Sunday, March 17, 2024

"மகா கவிதை - வைரமுத்து" நூல் விமர்சனம்

நூல் - மகாகவிதை ஆசிரியர் - கவிப்பேரரசு வைரமுத்து
ஒரு நூலை வாசித்து முடித்து ஒரு நூல் விமர்சனம் போட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. படிப்பதற்கு நேரமே கிடைக்கவில்லை என்றெல்லாம் தப்பிக்க முடியாது, ஏனென்றால் மற்ற விஷயங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தற்போது வாசிப்புக்கு கொடுக்க இயலவில்லை என்பது தான் உண்மையாக இருக்கும். இனிமேல் நிறைய வாசிக்க இயலும் என்று நினைக்கிறேன். தற்போதெல்லாம் வைரமுத்து அவர்கள் எழுதி வெளியிடும் நூலின் விலை 500-க்கு கீழே இருப்பதே இல்லை ஆகையால் பெரும்பாலும் புத்தக கண்காட்சிகளில் நான் இந்த நூலை வாங்க விரும்பியதும் இல்லை. அப்புறம் எப்படி இந்த நூல் என் கைவசம் வந்தது?! பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்கிற ஆசிரியர்களுக்கான ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள், அங்கே இந்த நூல் எனக்கு பரிசாக வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்த நூல் எதை குறித்து என்பதெல்லாம் முன்னோட்டமாக நாளிதழ்களில் மற்றும் சமூக ஊடகங்களில் கண்டாயிற்று. ஐம்பெரும் பூதங்கள் எனப்படும் நிலம், நீர், தீ, வளி (காற்று), வெளி(ஆகாயம்) ஆகியவை குறித்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு தான் இது. மேற்காணும் ஐந்து தலைப்புகளிலும் ஒவ்வொரு அறிவியல் கட்டுரை எழுதினால் எவ்வளவு விஷயங்கள் பொதிந்திருக்கும் அவ்வளவு அறிவியல் பூர்வமான தகவல்களை உள்ளடக்கிய ஒரு அற்புதமான கவிதை வடிவ நூல் தான் இது. என்னுடைய பதின் பருவத்தில் ராஜேஷ்குமார் நாவல்களை விரும்பி வாசிப்பதுண்டு, அவருடைய துப்பறியும் நாவல்களில் நிறைய அறிவியல் விஷயங்களை கதை களத்தில் அழகாக இணைத்து இருப்பார். அதுபோல வைரமுத்து அவர்கள் கவிதை தளத்தில் இணைத்துள்ளார். நிலம் என்கிற தலைப்பில் புவியின் தோற்றம் அங்கே நிகழ்ந்த பல பேரழிவுகள் உயிர்களின் தோற்றம் என்று ஏராளமான கருத்துக்களை எழுதியுள்ளார். கவிஞரின் முத்தாய்ப்புகள் அங்கங்கே விரவி இருக்கின்றன. அவற்றில் ஒன்று, " பூமியின் தனிப்பெரும் செயல் மழை மறுப்பெருஞ்செயல் மலை" என்பதாகும். நீரின் மூலமாக மலை பிளவுற்று பிளவுற்று மணல் தோன்றுகிறது அவற்றின் ஊடாக தாவரங்கள் உயிரினங்கள் பரவிய பின் மண் தோன்றுகிறது என்று பதிவு செய்துள்ளார். புவி எவ்வாறு சூரியனிலிருந்து மிகச் சரியான மிதமான சூழலில் இருந்து கொண்டு ஒரு உயிர் கோளமாக இருந்து வருகிறது என்பதை அறிவியலின் பல்வேறு பரிணாமங்களில் விளக்குகிறார். புவி தன்னைத்தானே சுற்றுவது குறித்து ஒரு அழகமான உவமையை கூறியிருப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தது " கோடி கோடி நாவுகள் புழங்கிய பிறகும் ஒரு சொல்லின் அர்த்தம் குறையாதது போல சுற்றலே தொழிலென்றாலும் சுறுசுறுப்பு குறையவில்லை" பூமி ஐந்து முற்றழிவுகளுக்கு பிறகும் உயிர்த்தெழுந்த விஷயங்களை