Friday, March 1, 2024

நாகசாகி பேரழிவின் பின்னணி!!

எனது "மான்ஹாட்டன் ரகசிய திட்டம்" கிண்டில் நூலில் இருந்து ஒரு அத்தியாயம். ஹிரோஷிமாவில் குண்டு போடப்பட்ட பிறகும் ஜப்பான் போடப்பட்டது அணுகுண்டு என்பதைப் பற்றியோ அதன் வீரியம் பற்றியோ அறிந்திருக்க வில்லை. ஏதோ பெரிய குண்டை அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது உருட்டி விட்டிருக்கிறது என்று முட்டாள்தனமாக கருதி “கடைசி வீரன் உயிருடன் இருக்கும் வரை அமெரிக்கா மீதான போர் தொடரும். சரணடையும் பேச்சுக்கே இடமில்லை“ என்று தொடையைத் தட்டி வாயால் வடையைச் சுட்டுக் கொண்டிருந்தது. யுரேனியம் பாமை டெஸ்ட் பண்ணிப் பார்த்தாச்சு, டிரினிட்டி டெஸ்டை விட பக்காவா வொர்க் அவுட் ஆகிடுச்சி. இந்த புளுட்டோனியம் பாமை எப்படி டெஸ்ட் பண்ணிப் பார்ப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்த அமெரிக்காவுக்கு ஜப்பானின் பிடிவாதப் போக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. “எலேய் சம்முவம் உட்றா அடுத்த பாம!!” என்று டினியன் தீவுக்கு சேதி கொடுத்தது. ஆகஸ்ட் 11 ம் தேதி என்று நாள் குறிக்கப் பட்டது. நாகசாகி யும் லிஸட்டில் இருந்தாலும் இந்தமுறை கோகுரா நகர் தான் இலக்கு என்பது முடிவானது. ஆனால் அந்த நாளில் குண்டு போட ”ரமணன் சார்” கிளியரன்ஸ் கொடுக்காத காரணத்தினால் ரொம்ப நாள் கடத்தினா மனசு மாறினாலும் மாறிவிடும் என்று தள்ளிப் போடுவதற்குப் பதிலாக கொஞ்சம் முன்னாடியே நாள் குறித்துவிட்டனர். ஆமாம், ஆகஸ்ட் 9. போன முறை மூன்று விமானங்கள் ஹிரோஷிமாவுக்கு சமாதி கட்ட சென்று வந்தன. ஆனால் இப்போது ஐந்து விமானங்கள் மிஷனுக்குள் இறக்கிவிடப்பட்டன. பழைய வார் ஹீரோவான எனோலா கே கோகுரா நகர வானிலையை கவனித்து சேதி அனுப்ப வேண்டும். லெகிங் டிராகன் நாகசாகிக்கு சென்று வானிலையை கவனித்து சேதி அனுப்ப வேண்டும். ”பாக்ஸ்கார்“ என்ற விமானம் தான் அணுகுண்டு சுமந்து செல்ல வேண்டும். மேலும் இரண்டு விமானங்கள் அப்சர்வேஷன் மற்றும் போட்டோகிராஃபிக்காக பாக்ஸ்கார் உடன் (ரெக்)கை கோர்த்துக் கொண்டு சென்றன. பாக்ஸ்காரை ஓட்டும் பொறுப்பு மேஜர் சார்லஸ் ஸ்வீனியிடம் ஒப்படைக்கப் பட்டது. அதிகாலை 3.47 க்கு மிஷன் ஸ்டார்ட் ஆனது. விமானம் புறப்பட உள்ள கடைசி நேரத்தில் தான் ரிசர்வ் ஃபியுவல் ஓப்பன் பண்ணும் இயந்திரம் வேலை செய்ய வில்லை என்பதை ஸ்வீனி கண்டறிந்தார். அப்போது சொன்னால் திட்டம் தன்னால் தாமதமடைந்து விடும் என்று அஞ்சி கப் சிப் என்று கமுக்கமாக வருவது வரட்டும் என்ற வண்டியை மேலே கிளப்பினார். “யோவ் சிட்டி ஃபுள்ளா ஒரே புகை மண்டலமாக இருக்கு டார்கெட்டை பார்க்கவே முடியல கோகுரா