Thursday, February 1, 2024
பரோட்டா -சால்னா
பரோட்டா - சால்னா
இன்று ஒரு நண்பர் தனது முகநூல் பதிவில் சிறந்த பரோட்டா கடை பற்றி கேட்டிருந்தார். நான் சற்றும் யோசிக்காமல் ஜெயங்கொண்டம் போஸ்ட் ஆபீஸ் எதிரே உள்ள "செல்வம் பரோட்டா கடை" என்று பதில் கூறியிருந்தேன். காலையிலிருந்து எனது நினைவு எல்லாம் செல்வம் பரோட்டாக் கடை பற்றியே இருந்தது.
நான் சிறுவனாக இருந்த போது பரோட்டா என்றால் என்னவென்றே தெரியாது. அனேகமாக எட்டாம் வகுப்பில் ஒரு முறை சினிமாவுக்கு நண்பர்களோடு ஜெயங்கொண்டம் வந்திருந்த போது பஸ் ஸ்டாண்ட் கடையில் பரோட்டா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆர்டர் செய்து சாப்பிட்டேன்.
அப்போதுதான் பரோட்டா என்பது வட்டமாக சுருள் சுருளாக இருக்கக்கூடிய ஒரு சாப்பிடத்தக்க வஸ்து, அதை பிய்ப்பது கடினம் என்பதால் கடை சிப்பந்தியே தனது கைகளால் அக்குச்சுக்காக பிரித்து இலையில் வைத்து அதன் மேல் சால்னா ஊற்றுவார் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் அங்கே சாப்பிட்டது அப்படி ஒன்றும் சுவையாகவே இல்லை.
அதன் பிறகான பரோட்டா நினைவு என்பது கல்லூரி காலத்தில் அண்ணன் வீட்டில் தங்கியிருந்த போது அண்ணன் அண்ணி இருவரும் வெளியே சென்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு எனக்கும் பரோட்டா வாங்கி வந்தனர். அப்போது தான் ஒற்றை பரோட்டாவே வயிற்றை முற்றிலும் அடைக்கும் அளவுக்கு பெரிதாக இருக்கும், நன்கு பிரி பிரியாக இருக்கும் லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.
பாரதிதாசன் பல்கலைக்கழக விடுதி வாழ்க்கையில் சனிக்கிழமை இரவு மெனு பரோட்டா தான். கும்பலாக பேசிக்கொண்டே மிக பிரமாதமான சுவையுடைய சால்னாவை தொட்டு ஒரு நான்கு ஐந்து பரோட்டாக்களை உள்ளே தள்ளுவோம்.
வழமையாக கல்லூரி விடுதிகளில் ஞாயிறு என்றாலே காலை பிரட் பட்டர் ஜாம் தான் வழங்குவார்கள்.
அங்கே மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால், பாரதிதாசன் பல்கலைக்கழக விடுதியில் முதல் நாள் இரவு பரோட்டாவுக்கு வைத்த குருமாவையும் டேபிளில் வைத்திருப்பார்கள். நன்கு டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளுக்கு சால்னா என்பது மிகச் சிறப்பான பெஸ்ட் எவர் காம்பினேஷன் என்பதை சுவைத்து அறிந்தோம். இன்றளவும் அந்த காம்பினேஷனை வேற எந்த சுவையும் மிஞ்சவில்லை. இதை வாசிக்கும் நண்பர்கள் இதுவரை முயன்றதில்லை என்றால் இனிமேல் முயற்சித்து பாருங்கள்.
குமாரபாளையம் பி எட் விடுதியை பொருத்தவரையில் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் எப்போதும் மாணவர்களின் விடுதி மெனு என்பது சுவையான ஆரோக்கியமான சிக்கனமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவார் அதனால் அங்கே மெனுவில் பரோட்டா இடம்பெற்றது இல்லை.
பாரதிதாசன் பல்கலைக்கழக விடுதி க்கு பிறகு விடுதி உணவின் சுவையில் திக்கு முக்காடிப் போனது என்றால் கொல்லிமலை ஹில்டேல் பள்ளி விடுதியில் தங்கி இருந்தது தான் சொல்ல வேண்டும். அரசு பணிக்கு வருவதற்கு முன்பு ஒரு ஆறு மாதங்கள் கொல்லிமலையில் உண்டு உறைவிட பள்ளியில் தங்கி இருந்து கணித ஆசிரியராக பணி புரிந்தேன்.
