Tuesday, November 8, 2016

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் இல்லா நிலை நோக்கி….



     “சார் நாளைக்கே ரிஜிஸ்டர் பண்ணிடலாங்களா?“
     “பணம் கட்டிட்டா நாளைக்கே பண்ணிடலாம் என்ன கட்டுறீங்களா?“
     “சார் பணம் ரெடி, அக்கவுண்ட் நம்பர் குடுங்க டிரான்ஸர் பண்ணி விடுறேன்”
     “அதெல்லாம் வேணாங்க நீங்க இப்போவே வித்டிரா பண்ணிட்டு வாங்க“
     “ஏங்க ஏழு லட்சமுங்க எப்படிங்க எடுத்து வர்றது?“
     “அதெல்லாம் எடுத்துட்டு வரலாம் வாங்க இன்னைக்கே கட்டிட்டா நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ணிடலாம்“ ரியல் எஸ்டேட் காரன் கராறா சொல்லிட்டான். சொஸைட்டி லோன் மூணு லட்சம் பர்ஸனல் லோன் நான்கு லட்சம் என ஏழு லட்சம் ரெடி பண்ணியாச்சு. டவுன் ஏரியாவில் மனை வாங்கறதுன்னா சும்மாவா?
     பேங்குக்கு வந்தாச்சு.
“என்ன சார் ஏழு லட்சம் வித்ட்ராயலா?“
“ஆமாம்மா, 1000 ரூபா நோட்டா குடுத்துட்டிங்கன்னா எடுத்துட்டு போக வசதியாக இருக்கும்“
“இல்ல சார் படிவத்தில அக்கவுண்டன்ட் சார்ட்ட சைன் வாங்கிட்டு வந்துடுங்க“
“இந்தாம்மா சைன் வாங்கிட்டேன், கொஞ்சம் ஆயிரம் ரூபா நோட்டா கொடுத்துட்டிங்கன்னா வசதியா இருக்கும்“
“சாரி சார் 500 ரூபா நோட்டு தான் இருக்கு பிடிங்க கவனமா எண்ணிக்கோங்க“
எடுத்து பையில் வைத்தால் 14 கட்டுக்களால் பை நிறைந்தது.
கொண்டு போய் ஆபீஸ்ல கட்டி அடுத்த நாள் ரிஜிஸ்டர் பண்ணிட்டேன்.
இப்படியாக எனது எதிர்கால ஊதியத்தை அடகு வைத்து ரூபாய் ஏழு லட்சத்தை திரட்டி அதை அரசாங்க கணக்கிற்கு கொண்டு வராமல் கருப்பு பணமாக ரியல் எஸ்டேட் காரன் எடுத்துக் கொண்டான். ஒரு வழியாக எனது பணம் இந்திய வெள்ளை பொருளாதாரத்தில் இருந்து விலகிக் கொண்டது.
இப்படியாக தினம் தினம் எத்தனை பரிவர்த்தனைகள்?
பிள்ளைகளின் படிப்பு என்கிற பேரில் பணம் மூட்டை மூட்டையாக நாமக்கல் ஏரியாவில் குவிந்து பல இலட்சக் கணக்கான நடுத்தர வர்க்க மக்களின் பணம் அரசாங்க கணக்கில் மண்ணை போட்டு பெரும்பணக்காரர்களின் பெட்டிகளில் தஞ்சமடைகிறது.
மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுக்காக கட்டப்படும் பல நூறுகோடிகளும் கருப்பாய் போய்தானே மறைகின்றது. தனியார் மருத்துவ மனைகள் கூட தங்கள் கட்டணத்திற்கு சரியான இரசீதினை தருவதில்லையே!
அதுமாதிரிதான் பெரு வணிக நிறுவனங்கள். திருச்சியில் உள்ள பிரபல கடையொன்றில் அவர்கள் வெள்ளை நிற ரோலில் கடைபேரெல்லாம் போட்டு டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பிரிண்ட் செய்த பில்லை வழங்குவது தான் வழக்கம். நகை கடையில் ஒரு முறை நான் கார்டை கொடுத்த போது வேண்டவே வேண்டாம் என்று மறுத்த தோடல்லாமல் கார்டு கொடுத்தால் வாட் வரி போட்டு விடுவோம் உங்களுக்கு விலை அதிகமாக போகும் என்று செல்ல மிரட்டல் வேறு.
கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் நடைமுறைக்கு வந்த பின்னும் ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளுக்கு வேலை என்ன?
