Tuesday, February 13, 2024
கல்யாணத்தில் பெண் பார்த்த கதை
கல்யாணத்தில் பெண் பார்த்த கதை!!
( வழக்கம்போல ஒரு டிஸ்க்ளைமர் சொல்லிடுறேன் - இதுவும் உண்மை கதை அல்ல - அப்படின்னு சொன்னா நீங்க நம்ப போறதும் இல்லை இருந்தாலும் சொல்லிக்கிறேன்🤣)
(கதை மாந்தர்களாக வந்திருக்கும் ஆசிரிய நண்பர்கள் குட்டை உடைத்து விட வேண்டாம்)
“சார் நாளைக்கு ஆர்பி சார் கல்யாணத்துக்கு எல்லோரும் எப்படி போறது?” என்று ஆசிரியர் குழுத் தலைவர் ஆர்ஆர்பி சாரை கேட்டேன்.
“எம்ஜே சார் நாளைக்கு லீவு அதனால எல்லோரையும் ஒன்று திரட்டுவது கஷ்டம், அதனால எல்லோரும் அவங்கவங்களுக்கு வசதி பட்ட மாதிரி வந்துக்கட்டும்“
“சார் எப்போ அசம்பிள் ஆகணும்னு ஒரு உத்தேச டைம் சொல்லுங்க, ஒரு பத்து பேராவது சேர்ந்து நின்னு கிஃப்ட் கொடுத்தாதான் கெத்தா இருக்கும்“ என்றார் எஸ்எஸ்வி.
“என்ன ஆர்ஜிகே, நாளைக்கு ஜோரா டிரஸ் பண்ணிட்டு வாங்க, உங்களுக்கு அங்கேயே நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் ஏற்பாடு பண்ணிடலாம்“ என்று இளம் புதிய கணித ஆசிரியர் கோகுலகிருஷ்ணனை கலாய்த்தார் ஜிஎஸ் என்கிற சபாநாயகம்.
“சார்….!!!“ என்று வெட்கத்தில் நெளிந்தார் ஆர்ஜிகே.
“என்ன சார், பேருக்கும் ஆளுக்கும் சம்மந்தம் இல்லாம இருக்கீங்க“ என்ற இடித்தார் ஜிஎஸ்.
அடுத்தநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் சேத்தியாத்தோப்பில் ஒன்று கூடிவிட்டோம். ஆர்ஜிகே நெய்வேலியில் இருந்து வந்ததால் எங்களுக்கு முன்பே வந்து காத்திருந்தார்.
“என்ன ஆர்ஜிகே, ஒரு பேச்சுக்குத்தான் பொண்ணு பாக்கலாம்னு சொன்னேன், அதுக்காக விடியற்காலையே வந்து துண்டு விரிச்சி படுத்துட்டீங்களா?”
என்று மறுபடியும் கலாய்த்தார் ஜிஎஸ்.
“சார் இல்ல சார், பஸ் சீக்கிரம் வந்துடுச்சி“
“என்ன, உண்டீரா?!“
“இனிமேத்தான் சார்“
“சார் வந்தவரைக்கும் முதல்ல பந்தியில இடம் பிடிப்போம். ஒவ்வொரு பந்திக்கும் ஒரு ஐட்டம் குறையும்“ என்றேன். நமக்கு சாப்பாடு முக்கியம்ல பாஸ்.
“சார் ஹச்.எம் வந்துடட்டும்“ என்றார் ஆர்ஆர்பி சார்.
“அவருக்கு வேணும்னா இன்னொரு தபா பந்தியில கம்பெனி கொடுத்துடலாம்“ என்றார் ஜி.எஸ் வேட்டியை இடுப்பை ஒட்டி நெகிழ்த்தியபடியே.
“சார் வேட்டிய எல்லாம் தளர்த்த வேண்டாம் காலையில் டிபன் தான் போடுவாங்க, நான் வெஜ் எல்லாம் இல்லை“ என்றேன்.
ஏக காலத்தில் “ஷி இஸ் எ ஃபேண்டசி ந நான நான நான….” என்கிற பேக்ரவுண்ட் இசை மண்டைக்குள் ஒலிக்க ஒரு மெருன் கலர் தேவதை புள்ளிமானாய் துள்ளியபடி கண்ணெதிரே தோன்றி மறைந்தார்.
“சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என் மீது காதல் வந்ததே…“ என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்தது.
“சார்….“ இது நான்
“எம்.ஜே…“ இது ஜிஎஸ்
மற்ற மூவரும் திறந்த வாய் மூட மறந்திருந்தனர்.
“கண்டேன் சீதையை“ என்பது போன்ற தொனியில் “ஆர்ஜிகே, இந்த பொண்ணு யாருன்னு விசாரிச்சிடுவோமா?“
வழக்கமாக இந்த மாதிரி தருணங்களில் அவசரமாக “அய்யய்யோ வேணாம் சார்“ என்று மறுப்பவர் தற்போது வெறும் சிரிப்பை மட்டும் உதிர்த்தார்.
எல்லோருமே மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு அந்த பெண்ணை தேடிக்கண்டு விசாரித்துவிடுவது என்று முடிவெடுத்தோம்.
