Sunday, June 2, 2019

கல்விப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி



அப்போது நான் பட்டதாரி கணித ஆசிரியராக இருந்த காலம். எனது வகுப்பில் ஒரு வழக்கு வந்தது.
 “சார் இவன் என்னை பட்டப் பெயர் இட்டு அழைக்கிறான் சார்”
“அப்படியாப்பா, என்ன பெயர் இட்டு அழைக்கிறான்?”
“தக்காளின்னு சொல்றான் சார்”
“டேய் இனிமே நம்ம தக்காளியை யாரும் தக்காளின்னு சொல்லக்கூடாது” என்று கூறியதும் வகுப்பே சிரிப்பலையில் மூழ்கியது.
“என்னடா தக்காளி, உன்னை யாரும் தக்காளின்னு கூப்பிட மாட்டாங்க” மறுபடியும் சிரிப்பலை.
“சார் என்ன சார் நீங்களே…”
“ஏன்டா நான் உன்னை தக்காளின்னு கூப்பிடக் கூடாதா?“
“நீங்க கூப்பிடலாம் சார்” என்றான் வெட்கத்தில் நெளிந்தபடி.
மற்றொருமுறை வகுப்பே அமைதியில் உரைந்திருக்க வருகைப் பதிவு எடுத்துக் கொண்டு இருந்தேன்.
“ராகுல்“
“எஸ் சார்“
”ரஞ்சித்“
“எஸ் சார்”
“கும்கி” என்று விளித்தவுடன் வெடித்த சிரிப்பலை அடங்க ஐந்து நிமிடம் ஆனது. அப்புறமும் சர வெடி வெடித்து முடிந்த பின்பும் வரும் ஓரிரு வெடிச் சத்தம் போல சிரிப்பு தொடர்ந்த வண்ணம் இருந்தது. ஒரு வழியாக அந்த வகுப்பின் இறுக்கம் தளர்ந்தது.
“சார், என்னங்க சார்” என்று நெளிந்தான் கும்கி என்கிற சற்றே பருத்த மாணவன்.(இன்றளவும் எனது பழைய மாணவர்கள் பல பேரின் பட்டப் பெயர்கள் மட்டுமே நினைவில் உள்ளது)
மாணவர்களுக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி இப்படியாக நெருக்கம் ஆகிவிடும். அப்புறம் சிறு விடுமுறை முடிந்து போனால் கூட ”என்ன சார் லீவு போட்டுட்டீங்க” என்று அன்பாக கேட்பார்கள்.
நானும் கூட ’எப்போது வகுப்புக்கு செல்வோம்’ என்கிற ஏக்கத்தோடு இருப்பதுண்டு.
மாலை வேளைகளில் மாணவர்கள் சோர்ந்திருக்கும் வேளைகளில் நாங்கள் பாடத்தை தவிர்த்து பல விஷயங்களை பேசுவோம். அந்த வேளைகளில் இது வரை வகுப்பில் பேசாத மாணவர்கள் எல்லோரும் பேசுவார்கள். அது முற்றிலும் ஒரு தயக்கமற்ற கேள்வி பதில் நேரமாக சுவாரசியமாக செல்லும்.
என்ன பேசுவோம் அப்படி?!!
மாணவர்களின் கரம் பிடித்துக் கொண்டு நிலவு, சூரியன், செவ்வாய் கிரகம் ஏன் சூரியமண்டலம் தாண்டிக் கூட சென்றது உண்டு.
இளையராஜாவின் இசையமுதை எப்படி பருகவேண்டும் என்று கூட பேசி இருக்கிறோம்.
ஆங்கிலத் துணைப்பாடம்(women empowerment) நடத்தும் போதெல்லாம் உலக அளவிலான பெண் ஆளுமைகளின் சாதனைகளை கதைத்தது உண்டு.
யார் மனசுல யாரு (21 yes or no type questions கொண்டு மாணவர்கள் மனதில் நினைக்கும் ஆளுமைகளை 21 வது கேள்விகளுக்குள் இறுதி செய்து கண்டு பிடிக்கும் விளையாட்டு) கூட விளையாடி இருக்கிறேன்.
