Sunday, March 24, 2024

எருமை மறம் - மௌனன் யாத்ரிகா

நூல் - எருமை மறம் ஆசிரியர் - மௌனன் யாத்ரிகா பதிப்பகம் - நீலம் விலை - ரூ.200 நூலாசிரியர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரியலூர் கலைக் கல்லூரியில் தமிழ் துறையில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே மௌனன் யாத்ரிகா அவர்களின் "அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது" என்கிற ஜனரஞ்ச கவிதை தொகுப்பையும் "வேட்டுவம் 100" என்கிற அருமையான வேட்டையாடுதல் பற்றிய கவிதை தொகுப்பையும் வாசித்துள்ளேன். வேட்டுவம் நூறு கவிதை தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும் நமக்கு வேட்டையாடுவதை அருகில் இருந்து பார்க்கும் பரவச உணர்வை தருவது போல் எழுதியிருப்பார். அதோடு மட்டுமின்றி அவர்களை அவரின் ஒவ்வொரு கவிதையும் நமது மனக்கண்ணில் காட்சிகளாய் விரியும் வகையில் தெளிவாக வார்த்தைகளால் காட்சிப்படுத்தி இருப்பார். அந்த நூலை வாசித்த போது நிச்சயமாக இது பெரிய பெரிய விருதுகளை பெற வேண்டும் என்று எண்ணினேன். தற்போது அந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து மகிழ்ந்தேன். கவிஞர் மௌனன் யாத்ரிகா அவர்கள் பல திரையிசை பாடல்களையும் எழுதியுள்ளார் தற்போது வெளியாகியுள்ள தங்கலான் படத்தில் கூட பாடல்கள் எழுதி இருக்கிறார். இந்த நூல் நீலம் பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டது. கெட்டியான அட்டையில் தரமான தாளில் மிக நேர்த்தியாக உயர்தரத்துடன் நூலை நீளம் வெளியிட்டுள்ளது. ஆதித்யன் அவர்களின் அட்டைப் படமும் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அவர்களின் கோட்டோவியங்களும் நூலை இன்னும் சிறப்பாக்கியுள்ளது. நூலின் வெளியீட்டு விழாவானது தொல் திருமாவளவன் அவர்கள் மற்றும் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்கள் பேசியவைகளை தனி நூலாக அச்சிட்டால் இன்னும் சில பெரிய நூல்கள் நமது கிடைக்கக்கூடும் அவ்வளவு ஒரு அறிவார்ந்த விழாவாக அது அமைந்தது. ஆக, வெளியிட்டு விழாவில் இருந்து இந்த நூலை வாங்கி சுடச்சுட வாசித்து விட வேண்டும் என்று உடனடியாக ஆன்லைனில் ஆர்டர் போட்டு வரவழைத்தேன். இந்த நூல் மலைப்பகுதிகளில் இருந்த தொல் குடிகள் தங்களை ஆக்கிரமிக்க வந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக சண்டையிட்ட வரலாற்றை வீர வரலாற்றை கவிதை வழியில் புனைந்துள்ளது. அதோடு மட்டுமின்றி இந்த நூலில் காமமும் வீரமும் அடுத்தடுத்து வரும் வகையில் கவிதைகளை தொகுத்துள்ளார். சோ ஆகவே இந்த கவிதை நூல் தொல்குடிகளின் அகத்தையும் புறத்தையும் பேசும் நூலாகும். எருமை மறம் என்றால் என்ன?! வல்லின "ற" வந்திருப்பதால் இது நிச்சயமாக வீரத்தை குறிக்கும் சொல் என்பதை அறிந்திருப்பீர்கள் அது என்ன எருமை மறம்?! தனது படை பரிவாரங்கள் அனைவரும் அஞ்சி பின்வாங்கினாலும் கூட தனியா ஒரு நாளாக எதிரிகளை அடித்து துவம்சம் செய்ய துணியும் ஒரு வீரனின் வீரம் தான் எருமை மறம்!! என்னதான் பசுவை போல எருமையும் பால் கொடுத்தாலும் நாம் பசுவுக்கு கொடுக்கும் புனித இடத்தை எருமைக்கு தருவதில்லை. இன்றும் கூட எருமையை ஒரு அபசகுணம் மற்றும் தீமையின் குறியீடாகவே வைத்துள்ளோம். ஆனால் சங்க காலத்தில் எருமைகளை பற்றி பல்வேறு வகையில் வீரம் செறிந்த பாடல்கள் எல்லாம் இருந்துள்ளது இது குறித்து ஆய்வு செய்து பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் "அணிநடை எருமை" என்கிற ஒரு நூலையே கூட எழுதி உள்ளாராம். நூலின் துவக்கமே அதகலமாக உள்ளது " மாட்டுக்கொம்பை குருதியில் தோய்த்து ஊரெல்லையில் நட்டு வைத்துப் போயிருந்தார்கள். எங்களை