Tuesday, November 29, 2016

நூலகமும் நானும் பிரியா தோழர்கள்


நான் சிறுவனாக இருந்த போது (அனேகமாக 7ம் வகுப்பு) சுத்தமல்லியில் இருந்து கோடை விடுமுறைக்கு ஜெயங்கொண்டம் எங்கள் நடு சித்தப்பா வீட்டுக்கு போயிருந்தேன்.
ஒரு நாள் எனது அண்ணன் அறிவழகன் என்கிற ராஜா “டேய் ஜெயராஜ் சாயங்காலம் லைப்ரரி போலாம்டா!“
’ஐ நீச்சல் அடிக்கலாமே’ என்று எண்ணிக்கொண்டு “டேய் நானும் வரேன்டா கண்டிப்பா போலாம்”
ராஜா தலை சீவி பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு கிளம்பினார். ’என்னது இவன் குளிக்க போவதற்கு மேக்கப் எல்லாம் போடுறான்’ என்று எண்ணிக்கொண்டு நான் சாமர்த்தியமாக ஒரு சோப்புக் கட்டியை கால்சட்டை பையில் திணித்துக் கொண்டு விட்டேன்.
’என்னது கடைத்தெரு ரோட்டில் எல்லாம் போகிறானே’ என்று எண்ணிக் கொண்டு பின் தொடர்ந்தேன். போனால் அங்கே இருந்தது நூலகம். இதைத்தான் லைப்ரரி என்கிறார்களோ. நான் தான் கடைசி உச்சரிப்பை மட்டும் எடுத்துக் கொண்டு ஏரிக்கு போகிறோமே என்று குஷியாக கிளம்பி விட்டேன். ’ஐயய்யோ யாரும் பார்த்துவிடப் போகிறார்கள்’ என்று சோப்புக் கட்டியை ஆழமாக திணித்துக் கொண்டேன்.
உள்ளே நிறையபேர் மாத வார மற்றும் நாளிதழ்களை வாசித்துக் கொண்டு இருந்தனர். உள்ளே நிறைய புத்தகங்கள் அடுக்கி இருந்தன. அவற்றை சில பேர் இரவல் வாங்கிச் சென்றனர். எல்லாமே இலவசமாக. அரசாங்கம் இந்த மாதிரி ஒரு இலவச அமைப்பை வைத்திருப்பதே எனக்கு அப்போது தான் தெரியும்.
அடுத்த ஆண்டே சுத்தமல்லியில் ஒரு பகுதிநேர நூலகம் திறக்கப்பட்டது. நான் உறுப்பினர் ஆகி நாவல்கள் எல்லாம் வாசிக்க ஆரம்பித்து விட்டேனாக்கும். ஒரு சாதிய வன்கொடுமையால் நான் அங்கு போவதை விட்டுவிட்டேன் (பிரச்சனைக்குப் பயந்து வீட்டில் யாருக்கும் சொல்லக் கூட இல்லை. தெரிந்தால் எங்க அப்பா உண்டு இல்லை பண்ணியிருப்பார்)
இலால்குடி பள்ளியில் படித்தபோது தான் பள்ளியிலும் நூலகங்கள் உண்டு என்பது தெரியும். எனது தோழன் ’கெய்ஸர்’ அப்பா நெசவு ஆசிரியர் தான் நூலக ’இன்சார்ஜ்’ ஆனால் போனது தான் இல்லை.
நேஷனல் கல்லூரி திருச்சியில் நூலகங்கள் வாயிலாக பாடபுத்தகங்கள் எடுத்து பயன் படுத்துவது எனது வழக்கம். ’ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஆங்கில மாத இதழ் எனக்கு அங்குதான் அறிமுகம்
முதுகலை பட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாக கணிதத்துறையில் படித்தேன். எங்கள் துறைத்தலைவர் அப்போது (பிரபல கணித வல்லுநர்) இராமானுஜம் அவர்கள். நூலக சாவியை எங்களிடமே கொடுத்து விடுவார். ஒவ்வொருவரும் பத்து பதினைந்து என்று ’ரெஃபரன்ஸ்’ புத்தகங்களை கொண்டு போவோம். ஒரு நூல் கூட திருட்டு போனது இல்லை. சார் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாய் நூல்களை பத்திரமாய் ஒப்படைத்தோம்.
இடையில் ஒரு ஆறு மாதங்கள் ஹில் டேல் மெட்ரிக் பள்ளி, கொல்லி மலையில் வேலை பார்த்த போது ஒரு பீரோ நிறைய புத்தகங்கள் இருப்பதை பார்த்து வியந்து ஒரு ஞாயிற்றுக் கிழமை முழுவதும் எடுத்து கேட்டகிரி வாயிலாக அடுக்கி அழகாய் வைத்தேன். எனக்காக ஒரு பத்து நூல்களை எடுத்துக் கொண்டேன். அங்கே தான் எனது அபிமான அறிவியல் கட்டுரையாளர் என்.இராமதுரை அவர்களின் விண்வெளிப் பயணம் சார்ந்த பேப்பர் கட்டிங் தொகுப்பை படித்தேன்.
உட்கோட்டையில் பணியேற்ற போது பள்ளிக்கு அருகிலேயே நூலகம். தினம் ஒரு புத்தகம் எடுத்து படித்து முடித்து விடுவேன். பேச்சிலராக தனி அறையில் தங்கி இருந்ததால் இளையராஜா ரஹ்மான் மற்றும் எனது புத்தகங்கள் இவைதான் எனது துணை.
செங்குட்டுவன் சார் தலைமையாசிரியராக வந்தபோது பள்ளி நூலகத்தை திறந்து புத்தகங்களை எடுத்து போட்டு மாணவரகளை படிக்க வலியுறுத்துவார். மாணவர்களை புத்தக திருடர்களாக பார்க்க வில்லை. அவர்களும் மதிய உணவு இடைவேளை மற்றும் ஓய்வு பாட வேளைகளில் மலர்களை மொய்க்கும் தேனீக்களாக புத்தகங்களை மொய்க்க ஆரம்பித்தனர்.
கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளி நூலகத்திலும் நூல்கள் மாணவர்களுக்கு வழங்கும் வழக்கம் இருந்தது. இன்சார்ஜ் டீச்சரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக.அங்கே தான் சு.சமுத்திரம் அவர்களின் ’வாடாமல்லி’ என்ற திருநங்கைகள் குறித்த நாவலை வாசித்தேன்.
பள்ளிகளில் நூலகங்கள் இருப்பதை மாணவர்களுக்கு காண்பிப்பது அவசியம். அவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டியது ஆசிரியர்தம் கடமை. மேலும் ஆசிரியர் இல்லா பாடவேளைகளை எளிதாக கையள இது வசதியாக இருக்கும். மாறாக புத்தகங்களை செல்லறிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது வைரப் பெட்டகத்தை வீணடிப்பது போல் அல்லவா.

’நீதான் நிறைய படித்தேன்னு சொல்றியே என்னத்த கிழிச்சே?’ என்று கேட்கலாம். நான் படித்த விஷயங்கள் எல்லாம் எனக்கு என் மாணவர்களுக்கு மற்றும் எனது மகனுக்கு பயன்படுகிறது. அவர்கள் எது கேட்டாலும் என்னிடம் பதில் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இது போதும் அல்லவா?

2 comments:

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...