வரிசைக் கிரமமாக கவிதையில் வடித்துள்ளார். கவிஞருக்கு மொழியோடு புவியின் சிறப்புகளை உவமையாக்கி கூறுவது மிகவும் பிடிக்கும் போல , "இரும்பை உள்ளே வைத்து மண்ணை வெளியே வைத்தாய் பொருளை உள்ளே வைத்து சொல்லை வெளியே வைத்த மொழியை போல!!" "பூமி என்ற அஃறிணையை உயர்திணையாக்க வந்த பெரும் பொருளே!!" என்று அடுத்த அத்தியாயமாக தண்ணீருக்கு தாவுகிறார். இந்த புவியில் தண்ணீர் நிலைத்திருக்கும் நீடித்திருக்கும் வரலாற்றினை கவிஞர் கூறுகிறார். நிலமும் கடலும் அடிக்கடி இடம் மாறி கிடந்திருக்க கூடும் என்பதற்கு ஆதாரமாக ஒரு சிறு பத்தியை எடுத்துக் காட்டியுள்ளார். "கண்ணீரை தின்று பார் செங்குருதி ருசித்துப் பார் சிறுநீரை கேட்டுப்பார் இந்திரியம் ஆய்ந்து பார் உள்ளாடி கிடக்கும் உப்பு" நீரின் வடிவங்கள் குறித்து கூறும்போது "நீ நின்ற நிலை அருவி நடந்த நிலை ஆறு கிடந்த நிலை கடல் உறைந்த நிலை பனிக்கட்டி உலவு நிலை மேகம்" என்று அழகாக கூறியுள்ளார். நீ எவ்வளவு தூரம் ஆக்க சக்தியை பெற்றுள்ளதோ அதே அளவுக்கு அழிவு சக்தியையும் கொண்டுள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்தது தான் அதை கவிஞர் தனக்கே உரிய பாணியில் "மலைகளுக்கு முகச்சவரம் செய்வாய் சில நேரங்களில் சிரச்சேதமும்" என்கிறார் மொத்த நீரில் சுத்த நீர் மூன்றே விழுக்காடு தான் அதிலும் கூட துருவங்களில் உறைந்தது போக மீதி உள்ள ஒரு விழுக்காடு நீரைத் தான் நாமெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நீரின் சிக்கனம் குறித்தும் கவலை கொண்டுள்ளார். நீர் என்பது மிக அரிய திரவம் ஏனென்றால், "அவிழ்த்துக் கொட்டிய அரிசி போல் நட்சத்திர நெரிசல் மிக்க பால் வீதியில் தொலையாடிகெட்டிய தொலைவு மட்டும் தண்ணீர்க்கோள் ஏதுமில்லை!!" வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்களது நாடுகளை சுத்தமாக பராமரித்துக் கொண்டு, நீரினை அதிகமாக குடிக்கும், சுற்றுச்சூழலை அதிகமாக மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை வளர்ந்து வரும் நாடுகளின் மீது திணித்து உள்ளன, என்று கவலையோடு இவ்வாறு பதிவு செய்கிறார் "ஏழை நாடுகளுக்கு தொழிற்சாலைகளை ஏற்றுமதி செய் பொருளை மட்டும் இறக்குமதி செய்" அதாவது, "நரகத்தில் உற்பத்தி சொர்க்கத்தில் விற்பனை" "தண்ணீர் சட்டங்களை மீறுகிற மனிதன் தாகத்தின் கைதியாவான்" என்று சாபம் இடவும் தயங்கவில்லை. பஞ்சபூதங்களில் மூன்றாவது பலமான தீயை தீண்டும் கவிஞர் இந்த அத்தியாயத்தில் சூரியன் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்கள் அவ்வளவு கொட்டுகிறார் " பதினைந்து கோடி கிலோ மீட்டர் தூரத்தில் எரியும் தொலையா நெருப்பே கோள்கள் சமைத்த அணையா அடுப்பே" சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் வியாழன் அதனை நையாண்டியாக இவ்வாறு குறிப்பிடுகிறார் "பேரரசு கட்டியெழுப்பும் பேராசையோடு சமருக்குச் செல்லும் வழியில் சாமியாராகிப் போன சக்கரவர்த்தியை போல நட்சத்திரமாக முயன்று பாதி வழியில் கிரகமாகிப்போன