அச்சுறுத்தும் குறிப்பு அது" என்று ஆரம்பமே ஒரு போர் முழுவதற்கான அறிகுறியாக நம்மை அச்சுறுத்தும் வாசகமாக அமைந்துள்ளது. அடுத்ததாகவே போருக்கு முன்பான கூத்து, கொண்டாட்டமாய் கவிதையில் விளைந்துள்ளது. கிராமத்து வாழ்வியலை வாழ்ந்ததோடு மட்டுமின்றி உற்று நோக்கியவர்களால் மட்டுமே இந்த அளவுக்கு நுட்பமான உவமைகளை கவிதைகள் சொருகி வைக்க முடியும் "ஈட்டிகளை நிற்க வைத்தால் போல் தோற்றம் தரும் கம்பங்கதிர்கள் வளர்ந்த காட்டில்" காடு என்பது தொல்குடிகளுக்கு அள்ளி அள்ளி தரும் அமுத சுரப்பியாக இருந்துள்ளது என்பதை அறிவோம் அதை தான் கவிஞர் இவ்வாறு கூறியுள்ளார் " தீது செய்யும் அரசமைந்து நாமெல்லாம் கூழுக்கு தாளம் போடும் நிலையே வந்தாலும் இந்த காட்டு வளம் மிஞ்சியிருந்தாலே போதும் உண்டு கழித்து உயிர்த்திருக்கலாம்!!" நான் இதுவரையில் நத்தை கறி சாப்பிட்டதில்லை உங்களை எருக்கம் அந்த அனுபவம் இருக்கலாம் அது சமையல் செய்யும் வழிமுறைகள் கூட எனக்கு தெரியாது ஆனால் கவிஞர் ஒரே வரியில் அதன் 'ரெசிபி'யை அழகாக கூறியுள்ளார். அதோ காண்! சிறிய மாவடு போன்றிருக்கும் நத்தையின் மூடி கொதி நீரில் திறந்து கொள்வதுபோல் தம் தலைவியின் மனம் தாழ் திறவாதாவெனத் தவிக்கும் காளையர் கண்களை;" இந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்து வாசித்து சிலாகித்தேன் "எனக்கும் கொஞ்சம் காமத்துப்பாலை பயிற்றுவியேன். நானும் ஒரு புலியின் மீசையில் தேன் தடவி நீவி விட விரும்புகிறேன்" இந்த நூலில் கரியன் என்கிற வீரனின் வீரத்தையும் காமத்தையும் அழகாக தந்துள்ளார். ஆனால் கரியன் உள்ளே வருவதே 'இன்டர்வல் பிளாக்கில்' தான். ஊரை காப்பாற்ற மிகவும் அரிதான மலர் ஒன்றை பறித்து வர வேண்டி கரியன் செய்யும் சாகசத்தோடு கரியனின் அறிமுகம் சிறப்பாக துவங்குகிறது. வேட்டையாடிய மிருகங்களை சமைப்பது பற்றி கவிஞர் தரும் விளக்கங்கள் நமது நாசியில் அந்த கவிச்சு வாடையை வரவழைத்து நாவில் நீர் பெருக்கெடுத்து ஓட செய்கிறது!! இதுபோல சொற்சுவை நாச்சுவையை தூண்டும் கவிதைகள் ஏராளமாக வேட்டுவம் நூறு நூலிலும் அழகாக வடித்திருப்பார். காதலியின் நினைவு கரியனின் நெஞ்சில் ஊருவதை இப்படி கூறியிருக்கிறார். " மண்பானையில் நண்டூருவது போல் நெஞ்சில் அவள் நினைவூரிய போதும்" கரியனின் வேட்டியை அவன் நினைவாக வைத்துக் கொண்ட காதலி அந்த வேட்டியை 15 க்கு மேற்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்துகிறாள்!! கரியனின் காமம் அவனது காதலிக்கு எப்படி இருந்தது என்பதற்கான உவமையை கண்டு பிரமித்து போனேன்!! " உயிரோடு துள்ளும் நூறு கெளுத்திகளை மார்பில் அள்ளி போட்டுக் கொண்டதைப் போல இருந்தது பலம் கொண்ட அவன் காமம்" கவிஞரின் விவரனைகளின் நுட்பமானது மிகவும் சிறப்பான ஒன்றாகவும் அரிதாகவும் இருக்கிறது. "குதிரையின் கவுட்டியில் புகுந்து நெஞ்செலும்பை நொறுக்கும் வேட்டை நாய்களின் பற்களைக் கூர் தீட்ட வேண்டும்!!" இந்தக் கவிதை நூலைப் பற்றி முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டுமானால், கவிஞரின் மொழியிலேயே கூறலாம். "மொழிக்குப் பிறகு நிலமே இனத்தை அழியாமல் காக்கும்" அந்த நிலத்தை காக்க வேண்டியது அங்கே இருக்கும் மக்களின் கடமை என்பதாக உள்ளது!! இங்கே நான் குறிப்பிட்டு காட்டி இருப்பது மிக சொற்பமான வரிகள் தான். நூலில் ஏராளமான அற்புதமான கவிதைகள் பொதிந்துள்ளன. அதுவும் அகப்பாடல்களில் காமச்சுவை அவ்வளவு அருமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் நிச்சயமாக வாசிக்க வேண்டிய தொகுப்பு.

No comments:

Post a Comment

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...