துப்பறியும் சாம்பு கதைகள் உள்ளிட்ட நான் படித்த மாணவர்களிடம் பகிரத்தக்க கதைகளை பேசியிருக்கிறேன்.
அவர்களுக்கு சொல்வதெற்கென்றே நான் நூலகத்தில் நிறைய நூல்கள் எடுத்து படித்தேன்.
இதனால் என்ன பயன்?
இந்த வகையான பாடம் தாண்டிய உரையாடல்கள் மாணவர்களுக்கும் எனக்குமான இடைவெளியை குறைத்தது. என்னை முழுமையாக நம்பி எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். எனது பாடம் அவர்களின் மிகப் பிடித்த பாடமாகிப் போனது. (பாத்தீங்களா பொதுநலத்தில் ஒரு சுயநலம்)
அடுத்தது ”ஹீரோ பேனா”
வகுப்பில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்போருக்கு நான் வழங்கும் பரிசுதான் அது. பொதுத்தேர்வு என்று இல்லை, காலாண்டு அரையாண்டு பரிட்சையில் கூட வழங்குவது உண்டு.
சில முறை மெல்லக் கற்போருக்கு தனிப்பட்ட இலக்கு (30, 35, 40) நிர்ணயித்து பேனா பரிசு வழங்கியது உண்டு.
“உங்க கிட்ட பேனா பரிசு வாங்கியே ஆக வேண்டும் என்று சத்தியம் செய்து படித்து இருக்கிறோம் சார்” என்று பின்னாட்களில் எனது மாணவர்கள் கூறக் கேட்ட போது அகமகிழ்ந்து போனேன்.
பரிசு கூட வேண்டாம், பாராட்டு என்பது நம் கையில் உள்ள தங்க காசு போன்றது. தயக்கமில்லாமல் அதை அள்ளி அள்ளி வீச வேண்டும். நன்கு படிப்போர் மெல்லக் கற்போர் என அனைவரையும் பாராட்டி அவர்களின் செயல்களை அங்கீகரிக்க வேண்டும். அது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
முற்றிலும் தவிருங்கள்
ஆசிரியர்கள் புகை மது என்று எந்த விதமான கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் ஆட்படாமல் இருப்பது உத்தமம்.
குறைந்தபட்சம் அந்த பழக்கங்களை தமது மாணவர்கள் அறியாவண்ணம் வைத்திருப்பது நல்லது.
MORAL VALUES ஐ அவர்கள் பெரிதாக எண்ணவும் பின் பற்றவும் நாம் அவர்களுக்கு INSPIRATION ஆக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சாரே செய்கிறார் நாம் செய்து பார்த்தால் என்ன என்று எண்ணுவார்கள். ஒழுக்கத்தின் எல்லைகளை மீற முயல்வார்கள்.
முக்கியமாக நமது மது அல்லது புகை போன்ற தீய பழக்க வழக்கங்களை மாணவர்கள் காதில் விழும் வண்ணம் சாகசம் போலக் கூறுவதை தவிர்க்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும் எனது அனுபவப் பாடங்கள். ஆசிரியப் பெருமக்களாகிய நாம் இந்தக் கல்விப் புத்தாண்டில் நம்மை இன்னும் மேம்படுத்தி மெறுகேற்றிக் கொண்டு மாணவர்களுக்காக நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோமாக என்று கூறி எனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.


