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசாங்கத்தில் 100 விழுக்காடு பதவிகளையும் நாமே வகிக்க வேண்டும் என்கிற பேராசையால் சுப்ரீம் கோர்ட் வரை சென்று ( இந்தியா சுதந்திரம் அடைந்து புதிய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு) சட்ட நுணுக்கத்தை காட்டி வெற்றிகரமாக நீக்கி விடுகிறார்கள். சென்னை மாகாணம் (அப்போது அது தானே பெயர்) முழுவதும் பள்ளி கல்லூரிகளில் போராட்டம் வெடிக்கிறது. இந்த காலத்தில் மக்கள் பணத்தில் கொழுத்த சூப்பர் ஸ்டார் ”சிஸ்டம்” இஞ்சினியர்கள் கூட போராட்டம் தவறு என்று கூறி இளைஞர் எழுச்சியை காயடித்து விட்டு திரும்ப எழுச்சி வரட்டும் அப்போ வரேன் என்று பிதற்றுகிறார்கள். மாணவர்கள் தங்களது படிப்பு உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். அரசியல் சட்டம் புனிதமானது. அந்த சட்ட திட்டங்களை நாம் தான் மதிக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் மீது பார்ப்பனியம் கோமியம் தெளிக்க பார்க்கிறது. போராட்டக் காரர்களோ “மக்கள் நலனுக்காகத் தான் சட்டம், நலன் கெடும் என்றால் சட்டத்தை திருத்தலாம் தவறில்லை” என்று சட்ட திருத்தத்திற்கான வழிமுறையும் சட்டத்திலேயே உள்ளது என சுட்டிக்காட்டுகின்றார்கள். (உப்புக்கு பிரயோஜனம் இல்லாத ஜல்லிக்கட்டுக்கு எழுச்சியோடு போராடிவிட்டு ”நீட்“ டில் கோட்டை விட்டிருக்கிறோம் நாம்) வேறு வழியின்றி கல்வியில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் முதலாவது சட்டத்திருத்தமாக 1951 ல் வெற்றிகரமாக நிறைவேறுகிறது. ஆம், அரசியல் சட்டத்தையே மக்கள் நலனுக்காக முதல் முறை திருத்தம் செய்ய காரணமாக இருந்தது திராவிடம். அப்போது கோட்டை விட்டிருந்தோம் எனில் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் பலபேர் கல்லூரியை பார்த்திருக்க இயலாது. இடஒதுக்கீடு என்பது என்னவோ ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே அனுபவிக்கும் “சலுகை“ என்கிற எண்ணம் பெரும்பாலான பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மத்தியில் இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். அவர்களே தகுதி திறமை பற்றி பேசி சக ஆதிதிராவிட மாணவர்களை சிறுமை படுத்த முயல்வதையும் கண்ணுற்றிருக்கிறேன். இடஒதுக்கீடு என்பது உரிமை என்பதோ அதன் அடிப்படையோ தெரியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பலபேர், அமர்ந்திருக்கும் கிளை மீதே கோடரி வீசும் போதெல்லாம் ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே இடஒதுக்கீட்டு “சலுகை“க்காக சிலுவை சுமந்திருக்கிறார்கள். தற்போது 28 மதிப்பெண் எடுத்துவிட்டு EWS என்கிற ஒதுக்கீட்டில் வங்கிப் பணியாளர் பணியினை பெற்றவர்களிடம் கேட்டுப் பாருங்களேன் “தகுதி திறமை“ என்னவாயிற்று என்று, அவா எல்லோரும் “செலக்டிவ்“ செவிடர்களாகி விடுவார்கள். 80 மதிப்பெண் எடுத்த எஸ்.ஸி, ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்காத பணி 28 மதிப்பெண் எடுத்த முற்பட்ட வகுப்பில் பிறந்த வருடம் 8 லட்சம் வருமானம் ஈட்டும் ”ஏழை”களுக்கு கிடைக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை என்கிற புரிதலாவது குறைந்தபட்சம் தேவை.

1 comment:

  1. இட ஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை என்பது புரிதல் மிக அவசியமே. Super

    ReplyDelete

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...