“ஆர்ஜிகே கோச்சிக்காதிங்க, டிபன் சாப்பிட்டு விட்டு தெம்பா தேடுவோம்“ என்றேன் வயிற்றை தடவியபடி.
“சார், கலாய்க்காதீங்க சார்“ என்று வெட்கத்தோடு சிரித்தார்.
பந்தி வரிசைகள் ஹவுஸ்புல்லாக இருந்தது. எந்த வரிசை முடிக்கும் தருவாயில் இருக்கிறது என்று கவனித்து போய் சாப்பிடுபவர் பின்னால் பவுன்சர் கணக்காக நின்று கொண்டோம்.
இன்னொரு இட்லி கூடுதலா கேட்டா வெட்டுவாய்ங்களோ என்று மருண்டபடியே எழுந்தார் எனக்கு முன் அமர்ந்திருந்தவர்.
சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது வானவில் பந்தி நடுவில் வந்து இறங்கியது. கையில் கொஞ்சம் வடைகளை அள்ளியபடி வேக வேகமாய் நெற்றியில் வேர்வைத் துளிகள் அரும்ப ஓட்டமும் நடையுமாக சென்றது அந்த மெரூன் சுடிதார் அணிந்த தேவதை.
“கண்மணி, எனக்கு ரெண்டு வடை வையம்மா” இது ஜிஎஸ்
“அய்யய்யோ, இது பொண்ணுக்கு“ என்று வெள்ளிக் காசுகளை சிக்கனமாக அள்ளி வீசி சென்றார்.
“சார், பேரு எப்ப சார் கேட்டிங்க?“ என்று ஆர்வமாகிவிட்டார் ஆர்ஜிகே.
“சார், நான் பொதுவா சொன்னேன், பேரு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கா?, தோ இருங்க கேப்போம்”
சாப்பிட்ட பிறகு மொய் கொடுக்க வரிசையில் நின்ற போது தான் கவனித்தோம். கல்யாணப் பொண்ணுக்கு அருகே அந்த புள்ளிமான் நின்றது அருகே ரெண்டு பிள்ளை மான்களும் நின்றன.
கும்பலாக மேடையை ஆக்கிரமித்தோம். “ஆர்பி உங்க கல்யாணத்தோட தொடர்ச்சியா அடுத்த கல்யாணத்திற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு“
“பொண்ணு பாத்துட்டீங்களா“ என்றது புள்ளிமான்.
“அந்த பொண்ணே நீங்கதான் மா“ என்று ஜி.எஸ் காதினில் கிசுகிசுத்தேன்.
மேடையை விட்டு இறங்கியபோது, “அச்சச்சோ கவர் கொடுக்க மறந்துட்டேன் சார்“ என்று ஆர்ஜிகே யுடர்ன் அடித்தார்.
நாங்க எல்லோரும் கொல்லென்று சிரித்தோம்.
“ம்ம்… போங்க போய் தனியா பேசிட்டு வாங்க“ என்றோம்.
வந்து சேரில் வட்டமாக அமர்ந்தோம். அந்த நேரம் பார்த்து மறுபடியும் புள்ளிமான் துள்ளி ஓடியது.
“எம்மா, பாத்து மெதுவா போம்மா, வரும்போது கொஞ்சம் இங்க வாங்க ஒரு விஷயம் கேக்கணும்” என்று லேசாக விஷயத்தை அவிழ்த்தார் ஜிஎஸ்.
“சார், வேணாம் சார்“ என்று பதட்டமானார் ஆர்ஜிகே
“நாம என்ன பொண்ணா கேக்க போறோம், யாரு என்ன, எங்க படிக்கிறீங்க ன்னு தானே கேக்க போறோம்“
சொன்ன மாதிரியே திரும்பி வரும் போது அருகே வந்தது புள்ளிமான், கூடவே பிள்ளை மான்களும்.
“ஏம்மா, நீங்க யாரும்மா? என்ன ஊரு…“ இது ஜி.எஸ்
“நான் பொண்ணோட…“ என்று சொல்வதற்குள் பிள்ளை மான்கள் புள்ளி மானை இழுத்தன.
“அம்மா, பாரும்மா கேட்கிட்ட அப்பா வந்துட்டாங்க வாங்க போய் கூட்டியாரலாம்“ என்று எங்கள் காதுகளில் ஈயத்தை ஈட்டியாய் பாய்ச்சின அந்த பிள்ளை மான்கள்.
“சார், நான் பொண்ணோட அக்கா சார். இது என் பொண்ணுங்க. நீங்க மாப்பிள்ளை கூட வேலை பார்க்கிற சாருங்க தானே?” என்று படபடவென பொறிந்தார்.
எல்லோரும் ஏக காலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து பேந்த பேந்த விழித்துக் கொண்டோம்.
மண்டபத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை நிறுத்தாமல் சிரித்துக் கொண்டே வந்தோம்.
இப்படியாக அந்த பெண் பார்க்கும் வைபவம் தோல்வியில் முடிந்தது!!
Subscribe to:
Post Comments (Atom)
First Look முக்கியம் பாஸ்!!
First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
No comments:
Post a Comment