நகரத் திட்டம் கேன்ஸல்ட்“ என்ற தகவல் ஸ்வீனியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. டார்கெட் நாகசாகி என்றால் திரும்பவும் பாதை மாறி பறக்கணும் விமானத்தில் எறிபொருள் குறைந்த வண்ணம் வருகிறது. ரிசர்வ் வேற ஓப்பன் ஆகல. கோகுரா நகர மக்கள் குண்டு வீச்சு நமது நகரின் மீது நடத்தப் படலாம் என்று அனுமானித்து டயர், கட்டை , எறிபொருள் என எதையெல்லாமோ கொளுத்தி அந்த புகை மூட்டத்தை எழுப்பி இலக்கு தெரியாமல் மறைத்து அமெரிக்க விமானத்தை விரட்டினர் என்ற இணையத்தில் ஒரு தகவல் இருந்தது. டார்கெட் நாகசாகியின் மீது பறந்து கொண்டிருந்த மற்றொரு விமானத்தில் இருந்து சேதி “யோவ் இங்கேயும் வானத்தில் மேகமூட்டம் நெறய இருக்கு இருந்தாலும் வா பாத்துக்கலாம்” என வந்தது. இவனுக வேற நேரம் காலம் தெரியாம மாத்தி மாத்தி அடிக்கிறானுங்களே என்று ஸ்வீனி எரிச்சலடைந்தாலும் கட்டளைக்கு இணங்கி நாகசாகியை நோக்கி பறந்தார். எறிபொருள் கால் டேங்குக்கும் கீழே போய்க் கொண்டு இருந்தது. டார்கெட் சரியாக தெரியாத காரணத்தினால் நகரத்தை இரண்டு முறை பாக்ஸ்கார் விமானம் சுற்றிவந்தது. ’என்னடா ஆபத்து புரியாம சடங்கு சுத்த வைக்கிறீங்க’ என்று எரிச்சலுற்றார் விமானி. புளுடோனியம் நிரம்பிய குண்டினை திரும்ப எடுத்துக் கொண்டும் போகமுடியாது. அப்படியே எங்கேயும் கடலிலும் போட்டுவிட முடியாது. எரிபொருள் தீர்ந்து போனால் விமானத்தோடு சேர்ந்து குண்டு நாகசாகி மீது விழுந்து வெடிக்கும் என்கிற நெருக்கடி நிலை. “யோவ் அங்க பாருய்யா, மேகங்களுக்கு நடுவால ஒரு மைதானம் தெரியுது” என்று அப்சர்வர் சொல்லி வாய் மூடுவதற்குள் குண்டினை போட்டு விட்டு விர்ரென்று பறந்து சென்றது பாக்ஸ்கார். எந்த நேரத்திலும் எரிபொருள் டேங்க் உலர்ந்து போகும் நிலை. வேறு வழி இன்றி ஒகினாவா என்கிற தீவில் எமர்ஜென்சி லேண்டிங் ஆகியது. விமானம் கீழே இறங்கிய போது ஃபியுவல் டேங்க் சுத்தமாக உலர்ந்து போய் இருந்தது. அது எதிர்பாராத இடம் ஆதலால் அவர்களை வரவேற்று வெற்றித் திலகம் வைக்கவோ போட்டோ எடுக்கவோ எந்த ஏற்பாடும் அங்கே இல்லை. இறங்கியதும் “மிஷன் அக்கம்ப்ளிஷ்டு“ என்று டினியனில் ஆர்வத்தோடு காத்திருப்போருக்கு சேதி அனுப்பி விட்டனர். நாகசாகியில் போடப்பட்ட புளுடோனியம் குண்டின் வெடிப்பின் வீரியம் ஹிரோஷிமா குண்டினை விட அதிகம். விட்டுருந்தால் அதை விட பல மடங்கு சேதம் உண்டாகி இருக்கும். இங்குதான் நாகசாகியின் புவியியல் அமைப்பு அந்த நகருக்கு அனுகூலமாக அமைந்து போனது. ஆமாம், நாகசாகி இரண்டு பக்கம் மலைகள் சூழ்ந்த உரஹாமி பள்ளத்தாக்கில் இருந்த காரணத்தினால் வெடிப்பினால் உண்டான வெப்ப அதிர்வுகளை மலை