பெரிய செலவுகள் எல்லாம் பெரிய கடைகளிலோ பெரிய நிறுவனங்களில் தான் செய்யப் போகிறோம் அங்கெல்லாம் கார்டு களை உபயோகிக்க தடை யேதும் இல்லையே.
தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் முறைக்கு மாறிவிட்டால் பணம் கருப்பாக தேங்குவது தவிர்க்கப் படும் அல்லவா. அவர்கள் தங்களது ஊழியர்களுக்கு சில ஆயிரங்கள் மட்டும் சம்பளமாக அந்த கருப்பில் இருந்து கிள்ளித் தருகிறார்கள். இதுவே இ-சேவை ஆனால் அவர்கள் வழங்கும் சம்பளம் கணக்கில் வரும். அவர்கள் நியாயமான சம்பளத்தை காலம் தாழ்த்தாமல் வழங்குவார்கள்.
ரியல் எஸ்டேட் டிலும் இந்த முறை வந்தால் பரிவர்த்தனையில் ஒளிவு மறைவு இருக்காது. பணத்தில் கரி படிவது தவிர்க்கப் படுவதோடல்லாமல் அரசுக்கு வரி வருவாய் சரியான விலைக்கு உள்ளது கிடைக்கும். 20 இலட்ச ரூபாய்க்கு விற்று 2 இலட்ச ரூபாய் என்று பதிவு செய்ய இயலாது.
கல்லூரிகளில் சட்டத்திற்கு புரம்பாக கேப்பிடேஷன் கட்டணங்கள் கேட்க இயலாது.
எனவே 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் இனியும் வேண்டியது இல்லை.
நம்ம ஆளுங்க எளிய சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என்று முதலைக் கண்ணீர் விடுவது என் காலையும் நனைத்து விட்டது. (என்னா அக்கரை?)
அவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டை பத்திரப் படுத்தி வைத்திருப்பார்களே ஒழிய செலவு செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதை செலவு செய்வது என்பது “உடைப்பது“ என்று பொருள். “500 ரூபா தான் இருக்கு உடைக்கணுமேன்னு பார்த்தேன்” என்றே தயங்கி செலவு செய்வதில்லை.
தலை சுமை வியாபாரிகள் ஒன்றும் தங்கள் பொருட்களை ஆயிரங்களுக்கு விற்பதில்லை அவர்களுக்கு பத்துக்களோ இருபதுகளோ போதும்.
இப்படி திடீர்னு சொன்னா என்ன செய்வது?
கையில் இருக்கும் 100 மற்றும் அதற்கு கீழான நோட்டுகளை பயன் படுத்துங்கள். கிராமங்களை தவிர மற்ற இடங்களில் இருப்போர் கார்டை பயன்படுத்தி பொருள் வாங்கலாமே. கிராமங்களில் இருப்போர் கையில் 100 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பார்கள். இல்லையென்றால் கூட சமாளித்து விடுவார்கள். ஒன்றும் நெருக்கடி இல்லை.
கையில் ரொக்கம் வைத்திருப்போர் கவலை கொள்ள வேண்டாம். இன்னும் ஒன்றரை மாதம் உள்ளது வங்கியில் செலுத்தி விடுங்கள்.
நியாயமான கணக்கு உள்ளவர்கள் வங்கியில் செலுத்த தயங்க வேண்டியதில்லையே!
பரிவர்த்தனைகள் அனைத்தும் ஒளிவு மறைவற்று இருந்தால் அரசாங்க பொருளாதார புழக்கத்தில் இருந்து திடீரென காணாமல் போகும் பெருந்தொகை தவிர்க்கப் பட்டு நமது சேவைக்காக சுழன்று கொண்டு இருக்கும்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை முற்றிலும் தடைசெய்வதைத்தான் நான் சந்தோஷமாக ஆதரிப்பேன். மீண்டும் 2000 வருவதில் எனக்கு உடன்பாடில்லை. “கண்டெய்னர் வேண்டாம் ஷேர் ஆட்டோ போதும்”

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...