வியாழன் சூரியனை கெஞ்சித்தான் விளக்கு போட்டுக் கொள்கிறது வீட்டுக்கு" சூரியனின் அந்திம காலம் என்னவென்று அறிவியல் உலகம் கணித்துள்ளது அல்லவா நினைவேதான் கவிஞர் இவ்வாறு கூறுகிறார் "கிரகங்களை உண்பிப்பதும் அதுதான் உண்ணப்போவதும் அது தான்!!" " சூரிய நட்சத்திரம் பால்வீதிக்குச் சிறிது - எங்கள் பகல் வீதிக்கு பெரிது!!" என்னதான் லட்சக்கணக்கான பூமிகளை உள்ளே அடக்கும் அளவுக்கு சூரியன் பெரிதாக இருந்தாலும் பால் வீதியில் இருக்கும் நட்சத்திர பட்டாளங்களை காணும் போது சூரியன் மிகச் சிறியதுதான் அப்படியானால் நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள்?! இந்த இடத்தில் நான் சிரித்தே விட்டேன்! "கடைசியில் பூமியின் வயிற்றில் புழு பூச்சி உண்டானது தீக்கடவுளின் தீட்சண்யத்தால்!!" ஆமாம், சூரிய ஒளி மட்டும் இல்லை என்றால் இங்கே ஒளிச்சேர்க்கை ஏது உயிர்கள் ஏது!! நான் சிறுவனாக இருந்த போது எங்கள் கிராமத்தில் பல வீடுகளில் தீக்குச்சி இல்லாத சமயத்தில் ஒரு இரும்பு கரண்டியில் பக்கத்து வீட்டில் இருந்து தீ கங்குகளை அள்ளி வந்து அடுப்பிலிட்டு தீ மூட்டுவார்கள்!! அந்த விஷயத்தை அழகாக கவிதையில் வார்த்திருக்கிறார் "அடுத்த வீட்டு அடுப்பிலிருந்து கரண்டியில் கங்கெடுத்துவரும் இரவல் தீக்காரி போல சூரிய அடுப்பை நம்பி கொதிக்கிறது ஏழை பூமியில் இரவல் உலை!!" அடுத்ததாக "வளி" அதாவது காற்று!! நீர் எவ்வாறு அத்தியாவசியமாகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறதோ அது போல தான் காற்று அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் அதே வேளையில் சில சமயங்களில் ஆபத்தான ஒன்றாகவும் மாறிப்போகிறது!! புவியின் வளிமண்டலம் எவ்வாறு புவிக்கு ஒரு பாதுகாப்பு கேடயமாக இருந்து எல்லா ஆபத்துகளையும் வடிகட்டி பூமியை ஒரு வாழ ஏதுவான கோளாக வைத்துள்ளது என்பதை அழகாக கவிதையின் வார்த்துள்ளார் கவிஞர். காலை மற்றும் மாலை வேலைகளில் வானத்தில் தோன்றும் வர்ண ஜாலம் குறித்து கவிஞர் பேசாமல் இருப்பாரா?! ஆம், அந்த ஓவியங்களின் நிலையற்ற தன்மை குறித்து ஆதங்கத்தோடு பதிவு செய்துள்ளார். "ஆணியின்றி அடிக்கப்படும் ஓவியங்களை நழுவ விடாத வானமொன்று வாங்க வேண்டும்!! என்கிறார். நாம், புவியில் கார்பன் டையாக்சைடு அதிகரித்து புவிக்கு ஆபத்து ஏற்படுத்துவதை பற்றி கவலை கொள்கிறோம், ஆனால் அந்த காரியமில வாயு கூட "மிகினும் குறையினும் நோய் செய்யும்" வாயு என்பதையும் கூறியுள்ளார். "உயிரின் வளி வடிவம் உயிர்வளி உணவின் வளிவடிவம் கரியமில வாயு" சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு கோளிலும் என்ன விதமான வாயுக்கள் இருக்கின்றன?! அல்லது, அங்கே வாயுக்கள் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன?! என்பதை பற்றி எல்லாம் அறிவியல் பூர்வமாக தகவல்களை அடுக்கி உள்ளார். ஒவ்வொரு வகை புயலும் உருவாகும் பகுதி மற்றும் அது ஏற்படுத்தும் பேரழிவின் வீச்சு பற்றியும் பதிவு செய்துள்ளார். " போகும் வழியெங்கும் பூ மலர்த்தி போனவன் தான் கடக்கும் வழியெங்கும் திட்டமிடாத மயானங்களை விட்டுச் செல்கிறேன்" என்று காற்றின் மென்மையையும் வன்மையையும் பதிவு செய்துள்ளார். அந்த காலத்தில் காற்று மட்டும் இல்லாமல் போயிருந்தால் கடல் பயணங்கள் சாத்தியமே ஆகியிருக்காது அல்லவா அது குறித்து ஒரு கவிதையில் இவ்வாறு கூறுகிறார் " ஆண்டனியும் கிளியோபாட்ராவும் கழற்ற முடியாமல் முத்தமிட்டு கிடந்த கலங்களை நெற்றி வியர்க்க நெட்டி தள்ளியது நான்தான்!! அடுத்ததாக வெளி அதாவது வானம் இந்த அத்தியாயத்தில் இன்னும் இன்னும் ஏராளமான விண்வெளி தகவல்களை கூறியுள்ளார் புவி மைய கோட்பாட்டில் இருந்து சூரிய மைய கோட்பாடு தோன்றியபோது விஞ்ஞானிகள் எதிர்கொண்ட தீவிர எதிர்ப்பிலிருந்து துவங்குகிறார் " சூரியனை விடச் சூடானது உண்மை அது தங்கத் தூண்களை உருக்கித் தண்ணீராய் ஓட விடுமெனில் தக்கைகள் என்னுறும்?!" ஆகவே என்னதான் மூடநம்பிக்கைகளை மூட்டை மூட்டையாய் கொட்டி மதங்கள் உண்மையை மூடினாலும் அறிவியல் உண்மைகள் நிச்சயம் வெளிவந்தே தீரும்!! இந்த அத்தியாயத்தில் ஒன்பது கோள்களின் தனிச்சிறப்புகளையும் கூறி அவற்றிலிருந்து புவி எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது எவ்வாறு நமக்கெல்லாம் இடம் அளித்திருக்கிறது எவ்வாறு உயிர்கள் பிழைத்து இருக்க சாதகமான சூழ்நிலையை கொண்டுள்ளது என்பதை பற்றி எல்லாம் கூறியுள்ளார். "இங்கே பன்னிரெண்டு மணிக்கொரு முறை இரவு துயில் கொண்டு வருகிறது; பகல் வெயில் கொண்டு வருகிறது" ஐம்பூதங்கள் பற்றி அறிவியல் ஆய்வுகள் எல்லாம் செய்து முடித்த பிறகு இயல்பாகவே அனைவருக்கும் எழும் கேள்வி "கண்டாயா மனிதா கடவுளை?" என்பதுதான். அதற்கான பதிலாக கவிஞர் கூறியிருப்பது, " மதங்களால் கட்டமைக்கப்பட்ட அன்றாடங்களில் அக்கறை கொண்ட ஒருவராய்க் கருதேன் கடவுளை ஒருபோதும் வேண்டுமானால் பிரபஞ்சத்தின் 'ஒழுங்குவிதி' யைக் கடவுள் என்பேன்" அப்படியாயின், கடவுள் 'அவர'ல்ல 'அது' என்று முடிக்கிறார். இந்த மகாகவிதை தொகுப்பை பொறுத்தவரையில் ஐம்பூதங்கள் பற்றி தெள்ளத்தெளிவான அறிவியல் கருத்துக்களை அழகாக எடுத்துரைத்துள்ளார். மேலும் என்னதான் பூதமாக இருந்தாலும் மனிதன் கையில் சிக்கிய கைப்புள்ளையாக அது எவ்வாறெல்லாம் மாசடைந்து படாத பாடு பட்டு கொண்டு கிடக்கிறது என்பதையும் பதிவு செய்ய தவறவில்லை. அதே வேளையில் இந்த ஐம்பெரும் அற்புதங்களின் பிரமாண்டத்தின் அருகில் நாமெல்லாம் மிக மிக அற்பம் என்பதை உணரத்தக்க வகையில் மிகச் சிறப்பான ஒரு தொகுப்பாக இதை வடித்துள்ளார். இந்த ஐம்பூதங்களும் பிரபஞ்ச வீதியில் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டே இருக்கின்றன. அதனால் ஒன்றின் தலைப்பின் கீழ் மற்றொன்றின் இருத்தலையும் தவிர்க்க இயலவில்லை. ஆகவே சில இடங்களில் சில கருத்துகள் திரும்பத் திரும்ப வருவது சற்று அயர்ச்சியாக உள்ளது. மற்றபடி மிகச் சிறப்பான கவிதை தொகுப்பு தான்.

1 comment:

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...