Saturday, June 1, 2019

இந்தி – தேவையான ஆணியா தேவையில்லாத ஆணியா???


எனது நண்பர் ஒருவர், “சார் இந்தி கற்க விடாம ஒரு தலைமுறையையே நாசம் செய்து விட்டார்கள் இந்த திராவிட ஆட்சியாளர்கள்”
“ஏன் நீங்க தனிப்பட்ட முறையில் இந்தி கத்துக்கறத வேணாம்னு யாரும் சொன்னாங்களா?”
“இல்ல சார் ஆனா ஸ்கூல்லயே படிச்சாக்க நல்லாருக்கும்ல”
“ஆமாம், ஸ்கூல்லதான் 3 ம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் படிச்சிங்கல்ல இப்போ ஆங்கிலத்துல உங்களால பேசமுடியமா?”
“சார், அது வந்து…”
“உங்களால புரிஞ்சுக்க முடியும் பேசவும் முடியும் அதற்கான சூழல்ல இருந்தா ஒரு மாதத்தில் உங்களால் சரளமாக பேசமுடியும்”
“ஆனா வந்து இந்தி பற்றிய அடிப்படை தெரிஞ்சிக்கலாம்ல”
“ஏன் இந்தியில எதாவது இலக்கியம் படைக்க போறீங்களா?, நீங்க ஆர்வ மிகுதியில் எந்த ஒரு மொழியையும் சொந்தமாக கற்றுத் தேற இயலும், அதற்காக அந்த மொழியை பள்ளிப் பாடத்தில் வைக்கணும்னு சொல்லி பீதிய கௌப்பாதீங்க”
மேலே இருக்கும் உரையாடல் இருக்கட்டும், எதற்காக இந்தியர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்??
இந்தியாவை ஒரு துணைக்கண்டம் என்று சொல்வதற்கு காரணம் சைஸ் மட்டும் இல்லை, இங்கே பலதரப்பட்ட பழக்க வழக்கங்களும் கலாச்சாரங்களும் உள்ள மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக உள்ளார்கள் என்பதால் தான். அதையெல்லாம் மழுங்கடித்து ஒற்றை மொழி ஒற்றை கலாச்சாரம் என்கிற புள்ளியை நோக்கி நெட்டித்தள்ளி இந்தி – இந்து – இந்தியா என்று சொல்லி மார்தட்டும் முயற்சியாகவே இந்த இந்தி திணிப்பை நான் பார்க்கிறேன்.
என்ன தான் பாஸ் உங்க பிரச்சனை பள்ளியில இந்தி பாடத்தை கட்டாயம் கொண்டுவந்தால் மாணவர்களுக்கு நல்லது தானே?
ஆமாம் ஏற்கனவே இருக்கும் அயல்மொழி ஆங்கிலத்தை அப்படியே ”அறுத்து தள்ளிட்டாங்க”!!
ஏற்கனவே அயல்மொழியான ஆங்கிலம் மாணவர்களுக்கு ஒரு அச்சுறுத்தும் கொடுங்கனவாகவே உள்ளது. அதனோடு இந்தியையும் சேர்த்து மாணவர்களின் பாடச்சுமையை ஏன் அதிகப் படுத்த வேண்டும். தேவைப்படுவோர் தனியாக கற்றுக் கொள்ளட்டும். எதற்காக கட்டாயப்படுத்த வேண்டும்.
இதில் இன்னொரு நுணுக்கத்தையும் பார்க்க வேண்டும். வட இந்தியாவில் உள்ள பல மொழிகளின் எழுத்துக்கள் யாவும் இந்தி போன்ற வடிவம் உள்ளவை. அவர்களின் மொழி வழக்குகளில் கூட பல சொற்கள் இந்தி போலவே இருக்கும். மேலும் இஸ்லாமியர் பேசும் மொழியும் இந்தி போலவேத்தான் இருக்கும். இருவரும் எளிதாக புரிந்து கொள்வார்கள். எனவே வட இந்திய மாநிலத்தவருக்கு இந்தி மொழி கற்பது எளிது. நமக்கு இந்தி முழுக்க முழுக்க அந்நியம். ஒரு தொடர்பும் இல்லை. எனவே இந்தி பேசும் பல மாநிலத்தவருக்கு இந்தி மிக எளிது. நமக்க கடினம்.
மேலும் நாம் ஏன் இந்தி கற்க வேண்டும்?
இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் இந்தியாவில் தேசிய மொழி என்கிற அந்தஸ்தெல்லாம் கிடையாது. இந்தியும் ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழிதானே ஒழிய தேசிய மொழியெல்லாம் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
திராவிடக் கட்சிகளின் நிலைப்பாடு “இந்தி எதிர்ப்பு“ என்று தவறாக தலைமுறைகள் தாண்டி பரப்ப பட்டு வருகிறது. அது “இந்தி திணிப்பு எதிர்ப்பு“ என்றுதான் கூறப்பட்டிருக்க வேண்டும். யாரும் இந்தி படிக்காதீர்கள் என்று யாரும் கத்தியைக் காட்டி மிரட்ட வில்லை, மாறாக பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் இந்தியை கட்டாயமாக்கி திணிக்காதீர்கள் என்று தான் போராடினார்கள்.
இந்தி திணிப்பு எதிர்ப்பை பற்றி புரிந்து கொள்ள இதன் ஆரம்ப கால வரலாற்றை தெரிந்து இருப்பது அவசியம்.

