Sunday, June 2, 2019

கல்விப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி



அப்போது நான் பட்டதாரி கணித ஆசிரியராக இருந்த காலம். எனது வகுப்பில் ஒரு வழக்கு வந்தது.
 “சார் இவன் என்னை பட்டப் பெயர் இட்டு அழைக்கிறான் சார்”
“அப்படியாப்பா, என்ன பெயர் இட்டு அழைக்கிறான்?”
“தக்காளின்னு சொல்றான் சார்”
“டேய் இனிமே நம்ம தக்காளியை யாரும் தக்காளின்னு சொல்லக்கூடாது” என்று கூறியதும் வகுப்பே சிரிப்பலையில் மூழ்கியது.
“என்னடா தக்காளி, உன்னை யாரும் தக்காளின்னு கூப்பிட மாட்டாங்க” மறுபடியும் சிரிப்பலை.
“சார் என்ன சார் நீங்களே…”
“ஏன்டா நான் உன்னை தக்காளின்னு கூப்பிடக் கூடாதா?“
“நீங்க கூப்பிடலாம் சார்” என்றான் வெட்கத்தில் நெளிந்தபடி.
மற்றொருமுறை வகுப்பே அமைதியில் உரைந்திருக்க வருகைப் பதிவு எடுத்துக் கொண்டு இருந்தேன்.
“ராகுல்“
“எஸ் சார்“
”ரஞ்சித்“
“எஸ் சார்”
“கும்கி” என்று விளித்தவுடன் வெடித்த சிரிப்பலை அடங்க ஐந்து நிமிடம் ஆனது. அப்புறமும் சர வெடி வெடித்து முடிந்த பின்பும் வரும் ஓரிரு வெடிச் சத்தம் போல சிரிப்பு தொடர்ந்த வண்ணம் இருந்தது. ஒரு வழியாக அந்த வகுப்பின் இறுக்கம் தளர்ந்தது.
“சார், என்னங்க சார்” என்று நெளிந்தான் கும்கி என்கிற சற்றே பருத்த மாணவன்.(இன்றளவும் எனது பழைய மாணவர்கள் பல பேரின் பட்டப் பெயர்கள் மட்டுமே நினைவில் உள்ளது)
மாணவர்களுக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி இப்படியாக நெருக்கம் ஆகிவிடும். அப்புறம் சிறு விடுமுறை முடிந்து போனால் கூட ”என்ன சார் லீவு போட்டுட்டீங்க” என்று அன்பாக கேட்பார்கள்.
நானும் கூட ’எப்போது வகுப்புக்கு செல்வோம்’ என்கிற ஏக்கத்தோடு இருப்பதுண்டு.
மாலை வேளைகளில் மாணவர்கள் சோர்ந்திருக்கும் வேளைகளில் நாங்கள் பாடத்தை தவிர்த்து பல விஷயங்களை பேசுவோம். அந்த வேளைகளில் இது வரை வகுப்பில் பேசாத மாணவர்கள் எல்லோரும் பேசுவார்கள். அது முற்றிலும் ஒரு தயக்கமற்ற கேள்வி பதில் நேரமாக சுவாரசியமாக செல்லும்.
என்ன பேசுவோம் அப்படி?!!
மாணவர்களின் கரம் பிடித்துக் கொண்டு நிலவு, சூரியன், செவ்வாய் கிரகம் ஏன் சூரியமண்டலம் தாண்டிக் கூட சென்றது உண்டு.
இளையராஜாவின் இசையமுதை எப்படி பருகவேண்டும் என்று கூட பேசி இருக்கிறோம்.
ஆங்கிலத் துணைப்பாடம்(women empowerment) நடத்தும் போதெல்லாம் உலக அளவிலான பெண் ஆளுமைகளின் சாதனைகளை கதைத்தது உண்டு.
யார் மனசுல யாரு (21 yes or no type questions கொண்டு மாணவர்கள் மனதில் நினைக்கும் ஆளுமைகளை 21 வது கேள்விகளுக்குள் இறுதி செய்து கண்டு பிடிக்கும் விளையாட்டு) கூட விளையாடி இருக்கிறேன்.
துப்பறியும் சாம்பு கதைகள் உள்ளிட்ட நான் படித்த மாணவர்களிடம் பகிரத்தக்க கதைகளை பேசியிருக்கிறேன்.
அவர்களுக்கு சொல்வதெற்கென்றே நான் நூலகத்தில் நிறைய நூல்கள் எடுத்து படித்தேன்.
இதனால் என்ன பயன்?
இந்த வகையான பாடம் தாண்டிய உரையாடல்கள் மாணவர்களுக்கும் எனக்குமான இடைவெளியை குறைத்தது. என்னை முழுமையாக நம்பி எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். எனது பாடம் அவர்களின் மிகப் பிடித்த பாடமாகிப் போனது. (பாத்தீங்களா பொதுநலத்தில் ஒரு சுயநலம்)
அடுத்தது ”ஹீரோ பேனா”
வகுப்பில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்போருக்கு நான் வழங்கும் பரிசுதான் அது. பொதுத்தேர்வு என்று இல்லை, காலாண்டு அரையாண்டு பரிட்சையில் கூட வழங்குவது உண்டு.
சில முறை மெல்லக் கற்போருக்கு தனிப்பட்ட இலக்கு (30, 35, 40) நிர்ணயித்து பேனா பரிசு வழங்கியது உண்டு.
“உங்க கிட்ட பேனா பரிசு வாங்கியே ஆக வேண்டும் என்று சத்தியம் செய்து படித்து இருக்கிறோம் சார்” என்று பின்னாட்களில் எனது மாணவர்கள் கூறக் கேட்ட போது அகமகிழ்ந்து போனேன்.
பரிசு கூட வேண்டாம், பாராட்டு என்பது நம் கையில் உள்ள தங்க காசு போன்றது. தயக்கமில்லாமல் அதை அள்ளி அள்ளி வீச வேண்டும். நன்கு படிப்போர் மெல்லக் கற்போர் என அனைவரையும் பாராட்டி அவர்களின் செயல்களை அங்கீகரிக்க வேண்டும். அது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
முற்றிலும் தவிருங்கள்
ஆசிரியர்கள் புகை மது என்று எந்த விதமான கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் ஆட்படாமல் இருப்பது உத்தமம்.
குறைந்தபட்சம் அந்த பழக்கங்களை தமது மாணவர்கள் அறியாவண்ணம் வைத்திருப்பது நல்லது.
MORAL VALUES ஐ அவர்கள் பெரிதாக எண்ணவும் பின் பற்றவும் நாம் அவர்களுக்கு INSPIRATION ஆக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சாரே செய்கிறார் நாம் செய்து பார்த்தால் என்ன என்று எண்ணுவார்கள். ஒழுக்கத்தின் எல்லைகளை மீற முயல்வார்கள்.
முக்கியமாக நமது மது அல்லது புகை போன்ற தீய பழக்க வழக்கங்களை மாணவர்கள் காதில் விழும் வண்ணம் சாகசம் போலக் கூறுவதை தவிர்க்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும் எனது அனுபவப் பாடங்கள். ஆசிரியப் பெருமக்களாகிய நாம் இந்தக் கல்விப் புத்தாண்டில் நம்மை இன்னும் மேம்படுத்தி மெறுகேற்றிக் கொண்டு மாணவர்களுக்காக நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோமாக என்று கூறி எனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.


No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...