வாங்கிக் கொண்டு பரவாமல் காத்து நின்றது. இந்த குண்டு போடப்பட்ட ஒரு வாரத்தில் ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முற்றிலும் முடிவுக்கு வந்தது. ஆக்சுவலா சோவியத் ரஷியா ஆகஸ்ட் 8 ம் தேதி ஜப்பான் மீது போர் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அடுத்த நாள் குண்டு வெடிப்பு மற்றும் ஜப்பானின் சரண் என்று சீனே மாறிவிட்டது. அதற்குப் பிறகும் 1946 முதல் 1952 வரையில் ரெஸ்கியு அண்டு ரீ கன்ஸ்ட்ரக்ஷனுக்கு உதவுகிறேன் என்று அமெரிக்கா அங்கேயே பட்டறையை போட்டு அமர்ந்து இருந்தது. இப்படியாக “அணுசக்தி“ எனும் அறிவியல் சக்தி ஒரு பேரழிவு சக்தியாக “மே ஐ கம் இன்” என்று பூமிப் பந்தின் கதவைத் தட்டி உள்ளே வந்து தொலைத்தது. அணுகுண்டு என்பது போட்ட உடனே லட்சக்கணக்கானோர் இறந்து போனார்கள் என்று கவலையோடு கண்ணைக் கசக்கி மூக்கை சிந்தி போட்டு விட்டு கிளம்பும் விஷயம் அல்ல. கதிர் வீச்சு பாதிப்பு காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக தொடர்ந்த வண்ணம் இருக்கும். எனவே உலகில் மற்றுமொரு அணுகுண்டு விழுந்தால் தாங்காது. அதுவும் தற்போதைய ஹைட்ரஜன் குண்டுகள் மற்றும் நவீன ரக அதிவேக கண்டம் பாயும் ஏவுகணைகளால் எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பும் கேள்விக் குறியே. இந்த கட்டுரையின் நோக்கம் அணுகுண்டின் அறிவியலையும் அதன் பின்னால் இருக்கும் அரசியலையும் பின்விளைவாக தொடர்ந்து வரும் பேராபத்தையும் எடுத்துக் கூறி அணுஆயுதப் போருக்கு எதிரான மனநிலையை வாசிப்போருக்கு ஏற்படுத்துவது தான். யாரும் யாரையும் ஆதிக்கம் செய்யாமல் இந்த புவியில் இருக்கும் வளங்களை பாகுபாடு இன்றி பகிர்ந்து அமைதியாக வாழ வழி செய்யும் மதம் ஏதாவது இருந்தால் கூறுங்கள். இல்லையேல் அனைத்து மதங்களையும் குப்பையில் போடுங்கள். இங்கே மதம் தேவையில்லை மனிதமே தேவை. மு.ஜெயராஜ் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம், அரியலூர் மாவட்டம்.

2 comments:

  1. Good morning Sir ur article is clearly explained the relationship between the science & social science(history). Last 12 lines of ut is touched my heart.

    ReplyDelete
  2. Hydrogen Auturmborm is one of the Scientific invention (production). It always dangerous one. It destroyed Nagasaki due to the political reason. Generally, Borm Blasted Areas not Suitable for living things & cultivation. Very nice Article. I like The last 12 lines of ur article. Thank u.

    ReplyDelete

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...