அங்கே விடுதியில் சாப்பாடு அவ்வளவு பிரமாதமாக இருக்கும் அந்த பள்ளியை பொறுத்தவரையில் அந்த காலகட்டத்தில் 100-க்கு கீழான மாணவர்களின் எண்ணிக்கை கொண்டிருந்த பள்ளி. பெரிய அளவில் லாபம் ஒன்றும் இருக்காது ஆனாலும் கூட எங்கள் சம்பளத்திலோ அல்லது விடுதி உணவை தரத்திலோ கிஞ்சிற்றும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத ஒரு சிறப்பான நிர்வாகம்.
சனி, ஞாயிறுகளில் ஆசிரியர்களுக்கான தங்கும் இடத்தில் நாங்கள் சீட்டு ஆடிக்கொண்டு நேரத்தை கழிப்போம்.
விடுதி மணி ஓசை கூட எங்கள் காதில் விழுந்து இருக்காது. அந்த தருணத்தில் கரஸ்பாண்டன்ட் அத்தியப்பன் சாரே கதவைத் தட்டி எங்களை சாப்பிட அழைத்த நிகழ்வுகள் எல்லாம் கூட உள்ளது. நாங்கள் சீட்டாடியது குறித்து அவர் கடிந்து கொண்டதே இல்லை, அதே நேரத்தில் 'நேரத்துக்கு வந்து சாப்பிடலாம் இல்லையா?' என்று தான் கூறுவார்.
மிகச் சிறப்பான ஒரு மனிதர் எங்களுடைய ஆசிரியர் பணியின் தரத்தினை மேம்படுத்தியதில் அவருக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு.
பரோட்டா கதை பாதை மாறி போகிறது பார்த்தீர்களா?! கொல்லிமலை பள்ளி விடுதியில் பரோட்டா சாப்பிடுவதில் போட்டி ஆசிரியர்களுக்குள் சிறப்பாக நடக்கும்.
எப்பொழுதும் பிஇடி சார் பத்ரி தான் ஜெயிப்பார் மற்ற ஆசிரியர்கள் அதிகபட்சம் யார் எத்தனை சாப்பிட்டார் என்று கேட்டு அதை காட்டிலும் கூடுதலாக ஒன்று சாப்பிட்டு போட்டியை முடித்து வைத்து விடுவார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களும் எங்கள் அளவுக்கு பரோட்டாக்களை வெளுத்து வாங்குவார்கள் . அங்கே என்னுடைய அதிகபட்ச ஸ்கோர் 12.
அரசு பள்ளியில் 2002 ஜனவரியில் உட்கோட்டையில் வேலைக்கு சேர்ந்து ஜெயங்கொண்டத்தில் பேச்சிலர் மேன்ஷனில் தங்கி இருந்தேன். எனது பக்கத்து அறைகளில் சக்திவேல் மற்றும் தர்மராஜ் ஆகிய நண்பர்கள் தங்கி இருந்தனர். பெரும்பாலும் இரவில் நாங்கள் மூவரும் சேர்ந்து தான் சாப்பிட செல்வோம்.
ஜெயங்கொண்டம் போஸ்ட் ஆபீஸ் எதிர்புறத்தில் இருப்பதுதான் செல்வம் பரோட்டா கடை. பெரும்பாலும் இரவில் இரண்டு பரோட்டா ஒரு ஆம்லெட் ஒரு தோசை அல்லது ஊத்தாப்பம் என்கிற மெனு தான் இருக்கும்.
நன்கு பிசைந்து ஊற வைக்கப்பட்ட மைதா மாவினை அழகாக வட்ட வட்டவில்லைகளாக துண்டித்து அதை விரித்து நன்கு விசிறி அடித்து போர்வையை சுருட்டுவது போல சுருட்டி வைத்திருந்து கல்லில் போடுவதற்கு முன்பு அப்படியே ஒரு அமுக்கு அமுக்கி வட்டமாக தட்டி எடுத்து போடுவார்கள்.
25 பரோட்டாக்கள் போடுவதாக இருந்தால் 25வது பரோட்டாவை கல்லில் போடும்போது முதல் புரோட்டா வெந்திருக்கும் ஒவ்வொன்றாக பிரட்டிக் கொண்டே 25க்கு வரும்போது முதலாவது எடுக்கும் பதத்தில் இருக்கும்.