1938ல் ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு இந்தி கட்டாயம் என்கிற அரசாணையை வெளியிடுகிறது. மறைமலை அடிகளார், சோம சுந்தர பாரதியார் மற்றும் தந்தைப் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் பெரிய போராட்டம் வெடிக்கிறது. அதில் கைது செய்யப் பட்ட நடராசன் என்கிற மாணவரும் தாளமுத்து என்பவரும் உடல்நலம் குன்றி இறந்து போகிறார்கள். 1940ல் எதிர்ப்புகளுக்கு பணிந்து அந்த அரசாணை வாபஸ் பெறப்படுகிறது.
1948ல் ஓமாந்தூரார் தலைமையிலான அரசும் இந்தி திணிப்பை அரசாணையாக வெளியிட மறுபடியும் எதிர்ப்பு வலுக்கிறது. பிறகு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடரும் என்று அரசாணை மாற்றி வெளியிடப் படுகிறது
இதன் பிறகு நேருவின் அமைச்சரவையில் 1963ல் ஆட்சி மொழி மசோதா சட்டமாக்கப் படுகிறது. அதன்படி ”26.01.1965 முதல் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும்” என்பது சட்டம்.
1965ம் ஆண்டு நெருங்க நெருங்க போராட்டம் தீவிரமடைகிறது. கீழப்பழூர் பேருந்து நிலையத்தில் ஒரு சிலை இருக்கும் அது யார் தெரியுமா?
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திருச்சி இரயில் நிலையத்தில் தீக்குளித்து இறந்து போன கீழப்பழூரைச் சேர்ந்த சின்னசாமி என்ற மொழிப்போர் தியாகியின் சிலைதான் அது.
27.01.1965ல் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதில் சிவகங்கையைச் சேர்ந்த இராசேந்திரன் என்கிற மாணவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகிறார்.

இந்தி எதிர்ப்பு போரில் பொள்ளாச்சியில் நடைபெற்ற போராட்டம் தான் முதன்மையானது. அங்கே தபால் அலுவலக இந்தி பெயர்ப் பலகையை தார் கொண்டு அழிக்க முயன்ற சிறுவன் ஒருவன் இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி குண்டுக்கு பலியானான். அதன் பின்பு வெடித்த போராட்டத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு நூற்றுக் கணக்கானோர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. 1965 பிப்ரவரி 12 பொள்ளாச்சி படுகொலை நாள் என்றே வரலாற்றில் பதியப் பட்டுள்ளது.
முதன் முதலில் கட்டாய இந்தி மசோதாவை கொண்டு வந்த ராஜாஜியே கூட சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். 50 நாட்களுக்கு மேலாக நடந்த போராட்டம் மார்ச் 15 1965 ல் முடிவுற்றது.
அதற்கு பிறகான சட்டப் பேரவைத் தேர்தலில் தான் 1967 ல் காமராஜர் பெ.சீனிவாசன் என்கிற மாணவரிடம் தோல்வியுற்றார். இந்தி திணிப்பை கையில் எடுத்த காங்கிரஸ் அப்போது வீழ்ந்தது தான் அதன் பின்பு தமிழ் நாட்டில் எழவே இல்லை.
இறுதியாக இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் போது இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலமும் தொடரும் என்று அந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
நாம் இந்தியை விடுத்து ஆங்கிலத்தை தழுவியதால் தான் “திரைகடல் ஓடியும் திரவியம் தேடுகிறோம்” ஆம் நம் மாநிலத்தவர் அநேகம் பேர் அயல் நாடுகளுக்கு சென்று நல்ல சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். மாறாக இந்தி கற்றிருந்தால் பின் தங்கிய மாநிலமாகி மோடிக்கு வாக்களித்துக் கொண்டு இருந்து இருப்போம்.
இறுதியாக இன்னும் தெளிவாக சொல்கிறேன், இந்தி பிரச்சார சபா மூலமாக வெறும் பத்து ரூபா செலவில் யார் வேண்டுமானாலும் இந்தி கற்றுக் கொள்ளலாம் ( இது 1923 முதலாகவே இந்தி கற்றுத் தருவதற்காக சென்னையில் இயங்கி வருகிறது.) அதற்காக கட்டாயப் படுத்தி திணிப்பது தவறு.
எனது நிலைப்பாடும் திராவிட கட்சிகளின் நிலைப்பாடும் (அ.இ.அ.தி.மு.க இப்போது திராவிடக் கட்சியாக உள்ளதா என்பதே கேள்விக்குறியது) இது தான் ”எந்த மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள் இந்தி உட்பட, ஆனால் இந்தி தான் அலுவலக மொழி இந்தியை பள்ளியில் கட்டாயமாக்குங்கள் என்கிற இந்தி திணிப்பை இப்போதும் எதிர்க்கிறோம் இன்னும் தீவிரமாக”

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...