சரசரவென்று அனைத்தையும் எடுத்து ஐந்து ஐந்தாக வைத்து மேலே கைகளால் ஓங்கி ஒரு குத்து அப்படியே வட்ட உருளை வடிவில் இருக்கும் பரோட்டா அடுக்கினை பக்கவாட்டில் சாய்த்து இரண்டு குத்து விட்டு எடுத்து ஹாட் பாக்ஸ் ல் போட்டு விடுவார்கள்.
அதற்கு பிறகு எப்போது எடுத்தாலும் அந்த பரோட்டா பிரிபிரியாக அழகாக வரும். எளிதாக பிய்த்து சால்னாவில் தோய்த்து சாப்பிடலாம். எந்த ஒரு சிக்கலும் இன்றி மிக அழகாக சுவையோடு தொண்டையில் இறங்கும்.
கடை பெயரில் இருக்கும் செல்வம் என்ற ஓனர் சர்வராகவும் அங்கே பணிபுரிவார். இரவுகளில் பெரும்பாலும் போதையில் தான் இருப்பார். அண்ணே அண்ணே என்று பேசுவார். பரோட்டாவுக்கு சால்னா போடுவதில் சிறிதும் சிக்கனம் பார்க்க மாட்டார். அந்த சில்வர் வட்டா நிறைய எடுத்து போதும் என்னும் அளவுக்கு ஊற்றுவார்.
எங்காவது வெளியில் போவதாக இருந்தால் அந்த வட்டா நிறைய சால்னாவை எடுத்து டேபிளில் எங்கள் அருகில் வைத்து விட்டுத்தான் செல்வார்.
அந்த கடைக்கு போவதாக இருந்தால் நாங்கள் தோசைக்கும் சால்னாவே தான் விரும்புவோம். தோசை சாம்பார் அந்த கடையில் நாங்கள் சுவைத்தது கூட கிடையாது.
அங்கே தேங்காய் சட்னியும் மிகச் சிறப்பாக சுவையாக கெட்டியாக இருக்கும். அதையும் தாராளமாக கொடுப்பார் சில சமயத்தில் பரோட்டாவுக்கு தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம். அதுவும் அங்கே நன்றாக தான் இருக்கும் .
தர்மராஜ் சக்திவேல் மட்டுமின்றி எனது சகோதரர் சந்திரசேகர் லீவில் ஜெயங்கொண்டம் வருகிற போதெல்லாம் செல்வம் கடையில் நாங்கள் இருவரும் அதே பரோட்டா தோசை ஆம்ப்ளேட் மெனுவைதான் சாப்பிடுவோம்.
திருமணம் ஆன பிறகு கூட ஒரு முறை அகிலாவிடம் செல்வம் கடையின் சிறப்புகளை எல்லாம் எடுத்துக் கூறி பார்சல் வாங்கி கொடுத்தேன்.
ஆனால் ஜெயங்கொண்டத்திலிருந்து இடம் மாறி அரியலூரில் வந்து செட்டிலான பிறகு ஒரு முறை கூட செல்வம் பரோட்டா கடை செல்லும் வாய்ப்பே அமையவில்லை.
இப்போதும் அந்த கடை அங்கே உள்ளதா அதே சுவையோடு பரோட்டா சால்னா கொடுக்கிறார்களா என்பதை ஜெயங்கொண்டம் வாழ் நண்பர்கள் தான் கூற வேண்டும்.
தற்போது அரியலூரில் பரோட்டா சாப்பிட்டீர்களா? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சில விஷயங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. 'பார்த்தாலே பரவசம்' என்கிற நிலையில் இருந்த பரோட்டாவுக்கும் எனக்குமான உறவு 'பார்த்தாலே பாவம்' என்கிற நிலையை எட்டி விட்டது தான் பரிதாபம்!!
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
Good afternoon writer Sir, அனைத்து விஷயங்களையும் மறக்காமல் எழுதியிருக்கிறீர்கள் அருமை. அத்துடன் பரோட்டா செய்முறை சொன்னது Super. 10 பொருத்தமும் பக்காவாக உள்ளது parotta Master - kku. After retirement HM Sir ARTICLE, BOOks Writing - இவற்றுடன் ஒரு hotel-ம் வைத்துவிடலாம்.. 12 parotta சாப்பிட்டது doubta erukku.
ReplyDelete